[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தரின் வாழ்கைக் குறிப்புகள்  பற்றிய “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடர்  14 பாகங்களில் முன் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சுவாமி சித்பவானந்தரின் சிந்தனைகளை  தொகுத்து அளிக்கிறார்  அத்தொடரின் ஆசிரியர் வ.சோமு அவர்கள்.

தொடர்ச்சி..

அழுதால் அடையலாம்

மானுட சிசு ஒன்று பிறக்கும்பொழுது அழுதுகொண்டே பிறக்கின்றது. பரந்து விரிந்த இப்பாரினுள் அனுதினமும் ஆயிரக்கணக்கான சிசுக்கள் பிறக்கவும் இறக்கவும் செய்கின்றன. உலகிற்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் அழுதுகொண்டே வருகின்றது. அழாது எக்குழந்தையும் இவ்வையகத்துள் நுழைவதில்லை. குழந்தையொன்று பிறந்தவுடனே அதன் வாயிலிருந்து வெளிவரும் ஒலி வேதனைமிக்க அழுகைதான். இன்ப துன்பங்கள் நிறைந்த இவ்வுலகினுள் பிறக்கின்றேனே என்று அது ஓலமிடுகின்றது. இவ்வுலகினுள் பிறப்பெடுப்பதே பெருந்துன்பம் என்னும் பெரிய பாடத்தை அது பிறக்கும் பொழுதே கற்றுக்கொள்ளுகின்றது.

இந்துக்களைக் குறித்துச் சுவாமி விவேகானந்தர் பகரும்பொழுது, “இந்து ஒருவன் தன்னுடைய தாய்ப்பாலை அருந்தும் பொழுதே இந்த வாழ்க்கையில் ஒன்றுமேயில்லை; இது ஒரு கனவு” என்பதைக் கற்றுக் கொள்ளுகிறான் என்று பகர்ந்தருளியுள்ளார். பிறந்தவுடனே குழந்தை ஒன்றுக்கு பேச வருமாயின், இவ்வுலகம் பிறக்கும்பொழுதே துன்பத்தைத் தருகின்றது; இனி வாழும் பொழுதும் மேலும் மேலும் துன்பத்தைத்தான் தரும். ஆதலால், இவ்வுலக வாழ்க்கையே எனக்கு வேண்டாம் என்று கூறிவிடக் கூடும். அவ்வாறு கூற இயலாமையினால் தான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது வேதனையைத் தனக்குத் தெரிந்த மொழியாகிய அழுகையின் மூலம் தெரிவிக்கின்றது போலும்! இளமையிலேயே ஞானம் பெற்று ஞான உரை பேச முடிந்த சுகர், ஞானசம்பந்தர், துருவன், பிரஹலாதன் முதலியோர் பிறவா நெறியையே மேற்கொண்டது ஈண்டு நினைவுறற் பாலதாகும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அழுதுகொண்டே பிறக்க, மக்கள் அதனைச் சிரித்துக்கொண்டே வரவேற்கின்றனர். குழந்தையொன்று பிறந்து விட்டால் மக்களிடையே எவ்வளவு கொண்டாட்டம்? காணாததைக் கண்டதைப்போல அச்செயலை அவர்கள் விளம்பரப் படுத்துகின்றனர். இதுதான் உலகத்தவரது போக்கு!

மானுடன் இவ்வுலகிற்கு வரும் பொழுதும் அழுகின்றான். அவன் இவ்வுலகை விட்டுப் போகும் பொழுதும் அழுகின்றான். மனிதன் பிறக்கும் பொழுதும், இறக்கும் பொழுதும் அழுவதிலிருந்து, பிறப்பும் இறப்பும் அற்ற பிறவா பெருநிலையையே அவன் பெற விரும்புகிறான் என்பது நன்கு புலனாகின்றது. அழுகையற்ற ஆனந்தத்தையே அவன் அடைய விரும்புகிறான் என்பது தெளிவாகின்றது. இன்பதுன்பங்கள் என்னும் இருவித இழைகள் கொண்டு நெய்யப்பட்டதே வாழ்க்கை. உலகில் வாழும் எந்தவுயிரும் இன்பத்தை மட்டும் தனித்து அனுபவிக்க முடியாது. சிற்றுயிர் முதல் பேருயிர் வரையிலும் அனைத்துயிர்களும் இன்ப துன்பத்திற்கு உட்பட்டேயாக வேண்டும். மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கு ஒரே வகையான உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்வதில்லை. அவன் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உட்கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் அவனுடைய உடலானது வலிமையும் திண்மையும் பெற்று வளர்ச்சி அடையமுடியும். மனிதனது உடல் வளர்ச்சிக்குப் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தேவையாய் இருப்பதைப்போல அவனது உள்ளத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு வகையான இன்பதுன்பங்கள் தேவையாய் இருக்கின்றன. ஒரே வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் மனிதனுடைய உடல் வளர்ச்சி நின்றுவிடுவதைப் போல வாழ்வில் இன்பத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதனுடைய உள்ள வளர்ச்சி நின்றுவிடுகின்றது. இன்பத்தை மட்டும் தனித்து அனுபவிக்கும் மனிதன் மானுட வாழ்வின் அருமையினை அறிந்து கொள்ள முடியாது.


உண்பதும்உறங்குவதும்தான் வாழ்க்கை என்று அவன் எண்ணக்கூடும். அம்மனிதனது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதையே காணமுடியாது. மிருகவாழ்வு என்று தான் அதைப் பகரவேண்டும். ஆனால், கருணையே வடிவெடுத்த இயற்கைத்தாய் உயிர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறி வழங்குகிறாள். இவ்வுலகில் இன்பத்தை ஏற்கவிரும்பும் மனிதன் துன்பத்தையும் ஏற்றேயாக வேண்டும். இயற்கையின் நடைமுறையில் ஒன்றைப் புறக்கணித்துவிட்டு மற்றொன்றை மட்டும் அனுபவிக்க முடியாது. வையக வாழ்வில் இன்பத்தைக்
காட்டிலும் துன்பமே மிகுதியாக இடம் பெற்றிருக்கின்றது; சிரிப்பைக் காட்டிலும் அழுகையே அதிக இடம் பெற்றிருக்கின்றது. மக்களிடையே குழந்தை உடனே மாண்டு விட்டால் அழுகின்றனர். செல்வம் சேர்ந்தால் சிரிப்பு, சேர்த்து வைத்த செல்வம் கைவிட்டுப் போனால் அழுகை. இன்பம் வந்தால் சிரிப்பு, துன்பம் வந்தால் அழுகை. புகழ்ச்சி வந்தால் சிரிப்பு. இகழ்ச்சி வந்தால் அழுகை. இவ்வாறு மானுட வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அழுவதும் சிரிப்பதும், சிரிப்பதும் அழுவதும் தான் வாழ்க்கையென்பது நன்கு புலனாகும்.

சிவனாருக்குரிய எண்ணிறந்த திருநாமங்களுள் ருத்ரன் என்பதுவும் ஒன்று. அழச் செய்பவன் என்று அது பொருள்படுகின்றது. உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. அழுகையானது உயிர்களை மேன்மையுறச் செய்கின்றது. அழுகைக்குரிய ஆற்றலை அறிந்து அதை நாம் முறையாகப் பயன்படுத்தினால் மானுடவாழ்வை மேலாம் பெருவாழ்வாக மாற்றியமைக்கலாம். அழுகையின் மூலமே துன்பங்கலவாத பேரின்பத்தினையும் பெறலாம். காந்தம் இரும்பைக் கவர்வது போன்று உயிர்கள் அனைத்தையும் தன்பால் ஈர்க்குந்திறன் அழுகைக்குண்டு.

மானுடர் யாவரும் அழுகைக்கு உட்பட்டவரேயாவர். கல்நெஞ்சினையும் கரைத்துத் தன்வயமாக்க வல்லது அழுகை. கொடுமையே வடிவெடுத்த கொலையாளியின் உள்ளமும் தன் குழந்தையின் அழுகையின் முன் குழைந்து விடுகின்றது. சின்னஞ்சிறு குழந்தையொன்று தன்னுடைய தாயை நோக்கி அழுது தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுகின்றது. துன்புறும் மாந்தர், அழுகையின் மூலமே தங்களுடைய துன்பங்களுக்கு ஆறுதல் தேடுகின்றனர். மக்களின் உள்ளத்திலுள்ள துன்பச்சுமையினைக் குறைக்கும் ஆற்றல் அழுகைக்குண்டு. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.

உயிர்கள் அனைத்தும் இன்பத்தையே நாடுகின்றன. துன்பத்தைக் காணின் தூர விலகிச் செல்லுகின்றன. பிராணிகளின் இன்ப நாட்டம் அனைத்தும் உடலுணர்ச்சியோடு நின்றுவிடுகின்றது. உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வதோடு அவைகளின் வாழ்வு முற்றுப்பெறுகின்றது. ஆனால் மானுடன் ஒருவன் அத்தகைய வாழ்வு வாழ விரும்புவதில்லை. உண்பதில், உறங்குவதில் மட்டும் இன்பங்காண அவன் விரும்புவதில்லை. இன்னும் பல்வேறு பாங்கில் அவன் இன்பத்தைத் தேடுகின்றான். அறிவைப் பெருக்குதலில் இன்பம் காணுகின்றான் ஒருவன்; ஆற்றலை வளர்ப்பதில் இன்பங் காணுகிறான் மற்றொருவன்; இன்னுஞ்சிலர் புகழைப் பெருக்குதல், பொருளை ஈட்டுதல் போன்றவைகளில் இன்பங்காண விழைகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறு பாங்கில் இன்பத்தைத் தேடுகின்றனர்.

மானுடர் நாடுகின்ற இன்பங்கள் அனைத்தையும் தொகுத்தெடுத்துப் பேரின்பம் என்றும் சிற்றின்பம் என்றும் இரு வகையாகப் பாகுபடுத்தலாம். துவக்கம் முதல் இறுதி வரை யாண்டும் இன்பத்தை தரவல்லது பேரின்பமாகும். துவக்கத்தில் சிறிது இன்பத்தைத் தந்து முடிவில் மிகுந்த துன்பத்தைத் தரவல்ல, நிலையில்லாத இன்பத்தை சிற்றின்பம் என்று மொழிவர் மேலோர். பேரின்பம் பொறி புலன்களுக்கு அப்பாற் பட்டது, கிடைத்தற்கு அரியது.

சிற்றின்பம் பொறி புலன்களுக்கு உட்பட்டது, கிடைத்தற்கு எளியது. புலன்களால் பெறும் இன்பம் சின்னாட்களில் மறைந்தொழிதலால் அது சிற்றின்பம் என்னும் பெயர் பெறலாயிற்று; புலன்களுக்கு அப்பாற்பட்டது யாண்டும் நிலைத்து நிற்றலால் அது பேரின்பம் என்னும் பெயரைப் பெறலாயிற்று. மக்களுள் பெரும்பாலோர் தங்களுடைய அறியாமையின் காரணமாகப் பேரின்பத்தைப் புறக்கணித்து விட்டுச் சிற்றின்பத்தையே நாடி ஓடுகின்றனர். அதன் விளைவாகப் பெருந்துன்பத்திற்கும் ஆளாகின்றனர். சூரியனுடைய பிரகாசமான ஒளியைப் பற்றிய சிந்தனை விட்டிலுக்கு இல்லை;ஆனால் அது சிறு விளக்கின் ஒளியை நாடி ஓடுகின்றது;அந்தச்சிறு விளக்கோ அதன் உடலைப் பொசுக்கி விடுகின்றது. அதுபோலவே, அழிவில்லாத பேரின்பத்தினை மனிதன் அடைய முயலுவதில்லை;அழிந்து போகும் சிற்றின்பத்தையே அவன் நாடி ஓடுகின்றான்;அந்தச் சிற்றின்பமே அவனை அணு அணுவாயச் சிதைத்து விடுகின்றது என்னே மனிதன் போக்கு!

மானுட வாழ்வில் நிலைத்த இன்பத்தையும், நித்திய ஆனந்தத்தையும் பெற விரும்பும் மனிதன் சிற்றின்பத்தைப் புறக்கணித்து விட்டுப் பேரின்பத்தை நாடத் தொடங்க வேண்டும். சிற்றின்பத்தை நாடும் மனிதன் பேரின்பத்தை ஒருநாளும் அனுபவிக்க விரும்புவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதை ஒக்கும். உலகியலோடு நின்றுவிடுவது சிற்றின்பம்; உலகியலுக்கு அப்பாற்பட்டது பேரின்பம். பொறி புலன்களோடு நின்றுவிடுவது சிற்றின்பம்; பொறி புலன்களுக்கும் அப்பாற்பட்டது பேரின்பம், ஒன்று வடதுருவம் என்றால் மற்றொன்று தென்துருவமாகும். வடதிசையை விட்டு வரும் அளவிற்கு ஒருவன் தெற்கு நோக்கி வருகிறான். சிற்றின்பத்தைப் புறக்கணிக்கும் அளவிற்கு ஒருவனிடத்துப் பேரின்ப நாட்டம் தலையெடுக்கின்றது. பேரின்பத்தை நாடும் மனிதன் சிற்றின்பத்தைத் துச்சமெனத் தள்ளி விடுகிறான். எத்தனைத் துன்பங்கள் நேரிடினும் பேரின்ப நாட்டத்தினின்று அவன் புறம்போவதில்லை. எளிதில் கிடைக்கும் சிற்றின்பத்தை விரும்பி அறமற்ற செயல்களிலும் அவன் ஈடுபடுவதில்லை.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

என்பது மறைமொழி. உலகிலுள்ள எல்லாப் பொருட்களும், அப்பொருட்கள் தரும் இன்பங்கள் யாவும் நிலையற்றவையேயாகும். நிலையற்ற பொருட்களிடத்திலிருந்து நிலைபேறுடைய இன்பத்தினைத் தேடுதல் அறிவுடைமையாகாது. உலகத்துட் காணப்படும் எல்லாப் பொருட்களும் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. நாம் விடாது பற்றி நிற்கும் இப்பாருலகமே ஒரு காலத்தில் இருந்த இடம் தெரியாது ஒடுங்கிவிடக் கூடும். அப்பொழுது இவ்வுலகம் இருந்ததற்கோ, இவ்வுலகினுள் உயிர்கள் வாழ்ந்ததற்கோ ஒரு அடையாளமும் எஞ்சியிராது. அண்டங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாது அழிந்து பட்டுப்போகும் போது மானுடர் நாடும் பொன்னும் பொருளும், மாடும் மனையும், பெண்டும் பிள்ளைகளும், புகழுமா எஞ்சியிருக்கப் போகின்றன? இவை அனைத்தும் தங்கள் கண் முன்னரே அழிந்து பட்டுப் போவதை மக்கள் அனுதினமும் காண்கின்றனர். ஆயினும் தங்களது அறியாமையினால் அழியும் பொருட்களையே நாடி ஓடுகின்றனர். அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்

என்பது மறைமொழி.

பிரம்மம் நித்தியம்;ஜகத் மித்தை என்பது கோட்பாடு. உலகம் பொய் ; கடவுளே மெய் என்று அது பொருள் படுகின்றது. சதா உருமாறிக் கொண்டிருப்பது ஜகத்.  ஜகத்திலுள்ள வடிவங்கள் அனைத்தும் மாறுபடும் தன்மையது. நாமரூபங்கள் உடையவை அனைத்தும் அழிந்து போகும் இயல்பினதாகும்.

கடவுளையும் உலகின் உண்மையையும் குறித்துப் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பகர்ந்துள்ளதாவது : கடவுள் ஒருவரே உண்மையானவர். மற்ற அனைத்தும் அநித்தியமானவைகளாகும், அதாவது நிலைத்திராதவைகளாகும் என்று பகர்ந்துள்ளார். சிருஷ்டியில் தோற்றத்திற்கு வந்துள்ளவை அனைத்திற்கும் முடிவுண்டு. தொடக்கம் ஒன்றிருப்பின் அதற்கு முடிவும் நிச்சயம் இருந்தாகவேண்டும். ஆனால், இறைவனோ தோன்றாத் துணையாவான். அவருக்குத் தோற்றமும் இல்லை ; ஒடுக்கமும் இல்லை. அவருக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை. தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் என்கிறார் மணிவாசகர். அவர் பிறரால் தோற்றுவிக்கப் பட்டவரன்று. அவர் சுயம்பு ; அவர் ஆதியும் அந்தமும் இல்லா அநாதி. அவர் ஒருவரே யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைபொருளாவார். அத்தகைய அழிவில்லா நிறைபொருள் ஒன்றினாலேயே அழிவில்லா நிலைத்த இன்பத்தினைத் தரமுடியும். இந்த உண்மையினை மானுடர் அனைவரும் நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உலகம் அழியும் தன்மையது. ஆனால் அழியும் உலகில் இருந்து கொண்டே அழியாத இன்பத்தினைப் பெற முடியும். அழியும் பொருளின் துணைகொண்டே அழிவில்லாத இறைவனை அடையமுடியும். மனிதனுடைய எண்ணத்திற்கேற்ப அவனுடைய வாழ்வும் மாறியமைகின்றது. உள்ளம் உயர உயர அவனுடைய வாழ்வும் உயர்வடைகின்றது. ஒருவனுடைய மனம் மாறியமையும் அளவிற்கு அவனது வாழ்வும் மாறியமைகின்றது. மனம் திருந்தி அமையாத விடத்து அவனுடைய வாழ்வு சீர்கெட்டுப் போகின்றது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

என்பது மறைமொழி. மானுட மனம் சதா அலையும் தன்மையது. அது இடையறாது உலகப் பொருட்களை நாடி ஓடும் இயல்பினது. வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மனிதன் தன்னுடைய மனத்தின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். உலகப் பொருட்களைப் பற்றிப்பிடிக்கும் மனத்தை இறைவனைப் பற்றிப் பிடிக்குமாறு திருப்பி விட வேண்டும். உலகப் பொருட்களுக்காக அழும் மனிதன் இறைவனது திருவருளுக்காக அழுதல் வேண்டும்.

அழுத பிள்ளைக்குத்தான் பால் என்பது பழமொழி. குழந்தையொன்று அழுகின்றது;உடனே அதனுடைய தாய் ஓடோடி வந்து அக்குழந்தையை வாரியெடுத்துப் பால் தருகின்றாள். தாயைக் கண்டதும் குழந்தையினுடைய அழுகை நின்று விடுகின்றது. அதனிடத்து ஆனந்தம் மேலிடுகின்றது. ஆனால் அழாத பிள்ளைக்கோ விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றைக் கொடுத்துத் தெருவிலே விளையாடவிட்டுவிடுகின்றனர்.

உலக மக்களுள் பெரும்பாலோர் அழாத பிள்ளையின் நிலையிலேயே இருக்கின்றனர். இவ்வுலகமாகிய விளையாட்டரங்கில் பொன், பொருள், பட்டம், பதவி, புகழ் முதலிய விளையாட்டுப் பொருட்களை வைத்துக் கொண்டு விளையாடவே விரும்புகின்றனர். அவ்விளையாட்டுப் பொருட்களைப் பெறுதற் பொருட்டுப் படாதபாடு படுகின்றனர். கண்ணீர் விட்டுக் கதறியும் பதறியும் அழுகின்றனர். இதுதான் உலகத்தவரது போக்கு. இறைவனுடைய திருவருளைப் பெறதற் பொருட்டுக் கண்ணீர் விட்டுக் கதறி அழாது, உலகப் பொருட்களுக்காகக் குடங்குடமாகக் கண்ணீர் விடும் மாந்தரை பார்த்துப் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பகர்ந்துள்ளதாவது : புத்திர ஸந்தானம் கிடைக்கவில்லையென்று கண்ணீர் ஆறாகப் பெருகவிடும்மாந்தர் பலர் ; செல்வத்தைப் பெறவில்லையென்று மனம் புழுங்குபவர் பலர் ; ஆனால் ஈசுவரனைக் காண முடியவில்லையே என்று அருள்தாகம் கொண்டு அழுபவர் எத்தனைபேர்? தேடுகிறவனுக்குத்தான் பொருள் கிடைக்கும். ஈசுவரனுக்காக அழுபவன்தான் அவனைக் காண்பான்.

இறைவனைத் தாயுமானவர்,

கன்றாகிக் கதறினரக்குச் சேதாவாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணைவிண்ணே

என்றழைக்கின்றார். கருணையே வடிவெடுத்தவர் கடவுள். உள்ளன்போடு தன்னை வணங்கும் பக்தனின் தேவை அனைத்தையும் அவர் நிறைவேற்றி வைக்கின்றார். ஆனால் உண்மையான பக்தன் இறைவனிடத்து உலகப் பொருட்களில் எதையுமே வேண்டுவதில்லை. உலக வாழ்விற்கு உரியவை அனைத்தையும் அவன் துச்சமெனத் தள்ளிவிடுகின்றான். இறைவனுடைய பாதார விந்தங்களில் மாறாத பக்தி ஒன்றை மட்டும் அவன் பரிந்து வேண்டுகின்றான்.  இடையறாது இறைவனின் கழல் குறித்துக் கதறி அழுவதை மட்டுமே வேண்டுகின்றான்.

உற்றாரை யான்வேண்டேன்;
ஊர்வேண்டேன், பேர்வேண்டேன்;
கற்றாரை யான்வேண்டேன்;
கற்பனவும் இனியமையும்;
குற்றாலத் தமர்ந்துறையும்
கூத்தா! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.

யானே பொய், என் நெஞ்சும்
பொய், என் அன்பும் பொய்;
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே;
தேனே! அமுதே! கருப்பின்
தெளிவே! தித்திக்கும்
மானே! அருளாய், அடியேன்
உனைவந் துறுமாறே.

என்னுந் திருவாசகத்தால் மாணிக்கவாசகர் தன்னைத் தடுத்தாட்கொண்ட இறைவனிடத்து விண்ணப்பிக்கிறார். பரிசுத்தமான உள்ளமும், உண்மையான அருள்தாகமும் கொண்டு அழுபவர்கள் இறைவனுடைய அருளைப் பெற்றுப் பேரானந்தத்தில் திளைப்பாளர்கள்.

இறைவன் உறை கோவில்

”நினைப்பவர் மனம் கோயில் கொண்டவன்” என்றும்,  “முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – அகமலால் கோயிலில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்றும் வருவன அப்பர் பெருமானின் அருள் வாக்குகள். இவ்வருள்வாக்கிற்குப் போதிய விளக்கமாக துளசி தாசர்தம் இராமாயணத்தின் (ஸ்ரீ ராமசரித மானஸம்) செய்தி ஒன்று அமைகின்றது.

தந்தையார் கட்டளையை ஏற்றுப் புண்ணிய நதிகளாடிப் புனிதரை வழிபாடுற்று வருதற்காக, சீதாபிராட்டியுடனும், தம்பி இலக்குவனோடும் வனவாசம் செய்யப் புறப்படும் ஸ்ரீ ராமபிரான் வழியில் வால்மீகி முனிவரது குடிலை அடைகின்றார். அங்கு அவரை நோக்கி, ஐயனே! அடியேன், சிறுகுடில் ஒன்று அமைத்துக் கொண்டு சீதையோடும் இலக்குவனோடும் வாழ்ந்திருப்பதற்கு அமைந்த இடம் ஒன்றைத் தாங்கள்தான் எனக்குத் தேர்ந்து கூறவேண்டும் என்பதாகப் பணிவோடு வேண்டினார்.

முனிவர் பெருமான் புன்னகை பூத்த முகத்தோடும் ஸ்ரீராமபிரானை நோக்கி, யான் தங்கி வாழ்தற்கமைந்த இடமொன்றைத் தேர்ந்து கூறுங்கள் என்று வேண்டுகின்றனையே! ஈதென்ன விளையாட்டு! நீ இல்லாத இடம் ஒன்றை எனக்குக் கூறு. அதன் பின்னர் உனக்கியைந்த இடமொன்றை யான் குறித்துச் சொல்வேன் என்ற விநயத்துடன் விடை பகர்ந்தார். ஸ்ரீராமபிரான் சொல்வதொன்றும் அறியாராய் அருள் தவழும் திருமுகத்தினராய்த் திகைத்து நின்றார்.

பின் முனிவர் சிரித்த முகத்தோடு மகிழ்ச்சி மேலிடத் தம் எளிய, இனிய குரலில்
புருஷோத்துமனான ஸ்ரீ ராமபிரானின் திருக்கல்யாண குணங்களையும், அவனது அடியவர்தம் அன்பின் திறத்தையும் வியந்து போற்றும் போக்கில்.” நீ வாழ்தற்கிசைந்த நல்லிடங்கள் சிலவற்றைக் கூறுகிறேன், கேட்பாயாக” என்று கூறத் தொடங்கினார்.

இன்ப வெள்ளமெனப் பெருக்கெடுத்துவரும், கேட்க கேட்க இனிக்கும் நின்சரிதை கேட்டுப் பேரின்பப் பெருநிலை உறுவோர் எவரோ அவர்தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

பெருங்கடல்களும், ஆறுகளும், ஏரிகளும் இருக்க மழைத்துளியையே நச்சி உயிர் வாழும் வானம்பாடிப் புள் போன்று உன் திருவுருவையே சிந்திப்பவர் எவரோ அவர் தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

மானஸ தடாகத்தில் உள்ள முத்துக்களைக் கண்டு பொறுக்கி மகிழும் அன்னப்புள் போன்று என்றென்றும் நின் திருக்கல்யாண குணங்களிலேயே ஈடுபட்டு, அவற்றைப் புகழ்ந்துபேசி இன்பம் காணும் அன்பர் எவரோ அவர்தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

உனக்கு நிவேதனமாக அமைந்த பொருள்களையே உண்டும் உடுத்தும் உயிர் வாழ்பவரும், அன்போடும் பணிவோடும் நின் திருவடிகளை வழிபட்டு நீ கோயில் கொண்டு விளங்கும் திருத்தலங்கட்குச் சென்று நின் திருவுருவைக் கண்குளிரக் கண்டு களிப்போர் யாவரோ அவர் தம் உள்ளம் நினக்கு ஏற்ற உறைவிடமாகும்.

தம் பெண்டு, பிள்ளை, சுற்றத்துடன் எக்காலமும் நின் திருநாமத்தையே உச்சரித்து, தமக்குக் கிடைத்த மேலான பொருள்கள் அனைத்தையும் நினக்கு நிவேதனமாக வழங்கி, நல்லோரை உண்பித்து உயர்வு செய்பவரும், உன்னை வழிபடுவது போன்று நின் அடியவரையும் வழிபட்டு இன்புறுபவரும் எவரோ அவர்தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

பொய், கொலை, களவு, காமம், சினம் ஆகிய பகைகளை வென்று விருப்பு, வெறுப்பிற்கு இடமின்றி யான் என்ற செருக்குணர்வு அகன்ற தூயோர் எவரோ அவர் தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

பிறர்க்கு உழைப்பதே பேரின்பம் எனக்கொண்டு, மனம், மொழி,மெய்களால் தம்மைத் தூய தொண்டில் ஈடுபடுத்தி, இன்பம் துன்பம், புகழ் இகழ் என்ற வேறுபாட்டில் மனம் வையாது நின்னைச் சரண் அடைந்தவராய், உண்ணும் போதும், உறங்கும் போதும் உன்னையே நினைந்து உயிர் வாழ்வோர் எவரோ அவர்தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

பிறன் மனையாளைத் தன் தாயெனக் கொண்டு அன்பு செய்பவரும், பிறர் பொருளை நஞ்சு எனக்கொண்டு விலக்குவோரும், பிறர் நன்மை கண்டு இன்புறுவோரும், பிறர் துன்பம் கண்டு துடிப்பவரும், நின்னையே பற்றுக் கோடாகக் கொண்டு உயிர் வாழ்பவரும் யாவரோ அவர்தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

நின்னைத் தாயாகவும், தந்தையாகவும், தம்மை வாழ்விக்க வந்த குருவாகவும், நண்பனாகவும், தம் இன்னுயிர்த் தலைவனாகவும் கொண்டு அன்பு செய்து இன்பம் காண்பார் எவரோ அவர்தம் உள்ளம் நீ இனிது வாழ்ந்திருக்க ஏற்ற உறைவிடமாகும்.

நன்மையை ஏற்றுத் தீமையை ஒதுக்குவோரும் பசுக்கள் பொருட்டும்,பக்தர்கள் பொருட்டும் துயருறுவோரும் ஒழுக்கத்தில் உயர்ந்தோரும் ஆகிய அடியவர் யாவரோ அவர்தம் உள்ளம் நினக்கு அமைந்த உறைவிடமாகும்.

நின் பெருமையையும் தம் சிறுமையையும் உள்ளவாறு உணர்ந்து நின்னை நேசிப்பவரும் நின் நேசர்கள்பால் அன்பு பூண்டு நிற்பவரும் ஆகிய அடியவர் எவரோ அவர்தம் உள்ளம் நினக்கமைந்த திருக்கோயிலாம்.

இனம், குலம், உற்றார், பெற்றோர் உடன் பிறந்தார், சுற்றம், செல்வம், இன்பம் முதலியவற்றில் பற்றின்றி நின்னையே பற்றுக்கோடாகக்கொண்டு உயிர் வாழ்வோர் எவரோ அவர் தம் உள்ளம் உனக்கு ஏற்ற உறைவிடமாகும்.

சுவர்க்க நரகங்களையோ, வீடுபேற்றையோ பொருள் செய்யாது நினக்குக் குற்றேவல் செய்வதையே பொருளாகக் கொண்டு நினக்கு அன்பு செய்து ஒழுகுவதே பெரும் பேறு என இன்புற்று வாழ்வோர் யாவரோ அவர்தம் உள்ளம் நின்வாழ்விற் கியைந்ததிருக்கோயிலாகும்.

என்பதாக அரிய உண்மைகள் பலவற்றையும் தன்னை மறந்த நிலையில் வெளியிட்டு நிறைவு எய்தினார் வால்மீகி முனிவர். முனிவர் மொழிந்த சுவையான கருத்துக்களில் மனம் வைத்த ஸ்ரீ ராமபிரான் முனிவர் பெருமானின் அன்புக்குப் பொருளாகி அன்றலர்ந்த செந்தாமரையினை வென்ற திருமுகத்தினராய் அருட்காட்சி வழங்கி நின்றார்.

அறம் வளர்த்த பெருமானாகிய அவரை இடையறாது நினைந்து நினைந்து, உள்ளம் நைந்து, உருகி உருகி இன்பநீர் பெருக்கி, உள்ளத்தைத் தூய்மை செய்து உயர் பெருந்திருக்கோயிலாக்குவது நம் கடன், நம்மை உய்யக்கொள்வது அவரது அருட்பெருக்கு.

என்னதியான் என்னல்அற்றோர்
எங்கிருந்து பார்க்கினும்நின்
சன்னிதியாம் நீபெரிய சாமி பராபரமே!

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசைகொள்ள
வாராய் பராபரமே!

– தாயுமானவர்

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்”

  1. உங்களுடைய ஒவ்வொரு வெளியீடும் உண்மைகளை ஒப்பில்லாதவகையில் உரித்துக்கட்டுகிறது. நமது பண்பாடும் பாரம்பரியமும் ஏன் போற்றப்படவேண்டும் ?
    என்பதை இளநெஞ்சங்களில் மட்டுமல்ல முதிர்ந்தவர்களும் இன்னும் அறியாமையிலும் ,அகடவிகடங்களிலும் ஆழ்ந்து அலைகழிகிறார்கள்,ஆகவே அனைவரும் திருந்த ,அனுபவிக்க அடிகோலுகிறது ,
    வாழ்க உங்கள் சிறந்த தொண்டு !
    அன்புடன் உங்கள் …..venkatasubbareddy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *