சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
தொடர்ச்சி..
கல்வியைப் பரப்புவது அல்லது உலகியல் ஞானத்தைப் பரப்புவது
மேல்நாடுகளிடையே உள்ள முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் ரகசியம் பரவலான கல்விதான்.
மேற்றிசை நாடுகளுக்கும் கீழ்த்திசை நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் முழுவதும் இதில்தான் உள்ளது. அவர்கள் ஒன்றுபட்ட மக்களினமாக உள்ளார்கள். நாம் அப்படி இல்லை. மேல்நாடுகளில் நாகரிகமும் கல்வியும் மெதுவாகப் பரவி, பாமர மக்களிடையேயும் குடிபுகுந்துள்ளன. பாரதத்திலும் அமெரிக்காவிலும் உள்ள உயர்தர வகுப்பினர் ஒரேமாதிரிதான் உள்ளனர். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள தாழ்ந்த வகுப்பு மக்களிடையே உள்ள இடைவெளித் தூரத்தைக் கணக்கிட முடியாது. ஆங்கிலேயர்கள் பாரதத்தை எளிதாக வென்றதன் காரணம் என்ன? அவர்கள் ஒன்றுபட்ட மக்களினம்; நாம் அப்படியில்லை.
நம்மிடையே ஒரு மகா புருஷர் காலமானால் மற்றொருவர் கிடைப்பதற்காக நாம் பல நூற்றாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். மேல்நாடுகளில் சாகிற அதே வேகத்தில் உற்பத்தியும் செய்கிறார்கள். இங்கே உயர்ந்த மனிதர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏன் அப்படி? பெரிய மனிதர்களைத் தேடிப் பொறுக்கிச் சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக அவர்களிடையே ஏராளமான பேர்கள் உள்ளனர். நம்மிடம் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். முப்பதுகோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம் தேர்ந்தெடுப்பதற்குக் குறுகிய அளவு வசதியுடனிருக்கிறது. மூன்று கோடி, நான்கு கோடி, ஆறு கோடிப் பேர்களைக் கொண்ட சமுதாயங்களை விட நம் நாட்டில் வசதி குறைவு. ஏனெனில் பிற நாடுகளில் கல்வி கற்ற ஆண், பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்; நமது நாட்டிலுள்ள பெருங்குறை இது. இதனை நீக்கியாக வேண்டும். பாமர மக்களுக்குக் கல்வி புகட்டி உயர்த்துங்கள்; இதன் மூலமாகத்தான் ஒன்றுபட்ட மக்களினத்தை உண்டாக்க முடியும்.
“மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ”- “தாயே (உனக்குக்) கடவுளாக இருக்கட்டும். தந்தையே (உனக்குக்) கடவுளாக இருக்கட்டும்” என்று படித்திருக்கிறீர்கள். ஆனால் “தரித்ர தேவோ பவ; மூர்க்க தேவோ பவ”, “ஏழைகள் படிக்காதவர்கள், அறியாமையிலுள்ளவர்கள், துயருற்றவர்கள் இவர்கள் உங்களது தெய்வமாக இருக்கட்டும்” என்று நான் கூறுகிறேன். இவர்களுக்குத் தொண்டு செய்வதே அனைத்திலும் உயர்ந்த சமயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உயிரற்ற இன்றைய கல்வி முறை:
நீங்கள் இப்பொழுது பெற்றுவரும் கல்வி முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் கெடுதல்களே மிகுதியாக உள்ளன. அந்தக் கெடுதல்கள் நல்ல அம்சங்கள் யாவற்றையும் மறைக்கும்படி அவ்வளவு அதிகமாக உள்ளன. முதலாவது அது நம் மக்களுக்கு ஆண்மையளிக்கக் கூடியதாக இல்லை. அது முற்றிலும் எதிர்மறைத் தன்மையானதாக உள்ளது. எதிர்மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் கல்வி அல்லது பயிற்சி மரணத்தைவிடக் கொடியதாகும். ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அதன் தகப்பனார் ஒரு முட்டாள் என்று முதற் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இரண்டாவது அதன் பாட்டனார் பைத்தியக்காரர் என்றும் மூன்றாவதாக அதன் ஆசிரியர்கள் வெளிவேஷக்காரர்கள் என்றும் நான்காவதாக நம் சாஸ்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் கற்பிக்கப்படுகிறது. அந்தக் குழந்தை பதினாறு வயதை அடையும்பொழுது எதிர்மறை உணர்ச்சியின் வடிவமாக, உயிரற்ற, எலும்பற்ற வஸ்துவாக ஆகிவிடுகிறது.
நம் நாட்டில் மிக உயர்ந்த மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற விபரம் நமக்கும் உணர்த்தப்படுவதேயில்லை. ஆக்கக் கருத்து எதுவும் நமக்குக் கற்பிக்கப்படுவதில்லை. நமது கைகளையும் கால்களையும் எப்படிப் பயன்படுத்துவது என்றுகூட நமக்குத் தெரியாது. ஆங்கிலேயர்களின் மூதாதையர்களைப் பற்றிய எல்லா புள்ளிவிவரங்களையும் நாம் தெளிவாக அறிகிறோம். ஆனால் நமது சொந்த மூதாதையர்களைப் பற்றி அக்கறைப்படாத பரிதாப நிலை உள்ளது. நாம் பலவீனத்தைத்தான் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் தோற்கடிக்கப்பட்ட மக்களினமாதலால் “நாம் பலவீனர்கள். நமக்கு எதிலும் சுதந்திரமில்லை” என்று நாமே நம்பும் நிலைக்கு இழிந்துவிட்டோம். இந்நிலையில் “சிரத்தை”யை இழக்காமல் எப்படி இருக்க முடியும்?
கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும். கருத்துகள் ஜீரணமாக வேண்டும். நீங்கள் ஐந்தே கருத்துகளை நன்றாக ஜீரணித்துக் கிரகித்து, அவற்றை உங்களது வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் நிறைந்ததாகச் செய்வீர்களாயின், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிட பெரிய கல்விமான் ஆவீர்கள்.
ஆகையால் நமது லட்சியம் நம் தேசத்துக் கல்வி, ஞானமனைத்தையும் பெறுவதாக இருக்க வேண்டும். நமது தார்மிக, லௌகிக, ஞானம் அனைத்தும் அடங்கிய அந்தக் கல்வி ஞானத்தை, சாத்தியமான வரையில் நமது தேசீய வழிகளில், தேசீய அடிப்படைகளில் நாம் கைக்கொள்ள வேண்டும்.
ஏழைகளுக்குக் கல்வி புகட்டுகிற கடினமான வேலை:
ஏழைகளுக்குக் கல்வி புகட்டுவதில் உள்ள பெரிய கஷ்டம் இதுதான்.
ஒவ்வொரு கிராமத்திலும் இலவசப் பள்ளிகளைத் திறக்கிறோம் என்றே வைத்துக்கொண்டாலும்கூட, அப்பொழுதும் ஏழைப் பிள்ளைகள் தமது வாழ்க்கைச் செலவுக்காகச் சம்பாதிப்பதற்கு நிலத்தில் உழுவதற்குப் போவார்களே தவிர, உங்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். நம்மிடம் பணமில்லை; கல்வி கற்க அவர்களை வரச் செய்யவும் நம்மால் முடியாது. இந்தப் பிரச்சினை ஏமாற்றமளிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது. எனினும் நான் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன்.
பிரச்சினைக்கு ஒரு வழி:
சந்நியாசிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும்.
“மலை முகம்மதுவிடம் வராவிட்டால், முகம்மது மலையிடம் போகவேண்டும்” என்று ஒரு பழமொழி உண்டு. ஏழை மக்கள் கல்விச் சாலைக்கு வரமுடியாவிட்டால் கல்வி ஏழைகளிடம் செல்ல வேண்டும். அவர்கள் உழுகிற இடம், தொழிற்சாலை முதலிய எல்லா இடங்களுக்கும் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும்.
நமது நாட்டில் ஒரே சிந்தனையும் தன்னலத் தியாகமும் கொண்ட சந்நியாசிகள் ஆயிரக்கணக்கில், கிராமம் கிராமமாகச் சென்று சமய ஞானத்தைப் போதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை உலகாயத விஷயங்களைக் கூடக் கற்பிப்பதற்கு ஆசிரியராக ஏற்பாடு செய்தால் அவர்கள் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாகச் சென்று சமய போதனையை மட்டுமின்றிக் கல்வியறிவையும் அளித்துக்கொண்டே செல்வார்கள்.
அவர்கள் கிராமந்தோறும் சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் சமயத்தை மட்டுமின்றிக் கல்வியையும் கொண்டுசெல்லட்டும்.
உதாரணமாக கிராம மக்கள் நாள் முழுவதும் வேலை செய்த பிறகு ஊருக்குத் திரும்புகிறார்கள். ஏதாவதொரு மரத்தடியிலோ அல்லது வேறோர் இடத்திலோ உட்கார்ந்துகொண்டு, புகைபிடித்துக் கொண்டு, அரட்டையடித்துக்கொண்டு காலம்கழித்துக் கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்தில் பழுத்த சந்நியாசிகள் இருவர் அங்கேயே போய் அவர்களை மடக்கிப் போட்டுக்கொண்டு காமிரா மூலம் வானசாஸ்திர சம்பந்தமான படங்களையோ அல்லது வேறு படங்களையோ, பல்வேறு நாடுகளின் காட்சிகளையோ, வரலாறுகளையோ காட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறாக பூமிகோளங்கள், பூகோளப் படங்கள் முதலியவற்றின் துணைகொண்டு வாய்மொழியாகவே விஷயங்களைக் கற்பிக்க முடியும்.
அறிவு நுழைவதற்குக் கண்கள் மட்டுந்தான் வாயில் என்பதல்ல. காதுகள் (கேள்வி) மூலமாகவும் எல்லாம் செய்ய முடியும். அதன் மூலம் மக்களுக்குக் கருத்துகளும், நீதிநெறியுணர்வும் கிடைக்கும். மேலும் நல்ல விஷயங்களைக் கற்க விழைவார்கள். அத்துடன் நமது வேலை முடிவடைகிறது.
மக்களுக்குக் கருத்துகளை வழங்கவேண்டும். அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்குமாறு அவர்களது கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் அவர்களுக்குரிய நல்வழியை அவர்களே வகுத்துக் கொள்வார்கள்.
ரசாயனப் பொருள்களை ஒன்றாகக் கலந்துவைப்பது நம் கடமை. அவை படிகக் கட்டிகளாக மாறுவது இறைவனின் சட்டப்படி நடக்கும். அவர்களது உள்ளங்களில் நல்ல கருத்துகளை விதைப்போம். மற்றவற்றைத் தாமே செய்துகொள்வார்கள். பாமரனுக்குக் கல்வி அளிப்பது என்பது இதுதான்.
மகத்தான, சமய ரீதியான உற்சாகத்தின் மூலம் வேலை செய்வார்கள்:
இந்தப் பெரும் பணியை ஏற்றெடுத்து, இந்தத் தியாகத்தைச் செய்யச் சந்நியாசிகளை எது தூண்டும்? சமய உணர்ச்சியினால் எழும் உற்சாகம்தான். ஒவ்வொரு புதிய சமய உணர்ச்சி அலைக்கும் ஒரு புதிய கேந்திரம் தேவைப்படுகிறது. அந்தக் கேந்திரத்தின் மூலந்தான் பழைய சமயத்தில் புத்துணர்ச்சி ஊட்ட முடியும். உங்களுடைய கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தூக்கியெறியுங்கள். அவற்றால் பயன் உண்டாகாது. ஒழுக்கநெறி, ஒருவரது உதாரண வாழ்க்கை, ஒரு கேந்திரம், இவை இருக்கவேண்டும். தெய்வீக புருஷன் ஒருவன் வழிகாட்டிச் செல்லவேண்டும். அந்த மையப்புள்ளியைச் சுற்றி மற்ற எல்லாச் சக்திகளும் சூழ்ந்து நின்று சமுதாயத்தின்மீது அலைபோலப் புரண்டு வந்து எல்லா அழுக்குகளையும் அடித்துக்கொண்டு போய்விடும்.
ஒர் மரத்துண்டைச் சுலபமாக அறுக்கவேண்டுமானால் அதில் இழையோடுகிற போக்கில்தான் அறுக்கவேண்டும். அதுபோல பழைய ஹிந்து சமுதாயத்தின் மூலமாகத்தான் நாட்டைச் சீர்திருத்த முடியுமேயன்றி இந்த நவநாகரிகச் சீர்திருத்த இயக்கங்கள் மூலம் முடியாது.
அதே நேரத்தில் இந்தச் சீர்திருத்தவாதிகள் மேற்கத்திய கலாசாரம், கிழக்கிந்திய கலாசாரம் ஆகிய இரண்டையும் தம்மோடு இணைக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்கவேண்டும்.
நாட்டின் ஆன்மிகக் கல்வியும் லௌகிகக் கல்வியும் நமது பிடிப்புக்குள் இருக்கவேண்டும். அதைப்பற்றியே கனவு கண்டு, அதைப் பற்றியே பேசிவந்து, அதைப் பற்றியே சிந்தித்து, அதை நிறைவேற்ற வேண்டும். அதுவரையில் நமது மக்கள் சமுதாயத்துக்கு விடிவுகாலமில்லை. இதனைச் செய்துமுடிக்க ஓர் இயக்கம் தேவைப்படுகிறது.
எல்லா இடங்களிலும் நடவடிக்கைகளுக்கான கேந்திரங்களைத் துவக்க வேண்டும்:
இது மிகப்பெரிய திட்டம். எப்பொழுதாவது இது நிறைவேறுமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வேலையைத் துவக்க வேண்டும். எப்படி? உதாரணமாகச் சென்னை மாகாணத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் ஒரு கோயில் அமைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களிடம் சமயத்திலிருந்துதான் எல்லாமே ஆரம்பமாக வேண்டும். அது காரணமாக நம் மதப்பிரிவுகளுக்குள் சண்டை உண்டாகலாமென நீங்கள் சொல்லலாம். ஆனால் “ஓம்” என்ற சின்னத்தை மாத்திரம் வைத்தால் அது தனிச் சார்பு அற்ற கோயிலாகிவிடும். ஏனெனில் “ஓம்” என்பது எந்த ஒரு பிரிவுக்கும் உட்படாத மிக உயர்ந்த சின்னமாகும்.
“ஓம்” என்பது சின்னமாக இருக்கக் கூடாது என்று இங்கே உள்ள எந்தப் பிரிவினராவது நம்புவார்களாயின் அவர்கள் தம்மை ஹிந்து என அழைத்துக்கொள்ளும் தகுதியிழந்து விடுவார்கள். ஹிந்து மதத்தை ஒவ்வொருவருமே தத்தம் உட்பிரிவின் கருத்துகளுக்குத் தக்க விளக்குக்கின்ற உரிமை பெற்றுள்ளார்கள். ஆனால் நமக்குப் பொதுவான ஓர் ஆலயம் நிச்சயமாகத் தேவை. மற்ற இடங்களில் நீங்கள் விரும்புகிற, உங்களுக்குச் சொந்தமான விக்கிரகங்களும் சின்னங்களும் இருக்கட்டும். ஆனால் இங்கே உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களுடன் பூசலிட வேண்டாம்.
இங்கே எல்லாப் பிரிவினருக்கும் பொதுவாக உள்ள கருத்துகள் கற்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பல்வேறு பிரிவினரும் இங்கு வரவும், தத்தம் தத்துவங்களைப் போதிப்பதற்கு முழு உரிமையும் இருக்க வேண்டும். அதில் ஒரே ஒரு நிபந்தனைதான். பிற பிரிவினருடன் சண்டை மட்டும் போட்டுக்கொள்ளக் கூடாது. நீங்கள் சொல்ல விரும்புவதைச் சொல்லுங்கள்; உலகம் கேட்க விரும்புகிறது. ஆனால் மற்றவர்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைக் கேட்பதற்கு உலகத்துக்கு நேரம் கிடையாது. அதை நீங்கள் உங்களிடமே வைத்துக்கொள்ளலாம்.
பிரசாரகர்களையும் ஆசிரியர்களையும் பயிற்றுவித்தல்:
இரண்டாவதாக, இக்கோயிலுடன் தொடர்புடையதாக ஒரு ஸ்தாபகம் இருக்கவேண்டும். ஆங்காங்கே சென்று நமது மக்களுக்குச் சமயப் பிரசாரம் புரிவதுடன் லௌகிகக் கல்வியையும் அளிக்கக்கூடிய ஆசிரியர்களை அங்கே பயிற்றுவிக்க வேண்டும். நாம் ஏற்கனவே சமயத்தை வீட்டுக்கு வீடு கொண்டுசென்று வருகிறோம். அதனுடன் கூட உலகியல் கல்வியையும் கொண்டுசெல்ல வேண்டும். அதனை எளிதில் செய்ய முடியும். பின்னர் பிரசாரகர், ஆசிரியர் குழுவின் மூலமாக இவ்வேலை விஸ்தரிக்கும். படிப்படியாக மற்ற இடங்களிலும் அதே போன்ற கோயில்களை நிர்மாணித்து, பாரதம் முழுவதையும் அரவணைக்கும்வரை விஸ்தரிப்போம். இதுவே என் திட்டம்.
இது பிரம்மாண்டமானதாகத் தோன்றலாம். ஆனால் இது மிகவும் அத்தியாவசியமானதாகும். இதற்கு வேண்டிய பணம் எங்கிருந்து வருமெனக் கேட்கலாம். பணம் தேவையில்லை. பணத்தில் ஒன்றுமேயில்லை. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமல் இருந்து வந்திருக்கிறேன். ஆனால் எனக்கு வேண்டிய பணமும் மற்ற பொருள்களும் வந்தே தீர வேண்டும். ஏனெனில் அவை எனது அடிமைகள்; நான் அவற்றுக்கு அடிமையல்ல. ஆகவே பணமும் மற்றவையும் வந்தே ஆகவேண்டும். ‘வந்தேயாக வேண்டும்’ என்பதே- சரியான சொல் ஆகும்.
மனிதர்கள்- மனபூர்வமான மனிதர்கள்- தேவை:
இப்பணியை ஆற்றக்கூடிய மனிதர்கள் எங்கே? அதுதான் கேள்வி.
மனிதர்கள்; மனிதர்கள்தான் வேண்டும். மற்ற எல்லாம் தயாராகிவிடும். வலிமைமிக்க, ஆண்மையுள்ள, நம்பிக்கை வாய்ந்த, குருத்தெலும்பு வரை மனபூர்வமாகப் பணிபுரியத்தக்க இளைஞர்கள் வேண்டும்.
இளம் சந்ததியரிடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் புதிய சந்ததியிலிருந்து எனது ஊழியர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் இந்தப் பிரச்சினை முழுவதையும் தீர்த்துவைப்பார்கள். நான் எனது கருத்துகளுக்கு ஒரு வடிவம் கொடுத்தேன். அதற்காக எனது வாழ்க்கையைக் கொடுத்தேன். நான் வெற்றி பெறவில்லையென்றால் என்னைவிடச் சிறந்தவர் ஒருவர் எனக்குப் பிறகு வந்து அதனைச் செய்து முடிப்பார். அதற்காகப் போராடுவதிலேயே நான் திருப்தியடைவேன்.
உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வோம். நமது கருத்துகள் அந்தந்த நாடுகளை உருவாக்கும் பல சக்திகளுடன் சேர்ந்து அவற்றில் ஓர் அம்சமாகக் கலந்துவிடும். பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ஒவ்வொரு மக்களினத்தின் வாழ்க்கையினுள்ளும் நாம் நுழையவேண்டும். இந்நிலை ஏற்பட நாம் உழைத்தாக வேண்டும். அதற்காகவே இளைஞர்கள் தேவை என்கிறேன். “இளைஞன் பலமுள்ளவன். நல்ல ஆரோக்கியமுள்ளவன். கூரிய அறிவுள்ளவன் – இத்தகையவனே இறைவனை அடைவான்” என்று வேதங்கள் கூறுகின்றன.
உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; இளமையின் சுறுசுறுப்பும் புதுமைத் தளதளப்பும் இருக்கும் பொழுதுதான் தீர்மானிக்க வேண்டும். பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம். ஏனெனில் அன்றலர்ந்த, கைபடாத, முகராத, மலர்களை மட்டுமே இறைவன் திருவடியில் அர்ச்சிக்க வேண்டும்; சமர்ப்பிக்க வேண்டும். அவற்றையே இறைவன் ஏற்கிறார்.
ஆகவே நாம் ஓர் உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்வோம். நமது முழு வாழ்வையும் அதற்கென அர்ப்பணம் செய்வோம். இதுவே நமது முடிவான தீர்மானமாக இருக்கட்டும். “என்னுடைய மக்களை உய்விப்பதற்காக மீண்டும் தோன்றுவேன்” என்று கூறியுள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நம்மை ஆசிர்வதிப்பாராக! நமது லட்சியங்கள் ஈடேறுவதற்காக அவர் நம்மை வழிநடத்திச் செய்வாராக!
உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத – [கட உபநிடதம் 1-3-4]
எழுமின்! விழிமின்! குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!
(தொடரும்…)