எழுமின் விழிமின் – 21

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

இரண்டாம் பாகம் 

பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்

ஹிந்து சமயத்தின் வரம்புகள் [பிரபுத்த பாரதம்- ஏப்ரல் 1899]

பிரபுத்த பாரதத்தின் நிருபர் எழுதுகிறார்:

பிற மதத்தினரை ஹிந்து மதத்தில் சேர்க்கும் பிரச்சினையைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தரைப் பேட்டி கண, பத்திரிகை ஆசிரியர் எனக்குக் கட்டளையிட்டார், ஒரு நாள் மாலை ஒரு படகுவீட்டின் மேல்தளத்தில் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

இரவு சூழ்ந்து விட்டது. இராமகிருஷ்ண மடத்தின் கரை ஓரத்தில் படகை நிறுத்தினோம். என்னுடன் பேசுவதற்காக சுவாமிஜி கீழே இறங்கி வந்தார். இன்பமான நேரம்- மகிழ்வூட்டும் இடம்; தலைக்கு மேல் வானத்தில் நட்சத்திரங்கள்; எங்களைச் சூழ்ந்து புரண்டோடும் கங்கை. மங்கிய ஒளியில் கட்டடம் ஒன்று காட்சி தருகிறது. அதன் பின்னணியில் பனை மரங்களும் ஓங்கி வளர்ந்த நிழலடர்ந்த மரங்களுமாக இருந்தன.

“நம்முடைய ஹிந்து மதத்திலிருந்து வெளியேறினவர்களை மீண்டும் நாம் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றிப் பேசுவதற்காக உங்களைக் காண வந்திருக்கிறேன்” என்று நான் பேச்சை ஆரம்பித்தேன். “அவர்களை ஏற்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?” என்று கேட்டேன்.

“ஆமாம்; அவர்களைச் சேர்த்தே தீர வேண்டும்; சேர்த்துக் கொள்ள முடியும்” என்று கூறி, சுவாமிஜி ஒருகணம் தீவிரமான சிந்தனையில் மூழ்கினார். பின்பு பேச்சைத் தொடர்ந்தார். “இப்படிச் செய்யாமற் போனால் நாம் ஜனத்தொகையில் குறைந்துகொண்டே போய்விடுவோம். முகம்மதியர்கள் முதன் முதலாக நம் நாட்டுக்கு வந்தபோது நாம் அறுபது கோடி ஹிந்துக்கள் இருந்தோம் என்று கூறப்படுகிறது. முகம்மதிய சரித்திர ஆசிரியர்களுள் மிகப் பழமையானவரான ஃபெரிஷ்டா என்பவர் கூறும் ஆதாரத்தைக் கொண்டு இவ்வாறு சொல்கிறார்கள். இப்பொழுது நாம் இருபது கோடிப் பேர்கள்தான். இதுமட்டுமின்றி ஹிந்து சமயத்தை விட்டு ஒருவன் வெளிச்செல்வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என்பது மட்டுமல்ல; எதிரியில் ஒருவன் அதிகமாகிவிட்டான் என்று ஆகுமே. முகம்மதிய சமயத்தையோ கிறிஸ்தவ சமயத்தையோ தழுவும் ஹிந்துக்களில் பெரும்பாலோர் வாளுக்குப் பயந்தே மாறியிருக்கவேண்டும். அல்லது அப்படிப்பட்டவர்கள் பரம்பரையில் பிறந்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை எந்த விதமான இன்னலுக்கும் ஆளாக்குவது நேர்மையல்ல என்பது கண்கூடு. பிறவியிலேயே அந்நியர்களாக உள்ளவர்களை என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம். கூட்டம் கூட்டமாக பண்டைக் காலத்தில் திரும்ப மாற்றப்பட்டிருக்கிறார்களே! அந்த வேலை இன்னமும் நடந்தே வருகிறது.

எனது சொந்தக் கருத்துப்படி, வனவாசிகளான பரம்பரையினரின் கூட்டங்களையும், சுற்றியுள்ள நாட்டு மக்களையும், முகம்மதியர் வெற்றி பெறுவதற்கு முன்னர் நம்மை வெல்ல வந்த மக்களில் அநேகமாக எல்லோரையும் நாம் மதம் மாற்றியிருக்கிறோம். அது மட்டுமன்றி விசேஷமாகப் புராணங்களில் காணப்படுகிற எல்லா ஜாதிகளும் மதம் மாற்றப்பட்டவர்கள்தாம் என்பது எனது சொந்தக் கருத்து. அவர்கள் அந்நியர்களாக இருந்தவர்கள், பின்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவரகள் என்றே கருதுகிறேன்.

பலவந்தமாக இஸ்லாமுக்கு மாற்றப் பட்டு, பின்னர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பி தென்னகத்தின் புகழ்மிக்க விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரர், புக்கர் சகோதரர்கள்

தாமாக மனம் ஒப்பி பிறமதம் மாறிவிட்டு இப்பொழுது தாயகமான தமது தாய்க் கோயிலுக்குத் திரும்பி வர விரும்புகிறவர்களுக்குப் பிராயச்சித்தச் சடங்குகள் பொருத்தந்தான். ஆனால் காஷ்மீர், நேபாளம் போன்ற இடங்களில் எதிரிகளின் படையெடுப்பால் அந்நியராக்கப்பட்டவர்களுக்கும் அல்லது நம்முடைய மதத்தைத் தழுவ விழைகிற வெளியாருக்கும் யாதொரு பிராயச்சித்தமும் விதிக்கக் கூடாது.”

“சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்களாவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். “ஏதாவதொரு ஜாதி இருக்கவேண்டும். இல்லாமற் போனால் பரந்த இந்த ஹிந்து மத உடலோடு அவர்கள் ஒருபோதும் ஒன்றி இணைய முடியாதல்லவா? அவர்களுக்குரிய தக்க இடத்தை நாம் எங்கே தேடலாம்?”

சுவாமிஜி அமைதியாகக் கூறினார்: “நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக்கொள்வார்கள். வைஷ்ணவத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். வேறு வேறு ஜாதிகளிலிருந்து வந்தவர்களும் மதம் மாற்றப்பட்ட அந்நியர்களும் அதன் கொடிக்கீழ் இணைந்து ஒரு தனி ஜாதியாக, கௌரவம் வாய்ந்த ஒரு ஜாதியாக வைணவம் உள்ளது. இராமானுஜர் முதல், வங்கத்தில் சைதன்யர் வரையில் திகழ்ந்த பெரிய வைஷ்ணவ ஆசார்யர்கள் இம்முறையையே கடைப்பிடித்திருக்கிறார்கள்.

“புதிதாக வந்த இவர்கள் எங்கே திருமணம் செய்து கொள்வார்கள்?”

“இப்பொழுது செய்துகொள்வது போலத் தமக்குள்ளேயே செய்து கொள்வர்” என்று அமைதியாகப் பதிலளித்தார் சுவாமிஜி.

“அவர்கள் எந்தப் பெயரை வைத்துக் கொள்வார்கள்? அந்நியர்களும் பிற மதத்தைத் தழுவிப் பிறகு திரும்பி வருகிறவர்களும் புதிதாகப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டுமே. அவர்களுக்கு ஜாதிப் பெயர்களைத் தருவீர்களா அல்லது வேறு ஏதாவது செய்வீர்களா?”

“உண்மைதான். பெயரில் பெரும் பொருள் இருக்கத்தான் இருக்கிறது” என்று சிந்தனையில் ஆழ்ந்த சுவாமிஜி இந்தக் கேள்விக்கு பதிலாக ஒன்றும் கூறவில்லை.

ஆனால் நான் கேட்ட அடுத்தக் கேள்வி அவரை வேகப்படுத்தியது. “சுவாமிஜி! பல வடிவங்கள் வாய்ந்த ஹிந்துமதக் கொள்கைகளிலிருந்து தமக்கு வேண்டிய ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்கும்படிப் புதிதாக வந்த இவர்களை விட்டு விடுவீர்களா அல்லது அவர்களுக்காக ஒரு சமய வடிவத்தை அமைத்துத் தருவீர்களா?

“என்ன கேள்வி கேட்டீர்கள்! அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களே தேர்ந்தெடுத்துப் பின்பற்றாவிட்டால் ஹிந்துமதத்தின் உட்சக்தியே குலைந்து போய்விடும். நம் சமயத்தின் சாரமே இஷ்டதெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற இந்தச் சுதந்தரத்தில்தான் அடங்கியுள்ளது.”

அவர் கூறியதில் இது மிகுந்த கருத்தாழம் வாய்ந்தது என்று நான் நினைத்தேன். என் முன் நின்ற அந்த மகான், உயிரோடிருக்கிற மற்றவர்களைக் காட்டிலும், பல ஆண்டுகள் ஆன்மிகத் துறையில் பாடுபட்டிருப்பவர். ஹிந்து சமயத்தின் பொதுவான அடிப்படைத் தத்துவங்களைப் பார்த்தால், அவரவர் இஷ்டத்திற்குச் சுதந்தரமளிக்கிற இந்தத் தத்துவம் உலகம் முழுவதையும் தழுவி நிற்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகத் திகழும் என்று எனக்குத் தோன்றுகிறது.

பேச்சு, பல பொருள்களைப் பற்றி அமைந்திருந்தது. அதற்குப் பிறகு இன்முகத்துடன் எனக்கு நல்வாழ்த்துக் கூறி விடைபெற்றுக் கொண்டு பெரும சமயக் குரவரான சுவாமிஜி விளக்கைக் கையிலேந்திய வண்ணம் மடாலயத்துக்குள் திரும்பிச் சென்றார். பாதையில்லாத பாதைகளையுடைய கங்கையாற்றிலே பல வடிவங்களையுடைய சிறிய பெரிய படகுகளுக்கிடையே வழிசெய்துகொண்டு எனது கல்கத்தா வீட்டுக்குத் திரும்பினேன்.

-0-

உன் மதத்தைக் காக்க எழுந்து நில்:

[பிரபுத்த பாரதம்- டிசம்பர் 1898]

“ஆருயிர் நண்பனே! சின்ஹா! யாராவது உன்னுடைய தாயை அவமதித்தால் நீ என்ன செய்வாய்?”

“அவன் மீது தாவிப் பாய்ந்து நல்ல படிப்பினையைப் புகட்டுவேன் சுவாமி!”

“நன்றாக பதில் சொன்னாய். அது போலவே நமது நாட்டின் உண்மையான தாயாகிய உனது சொந்த மதத்தைப் பற்றி அவ்வளவு மதிப்பு உனக்கு இருக்குமாயின், எந்த ஒரு ஹிந்து சகோதரனும் கிறிஸ்தவனாக மதம் மாற்றப்படுவதை நீ ஒருகாலும் சகிக்க மாட்டாய். இருப்பினும்கூட தினந்தோறும் இது நடப்பதை நீ பார்க்கிறாய். பார்த்தும் பாராமுகமாய் இருக்கிறாய். எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?”

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

One Reply to “எழுமின் விழிமின் – 21”

  1. //கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?”//

    ரத்தம் கொதிக்கிறது சுவாமிஜி ரத்தம் கொதிக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *