ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவைகளை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாக கொண்டு அதற்காக செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும். தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர். தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையிலும் கூட தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்து அதை தாழ்த்தப் பட்டவர்களிடையே பிரச்சாரமும் செய்தவர் நமது சுவாமிஜி. அவருடைய வாழ்க்கையிலிருந்து நிறைய செய்திகளை நாம் கற்றுக் கொள்வதற்கு இருக்கிறது.

தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிறிஸ்தவம் கல்வி கொடுத்து முன்னேற்றியது என்ற பிரச்சாரம் சகஜானந்தர் வாழ்வில் பொய்யாகிப் போனது. அவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி வழங்கியதற்கான காரணம் சகஜானந்தரின் வாழ்வின் மூலம் உலகுக்கு வெளிப்பட்டது. அமெரிக்கன் ஆர்க்காடு சமயப் பரப்பாளர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் அங்கு தீண்டாமையின் கோர முகத்தை கண்டார். மாணவர்களை வேற்றுமைப் படுத்தி பார்க்கும் கிறிஸ்தவர்களின் போக்கினை உணர்ந்தார். ஆயினும் தன் கல்வியில் கவனம் செலுத்தினார். பின்பு உயர்நிலைக் கல்வி பயில திண்டிவனத்தில் இருந்த அமெரிக்கன் கிறிஸ்தவ பள்ளியில் 1901ல் சேர்ந்தார்.

சகஜானந்தர் அப்பள்ளியில் பைபிளை ஒப்பிப்பதில் கிறிஸ்தவ மாணவர்களை விட அதிக ஆற்றல் பெற்றிருந்தார். இதனால் கவரப்பட்ட பாதிரிகள் அவரை கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுமாறும் கிறிஸ்துவத்தை தழுவுமாறும் அவரை வற்புறுத்தினர். அவர் ஏற்க மறுத்துவிட்டார். அப்போதுதான் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி கொடுப்பது எதற்காக என்பது வெட்ட வெளிச்சமாகியது. கிறிஸ்தவ மதத்தில் சேர மறுத்ததால் அவருக்காக கிறிஸ்தவ பள்ளி 1903ஆம் ஆண்டில் செலவு செய்த தொகையை திருப்பிக் கேட்டது. மேலும் அவர் விடுதியில் தங்கிப் படித்த தால் அறை மற்றும் உணவு தொகையென 60 ரூபாயை அவரது தந்தையிடம் வசூலித்தனர்.

இதனால் பள்ளியில் இருந்து விலகிவிட்ட சகஜானந்தர் தன் பெற்றோருடன் வேலை தேடி கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயலுக்கு சென்றார். அங்கு அவரின் ஆன்மீகத் தேடல் அதிகமாகியது. ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டும் பல ஆன்மிக நூல்களையும் பயின்றும் பல ஞானிகளிடம் கற்றும் தன்னுடைய ஆன்மிக அறிவையும் வேட்கையையும் அதிகப்படுத்திக் கொண்டார்.

திருமண எண்ணத்திலிருந்து அவர் மனம் விலகியது. 1907ம் ஆண்டு தன்னுடைய 17ம் வயதில் துறவு
நிலையை மேற்கொண்டார். சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் சென்று ஆன்மிகக் கல்வி கற்றார். இவர் பெற்றருந்த ஆன்மிக அறிவு, இறை உணர்வைக் கண்டு சிவப்பிரகாச சுவாமிகளே முனுசாமி என்ற இவரின் இயற்பெயரை சகஜானந்தம் என்று மாற்றி அழைத்தார்.

தேசப்பற்றாளர் வ.உ.சியிடம் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். விசார சாகரம், மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கைவல்யநவநீதம் மற்றும் கம்பராமாயணம் போன்ற நூல்களை ஆழமாகப் படித்தார். சீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் சீனிவாசாச்சாரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார். அதன் பிறகு ஞான வாசிஷ்டம், பகவத்கீதை, வால்மீகி இராமாயணம் மற்றும் பல சமஸ்கிருத நூல்களைக் கற்று தேர்ந்தார்.

1910ல் சென்னை மண்ணடியில் வாழ்ந்த ஆ.முருகேசப் பிள்ளை என்பவருடன் சிதம்பரம் வந்து சேர்ந்தார். 1916ல் அங்கு நந்தனார் மடமும் நந்தனார் கல்விக் கழகமும் தாழ்த்தப் பட்டவர்களின் கல்விக்காக ஆரம்பித்தார். மடமும் கல்விக் கழகமும் ஆரம்பிக்க பல்வேறு சமுதாய மக்கள் உதவினர். 6 சென்ட் இடமுள்ள மடம் மற்றும் 24 சென்ட் சுற்றியுள்ள நிலத்தைப் பெற வி.இராமசாமி ஐயர், இராமகிருஷ்ணப் பிள்ளை, திவான் பகதூர் கேசவப் பிள்ளை, டாக்டர் நஞ்சுண்ட ராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியார், தாசில்தார் இராமசாமிப் பிள்ளை முதலியோர் உதவினர்.

1916ல் தாழ்த்தப் பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நந்தனார் பாடசாலை பிரம்மஸ்ரீ என்.கோபாலசாமி ஐயங்கார் அவர்களால் திறக்கப்பட்டு முதன் முதலில் 20-5-1917ல் தண்டேஸ்வர நல்லூர் மாரிமுத்து என்பவரை ஆசிரியராக கொண்டு முதலில் 25 பிள்ளைகளோடு நடைபெற ஆரம்பித்தது.

மடாலயம், பாடசாலை, சத்திரம் முதலியவற்றின் போஷகர்களாக திவான்பகதூர் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், அட்வோகேட் ஜெனரல் எஸ்.சீனிவாச ஐயங்கார், சென்னை சுதேசமித்திரன் பத்திராபதிபர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், திவான்பகதூர் பி.கேசவப்பிள்ளை, டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், ஐகோர்ட் வக்கீல், சிதம்பரம் பிளீடர் இராமசாமி ஐயர், சிதம்பரம் தாலுக்கா போர்ட் பிரசிடென்ட்டும் முனிசிபல் சேர்மனும் கவுன்சிலருமான கே.வராகாச்சாரியர் முதலானோர் இருந்து வந்தனர்.

பாடசாலை கட்டிமுடிக்க 1918ல் அஸ்திவாரக் கல் திவான்பகதூர் ஜஸ்டிஸ் டி.சதாசிவ ஐயர் அவர்களால் நாட்டப் பட்டது. பாடசாலைக்கு என நிதி கொடுப்பவர்கள் தன்னுடைய விலாசத்திற்கோ அல்லது சுதேச மித்திரன் பத்திராபதிபர் ரங்கசயாமி ஐயங்கார் அவர்களுக்கோ அனுப்பினால் அவர்கள் உடனே எங்களுக்கனுப்பி விட்டு பத்திரிகையிலும் பிரசுரம் செய்வார்கள் என்ற விளம்பர அறிக்கை சுவாமி சகஜானந்தரால் கொடுக்கப்பட்டது.

1919ல் ராஜாஜி சிதம்பரத்திற்கு வருகைபுரிந்தார். சுவாமி சகஜானந்தர் அவரை நேரில் சந்தித்து மடமும், நந்தனார் பள்ளியும் தொடங்கப்பட்டதன் உண்மைக் காரணத்தை விளக்கினார். நிதி நெருக்கடியையும், இடத்தின் பற்றாக்குறையையும் விளக்கினார். சுவாமிகளின் பொதுப்பணியைப் புரிந்துகொண்ட ராஜாஜி நந்தனார் மடத்தின் மேம்பாட்டிற்குரிய நிலத்தை அரசு வழங்க வேண்டுமெனத் தென்னாற்காடு மாவட்ட கலெக்டருக்குக் கடிதம் எழுதினார். இதன் மூலம் 52 ஏக்கர் புறம்போக்கு நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் இலங்கை, பர்மா, இரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடம் உரையாற்றி கழகத்திற்கென நிதியைப் பெற்றார். இந்த உழைப்பின் காரணமாக 1927ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. மேலும் கல்விக் கழகம் வளர வேண்டும் என்பதற்காக 1939ல் அரசே நேரடியாக நடத்த வேண்டுமென சுவாமிகள் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அவரின் தலைமையிலேயே தொடர்ந்து நடத்திவர அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளியில் கடுமையான ஒழுக்க விதிகள் கடைபிடிக்கப்பட்டன. மாணவர்கள் காலையில் நீதி போதனை வகுப்பில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். கட்டாயம் மாணவர்கள் விபூதி அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தேவாரம் முதலிய பாடல்கள் போதிக்க ப்பட்டன. பள்ளிகளில், விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் சைவ உணவையே சாப்பிட வேண்டும் என்று போதித்து வந்தார். இதனை மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நந்தனார் விடுதியில் எப்போதும் சைவ உணவுதான் பரிமாறப் பட்டது. அரசாங்கம் நந்தனார் பள்ளியையும் விடுதியையும் எடுத்துக்கொண்ட போதிலும் சுவாமிஜியின் கருத்துப்படி சைவை உணவையே வழங்கிட சம்மதித்தது. இதை எழுத்துப் பூர்வமாகவே சுவாமிஜி எழுதி வாங்கிக் கொண்டார்.

எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார். வ.உ.சியின் சீடராக இருந்த சுவாமி பின்னாளில் வ.உ.சி.எழுதிய நூல்களான அகமே புறம், மெய் அறம் போன்றவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளது அவரின் புலமைக்கான சான்றாகும். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்ப் புலவர்களில் ஒருவராக கருதப்பட்டார். 1940ல் அண்ணாமலை பல்கலைக் கழகம் அவரை தமிழறிஞர் என்று போற்றி பாராட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் அறிஞர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. 1960ல் திருநெல்வேலியில் இருந்து கழக வெளியீடாக வெளிவந்த ‘தமிழ்ப்புலவர் வரிசை’ எனும் நூலில் இருபது தமிழ்ப் புலவர்களை அவர்களின் படைப்பாற்றல் கொண்டு வரிசைப்படுத்தி உள்ளனர். இதில் எட்டாவது இடத்தில் சகஜானந்தரின் பெயர் இடம் பெற்றுள்ளது அவரின் தமிழ்ப்புலமைக்கான சான்றாகும்.

சுவாமி சகஜானந்தர் அப்போதைய அரசியலின் தேவையைக் கருதி அரசியலில் நுழைந்தார். அன்று தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கென இயங்கிக் கொண்டிருந்த அனைத்திந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சபாவின் சார்பாக 1926 முதல் 1932வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பிராக இருந்தார். பின்பு காங்கிரஸ் கட்சியில் உறுப்பிராகி 1936-37லிருந்து 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். அரசியல் களத்தில் காந்தியடிகள், ராஜாஜி போன்றோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றிருந்தார். தான் காங்கிரசில் சார்ந்துள்ள போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது தீமை காங்கிரசால் ஏற்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே

சகஜானந்தர் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஆதி திராவிடர்’ எனக்கூறாமல் ‘ஆதி இந்துக்கள்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கோரியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தை மேற்கொண்டவர்களெனக் கருதப் படுவதால் அவர்களும் இந்துக்களே என்று கூறி சகஜானந்தர் தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப் பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார். (சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விஷயமாக ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டது. அப்போது சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தேவஸ்தான கமிட்டிகளிலும், நிர்வாக கமிட்டியிலும் இடம் ஒதுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும் சாதாரணமாக இந்து என்னும் பேதமிருப்பது போதாது. தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்கள் என்றிருத்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (ஏனென்றால் அக்காலகட்டத்தில் இந்து என்பதில் தாழ்த்தப் பட்டவர்கள் இல்லை, உயர்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே இந்து என்று வரையறுத்து வைத்திருந்தனர் வெள்ளையர்களும் உயர்த்தப் பட்ட சாதியினரும்).

1934ல் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். சாதிவெறி பிடித்தவர்கள் சகஜானந்தரைத் தாக்கினர். அது பெருங்கலகத்தில் முடிந்தது. தொடர்ந்து பிரச்சாரம், போராட்டங்களின் விளைவாக 1947 ஜூன் மாதம் 2ம் நாள் சகஜானந்தர் கோயில் நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார். நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்டவர்களுடன் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபட்டு நாங்களும் இந்துக்கள்தான், எங்களுக்கும் இந்த கோயிலில் நுழைய அனுமதி உண்டு என்பதை பறைசாற்றினார்.

1938ல் கொண்டு வரப்பட்ட மலபார் கோயில் நுழைவு மசோதாவில் கலந்து கொண்டு பேசும் போது, ”தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்று எந்த வேதமும் சாஸ்திரமும் சொல்லவில்லை, சில மடாதிபதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை விட தாழ்த்தப் பட்டவர்களுக்கே கோயிலுக்குள் நுழையும் உரிமை அதிகமாக இருக்கிறது. கோயிலில் சுவாமி இருக்கிறது என்றும் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் வைத்திருப்பதால் வாஸ்தவத்தில் இந்து மதத்தில் ஏன் மக்களாகப் பிறந்தோம் என்று துக்கம் அடைந்து வருகிறோம். சீக்கிரம் இதைச் சட்டமாகச் செய்து நடைமுறையில் வந்தால் அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்று பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களின்போது தில்லை நடராசர் தேரில் பவனி வருவது வழக்கம். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதியில்லை என்னும் நிலை இருந்தது. இதைப் பார்த்த சகஜானந்தம் அதைப் போலவே ஒரு நடராசர் தரிசனத்தை தாழ்த்தப் பட்டவர்களைக் கொண்டே நடத்தினார். நந்தனார் மடம் மற்றும் கல்விக் கழக சீடர்களுடன் பெரிய இசைக்குழுவை உருவாக்கி அவர்களை தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசையுடன் பாடி மகிழ்ந்திடச் செய்தார். இது அரிதினும் அரிதான, மறக்க முடியாத, மிகவும் அனுபவித்து சுவைக்க கூடிய ஒரு நடராசர் தரிசனமாக தாழ்த்தப் பட்டவர்களுக்கு அமைந்தது. தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் தாங்களும் இந்துக்கள் என்பதை இவ்வாறு ஆழமாகப் பதியச் செய்தார்.

நந்தனார் மடத்தில் தமிழ் மாதம் மார்கழியில் திருப்பவை, திருவெம்பாவை மாநாட்டில் வழக்கமாக கருத்துரைகளையும் கருத்தாடல்களையும் ஏற்பாடு செய்து மக்களுக்கு அக்கருத்துக்களை பதிய வைப்பார். திருப்பவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்விய பிரபந்தம், இராமாயணம் ஆகியவற்றிலிருந்து உரையாற்றிட அறிஞர்கள் விற்பன்னர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களை கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயம் சார்ந்த எல்லா விழாக்களையும் மிகுந்த பிரயாசையோடும் பக்திச்சுவை செறியும் வனப்போடும் நந்தனார் மடத்தில் நடத்திக் காட்டுவார். இவை எல்லாமே தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்களே என்பதை தாழ்த்தப் பட்டவர்களும் மற்றவர்களும் உணரவேண்டும் என்பதற்காகத் தான்.

அரசியல் களத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய கூட்டுத் தொகுதி, தனித் தொகுதி என்பவற்றில் தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள், அதனால் தாழ்த்தப் பட்டவர்கள் எதைத் தேர்ந்தேடுக்க வேண்டும் என்பதை ஒரு இந்துவின் மனநிலையில் இருந்து தேர்தெடுத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.

சுவாமி சகஜானந்தர் கூறுகிறார்:

‘நம் மக்கள் அறிய வேண்டுவது ஒன்று உண்டு. அதுதான் கூட்டுத் தொகுதிக்கும் தனித் தொகுதிக்குமுள்ள வேற்றுமை.

கூட்டுத் தொகுதி யென்பது இந்து மதத்தவர்களாகிய உயர்வகுப்பினரினின்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரினின்றும் தேர்ந்து கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாம். தனித்தொகுதி யென்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரினின்று மாத்திரம் தேர்ந்துக் கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாகும். நாம் இந்து மதத்தவர்கள். ஆதலால், இந்து மக்களனைவருக்கும் பொதுவாகவுள்ள ஆலயப் பிரவேச உரிமை முதலியவைகள் எங்களுக்கும் வேண்டுமென்று வாதிட்டுப் பெற வேண்டியவர்களாயிருக்கிறோம். இதனால் நாம் கூட்டுத் தொகுதியை மேற்கொண்டாற்றான் அவற்றைக் குறித்து அவர்களிடம் வாதிட உரிமையுடையவர்களாவோம். இந்து மதத்தவர்களினின்றும் பிரிந்து, தனித்தொகுதியில் நின்று அவ்வுரிமைகளைப் பெற வாதிட வாயேது? ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் வேண்டான் என்போர் இருப்பாராயின், அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்லரென்று சொல்லி, பிறமதம் புகட்டும். ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் தாழ்த்தப் பட்ட மக்களாகிய நமக்குக் கொடுக்கக் கூடாதென்னும் வஞ்சகமுடைய உயர் வகுப்பினரிற் சிலர் நம்மைத் தனித் தொகுதியில் நிற்கத் தூண்டுகின்றனர். இவர்களுக்கு அஞ்சி விலக வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.’

இவ்வாறு, சுவாமி சகஜானந்தர் தனக்கு சமயம் ஏற்பட்டபோதெல்லாம் தான் ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

சுவாமி சகஜானந்தரின் தொண்டு யாருக்காக என்பதை பற்றி அப்போது வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து நமக்கு வெளிப்படுகிறது.

‘…வித்யா நிலயங்கள் நிறுவி இந்திய ஏழை மக்களாகிய ஆதிதிராவிடர் பலருக்கு இந்துமத உணர்ச்சி செழிக்க அறிவுச்சுடர் கொளுத்தி வருகின்றனர். இவர் செய்யும் பணிக்கு அரசாங்கத்தோரும், அரசியல் வாதிகளும், தேசபக்தர்களும், மதத் தலைவர்களும் ஒருங்கே துணை நின்று அவரது முயற்சி கைக்கூடும்படி செய்ய முந்துதல் வேண்டும். இந்து மடாதிபதிகள் சிலர், ஏன் பலர், தங்கள் களியாடல்களிலும், சிலர் போலி வேதாந்தத்திலும் மருண்டு இந்து மதம் நாட்குநாட்டேய்ந்து பிற உயிரற்ற மதங்கள் செழித்து கொழித்து வருவதையறியாது கிணற்றுத் தவளைகள் போல வெறும் வறட்டுப் பல்லவி பாடிக் கொண்டிருப்பதுமின்றி கால நிலையறிந்து அதற்கியைந்தன செய்யும் பிறரையும் அலக்கணுறச் செய்து வருகின்றனர். இவர்கள் திருந்துங் காலமே இந்துமதம் உயிர்த்தெழுங் காலமாகும்.

இத்தருணத்து சுவாமி சகஜாநந்தா போன்றோர்க்கு உதவி செய்வது இந்து மதத்திற்கு – இந்தியற்கு – பாரத தேவிக்கு உதவி செய்வதாகும்…’

என்று ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை ஊழியன் இதழ் 20-10-1925ல் வெளியிட்டது.

இதுமட்டுமல்லாமல் கோயில் சொத்து கோயிலுக்கே என்பதில் தீவிரத்துடன் இயங்கி இருக்கிறார் சுவாமி சகஜானந்தர். அவர் கூறுகிறார் :

‘…வெள்ளைக்காரன் போகிற பரியந்தம் கோயிலில் கை வைக்கவில்லை. காங்கிரஸ் அரசு வந்து எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் கோயில் முதலியவைகளைப் பாருங்கள். எவ்வளவு பணம் செலவு செய்து அவைகளைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மாதிரி காரியங்களை இப்போது நாம் செய்யப் போகிறோமா? இருக்கிறவைகளை வைத்து நடத்த வேண்டும். அதுதான் நியாயம். அதனால் தாங்களும் ஏழைகளுக்குக் கொடுத்தும் சாப்பிடுகிறார்கள். இனாம் தாரி நிலங்களையும் ஜமீன் நிலங்களையும் பங்கிட்டு ஏழைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் கோயில் சொத்து பொதுச் சொத்து. அதில் கையை வைப்பது அவ்வளவு நியாயம் இல்லை. உடலையும் ஓம்ப வேண்டும், உயிரையும் ஓம்ப வேண்டும். உடலுக்கு உயிரா, உயிருக்கு உடலா? அநேகருடைய சொத்துக்களைத் திருவடியில் சமர்ப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் கோயில் நிலங்களைப் பொறுத்து ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்’

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62)

இன்று இந்து இயக்கங்கள் என்ன சொல்கின்றனவோ அதை 1947லேயே கூறி, அதற்காகப் பரிந்து பேசியிருக்கிறார் சகஜானந்தர் எனும்போது அவர் கோயில்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை உணர முடிகிறது.

திராவிடக்கழக எதிர்ப்பு

புத்தக சாலை சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஆதரித்து பேசும்போது நமது இந்து மதத்திற்கும், கலை அபிவிருத்திக்கும் முக்கியமாக இந்த பில் கொண்டுவரப் பட்டுள்ளது போற்றத் தக்கது என்று கூறினார். மேலும் புத்தகசாலை எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் தன் கருத்தை கூறினார்.

”பெரிய புராணம், பாரதம், இராமாயணம், இராமகிருஷ்ணர் பரமஹம்சர் சரித்திரம், மகாத்மா காந்தியின் சரித்திரம், அவர்களுடைய உபதேச மொழிகளையும், திருக்குறள், பகவத்கீதை, ஆகம சாத்திரங்கள், திருப்பாவை, குமரேச வெண்பா, ரிக், யஜூர், சாம, அதர்வண வேத புத்தகங்களையும், பைபிள், குரான் போன்றவைகளையும் வைக்க வேண்டும்” என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, ”மதத் துவேஷம், ஜாதித் துவேஷம் உண்டாகக்கூடிய பிரசுரங்களையும், புத்தகங்களையும் வைக்கக் கூடாது. அவைகளால் சாஸ்திரங்கள் மீது பாமர மக்கள் துவேஷம் கொண்டு ரொம்பவும் கெட்டு விட்டது. அந்த மாதிரி நூல்களை மாத்திரம் இந்த லைப்ரரிகளில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது இந்த நாட்டிற்கு ஒருபெரிய அணுகுண்டைப் போலாகி விடும். சமூகத்துக்குத் துவேஷமுண்டாக்கக் கூடிய நூல்களை வைக்க கூடாது. அதோடு கூடக் கருப்புச் சட்டைக் காரர்களுடைய குடியரசு முதலிய பத்திரிகைகளைப் போடுகிறார்கள். அது குழந்தைகளையும் ஊரையும் கெடுத்துவிடுகிறது. அது அநியாயமாக இருக்கிறது. இதனால் நம் ஹரிஜனங்களிலும் பலர் விபூதி, திருமண் முதலியவைகள் இட்டுக் கொள்வது கிடையாது. இவர்களைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது” என்றார். கடைசியாக ”எந்த மத சம்பந்தமாக இருந்தாலும் தெய்வ புத்தியுள்ளதாகவே இருக்க வேண்டும். துவேஷத்தை உண்டு பண்ணக்கூடிய நூல்களை வைக்க கூடாது. பொதுஜனங்களிடம் நாஸ்திகம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியமே” என்றும் வலியுறுத்தினார்.

1948 பிப்ரவரி 21ம் தேதி பெரியாரின் இராமாயணத்தை எரித்தல், ராமனது சிலையை செருப்பால் அடித்தல் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார். விநாயகர் சிலை உடைப்பையும் எதிர்த்தார். அதேபோல எம்.ஆர்.ராதா நடித்த கீமாயணத்தில் இராமனை இழிவு படுத்தியதையும் கண்டித்தார். காந்தியின் ”ரகுபதி ராகவ ராஜா ராம்” என்ற பாடலை இழிவுபடுத்தி பேசியதையும் கண்டித்தார். அரசாங்கத்திடம் இத்தகைய செயல்கள் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றன, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார். ஒரு தனிப்பட்ட மனிதருக்கு அளிக்கப்படும் சுதந்திரமானது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக் கூடாது என்று சொன்னார். இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் பேசும்போது கடும் எதிர்ப்பு வந்த்து. அதை அஞ்சாமல் எதிர்கொண்டார். நாமதாரியாக சட்டமன்றம் சென்ற ஒரே தாழ்த்தப்பட்ட சமுதாய சீர்திருத்தவாதி இவர் ஒருவரே.

ஈ.வெ.ரா தஞ்சை விவசாயிகள் கொடூரமாக எரிக்கப் பட்டபோது (1968-69) அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்று நமக்கு தெரியும். அவர் ஒரு பிற்படுத்தப் பட்டவரின் மனநிலையிலேயே அப்படி பேசியிருக்கிறார். அதாவது கொன்றவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லையே? ஆனால் இதே பிரச்சினைக்காக 1951லேயே சுவாமி சகஜானந்தர் சட்ட மன்றத்திலேயே தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

சுவாமி சகஜானந்தர் கூறுகிறார் :

‘இன்னும் கூலி கொடுக்கும் விஷயத்தில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டுகள் கலகம் செய்யவில்லை. பயிரிட்டு விட்டு சாப்பாட்டிற்குக் கூலி சரியாகக் கிடைக்காத காரணத்தால் தான் விவசாயிகள் மிராசுதார்களிடத்தில் சண்டை போடுகிறார்கள். அதனால் தான் கம்யூனிஸ்டுகள் என்று அடக்குகிறார்கள்.

ஆகையால் கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்காரர்களிட உள்ள நிலத்தை எடுத்துப் பங்கிட்டுக் கொடுக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதோடு விவசாயிகளுக்கென்று ஒரு சம்பள போர்டை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.’

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்IX, 1951, மார்ச் 2, பக் 390)

சுவாமி சகஜானந்தரின் இந்தப் பேச்சைப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஈவெராவின் பச்சை துரோகப் பேச்சை விமர்சிக்கத் தோன்றுகிறதல்லவா?

கிறிஸ்தவ மதமாற்ற எதிர்ப்பு

சுவாமி சகஜானந்தர் தனக்கு ஏற்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற தூண்டுதல்களைக் குறித்து உணர்ந்தே இருந்தார். இந்துக்கள், முக்கியமாக தாழ்த்தப் பட்டவர்கள் மதம் மாறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மிஷநரிகளின் மதமாற்ற செயல்களை அறிந்தே இருந்தார். ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்போது,

‘சிதம்பரத்தில் இந்து ஆதிதிராவிடர்களால் நடத்தி வரும் அனாதாலயத்தில் 44 பேருக்கு போர்டிங்கு நடத்தினர். அரசாங்கத்தார் அதற்குப் பையன் ஒருவனுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுத்துள்ளார்கள். இது எந்தக் கணக்குப்படி கொடுத்தார்களென்று புலப்படவில்லை. ஆனால் மிஷனெரிகளுக்கு வாரி வாரி கொடுத்து வருகிறார்கள். மிஷனெரிகளுக்கு கொடுத்து வரும் பணம் தாழ்த்தப் பட்டவர்களைக் கிறிஸ்தவராக்குவதற்குப் பயன்படுகிறது. …..கிறிஸ்தவ போர்டிங்கில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் சேர்வதால் முதலில் மாணவன் சேருகிறான். பிறகு அவன் தாய் தந்தையர் அவன் மூலம் சேருகிறார்கள். அப்படியே தொடர்புள்ள பலர் சேருகிறார்கள். அதனால் ஆதிதிராவிடச் சமூகத்திற்குப் பெரிய நஷ்டம் உண்டாகிறது.

தாழ்த்தப் பட்டவர்களின் பேரால் மிஷனெரிகளுக்குப் பணங்கொடுக்க கூடாது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கென்றே கொடுக்கட்டும். அது எங்களுக்குச் சம்மதம். இந்த மாகாணத்தில் சுமார் ஏழாயிரம் பேர்களுக்கு அரசாங்கத்தார் போர்டிங் கிராண்டு கொடுத்து வருகிறார்கள். அதற்காக இரண்டு லட்சங்கள் செலவழிகின்றன. அவற்றில் பெரும்பாலும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்குப் போகிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பயன்படுவதில்லை. ஆனால் ஏற்கனவே கொடுத்து வரும் பணத்தை நிறுத்தும்படி யான் சொல்லவில்லை. நமது மாண்புமிக்க மந்திரியவர்கள் இந்த வருஷம் ஐம்பதினாயிர ரூபாய்கள் அதிகப் படுத்தியுள்ளார்கள். அதிகப் படுத்தியுள்ள அந்த ஐம்பதினாயிரத்தைத் தாழ்த்தப் பட்ட இந்து ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிவைத்துவிட வேண்டுகிறேன். மிஷனெரிக்கு மிஷன் மூலமாய் உதவியுண்டு.’

என்று கூறினார் (1933 மார்ச் மாதம் 21ம் தேதி பேசியது. எண் LXVI, பக் 539-543).

1948 மார்ச் 1ம் தேதி பேசும்போது

‘சேரிகளில் பள்ளிக்கூடங்கள் வைத்தால் அதற்கு கிறிஸ்துவ ஆசிரியர்கள் நியமிக்கிறார்கள். அப்படி நியமிப்பதால் அவர்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி விடுகிறார்கள். அது கூடாது. இன்னும் அங்கே சுயமரியாதைக் காரர்கள் வந்து பள்ளிக்கூடத்தை நாசமாக்கி விடுகிறார்கள். ஆகையால் ஆசிரியர்களை நியமிக்கும்போது யோக்கியமுள்ளவர்களாகப் போடவேண்டும். இவைகளை தடுக்க இந்து ஹரிஜன ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும்.’ என்று கூறினார்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டது என்ற பொய்ப்பிம்பத்தையும் உடைத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.

‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பாடுபட்டார் ஜஸ்டிஸ் கட்சியார். அப்போது நாம் அவர்களோடு ஒத்துழைத்திருக்கிறோம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலிருந்த போது அவ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாண்டதில்லை என்பது கவனிக்கத் தக்கது.’

என்று கூறுகிறார்.

சுவாமி சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் அயராது பாடுபட்டிருக்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கும், இந்து சமயத்திற்கும் எதிராக யார் இயங்கினாலும் அதை எதிர்த்து செயல்பட்டு இருக்கிறார்.

சுவாமி சகஜானந்தர் ஒரு உண்மையான இந்து, மாபெரும் இந்து சமுதாயச் சிற்பி, ஆன்மீக அருளாளர், தன்னலம் கருதாமல் உழைத்த சமுதாயத் தலைவர் என்பதை நினைவில் கொண்டு அவரைப் போற்றுவோமாக.

20 Replies to “ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்”

  1. \\ உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் \\

    நீங்கள் யாரை சொல்கிறீர்கள். பிரிட்டிஷ்காரனுக்கு கூலி வேலை பார்த்த முட்டாள்களையா? அரசு பதிவேட்டின் படி கருணாநிதி கூட ஹிந்து தான். அதற்காக அவருடைய கருத்துகளை ஹிந்துவ பிரதிபல்லிப்பாக ஏற்க முடியுமா?

    ஹிந்து பத்திரிக்கை என் ராம்க்கும் நீங்கள் குறிப்பிட்ட ஹிந்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  2. அருமையான கட்டுரை. பிராமணர்கள் தாழ்த்தப்பட்டவருக்கு எதிரியாக இருந்ததில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஏற்கனவே நம்ம வாத்தியார் பாரதி தன் கட்டுரையில் கூறியிருக்கிறான். கிருத்துவ பாதிரிமார்கள் செய்த சதி செயல் என்பது தெளிவாகிறது.

    பாரதி சொன்ன ஐந்து வாசல் கோட்டையை பலப்படுத்தும் நாள் வந்துவிட்டது!!!!

  3. அற்புதமான கட்டுரை ம.வெங்கடேசன். சுவாமி சகஜானந்தர் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தகவல்கள் அறிந்ததில்லை.

    துறவியான போதும், தலித் உரிமைகளூக்கான போராட்டத்தைக் கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகி செயல் பட்டிருக்கிறார். சைவ, வைணவ வேறுபாடுகள் இன்றி தலித்களிடையே இந்து சமயப் பண்பாடும் கலாசாரமும் வளர்ந்திட அருமையான முயற்சிகள் எடுத்திருக்கிறார். கல்வியை சமூக விடுதலைக்கு வழி என்பதனை உணர்ந்து அதற்கு முக்கியத் துவம் அளித்திருக்கிறார். மாபெரும் அறிஞராகவும், மக்கள் பணியாளராவும் பன்முக ஆளுமையாக இயங்கியிருக்கிறார்.

    பல விஷய்ங்களில் எவ்வள்வு தீர்க்கமான, தெளிவான அரசியல் அணுகுமுறையைப் பின்பற்றியிருக்கியிருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கிறது..

    தங்கள் விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி.

  4. தமிழ் ஹிந்துவில் நான் வாசித்த மிக சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. ம. வெங்கடேசன். மிக்கக நன்றி. நாராயண குரு போன்று தமிழ்நாட்டில் இல்லையே என்று நினைத்திருந்தேன். இந்த கட்டுரை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சகஜானந்தர் கல்வி கூடம் ஆரம்பிக்க மற்ற ஜாதியினரும் உதவி இருக்கின்றனர் என்று அறியும் போது ஒரு இந்து மதத்தவனாக மிக மகிழ்கிறேன். சகஜானந்தர் பிரபலமடைந்திருந்தால் சாதி உயர்வு தாழ்வு மறைந்திருக்கும் என்று தோன்றுகிறது. நம் துர்அதிர்ஷ்டம் வெறுப்பினை விதைத்து தமிழ் சூழலை நாசபடுத்திய ராமசாமி பிரபலமடைந்தது.

  5. திரு ம வெங்கடேசனின் இந்த கட்டுரை வெகு காலம் எல்லோராலும் பேசப்படும். அவர் தொண்டு வாழ்க, மேலும் வளர்க. அவருக்கு எல்லாம் வல்ல அன்னை பராசக்தி என்றும் துணை இருப்பாள்.

  6. அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றி அற்புதமாக எழுதிய ஸ்ரீ வெங்கடேசன் ஸ்ரீசகஜானந்த சுவாமிகளைப்பற்றியும் அருமையாக எழுதியுள்ளார். இந்தகட்டுரையையும் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். கட்டுரையைப்படிக்கும் பொழுது அந்த பெரும் மஹாத்மாவை கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்கதோன்றுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, சமூக பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த ஸ்ரீ சகஜானந்த அடிகள் ஹிந்து சமயத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டதை க்கட்டுரை சிறப்பாகவே கூறியுள்ளது. அடிகளின் பணிக்கு பிராமணர்களும் மற்றவர்களும் துணை நின்றதையும் காட்டுகிறது.
    இதில் ஒரு செய்தி விடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் சைவராக இருந்த ஸ்ரீ அடிகள் ஒரு சில சாதியவாதி சைவர்களால் வைணவத்தை ஏற்றார் என்பது அது. ஸ்ரீ அடிகள் வைணவராயினும் சைவத்தின் மீது த்வேசமின்றி வாழ்ந்தார். மாணவர்கள் சமய நம்பிக்கையுடன் விளங்க வழிவகுத்தார்.
    தொடர்ந்து இது போன்று ஆய்ந்து எழுதுங்கள்
    சிவஸ்ரீ

  7. அற்புதம்! மிக நல்ல பதிவு! சுவாமி ஸ்ரீ சஹாஜானன்தரை பற்றி அறிந்திருந்தாலும் இவ்வளவு விரிவாக அறிந்ததில்லை! கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! இத்தகைய பெரியோர் சமூஹத்தில் தர்ம சார்புடைய யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறினால், மறுப்பவர் உண்டோ! அருளப்பாடு இட்டு ஆதரிக்க காத்திருக்கிறோம்! வழி வழி வந்த வழக்கம் ஒன்று கூறினாலும், சமூஹம் ஒரு விஷயத்தை இத்தகைய பெரியோர் வழி பற்றி ஏற்றலின், நாம் அதற்கு தடை சொல்வோமோ? உண்மையில் நமது சென்றைய நெடிய வாதத்தின் பதில் இந்த பதிவில் அன்றோ அரிதிஇட்டிருக்கிறது!

    ….//இதில் ஒரு செய்தி விடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் சைவராக இருந்த ஸ்ரீ அடிகள் ஒரு சில சாதியவாதி சைவர்களால் வைணவத்தை ஏற்றார் என்பது அது. ஸ்ரீ அடிகள் வைணவராயினும் //…

    ஆரம்பித்து விட்டார் திரு விபூதி! சுவாமி நீர் வேண்டும் ஒன்றை இருந்ததை திரிக்காது, உம்முடைய வழி எது அதில் ஏகுதல் நன்று! உண்மையில் தமிழகத்தில் ‘மேன்மை கொள் சைவ நெறி’ என்பது என்ன என்பதை, இத்தகைய ஆர்வமேலீடாளர்கள், உணர்ந்து கொள்ள வேண்டும்! வீர சைவம், காபலிகம், அஹோரம், காச்மிர சைவம், கவ்தமம் போன்றவற்றை தெரிந்து கொள்ளட்டும்! திரு விபூதி அவர்கள் ‘திருவருட்பாவயாவது’ படித்து தெளியட்டும்! எடுத்த இடத்தில எல்லாம் தாந்தோன்றியது போலே எழுதுதல், ஒரு ஆபிரகாமியர் தன்னை அடிகடி அப்பெயர் கொண்டு அடையாள படுத்துதல் போல இருக்கிறது!

  8. ஸ்ரீ மித்ரன்
    அடியேன் தெளிவாகவே இருக்கிறேன். என்னுடைய நோக்கமும் வழிமுறையையும் தெளிவானவை வெளிப்படையானவை. ஸ்ரீ சகஜானந்த சுவாமிகள் வாழ்வின் நான் குறிப்பட்ட சம்பவம் நடந்தது உண்மை. விபூதி அணிந்திருந்த ஸ்ரீ சகஜானந்த அடிகள் பின்னர் திருமண் அணிந்தார். இது ஸ்ரீ பாபாசகேப் அம்பேத்கர் பவுத்தம் தழுவியதை ஒத்தது என்வே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததே. இல்லை என்றால் அது நடக்கவில்லை என்று எப்போதும் ஆதாரத்துடன் மட்டுமே கட்டுரை எழுதும் ஸ்ரீ வெங்கடேசன் மறுக்கட்டும். உண்மை அறியாமல் தாங்கள் செய்யும் வெற்று போதனைகள் எமக்கு வேண்டாம். எமக்குவேண்டியது ஆதாரங்கள். அவையில்லாத வெறும் தூற்றுதல்கள் கண்டு யாம் எள்ளி நகையாடுவதன்றி வேறு என்ன செய்ய.
    தமிழகத்தின் சமய சமூகவரலாற்றை கற்பவர்கள் சைவர்களாயினும் கூட தத்துவார்த்த முறையில் சமத்துவம் இருந்தாலும் நடைமுறையில் சைவர்களைக்காட்டிலும் வைணவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து சென்றது உண்மை. இன்று இந்த நிலையில் மாற்றம் ஒரளவிற்குக்காணப்படுகிறது. ஆனாலும் இன்னும் சைவர்கள் சாதிகடந்த சமத்துவத்தைப் பின்பற்றவேண்டும் என்பதே சைவனாகிய அதிலும் வீரசைவனாகிய அடியேனின் வேட்கை. தவறுகளை மறைக்காமல் ஒத்துக்கொண்டு அவற்றை திருத்திக்கொள்ளும் நற்பண்பு நமக்குவேண்டும். வெறும் சப்பைக்கட்டுகளால் எந்தப்பயனும் இல்லை.
    சிவசிவ
    சிவஸ்ரீ

  9. திருச்சியில் E.V.R.பெரியார் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் விலைவாசி ஏற்றம் குறித்து கேட்டபோது பெரியார் அவர்கள் கூறிய பதில் “பறச்சி எல்லாம் ஜாக்கெட் போடா ஆரம்பிச்சிட்டா, பள்ளன் எல்லாம் அரிசி பருப்பு சாப்ட ஆரம்பிச்சிட்டான் அதனால் விலைவாசி ஏறாம என்ன செய்யும்”. ஆனால் இந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் மறுநாள் வரவில்லை. காரணம் இப்படிப்பட்ட வார்த்தைகள் பெரியாரின் வாயில் இருந்து வந்தது என்று தெரிந்தால் நாடு கொந்தளிக்கும் என்று இந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது.

  10. அந்தச் செய்தியெல்லாம் வெளியே வந்து கண்டனம் எல்லாம் எழுந்தது. அன்பு. பொன்னோவியம் கட்டுரையைப் படித்தால் தெரியும்.
    -மலர்மன்னன்

  11. @Thomas Kumar

    தாங்கள் கூறிய ஈ.வே.ரா.வின் பேச்சு, திரு. மலர் மன்னன் ஐயா சொல்வதைப்போல், அன்றைய தலித் தலைவர்களால் கண்டிக்கப்பட்டது. திரு. அன்பு.பொன்னோவியம் அவர்களின் ’உணவில் ஒளிந்திருக்கும் சாதி’ நூலில் இதைப் பற்றி விரிவான கட்டுரையே இருக்கிறது.

    சுவாமி சகஜானந்தரைப் பற்றிய விரிவான பதிவை அளித்த திரு.ம.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.

  12. வீர வைஷ்ணவர்களும், வீர சைவர்களும் சகிப்புத் தன்மையை காட்டி இந்து மத ஒற்றுமைக்கு உதவுமாறு 21-ம் நூற்றாண்டிலும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

  13. I was residing in Chidambaram during 2006 to 2008. My residence was @ Vibeeshanapuram near Nandanar School. The present condition of the school is very pathetic; it was not properly maintained. During 2007 or 2008 I got heard from the localites that Nandanar School had very poor passing percentage in SSLC.

    What kind of a broader outlook Sagajanandar would have had to start an educational institution for the better future prospects of Harijan people? People of successive generation could have definitely taken it to a next level but they have not done it. After reading this article I really feel sorry for those who dont realize the value of such a school.

    During my next visit to Chidambaram, I will definitely go to that School and talk to the students about the history of Sagajanandar and the importance of the school maintenance.

    Thanks for this article.

  14. சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா அவர்களைப் பலமுறை தரிசிக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றவன் நான். அவரது திருக் கரங்களால் அளிக்கப்பட்ட உணவை உண்ணும் பாக்கியமும் பெற்றவன். ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் ஆகிய திருநாட்களில் நந்தனார் பள்ளி மாணவர்களை அவர் நான்கு ரத வீதிளிலும் கம்பீரமாக வழி நடத்திச் சென்று தரிசனம் செய்விப்பது கண்கொள்ளாக் காட்சி. மத மாற்றிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர் அவர். மத மாற்றிகளுக்கு எதிராக பிஹார் (சோட்டா நாக்பூர் பகுதி), மத்யப் பிரதேசம் (குராஸியா மாவட்டம், சிர்மிரி முதலான பகுதிகள்) ஆகிய இடங்களில் வனவாசிகளுக்கு உறுதுணையாகத் தனி நபராக எதிர்த்து நிற்கும் துணிவை எனக்குத் தந்தவர் அவரே.
    -மலர்மன்னன்

  15. சுவாமி சகஜானந்தா அவர்களை போல பல சகஜானந்தாக்கள் மேலும் எதிர்காலத்தில் உருவாவார்கள்.

  16. Dear all,
    I want to this kind of positive story, so please recommend some good book to me,
    Especially from Ma.Vengatesan and others,

    please inform me to 8762233801

    thanks & Regards,
    Devarajan

  17. திரு. ஜகஜானந்தா அவர்கள் என் தந்தை உயர் கல்வி சேர் கையொப்பமிட்டு கொடுத்து உதவினார். மற்ற செய்திகள் அனைத்தும் புதியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *