ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1

அறிவுத் தேடலில் குருவிடம் அமர்ந்து அவர் சொல்வது கேட்டு அறிந்துகொள்வது முதல் வகை. நாமே பல புத்தகங்களையும் படித்து அறிவு பெறுவது இரண்டாம் வகை. கேட்டும், படித்தும் முற்றிலும் தெளிவு பெறாத நிலையில் அதை எழுதிப் பார்த்து அறிய முயற்சிப்பது மூன்றாம் வகை. பலரும் முதல் வகையிலும், சிலரும் இரண்டாம் வகையிலும் பயில, வேறு சிலரோ மூன்றாம் வகையில் அதை முயன்று பார்க்கிறார்கள். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் வெளியீடான திருமதி. கனகம்மாள் எழுதிய நூலில் உள்ள “ஆன்ம போதம் – உரை“, மற்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடான Dr. V.S. நரசிம்மன் எழுதியுள்ள “ஆத்ம போதம்” இவை இரண்டின் துணை கொண்டும் இப்போது நான் எழுத ஆரம்பித்திருக்கும் இந்த “ஆன்ம போதம்” தொடர் அந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தது என்றுதான் நினைக்கிறேன். இத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது எனக்கும் நன்கு புரியவைத்தும், முடிவதற்கு முன்னால் முடிந்தவரை பலரையும் அடைந்து அவர்கள் பலருக்கும் நன்மை தரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

முன்னுரை

எதையும் படித்து அறிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அதில் பல பரிமாணங்கள் இருக்கும். படித்ததை உட்கொண்டு, சிந்தித்து, அசை போட்டு மேலும் நன்கு அறிய முயலும்போது அதற்குத் தேவையான காலம் வேண்டும் என்பது மிக மிக அவசியம். தங்க முலாம் பூசும்போது, மின்சார ஓட்டம் மற்றும் அது ஓடும் காலநேரம் இவ்விரண்டையும் வெவ்வேறு அளவில் வைக்கலாம். ஓரளவுக்கு மின்சார ஓட்டத்தை வைத்துவிட்டு, அது ஓடும் காலத்தை மாற்றிக்கொண்டே போனால் எப்போது காலநேரம் ஓரளவுக்கு மேலே இருக்கிறதோ அப்போதுதான் முலாம் நல்ல பூச்சுடன் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல சரியான கால அளவு என்பது எதிலும் இன்றியமையாத ஒன்று. எதை எப்போது செய்யலாம் என்பதும் கால அளவுதான்.

குறிப்பிட்ட காலம் என்பது போலவே, எதை எவ்வளவு உள்வாங்கிக்கொள்ள முடியுமோ அதற்குத் தகுந்தாற்போல் வெவ்வேறு நிலைகளும் உண்டு என்பது இன்னுமொரு பரிமாணம். ஆராய்ச்சிப் படிப்பு ஓர் இறுதிநிலை என்றால், அதற்கு முந்தியது ஒரு முதுகலை படிப்பு. அந்த முதுகலைப் படிப்புக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டியது ஓர் இளங்கலைப் படிப்பு. முதலில் வரும் இளங்கலையில் எது என்ன என்று படித்து அறிகிறோம் என்றால், முதுகலையில் அவையெல்லாம் என்னென்ன வகையாக இருக்கிறது, அதன் குணங்கள் என்ன, எதற்காக அப்படிப் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று அவைகளைப் பற்றி மேலும் சில விவரங்களை அறிகிறோம். ஆராய்ச்சிப் படிப்பில் அவை ஏன் அப்படி வந்தது, குணங்களை மாற்ற முடியுமா, மாற்றமுடிந்தால் அவை என்னவாக இருக்கும், புதிதாக ஏதாவது வருகிறதா என்றெல்லாம் அறியவருகிறோம்.

அதுபோல வேதங்கள் நாம் அறிந்து கொள்ளவேண்டியவைகளின் இறுதி நிலையில் இருக்கிறதென்றால், “பிரஸ்தானத் த்ரயம்” என்று சொல்லப்படும் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத் இவை மூன்றும் அதற்கும் முந்தைய நிலையில் இருந்து நமக்குப் பல விவரங்களைத் தருகின்றன. இதற்கும் முன்பாக “பிரகரண கிரந்தங்கள்” என்னும் முதல் நிலையில் ஆதி சங்கரர் இயற்றிய ஆத்ம போதம், தத்வ போதம் போன்ற நூல்கள் நாம் படிப்பதை மேற்கொண்டு புரிந்துகொள்ள உதவி செய்கின்றன. சாதாரண மக்கள் புரிந்துகொள்வதற்கு இவை மூன்றையும் ஆராய்ச்சி நூல் (Thesis or Reference book), பாட நூல் (Text book), வழிகாட்டி அல்லது கையேடு (Guide or Monograph) என்று மூன்று நிலைகளில் இருப்பதாக ஒப்பிட்டுச் சொல்லலாம்.

அனைவர்க்கும் புரியும்படியாக இன்னும் கொஞ்சம் விவரமான உதாரணம் கொண்டு விளக்கவேண்டும் என்றால், அந்த மூன்று நிலைகளில் இப்படி இருக்கும் என்று சொல்லலாம். ஒரு இடத்தின் பரப்பளவைக் கண்டுபிடிப்பது எப்படி என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேல் நிலையில் அதை அந்த இடத்தின் நீளம், அகலம் இரண்டும் அளந்தால் அதிலிருந்து பரப்பளவு கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கும். இடை நிலையில் அதையே ஒவ்வொரு வடிவமாக எடுத்துக்கொண்டு சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் ஒவ்வொன்றுக்கும் அந்த நீள, அகலங்கள் என்னும் அளவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த மாதிரி உண்டான விதிகளும் விவரமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். கடை நிலையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவத்தையும் பல படங்களாக வரைந்து, ஒவ்வொன்றுக்கும் புரிகிற மாதிரி அளவுகளையும் மாதிரிக்கு எடுத்துக்கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள விதிகளில் மாதிரி அளவுகளை எழுதி பரப்பளவு எவ்வளவு வருகிறது என்று காட்டியும், அத்துடன் வெவ்வேறு வடிவங்களுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும்.

அது போல, வேதத்தில் “பிரம்மம் ஒன்றே” என்று சொல்லியிருந்தால், அடுத்த நிலையான “பிரஸ்தானத் த்ரய”ங்களில் அதை விளக்கி “பிரம்மம் என்பது எங்கும், எப்போதும் இருக்கும் ஆத்மா. அது நீரில் நனையாது, நெருப்பில் எரியாது, வெயிலில் உலராது. அதை வெட்ட முடியாது, அதைப் பிரிக்க முடியாது. அது பிறப்பதோ, இறப்பதோ இல்லை. அதனால் அது என்றும் அழியாதது. அது இருப்பதால்தான் நாம் எல்லோரும் இப்போது இருக்கிறோம். நம் கண்ணுக்கு வெவ்வேறாகத் தெரிவது உடல்களே. மேலே சொல்லப்பட்ட குணங்கள் உடலுக்கு இல்லாததால் உடல் ஆத்மா அல்ல. ஒவ்வொரு உடலின் உள்ளும் இருந்து அதை இயக்கிக் கொண்டிருப்பதுதான் ஆத்மா. ஒவ்வொரு உடலின் உள்ளும் என்று சொன்னாலும், உடல்கள் வெவ்வேறு போல் ஆத்மா வெவ்வேறு அல்ல, ஒன்றேதான். இயக்கும் சக்தி ஒன்றேயாதளால் நாம் அனைவரும் ஒன்றே” என்று இப்படியாக மேலும் விளக்கிச் சொல்லும்.

அதற்கும் அடுத்த நிலையில் இருக்கும் “பிரகரண கிரந்தங்கள்” இவையெல்லாவற்றையும் எளிதில் விளக்க, தினப்படி வாழ்வில் பலருக்கும் மிகவும் அறிமுகமான சாதாரண உதாரணங்களைக் கையாளும். இருளை நீக்கும் ஒளி, கயிற்றில் தெரியும் பாம்பு, சூரியனை மறைக்கும் மேகம் என்ற உதாரணங்கள் எல்லாமே இப்படி அறிமுகம் ஆவது தான். ஒளி வந்தவுடன் இருள் தானாக விலகுவதுபோல பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு அதைப் பற்றிய அறியாமை தானாக விலகுகிறது. அதனால் பிரம்மம் ஒளி போன்றது. பாம்பு என்ற எண்ணம் இருட்டு இருக்கும் வரையில்தான். அங்கு ஒளி வந்ததும் அது கயிறு என்று தெரிகிறது. எங்கோ, எப்போதோ பார்த்த பாம்பு என்ற எண்ணத்தை இங்கு, இப்போது இருக்கும் வேறு ஒரு பொருளின்மேல் படரவிட்டாலும், ஒளி வரும்வரை பார்ப்பவனுக்கு அது பாம்புதான். இப்படியாக பலப் பலவாக இருப்பதைப் பார்க்கும் அறியாமை இருக்கும் வரை, எல்லாம் ஒன்றாய் இருக்கும் பிரம்மத்தை உணரமுடியாது. எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு. மேகம் மறைந்தவுடன் தானே ஒளிரும் சூரியன் தெரிவது போல, தானே தானாய் இருக்கும் பிரம்மம் நாம் செய்யும் கர்மங்களால் இடையில் வந்த நமது உபாதிகள் மறைந்ததும் தானாய் ஒளிரும். இப்படியெல்லாம் உவமானங்களை வைத்துக்கொண்டு மேல் நிலை உண்மைகளை “பிரகரண கிரந்தங்கள்” விளக்கிச் சொல்லும். இப்படியான உண்மைகளும், உவமைகளும் எந்த நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும், நிலைகளில் மேலிருந்து கீழே வர வர விவரங்களும், விளக்கங்களும் மிகுதியாக இருக்கும்.

அதாவது எந்த நிலையிலும் இருக்கும் சங்கதி ஒன்றுதான்; அதன் விளக்கங்களில்தான் அளவிலும், விவரங்களிலும் அந்தந்த நிலைகளில் சொல்லப்படுபவை மாறுபடுகின்றன என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

மங்கலம்

ஆன்மாவின் போதம் அருள் ஆசானாம் சங்கரன் அவ்
வான்மாவுக்கு அந்நியன் ஆவனோ – ஆன்மாவாய்
என்னகத்தே இருந்தின்று தமிழ் சொல்வானும்
அன்னவன் அன்றி மற்று யார்.

ஆதி சங்கரரின் “ஆத்ம போத”த்தை ரமண மகரிஷி தமிழில் மொழிபெயர்த்து “ஆன்ம போதம்” என்று வெண்பா வடிவில் எழுத நேர்ந்தபோது, மேற்கண்ட வெண்பாவை மங்கலச் செய்யுளாகத் தொடுத்துக் கொடுக்கிறார். இச்செய்யுளில் “ஆத்ம போதத்தை நமக்கு அருளிய ஆதி சங்கரர் ஆன்மாவின் வடிவே அல்லாமல் வேறு என்னவாய் இருந்து நமக்கு அதை அருளினார்? இன்று அந்த ஆன்மாவே என்னகத்தில் இல்லாது போனால், அதைத் தமிழில் சொல்வதும் அதுவன்றி வேறு யார்?” என்று கேட்கிறார். மிகவும் கூர்ந்து யோசிக்க வேண்டிய கேள்விக் கணைகளை நம்மைப் பார்த்து ரமணர் தொடுத்திருக்கிறார். எப்போதும் எல்லாமுமாய் இருப்பது ஆன்மாவே என்று தெரிந்தும் புரியாதவர்கள், முன்பு சம்ஸ்க்ருதத்தில் எழுதிய சங்கரர்தான் இப்போது தமிழிலும் இயற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் கொள்ளலாம், அல்லது ரமணரே முன்பு சங்கரராய் இருந்து (அதாவது ஆன்மாவாய் இருந்து) முன்னதைத் தந்தார் என்றும் கொள்ளலாம். ஆன்மாவே எல்லாம் என்றிருப்போருக்கு அன்றும் இன்றும் என்றும் ஆன்மாவே தானாகவும் இருக்கிறது; தன்னைப் பற்றிச் சொல்லாமலும் சொல்கிறது என்று புரியும். அதாவது ஆன்மா இல்லாது வேறு என்னதான் இருக்கிறது என்பதே இங்கு அனைவரும் காண வேண்டிய உண்மை. என்ன, இந்த ஒரு மங்கலச் செய்யுளிலேயே ஆன்மாவைப் பற்றி நல்ல போதனை இருக்கிறதா?

முன்பே நாம் பார்த்தபடி, ரமணர் தானாகவே எழுதியது என்பது மிகவும் குறைவு. தெரியாது மறைந்து இயக்கும் ஏதோ காரணங்களால் உந்தப்பட்டு, தெரிந்து அருகில் இருக்கும் எவராலோ அது பற்றி விசாரிக்கப்பட்டு, தானே உதிர்ந்த முத்துக்களைக் கோர்த்து வைக்கும் பணியைத்தான் அவர் செய்தார் என்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும். அது போன்றே இந்தப் படைப்பும் உருவான நிகழ்ச்சியை நம் நினைவில் வாழும் திருமதி. கனகம்மாள் தனது நூலில் எழுதியிருப்பதை அவர் சொற்களிலேயே இங்கு காண்போம்.

“சம்ஸ்க்ருத பாஷை ஓரளவுக்குத் தெரிந்திருந்த முஸ்லீம் பண்டிதர் ஒருவர், ஆதி சங்கரர் சம்ஸ்க்ருதத்தில் இயற்றிய “ஆத்ம போத” ஸ்லோகங்களுக்கு, தமிழ் அனுவாதமாக பாடல்கள் எழுதிப் பிரசுரித்திருந்தார்.

அதில் இரண்டு புஸ்தகங்கள் தபால் மூலமாக ஆஸ்ரமத்திற்கு வந்தன. மௌனி சீனிவாசராவ் தபால் கொண்டு வரும்போது, அத்துடன் சேர்த்து இந்த “ஆத்ம போத” புஸ்தகத்தையும் பகவானிடம் கொடுத்தார். வழக்கம் போல் தபாலைப் பார்த்து விட்டு, பிறகு அந்த புஸ்தகத்தைத் திறப்பதும் பார்ப்பதும் மூடி வைப்பதும், திரும்பப் புரட்டுவதுமாக இருந்தார் பகவான்.

புஸ்தகத்தை அப்படி இப்படி புரட்டும்போது பகவானின் முகத்தைப் பார்த்தால், உள்ளுக்குள்ளே ஏதோவொரு பிரேரேபணை இருப்பதுபோல் தோற்றமிருந்தது. அதன் பிறகு அந்தப் புஸ்தகத்தை லைப்ரரிக்குக் கொடுத்துவிட்டார். பிறகு வேங்கடரத்தினத்தைக் கூப்பிட்டு, சங்கரர் நாகரி லிபியில் எழுதியுள்ள ‘ஆத்ம போத”த்தைக் கொண்டுவரச் சொன்னார். அதை அடிக்கடி புரட்டிப் பார்த்து வந்தார். பிறகு ஒரு காகிதத்தில் இரண்டு பாட்டுக்களை தமிழில் வெண்பாவாக எழுதினார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த குர்ரம் சுப்பராமையா என்னும் ஆந்திர பக்தர் (ரமணர் ‘கீதா சாரம்’ எழுதுவதற்குத் தூண்டுகோலாய் இருந்தவர்தான்) பகவானை நோக்கி, “என்ன, பகவான் ஏதோ புஸ்தகத்தைத் திறப்பதும், படிப்பதும், மூடுவதும், எழுதுவதுமாக இருக்கிறதே! அது என்ன புஸ்தகம்?” என்று கேட்டார். அப்போது பகவான் தான் எழுதிய ‘ஆன்ம போத’ சுலோகத்தின் தமிழ் அனுவாதமான இரண்டு பாடல்களை அவரிடம் காட்டினார். அதைப் பார்த்த அவர், “இப்படியே மீதி சுலோகங்களையும் எழுதினால் நன்றாயிருக்குமே” என்றார்.

பகவான் அதற்கு “சரி சரி, அதெல்லாம் எதற்கு?” என்று சொல்லி தட்டிக்கழித்து விட்டார். அதெல்லாம் எதற்கு என்று சொல்லளவிலே தட்டிக்கழித்தாரே ஒழிய, உள்ளே ஏதோவொன்று தூண்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களில் இன்னும் சில பாடல்கள் எழுதி வெங்கட்ரத்தினத்திடம் காட்டி “நாம் எதற்கு எழுத வேண்டுமென்று சும்மாயிருந்தால் இது நம்மை விடாதுபோல் இருக்கிறது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக எதிரே வந்து நிற்கிறது. என்ன செய்கிறது!” என்று சொன்னார். மேலும் சில பாடல்கள் எழுதியபிறகு, வெங்கட்ரத்தினத்தை பார்த்து “இனிமேல் இது நம்மை விடாது ஓய்! புஸ்தகம் தைச்சுக் கொண்டு வாரும்!” என்று சொல்லி தான் எழுதிய மங்கல வெண்பாவையும் அவரிடம் காட்டினார்.

பிறகு சில நாட்களுக்குள்ளாகவே நூல் முழுவதும் 69 சுலோகங்களும் தமிழ் வெண்பாக்களாக எழுதி முடிக்கப்பட்டன. பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்து “நாற்பது வருஷங்களுக்கு முன்னால் முதல் சாமானாக ஏற்பட்ட, அந்த சின்ன மலையாள நோட்டுப் புஸ்தகத்தில் இது இருக்கிறது. அப்போ அதற்கு தமிழில் எழுதவேண்டுமென்ற எண்ணமே உண்டாகவில்லை” என்று கூறினார். “எதற்கும் காலம் வரவேண்டாமா?” என்று ஒரு பக்தர் சொன்னார்.

அதற்கு பகவான் “ஆமாமாம்! இப்போ இது ஒன்று எழுதியதும் இன்னொன்று தோன்றிக்கொண்டே வருகிறது. முன்னே எப்பவோ படித்த மாதிரியும் இருக்கிறது. இதற்கு முன் யாரும் இதை எழுதவில்லையே? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பகவான்.

“வெண்பாக்களாக இதுவரை யாரும் எழுதவில்லை” என்று எதிரில் இருந்த முருகனார் கூறிவிட்டு, மேலும் சொன்னார்; “பகவானுக்கு ஒன்றன் பின் ஒன்று தோன்றுவதில் என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு கல்பத்திலும் வேதங்கள் பிரம்மாவிற்கு எதிரில் தோன்றுமென்பதுதானே புராண வரலாறு. இதுவும் அதைப் போன்றதுதான்!” என்று கூறினார்.

அதற்கு பகவான் சிரித்துக்கொண்டே, “அது சரிதான்! ஜயதேவர் கதையில் வருவதுபோல யாராவது வந்து நான்தான் எழுதினேனென்று சண்டைக்கு வருவார்களோ என்னவோ!” என்று சொல்லி முடித்தார்.

இப்படி (முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்தப்பட்ட) ஒரு ரசமான பின்னணியுடன் இந்த “ஆன்ம போதம்” தமிழில் உருவெடுத்தது. பகவான் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. அந்த சம்பவங்களெல்லாம் யாரும் எழுதி வைக்காததினால் நமக்குத் தெரியவில்லை. ஏதோ சிலவற்றிற்கு மட்டுமே அவை எழுதப்பட்ட காரணங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.”

நூல்:

முன்பு ரமணரின் “கீதா சார”த்தில் தந்தது போலவே, இப்போதும் மூல சம்ஸ்க்ருத சுலோகத்தை முதலில் கொடுத்துவிட்டு, அதன் கீழேயே அதைத் தமிழிலும், அதன் பின் ரமணரின் மொழிபெயர்ப்பான தமிழ் வெண்பாவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சொற்களும், மூலத்தில் போல் அல்லாது, படிப்பதற்கு எளிதாக இருக்கும் வண்ணம் முடிந்த வரை சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

(1)

தபோபி⁴: க்ஷீணபாபானாம்ʼ ஶாந்தானாம்ʼ வீதராகி³ணாம்ʼ |
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ sயமாத்மபோ³தோ⁴ விதீ⁴யதே ||

தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய் சாந்தி
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆன்ம
போதமாம் ஈது புகல்

சில தவங்கள் செய்ததனால் மேலும் பாவங்கள் செய்வதை தவிர்த்தவர்களாகவும், மனத்தில் சாந்தி அடைந்தவர்களாகவும், உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், பிறப்பிறப்புச் சுழல்களில் இருந்து விடுபட விரும்புவோர்களாகவும் இருப்போர்களுக்கு என்று இந்த ஆன்ம போதம் சொல்லப்படுகிறது.

எடுத்த எடுப்பிலேயே சங்கரர் இங்கு நமக்குப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார். இது அக்காலத்திலேயே சொல்லப்பட்ட முறை; இக்காலம் மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருத்தமானது. ஒன்றைச் சொல்லும்போதும், எழுதும்போதும் என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம், எவருக்காகச் சொல்கிறோம், ஏன் சொல்கிறோம் என்று விவரமாக முதலில் சொல்லிவிட்டால் எல்லோருக்கும் நல்லதுதானே? இந்த இலக்கணப்படி என்ன சொல்கிறோம் என்பதில் சொல்லப்போகிற தகவல்களின் குறிப்பு கிடைக்கிறது; எப்படிச் சொல்கிறோம் என்பதில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரும் வாதங்களின் தொகுப்பு கிடைக்கிறது; எவருக்கு என்பதில் கேட்கப்போகிறவரின் தகுதிகள் என்னவாக இருந்தால் சொல்லப்போவது நன்கு விளங்கும் என்று தெரிகிறது; ஏன் என்பதில் சொல்வதைக் கேட்பதால் கேட்பவருக்கு என்ன பயன் என்று மிகவும் தெளிவாகிறது.

முதல் ஸ்லோகத்திலேயே இந்தப் படைப்பின் தலைப்பு “ஆன்ம போதம்” என்றும் குறிப்பிட்டு, இதைப் படிப்பவர்களுக்கு வேண்டிய தகுதிகளையும், அதாவது யார் படிக்கலாம் என்றும், அவர்கள் படித்தால் என்ன பயன் விளையும், அதாவது ஏன் படிக்க வேண்டும், என்றும் விவரமாகச் சொல்கிறார். தகுதிகளைப் பற்றி நாம் மேலும் விவரமாக ஆராயலாம். இதைப் படிப்பவர்களுக்கு ஆன்மாவைப் பற்றிய ஞானம் (போதம்) கிடைக்கும் என்பது இதன் பயன் என்பதை அந்தத் தலைப்பிலேயே கொடுத்துள்ளார்.

மேலே இருக்கும் முதல் செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகளைப் படித்துவிட்டு வாசகர்கள் தனக்குத் தானே எடை போட்டுக்கொண்டு, தான் மேலும் படிக்கும் தகுதி வாய்ந்தவர்களா, இல்லையா என்று குழம்ப வேண்டாம். ஒரு வேளை அந்தத் தகுதிகள் தொடக்கத்தில் இல்லை என்றாலும் கூட, மேலும் படிக்கப் படிக்க அந்தத் தகுதிகளை எப்படிப் பெறுவது, எப்போது பெறுவது என்று தன்னை அறியாமலேயே ஒவ்வொரு மனதிலும் வேர்கள் விட்டுத் தழைத்து அதற்கேற்ற விளைநிலத்தை படிப்பவன் நாட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் எண்ணம் என்பது என் எண்ணம். இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு அதுதான் பயன் என்று நினைக்கிறேன்.

(தொடரும்)

3 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1”

  1. உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், இருப்போர்களுக்கு இந்த ஆன்ம போதம் சொல்லப்படுகிறது.

    தொடருங்கள்

  2. திரு .இராமன் அவர்களின் அறிய முயற்ச்சிக்கு எம் சிரம் தாழ்த்திய வணக்கம். பொதுவாக சிறப்பான படைப்பாகிலும் ஒரு சில பாரம்பர்யச் செய்திகள் திருத்தப்பட வேண்டியுள்ளன.
    ௧. பிரஸ்தானத்ரயம் என்பதன் விளக்கத்தில் வேதத்த்தில் இருந்து உபநிஷத்தை பிரித்துக்கூரப்பட்டுள்ளது. அது தவறாகும். உபநிஷத் என்பது வேதம் தான். பொதுவாக கர்ம காண்டத்தை வேதம் என்றும் ஞான காண்டத்தை உபநிஷத் என்றும் கூறுவது வழக்கு. நூல்கள் மற்றும் வேதம் பற்றிய செய்திகளை சரிபார்த்து மீண்டும் கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
    ௨. தகுதி இல்லை என்றாலும் படிக்கப்படிக்க தகுதிக்கான வேர்கள் தோன்றும் என்று கூறியிருப்பது அருமை. சுவாத்யாயமே கூட ஒரு சிறந்த தவம் தான் என்று தைத்திரீய உபநிஷத் கூறுகிறது.
    மேலும் வரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ஓம் தத் சத்.

  3. மிக அருமயான பதிப்பு. இந்தத்தொடரை தொகுத்து pdf போர்மட்-இல் வெளியிட்டால் உபயோகமாக இருக்கும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *