எழுமின் விழிமின் – 28

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

நான்காம் பாகம்
ஆண்மை ஊட்டுதல் (அல்லது) ஊழியர்களை உருவாக்குதல்

”தீப்பிழம்பு போன்ற இளைஞர்கள் நமக்குத் தேவை. புத்திசாலித்தனமும் தைரியமும் வாய்ந்து மரணதேவனின் வாய்க்குள்ளே துணிச்சலாக நுழைந்து செல்லுகிறவர்கள், கடலைக் கூட நீந்திக் கடக்க ஆயத்தமானவர்கள் தேவை…. அதுபோன்று நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் தேவை. அவர்களைப் பெறுவதற்காக மட்டுமே முழுமூச்சுடன் முயலுக; வலது பக்கத்தில் இருந்தும் இடது பக்கத்தில் இருந்தும் புதிதாக ஆட்களைச் சேர்த்து மாற்றி, நமது தூய்மைப் பயிற்சி இயந்திரத்தில் அவர்களைப் பொருத்திப் பண்படுத்திப் பழக்குங்கள்.

இறைவனிடத்திலே தளராத நம்பிக்கையும், புனிதமான பணி செய்கிறோம் என்ற ஊக்கமும், ஏழைகளிடத்தும் வீழ்ச்சியுற்றோரிடத்தும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களிடத்தும் எல்லையற்ற பரிவும், அந்தப் பரிவு காரணமாக எதிர்த்து நிற்பதில் சிங்கத்தின் துணிவும் கொண்ட ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் செல்ல வேண்டும். நம்முடைய விமோசனத்துக்கான சமய அறிவுரைகளை, பரோபகாரம் என்ற நமது வேத தத்துவங்களை, சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டும் நற்செய்திகளை, சமத்துவம் என்கிற வேத நெறிகளை அங்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடையே பரவச் செய்ய வேண்டும்”.

ஒற்றுமை இயக்கம்*
(* – ‘அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர்’ என்ற புத்தகத்தில் இருந்து)
”எனது வாழ்க்கையிலேயே எனது உள்ளத்தை மிகத் தீவிரமாகக் கவர்ந்திழுத்த ஒன்று அமெரிக்காவில் உள்ளது” என்று ஒருதடவை சுவாமிஜி என் பாட்டியிடம் கூறினார். அவருக்கு சிறிது கோபமூட்ட விரும்பிய என் பாட்டி, ”யார் அந்தப் பெண்?” என்று வினவினாள். சுவாமிஜி சிரிப்பு பொங்கி வெடிக்க ”ஒ! அது எந்தப் பெண்ணும் அல்ல; அது தான் ஒற்றுமை இயக்க அமைப்பு” எனக் கூறினார்.
பிறகு, எவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர்கள் எல்லோரும் வெளியே தனித்தனியாகப் போவார்கள் என்றும் ஒரு கிராமத்தை அடைந்ததும் அமைதியாக ஒரு மரத்தடியில் உட்காருவார்கள் என்றும், துயரப்படுகிற மக்கள் தம்மிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள் என்பதற்காகக் காத்திருப்பார்கள் என்றும் விளக்கினார்.
அமெரிக்காவில் எல்லாப் பணிகளையும் ஒழுங்குற இணைக்கிற ஒற்றுமை இயக்க முறையால் பெருத்த பலன் ஏற்படுவதைக் கண்டார். ஆனால் பாரதத்தின் குணப் பண்புக்கு எந்த விதமான இயக்கம் ஒத்துவரும் என்பது பற்றி அவருக்கு சந்தேகம் இருந்தது. ஆகவே மேலை நாட்டில் இருப்பதில் நல்லதாகக் காணப் படுகிறவற்றை தமது சொந்த மக்களின் சிறந்த நன்மைக்காக எப்படி மாற்றி அமைத்துப் பயன்படுத்துவது என்ற விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனையை செலுத்தினார்.
மிஸ் கார்னர்

ஜனநாயக அமைப்புக்கு முன்னோடியான தேவைகள்*

(* – ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபிக்கப்பட்டபோது, அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர்களை நோக்கி ஆற்றிய சொற்பொழிவில் இருந்து).

உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, ஒற்றுமை இயக்கம் (சங்கம்) இல்லாமல் உயர்ந்த எதனையும், நிரந்தரமான எதனையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். ஆனால் பாரதம் போன்ற ஒரு நாட்டில் இன்று நாம் அடைந்திருக்கிற வளர்ச்சி நிலையில் – ஜனநாயக அடிப்படையில் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டு பொதுவாக எல்லோரும் கூடி பெரும்பான்மையாக ஓட்டுப் போட்டு முடிவுக்கு வருகிற ஜனநாயக அடிப்படையில் ஓர் இயக்கத்தை ஆரம்பிப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மேலைநாடுகளின் நிலைமை அலாதியானது. நம்மிடையே கூட கல்வி பரவப் பரவ, நாம் தியாகம் செய்யக் கற்றுக் கொள்ளும்போது, தனிப்பட்ட மனிதனின் லாப நஷ்டங்களுக்கும் நாட்டங்களுக்கும் அப்பாற்பட்டு எழ வேண்டும் என்று கற்றுக் கொள்ளும்போது, மக்கள் சமுதாயத்துக்காகவும், பரந்த நாட்டு நன்மைக்காகவும் வாழத் தெரிந்து கொள்ளும்போது, ஜனநாயக அடிப்படையில் வேலை செய்வது சாத்தியமாகலாம். இதனை மனதிற்கொண்டு தற்சமயம் நமது இயக்கத்துக்கு சர்வாதிகாரியை அமைக்க வேண்டும். அவரது சொல்லுக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்; பிறகு தக்க காலம் வரும்பொழுது மற்ற அங்கத்தினர்களின் கருத்துக்களின் படியும் சம்மதத்தின் பேரிலும் வழி நடத்தப்படும்.

*****

ஹிந்துக்களின் சங்கம்:

ஹிந்துக்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும் குணத்தையும், பரஸ்பரம் நல்ல குணங்களைப் பாராட்டுகிற குணத்தையும் கற்பிக்கக் கூடிய ஓர் இயக்கம் அத்தியாவசியத் தேவையாகும். நான் இந்த நாட்டில் செய்த வேலையைக் குறித்து தனது பாராட்டுதல்களைத் தெரிவிப்பதற்காக கல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர்களும் மற்ற இடங்களில் நூற்றுக் கணக்கானவர்களும் குழுமியிருந்தார்கள். மிக நல்லது தான். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு அனா கொடுக்கச் சொல்லிக் கேட்டால் கொடுத்திருப்பார்களா?…

குழந்தைத்தனமாக பிறரை எதிர்பார்த்து வாழ்வது நமது முழு தேசியப் பண்பாகிவிட்டது. உணவை அவர்களது வாய்க்கருகே கொண்டுவந்தால் மகிழ்வுடன் சாப்பிட எல்லோரும் ஆயத்தம் தான்; அதிலும் சிலர் சோற்றை வாய்க்குளே ஊட்ட வேண்டும் என்று விரும்புவார்கள்…. உனக்கு நீயே உதவிக் கொள்ளாது போனால், உனக்கு உயிர் வாழத் தகுதி கிடையாது….

பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனதுடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப்படாமல் இருக்க நாம் எப்போது தான் கற்றுக் கொள்வோமோ?

இந்நிலையில் இருக்கிற தேசத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒருபோதும் சாவாத அன்புடன் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைக்கப்பட்டு, வேலை செய்கிற ஒரு குழுவை உண்டாக்குவது ஆச்சரியமான செயல் இல்லையா? இந்தக் குழு வளர்ந்தே செல்லும். வியக்கத்தக்க தாராள மனப்பான்மையுடன், இறவாத சக்தித்துடிப்பும் முன்னேற்ற விழைவும் கொண்ட இந்தக் குழு வளர்ச்சியடைந்து நாடு முழுவதும் பரவ வேண்டும். நாடு முழுவதும் மின்னதிர்ச்சியை அது உருவாக்க வேண்டும்.

பயங்கரமான அஞ்ஞானம், பரஸ்பரப் பகையுணர்ச்சி, ஜாதியுணர்ச்சி, பழைய காலத்து மடத்தனம், பொறாமை – இவையெல்லாம் அடிமைத்தனத்தில் ஆழ்ந்துள்ள இந்நாட்டின் பரம்பரைச் சொத்தாக உள்ளன. இவை எல்லாம் இருந்தாலும் கூட, இந்தக் குழுவினர் சமூகத்தின் மயிர்க்கால்கள் தோறும் நுழைந்துவிட வேண்டும்.

வேலை முறையில் மூன்று நிலைகள்:

ஒவ்வொரு பணியையும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள்; இரண்டாவதாக எதிர்ப்பு வரும்; மூன்றாவதாக அதனை ஒப்புக் கொள்வார்கள். தான் வாழ்கிற காலத்துக்குப் பின்னால் வரப் போவதைச் சிந்தித்துப் பார்க்கிற மனிதனை சமுதாயம் நிச்சயமாக தப்பாகவே புரிந்துகொள்ளும்.

ஆகவே எதிர்ப்பும் கொடுமைகளும் வரட்டும், வரவேற்கிறேன். நான் மட்டும் தூய்மையுடனும் உறுதி குலையாமலும் இருக்க வேண்டும்; இறைவனிடத்தில் அபாரமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் கஷ்டங்களெல்லாம் நிச்சயமாக மறைந்து போகும்…

பாராட்டு வேட்டையும் உண்மைப் பணியும் இணைந்து போவது அரிது:

‘மகத்தான பணி ஒன்றைச் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்தும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பிவிடும். சிலசமயம் அந்த மனிதன் செத்து வெகு காலமான பிறகே அந்நிலை ஏற்படும். நமது உள்ளம் ஆத்மா, உடல் இவை அனைத்துடனும் நாம் பணியில் குதித்து மூழ்கி விட வேண்டும். ஒரே கருத்துக்காக, ஒரே ஒரு கருத்துக்காக மட்டும் தான் மற்ற அனைத்தையும் தியாகம் செய்ய ஆயத்தமாகிற வரையில் நாம் வெற்றியின் ஒளியை ஒருகாலும் காண மாட்டோம்; நிச்சயம் காணவே மாட்டோம்.

மனித குலத்துக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் தமது சொந்த சுக துக்கம், பெயர், புகழ், பலவித ஆசை நாட்டங்கள் – இவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி கடலில் வீசி எறிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு பகவானிடம் வர வேண்டும். எல்லா மகா புருஷர்களும் அப்படித்தான் சொன்னார்கள். செய்ததும் அவ்வாறே.

மறுபேச்சின்றிக் கீழ்ப்படிதல்:

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதை உள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடிப்பு – இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக பரிபூரணக் கீழ்ப்படிதல் – இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன

இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள்; கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும் பொது, தலைவனின் கட்டளைகளை மறுபேச்சின்றி கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும். மடத்தின் சாக்கடையைச் சுத்தம் செய்வதில், எஞ்சியுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்று எனது ‘குருபாயி’ சகோதரர்கள் கூறினால், அந்தக் கட்டளையை எவ்வித முணுமுணுப்பும் இன்றி கீழ்ப்படிந்து கட்டாயமாக நிறைவேற்றுவேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொது நன்மையைக் கருதி வருகிற கட்டளையை, எவ்விதமான சிறு முணுமுணுப்பும் இன்றி கீழ்ப்படிந்து நிறைவேற்ற யாருக்குத் தெரிகிறதோ, அவன் மட்டுமே உயர்ந்த தளபதியாக ஆக முடியும்.

கீழ்ப்படிதலாகிற நல்ல குணத்தைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்களது சொந்த நம்பிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது. மேலதிகாரிகளுக்கு கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் எந்த வேலையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர, ஒரு மையப் புள்ளியில் திரட்டி ஒற்றுமைப்படுத்த முடியாது. தனிப்பட்ட சக்திகளை இப்படித் திரட்டி, ஒரு மையத்தில் இணைக்காமல் எந்தப் பெரிய காரியத்தையும் நிறைவேற்ற முடியாது.

சகாக்களைப் பாராட்டி, குறைகளை இதமாக எடுத்துச் சொல்லுங்கள்:

எந்த ஒருவருடைய வழித்துறைகளையும் குலைக்காதீர்கள். குறை கூறுவதை அடியோடு விட்டுவிடுங்கள் வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்து வருவதாக உங்களுக்குத் தெரிகிற வரையில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் தவறிழைப்பதாகத் தோன்றும்போது சாவதானமாக அவர்களது பிழைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டுங்கள்.

எல்லாக் குழப்பங்களுக்கும் விஷமங்களுக்கும் மூல காரணம், ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறுவது தான். பல இயக்கங்கள் நிலைகுலைந்து வீழ்ச்சியுறுவதில் இதுவே தான் முக்கிய காரணமாக இருக்கிறது

பரஸ்பர அன்பு:

நீங்கள் ஏற்று எடுத்திருக்கிற காரியத்தில் வெற்றி பெறுவது உங்களது பரஸ்பர அன்பைத் தான் முற்றிலும் சார்ந்துள்ளது. கடும் பகை உணர்ச்சியும், பொறாமையும், மமதையும் இருக்கிற வரையில் நல்ல காலமே வராது.

உங்களது சகோதரர்களது அபிப்பிராயத்துக்கு விட்டுக்கொடுக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் சமாதானமாக, சமரசமாகப் போக முயலுங்கள். இதுதான் முழு ரகசியம்.

வியாபார ரீதியான கண்டிப்பும் இருக்க வேண்டும்:

பாரதத்திலே நடக்கிற எல்லாக் கூட்டு முயற்சிகளும் ஒரு பாபத்தின் பளுவினால் மூழ்கி மாய்ந்து போகின்றன. நாம் பொதுப்பணிகளில் இன்னும் கடுமையான, வியாபார ரீதியான கொள்கைகளை வகுத்து வளர்க்கவில்லை. காரியம் என்றால் காரியம் தான். அதில் கண்டிப்பும் நாணயமும் வேண்டும். அதில் நட்பு எதுவும் குறுக்கிடக் கூடாது. தனது பொறுப்பில் உள்ள எல்லாவற்றையும் பற்றி மிக மிகத் தெளிவான கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒருபோதும். என்னவானாலும். வேறெந்த வேலைக்காகவும் பயன்படுத்தக் கூடாது. அடுத்த கணம் பட்டினி கிடக்க வேண்டியிருந்தாலும் சரி, பரவாயில்லை. இது தான் வியாபார நேர்மை, நாணயம்.

சாசுவதமான இயக்கத்தின் ரகசியம்:

யார் வாழ்ந்தாலும் யார் இறந்தாலும் கவலையில்லை, தானாகவே வேலை செய்துகொண்டு போகக்கூடிய ஓர் இயந்திரத்தை உண்டாக்கி வைக்க வேண்டும். பாரதீயர்களாகிய நம்மிடம் ஒரு குறை உள்ளது. சாசுவதமான ஓர் இயக்கத்தை நம்மால் உண்டாக்க முடியாது. அதற்குக் காரணம் என்னெவெனில், அதிகாரப் பொறுப்பை பிறருடன் பகிர்ந்துகொள்ள நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. நாம் மறைந்துபோன பிறகு என்ன ஏற்படும் என்பது பற்றி நாம் எப்போதும் சிந்திப்பதில்லை.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

One Reply to “எழுமின் விழிமின் – 28”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *