[பாகம் 22] அமுதாக மாறிய மது

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

சேரிடம் அறிந்து சேர் என்பது கோட்பாடு. சார்ந்தவன் வண்ணமாதல் உயிர்களின் இயல்பு. தீயைச் சார்ந்த இரும்பானது தீமயமாக மாறியமைகின்றது. ஒன்றுக்கும் உதவாத கரி தீயுடன் சேருமிடத்துத் தீயின் தன்மையைப் பெறுகின்றது. நிலத்திற்கேற்ப நீரின் தன்மை வேறுபடுகின்றது. நல்ல நிலத்தில் தூய நன்னீரும், உவர் நிலத்தில் உப்பு நீரும் இருக்கக் காணுகின்றோம். இந்த உண்மை மானுட வாழ்விற்கும் பொருந்துவதாகும். மனிதனுடைய சேர்க்கைக்கேற்ப அவனுடைய வாழ்வு மாறியமைகின்றது. ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொருத்து உருவாகின்றது. சேர்க்கைக்கேற்ப ஒருவனுடைய வாழ்வு மேலானதாகவோ அல்லது கீழானதாகவோ வடிவெடுக்கின்றது.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

என்பது மறைமொழி.

ஆடுகளுக்கிடையில் வளர்ந்து வந்த சிங்கக்குட்டி ஆடுகளைப்போலவே நடந்துகொள்ளவும் ஆடுகளைப்போலவே கத்தவும் செய்ததாகக் கேட்டிருக்கின்றோம். ஆற்றலே வடிவெடுத்த சிங்கம் ஆடுகளுடன் வளர்ந்த காரணத்தால் ஆடுகளின் இயல்பைப் பெற்றுவிட்டது. சிங்கத்தின் ஆற்றல் அதனிடத்திருந்து அழிந்து போய்விடவில்லை. ஆற்றல்கள் அனைத்தும் அதனிடத்திலே மறைந்து கிடக்கின்றன. தன்னுடைய நிஜசொரூபத்தை அறியாத காரணத்தால் அது தன்னையும் ஆட்டு இனத்துடன் சேர்த்துக்கொண்டு ஆடுகளைப் போலவே வாழ ஆரம்பித்து விட்டது. இவ்வாறு ஆடுகளுக்கிடையில் வளர்ந்து வந்த சிங்கத்தை மற்றொரு சிங்கம் கண்டது. அதன் பரிதாபகரமான நிலையினைக் கண்டு இரக்கமும், ஆச்சரியமும் கொண்டது. உடனே அதை அப்பால் கடத்திச் சென்றது. அதனுடைய நிஜசொரூபத்தை அதற்கு எடுத்துப் புகட்டிற்று. நீ அவைகளைப்போன்று ஆட்டு இனத்தைச் சார்ந்தவனன்று. என்னைப்போன்று சிங்கத்தின் இனத்தைச் சார்ந்தவன் என்று உணர்த்திற்று. தன்னுடைய நிஜசொரூபத்தை அறிந்த அதனிடத்து மறைந்து கிடந்த ஆற்றல்கள் வெளிப்படலாயின. உடனே அது கர்ஜிக்கவும் செய்தது.

ஒவ்வொரு மனிதனிடத்தும் தெய்வீக இயல்புகள் புதைந்து கிடக்கின்றன. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம். ஆனால் இந்த மேலாம் உண்மையை மனிதன் உணர்ந்து கொள்வதில்லை. தான் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதை அவன் தெரிந்து கொள்ளுவதில்லை. தான் ஆற்றல்கள் அனைத்தின் உறைவிடம் என்பதையும் அவன் அறிந்துகொள்ளுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னை ஓர் அற்ப ஜீவனாகவே கருதுகிறான். என்னால் என்ன ஆகும் என்று எண்ணுகிறான். தன்னம்பிக்கை என்பது அவனிடத்துக் கொஞ்சமும் இருப்பதில்லை. மக்களுள் பெரும்பாலோர் இந்த இழிநிலையில் இருக்கின்றனர். இவ்வாறு மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவற்கு அவர்களிடத்துள்ள அறியாமையே காரணமாகும். மக்களிடத்துள்ள இந்த அறியாமையாம் இருளைப் போக்குவதற்கு அவ்வப்பொழுது சான்றோர்கள் பலர் தோன்றுகின்றனர். அவர்கள் மக்களுக்கு அறவுரைகள் பல எடுத்துரைக்கின்றனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுகின்றனர். அச்சான்றோர் காட்டும் செந்நெறியைப் பின்பற்றுவோர் நாளடைவில் சான்றோராக மாறியமைகின்றனர். சான்றாண்மை அவர்களுக்குரிய சொத்தாகின்றது. கெட்டவனும் பெரியோர்களுடன் இருக்கும்பொழுது நல்லவனாகக் கருதப்படுகிறான். நல்லவனும் கெட்டவர்களுக்கிடையே இருக்கும்பொழுது தீயவனாகக் கருதப்படுகின்றான். பனை மரத்தடியில் நின்றுகொண்டு பால் அருந்தினாலும் கள் குடிப்பதாகத்தான் கருதப்படுவான். மாட்டுத் தொழுவத்தில் இருந்து கொண்டு கள் குடித்தாலும் பால் அருந்துவதாகத் தான் எண்ணப்படுவான். காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான். சென்ற நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த கிரீச சந்திரகோஷரது வரலாறு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு, துறவிகள் மட்டுமின்றி இல்லறத்தாரில் சிலரும் சீடர்களாய் அமைந்தனர். அவர்களுள் கிரீச சந்திரகோஷரும் ஒருவராவார். அவர் நன்கு கற்றவர்; சிறந்த நாடகாசிரியரும், நடிகருமாவார். நாடகம் எழுதுதலிலும், தாம் எழுதிய நாடகத்தை மக்களிடையே திறம்பட நடித்துக்காட்டுதலிலும் வல்லவராய் விளங்கினார். நாடகம் பார்ப்பவர்களைத் தாங்கள் பார்ப்பது நாடகம் என்பதையே மறந்துவிடச் செய்யும் அளவிற்கு அவ்வளவு திறமையாகவும் உருக்கமாகவும் நடித்துக் காட்டுவார். அவர் காலத்தில் வங்காளத்தில் அவருக்கு நிகரான நாடகாசிரியர் வேறொருவருமில்லை எனப் பகரலாம்.

மானுடர் அனைவரிடத்தும் உயர்ந்ததும் தாழ்ந்ததுமான குணங்கள் அமைந்து கிடக்கின்றன. கிரீச சந்திரகோஷரிடமும் நல்லதும் தீயதுமான பலகுணங்கள் தென்பட்டன. அவற்றுள் நற்குணங்கள் எண்ணிக்கையைவிடத் தீய குணங்கள் எண்ணிக்கையே மிகுந்திருந்தன. அவர் ஆற்றிய செயல்களில் நல்ல செயல்களைவிடப் புல்லிய செயல்களே மிகுந்திருந்தன. நெறியற்ற வாழ்வு, கொலை, களவு, போன்ற பயங்கரமான கொடிய செயல்களையும் அவர் தயக்கமின்றிச் செய்திருக்கின்றார். சுருங்கக்கூறின் பஞ்சமா பாதகங்களையும் அவர் புரிந்திருக்கின்றார் என்று பகரலாம்.

சிருஷ்டியில் நிகழும் செயலிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. உயிர்கள் அனைத்தும் நன்மை, தீமை இன்ப துன்பம் என்னும் இருமைகளுக்கு உட்பட்டவைகளேயாகும். மக்களால் தீயோரென்று புறக்கணிக்கப்படுபவரிடத்தும் சில நற்குணங்கள் இருக்கக் காணுகின்றோம். கிரீச்சந்திரகோஷரிடத்து அமைந்திருந்த கெட்ட குணங்களுக்கிடையில் நல்ல குணமும் இருந்தது. மானுடர் அனைவரிடத்தும் இருக்கவேண்டிய மிகவுயர்ந்த குணம் ஒன்றை அவர் பெற்றிருந்தார். அதுதான் வாய்மை அல்லது சொன்னசொல் தவறாமையாகும். உலகில் பெரும்பாலான மக்களிடத்து இக்குணத்தைக் காண்பது அரிதினும் அரிதாக இருக்கின்றது. மக்களுள் பெரும்பாலோர் சொல்லுவதொன்றும் செய்வது வேறொன்றுமாகக் காட்சியளிக்கின்றனர். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதில்லை. வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒருவன் இத்தகையவர்களுடைய தொடர்பைப் புறக்கணிக்க வேண்டும்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

என்பது மறைமொழி. ஆனால் கிரீச சந்திரகோஷர் இதற்கு முற்றிலும் நேர்மாறானவர். சொல்லுவதொன்றும் செய்வது வேறொன்றும் அவரிடத்து அறவே கிடையாது. இன்னது செய்வேன் என்று அவர் வாக்குக்கொடுத்து விட்டால் தன்னுடைய உயிரையும் கொடுத்து அவ்வாக்கை நிறைவேற்றி விடுவார். அவர் குடிப்பதிலும், கூத்தாடுதலிலும் வல்லவராய் இருந்தது போலவே சொன்ன சொல்லை நிறைவேற்றுதலிலும் வல்லவராய் விளங்கினார். வாய்மைகாக்கும் பெரு வீரராய்த் திகழ்ந்தார். மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களை உடையவன் மனிதன். திரகரணங்களைக் கொண்டு மனிதன் செயல்புரிகின்றான். மனத்திற்கு உள்ளம் என்பது மற்றொரு பெயர். உள்ளத்தால் சத்தியத்தைக் கடைப்பிடிக்குமிடத்து அது உண்மை எனப்படுகின்றது. உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி மொழியுமிடத்து அது வாய்மை எனப்படுகின்றது. மொழியால் மொழிந்ததை மெய்யால் செய்யுமிடத்து அது மெய்ம்மை எனப்படுகின்றது. திரிகரணங்களைக் கொண்டு கடைப்பிடிக்கப்படும் உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகிய மூன்றும் சத்தியம் என்னும் ஒரு சொல்லில் அடங்கி விடுகின்றன. சத்தியத்திற்கு நிகரான உயர்ந்த குணம் வேறொன்றுமில்லை. குணங்கள் அனைத்தும் சத்தியத்தில்அடங்கிவிடுகின்றன.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்,
வாய்மையின் நல்ல பிற

என்பது மறைமொழி. இறைவனே சத்திய சொரூபியாவான். உலகம் அழியினும் அழியாது எஞ்சியிருப்பது சத்தியம் ஒன்றுதான். மானுட வாழ்விற்கு வெற்றியை நல்குவது சத்தியந்தான்.

சத்தியமே வெற்றிகொள்ளும்; அசத்தியம் அன்று. தேவயானம் என்ற பாதை சத்தியத்தினாலேயே ஆகியுள்ளது என்பது கோட்பாடு. இந்த அரும் பெருங்குணத்தைக் கிரீச சந்திரகோஷர் பெற்றிருந்தார். இந்த ஒரு குணமே அவரைப் பரம பக்தராக, பரவாழ்வு வாழ்பவராக, பரமஹம்ச தாசராக மாற்றியமைத்தது. இவரிடத்திருந்த சொன்ன சொல் தவறாமை என்னும் உயர்குணத்தின் பொருட்டே ஸ்ரீராமகிருஷ்ணரும் இவரைத் தடுத்தாட்கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சார்ந்த கிரீச சந்திரகோஷர் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை எண்ணி எண்ணி மனம் வருந்தினார். தான் செய்த தகாத செயல்களைக் குறித்து வெட்கமும் வேதனையும் அடைந்தார். பரமஹம்சரின் பெருமையினையும் தன்னுடைய சிறுமையினையும் நினைந்து நினைந்து நெஞ்சம் புண்ணானார். பரமஹம்சர் மானுட உடல் தாங்கிய தெய்வமாய் விளங்குவதையும், தான் மானுட உடல் தாங்கிய மிருகமாய் இருப்பதையும் கூர்ந்து கவனித்தார். அடிக்கடி ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்துச் சென்று அவர் புகட்டும் அருளுரைகளைச் செவிமடுக்கலானார். அதன் விளைவாக அவரிடத்து அருள் நாட்டம் தலையெடுக்கலாயிற்று. பரவாழ்வு வாழவேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தே உதிக்கலாயிற்று. பெருவாழ்வு வாழவிரும்பிய அவர் தனக்கு ஏதாகிலும் நல்லது செய்யவேண்டுமென்று ராமகிருஷ்ணரிடத்து விண்ணப்பித்துக் கொண்டார். இது குறித்து இருவருக்குமிடையில் கீழ்வருமாறு சம்பாஷணை நிகழலாயிற்று.

ராமகிருஷ்ணர்: நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கடவுளின் நாமத்தை நூற்றெட்டுமுறை ஐபம் செய்து வருவாயானால் உனக்கு நன்மை விளையும்.

கிரீச சந்திரகோஷர்: அவ்வாறு அனுதினமும் செய்து வர என்னால் முடியாது.

ராமகிருஷ்ணர்: அவ்வாறு செய்வதற்கு உன்னால் ஏன் முடியாது?

கிரீசர்: சொன்னால் சொன்னது போல் செய்தாக வேண்டும். நாள்தோறும் ஜபம் செய்துவர என்னால் முடியாது.

ராமகிருஷ்ணர்: நாள் தவறாமல் மூன்று முறையாகிலும் இறைவனின் நாமத்தை உச்சரித்தாலும் அதற்கேற்ற பலன் உண்டாகும்.

கிரீசர்: அதுவும் என்னால் இயலாது.

ராமகிருஷ்ணர்: தினம் காலையில் எழுந்தவுடன் ஒரு முறை, இரவில் படுக்கச் செல்வதற்குமுன் ஒருமுறை இறைவனின் நாமத்தை ஓதி வருவாயாக.

கிரீசர்: இதுவும் என்னால் சாத்தியமாகாது. தங்களால் ஏதாகிலும் நன்மை செய்ய முடியுமானால் செய்யுங்கள்.

ராமகிருஷ்ணர்: சரி, சரி. அது போகட்டும், மற்றொன்று கூறுகிறேன் கேள். நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு. அவ்வாறு செய்ய உனக்கு இயலுமா?

இதைக்கேட்டு கிரீச சந்திரகோஷர் சற்று நேரம் யோசித்தார். பின்னர் ராமகிருஷ்ணரை நோக்கி, “நினைவு வரும்பொழுது தானே? சரி, நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் தங்களுக்கு அர்ப்பணித்து விடுகின்றேன்!” என்று வாக்குறுதி கொடுத்தார்.

இந்த வாக்குறுதியைத் தந்த பின்னர் அவரால் ஒரு தீய செயலும் செய்ய முடியவில்லை. பழைய நினைவின் தூண்டுதலால் ஏதாகிலும் செய்யப்புகுவார்; ஆனால் உடனே ராமகிருஷ்ணரது நினைவு அவருள்ளத்தில் உதித்துவிடும். அப்பொழுதே அச்செயலை விட்டுவிடுவார். சிறிது நேரத்தில் ராமகிருஷ்ணரது நினைவு அவருள்ளத்திலிருந்து மறைந்துவிடும். மீண்டும் பழைய நினைவுகள் தலையெடுக்க ஆரம்பிக்கும். உடனே மதுப்புட்டியை எடுத்துக் குடிக்கப்போவார். ஆனால் மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரது நினைவு வந்துவிடும். சீ, சீ இநத அற்பச் செயலையா அம்மகானுக்கு அர்ப்பணிப்பது என்று மதுப்புட்டிகளைத் தூக்கி எறிந்து விடுவார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கத் தகாதது என்று ஒருமுறை ஒதுக்கிய செயல்களை அவர் மீண்டும் கண்ணெடுத்தும் பாரார். கனவிலுங்கூட அச்செயல்களின் நினைவு அவருக்குத் தோன்றாது. தினந்தோறும் தீமைபுரிவதும் தினந்தோறும் ஆண்டவனிடம் மன்னிப்புக்கேட்பதும் அவருடைய பழக்கமன்று. ஒருமுறை புறக்கணிக்கப்பட்ட செயல்களை அவர் வாழ்வு முழுவதும் மீண்டும் கண்ணெடுத்துப் பாரார். இவ்வாறு அவரிடத்திருந்த ஒவ்வொரு புல்லிய செயலும் அவரிடத்திருந்து விடைபெற்றுச் சென்றன. இறுதியில் அவர் தூய்மையை வடிவெடுத்தவராகத் துலங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரைச் சார்ந்த அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மயமாகவே மாறியமைந்தார். அவருடைய வாழ்வோடு தன்னுடைய வாழ்வையும் இணைத்துக் கொண்டார். தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருடைய பாதாரவிந்தங்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டார். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரை முற்றிலும் தனக்குரியவராக ஏற்றுக்கொண்டார். மண்ணாக இருந்த அவரைப் பொன்னாக மாற்றிவிட்டார். மண்ணில் புரண்டுகிடந்த அவரை விண்ணில் வீற்றிருக்கச் செய்துவிட்டார். மதுவைப் பருகி மயக்கமுற்ற அவரை அமுதை அருந்தி ஆனந்திக்கச் செய்துவிட்டார். சான்றோரைச் சார்ந்த சிறியோரும் சான்றோராக மாறியமைவர் என்பதற்குக் கிரீச சந்திரகோஷரது வரலாறு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

 

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *