சாத்திரங்களில் பலவிதமான கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. முறைப்படி செய்தால் ஒவ்வொன்றுக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பதும் உண்மை. அஷ்டமா சித்திகளும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். அதாவது, செய்யப்படும் கர்மத்திற்கு அதன் விளைவு என்று ஒன்றிருக்கிறது, அவைகளை அனுபவிப்பவன் என்றும் ஒருவன் இருக்கிறான். கர்மங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு அதற்கான பலன்களையும் தொடர்ந்து அனுபவிப்பவன் என்ற நிலைதான் அவனுக்கு மிஞ்சுமே தவிர, அதனால் அவனுடைய முக்திக்கு வேண்டிய அறிவு கிடைக்காது. கர்மங்கள் செய்து கொண்டிருப்பதால் அவைகளைச் செய்பவனுக்கு, தான் செய்கிறோம் என்ற கர்வம் தலைக்கேறவும் வாய்ப்பு இருக்கிறது. அது தூலமாகவும் இருக்கலாம், நுண்ணியதாகவும் மாறலாம்.
தூலமாக இருக்கும்போது அவனது அகந்தை வெளிப்படையாக மற்றவர்களை விரட்டுவது, உதாசீனமாகப் பார்ப்பது என்று இவ்வாறாகத் தெரியும். நுண்ணியதாக மாறும்போது, இவ்வளவு செய்திருக்கிறேனே அதற்கு இதுதானா பலன் என்று புலம்புவதாகவோ, இவ்வளவு என்னிடம் வாங்கிக் கொண்டார்களே அதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று அரற்றுவதாகவோ ஆகிவிடும். அதனால் கர்மம் செய்பவன் எந்த மனநிலையில் செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி செய்பவனுக்கே ஞானம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
3. अविरोधितया कर्म नाविध्यां विनिवर्तयेत् |
विध्याविध्यां निहन्त्येव तेजस्तिमिरसंघवत ||
அவிரோதி⁴தயா கர்ம நாவித்⁴யாம்ʼ வினிவர்தயேத் |
வித்⁴யாவித்⁴யாம்ʼ நிஹந்த்யேவ தேஜஸ்திமிரஸங்க⁴வத ||
அறியாமைக்குப் பகை அன்று அதனால் கன்மம்
அறியாமை தன்னை அகற்றாது – அறிவே
அழிக்கும் அறியாமை ஒளி அந்தகாரக் கும்பு
ஒழிக்குமாறு என்றே உணர்
அஞ்ஞானம் போக வேண்டுமென்று செய்யப்படும் கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படக் கூடியதால் அது ஒன்றே ஞானம் எனக்கு இல்லை என்ற அறியாமையைப் போக்கும். காரிருளை நீக்குவதற்கு எப்படி ஒளி தேவைப்படுகிறதோ அப்படியே அஞ்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் தேவைப்படுகிறது.
கும்மிருட்டைப் போக்குவதற்கு ஒளி தேவைப்படுவது போல தனக்கு ஞானம் இல்லை என்ற அறியாமையைப் போக்குவதற்கு வேண்டியதே ஆன்ம அறிவு; அதைக் கர்மத்தால் செய்யமுடியாது என்று இதைச் சுருக்கமாகச் சொல்லாம். கர்மங்களைப் பற்றி விலாவாரியாக வரும் சாத்திரங்களில், ஞானம் பெறுவதற்கும் ஏன் ஒரு கர்மம் சொல்லப்படவில்லை என்றால் அதன் காரணமே அப்படிச் செய்யமுடியாத காரியம் அது என்பதால்தான். எந்தக் கர்மமும் ஒருவனுடைய மனத்தின் ஈடுபாட்டால்தான் முடியும். ஆனால் ஆத்ம ஞானத்தின் முதல் படியே மனத்தைப் பற்றி விசாரிப்பதே. அதனால் கர்மம் செய்வதின் மூலம் அறிவது என்பது மனத்தைக்கொண்டே மனத்தைப்பற்றி விசாரிப்பது என்பதால், அது ஒரு திருடன் திருடனைப் பிடிப்பது போன்றது. அது முடியுமா? அது நாடகத்தில் வேண்டுமானால் நடக்கும், ஆனால் நடக்கும் வாழ்க்கையில் ஒருபோதும் நடப்பதில்லை
கர்மம் என்பது ஒரு வேலையில் ஒரு குறிக்கோளோடு ஈடுபடுவது. அது வேலை செய்யாது சோம்பேறித்தனமாக இருக்கும் தமஸ் நிலைக்கு எதிரானது. ஆகவே கர்மம் தமஸ் நிலைக்கு எதிரி. கர்மம் தொடங்கியதும் தமஸ் நிலை முடிவடைகிறது என்று சொல்லலாம். ஆனால் கர்மம் செய்வதால் ஞானம் வரும் என்று எப்படிச் சொல்லமுடியும்? அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது இல்லையே. மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கிற வாழ்க்கையின் பயன் என்ன என்று கேள்வி கேட்டு, அதன் தொடர்பாக தனது வெவ்வேறு நிலைகளையும் அலசிப்பார்த்துவிட்டு, அவை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக “நான் இருக்கிறேன்” என்ற ஒரு தொடர் உணர்வு என்பதென்ன என்ற தேடலில் இருக்கும் முமுக்ஷூவிற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உள்ள கர்மம் எப்படிஒரு தொடக்கமோ முடிவோ இல்லாத ஞானத்தைப் பற்றி அறிய உதவும்?
நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டும்; ஏனென்றால் அவை ஒன்றுக்கொன்று எதிரி. அங்கு தண்ணீருக்குப் பதிலாக மண்ணெண்ணையோ, பெட்ரோலோ உபயோகப்படுத்தினால் என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமா? அதே போன்று அறியாமையைப் போக்க கர்மம் என்றால், நாம் முன்னே பார்த்தவாறு அகந்தை வேறு விதமாக வளர்ந்து, இருக்கும் பிரச்சினைகளை மேலும் வளர்க்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இருளும் வெளிச்சமும் ஒன்றுக்கொன்று முரணானவை. அதனால் இருட்டைப் போக்குவதற்கு ஒளி கொண்டு வந்தால் போதும். இருட்டைப் போக்க இருட்டால் முடியாது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வதுபோல “உன்னுடைய இதயம் என்னும் குகையில் அஞ்ஞானம் என்னும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. ஞானம் என்னும் வெளிச்சத்தை ஏற்றிவை. அஞ்ஞானம் தானே அகன்று விடும்” என்றபடி செய்வதுதான் சரியான வழி.
இருளுக்கு என்று ஒரு தனி இருப்பு கிடையாது. எங்காவது இருட்டைக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த இடத்திற்கு வரும் ஒளியை மறைக்கும் செயலைச் செய்வது ஒன்றே அந்த வழி. ஆக ஒளி தானே தானாக இருக்க முடியும், ஆனால் இருள் அப்படியல்ல. அதனால் ஓரிடத்தில் ஒளி வரவேண்டும் என்றால் அந்த இடத்தில் இருக்கும் மறைப்புகளையும், திரைகளையும் விலக்க வேண்டும் என்பதுதான் ஒருவன் செய்ய வேண்டியது. அப்படி ஒளி வந்ததும் இருள் எங்கே போயிற்று? எங்கேயும் போகவில்லை. இருள் என்று ஒன்று இருந்தால்தானே அது எங்கேயாவது போவதற்கு! அதனால் இருள் என்பதை மாயை என்பார்கள். இருட்டையே பார்த்துக்கொண்டு இருப்பவன் இருள் உண்மையாகவே இருக்கிறது என்றுதான் சொல்வான். கொஞ்சம் யோசித்தால்தானே அதன் உண்மை புலப்படும். உண்மையில் நடந்தது என்னவென்றால், ஒளி இல்லாத இடத்திற்கு ஒளி வந்தது என்று சொல்வதுதானே பொருத்தம்? அதுபோலத்தான் அறிவு-அறியாமை என்ற இரட்டையின் குணமும்.
ஆன்மாவைப் பற்றிய ஞானம் என்பது மட்டுமல்ல; எந்த வகையான உலகியல் அறிவைப் பொருத்தும் அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது. ஆனாலும் மற்ற உலகியல் அறிவுக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் முன்னது தன்னை விட்டு மற்றவைகளைப் பற்றி அறிவது, பின்னதோ அறிவுறும் தன்னைப் பற்றியே அறிவது. எப்படி ஒருவன் தானே திருடனாகவும் தானே போலீசாகவும் இருக்கமுடியும் என்பதுதானே உங்கள் சந்தேகம்? மேலும் படித்துப் புரிந்துகொள்ளலாம்.
4. परिच्छिन्न इवाज्ञानात्तन्नाशे सति केवलः |
स्वयम् प्रकाशते ह्यात्मा मेघापायेंsशुमानिव ||
பரிச்சி²ன்ன இவாஜ்ஞானாத்தன்னாஸே² ஸதி கேவல: |
ஸ்வயம் ப்ரகாஸ²தே ஹ்யாத்மா மேகா⁴பாயேம்ʼsஸு²மானிவ ||
அறியாமையால் மறைவானது போல் ஆன்மா
அறவே அஹ்து ஏகமதாகி – நிறைவாய்
இலகுமே தானாய் இரியவே மேகம்
இலகும் ஆதித்தன் எனவே
எங்கும் இருக்கும் ஆன்மா அதைப் பற்றிய அறியாமையால் ஏதோ எல்லைக்குள் அடக்கப்பட்டது போல் மறைந்து கிடக்கின்றது. அந்த அறியாமை அழிந்ததும், மேகத்தால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மேகம் கலைந்ததும் எப்படி பளிச்சென்று தெரியுமோ, அப்படியே இருக்கும் ஒன்றேயான ஆன்மா பரிபூரணமாகப் பிரகாசிக்கும்.
ஏதோ ஒன்று புதிதாக அடையப்பட வேண்டியது என்றால், அது முன்னதாக இல்லாது இருந்தது என்றாகிறது. நம் உடல் அப்படிப்பட்டதுதான். முன்பு இல்லாது இருந்தது, பின்பும் இல்லாது போகிறது. ஆன்மா அப்படிப்பட்டதாக எப்படி இருக்க முடியும்? நாம் இருக்கும் ஒன்றைத்தானே தேடுகிறோம். ஏனென்றால் நாம் முன்பு பார்த்த நமது வெவ்வேறு நிலைகள் எல்லாம் வந்து வந்து போய்க்கொண்டு இருந்தனவாக உணர்ந்தோம். அதனால் அவை அனைத்துக்கும் ஆதாரமாய் இருக்கும் ஒன்றைத் தேடுகிறோம் என்றுதானே சொன்னோம். அந்த ஆதாரமே இல்லை என்றால் நாம் இருப்பது எப்படி? நமது ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் இருப்பதை உணராதபோதும், நாம் இருந்திருக்கிறோம். அது மட்டுமல்ல, அதை அனுபவித்தும் இருக்கிறோம். இல்லையென்றால் நாம் விழித்தபின் சுகமாக உறங்கினோம் என்று சொல்லமுடியாது. எப்போதும், எந்த நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதனால் மாறாத ஒரு நிலை இருந்தாக வேண்டும். அதனால் இல்லாத ஒன்றை நாம் புதிதாகத் தேடவில்லை. இருக்கும் அதை எப்படி உணர்வது என்று தெரியாததால் தேடுகிறோம் என்பதுதான் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை.
அதாவது நமக்குத் தெரியாமல் இருப்பதைத்தான் அறியாமை என்கிறோம். சாஸ்வதமான ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நம் அனுமானம். ஏனென்றால் அது இல்லையென்றால் நாமும் இல்லை என்றாகிவிடும். நமது மற்ற நிலைகளை எல்லாம் கடந்தும், அவைகளை உள்ளடக்கியும் இருக்கும் ஒன்று ஏதோ காரணங்களால் தெரியாதபடி மறைந்து இருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன, ஏன், எப்படி என்று கேட்பது இருக்கட்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கியதால் பரந்து விரிந்து இருக்கவேண்டிய அது, மறைந்து இருப்பதால் ஒரு எல்லைக்குள் குறுக்கப்பட்டு இருக்கிறதாக நமக்குத் தோன்றுகிறது. மறைக்கும் தடைகளை நீக்கி விட்டால் இருப்பது தானாகத் தெரியும் என்பது சரிதானே?
எப்படி சூரியனை மறைத்து வைத்திருக்கும் மேகங்கள் விலகியவுடன் சூரியன் பளீரென்று தெரிகிறதோ, அதே போல அறியாமையால் மறைந்து இருப்பது போல் தோன்றும் அந்த ஆத்மாவை மறைத்திருக்கும் திரைகளை விலக்கிவிட்டால் ஆத்மாவும் தானாகவே ஒளிரும். காணப்படும் எல்லா நிலைகளுக்குமே அந்த ஆத்மா காரணம் என்பதனால் அது சூரியன் போல் எல்லாவற்றையும் ஒளிர வைக்கவேண்டும். எப்படி சூரியன் உதித்ததுமே மலர்கள் மலர்ந்து என்பதில் ஆரம்பித்து சகல உயிர்களும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அதே போல ஆத்மாவின் சந்நிதானத்தில் நம் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் இவை எல்லாம் உலகில் நடக்க வேண்டும் என்பதற்காக சூரியன் உதிப்பதில்லை. அதேபோல நடக்கும் வேலைகளுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. இப்போது நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மறைக்கும் திரைகள் என்னென்ன என்பதும், முமுக்ஷூ எடுக்கும் பயிற்சிகள் எல்லாம் அந்தத் திரைகளை அகற்றுவதற்கே என்பதும்தான்.
5. अज्ञान कलुषं जीवं ज्ञानाभ्यासाद्विनिर्मलम् |
कृत्वा ज्ञानं स्वयम् नश्येज्जलं कतकरेणुवत् ||
அஜ்ஞான கலுஷம்ʼ ஜீவம்ʼ ஜ்ஞானாப்⁴யாஸாத்³வினிர்மலம் |
க்ருʼத்வா ஜ்ஞானம்ʼ ஸ்வயம் நஸ்²யேஜ்ஜலம்ʼ கதகரேணுவத் ||
அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்
அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்
அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு
அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்
கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்.
முதலில் சாதகனுக்குத் தன் உடலின் மேல் ஒரு அபிமானம் இருக்கும். அப்போது அவனுக்கு ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை அறிவு பூர்வமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பான். அதனால் அவன் தன் உடலுக்கு வரும் நன்மை, தீமைகள் எல்லாம் ஆன்மாவுக்கும் வருகிறது என்று தவறாக நினைக்கிறான். ஆன்மா எதுவும் செய்வதும் இல்லை, அந்தச் செயலால் வரும் விளைவுகளை அனுபவிப்பதும் இல்லை என்று அவனுக்குத் தெரியாததால் உடலையும் ஆன்மாவையும் பிணைத்து ஒன்றாகக் கருதுகின்றான். அதுதான் இங்கு கலங்கிய நீர் என்று கூறப்படுகிறது. இது அறியாமையால் வந்த விளைவு.
அறியாமையால் விளைந்தது என்றாலும், அறியாமை போகும் வரை அதைப் போக்க முயற்சிகள் தேவை. முயற்சிகள் சிரவண, மனன, நிதித்யாசன முறைகளில் செய்யப்படும். அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் என்பதாகும். குருவிடம் ஆன்மாவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிதல் முதல் படி என்றால், மற்ற இரண்டு படிகளையும் ஒருவன் தன் முயற்சியால் விடாப்பிடியாகத் தாண்டவேண்டும். எப்போதும் குருவின் அருள் சாதகனுக்கு உண்டு என்பதால், அவனுடைய தனிப்பட்ட முயற்சிகளின் போதும் அவரது அருள் இருக்கும். முன்னது தூல வடிவில் இருந்தால், பின்னவை இரண்டும் நுண்ணிய வடிவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமணர் சொல்கிறபடி புலியின் வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்ப முடியாதோ, அப்படியே குருவின் அருட்பார்வையில் வந்த சீடனும் முக்தி நிலையை அடையாது மீள முடியாது.
வேதங்களே நமக்குப் பிரமாணங்கள் என்பதால் வேதத்தில் உள்ள மகா வாக்கியங்களே ஏதோவொரு வடிவில் நமக்கு குருவின் மந்திரமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். இருக்கும் ஆன்மா ஒன்றேயானாலும், ஒவ்வொரு மகா வாக்கியமும் வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்பட்டவை. அதனால் நாம் அவைகளையே எடுத்துக் கொள்வோம். ரிக் வேதம், ஐதரேய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள லக்ஷண வாக்கியமான “ப்ரக்ஞாநாம் ப்ரஹ்ம” என்பது “உணர்வே பிரம்மம்” என்ற இலக்கண வடிவில் சொல்லப்பட்டுள்ளது. யஜுர் வேதம், தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள அனுபவ வாக்கியமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பது “நான் பிரம்மமாய் இருக்கிறேன்” என்ற அனுபவ வாயிலாய் சொல்லப்பட்டுள்ளது. சாம வேதம், சாந்தோக்கிய உபநிஷத்தில் உபதேச வாக்கியமான “தத் த்வமஸி” என்பது “நீ அதுவாக இருக்கிறாய்” என்ற உபதேச வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதர்வண வேதம், மாண்டூக்ய உபநிஷத்தில் சாக்ஷாத்கார வாக்கியமான “அயம் ஆத்மா ப்ரஹ்ம” என்பது “இந்த ஆத்மன் பிரம்மம்” என்ற யுக்திக்குப் பின் வரும் அனுபவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஏதோவொரு முறையில் குருவினால் வழங்கப்படும் மந்திர உபதேசத்தைக் கேட்டு, அதன் பொருளையும், வீச்சையும், விளக்கங்களையும் அவரிடமே அறிந்துகொண்டு, பின்பு அதை மனத்தில் நன்கு அசைபோட்டு, தேவையானால் மேலும் விளக்கங்களைக் கேட்டு அதன் பின்பும் தன் அறிவால் அலசியதும் நன்கு உள்வாங்கிக்கொண்டு, அதை வெறும் அறிவால் மட்டும் அறிந்து கொள்வதை விடுத்து அதன் உண்மையை உணர்வதற்கு அதன் பொருளை மனத்தால் நன்கு தியானித்து அந்தப் பொருளாகவே இருக்க முயல்வதுதான் சாதகனின் முயற்சிகள். இதற்கு மேல் அவனருளாலே அவன்தாள் வணங்கும் நிலை தானே வரும்.
(தொடரும்)
என்னை போன்றோருக்கு ஆன்மிகம் என்பது சிறிது ட்ரை( dry ) யான சப்ஜெக்ட். அந்த வறண்ட பொருளைக்கூட திரு எஸ். ராமன் அவர்கள் தனது எழுத்தாற்றலாலும், சுவைபட தொகுத்து தரும் திறமையாலும், படிக்க ஆர்வமூட்டும் விதத்தில் தருகிறார். அவருக்கு எங்களது கோடானுகோடி வணக்கங்கள். ஐயா, தங்கள் தொண்டு மேலும் சிறக்கவும், தொடரவும், இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியின் ஐக்கியமான ஞான சக்தியாம் வேல்முருகன் பொற்பாதங்களை இறைஞ்சுகிறோம் .