பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்

இறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை பல்வகை உயிரினங்கள் இருக்கக் காண்கிறோம். வாரியார் சுவாமிகள் சொல்வது போல மனிதரில் சிலருக்கு ஆறறிவு என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும்பாலார் போதைக்கு அடிமைகளாக ஆகி, சமூக அந்தஸ்து, கெளரவம், பெருமை அனைத்தையும் தெருவோரக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கக் காண்கிறோம். பேருந்தில் அவசரமாக ஏறி ஏதோவொரு இடத்தின் பெயரைச் சொல்லி பயணச்சீட்டை வாங்கிவிட்டு, அந்த இடம் வந்ததும் நடத்துனர் எத்தனை முறை சொல்லியும் இறங்காமல் தடுமாறும் இளைஞர்களைப் பார்க்கிறேன். சாலையோரம் நல்ல உடையணிந்த மனிதன் அவை சீர்குலைந்து புழுதியில் புரண்டு வாயில் ஈக்கள் மொய்க்கப் படுத்துக் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது, அப்படிப்பட்டவர்களின் பெற்றோர் அல்லது மனைவி நம் நினைவுக்கு வருகின்றார்கள். நெடுந்தூரப் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழியில் ஓர் ஊரில் ஒரு இளைஞன் ஏறி காலியாகவிருந்த ஒரு இடத்தில் தொப்பென்று விழுந்தான். நடத்துனர் வந்து பயணச்சீட்டுக் கொடுக்கும்போதும் அவன் சுய நினைவின்றி, ஏதோ பணத்தை நீட்டி சென்னைக்கு ஒரு சீட்டு வாங்கிக் கொண்டதுதான், அது தொடங்கி அவன் வாயிலெடுத்து பேருந்தையே அசிங்கப் படுத்திவிட்டான். இறங்கும் இடம் வந்த பின்னும் அவனுக்கு மட்டும் நினைவு வரவே இல்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டால் ஏடு போதாது எழுத, இடம் போதாது தளங்களில் ஏற்ற. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பெரிய ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். சுதந்திர நாள் கோலாகல கொண்டாட்ட ஊர்வலம் அது. அதில் கூட்டம் கூட்டமாக சிலர் ஆடிக் கொண்டு வந்தனர். அதன் பொருள் அப்போது எனக்குப் புரிந்ததோ இல்லையோ, இன்று நன்றாக புரிகிறது. குடியின் கேட்டை விவரிக்கும் காட்சிகள் அவை. சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப் படுவதற்கு மக்களிடம் இருந்த ஆர்வம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இருந்தன. சாராயங்கள் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான இடத்தில், தென்னந்தோப்பு, ஆற்றங்கரை போன்றவிடங்களில் கள்ளுக்கடைகள் இருந்தன. முக்கிய சாலையிலிருந்து மறைவாக இருக்கும் அந்தக் கள்ளுக்கடைகளுக்கு வழிகாட்டிக் கொண்டு மரப்பலகையில் “கள்ளுக்கடை போகும் வழி” என்று தாரினால் எழுதி மாட்டி வைத்திருப்பார்கள்.

கிராமங்களிலும், நகரங்களிலும் கள்ளுக்கடைகளுக்குப் போகின்றவர்கள் ஊரறிய, நாடறிய போகமாட்டார்கள். இருட்டிய பிறகு தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு திருட்டுத் தனமாகச் சென்று கள்ளைக் குடித்தார்கள். அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு, தாங்கள் ஒரு தவறான, சமூகம் வெறுக்கும் காரியத்தைச் செய்கிறோம் என்று. அன்று குடியினால் வீழ்ந்த ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் உழைக்கும் பாட்டாளி மக்கள். இவர்கள் குடிப்பதால் அவர்கள் குடும்பங்கள் சரிந்தன, அழிந்தன, பெண் பிள்ளைகள் தாலிகளைக்கூட கழற்றிக் கொடுத்து பாழும் கழுத்துடன் இருந்தனர். ராஜாஜி போன்ற சிறந்த சமூக நல வாதிகள் இந்த சமூக இழிவை, சமூக சீர்கேட்டை ஒழித்திட மதுவிலக்கைத் தமிழ் நாட்டில் கொண்டு வந்தார்கள்.

ராஜாஜி முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் இந்த மதுவிலக்கை அமல் படுத்திப் பார்த்து, அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டபின் சென்னை மாகாணம் முழுவதற்கும் அதனை அமல் படுத்தினார். குடியால் கெட்டழிந்த குடும்பங்கள் பெரும்பாலும் உடலுழைப்பைத் தரும் கூலிகள் மற்றும் விவசாயக் கூலிகள். அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார் ராஜாஜி. தமிழக உழைப்பாளி வர்க்கத்துப் பெண்கள் ராஜாஜியைக் கெயெடுத்துக் கும்பிட்டு, தங்கள் வாழ்க்கையைப் புதுப்பாதைக்குக் கொண்டு சென்றவர் என்று வாழ்த்தினர். ஒரு தலைமுறை குடி என்பதை மறந்திருந்தனர் மக்கள். அப்போதும் திருட்டுத் தனமாக குடிக்கும் மனிதர்கள் இருந்தார்கள். பெரிய மனிதர்கள் பெர்மிட் வாங்கி வைத்துக் கொண்டு அயல் நாட்டு குடி வகைகளைக் குடித்தார்கள். கள்ளுக்கடைகளை ஒழித்ததனால் ஏற்பட்ட அரசு கஜானாவின் வருமான இழப்பை விற்பனை வரி மூலம் ராஜாஜி ஈடுகட்டினார். அரசாங்கத்துக்கு வருமானம் என்பதைவிட, இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பெரிதாக எண்ணிய தலைவர்கள் இருந்த காலம் அது.

அண்ணாதுரை அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆனபோது, அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க கள், சாராயக் கடைகளைத் திறப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அவர் அதனை ஏற்றுக் கொள்ளாததோடு, ஆட்சியையே நான் இழக்க நேர்ந்தாலும் ஏழைகளின் வாழ்க்கையைக் கெடுக்கும் கள் சாராயக் கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், மாறாக காமராஜ் போன்ற தலைவர்களோடு சேர்ந்து பூரண மதுவிலக்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வேன் என்றும் சொன்னார்.

அரசியல் நாகரிகம் சிறுகச் சிறுக மறைந்து, தனி மனித துதிபாடல்களும், பகட்டான விளம்பரங்களும், விளம்பரங்களுக்காகத் திட்டங்களும் வகுக்கப்பட்ட காலமொன்று வந்தது. என்ன செய்வது. அரசாங்கத்தின் ஆடம்பரங்களுக்கு ஏற்ப போதிய வருமானம் தேவைப்பட்டது. காமராஜ் காலத்தில் ஏழு அமைச்சர்கள் நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த நிலையில், பின்னர் வந்தவர்கள் இருபது முப்பது என்று அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டார்களே தவிர, மக்களின் கவலைகள் தீர சரியான நிர்வாக முறைகளோ, ஏழைகளைப் பாதுகாக்க நீண்ட கால திட்டங்களோ இல்லாமல் இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, கவர்ச்சிகரமான திட்டங்கள், அதற்கான விளம்பரங்கள், ஆடம்பர விழாக்கள் என்று அரசாங்க கஜானா திவாலாகிக் கொண்டிருந்த நிலையில், அவற்றை ஈடுகட்ட வருமானம் வந்து கொட்டுகின்ற அளவுக்கு மீண்டும் கள், சாராயக் கடைகளைத் திறந்து விடும் ஏற்பாடுகள் நடந்தன.

அந்த நிலையில் வயதாகி, உடல் நிலை முடியாமல் வீட்டில் இருந்த ராஜாஜி அன்றைய முதலமைச்சரை வீடு சென்று கைகளைப் பிடித்துக் கொண்டு, வேண்டாம், ஒரு தலைமுறை மக்கள் மறந்து போய்விட்ட இந்த பாழாய்ப்போன குடியை மீண்டும் கொண்டு வரவேண்டாம், ஏழை எளியவர்களை அழிக்கும் இந்தக் கொடுமையால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இதனால் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்களைக் கண்டு பிடிப்பதே சரியானது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால், அவைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.

பின்னர் தனி நபர்களுக்கு கள்ளுக்கடை, சாராயக் கடைகள் வைத்துக் கொள்ள ஏலம் விடப்பட்டு அரசாங்கத்துக்கு வருமானம் வந்தது. அதில் பலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள், குடித்துக் குடியைக் கெடுத்தவர்கள் அல்ல, குடிக்க வைத்து மக்களை நாசப்படுத்தியவர்கள். இவர்களுக்குப் போட்டியாக முளைத்ததுதான் கள்ளச்சாராயம். முதலில் பிற மாநிலங்களிலிருந்து திருட்டுத் தனமாகக் கொண்டு வந்தனர். பின்னர் ஆங்காங்கே குடிசைத் தொழிலாகக் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்டது. சமூகத்தில் அடிமட்டத்தில் கிடந்தவர்கள், சமூக விரோதிகள், அரசியலில் குறுக்கு வழியில் முன்னேறத் துடித்த சாதாரணர்கள் என்று இந்தத் துறை மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலபேர்.

சட்டப்படியான கடைகளுக்கு எதிராக கள்ளக் கடைகள் பரவிவரும் கொடுமைகண்டு பதறினார்கள் அரசியல் வாதிகள். என்ன செய்வது. சட்டத்தின்படி திருட்டுத் தனமாக விற்கப்படும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் முடியவில்லை, அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அத்தனை வலுவாகத் தங்களை ஆக்கிக் கொண்டு விட்டார்கள். அரசியலை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றுவிட்டார்கள். வேறு வழியில்லை. சாராய வியாபாரத்தைத் தாங்களே எடுத்து நடத்தலாம். டாஸ்மாக் எனும் பெயரால் அரசாங்கக் கடைகளை ஒவ்வொரு தெருவிலும், ஆலயங்களுக்கு எதிரிலும், பள்ளிக்கூடங்களுக்கு அருகிலும் வைத்து ஓகோவென்று வியாபாரம். இதனால் வருமானம் கோடி கோடியாக அரசாங்கத்துக்கு வந்து கொட்டத் தொடங்கியது.

ஐரோப்பிய நாடுகளில் வார இறுதி என்றால் மக்கள் ஓய்வு தேடி அமைதியான இடங்களுக்கு ஓடுவர். இங்கெல்லாம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை வார விடுமுறை நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்காக டாஸ்மாக் கடைகளின் முன்பு திருவிழா கூட்டம் கூடுகிறது. காரில் வரும் செல்வந்தர் வீட்டு ஆட்கள், மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் கூட்டம், சைக்கிளில் சாதாரண மக்கள், கால் நடையாக காக்கி உடை அணிந்த துப்புறவு தொழிலாளர்கள் முதல் மூட்டை தூக்குவோர், தள்ளுவண்டி வைத்திருப்போர் என்று ஒரே கூட்டம். சமீப காலமாக இந்த சாராயத்தைக் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் பள்ளி மாணவர்கள் தங்கள் சீருடை அணிந்த கோலத்தோடு விழுந்து கிடக்கும் கோலத்தை பத்திரிகைகள் படம் பிடித்து போட்டு வருகின்றன.

நல்ல உடைகள் வாங்கவோ, வீட்டுத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கவோ, பிள்ளைகளின் படிப்புக்குத் தேவைகளை கவனிக்கவோ நேரமின்றி போதைப் பொருட்களை உட்கொண்டு தெருவில் மயங்கிக் கிடப்பதையே பெரும்பாலோர் விரும்புவது போலத் தெரிகிறது. அது தவிர, இந்த போதையை ஏற்றிக் கொண்ட பெருமக்கள் தங்களை உலகத்தின் உச்சியில் இருப்பவர்களாக நினைத்துக் கொண்டு அரற்றுவது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, பெண்களைக் குழந்தைகளை வெறுப்படையச் செய்கிறது.

சில அரசியல் கட்சிகள் இந்த நிலைமையை ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்றன. ஆனால் அவை முழுமூச்சாக இதில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. ஒரு கொள்கை பிரகடனமாக மட்டுமே செய்கின்றனர். காந்திய இயக்கம் தமிழருவி மணியன் போன்றோர் தீவிரமாக இது குறித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு, மகாநாடுகள் நடத்தி வருகின்றனர். சாதாரண மக்கள்கூட இதற்குப் பதில் சொல்லுகின்றனர், என்னவென்று தெரியுமா, அரசாங்கம் நடப்பதே இந்த டாஸ்வாக் வருமானத்தில்தான். அப்படியிருக்க அவற்றை மூடவோ, முழு மதுவிலக்கை அமல் படுத்தவோ யார் விரும்புவார்கள் எங்கின்றனர் சாதாரண மக்கள்.

இந்த நிலைமை இப்படி நீடிப்பதில் யாருக்கும் வெட்கமில்லை. பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள். என்று நாட்டில் முழு மதுவிலக்கு கொண்டுவரப்படும். என்று ஏழை எளிய உழைப்பாளி மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தைத் தங்களுக்காகவும், குடும்பம், பெண்டு பிள்ளைகளுக்காகவும் செலவிட்டு மகிழ்ச்சியோடு, ஆரோக்கியமாக வாழப்போகிறார்கள். என்று சமூகத் தொல்லைகள் ஒழிந்து மக்கள் இந்த குடிகார கேடர்களிடமிருந்து தப்பி சுதந்திரமாக தெருக்களில் நடமாடப் போகிறார்கள். என்று நம் நாட்டில் மீண்டும் வசந்தம் வரும்? இவைகளுக்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள்தான் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டின் கருத்தைப் போல, “திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது போல குடிகாரர்களே திருந்தி இனி எங்களுக்குக் குடி வேண்டாம் என்று என்று சொல்வார்கள் என்று காத்திருக்க வேண்டியதுதானா? மக்கள் தீர்ப்புக்குக் காத்திருப்போம்.

13 Replies to “பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்”

  1. பூனைக்கு மனிகட்ட இனி காந்தியோ ராஜாஜியோ வரபோவதில்லை. அப்படி யாரும் கட்டிவிட்டால் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இல்லாத ஒன்றுக்கு இலாகா ஒதுக்கி, அமைச்சர் என்னிக்கையை உயர்த்தவே இன்றைய கட்சிகள் செயல்படுகின்றன. உதாரணம்=மின்சாரம்.

    குடியை கற்றுக்கொடுத்தது வெள்ளைக்காரன். அவனைப்பாருங்கள் குடித்துவிட்டு எங்கேயாவது ரோட்டில் விழுகிறானா. அல்லது அவன் குடித்திருப்பதுதான் தெரிகிறதா. அவனாவது சந்தோஷ தருணங்களில் மட்டுமே குடிப்பான், நாம் செத்த சவ ஊர்வத்திலும் விடுவதில்லை.

    இனி நம் நாட்டில் மதுவை ஒழிக்கமுடியாது. காரணம் அரசே ஊக்குவித்துவிட்டது, குடிப்பவரே சுய கட்டுப்பாட்டோடு ஒரு வரைமுறையை வைத்துக்கொண்டால் மரியாதையாவது மிஞ்சும் .

    காந்தி ஜெயந்தி நெருங்கும் வேளையில் பொருத்தமான ஒரு கட்டுரை, தஞ்சை கோபாலன் அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

  2. குடிமக்களை சிந்திக்கவிடாமல் மது மயக்கத்திலேயே வைத்திருப்பது மக்கள் விரோத அரசுகள் காலம் காலமாக பயன் படுத்தி வரும் உத்தி…..

    தேர்தல் என்றாலே மது தான் என்ற இன்றைய நிலையை தொடர்பு படுத்தி யோசித்தால் ஆட்சியாளர்களின் திட்டம் விளங்கும்……

    உருப்படியான திட்டங்கள் எதையும் யோசிக்காத [ யோசிக்கத்தெரியாத ] கழக அரசுகள் மது விற்பனையால் வரும் வருமானத்தை நிச்சயம் இழக்க விரும்ப மாட்டார்கள்….

    கட்டுரையாளர் குறிப்பிட்டதைப்போல மது அருந்துவது இழிவு என்ற நிலை மாறிவிட்டது……தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் இன்று கொண்டாட்டம் என்றாலே குடி என்றாகிவிட்டது…..

    மக்கள்தொகையில் கணிசமான பகுதி குடிகாரர்களாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் , முழுமையான மதுவிலக்கு எந்த அளவு சாத்தியம் எனத்தெரியவில்லை…….

    மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது, கடை திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது , பதினெட்டு வயதை எட்டாதவர்களுக்கு மது விற்பதை கடுமையாக தடை செய்வது போன்ற குறைந்த பட்ச நடவடிக்கைகளையாவது அரசு மேற்கொள்ளலாம்…..

    மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து ,அதை எட்டிவிட்ட” சாதனையை ” பீற்றிக்கொள்ளும் கழக அரசுகளிடம் இது போன்ற மக்கள் நல நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதே மூட நம்பிக்கைதான்……

  3. 01 -09 -1972 – முதல் தமிழகத்தில் கள்ளு மற்றும் சாராய கடைகளை வாழும் தமிழ் மூதறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அப்போதுதான் தமிழ் சமுதாயம் கள்ளு மற்றும் சாராய பழக்கம் ஏற்படுத்திக்கொண்டது. திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் சிறிது காலம் மூடி , மறுபடி திறந்து , மறுபடி மூடி , மறுபடி திறந்து- என்று விட்டு விட்டு , தமிழன் குடிக்கு பழகி அடிமை ஆனான். இப்பொழுது கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் சிவலோகம்/பரலோகம்/வைகுந்தம்/கைலாசபதவி/ நாத்திக லோகம் – ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு உலகிற்கு போகவேண்டாமே, இன்னும் சிறிது காலம் தமிழன் உயிருடன் நடைப்பிணமாக இருக்கட்டும் என்று , அரசே நல்ல அக்மார்க் சாராயத்தை நியாய விலையில் வழங்கி , எமலோகம் போவதை தள்ளிப்போட்டுள்ளது. டாக்டர் கலைஞரும், ஆந்திரத்திலிருந்து வந்தவர் என்பதை நாம் மறக்கக்கூடாது. டாக்டர் தமிழ்க்குடி தாங்கி அய்யா அவர்களும் இரண்டு கழகங்களுக்கும் பல்லக்கு தூக்கி, தோள்வலி எடுத்து , இனிமேல் இவர்களுக்கு பல்லக்கு தூக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். நிற்க, மது பழக்கத்துக்கு அடிமையான இவர்களை , ஒரே நாளில் , டாஸ்மாக்கை திடீரென மூடினால், திமுக, அதிமுக, தேமுதிக ,பாமக, விசி , தொண்டர்கள் பெரும்பாலோர் தற்கொலை செய்துகொள்வார்கள். தமிழக மக்கள் தொகையில் தீய சக்திகள் சிறிது குறையும். ஆனால், கோபப்பட்டு புண்ணியம் இல்லை. குடிகாரனும் நம் மனித இனத்தை சேர்ந்தவனே என்பதால், இவர்களிடம் கருணை காட்டி, உடனே மூடாமல் , சிறிது சிறிதாக மது கடைகளை குறைப்பதே நல்லது.

    மதுவிலக்கை தளர்த்தி அரசுக்கு காசு வரும் என்றால் , அந்த காசு குஷ்டரோகி கையில் உள்ள வெண்ணை என்றார் அண்ணா. ஆனால் அவரின் தம்பி என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் மஞ்சளாரோ , குஷ்டரோகி கை வெண்ணையை மிக விரும்பி, கள்ளு, சாராய கடைகளை திறந்து, தமிழுலகுக்கு புதிய பாதையை காட்டினார். வாழ்க அவர் தொண்டு. மேலும் வளர்க அவர் குடும்ப கட்சி. தமிழினம் மெல்ல மெல்ல குடியால் அழிந்து வருகிறது. இனி இதனை கடவுள் தான் ஏதாவது செய்யவேண்டும்.

  4. நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை அழிப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நேரடியாக எதிர்த்து அழித்தல். இரண்டு கூடிக்கெடுத்தல். இதில் கூடிகெடுத்தல் என்ற யுக்தியை பயன்படுத்தி, தமிழையும், தமிழனையும், தமிழினத்தையும் அழித்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள். அழிந்ததுபோக எஞ்சியிருக்கும் மிச்சத்தமிழனாவது , இந்த அயோக்கியர்களை சரியாக புரிந்துகொண்டு , தப்பிப்பானா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

    தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய் என்று சொன்ன கோமாளியை, கன்னடரை, தலைவன் என்று சொல்லி , பேமாத்து பண்ணிய அண்ணா மற்றும் கலைஞர் போன்றோர் திட்டமிட்டு செய்த சதி இது. அடிமைப்புத்தியால் வெள்ளையனுக்கு செருப்பு துடைத்து வாழ்ந்த , இயக்கம் நீதிக்கட்சி. அதன் வழித்தோன்றல் திக மற்றும் திமுக. தமிழ் நாட்டில் , தமிழ் வழிக்கல்வி நசித்துப்போனதற்கு இந்த அயோக்கிய சிகாமணிகளே காரணம். இவர்களுக்கு சுயமரியாதை என்பதே கிடையாது. எனவே தான், வெள்ளையர்கள் ஓடியபோது, ஐயோ போகாதே, போகாதே – என்கணவா என்று ஒப்பாரி வைத்து தீர்மானம் போட்டனர்.இலங்கை தமிழருக்கு நீலிக்கண்ணீர் வடித்து, அவர்களையும் சோனியா-கருணா கூட்டணி அரசு , படுகொலை செய்தது. குடிபோதையில் இருக்கும் தமிழனுக்கோ ஒன்றும் புரியவில்லை. கடவுள் தான் கண் திறக்கவேண்டும். இந்த தமிழ் சாதியை என்ன செய்ய நினைத்தாய் என்று யாரோ கேட்டதை நாம் மீண்டும் கேட்கத்தோன்றுகிறது.

  5. தாங்கள் கூறியதைப் போல் திருத்தம் மக்கள் மனதில் தான் ஏற்பட வேண்டும்.சுயக்கட்டுபாடு, சுயமாக சிந்திக்கும் திறன், ஒழுக்கம் இவையெல்லாம் நவீன உலகத்திற்கு ஏற்ப எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்ற தவறான எண்ணத்தால் மறைக்கப்பட்டு உள்ளன.இந்த கலாசாரம் எப்பொழுது மாறுமோ ??

  6. திரு.தஞ்சை வெ.கோபாலன் ஐயா,

    உங்கள் கருணை மனதை அறிய முடிகிறது. ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வைத் தொலைக்கிறார்களே என்ற ஆற்றாமையை புரிந்து கொள்கிறேன்.

    ஆனால், முழுமையான மதுவிலக்கு நடைமுறை சாத்தியமல்ல என்றே நான் நம்புகிறேன். நீங்களே பழங்காலத்தில் இருந்த நிலைமைகளை பட்டியலிட்டு விட்டீர்கள்.

    நான் 2 செய்திகளை அளிக்க விரும்புகிறேன்.
    (1) போன வருடம், தேசிய கட்சியின் தலைவர் ஒருவர், சென்னைக்கு வந்திருந்து எழுத்தாளர்கள் மற்றும் சமூக பெரும் புள்ளிகளை சந்தித்தார். அப்பொழுது எழுத்தாளர் ஒருவர், “அரசே மதுவை விற்கலாமா! என்று கேட்டார்?”

    அதற்கு அந்த தலைவர், ஒரு அற்புதமான விளக்கத்தை அளித்தார். மாறிவரும் உலகில் மதுவைக் குறித்த ஒரு புதிய, தெளிவான பார்வை மாற்றம் அவசியம் என்றார். அதாவது, மது என்பதை ஒழுங்கீனமாக பார்ப்பதால் நம்மால்
    பிரச்சினையிலிருந்து விடுபட முடியாது. அதைவிடுத்து, மதுவை ஒரு மனித ஆரோக்கியத்திற்கு சவால் என்னும் அளவில் அணுகுவதால் மட்டுமே நவீன சமூகங்களால் இந்த பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார்.
    நான் அவர் கருத்தை பரிபூர்ணமாக ஆதரிக்கிறேன்.

    குடிகாரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்னும் கருதுகோளின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது.

    (2)அமேரிக்காவின் நிலை கொஞ்சம் வித்தியாசமானது. அங்கு மது, புகை போன்ற பழக்கங்களைத்தாண்டி 70களிலேயே கஞ்சா பழக்கம் பல இளைஞர்களின் வாழ்வை அழித்தது. இன்றும் அழித்து வருகிறது.

    70களில் இப்பழக்கத்தைக் கண்டு வெகுண்டெழுந்த சமூக,அரசியல் தலைவர்கள் பல வருட போராட்டங்களுக்குப்பின் 80களில் புதிய கடுமையான சட்டங்களை இயற்றினர். அதன்படி, கஞ்சா விற்பவர்கள் மட்டுமல்ல, உபயோகிப்பவர்கள் கூட
    தண்டனைகளை எதிர் கொண்டனர்.

    இன்றைய நிலை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட 16 இலட்சம் அமேரிக்கர்கள் கஞ்சா விற்பனை விவகாரத்தில் சிறை சென்றனர். பல இலட்சம் பேர் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.

    அதாவது பரவாயில்லை. இன்றளவிலும், கஞ்சா விற்பனையை அரசாங்கத்தினால் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. முற்றும் முழுவதுமாக காவல்துறை தோற்றுவிட்டது.

    35 வருடங்களுக்குப் பின்னர், அடுத்த தலைமுறையைச்சேர்ந்த சமூக, அரசியல் தலைவர்களில் பலர் கஞ்சா விற்பனையை சட்டரீதியாக ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டோம் என்று பச்சையாக பேச
    ஆரம்பித்துள்ளனர்.

    என்னைப் பொறுத்தவரை, திரு.சான்றோன் எழுதிய மறுமொழி எதார்த்தமாக உள்ளது.
    (1) பல கட்டுபாடுகளை விதித்து மதுக்கடைகளை அனுமதிப்பதே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது.
    (2) உங்களைப் போன்றவர்களும் மதுவின் தீமைகளை பேசிக் கொண்டிருக்கலாம். அதுவும் சமூகத்திற்கு அவசியம்.
    (3) அதைத்தாண்டியும், 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மதுவை அணுகவே செய்வர். அதற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை அளிப்பதே நடைமுறை சாத்தியம்.
    (4) மேலும், அரசாங்கம் மதுக்கடைகளை நடத்துவது சுத்த பைத்தியக்காரத்தனம். தனியாரிடம் விட்டுவிட வேண்டிய வர்த்தகம் இது.

    கடைசியாக, பெரும்பாலான இன்றைய இளைஞர்கள், என் கருத்துப்படி தெளிவாகவே உள்ளனர். நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்தில் உள்ள யுவ,யுவதிகள் தங்கள் வேலையைச்சார்ந்தோ அல்லது நண்பர்கள் குழாமிலோ மாதம் ஒருமுறை
    மது அருந்தி கொண்டாடுவதை நான் தவறாக பார்க்கவில்லை. அவர்கள் குடிகாரர்கள் அல்லர். கேளிக்கை ஒரு சமூகத்திற்கு மிகவும் அவசியம். தாலிபான் ஸ்டைல் மதுக்கடைகளை அழிக்கும் வழியை என்னால் ஆதரிக்க முடியாது.
    (சாதாரணமாக நடுத்தர, உயர்நடுத்தர இளைஞர்களை குறிவைத்து அவர்களை கீழ்மைபடுத்தும் போக்கை ஊடகங்களில் காணமுடியும். அதனாலேயே அவர்களை ஆதரித்து குறிப்பாக நான் சுட்டிக்காட்டினேன். அவர்களைத் தவிர்த்து ஏழை மக்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே மதுப்பழக்கம் இருந்துதான் வந்திருக்கிறது.)

    18 வயதுக்கு மேலுள்ளவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டுமே! நாம் யார் நடுவில்?

  7. ஒரு மிகச் சிறந்த காந்திய வாதியின் மன வேதனையே இங்கு இப்படிக் கட்டுரையாக கண்ணீர்விடுகிறது.

    மகாத்மா காலத்து கிராமமும், அவர்தம் வாழ்க்கை முறையும், அவரது போதனைகளும் ஏட்டில் இருக்கிறது.
    காந்தியை போற்றுபவர்கள், அவரையே முதன்மையாக போற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இது பற்றி நன்கு யோசிக்க வேண்டும். அல்லது அவர்களை சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதர்கள் தான் யோசிக்கச் செய்ய வேண்டும். காந்தியின் படத்தை பணத்திலே அச்சிட்ட அரசு அவரின் கொள்கைகளை தங்களது ஆளுமையிலும், மக்களின் எண்ணங்களிலும் ஆழப் பதியச் செய்ய தவறி விட்டன…

    அப்படி இருக்க அவர்கள் காந்தியின் பெயரைச் சொல்லக் கூட அருகதை அற்றவர்கள் என்று காரி அவர்கள் முகத்திலே அல்ல அவர்களைப் பார்த்து நிலத்திலே உமிழவேண்டும் (மன்னியுங்கள் மகாத்மா). அப்போதாவது அவர்களுக்கு சொரணை வருகிறதா என்றுப் பார்க்க வேண்டும். காந்தியின் சமாதியில் மலர்வளையம் வைக்கப் போகும் போதாவது அவரது கொள்கைகளை ஒரு கணம் நினைத்தால் இவர்கள் திருந்துவார்கள்.

    அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. அவர்களின் அரசை பிரதிநிதிக்கும் பெரும்பாலானோர் காந்தி என்றப் பெயரைத் தவிர வேறெதுவும் அவரைப் பற்றி அறியாதவர்களே! ஆனால், கொலை, கொள்ளை, லஞ்சம், திருட்டு என்று சமூகத்தில் இருக்கும் அத்தனை அயோக்கியத் தனங்களையும் ஐயம் திரிபறக் கற்ற மகா ஞானிகள் ஆயிற்றே! ஆக, அவர்களின் துறைகளிலே அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

    பிரச்சனை எங்கே பாருங்கள். நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் இன்னமும் பழைய பஞ்சாங்கத்தையே வாசிக்கிறது. ஆக, ஜனநாயகத்தில், அரசில், அரசு பிரதி நிதத்துவத்தில் காலத்திற்கு தேவையான மாற்றங்களை அவைகள் செய்வதில்லை. அதைப் பற்றிய சிந்தனையை, முயற்சியை, சீமைக்கு சென்று படித்தப் பல மேதாவிகள் கூட எதையும் செய்வதில்லை. காரணம் அவர்கள் படித்தது வேறு; படிக்க மறந்தது வேறு. தன்மானத்தை விற்று சுய அடையாளத்தை விற்று தன்னலமே பெரிதென்று திரியும் அரசியல் காட்டேரிகள். அவைகளிடம் ஏது இதயம். இவைகளைப் பற்றி சிந்திக்க!!!! நாடு, மக்கள், பாரம்பரியமிக்க உயரிய பாரதக் கலாச்சாரம் என்று சீரிய சிந்தனைகளை வளர்க்க. தான், தனது குடும்பம் அவ்வளவு தான்.

    நமது தேசத் தந்தை என்றும்; உலகிலே முதன்முதலில் அவதாரங்கள் கூட சொல்லாத விஷயத்தை இந்த அவதார புருஷர் சொல்லிய அஹிம்சை தத்துவத்தை, அந்த வலிமைமிக்க வழியில் தமது உரிமையைப் பெற்று, புது வழி பெற; புது நெறிகாட்டிய
    சமூகப் புரட்சியாளரின் கருத்துக்களை மீண்டும் புத்துணர்ச்சி பெற; தேசத்தை பற்றிய அக்கரையுள்ளப் பெரியவர்களும் இளைஞர்களும், முழுமூச்சாக இறங்கி மீண்டும் குழந்தைகளிடம் அந்த மகானின் கருத்தை ஆழ் மனதிலே பதியும் படியுமான நல்ல வேலையைச் செய்தால் தான் வரும் தலைமுறையாவது உண்மையான இந்தியக் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் நல்ல குடிமகன்களை பெரும்.

    அப்படி இல்லாது போனால்; மகாத்மா யாரவர்? என்றும், அவர் என்ன அப்படி செய்தார்?, அவர் என்ன அப்படி சொன்னார்? என்ற கேள்வியோடு சீர்கெட்ட சமூகமே எங்கும் வியாபித்து, கீழான மேற்கத்திய கலாச்சாரத்திலே மூழ்கி நாடும், நாகரிகமும், இந்திய அடையாளமும் அழிந்து நமக்கு இருக்கும் தனித் தன்மையான ஆன்மீகமும், மெஞ்ஞானமும் மறைந்தே போகும் என்பது உறுதி.

    ”பூனைக்கு யார் மணிகட்டுவது” அந்த புண்ணிய ஆத்மாவை அறிய நானும் ஆவலோடு இருக்கிறேன். மிகவிரைவில் அது அந்தப் புனித காரியத்தை செய்ய எங்கும்நிறைந்த அன்னை பராசக்தி அருளட்டும்.

    வேதனையும், கோபமும், விரக்தியும், கவலையும் தான் வருகிறது; வேறென்னச் செய்ய முடியும் அல்லது சொல்ல முடியும். உலகிற்கே ஒளிகாட்ட வேண்டிய பாரத மக்களக் கூட்டம் போதையில் ஆடுகிறதே!!!

    நன்றி….

  8. “அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
    ஐயா! பசியுடன் காத்திருக்க.
    பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
    போதையில் இழப்பதும் இனியில்லை. (விட்)5

    பெற்றதன் குழந்தைகள்சுற்றி நடுங்கப்
    பேயெனும் உருவொடு வாய்குறை
    உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
    ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி. (விட்)6

    விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
    வீதியில் மாதர்கள் ரோதனமும்
    குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
    கூண்டோ(டு) ஒழிந்தன இனிமேலே! ”

    இது நாமக்கல் கவிஞர் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வந்த போது பாடியது.
    இது போல ஒரு புதுக்கவிதை இன்று எழுத மீண்டும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

    குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆங்காங்கே ஒன்றிணைத்து மதுவிலக்குக்கு எதிரான பிரச்சாரமும்,மதுக்கடை வாசலில் அமைதியான வகையில் குடிகாரர்களை தடுக்கும் போராட்டமும் சிறிய அளவிலாவது நடத்தலாம். பெண்கள் முன் கை எடுத்தால் நிச்ச‌யம் ஒரு நாள் மது அரக்கனை விரட்டிவிடலாம். குறைந்த பட்சமாக மதுவால் வரும் கேட்டினை விளக்கும் நோட்டீசுகளை மதுக்கடை முன்னர் விநியோகிக்கலாம்.

    கோபாலன்ஜியின் ஆதங்கம் நன்கு புரிகிறது.அவரே சொல்லியுள்ளது போல பூனைக்கு யார் மணிகட்டுவது? நாம்தான் கட்டவேண்டும் என்று கிளம்புகிறோமோ அன்று சிறிது முன்னேற்றம் ஏற்படலாம்.

  9. //மதுவிலக்குக்கு எதிரான பிரச்சாரமும்,மதுக்கடை வாசலில் அமைதியான வகையில் குடிகாரர்களை தடுக்கும் //

    மேற்படி வாசகத்தினை ‘மதுவுக்கு எதிரான பிரச்சாரமும்’ என்று திருத்திவாசிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்.

  10. தமிழன் குடிகாரனாய் போதையில் இருக்கும் வரை தான் கழகங்கள் அரசியல் செய்ய முடியும். தமிழன் திருந்திவிட்டால், மது போதையில் இருந்து விடுபட்டுவிட்டால், கழகங்களுக்கு சாவு மணி தான். எனவே, கழகங்கள் டாஸ்மாக்கை மூட அனுமதிக்க மாட்டா. கழகங்களுக்கு பல்லக்கு தூக்கி , கால் முட்டி தேய்ந்து போன, சில்லறை கட்சிகளான பாமக, விசி போன்றவைக்கும் இதே கதிதான்.

  11. All of the readers and the writer of this article, why did’t mention about JJ because of whom government has undertaken all the wine shops?

    (edited and published)

  12. இன்னும் வருமானம் வேண்டும் என்று இன்னும் பல போதை பெருள்களை அரசே விற்பனை செய்தாலும் ஆச்சரியமில்லை???
    தன் மக்களை திருத்த வேண்டிய தாயே, வருமானத்திற்காக மகனை போதையின் பாதையில் தள்ளியது போலுள்ளது அரசாங்கத்தின் நடவடிக்கை,,,,

    மனம் வருந்துகிறது,,,, தாய் நாட்டை நினைத்து,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *