Hanuman Returns

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

22.1 செய்வன திருந்தச் செய்

அனுமான் தனது வெற்றிப் பயணத்தை அவர்களிடம் சொல்ல ஆரம்பிக்கும்போது “கண்டேன் சீதையை” என்று இரண்டே வார்த்தைகளில் நறுக்குத் தெரித்தாற்போல் தெரிவித்தான். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாணியான குறுஞ்செய்தி அன்றே தொடங்கிவிட்டதுபோல் தெரிகிறது. அதைக் கேட்டவுடனே அங்கிருந்த அனைவரின் உற்சாகமும் கரைபுரண்டு ஓடியது. இலங்கையில் பார்த்த அனைத்தையும் விவரிக்கச் சொல்லியும், சீதை தனக்கு அனுப்பிய செய்தி என்ன என்றும் இராமர் கேட்டதற்கு அனுமன் எல்லா விவரங்களையும் கொடுத்தான். முக்கியமாக, தன்னை ராவணன் பிடியிலிருந்து இரண்டு மாதத்திற்குள் இராமரே மீட்க வேண்டும் என்றும், அதற்கும் மேல் ஒரு நாள் கூட தன்னால் வாழ விருப்பம் இல்லாததால் தான் தற்கொலை செய்துகொண்டுவிடுவதாகவும் சீதை சொன்னதாக அனுமன் சொன்னான். இறுதியாக சீதையைத் தான் பார்த்ததற்கு அடையாளமாக, சீதையே கொடுத்த நகையை இராமரிடம் அனுமன் கொடுத்தான். அனுமனின் வியத்தகு செயலை இராமர் புகழ்ந்து பேசி, சாதாரணமாக ஒரு வேலையாள் அவனுக்குக் கொடுத்த வேலையை மட்டும்தான் செய்வான்; அதற்கும் மேல் ஒன்றும் செய்யமாட்டான். இங்கோ அனுமன் சுக்ரீவன் கொடுத்த பணியான சீதையைத் தேடிக் கண்டுபிடித்ததும் அல்லாமல் அதற்கும் மேல் பற்பல வேலைகளை செய்திருப்பதாகப் பாராட்டினார்.

Hanuman Returns

யோ ஹி ப்⁴ருʼத்யோ நியுக்தஸ்ஸன் ப⁴ர்த்ரா கர்மணி து³ஷ்கரே |
குர்யாத்தத³னுராகே³ண தமாஹு: புருஷோத்தமம் ||  6.1.7 ||

ப⁴ர்த்ரா = யஜமானனால்
து³ஷ்கரே கர்மணி = கடினமான காரியத்தில்
நியுக்தஸ்ஸன் = ஏவப்பட்டிருப்பவனாக இருக்கையில்
யோ ஹி ப்⁴ருʼத்ய: = எந்த ஒரு வேலைக்காரன்
தத³னுராகே³ண = அன்புடன் (அதாவது ஈடுபாட்டுடன்)
குர்யாத்  = செய்வானோ
தம் = அவனை
புருஷோத்தமம் = புருஷோத்தமன்
(இதி), ஆஹு: = (என்று), கூறுகின்றனர்.

[யஜமானன் கொடுத்துள்ள ஒரு கடினமான வேலையை எந்த ஒரு வேலையாள் அன்புடன் ஈடுபாட்டோடு செய்வானோ, அவன் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவன்.]

இப்போதெல்லாம் நாம் தொழிற்சாலைகளிலும், அலுவலங்களிலும் “ஒப்புக்கொண்ட வேலையை மட்டும் செய்” என்றதொரு தொழிலாளரின் அறைகூவலைக் கேட்கிறோம். அதாவது ஒருவரால் முடியும் என்றாலும், அதற்கான நேரமிருந்தாலும் எழுத்துப்படி ஒப்புக்கொண்டதற்கு மேல் செய்யமாட்டோம் என்று சொல்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் எழுத்து மூலம் சொல்லியிருப்பதை அவர்கள் வேறு விதமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்திருக்கவேண்டிய வேலைக்குக் குறைவாகவும் செய்திருக்கலாம், அல்லது வேலை சரியாகச் செய்யப்படாததால், வேலை நடக்கும் இடத்தில் சொல்லப்படும் சில மாற்றங்களையும் அவர்கள் செய்யாமலும் தவிர்த்திருக்கலாம். உண்மையில் “ஒப்புக்கொண்ட” என்பதற்கு “எனக்கு ஒத்து வருவதாக” என்று அவர்கள் அனர்த்தம் கற்பித்துக் கொண்டதாகத்தான் இருக்கும்.

ஆனால் அனுமான் போன்றவர்களோ வேறு விதமானவர்கள். அவர்களுக்கு இதுதான் வேலை என்று கூடச் சொல்லவேண்டாம். என்ன தேவை என்று சொன்னாலே போதும். அதற்குண்டான வேலைகளை முடித்து வெற்றி கண்டுவிட்டு, அதற்கும் மேல் அது சம்பந்தமான வேலைகள் எது உண்டோ அதையும் செய்துவிட்டு வருவார்கள். சில சமயம் அவர்கள் ஒன்றுமே செய்யாததுபோல அமைதியாகவும் இருப்பார்கள். வேலையைச் சரிவர செய்யாமல் வரும் கூக்குரலா, செய்து விட்டு காக்கும் அமைதியா, எது நல்லது என்று இப்போது சொல்லுங்கள். அதனாலேயே, ஒரு வேலையை ஆரம்பிக்கும் முன் அனுமாரைத் தொழுது விட்டுச் சென்றால் வேலை வெற்றிகரமாக முடியும் என்பதோடு, அதற்கும் மேல் வேண்டியது எல்லாம் தானாகவும் நடக்கும்.

 

22.2 துன்பத்திற்கு இடம் கொடேல்

இரண்டு மாதத்திற்குள் தன்னை விடுவிக்க வேண்டும் என்ற சீதையின் நிபந்தனையும், இல்லையேல் தற்கொலை என்ற அவளது திட்டமும், இராமரை ரொம்பவே யோசிக்க வைத்தன. இலங்கைக்குப் போவதற்கு ஆழ்கடலைத் தாண்ட வேண்டும், அப்புறம் போர் புரிவதற்கு அனைத்து சேனையையும் அப்படி அங்கே அழைத்துப் போகவேண்டும்; இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்று அவர் கவலையில் ஆழ்ந்துபோகவே, சுக்ரீவன் அவரை உற்சாகப்படுத்துமாறு தன் யோசனையைத் தெரிவித்தான். கடலைத் தாண்டுவது ஒரு பெரிய காரியமல்ல என்றும், தன்னிடம் இருக்கும் ஒரு பகுதி வானர வீரர்கள் கடல் வழியே அக்கரைத் தீவுக்கும் இக்கரைக்கும் பாலம் கட்டுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும் சொன்னான். அந்தப் பாலத்தின் வழியே வானரர்களுடன் எளிதில் சென்று, ராவணனின் அரக்கர்கள் சேனையோடு மோதி வெற்றி காணலாம் என்றான். அதனால் நம் வெற்றியும், சீதையை மீட்பதும் கூடிய சீக்கிரம் நடக்கக்கூடிய ஒரு காரியமே என்றும் சொன்னான். மனத் தளர்வே வெற்றியை நோக்கிப் போவோர்களை சோர்வடையச் செய்யுமாதலால், இராமர் மனத் தளர்வு அடைவதில் லாபம் ஏதுமில்லை என்றான்.

தத³லம்ʼ விக்லவா பு³த்³தீ⁴ ராஜன் ஸர்வார்த²னாஸி²னீ |
புருஷஸ்ய ஹி லோகே (அ)ஸ்மின் ஸோ²க: ஸௌ²ர்யாபகர்ஷண: ||  6.2.15 ||

ராஜன் = அரசனே!
தத³லம் = போதும் இந்த (enough of it)
ஸர்வார்த²னாஸி²னீ = அனைத்து விஷயங்களையும் நாசம் செய்யக்கூடிய
விக்லவா பு³த்³தீ⁴ = குழம்பிய (அல்லது தளர்வுற்ற) புத்தி
அஸ்மின் = இந்த
லோகே = உலகில்
புருஷஸ்ய = ஒருவனது
ஸோ²க: ஹி = சோகமே (அவனது)
ஸௌ²ர்ய-அபகர்ஷண: = சூரத்தனத்தை அபகரிக்கிறது (அல்லது போக்க வைக்கிறது)

[தோற்றுவிடுவோமோ என்ற பயமே போர் புரிவதற்கு வேண்டிய மனோநிலையை இழக்கச் செய்கிறது.]

எந்தக் காரியம் என்றாலும், அதைச் செய்து அதில் வெற்றி காணவேண்டும் என்றால், ஒருவனுக்கு முதலில் அதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், அதில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையும் வேண்டும். பலப்பல சோதனைகளை எல்லாம் கடந்தவரும், மிகமிகக் கொடிய எதிரிகளையும் வென்றவருமான இராமருக்கே, சுக்ரீவன் இப்படி ஊக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்தாலே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்பேர்பட்ட அறிவும் ஆற்றலும் இருந்தாலும் ஒருவருக்குக் கஷ்ட காலம் என்று வரும்போது அவர் தன்னம்பிக்கை இழப்பதும், அவருக்கு அச்சமயத்தில் நண்பர்கள் உற்சாகப்படுத்துவதும் தேவை என்பது போலவும், இங்கு சுக்ரீவன் தன்னை ஒரு நம்பிக்கையுள்ள தோழனாகக் காட்டிக்கொள்வது இன்றியமையாததாகவும் இருக்கிறது.

 

22.3 நிலையில் பிரியேல்

ராவணனுக்கு அடி வயிற்றில் ஜன்னி கண்டுவிட்டது. அனுமான் தன்னந் தனியனாய் தனது மகத்தான தளபதிகளையும், பல வீரர்களையும் கொன்றதும், இலங்கை நகரையே தீயிட்டுக் கொளுத்தியதும், அவனைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதும், கடைசியில் அவன் அவர்களிடமிருந்து தப்பிப் போனதும், எல்லாமே ராவணன் வயிற்றில் புளியைக் கரைத்தது. அரக்கர்கள் பார்த்து ரசிப்பதற்கு என்ற ஒரு வேடிக்கையான தண்டனையாக அனுமனின் வாலைக் கொளுத்தப் போய், அது பூதாகாரமாக தங்களையே அப்படித் தாக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அதுவரை மனிதர்கள் முன்பும், வானரர்கள் முன்னிலையிலும் அரக்கர்கள் கைதான் ஓங்கும் என்றும், அவர்கள் பலமில்லாதவர்கள் ஆதலால் தங்களைத் திருப்பித் தாக்க மாட்டார்கள் என்றும்தான் ராவணன் நம்பியிருந்தான். ஆனால் இப்போதோ நிலைமை தலை கீழாகப் போய்விட்டதே; இராமர் விடும் சவாலைத் தன்னால் தாங்க முடியுமா என்ற சந்தேகமும் அவனுக்கு வர ஆரம்பித்து விட்டது.

இனிமேலும் அந்த எதிரிகளின் வலிமையைத் துச்சமாக மதித்து ஒதுக்கக்கூடாது என்று புரிந்துகொண்ட ராவணன், அவர்கள் கடலின் குறுக்கே பாலம் ஒன்றைக் கட்டி அதன் மூலம் அனைவரும் இங்கு போருக்கு வரக்கூடிய சாத்தியங்களைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தான். அப்படி ஏதேனும் நடந்தால் கடல் சூழ்ந்த தீவாய் இருப்பதால் இலங்கை ஒரு கோட்டை எனத் தான் இதுவரை நினைத்தது தவறாகிவிடும் என்றும், அவர்களால் போர் வரும் அபாயமும் இருக்கிறது என்றும் கணித்தான். அதனை எதிர்கொள்ளுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய போர்க்குழு ஒன்று அமைத்து, அவர்களுடன் ஆலோசனை செய்யவும் காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து, அக்குழுவின் கூட்டத்தையும் கூட்டினான்.

கூட்டம், ஆலோசனை என்று வந்துவிட்டாலே பலரும் பல விதமாகப் பேச முடியும் என்பதால் மூன்று விதமான முடிவுகள் எடுக்கப்படலாம்; எல்லோரும் ஒருமித்த கருத்தோடு ஒருமனதாக எடுக்கும் முடிவு, சிலபல எண்ணங்களும் பார்வைகளும் இருந்தாலும் ஒரே செயல் என்றதொரு முடிவு, ஒன்று சேரமுடியாத எண்ணங்கள் மற்றும் பார்வைகளால் தீர்மானமே எந்த முடிவுமே எடுக்கமுடியாத ஒரு நிலை. இவை அனைத்தையும் எடைபோட்ட ராவணன், தான் பேச ஆரம்பித்ததுமே ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதையே தான் விரும்புவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னான்.

ஐகமத்யமுபாக³ம்ய ஸா²ஸ்த்ரத்³ருʼஷ்டேன சக்ஷுஷா |
மந்த்ரிணோ யத்ர நிரதாஸ்தமாஹுர்மந்த்ரமுத்தமம் ||  6.6.12 ||

ஸா²ஸ்த்ரத்³ருʼஷ்டேன சக்ஷுஷா = சாத்திரக் கண்ணோட்டத்துடன்
ஐகமத்யமுபாக³ம்ய = ஒருமித்த முடிவு எய்தி(யவர்களாக)
மந்த்ரிண: யத்ர = மந்திரிகள் எங்கு
நிரதா: = ஈடுபட்டவர்களாக (இருக்கிறார்களோ)
தம்  = அந்த
மந்த்ரம்  = மந்திராலோசனையே
உத்தமம் = சாலச் சிறந்தது
ஆஹு: = (எனக்), கூறுவர்.

[அமைச்சர்கள் எல்லோரும் அவரவர் விதிகளின் படி எல்லாவித கருத்துகளையும் கலந்து பேசியதும், இறுதியில் ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதே நல்லது.]

ராவணன் ஒரு வலிமை வாய்ந்த அரசனாய் இருந்தாலும், அவன் ஒரு சர்வாதிகாரியாய் ஆட்சி செய்யவில்லை. போர் என்பது எல்லோரையும் பாதிக்கக்கூடிய விஷயமாதலால், அதில் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை; எல்லோரையும் ஆலோசித்துவிட்டே தொடரவேண்டும் என்று அவனுக்குத் தெரியும். இப்போது சீதையை அவன் இழுத்துக்கொண்டு வந்ததுபோல், முன்பு பலரது மனைவிகளைக் கவர்ந்து வந்திருக்கிறான். அப்போதெல்லாம் அவனது அரக்கர் படை அவனுக்குத் துணையாக நின்றிருக்கிறது. அதேபோல் இப்போதும் அவர்களின் துணையை நாடி அவர்களிடம் ஆலோசனை கேட்போம் என்றுதான் அவன் அவர்களது கூட்டத்தைக் கூட்டினான்.

போர் என்பது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசர அவசரமாகச் செய்யக்கூடிய காரியம் இல்லை. ஆற அமர யோசித்து அதன் பின்விளைவுகளையும், மாற்று வழிகளையும் தீர சிந்தித்து முன்னேற்பாடுகளைப் பலமுனைகளில் தீவிரப்படுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்து நின்ற அந்நாளைய கைகலப்புப் போரிலும் சரி, எவரையும் நேரிலேயே சந்திக்காமல் தொலை தூரத்தில் நின்று நவீன மின்னணு மற்றும் அணு ஆயுத தளவாடங்களோடு போரிடும் இந்நாளிலும் சரி, காலத்திற்கு ஏற்றபடி என்றுமே இத்தகைய ஏற்பாடுகளும், ஆலோசனைகளும் செய்வது மிகமிக அவசியம்.

 

22.4 போர்த் தொழில் புரியேல்

ராவணனுடைய அந்தப் போர்க்குழுவில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் அவன் விருப்பத்திற்கு ஏற்றபடி தலையாட்டும் பொம்மைகளாகத்தான் இருந்தார்கள். அவன் தன்னுடைய துவக்கப் பேச்சை முடித்ததும், அவர்கள் தங்கள் தங்கள் விசுவாசத்தைக் காட்டும் வகையில் எழுந்து நின்று ஆரவாரத்துடன் அவனுக்கு ஆதரவு தெரிவித்து ராமனையோ, வானரர்களையோ ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்றும், அவர்களை விட பெரிய சேனைகளையும், ஆயுத பலம் கொண்டவர்களையும் அவர்கள் எதிர்த்து நின்று தாங்கள் வெற்றிவாகை சூடியதைப் பெரிதுபடுத்திச் சொன்னார்கள். யக்ஷ அரசனான குபேரனை தோற்கடித்து வானில் பறக்கும் அவனது விமானத்தை ஒரு வெற்றிச் சின்னமாகக் கைப்பற்றியதைச் சொன்னார்கள். ராவணனும், எப்படி கீழுலகம் சென்று போகவதியையும் மற்றெல்லாப் பெண்களையும் இலங்கைக்கு கவர்ந்து வந்து அவர்களை இங்குள்ளவர்களுக்கு அடிமைப் பெண்களாக்கினான் என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார்கள். அங்கிருந்த வீரர்களான பிரஹஸ்தா, துர்முகா, வஜ்ரதம்ஷ்ட்ரா மூவரும், உடனே ராமனைப் போர்க்களத்தில் சந்திப்பதற்கு ராவணனிடம் அனுமதி கேட்டார்கள். வேறு எதுவும் வேண்டாம், தங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டே ராமன், லக்ஷ்மணன், சுக்ரீவன் மூவரையும் உடனே கொன்றுவிட்டு வருவோம் என்றும் உறுதியாகச் சொன்னார்கள்.

இப்படியாக ஒருவருடன் ஒருவர் போட்டிபோட்டுக்கொண்டு ராவணனுக்குப் பிடித்த மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த வாய்ச்சொல் வீரர்கள் நடுவே, ராவணனின் தம்பியான விபீஷணன் மற்றவர்கள் சொல்வதில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டி, போரைத் தவிர்க்க வேண்டிய காரணங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். தன் மனைவி அபகரிக்கப்பட்டதை எதிர்த்து மீட்பதற்காக இராமர் போராடுவது ஒரு குற்றமா என்று கேட்டுவிட்டு, எந்தப் பிரச்சினையிலும் அதைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் வேறெதுவும் சரியாக வரவில்லை என்றால், போருக்குச் செல்வது என்ற முடிவு கடைசியாக இருக்க வேண்டும் என்றும் சொன்னான்.

அப்யுபாயைஸ்த்ரிபி⁴ஸ்தாத யோ (அ)ர்த²: ப்ராப்தும்ʼ ந ஸ²க்யதே |
தஸ்ய விக்ரமகாலாம்ʼஸ்தான் யுக்தானாஹுர்மனீஷிண: ||  6.9.8 ||

ய: அர்த²: = எப்பொருள்
த்ரிபி⁴: உபாயை: அபி = (சாம, தான, பேதம், என்ற) மூன்று உபாயங்களாலும்
ப்ராப்தும்ʼ ந ஸ²க்யதே = பெறுதற்கு இயலாததோ
தஸ்ய = அவனுக்கு
விக்ர்மகாலான் தான் யுக்தான் = வீரத்தைக் காட்டி (போரிட்டுப் பெறுவதற்கான) நிலை
மனீஷிண: = அறிவாளிகள்
ஆஹு: = கூறுவர்

[(சாம, தான, பேத என்ற) மூன்று முறைகளில் எதுவுமே பயன்தராது என்று தோன்றினால் மட்டுமே (நான்காவதான தண்டம் எனப்படும்) போருக்குச் செல்வது என்ற முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.]

பாரத பாரம்பரிய வழிமுறைகளின்படி சாம, தான, பேத, தண்டம் என்ற இந்த நான்கும் வழக்கத்தில் உள்ளன. முதலில் சமாதானமாகப் பேசி இருவருக்குள் இருக்கும் பிரச்சினையை, மற்ற எவரும் அறியாமல், ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது ‘சாம’ வழி. வெறும் பேச்சளவில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முடியாது போனால் அதையே சிறிது மாற்றி, விடுவதையும் கொடுப்பதையும் ஏதாவது பொருட்கள் மூலம் சாதிக்க முடிந்தால் அது ‘தான’ வழி. அதுவும் வேண்டிய முடிவைக் கொடுக்கவில்லை என்றால் இருவர்க்கும் உள்ள பேதங்களை பலர் முன்னிலையில், அவர்களுக்குள்ள பேதங்களை பலரும் அறியுமாறு, ஒரு பஞ்சாயத்தோ, நீதி மன்றமோ அதன் முன் வாதாடி அவை மூலம் தீர்த்துக் கொள்வது ‘பேத’ வழி. இந்த மூன்று முறைகளையும் முயற்சி செய்து விட்டு அவை எதனாலும் தீர்வு காண முடியவில்லையோ அப்போது தண்டம் (கம்பு) முதலான ஆயுதங்களை எடுத்துப் போராடி, வெற்றி கண்டு அதன் மூலம் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண்பது ‘தண்ட’ வழி.

ஒன்று சாவு அல்லது பொருள், சுற்றம் அனைத்தையும் இழந்து சாகாமல் சாகும் வாழ்க்கை இவையிரண்டில் ஒன்றை அனுபவிக்கக் கட்டாயப்படுத்துவது வரை, பலரையும் பலவிதமான அவதிக்கு உள்ளாக்குவதுதான் போர் என்ற ஒரு தீர்வு. ஆள் மற்றும் பொருட் சேதத்தால் வரும் பலவிதமான இழப்புகள் தவிர, பொருட் செலவும் மிக அதிகமாகும் வழிமுறை என்பதால், போர் என்பது வேறெந்த முறையும் பயன் தரவில்லை என்றால் மட்டுமே ஓர் அரசன் இறுதியில் எடுக்கப்பட வேண்டிய முடிவாக இருக்கவேண்டும்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *