போதிசத்வரின் இந்துத்துவம் – 1

பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது. அது தெய்வகுற்றமாகவே கருதப்படும். திராவிட இனவாதிகளும் தலித்தியம் பேசுவோரும் அதை மிகக்கடுமையாகவே எதிர்ப்பார்கள். அந்த எதிர்ப்புகளுக்கும் வசைகளுக்கும் கண்டனங்களுக்கும் அப்பால் பாபா சாகேப் அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன இதனை காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

பாபா சாகேப் அம்பேத்கர் தன் வாழ்க்கை முழுவதும் மானுட நீதிக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போராடியவர். எனவே வெகு இயற்கையாகவே சாதிய அமைப்பையும் அதில் தன்னியல்பாக உள்ள ஜனநாயக விரோத அநீதியையும் எதிர்த்தவர். இச்சமூக நோயிலிருந்து பாரதம் குணமடைய வேண்டுமென அவர் விரும்பினார்.  இதற்கு சாதி அமைப்பைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவர் பாரத சமுதாய வரலாற்றை ஆழ்ந்து அவதானித்தார். அவரளவு பாரத வரலாற்றுக்கு ஒரு முழுமைப்பார்வை அளித்தவர்கள் அவர் காலகட்டத்தில் வேறு எவரும் இல்லை எனலாம். இவ்வரலாற்றுப்பார்வை அவருக்கு ஒரு தெளிவான தரிசனத்தை அளித்தது. இந்த பாரதம் ஒரு பண்பாட்டு ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது என்பதே அது. ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அவர் குறிப்பிடுகிறார். 1916 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கருத்தரங்கில் அவர் வாசித்த ஆய்வுரையில் அவர் இதை கூறுகிறார்::

”இந்தியா முழுவதும் வாழும் வெவ்வேறுவிதமான மக்கள் ஒன்றாக கலந்துவிடவில்லை என சொல்லமுடியும்தான். இந்தியாவில் பயணிக்கும் ஒருவர் கிழக்குப்பகுதியில் வாழும் மக்கள் மேற்கிலிருந்தும், வடக்குப் பகுதியில் வாழும் மக்கள் தெற்கிலிருந்தும் உடல் தோற்றத்திலும் ஏன் நிறத்திலும் கூட மாறுபடுவதை காணமுடியும். ஆனால் ஒன்றாக கலப்பது மட்டுமே ஒரு மக்களின் ஒருமைத்தன்மையின் ஒரே வரையறை என கருதமுடியாது.  இனக்குழுக்களாக மக்கள் வெவ்வேறாக இருக்கலாம். பண்பாட்டு ஒற்றுமையே ஒருமைத்தன்மையின் அடிப்படை இயற்கையாகும். இதனை கருத்தில் கொண்டால் இந்திய தீபகற்பத்தை போல பண்பாட்டு ஒற்றுமை கொண்ட மற்றொரு நாடு உலகில் இல்லை என்றே நான் கூறத்துணிவேன். அதற்கு பூகோள ரீதியிலான ஒற்றுமை மட்டும் இல்லை. அதற்கு மேலாக ஒரு அடிப்படையான ஒற்றுமை – மற்றொரு பிரதியெடுக்க முடியாத பண்பாட்டு ஒற்றுமை இந்நிலப்பரப்பை அதன் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை இணைக்கிறது” [1]

இப்பண்பாட்டு ஒற்றுமையில் ஒரு பிரச்சனையாக பின்னிழுக்கும் சக்தியாக சாதியை பாபா சாகேப் அம்பேத்கர் காண்கிறார். ஏனெனில் ‘ஏற்கனவே ஒன்றாகிவிட்ட ஒன்றை அது துண்டுகளாகப் பிரிக்கிறது.’ அதாவது பண்பாட்டு ஒற்றுமை என்பதன் அடிப்படையில் தேசிய உணர்வு இந்தியர்களுக்கு உருவாகாமல் சாதியம் தடுக்கிறது. இந்தியர்களை ஒரு தேசமாக்க வேண்டிய பண்பாட்டு ஒற்றுமையை சிதைக்கிறது.

ஆனால் பாபா சாகேப் ஒரு யதார்த்தவாதி. பண்பாட்டு ஒற்றுமை குறித்து கவிதைகளில் மூழ்கி யதார்த்தத்தை மறந்துவிடுபவர் அல்ல அவர். பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமை என்கிற பிரச்சனையை குறித்து 1941 இல் அவர் மீண்டும் விவாதிக்கிறார். பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை எழுந்த போது. பல இந்திய தேசியவாதிகள் பிரிவினையை எதிர்த்த போது பாபா சாகேப் தெள்ளத்தெளிவாக பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கிறார். அதற்காக அவர் முன்வைக்கும் காரணங்கள் மேலே சொன்ன பண்பாட்டு ஒற்றுமை என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட இந்திய தேசியத்தின் மீதாக எழுகின்றன:

”ஒற்றுமை சாஸ்வதமாக நீடிக்க வேண்டுமென்றால் அது ஒரு உணர்ச்சிபூர்வமான உறவின் அடிப்படையில் அமைய வேண்டும். சுருக்கமாக சொன்னால் ஆன்மிகத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும். இந்த ஒளியில் நாம் பார்த்தால் பாகிஸ்தானுக்கும் ஹிந்துஸ்தானுக்கும் இருப்பதைக் காட்டிலும் பர்மாவுக்கும் ஹிந்துஸ்தானுக்கும் ஆன்மிக ஒற்றுமை உள்ளது” [2]

ஹிந்துக்களும் பௌத்தர்களுக்கும் ஒரே ஆன்மிக பண்பாட்டின் அங்கங்கள் எனும் பார்வை பாபா சாகேப்பின் கருத்தாக்கங்களில் ஒரு அடிப்படை உண்மையாக கருதப்படுவதை காணலாம். பிரிவினையை நியாயப்படுத்த அவர் கூறிய காரணமானது: ”சீக்கிய கோடலியால் கூட வட இந்தியாவில் வளர்ந்து வேர் விட்டு நிற்கும் இஸ்லாமிய விருட்சத்தை வெட்ட முடியவில்லை என்பதாகும். சீக்கியத்தால் கூட ’வட இந்தியாவை ஹுயூஸ் ஸ்வாங்க் கண்ட போது இருந்த அந்த ஆன்மிக பண்பாட்டு ஒற்றுமை நிலைக்கு கொண்டு செல்லமுடியவில்லை” என விசனப்படுகிறார் டாக்டர்.அம்பேத்கர்.[3]

அவர் எப்போதுமே ஹிந்துக்களை ஒரு உலகளாவிய பண்பாட்டு-மத மோதலில் பலவீனமானவர்களாகவும் ஒற்றுமையின்றி இருப்பவர்களாகவும் கண்டார். இந்து ஒற்றுமை என்பது சாதியத்தால் பிளவுண்டு கிடக்கும் வரை தற்காலிக உணர்ச்சிபூர்வமாக மட்டும் இருக்குமே அல்லாது நீடித்து சமூகரீதியாக விளங்க முடியாது. 1933 இல் மகாத்மா காந்தி டாக்டர். அம்பேத்கரிடம் தமது ஹரிஜன் பத்திரிகைக்கு ஒரு செய்தியை அளிக்குமாறு கேட்டார். அதற்காக அண்ணல் அம்பேத்கர் அளித்த செய்தி மிகவும் வெளிப்படையாகவும் தீர்க்கதரிசனம் கொண்டதாகவும் அமைந்தது:

”ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய அமைப்பின் விளைவே ஆவர். சாதிகள் இருக்கும் வரை ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தே தீர்வர். அவர்கள் விடுதலை அடைய சாதி அமைப்பு அழிவதை தவிர வேறுவழியில்லை. இனிவரும் நாட்களில் வரவிருக்கும் போர்களில் ஹிந்துக்கள் உயிர்வாழ ஹிந்து மதம் இந்த துர்நாற்றமெடுக்கும் தீமையான கொள்கையிலிருந்து விடுபட வேண்டும்”.[4]

’வரவிருக்கும் போர்கள்’ என பாபா சாகேப் விவரிப்பவை விரைவில்-1940களில்- இந்து சமுதாயம் சந்தித்த பிரிவினை கலவரங்களே. இக்கலவரங்கள் இஸ்லாமிய அரசியல் சக்திகளால் தெளிவாகத் திட்டமிடப்பட்டு இந்துக்கள் மீது ஏவப்பட்டன. ஒற்றுமையற்ற இந்து சமுதாயம் இக்கலவரங்களில் கடுமையாக அடிபட்டது. இந்து சமுதாயத்தை காப்பாற்ற சாதியமற்ற மாற்றுவழிகள் குறித்த தொடர்ந்த தேடல் பாபா சாகேப்பை பௌத்தத்திடம் கொண்டு வந்து சேர்த்தது.

பாபா சாகேப்பின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று –”சாதி அழிப்பு” ( ‘Annihilation of Caste’, 1944). இந்நூலில் இந்து மதத்துக்கு பிற மதத்தவரை மதம் மாற்றுவதற்கு சாதி ஒரு தடையாக விளங்குவதை டாக்டர் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். இங்கு பாபா சாகேப் முன்வைக்கும் ஒரு பார்வை: சாதியம் சுத்தமாக இல்லாத வருங்கால போராட்ட களத்தில் சம வலிமையுடன் செயல்பட தயாரான ஒரு இந்து சமுதாயத்துக்கான வரைபடத் திட்டத்தை. இது இந்து மதம் ஜீவிக்க மட்டுமல்லாது பரந்து எங்கும் விரிவடையவும் தேவையான ஒரு திட்ட வரைவையே அவர் முன்வைக்கிறார்:

”சாதி இருக்கும் வரை சங்கதன் (Sangathan – இந்து சமுதாய ஒற்றுமைக்கு இந்துத்துவர்கள் பயன்படுத்தும் பதம்) சாத்தியமில்லை. சங்கதன் ஏற்படாதவரை ஹிந்து என்றென்றைக்கும் வலிமையில்லாமல் பலவீனனாகவே இருப்பான்…. ஒரு சமுதாயத்தை பீடிக்கக் கூடிய மிக மோசமான நோய் (தன் சமுதாய மக்களின் துயரத்தில்) அக்கறையின்மையாகும். ஏன் இந்து இத்தனை அக்கறையின்றி இருக்கிறான்? என் சிந்தனையின்படி இந்த அக்கறையின்மைக்கு காரணம் சாதி அமைப்பே. அதுவே சங்கதனை , ஒரு நல்ல நோக்கத்துக்காக கூட சமுதாய ஒத்துழைப்பை இல்லாமல் ஆக்கியுள்ளது”.[5]

இந்த சூழலில் பாபா சாகேப் அம்பேத்கர் இந்து சமுதாயத்தில் சமூக புரட்சியை உருவாக்க முனைந்த சீர்திருத்த போராளிகளிடம் எத்தனை அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் என்பது முக்கியமானது. குறிப்பாக, வீர சாவர்க்கர் மற்றும் சுவாமி சிரத்தானந்தர்.

வீர சாவர்க்கரை பொறுத்த வரையில் சாஸ்திர அடிப்படையிலான சாதி அமைப்பு ஒரு மனநோய். இந்த சமூக மனநோய்க்கான மருந்து இந்த சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிப்பதுதான்.[6] இந்து சனாதன ஆச்சாரவாதிகள் வர்ணாசிரமத்தை விடாமல் உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் வார்த்தைகள் நீர்க்காமல் கூறினார்:

ஸ்ரீகுருஜி கோல்வல்கர், வீர சாவர்க்கர் – ஒரே மேடையில்

”சாதி பிரிவுகளும் சாதுர் வர்ண அமைப்பும் வெறும் பழக்கங்களே. அவற்றுக்கும் சனாதன தர்மத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இன்று சாதி அமைப்பு என்கிற பெயரில் நிலவும் திரிபுகள் அழிந்தால் அதனால் சனாதன தர்மம் ஒன்றும் செத்துவிடாது”.[7]

தீண்டாமையை பொறுத்தவரை சாவர்க்கரின் வார்த்தைகள் ஹிந்து சமுதாயத்தில் ஒரு ஒற்றைக்குரலாக வேதனையுடன் ஒலித்தது::

”நம் சகோதரர்களில் லட்சக்கணக்கானவர்களை தீண்டத்தகாதவர்களென்றும், விலங்குகளைக் காட்டிலும் கீழானவர்களாகவும் பார்க்கும் பார்வை மனித குலத்துக்கும் நம் ஆன்மாவுக்கும் அவமானம் தீண்டமை கொடுமை முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்பது என் திடமான உறுதியாகும். தீண்டாமை அழிக்கப்படுவதுதான் ஹிந்து சமுதாயத்துக்கு நன்மை. இந்து சமுதாயத்துக்கு நன்மையோ இல்லையோ, ஏன் நன்மை ஏதாவது இதனால் இருந்தது என்றாலும் கூட, இந்த கொடுமை அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் அறத்தின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், மானுடத்துவத்தின் அடிப்படையில் தீண்டாமையை அழிப்பதுதான் மிக முதன்மையான அறக் கடமையாகும்..” [8]

சாவர்க்கர் ரத்னாகிரியில் இருந்தபோது அவரது நடவடிக்கைகள் அவரது போக்கு வரவு அனைத்துமே பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனினும் அவர் தலித்துகளின் விடுதலைக்காக பாடுபட்டார். ரத்னாகிரியில் நடந்த மகர் சம்மேளனத்துக்கு தலைமை தாங்க சாவர்க்கர் அழைக்கப்பட்டார். ரத்னாகிரிக்கு அம்பேத்கர் வந்த போது ஏற்கனவே ஏற்பாடான சில நிகழ்ச்சிகளால் சாவர்க்கரை அம்பேத்கர் சந்திக்க இயலவில்லை. இது குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்:

”ஆனால் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் செய்து வரும் பணிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமென்றால் தீண்டாமையை அகற்றினால் மட்டும் போதாது; அதற்கு சாதுர்வர்ண கோட்பாடும் அழிய வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டுள்ள வெகுசில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.[9]

1933 இல் பாபா சாகேப் அம்பேத்கரின் ஜனதா சிறப்பு இதழ் வீர சாவர்க்கர் செய்து வரும் சமூக சீர்திருத்த பணிகளால் தலித்துகளுக்கு கிடைக்கும் பங்களிப்பு கௌதம புத்தரின் பங்களிப்புக்கு குறையாதது என புகழ்ந்தது.[10] பின்னர் 1948 இல் மகாத்மா காந்தி கொலையில் சாவர்க்கர் கைது செய்யப்பட்ட போது, அம்பேத்கர் அவருக்கு உதவினார். காந்தி கொலை குறித்த மிகவும் ஆதார பூர்வமான விரிவான வரலாற்று நூல் ‘காந்தியை கொன்றவர்கள்’ (‘The Men Who Killed Gandhi’, 1978) என்பதாகும். இதை எழுதிய மனோகர் மல்கோன்கர் 2008 இல் வெளியான இந்நூலின் பதிப்புக்கான முகவுரையில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். 1978 பதிப்பில் அரசாங்கம் சில தரவுகளை வெளியிடக் கூடாது என நிர்ப்பந்தித்து அத்தரவுகள் வெளிவராமல் செய்தது. அவற்றுள் ஒன்று ’திரு.சாவர்க்கரின் வழக்கறிஞரான போபட்கருக்கு டாக்டர்.பீமராவ் அம்பேத்கர் அளித்த ரகசிய உறுதி: சாவர்க்கர் இந்த கொலை வழக்கில் பலவீனமான ஆதாரத்தின் பெயரிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதுதான்.[11]

டாக்டர் அம்பேத்கரால் மிகவும் மதிக்கப்பட்ட மற்றொரு இந்து சமுதாய தலைவர் சுவாமி சிரத்தானந்தர் ஆவர். சுவாமி இந்து சங்கதன் இயக்கத்தின் முன்னணியில் நின்றவர் ஆவார். சங்கதன் ஏற்பட சாதியம் அழிய வேண்டுமென்பதில் திடமான உறுதி கொண்டவர் சுவாமிஜி அவர்கள்.

சுவாமி சிரத்தானந்தர் ஒரு அச்சமற்ற தேசபக்தர். கிலாபத் இயக்கத்தின் போது காந்திய இயக்கத்தில் இணைந்தவர். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பிறகு அமிர்தசரஸில் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்த எவரும் துணிவுடன் முன்வராத போது தானே முன்னின்று அதனை நடத்தியவர். மகாத்மா காந்தி தலித்துகள் முன்னேற்றத்துக்காக காங்கிரஸுக்குள் உருவாக்கிய இயக்கத்தில் சுவாமியும் இணைந்திருந்தார்.

ஆனால் விரைவில் அவர் காந்திய தலைமை அவர் விரும்பிய அளவு தலித் விடுதலையில் ஆர்வமோ வேகமோ காட்டவில்லை என்பது அவருக்கு புரிந்தது. எனவே விரக்தியுடன் அவர் மகாத்மா காந்திக்கு 1921 இல் கடிதம் எழுதினார்.:

சுவாமி சிரத்தானந்தர்

”டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள தலித் சமுதாயத்தினர் கேட்பது என்ன? இந்துக்களும் முகமதியர்களும் பயன்படுத்தும் கிணறுகளிலிருந்து தாங்களும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று கேட்கிறார்கள். இந்துக்களின் தண்ணீர் பந்தல்களில் அவர்களுக்கு இலைகளிலும் மூங்கில்கள் மூலமாகவும் தண்ணீர் கொடுக்கப்படாமல் நேரடியாக தண்ணீர் வழங்க உரிமை கேட்கிறார்கள். இது கூட காங்கிரஸ் கமிட்டியால் பெற்றுத்தர பெரிய விஷயமாக இருக்கிறது….

நாகபுரியில் அடுத்த 12 மாதங்களில் சுவராஜ்யம் வெல்வதற்கு முதல் விதியாக தலித்துகளுக்கு அவர்களின் உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமென்பதை நீங்கள் முன்வைத்தீர்கள். ஆனால் அதை அடைந்தோமா என்பதை குறித்த கவலையில்லாமல் செப்டம்பர் 30 வரை அந்நிய துணிகள் பகிஷ்கரிக்கப்பட்டால் அக்டோபர் ஒன்றாம் தேதி சுவராஜ்யம் வந்துவிடும் என அறிவிக்கிறீர்கள்… என் குறைந்த சக்தியை நான் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பயன்படுத்தப்படவே நான் விரும்புகிறேன். நம் தாழ்த்தப்பட்ட மக்கள் நலம் பெறுவதற்கு முன்னால் நாம் பெறும் சுவராஜ்ஜியம் இந்திய தேசத்துக்கு எவ்விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை” [12]

1922 இல் சுவாமி சிரத்தானந்தர் தலித்துகளுக்காக காங்கிரஸ் ஏற்படுத்திய உபகுழுவிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். தொடர்ந்து 19 ஆகஸ்ட் 1923 இல் வாரணாசியில் நடந்த ஹிந்து மகாசபை வருடாந்திர மாநாட்டில் அவர் ஹிந்து சமுதாயத்தில் சாதியத்தை அழிக்க ஒரு பெரும் திட்ட வரைவை அவர் முன் வைத்தார். இந்து மகாசபை கூட்டத்துக்கு வந்திருந்த சனாதனிகள் இதை கடுமையாக எதிர்த்தார்கள். இந்து மகாசபையே இரண்டாக உடையும் அளவுக்கு நிலை மோசமானது. சுவாமி சிரத்தானந்தர் கொண்டு வந்த தீர்மானம் இதுதான்:

ந்து சமுதாயத்திலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி செய்யும் விதத்தில் அவர்களை இந்து சமுதாயத்தில் ஒருங்கிணைந்த ஒரு பாகமாக கருதும் விதத்தில், இச்சான்றோர் சமுதாயத்தில் ஒன்றாக அவர்களை இணைக்கும் விதத்தில் எல்லா இந்துக்களும் கொண்ட இந்த சபையானது பின்வரும் விசயங்களை முன்வைக்கிறது:

(அ) மிகவும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் எல்லா பொது கிணறுகளிலிருந்தும் நீர் எடுக்க முடியும்.

(ஆ) பொது தண்ணீர் பந்தல்களில் எப்படி இந்து சமுதாயத்தின் மிக உயர்ந்ததாக கருதப்படும் உறுப்பினர்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதோ அதே விதத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

(இ) ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் தாம் விரும்பும் எந்த பொதுப்பகுதியிலும் அவர்களது சமுதாய கூட்டங்களையும் விழாக்களையும் நடத்த வேறெந்த உயர்த்தப்பட்ட சமுதாயத்தினரையும் போல அனுமதிக்கப்பட வேண்டும்.

(ஈ) ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரது ஆண் பெண் இருபால் குழந்தைகளும் எல்லா அரசாங்க தேசிய மற்றும் இதர பிரிவு பள்ளிக்கூடங்களிலும் அனுமதிக்கப் படுவதுடன், அவர்கள் இந்து மற்றும் இந்துவல்லாத பிற குழந்தைகள் போலவே அமரவும் கல்வி கற்பிக்கப்படவும் வழி செய்யப்பட வேண்டும்.[13]

சுவாமிஜி வெறும் தீர்மானங்களுடன் நின்றுவிடக்கூடியவரல்லர். டெல்லியில் ‘தலித் உத்தார் சபா’ எனும் அமைப்பை ஏற்படுத்தி தலித் விடுதலைக்காக உழைத்தார். அவர் சேவை 23 டிசம்பர் 1926 இல் ஒரு இஸ்லாமிய மதவெறியனின் துப்பாக்கி குண்டுகளுக்கு அவர் பலியாகும் வரை தொடர்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் சுவாமி சிரத்தானந்தரை மிகவும் மதித்தார். அரசியல் கட்சியாக இந்து மகாசபையின் செயல்பாடுகளில் பாபா சாகேபுக்கு கடும் விமர்சனங்கள் இருந்தன. ஏனெனில் அக்கட்சியில் பல சாதியவாதிகள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் தலித்துகளின் உரிமையை காப்பாற்றுவதில், அவர்களுக்காக போராடுவதில் சுவாமி அவர்கள் தனித்தன்மையுடன் திகழந்தார். சுவாமி சிரத்தானந்தர் காங்கிரஸின் ஒடுக்கப்பட்டோருக்கான உபகமிட்டியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதை வேதனையுடன் பாபா சாகேப் இவ்வாறு விமர்சிக்கிறார்:

”ஏன்? இந்த திட்டம் ஏதோ சாதாரண அளவில் ஐந்து லட்சத்துக்கு அதிகம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லாத அளவில் இருக்க வேண்டுமென்பதாலா? சுவாமி சிரத்தானந்தரை அவர்கள் தங்கள் கமிட்டியில் சேர்த்ததன் மூலம் காங்கிரஸார் ஒரு தவறு செய்துவிட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு பெரும் திட்டத்துடன் சுவாமி அவர்களை எதிர்நோக்கும் போது அவர்கள் அதை விழுங்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் சமாளிக்க, அவரை செயல்படுத்த விடாமல் இருந்தனர்…சுவாமி சிரத்தானந்தரே ஒடுக்கப்பட்ட மக்களின் மிகவும் தீவிரமான போராளி. அவர் கமிட்டியில் இருந்திருந்தால் அவர் நிச்சயமாக ஒரு நல்ல விரிவான திட்டத்தை ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்ககா கொண்டு வந்திருப்பார். காங்கிரஸ் அவரை கமிட்டியில் விரும்பவில்லை என்பதும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் குறித்து அஞ்சியது என்பதும் அவருக்கும் அன்றைய காங்கிரஸ் பொது செயலாளரான பண்டிட் மோதிலால் நேருவுக்குமான கடிதப்போக்குவரத்திலிருந்து புரிகிறது …”[14]

அம்பேத்கர் சிரத்தானந்தரை ஒடுக்கப்பட்ட மக்களின் ஆகச்சிறந்த மிகவும் உண்மையான போராளி ( ‘the greatest and most sincere champion of the Untouchables’) என கருதியது மிக முக்கியமானதாகும். ஏனெனில் காந்திக்கு பதில் தானே ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக வர வேண்டுமென பாபா சாகேப் கருதியதால் தான் அவர் மகாத்மாவை எதிர்த்தார் எனும் பிரச்சாரத்தை இது முறியடிக்கிறது. தலித் விடுதலைக்காக உண்மையான போராளிகளை அவர் மனம் திறந்து பாராட்டியவர்.

இந்த முழுமையான தலித் விடுதலை பார்வையே அவரை தலித் விடுதலையை ஹிந்து சங்கதனின் ஒரு முக்கிய மைய அம்சமாக முன்வைக்க செய்தது. கோவில் நுழைவு போராட்டத்தை அவர் அணுகிய விதம் இதை தெளிவுப்படுத்தும். அவர் மத நம்பிக்கை அல்லது இறைவழிபாடு என்பதற்காக ஆலய நுழைவை வற்புறுத்தவில்லை. தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பது வரலாற்று ரீதியாக அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை, மேலும் இந்துக்களின் வரலாற்று கடமை என்பதாகவே அவர் அதை பார்த்தார். 1927 இல் இது குறித்து அவர் அளித்த அறிக்கை இதை தெளிவுபடுத்தும்:

”நாங்கள் அழுத்தமாக சொல்ல விரும்பும் மிக முக்கியமான விஷயம் இறை வடிவத்தை தரிசிக்க விரும்பி அல்ல நாங்கள் ஆலயப்பிரவேசத்துக்காக போராடுவது… இந்துத்துவம் என்பது எந்த அளவுக்கு உயர்த்தப்பட்ட சாதி இந்துக்களுக்கு சொந்தமோ அதே அளவு ஒடுக்கப்பட்ட தீண்டத் தகாதவர்கள் என ஆக்கப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம்.

இந்துத்துவத்தின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் தலித் இந்துக்களான வால்மீகி, வியாத கீதையை எழுதிய மகரிஷி,  சோக்கா மேளா, ரோகிதாஸ் ஆகியோர் உழைத்துள்ளனர். எப்படி வசிஷ்டர் போன்ற பிராம்மணர்களும், கிருஷ்ணர் போன்ற க்ஷத்திரியர்களும், ஹர்ஷர் போன்ற வைசியர்களும் துக்காராம் போன்ற சூத்திரர்களும் இந்துத்துவத்தின் மேன்மைக்கு உழைத்துள்ளனரோ அதே போல ஒடுக்கப்பட்ட இந்துக்களும் பங்களித்துள்ளனர். ஒடுக்கப்பட்ட இந்துக்களிலிருந்து ஒட்டுமொத்த இந்துக்களின் பாதுகாப்புக்காக போராடிய சித்நாக மகர் போன்ற வீர புருஷர்கள் எண்ணற்றோர் ஆவர். எனவே இந்துத்துவத்தின் பெயரில் எழுப்பப்படும் கோவில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மற்றும் இதர இந்துக்களின் தியாகங்களினால் உருவானதாகும். எனவே இந்துத்துவத்தின் கோவில் அனைத்து இந்துக்களுக்கும் சாதி வேறுபாடின்றி திறந்துவிடப்பட வேண்டும்”.[15]

இங்கு பாபா சாகேப் அம்பேத்கர் இந்து மத கோவில் என்றோ இந்து கோவில் என்றோ சொல்லாமல் இந்துத்துவத்தின் கோவில் என கூறுவது கவனிக்கத்தக்கது. ஆலய நுழைவு ஒரு உருவகம் அல்லது சமூகக் குறியீடு மட்டுமே. அதனை ஆதிக்க சாதி இந்துக்கள் எதிர்கொள்ளும் விதமே இந்துத்துவத்தின் இந்த பாகங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்பதா வேண்டாமா என்பதை நிர்ணயிக்கும். நிர்ணயித்தது. இந்து மதத்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அனைவருமே அம்பேத்கருக்கு ஏமாற்றம் அளித்தனர். எனவே 13 அக்டோபர் 1935 இல் பாபா சாகேப் அம்பேத்கர் தமது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரகடனத்தை வெளியிட்டார்:

“நான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நான் இந்துவாக இறக்க மாட்டேன்”.

சனாதனி இந்து ஆச்சார வாதிகளுக்கு, அரைகுறை சீர்திருத்த வாதிகளுக்கு இது ஒரு சரியான அடி. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கு இது அதிர்ச்சி வைத்தியம். ஆனால் இந்து ஆச்சாரவாத தலைவர்கள், மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள், ஜெகத்குருக்கள் எவரும் இதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. இந்துத்துவர்கள், இந்து தேசியவாதிகள் (Hindu Nationalists) மட்டுமே பாபா சாகேப்பிடம் வந்து உரையாடினர். இந்து சமய சாதியவாதிகளால் மிகவும் மனம் புண்பட்டிருந்த நிலையிலும் பாபா சாகேப் இந்த இந்துத் துவர்களின், இந்து தேசியவாதிகளின் உணர்ச்சிகளுக்கும் அச்சத்துக்கும் மதிப்பு கொடுத்து உரையாடினார். டாக்டர் பாலகிருஷ்ண சிவராம மூஞ்சேயுடன் அவர் இது குறித்து விரிவாக பேசினார்.

டாக்டர் அம்பேத்கர் அவதானிக்கிறார்:

“மதமாற்றத்தின் பின்விளைவுகள் ஒட்டுமொத்த தேசத்துக்கும் என்னவாக இருக்கும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும். அவர்கள் இஸ்லாமுக்கு சென்றால் இஸ்லாமிய மக்கள் தொகை இருமடங்காகிவிடும் இஸ்லாமிய மேலாதிக்கத்தின் ஆபத்து உண்மையானதாகிவிடும். கிறிஸ்தவத்துக்கு மாறினால் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிக்கும். பிரிட்டனுக்கு இந்தியா மீதான பிடி இன்னும் பலப்பட்டுவிடும். மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் சீக்கியத்தை தழுவினால் அவர்கள் தேசத்தின் தலைவிதிக்கு சேதம் வாராமல் காப்பார்கள் என்பதுடன் அவர்கள் தேசியத்தன்மையை இழக்கவும் மாட்டார்கள்.” [16]

பாபா சாகேப் அம்பேத்கர் எப்போதுமே இந்த விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். நீதிக்கும் விடுதலைக்கும் போராடும் அதே நேரத்தில் தமது மக்கள் தேசியத்தன்மையை இழந்துவிடக்கூடாது. தலித்துகள் சாதிய இந்து மதத்திலிருந்து விடுதலை பெற்றேயாக வேண்டும் – ஆனால் இந்துப் பண்பாட்டை அவர்கள் இழந்துவிடக் கூடாது. இந்து யார் என்பதன் வரையறையில் இதற்கான பிரச்சனை பின்னிப் பிணைந்திருந்தது.

பிரிவினை குறித்த விரிவான அலசலின் போது டாக்டர் அம்பேத்கர் இந்துக்கள் குறித்த சாவர்க்கரின் வரையறையை கவனமாக ஆராய்கிறார்:

வீர சாவர்க்கர்

திரு.சாவர்க்கரின் பார்வையில் இந்து என்பவன் “…பாரதபூமியை சொந்தமாக கருதுபவன், சிந்து முதல் சமுத்திரம் வரையான பாரதத்தை தந்தையர் தேசமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன். அவன் தோன்றிய தேசமாகவும் அவனது சமயங்களின் தொட்டிலாகவும் கருதுபவன். எனவே வேதமதம், சனாதனம், ஜைனம், பௌத்தம், லிங்காயுத்துகள், சீக்கியர், ஆரிய சமாஜிகள், பிரம்ம சமாஜிகள், தேவசமாஜிகள், பிரார்த்தனா சமாஜிகள்  மற்றும் இந்திய மண்ணில் தோன்றிய சமயத்தவர் அனைவரும் இந்துக்கள்; இந்து சமுதாய  உறுப்பினர்.”…

இவ்வரையறையில் இந்து என்கிற பதம் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது திரு.சாவர்க்கர் தாம் கொண்டுள்ள இரு நோக்கங்களை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. முதலில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் மற்றும் யூதர்களை இந்து எனும் வரையறையிலிருந்து நீக்குகிறது. இது இந்தியாவை புனிதபூமியாக கருதுவோர் என்பதன் மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவதாக வேதங்களின் புனிதத்தன்மையை இந்து என்பதற்கான வரையறையாக கருத வேண்டியதில்லை என கூறுவதன் மூலம் பௌத்தர்கள் சமணர்கள் மற்றும் சீக்கியர் ஆகியோரை இந்து எனும் வரையறைக்குள் கொண்டு வருகிறது.  இதன் மூலம் ஆதிவாசி மலைவாழ் மக்களும் இந்துக்கள் ஆகின்றனர். ஏனெனில் அவர்கள் எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் பாரதம் அவர்களுக்கும் தந்தைபூமியும் புனித பூமியும் ஆகும்.[17]

ஆனால் அம்பேத்கர் இந்த வரையறையால் திருப்தி அடைந்திடவில்லை. பண்பாட்டு ஒற்றுமை என்பது தேசிய ஒருமைப்பாடாக பரிணமிக்க வேண்டுமென அவர் விரும்பினார். இந்துக்கள் இன்னும் ஒரு தேசியத்தன்மையை பெறவில்லை என்பதை அவர் உணர்ந்தார். சாதியத்தால் துண்டாடப்பட்டு விளங்குகிறார்கள். பாரதம் ஒரு தேசியமாக பரிணமிக்க ஒருமைப்பாட்டுக்கான நவீன சட்டகங்கள் தேவை. அவை சமுதாய அரசியல் தளத்தில் அவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டு,. பின்னாட்களில் அவர் தமது ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தை நாம் அதில் காணலாம்:

இந்து சிவில் சட்டம்,

(அ) எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும், அதாவது இந்து மதத்தை அதன் அனைத்து விதங்களிலும் வளர்ச்சிகளிலும் பின்பற்றும் அனைவருக்கும் பொருந்தும் இது லிங்காயத்துகள், வீர சைவர்கள், பிரம்ம சமாஜத்தினர், பிரார்த்தனா சமாஜத்தினர் மற்றும் ஆரியசமாஜிகளையும் உள்ளடக்கியது

(ஆ) பௌத்த, சமண, சீக்கிய மதங்களை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

(இ) (i) மேற்கண்ட வரையறைகளின் படி இந்துக்களாக விளங்கும் பெற்றோருக்கு சட்டரீதியாகவோ புறம்பாகவோ பிறந்த எந்த குழந்தைக்கும் பொருந்தும் (ii) மேற்கண்ட வரையறைகளின் படி இந்துவாக பெற்றோரில் ஒருவர் இருக்க சட்டரீதியாகவோ புறம்பாகவோ பிறந்த எந்த குழந்தையும் அப்பெற்றோரின் சமுதாய உறுப்பினராக வளர்க்கப்படும் போதும் பொருந்தும்.

(ஈ) மேலும் இந்து மதத்துக்கு மதம் மாறியவருக்கும் பொருந்தும்.

(உ) இந்த சட்டம் முஸ்லீம், கிறிஸ்தவர், பார்ஸி மற்றும் யூத சமயத்தில் சேராத அனைவருக்கும் பொருந்தும். [18]

இதற்குக் குறிப்பாக சில பிரிவினைவாதிகள் கலகக்குரல் எழுப்பினார்கள். எப்படி பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்களையெல்லாம் இந்துக்களாக கருதமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்கள்.  பாபா சாகேப் அம்பேத்கர் பதிலளித்தார்:

”ஹிந்து சட்டம் சீக்கியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் பொருந்துவதாக இருப்பது ஒரு வரலாற்று வளர்ச்சியாகும். புத்தர் வைதீக பிராம்மணர்களிடமிருந்து வேறுபட்டது சமய விஷயங்களில் மட்டுமே. சட்டத்தை அவர் அப்படியே விட்டுவிட்டார். தம்மை பின்பற்றுவோருக்கென புதிய சட்டத்தை அவர் உருவாக்கவில்லை. மகாவீரர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுக்கும் இதுவே பொருந்தும்”.[19]

ஸ்மிருதிகளின் அடிப்படையில் அமைந்த இந்து மதத்தை முடைநாற்றம் வீசுவதாக வெறுத்த அம்பேத்கருக்கு ஹிந்து பண்பாட்டின் மீது ஏன் இத்தனை பற்றும் பாசமும்? இவை அவரது செயல்களில் எண்ணங்களில் எப்படி எல்லாம் பிரதிபலித்தன? அவற்றை தொடர்ந்து காணலாம்.

(தொடரும்)


[1] Dr.Bhimrao Ramji Ambedkar, Castes in India: Their Mechanism, Genesis and Development, (Originally  a paper presented at an Anthropology Seminar at Columbia University on 9th May 1916), Siddharth Books, 1945:2009 p.7

[2] Dr.Bhimrao Ramji Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., 1941, p.60

[3] Dr.Bhimrao Ramji Ambedkar, ibid. p.59

[4] Dr.Bhimrao Ramji Ambedkar, Message published in Harijan dated 11-Feb-1933

[5] Dr.Bhimrao Ramji Ambedkar, Annihilation of Caste: With reply to Mahatma Gandhi, 1944:pdf document: p.30

[6] V.D.Savarkar, Samagra Savarkar Vangmaya, Vol-3 ed. SR Date, Maharashtra Prantik Hindu Sabha, Pune, pp 497-9

[7] V.D.Savarkar, SSV, Vol-3 1930: Essays on the abolition of caste, p.444

[8] V.D.Savarkar, SSV, Vol-3 1927, p.483

[9] Dr.Bhimrao Ramji Ambedkar’s letter quoted by Dhananjay Keer, Veer Savarkar, Popular Prakashan, 1950:1966, p.190

[10] Janata special number, April 1933, p.2 (quoted in Dhananjay Keer, 1950:1966 p.195)

[11] Manohar Malgonkar, The Men Who Killed Gandhi, in the ‘Introduction’ to 2008 edition, Roli Books, 2008

[12] Swami Shradhaanand letter to Mahatma Gandhi dated 9-Sep-1921

[13] Amrita Bazar Patrika report, 17-Aug-1923

[14] Dr.Bhimrao Ramji Ambedkar, What Congress and Gandhi Have Done to the Untouchables, Gautam Book Center, 1945:2009, p.23

[15] Dr.Bhimrao Ramji Ambedkar, Bahiskrit Bharat, 27-Nov-1927: quoted in Dhananjay Keer, Dr.Ambedkar: Life and Mission, Popular Prakashan, 1990, p.96

[16] Dr.Bhimrao Ramji Ambedkar, Times of India, 24-July-1936: quoted in Dhananjay Keer, Dr.Ambedkar: Life and Mission, Popular Prakashan, 1990, p.280

[17] Dr.Bhimrao Ramji Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., 1941, p.136

[18] The Draft of the Hindu Code Bill 1950, by Dr.B.R.Ambedkar: Part-I preliminary : 2.Application of Code

[19] Dr.Ambedkar in The Times of India, 7 February 1951: quoted in Dhananjay Keer, Dr. Ambedkar: Life and Mission, Popular Prakashan, 1990, p.427

12 Replies to “போதிசத்வரின் இந்துத்துவம் – 1”

  1. Aravindan,

    நீங்கள், அம்பேத்கர் பற்றிய தீசிஸ் எழுதி Dr அரவிந்த் ஆகலாமே. அந்த நாளை விரைவில் எதிர்பார்கிறேன்.

  2. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அரவிந்தன், அம்பேத்கர் பற்றிய உங்கள் தொடர் நல்ல ஆராய்ச்சியின் விளைவாகவே தெரிகிறது. உங்கள் எழுத்துக்கள் என்னை அம்பேத்கரை வேறு கோணத்தில் பார்க்க வைக்கின்றன. திறந்த மனதுடன் மற்ற பாகங்களை எதிர்பார்க்கிறேன்.

  3. Aravindan is a Guru !
    Let God shower peace and health on him, so that he will continue to contribute more and more such works.

  4. அற்புதம்! பூஜ்ய ஸ்ரீ பாபா சாஹேப் அவர்களின் மனோ ஓட்டங்களை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியமை அருமை! ஒரு சிறிய விண்ணப்பம்! தவறாய் இருப்பின் மன்னிக்கவும்! தாங்கள் ஒரு கற்றறிந்த ஹைந்தைவர், இப் பாரத தேசத்தில் பல பார்ப்பன தலைவர்களும் தீண்டாமை, குருட்டு நம்பிக்கைகள் முதலானவற்றை எதிர்த்தவர்கலாய் விளங்கி இருந்தனர்! பழமை வாதமும், வேதங்களின் உத்தர பாகமான ஞான காண்டத்தின் புரிதல் இல்லாமலும் தவறிழைத்தோர் பல மடாதிபதிகளாக இருந்தாலும், வேதங்கள், சாஸ்த்ரங்களின் வாயிலையும் மக்களுட் பிரிவு மூடம் என்பதை விளக்கி போற்றிய பெரியோர் பலர்! ஸ்ரீ ராமானுசர் போன்றோர் அறவழியில் ஆழ்வார்களால் காட்டப்பட்ட உபநிஷதங்களின் சாரத்தை உணர்த்தியோர்! ஸ்ரீ சைதன்ய மஹா பிரபு உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்! தமிழகத்தில் ஆலய நுழைவு போராட்டம் உள்ளிட்ட பல தர்ம சார்புடையவற்றில் தலைமை தாங்கியோராய் திருமிகு ஹரிஜன் அய்யங்கார் சுவாமி முதலியோர் விளங்கி இருந்ததாய் அறிகிறோம்! இத்தகைய தகைமயாளர்களையும் பற்றி தாங்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுதினால் நாங்கள் படித்து தெளிவோம்! இந்த கோரிக்கை தவறான எண்ணத்துடன் எழுத பட்டது அன்று! பூஜ்ய ஸ்ரீ பாபா சாஹேப் அவர்கள் ஒரு ஞானியின் மன ஓட்டத்தை கொண்டவர் என்பது அவர்களின் எழுத்துக்களில் இருந்து காண கிடைகிறது! விதண்டா வாதம் பேசும் தமிழக கரும் புள்ளிகளும், ஹரிஜனங்களை எய்த்து பிழைக்கும் ஒட்டு கட்சி அரசியல் வாதிகளும் பூஜ்ய ஸ்ரீ மகாநீயர் அவர்களை தரம் தாழ்த்தி ‘பிராண்ட்’ செய்யும் காலத்தில் குளத்திடை நீரின் குளுமையோடே தாமரை இலைகளை விளக்கி அந்நீரின் தூய்மையை காட்டும் நீவிர் பணி சிறக்க பரந்தாமன் அருளட்டும்!

  5. அன்பு நண்பர் அரவிந்தனுக்கு

    அற்புதமான பணியில் மிகச் சரியான தருணத்தில் இறங்கி இருக்கிறீர்கள்.
    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!

    -சேக்கிழான்

  6. This is what makes you more interesting Mr. Aravindhan! Your writing is distinctive and has a class… Surely you will attain great merit on a long run!

    My best wishes!

  7. மேன் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  8. நாம் ஒரு நாடாக இருக்கின்றோம் . ஆயின் , அனைவரையும் ஒன்றாக நடத்துகின்றோமா ? உண்மையில் இதற்காக முயற்சிக்கின்றோமா? கடந்தால் (மனம் , மெய், மொழிகளை) நாம் அறிவது கடவுள் தன்மை ஆகும். ஒரு கட்டமைப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் எத்தனை எத்தனை பிரிவினைகள் ? நம்மால் , நம் அளவில் ஒன்று பட இயலவில்லையே ? மதங்கள் அனைத்துமே நிறுவனங்கள் ஆகிவிட்டன. பிறரைக் குறை கூறுவதால் மட்டுமே நாம் உயர்ந்துவிடலாம் என்பது ஏற்புடையது அன்று. நன்றி.

  9. நான் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதற்கு அப்போதைய ஆதிக்கவாதிகளின் பதில் என்ன?

  10. நான் எனது பொதுவாழ்க்கையை தொடங்கிய போதும், அதற்குப் பலகாலம் பின்பும் நல்லதோ, கெட்டதோ நாம் இந்து சமூகத்தின் ஒரு அங்கம்தான் என்று எண்ணி வந்தேன்.
    இந்து சமூகத்திலுள்ள தீங்குகளை களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம்.
    ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. – அண்ணல் அம்பேத்கர்- தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *