கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2

தொடர்ச்சி…

சில நிமிடங்கள் கனவுலகத்தில் சஞ்சரிக்கலாம்:-

பொதுவுடைமைக் கூறுகளில் முக்கியமாக கருதப்படும் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக அனைவர்க்கும் அளித்து வரும் “சோஷலிஸ்ட் டெமாக்ரஸீஸ்” என்று பேசப்படும் “சோஷலிஸ ஜனநாயகத்தை” அனுசரிக்கும் ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தை பார்க்கலாம்.

2ம் உலகப் போருக்குப் பின்தான், ஐரோப்பாவில் அனைவர்க்கும் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க ஆரம்பித்தனர். மேலும் வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகையும் வழங்க ஆரம்பித்தனர். அன்று 4 சதவிகிதமாக இருந்த இவ்வகை மக்கள், இன்று 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளனர். வேலை செய்யாவிட்டாலும் உதவித்தொகையைக் கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து விடலாம் (ஐரோப்பாவில் சாதாரண என்பது நம் இந்தியாவின் நடுத்தர நிலையில் என்று கொள்ளலாம்.); கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்; குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவத்தைப் பற்றியும் கவலை இல்லை என்ற மனநிலைக்கு பலர் வர ஆரம்பித்தனர். இலவசங்களையும் மானியங்களையும் கொடுக்க ஆரம்பித்தபின் அதை நிறுத்துவது இயலாது என்பதற்கு அந்நாடுகளின் இன்றைய நிலையே சரியான உதாரணம்.

கிரேக்கத்திலும், ஃபிரேன்ஸிலும் நடந்த சமீபத்திய தேர்தல்களில், சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள் தோற்றுப் போனார்கள். அதாவது மானியங்களை அளித்து விட்டால், பிற்காலத்தில் அதை நிறுத்துவது பிரம்மப்பிரயத்தனம் என்பது தெளிவாகவே தெரிகிறது.

1970களுக்குப் பிறகு ஆப்பிரிக்க மற்றும் பிற நாடுகளிலிருந்து ஐரோப்பியரல்லாத பல இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கியவுடன் இந்த பிரச்சினை வேறு ஒரு பரிமாணத்திற்கு வந்தது. குடியேறியவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் மருத்துவம் இலவசம் என்ற நிலையில், 1990களுக்கு பிறகு “வரவுக்கு மேல் செலவு” என்ற நிலைக்கு ஐரோப்பாவின் பல நாட்டு கணக்குகள் முதல்முதலாக வர ஆரம்பித்தன. உடனடியாக அந்நாடுகள் தங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம். அப்பொழுதும் ஓட்டிற்காகவும், கருணைமயமானவர்களாக காண்பித்து கொள்வதற்காகவும், வலதுசாரியானாலும், இடதுசாரியானாலும் அனைத்து அரசியல் அமைப்புகளும் இதை தொடரவே செய்தன. 2000க்கு பிறகு பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து, 2008ல் அமேரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைகையில், ஐரோப்பாவின் பல நாட்டு பொருளாதாரங்கள் முற்றிலும் செயலிழந்து விட்டன. உதாரணம், கிரேக்கம், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்றவை.

உலக வங்கியிடமிருந்தும், ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் இந்நாடுகள் கடன் வாங்குவதும், அதற்காக, பலவகைப்பட்ட செலவுகளை நிறுத்துவதும் நடந்து வருகின்றன. இந்த சிக்கன நடவடிக்கைகள் 1990களில் ஆரம்பித்திருக்க வேண்டியவை என்று நான் சொல்ல மாட்டேன். 1945ல் இந்த செலவுகள் ஆரம்பித்திருக்கவே கூடாது. சரி அது வெள்ளையர்களின் பிரச்சினை.

இந்த கதையைக் கூறியதற்கு காரணம், குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடுகளாலேயே, கல்வி மற்றும் மருத்துவத்தையும், இலவசங்களையும், மானியங்களையும் அளிக்க முடியாத நிலையில், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அதே பாதையில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டுதான் இந்த கட்டுரை.

மறுபடியும் குழந்தை கணக்குகள்:-

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற கோஷத்தின் தாக்குதல் கம்யூனிஸ்டு கொரில்லாக்களால் முன்னெடுக்கப்படுவது இயற்கையே! ஆனால் கம்யூனிஸத்தை எதிர்க்கும் இந்தியாவின் ஒரு வலதுசாரிக்காரரையும், அமேரிக்காவின் ஒரு இடதுசாரிக்காரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே அரசியல் விமர்சகர்கள்தான். இருவருமே நகைச்சுவையை வைத்துதான் அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள்தான். முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆதரித்துக் கொண்டே கம்யூனிஸத்தையும் எதிர்த்துக் கொண்டே, பொதுவுடைமையின் பல கூறுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள். இன்று உலகில் பலரின் நிலை இவ்வாறுதான் உள்ளது.

இந்தியாவில் திரு. சோ.இராமசாமி அவர்களையும், அமேரிக்காவில் திரு.பில் மார் (Bill Maher) அவர்களையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே நகைச்சுவைக்கு தங்கள் நாடுகளில் பிரசித்தி பெற்றவர்கள்.

சோவின் நகைச்சுவை இந்தியாவில் பிரசித்தி பெற்றது. பள்ளிக் கல்வியில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்னும் நகைச்சுவையை அவர் எப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பவர். அதற்காக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்றும், ஏழைகளுக்கு தங்கும் விடுதிகளையும் ஆயிரக்கணக்கில் அமைத்து செலவையே பார்க்காமல் கல்வி அளிக்க வேண்டும் என்னும் நட்சத்திர நகைச்சுவையை உதிர்ப்பவர். ஆனால் இந்த முன்னெடுப்புகளை செயல்படுத்த எவ்வளவு செலவாகும் என்பதையும், அந்த நிதி நம் நாட்டில் இருக்கிறதா என்பதையும், அதை எவ்வாறு திரட்டுவது என்பதைப் பற்றி மட்டும் அவர் எழுதுவதில்லை. அவரின் இந்த நட்சத்திர நகைச்சுவையை செயல்படுத்த எவ்வளவு செலவாகும் என்ற எதார்த்த கணக்கை நாம் அடுத்து பார்க்கலாம்.

அமேரிக்காவில் திரு.பில் மார், முதலாளித்துவ பொருளாதார முறையை முழுமையாக ஆதரிப்பவர். ஆனால் இடதுசாரி என்று தன்னை கூறிக்கொள்பவர். பணக்காரர்களுக்கும் நடுத்தர மற்றும் ஏழைகளுக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும், அதற்கு பணக்காரர்களுக்கும், பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்களுக்குமான வரிவிதிப்பை பலமடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், அதனாலேயே இந்த இடைவெளியை பெருமளவில் குறைத்து விடலாம் என்ற நட்சத்திர நகைச்சுவையை உதிர்த்துக் கொண்டிருப்பவர்.

இந்த நட்சத்திர நகைச்சுவைக்கு அமேரிக்காவில் தற்பொழுது நல்ல கிராக்கி. அதை ஒரு பெரும் பணக்காரர் ஆதரிப்பது நல்ல சுவாரசியம். திரு.வாரென் பஃபெட் (Warren Buffet) என்பவரையே நான் சுட்டுகிறேன். கடந்த வருடம் ஒரு பேட்டியில் தான் கட்டும் வரி விதிப்பு சதவிகிதத்தை விட, தன் உதவியாளரின் வரி விதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும் அந்த முறையை மாற்ற வேண்டும் என்பதையும் கூறினார்.

திரு.வாரென் பஃபெட் கூறியது தொழில்களை பாதிக்கக்கூடியது என்று விவரம் அறிந்தவர்களால் நிரூபிக்கப்பட முடியும் என்றாலும், நாம் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் அதை நடைமுறை படுத்துவதாக வைத்துக் கொள்வோம். பெரும் பணக்காரர்களுக்கான தனி மனித வரி வசூலிப்பை அவர்களின் உதவியாளர்களை விட அதிக சதவிகிதத்தில் வசூலித்தால், அமேரிக்க அரசின் கஜானாவிற்கு வருடம் 40 பில்லியன் டாலர்கள் அதிகமாக வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது. அமேரிக்க அரசின் மொத்த கடன் தொகை 15 ட்ரில்லியன் டாலர்கள் (15000 பில்லியன் டாலர்கள்) என்பதை ஒப்பிட்டு பார்த்தால், இது யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது விளங்கும்.

 

கார்பொரேட் நிறுவனங்களுக்கு சூழலுக்கு ஏற்ப, வரி விதிப்பு இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் பணக்காரர்களுக்கு அதிக வரிவிதிப்பு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்த வரிவிதிப்பாலேயே நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறுவது நல்ல நட்சத்திர நகைச்சுவை.

(அ) குழந்தைகளின் கல்விக்கான ஒரு குழந்தை கணக்கு:-

கல்வி அளிக்கும் திட்டத்தை இரண்டாக பிரித்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகை 2011 நிலவரப்படி 121 கோடி.

பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையில் 15.8 கோடி குழந்தைகள் உள்ளனர். (3லிருந்து 6 வயதிற்குள் 10 கோடி குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய நிலையில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.)

6 வயதிலிருந்து 14 வயது வரையில் 17 கோடி குழந்தைகள் உள்ளனர்.

பிராமணர்கள் மற்றும் பிற உயர்ஜாதிகளில் 40 சதவிகிதம் பேர் பணக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்கள். ஆனால் நாம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருப்பதாலும், உயர்ஜாதி நாசக்காரர்கள் அழியவும், உயர்ஜாதியில் பிறந்து ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடையாது என்று வைத்துக் கொள்ளலாம். 20 சதவிகித குழந்தைகளை இந்த கணக்கிலிருந்து எடுத்து விட்டால் 22 கோடி குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும்.

மொத்தமாக 22 கோடி குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அதில் 15 கோடி மிகவும் ஏழ்மையில் உள்ள குழந்தைகளுக்கு (குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு) இலவச உணவு, உடை போன்றவற்றையும் வழங்கவும் திட்டம் போடலாம்.

ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கான பள்ளிக்கூட செலவு 25000 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கான உணவு, உடை போன்றவற்றிற்கான செலவு 25000 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம்.

22 கோடி குழந்தைகளுக்கு கல்விக்கான செலவு – 5.5 இலட்சம் கோடி ரூபாய்கள் 15 கோடி குழந்தைகளுக்கு பிற செலவு – 3.75 இலட்சம் கோடி ரூபாய்கள்

(ஆ) மருத்துவத்திற்க்கான ஒரு குழந்தை கணக்கு:-

நவீன மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் இலவசமாக அளிக்க திட்டம் போடலாம்.

Minisitry of Health and Family Welfare இணையதளத்தின்படி 2010ம் ஆண்டிற்கான நோய் விவரங்களின் அடிப்படையில் இந்த கணக்கு போடப்படுகிறது.

இந்தியாவில் 2010ம் ஆண்டு நோய்வாய் பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம். தொற்று நோய்கள்:-

சுவாச தொந்தரவு கொண்டவர்கள் 2.5 கோடி வாந்தி பேதி தொந்தரவு கொண்டவர்கள் – 1 கோடி டி.பி , மலேரியா, நிமோனியா போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் – 42 இலட்சம்

தொற்றா நோய்கள்:-

இதய நோய் கொண்டவர்கள் – 4.5 கோடி உயர் இரத்த அழுத்த நோய் – 19 கோடி சர்க்கரை வியாதி கொண்டவர்கள் – 3.75 கோடி சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் – 5 கோடி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் – 1 கோடி உடல் ஊனமுற்றவர்கள் – 2 கோடி

குறைந்த உடல் எடை கொண்ட பெண்கள் – 43 கோடி குறைந்த உடல் எடை கொண்ட ஆண்கள் – 41 கோடி

அதிக உடல் எடை கொண்ட பெண்கள் – 15 கோடி அதிக உடல் எடை கொண்ட ஆண்கள் – 11 கோடி

போஷாக்கு குறைந்த 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் – 14 கோடி (70 சதவிகித குழந்தைகள்)

(மத்திய அரசின் மருத்துவ அமைப்புகள் அளித்திருக்கும் இந்த தகவல்கள் முழுமையானவை அல்ல என்று அந்த இணைய தளத்திலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதாவது, அரசு மருத்துவ மனைகளிலிருந்தே தகவல்கள் முழுமையாக பெறப்பட்டதாகவும், தனியார் மருத்துவமனைகளிலிருந்து தகவல்கள் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.)

போஷாக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டே நாம் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளலாம். 121 கோடி மக்கள் தொகையில் 85 கோடி மக்கள் போஷாக்கு குறைந்தவர்கள் என்பது, 70 சதவிகித மக்களால் உணவைக் கூட முழுமையாக, உடல் தேவைக்கு ஏற்றபடி உண்ண முடியவில்லை என்பதையும், அவர்களால் நவீன மருத்துவத்திற்கான செலவை ஏற்றுக் கொள்வது சாத்தியமே அல்ல என்பதையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாதம் 750 ரூபாய், போஷாக்கு குறைந்தவர்களுக்கு சரியான உணவு அளிக்க மாதம் 1000 ரூபாய், இதய நோய் வந்தவர்களுக்கு 50000 ரூபாய், விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் என்று அனைத்து நோய்களுக்கும் அதை கட்டுக்குள் வைக்க அல்லது குணப்படுத்த ஒரு எளிமையான கணக்கை போட்டு பார்த்தேன். 80 சதவிகித மக்களுக்கு ஒரே தரத்தில் நவீன மருத்துவத்தை இலவசமாக வழங்க குறைந்தபட்சம் வருடத்திற்கு 5.5 இலட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும்.

ஒரு சுவாரசியமான செய்தி. வாந்தி பேதி தொந்தரவு கொண்டவர்களுக்கு சராசரியாக 250 ரூபாய் செலவாவதாக அரசாங்க கணக்கு கூறுகிறது. என் அம்மாவிற்கு இந்த தொந்தரவு ஏற்படுகையில் நான் 3000 ரூபாய் வரை ஒரு தனியார் மருத்துவமனையில் செலவழித்தேன். தனி அறை போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கூட, 1500 ரூபாயாவது செலவு செய்தாக வேண்டும். அரசு மருத்துவமனைகளில் எவ்வாறு செலவை குறைக்கிறார்கள்? நமக்கே விடை தெரியும்.

2008-09ம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த சுகாதாரத்துறை செலவு 2.1 இலட்சம் கோடி ரூபாய்கள். அதில் 58 ஆயிரம் கோடி ரூபாய்கள் மட்டுமே அரசு செலவழித்தது. (மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்த்து) மீதியை குடிமக்களே தனியார் மருத்துவனைகளில் செலவழித்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பெரு நோய்கள் ஏற்படுகையில், ஏழைகளால் தனியார் மருத்துவத்தின் செலவுகளை ஏற்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. தற்பொழுதைய நிலையில் அவர்கள் அந்த நோய்களுடனேயே வாழ்ந்து மடிகிறார்கள் என்ற பச்சையான உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

பலமட்டங்களில் பணக்கார நாடாக உள்ள அமேரிக்காவில் 5 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையை மாற்ற முனைந்த அதிபர் ஒபாமா அவர்கள், சில சீர்திருத்தங்களை செய்யாமல், மொத்தமாக சுகாதாரத் துறையையே மாற்ற முனையும் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

அனைவர்க்கும் ஒரே தரத்தில் நவீன மருத்துவம் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமிது என்பதை நினைவில் கொள்வோம்.

உலகிலேயே அதிக பணம் பிடிக்கும் மருத்துவ செலவுகள் அமேரிக்காவில் உள்ளது என்பதும் மருத்துவ காப்பீடு இல்லாமல் சாதாரணமாக யாருமே நோயிலிருந்து நிவாரணம் பெற முடியாது என்பதும் பலருக்கு தெரிந்திருக்கலாம். அமேரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் சுகாதார துறைக்கு செலவிடப்படுகிறது. மேலும் 2030ம் ஆண்டு வாக்கில் அது 60 சதவிகிதமாக உயரும். அவ்வளவு செலவை உலகில் எந்த நாடும், அமேரிக்கா உட்பட செய்ய முடியாது.

அமேரிக்காவிற்கே இந்த கதி என்பதையும், அமேரிக்காவின் வழியையே நாமும் பின்பற்றுகிறோம் என்பதையும், 121 கோடி மக்களுக்கும், ஒரே தரத்தில் நவீன மருத்துவம் என்பது அசல் மூடத்தனம் என்பதையும் நாம் தெளிவாக தீர்மானமாக உணர வேண்டும்.

இனி, இக்கட்டுரையில், ஓய்வூதியம், விவசாயம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய 4 துறைகளில் இந்திய அரசு நடைமுறை படுத்திக் கொண்டிருக்கும் மானிய திட்டங்களைக் குறித்து விரிவாக பார்க்கலாம். ஓய்வூதியம்:-

நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். போன வாரம் ஒரு முதியவர் தன் வீட்டின் வெளியே வேலிக்கு அருகில் நிழலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த வீட்டின் மருமகள் முதியவருக்கு வேண்டா வெறுப்பாக உணவை “டங்கென்று” வைத்து விட்டு சென்றார். தன்மானம் என்பது எள்ளளவும் இருக்க முடியாத, நோய்களால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர் இன்னும் சில மாதங்களே வாழ்வார் என்பது எனக்கு புரிந்தது. வீட்டின் வெளியே உள்ள திண்ணையோ, மர நிழலோதான் அவரின் ஒரே இருப்பு. இது போன்ற நிகழ்வுகளை புதியதாக நான் பார்ப்பதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 3, 4 முதியவர்களை இதைப்போன்று நான் அவதானித்திருக்கிறேன். சில மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வாசம், பிறகு ஒரு நாள் மரணம். இது போன்ற நிகழ்ச்சிகள் எனக்கு பழகிவிட்டது.

என் தந்தையின் நிலையை நான் ஒப்பிட்டு பார்க்கிறேன். சென்னையில் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை “Chennai Port Trust”ல் வேலை செய்தார். கடந்த 11 வருடங்களாக கை நிறைய ஓய்வூதியம் பெறுகிறார். 2001ல் 6,000 ரூபாயாக இருந்த ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு (DA Increase), சம்பள கமிஷன் போன்றவற்றால் தற்பொழுது 17,000 வரை ஓய்வூதியமாக பெறுகிறார்.

70 வயதாகும் என் தந்தையையும், நான் கூறிய முதியவர்களையும் ஒப்பிட்டு பார்க்கிறேன். என் தந்தையை போன்றவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? அந்த முதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு 1000 ரூபாயாவது ஓய்வூதியமாக அளித்தால் அவர்களுக்கு வீட்டில் மரியாதை கிடைக்குமே! மாறி வரும் குடும்ப அமைப்பில் முதியவர்களை மரணம் வரை கௌரவத்துடன் வாழ வைப்பது ஒரு சமூகத்தின் கடமை அல்லவா!

என்னடா இது! இவ்வளவு நேரம் மானியங்களே கூடாது என்று அளந்து விட்டு, இப்போது மாதாந்திர ஓய்வூதியத்தை ஏழை முதியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிறானே! என்று நினைக்கலாம். அதை கடைசியாக பார்க்கலாம்.

மத்திய அரசும், சில மாநில அரசுகளும் ஏழை முதியவர்களுக்கு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தவே செய்கின்றன. தமிழகம் போன்ற சில மாநிலங்களைத் தவிர ஏழை முதியவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் வெறும் 200 ரூபாய்கள்தான்!

பெரும்பாலான முதியவர்களை விலங்குகளை போல் நடத்தும் நம் சமூகம் எதனால் இந்த நிலைக்கு வந்துள்ளது?. சோஷலிஸத்தை விட்டுவிட்டு சந்தை பொருளாதார முறைக்கு வந்தவுடன்தான் இந்தியா இந்நிலைக்கு வந்துள்ளது என்பது கம்யூனிஸ்டுகளின் வாதம். என்னவோ 1991 வரை ஏழைகளே இந்தியாவில் இல்லாதது போலவும் இது போன்ற முதியவர்கள் சரியாக பராமரிக்கப் பட்டதை போன்றும் உளறுவது ஏற்க கூடியதுதானா?

ஒருமுறை ஓய்வூதியத்தைக் குறித்த விவாதத்தில் கம்யூனிஸ்டு ஒருவரிடம், இது குறித்து கேட்கப்பட்டது. அரசுத்துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக போராடும் நீங்கள், ஏழை முதியவர்களுக்காக ஏன் போராடுவதில்லை என்றதற்கு, அனைத்து முதியவர்களுக்கும் ஓய்வூதியம் ஒரே தரத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற நட்சத்திர நகைச்சுவையை உதிர்த்தார்.

இந்தியாவில் ஓய்வூதியம் என்பது மிகவும் சிக்கலான வலைப்பின்னல்களை உள்ளடக்கியது. தனியார் துறையினருக்கும் ஓய்வூதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதை அரசுத்துறை ஊழியர்களின் ஓய்வூதியத்துடன் ஒப்பிடவே முடியாது. அது உருவான சோஷலிஸ்ட் காலத்தையும், இடதுசாரி யூனியன் மாஃபியா கும்பல்களின் பச்சையான அயோக்கியத்தனத்தையும் சேர்த்து வைத்தே அவதானிக்க வேண்டும்.

நான் ஒரு தனியார் கம்பெனியில் 11 வருடங்கள் வேலை பார்த்தவன். எனக்கு 58 வயதாகும் போது, ஓய்வூதியம் கிடைக்கும்தான். ஆனால், இது முழுக்க முழுக்க என் சேமிப்பை பொறுத்தது. அதாவது, நான் வேலையில் இருந்தபோது சேமித்த மாதாந்திர பணத்தை மூலதனமாக கொண்டு, அதற்கான Annuityஐ பொறுத்து எனக்கு ஓய்வூதியம் கிடைக்கும். எனக்கு 58 வயது ஆகும்போது, அதிகபட்சமாக 1500 ரூபாய்கள் ஓய்வூதியமாக கிடைக்கலாம்.

அரசுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய கணக்குகளே வேறு. அதைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

ஓய்வூதிய அக்கிரமங்கள்:-

முதியவர்களுக்கான ஓய்வூதியம் அக்கிரமமாக முடியுமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கான விடைகளை நிதானமாக பார்க்கலாம்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். முதியவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற என் கருத்தில் மாற்றமில்லை. எந்த அளவு என்பதிலும், எங்கிருந்து என்பதிலும்தான் எனக்கு பிரச்சினையே!

முக்கியமாக, முதியவர்கள் என்றால் எந்த வயதிற்கு பிறகு? என்ற கேள்வியும் தற்காலத்தில் கேட்கப்பட்டாக வேண்டும்.

அரசுத்துறை ஊழியர்கள் என்று நான் இங்கே கூறும்போது, அரசு ஊழியர்களையும், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை கம்பெனிகளின் ஊழியர்களையும் சேர்த்தே கூறுகிறேன். ஓய்வூதியம் என்று பொதுப்படையாக கூறினாலும், இந்தியாவில் பல்வேறு வகைகளில் ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் ஊழியர்கள் , இராணுவ வீரர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள், இரயில்வே துறை ஊழியர்கள் போன்றவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கும், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கும் மட்டுமே ஓய்வூதியமும், வரும்கால வைப்பு நிதியும் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி ஊழியர்களுக்கு ஏதாவது ஒன்றுதான். அதைப்போலவே சில பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாநிலங்களிலுள்ள அரசு ஊழியர்களுக்கும் இதே நிலைதான்.

உதாரணமாக பொதுத்துறை வங்கி ஒன்றில், ஊழியர் ஓய்வூதியத்தை தேர்வு செய்திருந்தால், அவரின் வரும்கால வைப்பு நிதியை அவருக்கு வழங்க மாட்டார்கள். அதனை முதலீடாகக் கொண்டு அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் வட்டி குறைவாக இருந்தாலும், அவருக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட்டு விடும்.

இன்னொரு நிகழ்ச்சி. எங்கள் கிராமத்தில் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணி செய்து, தற்பொழுது ஓய்வூதியம் வாங்கும் முதியவர், சில சமயம் என் வீட்டிற்கு வருவதுண்டு. ஒரு முறை பேசிக்கொண்டிருக்கையில், அவரே விலைவாசியின் ஏற்றத்தின் அளவிற்கு ஓய்வூதியம் அதிகமாவதில்லை என்று குறைபட்டுக் கொண்டார். தன் ஓய்வூதியம் மாதத்திற்கு 18000 ரூபாய் என்றும் கூறினார். சரி, இன்று என்னதான் நடக்கிறது, பார்த்து விடுவோம் என்று முடிவெடுத்துக் கொண்டு, உங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியமே அதிகம்தானே என்றேன். அதற்கு அவர், அவ்வாறு எப்படி கூற முடியும்? என் வருங்கால வைப்பு நிதியின் (Provident Fund) வட்டியைத்தானே எனக்கு ஓய்வூதியமாக அளிக்கிறார்கள் என்றார். நான் அவரின் முதிர்ந்த ரொக்கத்தொகை எவ்வளவு என்றேன். கிட்டத்தட்ட 10 இலட்சம் ரூபாய்கள் என்றார். என் எதிரிலேயே கணிணி இருந்தது. சட்டென்று Calculatorஐ தட்டினேன். இந்த வருடம் அறிவித்துள்ள வட்டியான 8 சதவிகிதத்தை கணக்கில் கொண்டால், உங்களுக்கு 80,000 ரூபாய் வட்டி வருகிறது. அதாவது மாதத்திற்கு 6667 ரூபாய்கள் மட்டுமே உங்களுக்கு ஓய்வூதியமாக வந்திருக்க வேண்டும். என்றேன். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று அடுத்த அஸ்திரத்தை எய்தினேன்.
உங்களுக்கான ஓய்வூதிய கணக்கில் உள்ள 10 இலட்சம் ரூபாய்களே 12 சதவிகித இமாலய வட்டி என்ற சோக்கான கணக்கின் மூலம் கிடைக்கப்பெற்றது. இன்றைய 8 சதவிகித வட்டியை கணக்கில் கொண்டால், அதுவும் குறைவாகவே இருந்திருக்கும் என்றேன். அவர் உஷாராக சிரிக்க ஆரம்பித்து விட்டார். உன்னைப் போல ஒருவர் அதிகாரத்தில் இருந்தால் எங்கள் கதி அதோ கதிதான் என்று நகைச்சுவையாக கூறிவிட்டு நடையை கட்டிவிட்டார். இன்னொரு முறை ஓய்வூதியத்தைப் பற்றி என்னுடன் பேச மாட்டார் என்பது உறுதி.

மொத்தமாக நான்கு முக்கிய பிரச்சினைகளை இந்த ஓய்வூதிய திட்டத்தில் நாம் காண முடியும்.

(அ) ஓய்வூதியம் என்பது, ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பை மட்டுமே வைத்து தீர்மானிக்கப் படுவதில்லை. அவர்களின் கடைசி சம்பளத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப் படுகிறது.

(ஆ) அசலுக்கு மட்டுமான உத்திரவாதத்தை அரசு அளிக்க வில்லை. வட்டிக்குமான உத்திரவாதத்தையும் சேர்த்தே அளிக்கிறது. இதைப் புரிந்து கொள்ள ஒரு விஷயத்தை இங்கு நினைவு கூறலாம். இந்திய பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும், பொது மக்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மட்டும் அப்படியே வந்து கொண்டிருக்கும். இன்னொரு வகையில் சொன்னால், பொது மக்களின் வரிப்பணத்தை கொண்டு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு விடும்

(இ) இந்த ஓய்வூதிய சேமிப்பு பணத்தை நிர்வகிக்கும் பல ஓய்வூதிய ட்ரஸ்டுகள் எந்த முறையில் பணத்தை முதலீடு செய்கின்றன என்பதோ, அதற்கு உண்மையாகவே எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதோ வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால், வருட கடைசியில் 8 அல்லது எட்டரை சதவிகிதம் என்னும் அளவில் வட்டி அறிவிக்கப்படுவதாக செய்தி மட்டும் வந்து விடும்.

(ஈ) கடைசி மாத சம்பளத்தில் (Basic+DA) பாதி, குறைந்தபட்ச ஓய்வூதியமாக கணக்கிடப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கான செலவுகள் 1996-97ல் 8000 கோடி ரூபாயாக இருந்தது. அது 2006-07ல் 31,350 கோடி ரூபாயாக, 4 மடங்கு உயர்ந்துள்ளது. அரசு வருவாயில், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியமே 24 சதவிகிதமாக மாறியுள்ளது.

(தொடரும்)

9 Replies to “கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3”

 1. இன்று ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் அவரது மருத்துவ மற்றும் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது. ஆனால் ஆடம்பர வாழ்வு வாழ முடியாது. அதே சமயம், மிக பெரிய பதவிகளில் அதாவது அரசு இணைச்செயலாளர் ( joint secretary to govt. of india) அந்தஸ்தில் உள்ள அல்லது அதற்கும் மேல்நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு தான் , சிறிது ஓய்வு ஊதியம் கைநிறைய கிடைக்கும்.

  அரசு ஊழியர்களின் ஓய்வூதிய செலவு பலமடங்கு அதிகரித்ததற்கு , விலைவாசி உயர்வே காரணம். ஒரு கிலோ அரிசி ரூபாய் ஐம்பதை நெருங்கிவிட்டது. நம் நாட்டில் ஏழை , இந்த கடுமையான விலை வாசியில் வாழமுடியுமா?

  கல்வி இலவசமாக ஆக்கப்படவேண்டும் என்பது ஒரு உடோபியன் சிந்தனை.( utopian thought). நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று.மொத்த மக்கள் தொகையில் எழுபது சதவீதத்தினர் அரசு பள்ளியிலோ, அரசு மருத்துவ மனையிலோ நுழைய மறுத்து , கடன்வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியிலோ, தனியார் கல்லூரியிலோ, தனியார் மருத்துவமனையிலோ மட்டுமே சேர்க்க விரும்புகின்றனர். சோ போன்றவர்களின் இலவசக்கல்வி என்பது இந்தியாவில் என்றுமே நடைமுறைக்கு வராது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

  டாஸ்மாக்கை மூடுவதும், இலவச கல்வி அளிப்பதும் நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் இதற்கான மொத்தச்செலவு என்ன, அதற்கு வருமானம் எப்படி வரும் என்பதற்கு சோ வழி சொல்கிறாரா என்றால் இல்லை. கம்யூனிச சித்தாந்தம் புதைகுழிக்கு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்திய கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியின் பெயரை மாற்றிவிட்டு புதிய பெயர் வைத்துக்கொள்வது , அவர்களுக்கு நல்லது. இனியும் கம்யூனிசம் என்ற மோசடிப்பெயரிலேயே வியாபாரம் செய்ய நினைத்தால், நிரந்தர மூடுவிழாதான்.

 2. ப்ரில்லியன்ட் அனலிசிஸ்.

  எளிமையாக, தெளிவாக புரிய வைத்து கொண்டிருக்கும் திரு.ஆர்.பாலாஜி அவர்களுக்கு நன்றி.

 3. பாலாஜி

  எல்லாம் ஓகே வாதான் சொல்றீங்க. இந்த இலவச கல்வியில் தான் கொஞ்சம் இடறல். கல்வி என்பது ஒரு நாடு செய்யும் மூலதனம். அது வெகு காலத்திற்கு பின்பு நிச்சயமாக பயன் தரும். மடிய உணவு இலவச கல்வி கொடுத்து பள்ளிக்கு வர செய்தால் தான் கொஞ்சமாவது படித்து முன்னேற முடியும். இல்லாங்காட்டி இந்தியா பூர நக்சல் தான். ஆரம்ப கல்வியை விடுங்கள், IIT, IIM போன்ற இடங்களில் கூட கல்வி மலிவு விலையிலேயே:-) தரப் படுகிறது . இதற்க்கு பயன் இருக்கத்தானே செய்கிறது.

 4. உறைவிடப் பள்ளியென்று சோ அவர்கள் கூறுவது எல்லோருக்கும் ஆனது அல்ல. இடஒதுக்கீடு என்று கூறிக்கொண்டு பணம் இருப்பவர்களே அதன் பயனை திரும்பவும் அனுபவிப்பதை தடுக்கத்தான்.

 5. பாலாஜி சார்,

  இந்த கட்டுரையில் பல நல்ல விஷயங்களை கூறி இருகிறிர்கள்,ஆனால் தற்போது திரு.சோ ராமஸ்வாமி அவர்களை இதில் ஏன் இழுத்திர்கள் என்பது தெரியவில்லை, இந்தியா ஒரு கம்யுநிசநாடாக மாற வேண்டும் என்று இங்கே பல “நல்ல உள்ளங்கள்” முயன்று வருகின்றன தன்னை வெளியில் கம்யூனிச எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டு கம்ம்யுநிசதிற்கும் சீனாவிற்கும் விசுவாசமாக பல புல்லுரிவிகள் இருகிறார்கள் அவர்களையெல்லாம் விடுத்து உண்மையான தேசபக்தரும், தீவிர கம்யூனிச எதிர்ப்பாளரும், ஹிந்து ஆதரவாளுருமான திரு.சோ அவர்களை வம்புக்கு இழுப்பது வீண்வேலை ,இதனால் உங்கள் நோக்கம் பாதிக்கப்படலாம்.

  நமஸ்காரம்.
  Anantha saithanyan .

 6. திரு.sarang அவர்களுக்கு,

  IIT IIM பீஸ் என்னனு தெரியுமா சார்? இன்னைக்கு IIM ல படிக்கனும்னா கொறஞ்சது பன்னண்டு லட்ச ரூபா வேண்டும்! IIT நா கொறஞ்சது எட்டு லட்ச ரூபா வேணும்! கொஞ்சம் பீஸ் ச்டக்சார பாத்துட்டு பேசுங்க!

 7. மித்திரன் சார்

  அங்கன தான் சார் படிச்சேன். பீசு ரொம்ப ஜாஸ்தி தான் ஆனாகாட்டி இதே பீசு ஒரு ப்ரைவேட்டு காலேஜோட கம்பேர் செய்யகொள்ள ரொம்ப ரொம்ப கம்மி. வெளிநாட்டு காலேஜோட படு கம்மி சாரே

 8. Probably the old man to whom you explained about pension calculation, didn;t know the opportunity cost of his savings in the hands of Govt.

  You are too critical about PSU’s, without considering that Private investments then and even now demands hell as the profit percentage. The best example is Pune-mumbai expressway. The private biddders lowest bid being 4000 crores, and the govt completed with 1800 crores.

  Your unabated love for capitalism is making you blind.

  regards and regrets

 9. இலவச மருத்துவம் கண்டிப்பாக வேண்டும். எவ்வளவு செலவு ஆனாலும். அதிக செலவ எப்படி குறைகரதுன்னு பார்க்கணும் – டாக்டர்பீசா, kattumanangala , உபகரன்கள – எங்க அதிக செலவு ஆகுதுன்னு பார்த்து குறைக்கலாம். அளவுக்கு அதிகமான ராணுவ செலவ குறைச்சுக்கலாம். Europela இந்த ஒரு காரணதுனலையே மக்கள் வாழ்கை தரம் நல்லா இருக்கு. அவர்கள் எதிர்காலத்துக்கு பெரிய அளவுல மருத்துவ சேமிப்பு தேவை கிடயாது. தற்போதைய சம்பாதித்த பெருமளவு செலவு பண்றாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *