முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6
தொடர்ச்சி…
ஏழைகள் யார்?
என்னுடைய புரிதலில் நான் ஏழைகளை மூன்று வகையினராகப் பிரிக்க முடியும் என்று கருதுகிறேன்.
- பணக்கார நாடுகளில் வாழும் ஏழைகள் (அமேரிக்கா)
- வளரும் நாடுகளில் வாழும் ஏழைகள் (இந்தியா)
- ஏழைமை கோலோச்சும் நாடுகளில் வாழும் பரம ஏழைகள். (ஹெய்த்தி)
இந்தியாவில் ஏழைகள் என்பவர்கள் யார் என்பது என்றுமே சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு விவகாரம். நான் அந்தச் சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை. மத்திய அரசு கடந்த சில வருடங்களில் பல விதமான நிபுணர் குழுக்களை அமைத்து, இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள முயற்சித்தது.
சில மாதங்களுக்கு முன் 32 ரூபாய் விவகாரம் அரசியலை கலக்கியது நினைவுக்கு வருகிறது. நாள் ஒன்றுக்கு 32 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று வரையறுத்தது ஒரு குழு.
ஏழைகளுக்கு உணவுக்கான மானியம் வழங்க வேண்டும் என்று நான் கூறும்போது, குறிப்பாகப் பட்டினி கிடப்பவர்களையும், (Starvation), முழுமையான போஷாக்குடன் கூடிய உணவை சாப்பிட முடியாதவர்களையும் மட்டுமே சுட்டுகிறேன். புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும் இந்த விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பட்டினியால் வாடாதவர்களை வரையறுக்க நமக்கு தெளிவான வரையறைகள் தேவை. நமக்கு உள்ள பிரச்சினையே இந்த வரைமுறைகளை உருவாக்குவதில்தான் இருக்கிறது.
மேலே கூறிப்பிட்ட நிபுணர் குழுக்களும், விதவிதமான கேள்விகளை மக்களிடம் கேட்டு, அதற்கான பதிலைக்கொண்டே ஏழைகளின் எண்ணிக்கையை முடிவு செய்தது.
சொந்த வீடு இருக்கிறதா,, சொந்த நிலம் இருக்கிறதா, வாகனம் இருக்கிறதா போன்ற கேள்விகளைக் கொண்டுதான் முடிவு செய்யப்படுகிறது. ஹிந்து பத்திரிகையின் தலையங்கங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். உணவு, உடை, இருப்பிடம் என்ற நியாயமானது போல் தோன்றும்(!) வாழ்க்கை ஆதாரங்கள் இல்லாத அனைவரையுமே ஏழைகள் என்று வரையறுக்க வேண்டும் என்றுதான் எழுதப்படும்.
ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்தவே பல அதிகாரிகளும் நிபுணர்களும் முயல்கின்றனர். பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்.
புதியதாக அறிமுகமாகப் போகும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். இது ஏழைகள் அல்லாதவர்களுக்கு தானியங்களை மானிய விலையில் அளிக்கவும், எதிர்காலத்தில் நம்மை மீளாத் துயரத்திற்கு இட்டுச்செல்லவும் வழிசெய்யும் என்றும் நான் தீர்மானமாக நம்புகிறேன்.
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களை வரையறுக்க மேற்கொள்ளப்பட்ட குழுக்கள் அளித்த பரிந்துரைகளில், ஒன்றையும் அரசு ஏற்க மறுக்கிறது. ஓட்டு வங்கிகளின் உருவாக்கத்திற்காக திரு.ரங்கராஜன் தலைமையில் மேலும் ஒரு குழுவை நியமித்துள்ளது. இப்படியே சென்றால், குழுக்களின் அறிக்கைகள்தான் இருக்கும். அவற்றினால் பிரயோஜனம் இருக்காது.
பிரம்மாண்டமான மானியத் திட்டங்கள்
முதலில் மானியங்களால் யாருக்கு இலாபம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள், வேலையில்லாத பொதுமக்களில், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு சமூகத்திலும் இருந்து அரசு வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறது. இந்த வேலையில் சேர்வோரின் சம்பளத்திற்காகவும் ஓய்வூதியத்திற்காகவும் மற்றவர்கள் மீது வரிவிதிக்கிறது. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சிலர் அரசு வேலையில் சேர்ந்து விடுவதால், வரி விதிப்புக்கான எதிர்ப்பும் சமூகத்தில் குறைந்தே காணப்படும். இவ்வாறு சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர், எந்தவித வேலைத்திறனையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்த முறை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏழைகளாக இருந்த பெரும்பாலான மக்கள், ஏழைகளாகவே இருக்க வழி செய்யப்பட்டதுதான் 60 வருட சோஷலிஸ சரித்திரம்.
பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அற்புதமான பரிந்துரைகளை அவர் அளித்தார்.
அவர் பொருளாதாரக் கட்டமைப்பை இருவிதமாக பிரித்துக் கொண்டார். பணம் கொடுத்தாலும் ஒரு குடிமகனுக்குக் கிடைக்க முடியாத சேவைகளை ஒருபுறமும், மற்றவற்றை இன்னொரு புறமும் பிரித்துக் கொண்டார். அதாவது, பாதுகாப்பு, அச்சடித்த பணம் (Currency), இரும்புப்பாதை, அணைகள், சாலைகள், சட்டம் ஒழுங்கு, நீதி, மலேரியாவை ஒழிக்கப் பொது இடங்களில் அடிக்கப்படும் மருந்துகள், புத்தகங்களை வடிவமைப்பது (Curriculam), தேர்வுகளை நடத்துவது போன்றவற்றை அரசேதான் செய்ய வேண்டும். இவற்றிற்கான செலவுகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். கல்வி, மருத்துவம், உத்திரவாதத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் போன்றவற்றிற்கான செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பது இந்தப் பரிந்துரையின் இன்னொரு பக்கம்.
சாலை வசதிகள் மேம்பட்டு போக்குவரத்து வசதிகள் அனைவருக்கும் கிடைத்து, சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டால் மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதனாலேயே அவர்களால் மற்ற செலவுகளை தாங்களாகவே செய்து கொள்ளும் திறனும் ஏற்பட்டு விடும்.
இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பட்ஜெட் பற்றாக்குறைக்கான ஓர் எல்லையையும் அரசு நிர்ணயித்தது.
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அமேரிக்கப் பொருளாதார தேக்க நிலைகளைக்காரணம் காட்டி, அந்த எல்லையை மீறிவிட்டது. ஆகவே பற்றாக்குறையைக் குறைப்பது மத்திய அரசின் கடமை என்ற நிலையிலிருந்து, 5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது தற்பொழுதைய அரசு.
ஒவ்வொரு சமூகத்திலும், சிலருக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிப்பது, பெரும்பாலான மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மானியங்களை அளித்துக் கொண்டிருப்பது என்ற இரட்டை வியூகத்தைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது. இதில் வேலைவாய்ப்பை பழைய அளவில் செய்ய முடியவில்லை என்றாலும், மானியங்களின் அளவைப் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களைக் குறித்து நோக்கலாம். 100 நாள் வேலைத் திட்டத்தையும், உணவுக்கான மானியங்களையும் ஒருசேர நோக்குவதே சரியான வழியாக இருக்கும்.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்
சுதந்திர இந்தியாவில் எனக்குத் தெரிந்து இது போன்ற அற்புதமான திட்டத்தை யாரும் வடிவமைத்ததில்லை. அதற்காக காங்கிரஸ் அரசை கண்டிப்பாக நான் பாராட்டுகிறேன். ஆனால் எல்லாத் திட்டங்களுக்கும் உள்ள குறைபாடுகள்தான் இதற்கும் இருக்கிறது. இந்தியா முழுவதும் பல கோடி மக்களை சென்றடைவதால் இதன் குறைகள் நேரடியாக மொத்த இந்திய சமூகத்தையும் பாதிக்கிறது.
இந்தத் திட்டத்தில் உள்ள ஊழல்களைக் குறித்து நான் எழுதப் போவதில்லை. இக்கட்டுரை ஊழல்களைக் குறித்து எழுதப்படவில்லை.
எளிமையாகப் பார்த்தால், எங்கள் மாவட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது சாதாரண அட்டூழியமல்ல; பிரம்மாண்டமான அட்டூழியமே. நான் ஏற்கெனவே கூறியதைப் போல் தஞ்சாவூர் மாவட்டம் பச்சை பசேலென உள்ள மாவட்டம். முயன்றால் அனைத்து மக்களும் உடல் உழைப்புக்கு ஏற்ற வேலையை இங்கு கண்டிப்பாகப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் சோம்பேறிகள் உருவாகி உள்ளார்கள். விவசாயத்திற்கும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து, இந்தியாவில் பின்தங்கிய முதல் 100 தாலுக்காக்களுக்கோ அல்லது முதல் 250 தாலுக்காக்களுக்கோ மட்டுமே செயல்படுத்த வேண்டிய திட்டம் இது. மற்ற தாலுக்காக்களில் 50 அல்லது 100 பேர்களுக்கு வேலை இல்லையென்றால், வேறு வழிகளிலேயே இதைச் சரிசெய்ய வேண்டும். ஏற்கெனவே உணவு மானியம் அளிக்கவேண்டும் என்று கூறிவிட்டேன். உணவைத் தவிர மற்ற எதுவும் மானியத்தில் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டால், மனிதன் அவனாகவே, தன் திறமையை வளர்த்துக் கொள்ள முயல்வான் அல்லது வேறு பிராந்தியத்திற்குக் குடியேறி விடுவான். இதை அந்தந்த மனிதனின் முடிவிற்கே விட்டுவிடுவதே சிறந்த வழி. இருக்கும் இடத்திலேயே மானியங்களை அளித்துக் கொண்டிருந்தால், சுய முன்னேற்றத்தைக் குறித்த சிந்தனையே அவனுக்கு இல்லாமல் போய்விடும். மேலும், இந்த பிரம்மாண்ட மானியத் திட்டங்கள் ஒரு நாள் நின்றுதான் போகும். வசதிகளை இலவசமாக அனுபவித்துவிட்டால், அந்த வசதிகள் நின்றுவிடும்போது, முன்னிருந்த ஏழைமை நிலைக்கு அந்த மனிதன் போகமாட்டான். அதை விட மோசமான ஏழைமை நிலைக்குச் செல்வான். ஏனெனில், சிலகாலம் வசதிகளை அனுபவித்து விட்டதால், ஏழைமையில் வாழும் திறமையும் அவனிடமிருந்து விலகியிருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தினால், நாம் ஏழைகளுக்கு உதவி செய்யவில்லை. இந்தத் திட்டம் நிறுத்தப்படும்போது, அவர்களில் பெரும்பாலானோரின் நிலை பரிதாபகரமாகி விடும். இதில் சந்தேகமே இல்லை.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (National Food Security Act) கடந்த ஒரு வருடமாக மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த திட்டம் UPA-2 அரசாங்கத்தின் “Game Changer”ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பார்ப்பதற்குமுன், நாம் தற்பொழுதைய உணவு மானியங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
நடப்பு உணவு மானியங்கள்
புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு பிறகுதான் மத்திய அரசு, உணவுக்கான மானியங்களை அளிக்க இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
ஏற்கெனவே BPL-Below Poverty Line-இன் படி, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள, ஏழைகளாக வரையறுக்கப்பட்ட, சுமார் 18 கோடி மக்களுக்கு, மத்திய அரசு மாதம் ஒன்றுக்கு, குடும்பத்திற்கு 35 கிலோ தானியங்களை மானிய விலையில் மாநில அரசுக்கு அளிக்கிறது.
இதில் ஒரு சுவாரசியம். மத்திய அரசின் கணக்குகளின்படி, இந்தியாவில் 4 கோடி குடும்பங்கள், அதாவது 18 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று வரையறுத்துள்ளது. ஆனால், மாநில அரசுகளின் ஓட்டு வங்கிக் கொள்கைகளினால், மொத்தமாக இந்தியாவில் 8 கோடி BPL ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அனைத்திற்கும் மானியம் அளிப்பதில்லை. மாநில அரசுகளே தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த மானியங்களை அளிக்கின்றன.
தமிழ்நாட்டின் கதை, தனி கதை. மத்திய அரசு வரையறுக்கும் எந்தக் கணக்கையும் நாம் மதிப்பதில்லை. நம்மை பொருத்தவரை, ஏழைகள் என்று வரையறுக்கப்பட்ட அனைவர்க்கும் 35 கிலோ இலவச அரிசி, மற்ற அனைவர்க்கும் 20 கிலோ இலவச அரிசி என்று அள்ளி வழங்குகிறோம்.
மாதம் 17000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் என் தந்தை, மற்றும் என் வருமானம் எதைப்பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை. எங்கள் குடும்பத்திற்கும் 20 கிலோ இலவச அரிசி உண்டு.
சரி, மறுபடி மத்திய அரசின் கணக்குகளுக்கு வருவோம். BPLஐத் தவிர, APL-Above Poverty Lineஇல் (But Not Rich) உள்ள 11.5 கோடி குடும்பங்களுக்கும் 15 கிலோ தானியங்கள் சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றன.
புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னரே, மத்திய அரசு கிட்டத்தட்ட 72 கோடி மக்களுக்கு தானியங்களை மானிய விலையில் விற்கிறது என்பதை குறித்துக் கொள்வோம்.
மேலும், நெல்லிற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 2011-12இன் படி, கிலோ ஒன்றுக்கு 11 ரூபாய்கள். அவற்றைச் சேமித்து விநியோகம் செய்ய ஆகும் செலவு, கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்கள். இந்த மானியங்களுக்கான வருடாந்திரச் செலவுகள் 67000 கோடி ரூபாய்கள்.
கதையில் முதலாவது ட்விஸ்ட்–
2009-இல் ஆட்சிக்கு மீண்டும் வந்த சோனியா தலைமையிலான காங்கிரஸ், மேலும் எதைச் செய்து இந்தியாவின் கஜானாவை துவம்சம் செய்து, ஓட்டைப் பெறலாம் என்று ரூம் போட்டு யோசித்தது. தேசிய ஆலோசனைக் குழு என்ற “சோனியாவின் அல்லக்கைகள்” அல்லது என் பாஷையில் “கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள்” ஒன்று கூடி “ஏழைகளுக்காக” ஏசி ரூமில் யோசித்தார்கள்.
APL, BPL என்று மக்களை வரையறுத்தாலும், தானியங்களை மானிய விலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் அளித்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அவர்கள் அளித்த “உணவுப் பாதுகாப்பு மசோதாவின்” வரைவு நகல் இணையத் தளத்திலேயே கிடைக்கிறது. அதன் முக்கிய ஷரத்துகள் சில:
- 75 சதவிகித இந்திய மக்களுக்கு, அதாவது, 94 கோடி மக்களுக்கு மானிய விலையில் தானியங்களை விற்கப் பரிந்துரைக்க பட்டது. இதில் 75 கோடி கிராம மக்களும், 19 கோடி நகர மக்களும் அடங்குவர்.
- இவர்களில் முதல் உரிமை பெற்ற, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள (BPL) 38 கோடி கிராம மக்களுக்கும், 10.5 கோடி நகர்ப்புற மக்களுக்கும், அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்பட வேண்டும்.
- மாதத்திற்கு ஒருவருக்கு 7 கிலோ தானியங்கள் வழங்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணைக்கையைப் பொருத்து அளவு மாறுபடும்.
- மற்றவர்களுக்கு, அதாவது, APL மக்களுக்கு, விவசாயிகளிடமிருந்து எந்த விலையில் தானியம் கொள்முதல் செய்யப்படுகிறதோ, அதில் பாதி விலையாக விற்கப்பட வேண்டும். மாதத்திற்கு ஒருவருக்கு 4 கிலோ மட்டுமே!
- 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உணவுடன் போஷாக்கை வேகமாக அளிக்கும் மருத்துவ உணவு, கர்ப்பவதிகளுக்குப் பண உதவி, குழந்தைகளுக்கு மதிய உணவு போன்றவையும் நடைமுறைப்படுத்தப் படவேண்டும்.
- 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவு வரை, அதாவது 2017ஆம் ஆண்டு வரை, விலை ஏற்றம் கூடாது.
- எந்தக் காரணத்தினாலாவது, மத்திய அரசினால் தானியங்களை அளிக்க முடியாது போனால், மானியத் தொகையை அம்மக்களுக்குப் பணமாக அளிக்க வேண்டும். இந்தச் சட்டம் மத்திய அரசைக் கட்டுபடுத்த வேண்டும். அதாவது திட்டத்தை அமல்படுத்தாமல் போனால் மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
நம் நாட்டின் புத்திஜீவிகள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு–
கொல்கொத்தாவைச் சேர்ந்த இந்தியப் புள்ளிவிவர அமைப்பின் உறுப்பினரும், மத்திய அரசின் நெடுங்கால தானியக் கொள்கைக்கான நிபுணர் குழுவின் உறுப்பினருமான செல்வி.சுவாமிநாதன் ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி–
“அமேரிக்காவில், தங்கள் வருவாயில் 33 சதவிகிதத்திற்கு மேல் உணவிற்காகச் செலவு செய்யும் அனைவருக்கும் உணவு கூப்பன்கள் அளிக்கப்படுகின்றன. இந்தக் காரணியை இந்தியாவில் பொருத்திப் பார்த்தால் 95 சதவிகித கிராம மக்களும், 90 சதவிகித நகர மக்களும், புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தானியங்களைப் பெற வேண்டும். ஆனால் இந்த மசோதா 25 சதவிகித கிராம மக்களையும், 50 சதவிகித நகர்ப்புற மக்களையும் ஒதுக்கி விடுகிறது.”
வெள்ளையன் திமிர் பிடித்து, தறி கெட்டு அலைந்தால், நாமும் அதையே செய்ய வேண்டுமா என்ன?
கதையில் அடுத்த ட்விஸ்ட்–
தேசிய ஆலோசனை குழுவின் கடைசி வரைவைத்தான் நாம் மேலே பார்த்தோம். இதற்கு முன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் டில்லியில் நடந்தேறின. அவற்றைப் பார்க்கலாம்.
சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவு மசோதாவை பிரதமருக்கு அனுப்பியது.
அதில் இருந்த மிக முக்கிய ஷரத்து, 90 சதவிகித இந்தியர்களுக்கு உதவும் வகையில், குடும்பம் ஒன்றிற்கு மாதத்திற்கு 20 கிலோ தானியம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பதுதான்.
படித்துப் பார்த்த பிரதமருக்கு திக்பிரமை பிடித்து விட்டது என்று கூறப்பட்டது. திரு.பிரணாப் முகர்ஜி ஒன்றுமே பேச வில்லையாம். திட்ட கமிஷனின் அஹ்லுவாலியா, இந்தியா கஜானா கூஜாவாகி விடும் என்றாராம். விவசாய அமைச்சர் திரு.ஷரத் பவார், இந்தியாவின் நிதிநிலை அதள பாதாளத்திற்குச் சென்றுவிடும் என்றாராம்.
நடப்பது நடக்கட்டும் என்று, மசோதாவை நடைமுறைபடுத்தும் அளவுக்கு மத்திய அரசின் கஜானாவில் துட்டு இல்லை என்று பிரதமர் திருப்பி அனுப்பி விட்டார்.
காட்சி மாற்றம்- சோனியாவும் ராகுலும் மசோதாவை அலசினார்கள். 20 கிலோ என்றால்தானே பிரதமர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ஒருவருக்கு 7 கிலோ என்று மாற்றி, வேறு சில மாற்றங்களுடன் மீண்டும் மசோதாவை அனுப்பி வைத்தார்கள். ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், 35 கிலோ தானியங்களை மானியத்தில் அளிக்க வேண்டும்.
நம் பிரதமர் ஜனாதிபதி போன்றவராயிற்றே. எந்தச் சட்டத்தையும் ஒருமுறைதானே பரிசீலனைக்குத் திருப்பி அனுப்ப முடியும். ஆகவே ஒப்புக்கொண்டு விட்டாராம்.
முதலிலேயே ஒப்புக்கொண்டிருந்தால் 20 கிலோவுடன் முடிந்திருக்கும். திருப்பி அனுப்பியதால், ஜன்பத்தில் உள்ளோர்க்கு கோபம் வந்து, 35 கிலோவாக அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லையே! நம் வரிப்பணம்தானே நாசமாகப்போகிறது.
பிரதமர், திரு.ரங்கராஜன் தலைமையில், சில பொருளாதார நிபுணர்களிடம் இந்த வரைவு மசோதாவை அளித்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயச் சொன்னார்.
அந்த குழு அளித்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
- தேசிய ஆலோசனைக் குழுவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. யார் முதல் உரிமை பெறும் ஏழைகள்? யார் உணவிற்கு முழுமையாக செலவழிக்க முடியாத பாதி ஏழைகள்? என்றெல்லாம் இந்தியச் சூழலில் தெளிவாக வரையறுப்பது கிட்டத்தட்ட அசாத்தியமே!
- எந்த ஏழையும் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற பரிந்துரை நியாயமானாலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவைப்படும் கட்டமைப்புகள் இந்தியாவில் இல்லவே இல்லை.
- மேலும் 75 சதவிகித மக்களுக்கே தானியங்களை அளிக்க பரிந்துரைத்திருப்பதால், ஏதேனும் ஒரு முறையில் 25 சதவிகித மக்களை (நடுத்தர மற்றும் பணக்காரர்களை) விலக்க வேண்டியுள்ளது.
- 2014-இல் இருக்கப்போகும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், கிட்டத்தட்ட 1.15 இலட்சம் கோடி ரூபாய்களை மத்திய அரசு மானியமாக அளிக்க வேண்டி வரும். அதிகப்படியாக 50000 கோடி ரூபாய்களை வருடந்தோறும் மத்திய அரசு ஒதுக்கவேண்டி வரும்.
கதையின் கடைசி ட்விஸ்ட்–
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சட்ட வரைவு மசோதா, நிபுணர் குழு பரிந்துரைத்ததை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் 90 சதவிகித செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. பிரணாப் முகர்ஜி இத்திட்டத்திற்கான பணத்தை இனி தேட வேண்டும்.
விவசாயத்துறையின் இணை அமைச்சர், திரு. ராவத் பாராளுமன்றத்தில் பேசும் போது, இந்தத் திட்டத்திற்கான அதிகப்படி 6 மில்லியன் டன் தானியங்களை உற்பத்தி செய்ய, விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். அதற்கு 1 இலட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்றார்.
உணவு அமைச்சர் திரு. கே.வி.தாமஸின் கருத்துப்படி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, கட்டமைப்புகளை உருவாக்க மொத்தமாக 3.5 இலட்சம் கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கதையில் என் ட்விஸ்ட்–
- 18 கோடி BPL மக்களையும், 11.5 கோடி APL மக்களையும் தாண்டி, 48 கோடி மக்களை BPL- வறுமை கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள் என்று வரையறுப்பது அயோக்கியத்தனம். இதைத் தவிர வறுமைக்கோட்டிற்கு மேலுள்ள 45 கோடி மக்களுக்கு சந்தையை விடக் குறைந்த விலையில் தானியங்களை அளிப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்.
- உண்மையாகவே, பட்டினி கிடப்பவர்களுக்கு மட்டும் உணவுக்கான மானியங்கள் அளிக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு அதாவது, முழுமையான போஷாக்கு நிறைந்த உணவை சாப்பிட முடியாதவர்களுக்கு சற்றே அதிக விலையில் விற்கலாம்.
- மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழாத மக்களுக்கு மானியத்தை அளிப்பதற்கு பதிலாக, பட்டினி கிடப்பவர்களுக்கு மட்டும், தானியங்களோடு, மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் அளிக்கலாம்.
- இந்த மக்கள், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். உண்மையாகவே பட்டினி கிடப்பவர்களுக்கு மட்டுமே மானியங்கள் அளிக்க இது வழி செய்யும்.
மேற்குறிப்பிட்ட என் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட போவதே இல்லை என்று எனக்கு தெரியும். ஓட்டிற்காக மாநில அரசுகள், இந்த ஏழை மக்கள் தொகையை அதிகப்படுத்திக் காண்பிப்பதும் நடக்கிறது.
தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வறுமையில் வாடும் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் நமக்கு அனைத்து மனிதர்களும் ஏழைகள்தான். ஏற்கெனவே, நம் முதல்வர், இந்தப் புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பட்டினி கிடக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2-லிருந்து 3 சதவிகிதம் வரைதான் என்கிறது மத்திய அரசினால் நடத்தப்பட்ட NSS ஆய்வு. அதாவது 3.6 கோடி பேர்கள் 2 வேளை கூட உணவில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் துல்லியமாக இது போன்ற மக்களை வரையறுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 5 கோடி மக்களுக்கு, இந்த மானியங்களை வழங்க வேண்டும், அதிகபட்சமாக 6 கோடி மக்களைப் பட்டினி கிடப்பவர்கள் என்று வரையறுத்து வறுமைக் கோட்டின் எல்லையை தீர்மானிப்பதையும் தவறென்று கூற முடியாது. அதற்காக தற்பொழுதைய நிலையில் 48 கோடி பேரை இது போன்று வரையறுப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? இதைத் தவிர மேலும் 46 கோடி பேருக்கு சந்தை விலையை விட தானியங்களை குறைந்த விலையில் விற்கத் திட்டம் போடப்படுகிறது.
90 சதவிகித மக்களுக்கு, குடும்பத்துக்கு 20 கிலோ தானியங்கள் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது தேசிய ஆலோசனை குழு
பிரதமரின் தலையீட்டிற்கு பிறகு, 75 சதவிகித மக்களுக்கு, குடும்பத்துக்கு 35 கிலோ என்ற அளவில் தானியங்கள் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது தேசிய ஆலோசனை குழு
சில மாற்றங்களுடன் அதை ஆமோதிக்கிறது பிரதமர் நியமித்த குழு
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சட்டம், தற்பொழுது பாராளுமன்ற குழுவிடம் சென்றுள்ளது.
100 சதவிகித மக்களுக்கும் மானியம் அளிக்கப்படும் என்கிறது தமிழகம் போன்ற மாநிலங்கள்.
தற்பொழுதுள்ள மத்திய அரசும், எதிர்கால இந்தியாவின் பொருளாதார நிலையைப் பற்றி லவநேசமும் கவலைப்படாமல், ஓட்டிற்காக மானியங்களை அளிக்க முயல்கிறது.
(தொடரும்…)
இன்று இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சி நடத்தும் அரசியல் கட்சிகள் வேறு நாட்டுகளிலிருந்து அந்நிய மதத்தவரை சட்ட விரோதமாக குடியேற்றி நாளை ஆட்சியை பிடிப்பார்கள், இன்று இலவசத்துக்காய் ஓட்டு போட்ட மக்களை அன்று இந்த அரசியல் கட்சிகள் மறந்து போகும், அந்நிய மதத்தவர் இவர்களை அடித்து விரட்டும் போது போகும் புகலிடம் ஏதுமின்றி தவிப்பார்கள், அதற்காகத்தான் இன்றைய அரசியல் கட்சிகள் இலவசம் கூடவே அந்நிய நாட்டவருக்கு குடியுரிமை இப்படி வஞ்சக எண்ணங்களுடன், பாமரனுக்கு புரிய வைப்பது எப்படி? ஆர்.எஸ்.எஸ். எங்கு வளர வில்லையோ அங்கு பா.ஜ.க. இல்லை, இதை பா.ஜ.க. வினர் உணர்ந்து கொண்டு சங்க ஷாகாக்களில் கலந்து கொண்டு புது ஊர்களில் ஷாகா வர யோசிக்க வேண்டும், மேலும் சங்கத்தின் எளிமை இப்போது பா.ஜ.க.வில் உள்ளதா? என்பதையும் தேடி பார்க்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, அதனை மீட்டடிமைச் செய்யும் சூழ்ச்சியும் இதில் இருக்கிறதோ என்கிற ஐயப்பாடு இருக்கிறது. இந்திய நாட்டைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். பழைய நாட்டுப்பாடலோன்று நினைவுக்கு வருகிறது. “ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருவன் போட்டான் வெள்ளரிக்காய், காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்”.