சைவத்திருமுறைகள் தொடரட்டும்…

முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய், பின்னைப்புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனாய் நிற்பவன் பரம்பொருளான சிவபெருமான். அவனைப் போலவே, பழமையும் புதுமையும் பொலிவது சைவசமயம்.

திருமறை என்கிற ‘வேதத்தை’ச் செய்தவன் இறைவன் சிவன். இது சைவசமயிகளின் நம்பிக்கை. வேதத்திற்கு ஆரம்பம் என்பது யாருமே சொல்லாதது. அப்படி ஒன்று இல்லை என்பதே சைவர்களின் நம்பிக்கை.

ஆனால், வேதத்தை இறைநூல் என்று ஏற்றுக்கொண்டாலும், கிறிஸ்துவ, முகமதிய சமயங்கள் போல, அதுவே முடிந்த முடிவு என்றும், அதற்கு மேலே வேறுநூல் பிறத்தல் தவறென்றோ ஹிந்துக்கள் நம்பவில்லை.

இதனால் தான் ஸ்ருதிகளான வேதங்களைத் தொடர்ந்து ஸ்மிருதிகளும், புராணங்கள், இதிஹாசங்கள், ஆகமங்கள், தோத்திரங்கள், சாஸ்திரங்கள், தத்துவங்கள் என்றெல்லாம் நம் சமய நூல்கள் விரிந்தன. விரிகின்றன.முடிவின்றித் தொடர்கின்றன.

‘இல்லாததொன்றிலிருந்து இருப்பது பிறவாது’ என்பது சைவசித்தாந்தம். எனவே, தான் இறைவாக்கின் தொடர்ச்சியாக ‘மானிட வாக்கும்’ சைவத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. வெளிப்படா நிற்கும் இறைவனே அநுபூதிமான்களின் வாயிலாய்ப் பேசுவதாய் அவை கொள்ளப்பட்டன. இவ்வாறு சைவர்கள் ஏற்றுப் போற்றியதால் தான் சைவநூல் வரிசை பல்கிப்பெருகிற்று. இதனால் பின் வந்த நூல்களும் முன் வந்த திருமறையாம் வேதத்திற்கு ஒப்பாய் வைத்துப் போற்றப்பட்டன.

தமிழிலக்கணமும் இறைவனே முதல் நூலோன் என்று கூறும் –

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூலாகும்

என்கிறது தொல்காப்பியம்.

இவ்வாறு தமிழோடு பின்னிப்பிணைந்து பிற்காலத்தில் தோன்றிய அருளாளர்களின் வாக்குகளையும் அதன் தகுதி கண்டு ஏற்றுப் போற்றிய திறனாலேயே சைவம் நிமிர்ந்து நிற்கிறது.

இன்றைக்கு திருமுறைகளை விடுத்து அதற்கு முந்தைய வேதாகமத்தை மட்டுமே சைவம் என்று சிந்திப்பது எவராலும் இயலாத ஒன்றேயாம். அப்படிச் சிந்தித்தால் அது சைவமாயும் தோன்றாது. இதனால் தான், தன்னை அழிக்க வந்த புறச்சமயங்கள் அழிந்து போக, தானே வியாபகமாய் நிற்கும் வெற்றி உடையதாகச் சைவம் விளங்குகின்றது.

‘தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா பின்பு
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா’

என்ற சித்தாந்த ஆசிரியர் உமாபதி சிவாச்சார்யாரின் கருத்தும் இதனுடன் இணைத்து நோக்குதற்குரியது.

இதே போலவே இறைமறுப்பையும் கூட ஏற்றுக் கொள்ள வல்ல சைவத்தின் சீர்மையையும்
பெருமையையும், “அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்” என்ற சுந்தரர் திருவடிவகள் காட்டி நிற்பதாகச் சுட்டுவர் அறிஞர்.

இவ்வாறு தகுதி கண்டு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சைவத்திருமரபு இடையில் சில இடர்களுக்கு உள்ளாயிற்று. கட்டமைக்கப்பட்ட, நிர்வாகவியலுக்கு உட்படுத்தப்பட்ட சமயங்களான கிறிஸ்துவம் போன்ற சமயங்களின் வருகையும், உலகியல் வளர்ச்சி வேகமும் சைவத்தையும் ஒரு எல்லைப்படுத்த வேண்டும் என்ற ஆவலை அவ்விடைக்காலத்தில் உருவாக்கியிருக்கலாம். சைவத்தின் மேற் கொண்ட அளவற்ற அக்கறையே இதற்கு காரணமாயிருந்த போதிலும் அது சைவத்திற்கு நன்மை தருவதாக இல்லை.

மற்றைச்சமயிகள் போல, சீருடை ஒன்றைப்புனைந்து கொண்டு குறித்த ஒரு நாளில், ஒரு வேளையில் ஆலய வழிபாடாற்றல், ஒரு சமயத் தலைமைப் பீடம் என்பது போல உருவானதே இந்த திருமுறைகளை எல்லைப் படுத்தும் எண்ணமுமா என்பது ஒரு சிந்தனைக்குரியது.

தேவாரம் வேதசாரம் என்றும் திருவாசகம் உபநிடதசாரம் என்றும் யாழ்ப்பாணத்துக் காசிவாசி செந்திநாதையர் அவர்கள் அறுதி இட்டு உரைத்திருக்கிறார்கள். இப்படி அற்புதமான திருமறைச்சாரமாக அமைந்த தெய்வத் தமிழ்த் திருமுறைகள் எங்கும் சிதறிக் கிடந்தன. இவற்றை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அவை சைவசமயிகளின் புழக்கத்தில் வரவேண்டும் என்றும் எவரும் விரும்புவது இயல்பு. அது போலவே, இத்தொகுப்பினைச் செய்ய சோழப்பேரரசனான இராஜராஜன் விழைந்தான்.பிள்ளையார் பேரருள் பெற்ற நம்பியாண்டார்நம்பி அடிகள் அதற்கு உற்ற துணை செய்தார். அரசன் ஆணையை இறைவன் ஆணையாய் ஏற்று சிவப்பணியான திருமுறை தொகுப்புப் பணியை நம்பி அடிகள் செய்திருக்கிறார்.பொல்லாப் பிள்ளையாரிடம் பாடம் கேட்ட அநுபூதிச் செல்வரான நம்பியாண்டார் நம்பிகள் சைவத் திருமுறைகளைப் பதினொன்றாக வகுத்தருளியிருக்கிறார்.

ஆனால், ஆய்வாளர்கள் சிலர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தது முதல் ஏழு திருமுறைகளையே என்று குறிப்பிடுகின்றனர்.. தேவாரத்தைத் தொகுப்பதே அவர் பணியாய் இருந்தது என்பது அவர்களின் வாதம். அதனாலேயே அவ்வேழு திருமுறைகளும் ‘அடங்கன் முறை’ என்று அழைக்கப்படுகிறது என்று அவர்கள்
காட்டுகின்றனர். அவர்களின் கருத்தின் படி நம்பியடிகள்- இராஜராஜன் காலத்தின் பின், காலத்தின் தேவை உணர்ந்தே எட்டாம், ஒன்பதாம், பத்தாம், பதினோராம் திருமுறைகள் தொகுக்கப்பட்டதாக குறிப்பிடுவர். ஆனால், உமாபதி சிவாச்சார்யார் பாடியருளிய ‘திருமுறை கண்ட புராணத்தில்’ பதினொரு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பியடிகளே தொகுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எவ்வாறோ, இது ஒரு அரசபணியாகவே நடந்தேறியிருக்கிறது. விரவிக்கிடந்த ஓலைச் சுவடிகளை எல்லாம் ஒன்று சேர்ப்பதும், அவற்றைத் தொகுப்பதும், தொகுப்பதற்குரிய நிதிப்பங்களிப்பினைச் செய்வதும், அத்தொகுதியை சைவ உலகில் பரவச் செய்வதும் அக்காலத்தில் அரசனால் அன்றி மற்றோரால் ஆகவல்ல காரியமல்ல.

தில்லையிலே திருச்சிற்றம்பலமருகில் தேவாரச்சுவடிகள் ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டுக் கிடந்தன என்றும், தேவாரமுதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியவர்களின் திருவுருவங்களைக் கொண்டு சென்று அவற்றின் திருமுன்னிலையில் அத்தேவாரஅறை திறப்பிக்கப்பட்டதென்றும் அங்கு கிடைத்த தேவாரங்களே முதல் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டன என்பதும் திருமுறைகண்ட புராணம் வழங்கும் செய்தி.. இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த்திரைப்படத்திலும், இவ்வாறு ஒரு காட்சி அமைந்துள்ளது.

ஆக, இராஜராஜன் காலத்தில் ஏழாக தொகுக்கப்பட்டவை பின்நாளில் பதினொன்றாக விரிந்தது. அதன் பின், சேக்கிழார் பெருமான் அவதரித்து ‘பெரியபுராணம்’ என்கிற திருத்தொண்டர் புராணத்தைச் செய்தருளினார். இதன் சிறப்பும் மேன்மையும் கருதி அதனைச் சைவ உலகம் பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுக் கொண்டது. இது சைவச்சிந்தனைக்கு ஏற்றதாயும், உரியதாயுமே கணிக்கப்பெறுகின்றது.

ஆகவே, எவ்வாறாயினும் இன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருஞ்சொத்தான சைவத்திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப்படவில்லை என்பது தெளிவு.

பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் சோழப்பேரரசின் இறுதிக்காலத்தில் பெரியபுராணம் இணைக்கப்பட்டதுடன் சைவத்திருமுறை பன்னிரண்டு என்றே சைவ உலகு திருப்தி உற்றது. அதற்குப் பின் அவ்வளவே திருமுறைகளின் எல்லை என்று முடிவு செய்ய நேரிட்டு விட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

சைவ அரசு ஒன்று இல்லாமை, போலி அருளாளர்களின் வருகை, பிற மதத்தவர்களின் ஆதிக்கம், தமிழரசு நிலை குலைந்தமை, முகமதிய அரசர்கள் படையெடுத்தமை,எப்போதும் குழப்பநிலை நீடித்தமை, சைவாலயமரபுகள் சிதைவுற்றமை, தோத்திரங்களை விட சாத்திரநூல்களே முதன்மை பெற்றமை, சிவ வழிபாட்டோடு இணைந்த விநாயகர், முருகன் ஆகிய சிவகுமார மூர்த்தங்களின் வழிபாடுகளும் எழுச்சியுற்றமை போன்ற சில பல காரணங்களை இதற்குக் காட்டலாம்.

எவ்வாறோ, பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? என்பதே இன்றுள்ள வினா.இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா? என்பதும் இவ்வினாவின் தொடர்ச்சியே ஆகும்.

இப்போதெல்லாம் சைவத்திருமுறைகள் பன்னிரண்டே என்பதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுவனவும் சாதாரண விடயங்களாகவே உள்ளன. எந்த ஒன்றாயினும் அதற்குத் தத்துவம் கண்டு பிடித்து விடுகிற மரபின் வெளிப்பாடாக அதனைக் கருத முடிகிறதே அன்றி வேறொரு செய்தியும் அதில் பொதிந்திருப்பதாகத் தெரியவில்லை.

உதாரணமாக ‘சிவஞான போத சூத்திரங்கள்’ பன்னிரண்டு என்ற அடிப்படையிலேயே பன்னிரு திருமுறைகள் வகுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். காலத்தால் பிந்தைய சிவஞானபோதத்தினைக் காலத்தால் முந்தைய திருமுறைகளுடன் முடிச்சுப்போடுவது ஏற்கத்தக்கதல்லவே?

எனவே, திருமுறைகள் தொடரலாமா? என்பதே இன்று எம்முன் உள்ள வினாவாகும்.

அவ்வாறாயின், சர்ச்சைக்குரியதாக அல்லாமல், அநேகமான தமிழ்ச்சைவர்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அருளாளர்கள், அநுபூதிமான்களின் அருளிச் செயல்களாக விளங்குபவற்றை தொடர்ந்து திருமுறைகள் ஆக கால அடிப்படையில் வகுக்கலாம் அல்லவா?

முக்கியமாக பெரியபுராணத்தை அடுத்த காலப்பகுதியில் எழுந்தது கந்தபுராணம்.ஏராளமான புராணங்கள் எழுந்த போதிலும், இதுவும் திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் என்னும் மூன்றும் மட்டுமே சிவபெருமானின் முக்கண்களுக்குநிகராகச் சைவர்களால் போற்றப்படுகின்றன.

ஆக, பன்னிரண்டாம் திருமுறையாக அதிலொன்றான பெரியபுராணம் இடம்பெற்று விட்டதால் பதின்மூன்றாம் திருமுறையாக கந்தபுராணத்தையும் திருவிளையாடற்புராணத்தையும் இணைக்கலாம்.

தத்துவநூலான திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வகுக்கப் பட்டிருக்கிறது. எனவே, தயக்கமின்றி பதினான்காம் திருமுறையாக சைவப்பெருமக்கள் சந்தனாச்சார்யார்கள் என்று சமயாச்சார்யார்களான முதலெட்டுத் திருமுறை ஆசிரியர்களுக்கு நிகராகப் போற்றும் ஆசிரியர்களும்
பிறரும் செய்த சைவசித்தாந்தநூல்களை வகுக்கலாம்.

அது போலவே, அருணகிரிநாதர் சைவப்பெருமக்கள் அனைவரதும் பக்திக்குரியவராகப் போற்றப் பெறும் அருளாளர். அவர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, போன்றவற்றை பதினைந்தாம் திருமுறையாக வகுக்கலாம்.

முருகன் புகழ் மாலையான திருமுருகாற்றுப்படை பதினோராம் திருமுறையில் முன்னரே வைக்கப் பட்டுள்ளதாலும், குமரக்கடவுளை ‘ஆறுமுகச்சிவம்’ என்றே சைவம் ஏற்றுப் போற்றுவதாலும் அருணை முனிவரின் முருகன் பேரிலான துதி மாலைகள் சைவத்திருமுறையாதல் தவறல்ல என்றே கொள்ள இடமுண்டு.

பதினாறாம் திருமுறையாக இதன் பின்னும் உருவான பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தாயுமானவர், பட்டினத்தடிகள், போன்ற ஏராளமான அருளாளர்களின் திருமொழிகளை வகுக்கலாம். அதிலே, மிகவும் சிறப்பாக சைவசமயிகள் ஏற்றுப்போற்றுகின்ற தேவராஜசுவாமிகள் பாடிய கந்த சஷ்டி கவசங்கள், ஒளவையார் அருளிய விநாயகர் அகவல், அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி போன்ற அற்புத நூல்களையும் சேர்க்கலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வந்த அருளாளர்களான இராமலிங்க வள்ளலார், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், யாழ்ப்பாணத்து சிவயோகர் போன்ற ஏராளமான அருளாளர்களின் வாழ்வு, வாக்குத் தொடர்பில் இன்னும் சில சர்ச்சைகள் மிஞ்சி இருப்பதாலும், சில சைவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும் அவற்றை இப்போதைக்குத் திருமுறைகளுக்குள் இணைக்காமல் வைத்திருக்கலாம்.

ஆனால், அநேகமான சைவத்தமிழர்களால் பன்னிருதிருமுறைகளுக்கு நிகராக ஏற்றுப் போற்றப் பெறும், அற்புதங்கள் செய்யும் அரிய தமிழ் நூல்களை சைவத்திருமுறைகளாக வகுப்பதில் தடையொன்றும் இல்லையே? இதனைச் செய்யலாமா? செய்யலாம் எனில் யார் பூனைக்கு மணி கட்டுவது? கட்ட
விழைபவர் கண்டனங்கள் வந்தால் ஏற்கத்தயாரா? என்பனவே இப்போதுள்ள வினாக்கள்.

சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை. சேக்கிழார் அவ்வாறான ஒருவரே. அவர் கண்ணப்பரையும், நந்தனாரையும், அதிபத்தரையும், இன்னும் சாக்கியரையும் சைவப்பெருங்குரவராக மாற்றிய சிவனருட்செல்வர்.அத்தகு ஒருவர் சில வேளை இப்பணியினையும் செய்து மேன்மை கொள் சைவநீதிஉலகமெல்லாம் விளங்கச் செய்வார்.

இன்றைக்கும் தமிழகத்திலும் ஈழத்திலும் சைவாதீனங்கள் பல சிறப்போடு விளங்குகின்றன. அறிவிலும், பக்தியிலும், ஆற்றலிலும் தக்கோர் பலர் அங்கே மஹாசந்நிதானங்களாக அருளாட்சி செய்து வருவதையும் காண்கிறோம். அவர்கள் சரியெனக் கருதின் இத்திருமுறைத் தொகுப்பினை தொடர உதவ வேண்டும்.

இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா? என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது..

உலகெலாம் உணர்ந்(து) ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

32 Replies to “சைவத்திருமுறைகள் தொடரட்டும்…”

 1. பேரன்பிற்குரிய நீர்வை. தி.மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. அற்புதமாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.

  ” தேவாரம் வேதசாரம் என்றும் திருவாசகம் உபநிடதசாரம் என்றும் யாழ்ப்பாணத்துக் காசிவாசி செந்திநாதையர் அவர்கள் அறுதி இட்டு உரைத்திருக்கிறார்கள். “- சரிதான்.

  மதம் என்ற பெயரில் எல்லைகளை பிறருக்கு வகுப்பவர்கள் கடுமையான தவறுகளையே செய்துள்ளனர். பிறருக்கு போதிக்க எவனுக்கும் தகுதி இல்லை. பிறருக்கு போதிப்பதை தானே பின்பற்றினால் , மற்றவர்கள் தாமும் மனமுவந்து பின்பற்றுவர். ” ஊருக்கு தானடி உபதேசம் , உனக்குமில்லை எனக்கும் இல்லை – என்று தமிழகத்தில் ஒரு வழக்கு உண்டு.

  இன்றைய தமிழகம் திராவிட திருட்டு இயக்கங்களின் பிடியில் இருந்து வெளிவர திண்டாடிக்கொண்டிருக்கிறது. பன்னிரு திருமுறைகளை பராமரித்து பின்பற்றி வெளியிடுவதும், படித்து மகிழ்வதற்குமே நல்ல புண்ணியம் செய்திருக்க வேண்டும்.தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிந்திக்க தக்கவை. ஆனால் உடனடியாக இவை நடக்க வாய்ப்பு குறைவு. ஆபிரகாமிய வெறியர்களின் தாக்குதல்களில் இருந்து , இந்துக்கள் தங்கள் கலாசாரம் மற்றும் சம்பிரதாயங்களை காத்துக்கொள்ள வேண்டிய கடும் நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.எனவே, தங்கள் எதிர்பார்ப்பு ஒரு நீண்ட கால திட்டத்தில் இடம் பெறலாம். உடனடியாக செயல்பட என்று சொன்னால், மிக கடினம். ஆனாலும் இறைஅருள் கைகூட பிரார்த்திப்போம்.

 2. “சங்க தமிழ், ஆழ்வார் நாயன்மார் தமிழ், பின் வந்த எங்கள் தமிழையும் முத்தமிழ் ஆய் ஏற்ற தமிழே நீ வாழ்க”…என்ற ஞானகூத்தன் வரிகளே ஞaபகதிற்கு வருகிறது,

 3. /////பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வந்த அருளாளர்களான இராமலிங்க வள்ளலார், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், யாழ்ப்பாணத்து சிவயோகர் போன்ற ஏராளமான அருளாளர்களின் வாழ்வு, வாக்குத் தொடர்பில் இன்னும் சில சர்ச்சைகள் மிஞ்சி இருப்பதாலும், சில சைவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும் அவற்றை இப்போதைக்குத் திருமுறைகளுக்குள் இணைக்காமல் வைத்திருக்கலாம்.////

  இராமலிங்க வள்ளாலர் தன்னைச் சைவசமயத்தவர் அல்லர் என்று கூறியதன் பிற்பாடு சைவநூற் திருமுறைத் திரட்டில் அவர்விடயத்தைப் பேசுவதே தேவையற்ற ஒன்றென்று கருதுகின்றேன்.
  இப்போதைக்கு இணைக்காமல் வைத்திருக்கலாம் என்றால்….பின்னர் எப்போதேனும் இணைத்துக்கொள்ளலாம் என்பதா?

  ஏனையவர்கள் பாடல்கள் பிரச்சினைக்குரியதாக இருக்குமென்று எளியேன் கருதவில்லை.

  தங்கள் கருத்து ஏற்புடையதுதான். ஆனால் சைவாதீனங்கள் யாவும் இணைந்து இம்மாதிரியான அரும்செயலில் ஈடுபடவேண்டும். அதுவொன்றுதான் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் திருமுறைத்தொகுப்பை உருவாக்கும்.

  தங்களின் சைவத்திருப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 4. திராவிட இயக்கங்களை தூற்றுவது இருக்கட்டும். மேலும் திருமுறைகளை சேர்ப்பது இருக்கட்டும். முதலில் இந்த திருமுறைகளுக்கு உரிய இடத்தை வழங்க முடியுமா? முடியும் எனில் முதலில் சிற்றம்பல தலத்தில் துவக்குங்கள் உங்கள் பணிகளை இப்பொழுதே….

 5. சென்ற செவ்வாயிலிருந்து வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த தமிழ்ஹிந்து இணையம் இன்று தெளிவாக பார்க்கக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சி தருகின்றது…

  திருமுறைகள் தொடரட்டும்…? என்பது ஒரு சர்சைக்குரிய பேச்சுத் தான்.. அதனை பலரும் என் மின்னஞ்சல் வாயிலாக ஏற்றும், ஏற்காமலும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்… என்ன?அவர்களின் எழுத்துக்கள் இங்கே வந்திருப்பின் ஒரு தெளிவான பதில் கிடைத்திருக்கும்.. ஆனால், தமிழ்ஹிந்து திறக்க இயலாத சூழலில் இருந்ததால், மின்னஞ்சலுக்கே தங்கள் கருத்துக்களைப் பதிந்து விட்டார்கள்..

  முக்கியமாக, திருமுறைகள் பன்மொழியிலும் மொழிபெயர்க்கப்படுவதையும், திருமுறைகளின் சிறப்பு பரவலடைவதையுமே தம் வாழ்வின் முக்கிய பணியாகக் கொண்டிருக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் திருமுறைகள் தொடரட்டும் என்ற இக்கட்டுரைக் கருத்தை ஆதரித்து எழுதியிருந்தார்கள்..
  அவர்கள் எழுதியது..

  வணக்கம்
  நீண்ட நெடிய சிவ நெறி மரபுகளைக் கூறியுள்ளீர்கள்.

  ‘இல்லாததொன்றிலிருந்து இருப்பது பிறவாது’ என்பது சைவசித்தாந்தம் என்றீர்கள்,
  இஃது அறிவியல்.
  சைவ நெறியே அறிவியல் நெறி என்ற கருத்தை முன்வைத்துள்ளீர்கள்.

  திருமுறைகள் பன்னிரண்டு தொகுத்த வரலாற்றைக் கூறி,
  அத்தொகுப்பை நீட்டிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளீர்கள்.

  நான் முன்பு கூறியுள்ளதை மீண்டும் சொல்கிறேன்.
  தமிழும் சைவமும் காலந்தோறும் பெற்றெடுத்து வரும் பேறுகளில் மயூர்கிரிசர்மா ஒருவர்.

  ஈழத்தின் அறிஞர் வரிசையில் அவர் பெயரும் இடம்பெறும்.
  நன்றி

  மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  இதே போலவே, கோப்பாய் சிவானந்தசர்மா போன்ற திருமுறை ஆர்வலர்களும் இக்கட்டுரையை ஆதரித்து எழுதியிருந்தார்கள்..

  ஆனால், சைவப்பணிகளில் முன்னிற்கும் நண்பர் கணேஷன், பிரகாஷ்சிவம் போன்றவர்கள் இதற்கு நமக்கு அதிகாரம் இல்லை என்று இக்கட்டுரை சொல்லும் செய்தியை ஏற்க இயலாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்…

  இவ்விரண்டையும் சொல்வதும் இக்கட்டுரை குறித்த சிந்தனையைத் தூண்டுவதற்கேயாம்…

  ஆக, இது தொடர்பாக இங்கும், அங்கும் பதிவிடும் அனைத்துச் சிவநேயச்செல்வர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

 6. ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் பெரும் வினா ஒன்றை எழுப்பி அதற்கு விடையாக ஆம் வேண்டும் என்று பதிலும் கூறியுள்ளார். பாராட்டுக்கள்.
  “பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? என்பதே இன்றுள்ள வினா.இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா?”
  இந்த விவாதம் தொடரவேண்டும். தமிழ் சைவ உலகம் ஒரு நல்ல முடிவை ஆழ்ந்து விவாதித்து எடுக்கவேண்டும் என்பது அடியேனின் அவா.
  வேதம் ஆகமம் ஆகிய இரண்டும் இறைவனால் அருளப்பட்டன. காலந்தோரும் உலகில் தோன்றும் அருளாளர்களும் இறையருளால் மொழிந்தவை இறைவன் அருளியவை என்பன சைவர் நம்பிக்கை. வடமொழியில் உள்ள வித்யாஸ்தானங்கள்(வேதம் முதல் புராணங்கள் இதிஹாசங்கள் வரை) பதினான்கும் இறைவன் அருளியவை என்பது சிவாத்வைத ஆராத்யாய(ஸ்ரவ்த்த) சைவசித்தாந்திகள் நம்பிக்கை. நம் திருமூலர் பிரான் வித்தைகள் பதினெட்டு என்கிறார். எண்ணிக்கை மாறுபட்டாலும் ஈசானசர்வ வித்யானாம் என்பதை அடிப்படையாகக்கொண்டு இறைவன் அருளியவை வித்தைகள் அவை ஞானத்திற்கும் முக்திக்கும் வழிகாட்டும் என்பது வைதீக சைவர் நம்புகின்றனர். தமிழ் சைவ மரபில் தோத்திரங்களும் சாத்திரங்களும் வடமொழியில் உள்ள வித்தைகளுக்கு இணையாக இலங்குகின்றன. பன்னிருதிருமுறை தோத்திரங்கள் மற்றும் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கும் தொகுக்கப்பட்ட காலம் வேறு நாம் உள்ளகாலம் வேறு ஏற்கனவே நிறைவான தொகுப்பை மீண்டும் மாற்றியமைத்தல் என்பது சரியன்று. இன்று நடைமுறையில் தினசரி வழிபாட்டில் பன்னிரு திருமுறைகளை ஓதுகின்ற சைவர்கள் குறைவு. பெரும்பாலோர் பஞ்ச புராணம் சொல்கின்றனர். திருமுறையின் எண்ணிக்கை பதினெட்டோ இருபதோ ஆனால் அத்துணையையும் பெரும்பாலோர் பயன்படுத்துவார்களா என்பது ஐயமே. இன்னும் அன்று அத்தொகுப்பினை முற்று செய்த மன்னர் மன்னன் குலோத்துங்கன் இன்று அதில் மாற்றம் கொண்டுவருகின்ற திண்மை சைவ மடாதிபதிகளுக்கு இருக்குமா என்பதும் தெரியவில்லை. இன்று தமிழ் சைவ உலகில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் அது சாத்தியமா என்பது புலப்படவில்லை. கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய பெயரொடு புதிய தொகுப்பு ஏற்படுத்தப்படலாம். தவறில்லை.
  ஸ்ரீ மயூரகிரியார் பன்னிரு திருமுறை விரிவாக்கத்திற்கு அளித்துள்ள பிற்காலத்திய அருளாளர்களின் நூல்கள் சிறந்தவையே. இன்றும் அவை வழிபாட்டில் உள்ளன. ஸ்ரீ அபிராமி அந்தாதி, திருப்புகழ் போன்றவை பயன்பாட்டில் பெரிதும் உள்ளன.
  தமிழ் சைவ உலகம் தமிழில் பிற்காலத்தில் அருளிசெய்யப்பட்ட தோத்திர நூல்கள் தத்துவ நூல்கள் ஆகியவற்றைபதிப்பித்து வெளியிடவும் அவற்றினை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் பல நூல்கள் ஏட்டுச்சுவடிகளாக இருக்கிற நிலை இருக்கிறது. தேவையற்ற அரசியலை விட்டு அவற்றை பதிப்பிக்கவும், கற்பிக்கவும், விவாதிக்கவும் தமிழ் சைவத்திருக்கூட்டம் முனையவேண்டும்.
  சிவஸ்ரீ

 7. ஸ்ரீ மயூரகிரியார்
  “இதே போலவே இறைமறுப்பையும் கூட ஏற்றுக் கொள்ள வல்ல சைவத்தின் சீர்மையையும் பெருமையையும், “அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்” என்ற சுந்தரர் திருவடிவகள் காட்டி நிற்பதாகச் சுட்டுவர் அறிஞர்”.
  ஐயன்மீர் அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் என்பது இறை மறுப்பாளர்களுக்குப் பொருந்தாது. இறைவனே இல்லை என்பதால் அவனது அடிகளும் இல்லை அன்றோ. புற சமயிகளில் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்ரீ ஆரூர் அண்ணலின் அடிகள் பொருந்தும்
  சிவஸ்ரீ.

 8. திராவிட இயக்கங்களை தூற்றுவது இருக்கட்டும். மேலும் திருமுறைகளை சேர்ப்பது இருக்கட்டும். முதலில் இந்த திருமுறைகளுக்கு உரிய இடத்தை வழங்க முடியுமா? முடியும் எனில் முதலில் சிற்றம்பல தலத்தில் துவக்குங்கள் உங்கள் பணிகளை இப்பொழுதே….
  தில்லை திருச்சிற்றம்பலத்தில் திருமுறைப் பணுவல்களை தில்லை வாழ் அந்தணர்களே ஓதுவதைக்கேட்டு இருக்கிறேன். சிற்றம்பலத்தில் தமிழ் இல்லை என்பது பொய்யுரையே. திருமுறைகளை ஓதி மக்கள் வழிபாடு செய்யவேண்டும். திருமுறைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். வடமொழிக்கும் தென்மொழிக்கும் பூசலை உருவாக்கி வேத நிந்தனை செய்துவரும் கூட்டத்திடம் எச்சரிக்கை தேவை. வடமொழி மட்டுமே சிவாலய்த்தின் கருவறையில் தென்மொழி வெளியே என்னும் பழமை வாதிகளுக்கு நல்ல புத்தி தந்து வைணவர் போல் தமிழும் வடமொழியும் இரண்டினையும் ஓதி இறைவன் புகழ் பாட அருள்செய்வர் எம் திருச்சிற்றம்பலத்து அண்ணல்.
  சிவஸ்ரீ.

 9. திருமுறைகளாக பலவற்றை சேர்ப்பது தேவையற்றது.
  இதனால் பல சிக்கல்கள் வரும். சைவ மடங்களே ஒன்றுபடாமல் இருக்கின்றன.

  சைவத்தில் பல பாடபேதங்கள் உள்ளன.
  உதரணமாக: திருமந்திரத்திற்கு நம்மால் பாட பேதம் இல்லாத ஒரு செம்பதிப்பு தரமுடியவில்லை.

  திருமுறைகளை தினமும் இறைவன் முன் ஓதும் ஓதுவார்களின் பொருளாதார நிலை மிகவும் மோசம். திருவாரூரில் உள்ள தேவார பள்ளியில் ஒரே ஒரு மாணவன் தான் படிக்கின்றான்.

  திருமுறைகளை கூட்டினால் அதனால் நாம் தினமும் பாராயணம் செய்யும் பஞ்ச புராணத்திலும் மாற்றம் செய்யவேண்டும்.
  கந்தபுராணமும், திருவிளையாடற்புராணமும், திருப்புகழும், அபிராமி அந்தாதியும் திருமுறைகளுக்கு நிகரனவைகள் தான். ஆனால் அவைகளை திருமுறைகளுடன் சேர்ப்பது என்பது தேவையற்றது.

  சோமசுந்தரம்

 10. நமது ஆலயங்களில் இப்போது ‘பஞ்சபுராணம்’ எங்கே தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா. திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்ற ஒழுங்கில் பாடப்படுகிறது.. ?

  பலரும் தேவாரம் பாடிவிட்டு தீடீர் என்று உடனேயே தாயுமானவர் பாடல், போன்றவற்றைப் பாடுவதையெல்லாம் கேட்கிறோம்..

  ஈழத்து வழிபாட்டு மரபில், முருகன் ஆலயங்களில் சாதாரணமாக நித்ய பூஜையில் தேவாரம் மட்டும் பாடி விட்டு கந்தபுராணப் பனுவல் ஒன்றையும், கந்தரனுபூதி, திருப்புகழ் பாடல்களையும் பாடுவதையும் காணமுடிகின்றது…

  அதே போல அம்பிகை முன்றலில் பாடும் போது இயல்பாகவே, ஓதுவாமூர்த்திகள் ‘அபிராமி அந்தாதி’ பாடிப்பரவுகின்றார்கள்…

  இது போலவே, விநாயகர் முன்றலில் எல்லோருமே ‘தேவாரம் சொல்வதை விட விநாயகர் அகவலையே சொல்லிச் சேவிக்கிறோம்..

  ஆக, இவர்களெல்லாம் சைவர்களே என்று வருகிற போது சைவத்திருமுறைகள் வளருதலும்.. தொடர்ச்சியாக இணைக்கப்பெறுதலும் அத்தியாவசியமாகின்றது..

  இம்முயற்சி அதிகாரபூர்வமாக நடக்க வேண்டும்.. அப்படி நடக்கவில்லை என்றால், அடியவர்கள் அது பற்றியெல்லாம் கவலையே படாமல் தம் இஷ்டப்படி வரும் நாட்களில் விரும்புகின்றவற்றையெல்லாம் சைவ அருட்பாக்கள் என்று சொல்லி விடும் சூழல் உண்டாகி விடலாம்..

 11. திருமுறைகள் மீதும் சைவத்தின் மீதும் பெருமதிப்புள்ள புறச்சமயி என்ற படிக்கு என் கருத்துக்கள்.

  எத்தெத்தனை திருப்புகழ்களில் எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமான் திருமுறைகளைப் விதந்தோதிப் பாடியுள்ளார் என்று எழுதப்புகின் அது மட்டுமே தனி வ்யாசமாக விரியும்.

  கையிலையம்பதி உறையும் பெருமானைப்பாடுங்கால் வள்ளல் அருணகிரிப்பெருமான்,

  திருஞான சம்பந்தப்பெருமான் அருளிய மரணமிலாப்பெருவாழ்வை நல்கத்தகுந்த தேவாரப்பாடல்களைப் போல் திருப்புகழ் பாட இந்த அடிமைக்கருள் செய் எனப்பாடுகிறார்.

  பலகாலுமுனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
  படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே

  பதியான திருத்தணி மேவு சிவலோகமெனப் பரிவேறு
  பவரோக வயித்தியநாத பெருமாளே.

  என மறவாமல் “அம்ருத கவி” யான திருப்புகழ் ஓதும் அன்பர்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சதுர் வித பல புருஷார்த்தங்களையும் அடைகின்றனர் என பல திருப்புகழ்களில் சொல்லப்படுகிறது. தேவேந்திரசங்க வகுப்புக்கு சொல்லப்படும் வ்யாக்யானங்கள் சாக்த சாஸ்த்ரங்கள் பலவற்றினிருந்தும் சொல்லப்படுகின்றன. திருமுறைகளையும் சைவ சமய அருளாளர்களையும் பற்பல திருப்புகழ்களில் அருணகிரிப்பெருமான் விதந்தோதுகிறார். ராமாயணம், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற பல வைஷ்ணவபரமான க்ரந்தங்களில் சொல்லப்படும் உபாக்யானங்களும் திருப்புகழ்களில் காணப்படும். இது மட்டுமில்லாது உபநிஷத் சாரமாகவும் திருப்புகழுக்கு சான்றோர்கள் வ்யாக்யானாதிகள் கொடுக்கின்றனர்.

  இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த திருப்புகழமுதத்தை திருமுறைகளில் சேர்ப்பது உகந்ததா அல்லவா என்பது சைவசமயப்படி ஒழுகுபவர் விசாரிக்க வேண்டிய விஷயம்.

  \\\\தமிழும் சைவமும் காலந்தோறும் பெற்றெடுத்து வரும் பேறுகளில் மயூர்கிரிசர்மா ஒருவர்.\\\

  ஆம். ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தமது சமயக்கருத்துக்களை தொடர்ந்து அளித்து வள்ளிக்கு வாய்த்த பெருமானின் அருளுக்கு பாத்ரமாக வேண்டும்.

  \\\\ சைவ மடங்களே ஒன்றுபடாமல் இருக்கின்றன.\\\

  திருச்சிற்றம்பலம் அன்பார்ந்த ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களே. திருமுருக க்ருபானந்தவாரியார் ஸ்வாமிகள் அவர்களை இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை. பண்டிதமான்யராயினும் அடியார்க்கடியராய் மிகுந்த சௌலப்யத்துடன் எல்லோரையும் அரவணைத்தபடி அவர் செய்த திருப்பணிகளும் சிவத்தொண்டும் அடியார் தம் நினைவில் என்றும் நிற்பவை. அவரைப்போன்று பல்வேறு மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தி தில்லையம்பலப் பெருமான் அருளால் நிச்சயம் வெகு விரைவில் கிட்டுமாக.

  \\\\திருமுறைகளை தினமும் இறைவன் முன் ஓதும் ஓதுவார்களின் பொருளாதார நிலை மிகவும் மோசம். திருவாரூரில் உள்ள தேவார பள்ளியில் ஒரே ஒரு மாணவன் தான் படிக்கின்றான்.\\\\

  மிகவும் வருத்தம் தரும் விஷயம். பண்ணிசைப்படி தேவாரம் ஓதும் ஓதுவார்களின் பொருளாதார நிலை மேம்பட முனைப்பு அவசியம். பொருளுதவி செய்வோர் நிச்சயம் முன்வருவர். அம்பலவாணன் அருளால் முயற்சி திருவினையாக்கும். முறையாக தேவாரப் பள்ளியில் வாசிக்க முழுநேர மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும் தான். கூடவே லௌகிக கல்வி கற்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் பகுதி நேரமாக பண்ணிசைப்படி தேவாரம் கற்பிக்கவும் அவசியம் வழிவகுக்க வேண்டும் என்பது என் அபிலாஷை.

  திருச்சிற்றம்பலம்

 12. சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்றும் சைவசாத்திரங்கள் பதினான்கு என்றும் ஆன்றோர்களால் வகுக்கப்பட்டுவிட்டது. மரபுவழி இத்தகைய தொகுப்பிற்குச் சிவானுக்கிரகம் துணை நின்றது என்றும் பேசப்படுகின்றது. சிவசம்மதம் இல்லையேல் நடைபெறாது. இது ஒருபுறம் இருக்கட்டும். தென்னாட்டு சைவசித்தாந்தத்துக்கு வேதாகமங்கள் பிரமாணம் என்பது முகமன்; உபசாரவாசகம். உண்மையில் திருமுறைகளே பிரமாணம்.. என்வே, முன்னோர்கள் இதன் தனிச்சிறப்பைப் பேண விரும்பி திருமுறைகள் 12 என த் திட்ட வட்டமாக வரையறுத்து விட்டனர்.சித்தாந்தசாத்திரங்களில் முதன்மையானது மெய்கண்ட சிவாச்சரியரின் சிவஞான போதம். அதற்கு முன் தோன்றிய ஞானாமிர்தம் என்ற அதிசுவையான சித்தாந்த சாத்திர நூல் இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இதற்கு முக்கியமான காரணம், இந்நூல் பலவிதங்களில் சிறந்ததெனினும் சித்தாந்த சைவத்தினின்றும் சிறிது வழுவுகின்றது என்பதோடு, திருக்கயிலாய சந்தான மரபில் வரவில்லை என்றும் ஒரு காரணம் கூறுவர். சைவ ஆதீனங்களில் குருமகாசந்நிதானங்களாக பிரகாசத்துடன் அருளாட்சி செய்தவர்கள் ஞான சாத்திரங்கள் செய்துள்ளனர். அவை பதினான்கு சாத்திரங்களின் வழியை ஒட்டி அமைந்ததோடு அவற்றிற்கு விளக்கமாகவும் உள்ளன. சிவானுபவப் பெரும்பயன் தருவன. அவை பண்டாரசாத்திரங்கள் எனத் தனியே வகுக்கப்பட்டனவேயன்றி பதினான்கின் தொடர்ச்சியாக்கப்படவில்லை திருவாவடுதுறையாதீனம், தருமையாதீனம் சூரியனார்கோயில் ஆதீனம் ஆகிய அனைத்திலும் பண்டாரசாத்திரங்கள் உண்டு. இவ்வாதீனங்கள் அருளிய தோத்திர நூல்களும் உண்டு. இவ்வாதீனங்கள் எவையும் தங்கள் ஆதீனத்துக்குரிய நூல்களைச் சைவத்திருமுறைகளுக்குச் சமமாக் , அவற்றுக்கு இணையாக இணைக்கத் துணியவில்லை. பின் தோன்றிய அருளாளர்களின் நூல்களையெல்லாம் சைவ இலக்கியம் எனும் தொகுப்பில் சேர்க்கலாமே யன்றித் திருமுறை என்னும் தொகுப்பில் சேர்க்கலாகாது. வடலூர் வள்ளலாரின் அருட்பாக்களைத் திருமுறை என வருடைய அன்பர்கள் தொழுவூர் வேலாயுத முதலியார் முதலியோர் வகுத்தனர். அவற்றை தனியே வகுத்தனரே யன்றிப் பன்னிரு திருமுறைஇகு மேல் 13 முதலிய திருமுறைகளாகக் கருதவில்லை. அவ்வாறு திரு முறைகளை விரிவாக்கப் புகுந்தால் அபிமானங் காரணமாகவும் பெருமை காரணமாகவும் இத்தொகுப்பு விரிவடைந்து கொண்டே செல்லும். சித்தந்த சாத்திரங்களில் .’வரையறை யின்றி ஓடுதல்’ என்று ஒரு குற்றம் கூறப்படும். கொள்கைகளுள் யாது பேதமிஉப்பினும் சிவநாமத்தைஉச்சரித்தே, சிவபரம்பொருளை முன்னிறுத்தியே உய்ந்த தாயுமானார், பேரூர் சாந்தலிங்க அடிகளார், திருமுதுகுன்றம் குமாரதேவர், சித்தர் சிவப்பிரகாசர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், காழிக் கண்ணுடை வள்ளல் குமரகுருபரசுவாமிகள், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற அருளாளர்களின் நூல்களைச் சைவசித்தாந்திகள் போற்றி விரும்பிப் படிப்பரேயன்றி திருமுறைகளோடு ஒன்றாகக் கருத மாட்டார்கள். இப்பெரியோர்களும் தங்கள் நூல்களைத் திருமுறைகள் என்று கூற அச்சப்படுவர். அருணகிரிநாதப் பெருமான் முழுக்க முழுக்க சைவசித்தாந்தி, அவருடைய பலபாடல்களில் சைவசித்தாந்தம் மிக நுணுக்கமாகப் பேசப்படுகின்றதெனினும், அவருடைய காலத்தில் நிலவிய சமய விரோதங்கள் கருதி அனைத்துத் தெய்வங்களையும் பாடினார். சிவமொன்றே பாடப்பெற்ற திருமுறைகளுடன் திருப்புகழையும் சேர்க்க இது ஒன்றே தடையாகக் கூறுவர். திருமுறைகளை விரிவு படுத்தக் கருதுவது சைவம் விரும்பும் பொதுமைக்குக் குழப்பத்தையே விளைவிக்கும்..

 13. திரு முத்துகுமாரசாமி ஐயா அவர்களின் மறுமொழி மிகவும் சிறப்பாக உள்ளது. திருமுறைகளுடன் எதையும் சேர்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால், கந்தபுராணமும், திருவிளையாடற்புராணமும், திருப்புகழும், அபிராமி அந்தாதியையும் திருமுறைகளுடன் சேர்ந்து தினமும் நம் வீடுகளில் ஓதுவதற்கு எந்த தடையும் இல்லை.

 14. முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் திருமுறைகளை விரிவாக்கத்திற்கு மாறான தனது கருத்தை தெளிவாக வைத்துள்ளார். பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களும் முழுமையானவை.அவற்றை விரிவு படுத்தும் முயற்சி குழப்பம் விளைவிக்கும் என்ற ஐயா அவர்களின் கருத்து ஏற்புடையது.
  ஆனால் ஐயா அவர்களின் ஒரு கருத்து ஏற்புடையது அன்று. அது
  தென்னாட்டு சைவசித்தாந்தத்துக்கு வேதாகமங்கள் பிரமாணம் என்பது முகமன்; உபசாரவாசகம். உண்மையில் திருமுறைகளே பிரமாணம்.
  திருமுறைகள் பிரமாணம் என்பது சரி. ஆனால் சிவபெருமானே அருளிய வேதமும் ஆகமமும் பெயரளவில் பிரமாணம் என்பது ஏற்புடையது அன்று. வேதத்தின் சிறப்பை ஆகமத்தின் உயர்வை போற்றாத திருமுறை அருளாளர் யார்? தேவாரம் வேதசாரம் திருவாசகம் உபனிடத சாரம்(வேதாந்தம் எனும்போது), திருமூல நாயனார் தாமே ஆகமங்களை தமிழில் மொழிந்ததாகக் கூறும் போது சைவசித்தாந்தத்திற்கு வேதாகமங்கள் பிரமாணம் என்பது உபச்சாரம் என்பது எப்படி சரியாகும். வேதத்தினை விட்ட அறமில்லை வாதத்தினைவிட்டு அதன் வழி செல்க என்று மூலர் பிரான் சொல்லுகின்ற போது வைதீக சைவத்தினைப்போற்றும் ஐயா போன்றவர்கள் வேதாகமங்கள் உபச்சாரப்பிரமாணம் என்பது ஏனோ.வேத வேதாந்த மரத்தின் உச்சியில் பழுத்த கனிச்சாறு சைவ சித்தாந்தம் என்று ஸ்ரீ கொற்றவன் குடி உமாபதி சிவமே மொழிகின்ற போது ஐயாவின் கருத்து ஏற்புடையதன்று. சித்தாந்தம் என்பதும் சைவம் என்பதும் சித்தாந்த கலைச்சொற்கள் பெரும்பாலும் வேதாகமங்களில் இருக்க ஐயா இப்படிக்கூறுவது ஏற்புடையதன்று. வேதாந்தத்தின் சாரத்தினை அனுபவ ஞானமாக பிழிந்ததே நம் அருளாளர்களின் சிறப்பு. அதனை அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் வழங்கியதே அவர்தம் பெருமை.
  தென்னாடுடைய சிவனே போற்றி!
  சிவஸ்ரீ

 15. இங்கே இக்கட்டுரைக்குப் பதிவிட்ட அனைத்து சிவநேயச்செல்வர்களுக்கும், திருமுறை ஆர்வலர்களுக்கும் வணக்கங்களுடன் கூடிய நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்..

  அதிலும், முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி போன்ற சைவச்சான்றோர்கள் இங்கே தங்கள் கருத்தைப் பதிந்தமையை எண்ணி மகிழ்கின்றேன்..

  சைவத்திருமுறைகள் தொடரட்டும்..? என்ற எனது எண்ணத்தையே இங்கே கட்டுரையாகப் பதிந்தேன். சில நூல்களைப் படிக்கிற பொது, இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ‘கம்பவாரிதி’ என்று புகழ்பெற்றுள்ள ஜெயராஜ் அவர்கள் ‘திருமுறைகள் தொடர வேண்டும்’ என்று ஒருமுறை பேசியிருந்ததாகவும் ஞாபகம்..

  அந்த அளவிலேயே இந்த எனது எண்ணத்தை இங்கே பதிவு செய்தேன்.. ஆனால், இந்த எனது எண்ணம் முழுமையானதல்ல.. என்கிற சந்தேகம் விளைந்ததாலேயே ஒரு வினாக்குறியும் இட்டுள்ளேன்..

  முனைவர் போன்ற பெரியவர்கள் சொல்வது உண்மையேயாம். எனினும், எதனையும் ஒரு தொகுப்பாகச் செய்தாலேயே அவை நீடித்து வாழும் தகைமை பெறுகின்றன..
  அதற்காகவே, சங்க நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று வகுத்தார்கள்..

  ஆழ்வார் பாசுரங்களை நாலாயிரம் திவ்விய பிரபந்தமாக வகுத்தார்கள். அதனைப் போலவே, திருமுறைத் தொகுப்பும் வகுப்பும் கூட நடந்திருக்கிறது.
  எனவே, பிற்கால அருளாளர்களின் நூல்களும் ஏதோ ஒரு தொகுப்பும், வகுப்பும் செய்யப்பட்டாலேயே அவற்றில் பிற்சேர்க்கைகள், திரிபுகள் இன்றி பாதுகாக்கப்படும்.. பேணிப் போற்றப்படும்.

  அவற்றை எல்லாம் திருமுறைகளுக்குள் கொண்டே சேர்க்கச் சொல்லவில்லை. உதாரணமாக, ஒரு ஆதீன பண்டாரசாத்திரங்களை இன்னொரு ஆதீனத்தார் ஏற்க மறுக்கலாம்..

  ஆனால், சித்தாந்த சாத்திரங்கள், திருப்புகழ், கந்தபுராணம் போன்றவை அனைத்துச் சைவர்களாலும் ஏற்றுப் போற்றப்படுபவை.. அவற்றை இணைப்பதை எந்த ஆதீனத்தாரும், அல்லது எந்தத் தமிழ்ச்சைவர்களும் குறை கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை..

  ஆக, சர்ச்சைக்குரியவைகள் இணைக்கப்படக்கூடாது.. சைவ சித்தாந்தத்திற்கு முரணானவை இணையக்கூடாது.. அந்தளவில் தான், வள்ளலாரின் அருட்பா போன்றவற்றை இணைக்கக்கூடாது என்றும் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

  எப்படியோ, ஏழாக இருந்தது பதினொன்றாகியிருக்கிறது.. அது பிறகு ஒரு நூறாண்டுக்குப் பின் பன்னிரண்டாக மலரலாம் என்றால்.. ஏன்..? அது விரியக்கூடாது? என்ற வினாவுக்கு இன்னும் என்னைத் திருப்திப்படுத்தக்கூடியதான பதில் கிடைக்கவில்லை..

  இதற்கு விடை கிடைக்குமாயின், மிகச்சிறியவனான யான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன்.. ஆனால், செய்வதற்கு இப்போது ஆள் இல்லை என்பதால், செய்வது தவறு என்று வாதிப்பதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. (அப்படி இல்லாமல் செய்யலாம் என்றிருந்தால், இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கேனும் நம்பியடிகளைப் போன்ற ஒரு மஹான் எழுந்தருளி இக்காரியங்களைச் சாதிக்கக்கூடுமல்லவா..?)

  எனது கருத்துக்களில் தவறிருந்தால் என் பிழை பொறுத்து மன்னிக்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கிறேன்..

  நீர்வை. தி.மயூரகிரி சர்மா

 16. சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களுக்கு நன்றி என் கருத்தை மேலும் விளக்க வாய்ப்பளித்துள்ளீர்கள். நான் விளக்க முனைவது உங்கள் கருத்தாகவும் இருக்கக் கூடும் /ஆனால் ஐயா அவர்களின் ஒரு கருத்து ஏற்புடையது அன்று. அது
  தென்னாட்டு சைவசித்தாந்தத்துக்கு வேதாகமங்கள் பிரமாணம் என்பது முகமன்; உபசாரவாசகம். உண்மையில் திருமுறைகளே பிரமாணம்.
  திருமுறைகள் பிரமாணம் என்பது சரி. ஆனால் சிவபெருமானே அருளிய வேதமும் ஆகமமும் பெயரளவில் பிரமாணம் என்பது ஏற்புடையது அன்று/ வேதாகமங்கள் பரமேசுவரன் அருளியது என்பதில் எனக்கு எவ்வித சந்தஏகமும் இல்லை. ஏனெனில் சிவநெறிப்பரமாச்சாரியர்கள் கூறிய அச்சத்திய வாக்குப் பொய்யன்று. பரமேசுவரன் எந்த மொழியினில் அதாவது, சூக்குமை, பைசந்தி, மத்திமை , வைகர் எனும் வாக்குககளில் எந்த வாக்கினில் அருளியிருப்பார்? இன்று நமக்குக் கிடைக்கும் வேதாகமங்கள் அனைத்தும் வைகரி வாக்கில் உள்ளனவே. வைகரி வாக்கு பிரகிருதி மாயை சம்பந்தமுள்ளது. அது க்ஷரமே யன்றி அக்ஷரமன்று. வேதங்கள் நான்கு என்றும் அவற்றின் ஞானகாண்டமாகிய உபநிடதங்கள் 108 என்றும் பெரியோர்கள் கூறுவர். சந்தமறையும் தமிழும் தேர்ந்த பாம்பன் சுவமிகள் முதலிய பெரியோர்கள் 108 உபநிடதங்களையும் பிரமாணமாக கூறுவர். ஆனால், தமிழைக் காட்டிலும் வடமொழிக்கே பிரதானம் கொடுக்கும் தென்னாட்டவர் சிலர், தாங்கள் எழுதும் கட்டுரைகளில், ஏதோ ஐந்து உபநிடதங்களே உண்மையானவை என்றும் சிலர் தசோபநிஷத் எனப் பத்து உபநிடதங்களே அசலானவையென்றும் பிறவெல்லாம் ஸ்ரீமத் அப்பைய தீட்சிதர் முதலியோரால் சிவபரமாகக் கற்பிக்கப்பட்டவையென்றும் வடமொழி அறியாத எம்போன்ற அறிவிலிகளைக் குழ்ப்புகின்றனர். நீலகண்டபாடியக் காரர் தம்முடைய பாடியத்தில் மேற்கோள்களாகக் காட்டிய உபநிடத வாக்கியங்களை உபநிடதங்களாக ஏற்றுக் கொள்ளாத பெரிய சான்றோர்கள் நம்மிடையே உள்ளனர்.எமக்கு வடமொழியில் என்ன கூறப்பட்டுள்ளன என்பது பற்றிய கவலையில்லை. திருமுறைகள் திட்டவட்டமாத் தெளிவுறச் சைவ சித்தாந்தத்தத்துக்கு அடிப்படையை வகுத்துத் தந்துள்ளன. பிரம்மசூத்திரத்துக்குப் பேருரை வகுத்தோர் பேதம் அபேதம் பேதாபேதம் என்றெல்லாம் சிவத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள அத்துவித சம்பந்தத்தை விளக்க முனைந்து ( என்னைப் போன்றவர்களுக்கு)க் குழப்பம் விளைக்க், அந்த அத்துவித சம்மபந்தம் எத்தகையது என்பதைத் திருமுறை குழப்பமின்றித் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகின்றது. சைவசமயப் பரமாச்சாரியராகிய திருஞானசம்பந்தப் பெருமான் திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில், “ஈறாய் முதலொன்றாய்—– வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே” என்று கூறி அத்துவித சம்பந்தத்தை விளக்குகின்றார். சிவம் சடசித்துக்க்ளின் இருப்புக்காக அவற்றில் கலந்து, கலப்பால் அவையே யாக (அபேதமாக)வும், பொருளியல்பினால் வேறாகவும் (பேதம்) பிரபஞ்சம் தொழிற்பட உடனாகவும் (பேதாபேதமாகவும்) இருப்பதைக் காழிப்பிள்ளையார் தம் திருமுறையில் அருளியுள்ளார். இத்திருவாக்கே, அத்துவிதம் என்னும் சொல் இம்மூன்று நிலைக்கும் பொதுவாக நிற்பது என்று மெய்கண்டார் சிவஞானபோதத்துக்குத் தரும் விளக்கத்துக்கு அடிப்படை. அத்துவிதம் என்பதற்கு ஒன்று என்றோ இரண்டு என்றோ பொருள் கொள்ளுதல் உண்மையான பொருள் ஆகாது.இது போன்ற பல எடுத்துக் காட்டுக்களைச் சுட்டலாம். இதன்னால், வேத வாக்கியங்களுக்குத் திருமுறை வாயிலாக விளக்கம் பெறுதல் எமக்கு உசிதமாக இருப்பதால் திருமுறைகளே எமக்குச் சிறந்த பிரமாணமாக அமைகின்றன. வடமொழி அறிவும் வேத உபநிடதங்களின் அறிவும் சமய உணர்ச்சிக்குத் தேவை என்பது உண்மையானாலும் தமிழை அறியாமல் திருமுறைகளையும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அறியாத வட்மொழி வேதாகம அறிவு போலி ஞானத்தையே தரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

 17. முனைவர் ஐயா அவர்கள் “வடமொழி அறிவும் வேத உபநிடதங்களின் அறிவும் சமய உணர்ச்சிக்குத் தேவை என்பது உண்மையானாலும் தமிழை அறியாமல் திருமுறைகளையும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அறியாத வடமொழி வேதாகம அறிவு போலி ஞானத்தையே தரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து”.
  என்று மொழிந்திருக்கிறார்கள். இந்தகருத்தினை முழுமையாக ஏற்கிறேன். வேத ஆகமங்கள் திருமுறைகள் மற்றும் சாத்திரங்கள் யாவும் அபர ஞானத்தினைத்தரும். பரஞானத்தினை சாதனை மூலம் மட்டுமே அடையவேண்டும் என்ற பேரூர் சாந்தலிங்க அடிகளின் கருத்தினையும் இங்கே கருதி இறை ஞானத்தினை அடைவோம்.
  சிவஸ்ரீ

 18. //வடமொழி அறிவும் வேத உபநிடதங்களின் அறிவும் சமய உணர்ச்சிக்குத் தேவை என்பது உண்மையானாலும் தமிழை அறியாமல் திருமுறைகளையும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அறியாத வட்மொழி வேதாகம அறிவு போலி ஞானத்தையே தரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..//

  மிக உண்மையான கருத்து.

 19. மதிப்பிற்குறிய ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசயர் அவர்களுக்கு

  வணக்கம்.

  \\\\அருணகிரிநாதப் பெருமான் முழுக்க முழுக்க சைவசித்தாந்தி, அவருடைய பலபாடல்களில் சைவசித்தாந்தம் மிக நுணுக்கமாகப் பேசப்படுகின்றதெனினும், அவருடைய காலத்தில் நிலவிய சமய விரோதங்கள் கருதி அனைத்துத் தெய்வங்களையும் பாடினார். \\\\

  அடியேனுக்கு சைவ சித்தாந்தக் கருத்துக்களில் பரிச்சயம் இல்லை.

  அருணாசலத்தில் உறை பெருமாளே

  சிவமார் திருப்புகழை எனுநாவினிற் புகழ
  சிவஞான சித்தி தனை அருள்வாயே

  என்று வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடியுள்ளார். திருப்புகழுக்கு ‘சிவமார்’ என விகுதி அளிக்கிறார். திருப்புகழை ஓதி உணர சிவஞானம் வேண்டும் எனவும் பகர்கிறார்.

  மேற்கண்ட திருப்புகழாகட்டும் கீழே சொல்லியுள்ள திருவிடைமருதூர் திருப்புகழாகட்டும். திருவகுப்புகள்; அலங்காரம்; அந்தாதி

  இருவினை முமலமுமற இறவியொடு பிறவியற
  ஏக போகமாய் நீயு நானுமாய்
  இறுகும்வகை பரமசுகமதனை யருளிடைமருதில்
  ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே.

  எனக்கு திருப்புகழுக்கு வ்யாக்யானம் அளித்த சான்றோர்கள் வ்யாக்யானங்கள் அளிக்கையில் அருணகிரிப்பெருமான் இவற்றால் தெளிவு படுத்துவது அத்வைத பரமானந்த முக்தி என்று விளக்கியுள்ளார்கள். உள்ளபடியே திருப்புகழ் வ்யாக்யானங்களை சௌபாக்ய பாஸ்கரம், சங்கரபாஷ்யம் போன்று சாஸ்த்ர நூல்கள் வாயிலாக விளக்கியுள்ளனர் பெரியோர். கூடவே வள்ளல் அருணகிரிப்பெருமான் சர்வஜனப்ரியர். அவர் சாக்தருக்கு சாக்தர். அத்வைதிக்கு அத்வைதி. சைவருக்கு சைவர் என்றும் சொல்லியுள்ளார்கள். சத்யமான வார்த்தைகள் என உணர்கிறேன்.

  இதுமட்டுமல்ல திருப்புகழை மட்டிலும் ஓத ஓதவே குருவருளாலும் முருகன் திருவருளாலும் குறைவில்லா ஞானம் கிட்டும் என்றும் பெரியோர் பகர்ந்துள்ளனர்.

  \\\\வடமொழி அறிவும் வேத உபநிடதங்களின் அறிவும் சமய உணர்ச்சிக்குத் தேவை என்பது உண்மையானாலும் தமிழை அறியாமல் திருமுறைகளையும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அறியாத வட்மொழி வேதாகம அறிவு போலி ஞானத்தையே தரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..\\\\\

  குருவருளினால் சித்தசுத்தியும், வஸ்து விவேகமும், வைராக்யமும், சமம், தமம் போன்ற அறுகுணங்கள் நிரம்பப்பெறலும், ஞானமடைய வேண்டிய அவாவும் ஞானம் நல்கத்தக்கவை என வேதாந்த பாடம் கேட்டிருக்கிறேன்.

  வடமொழி அறவே அறியாதாராயினும் மேற்சொன்ன விஷயங்களில் நிறைவு, ஞானம் நல்கத்தக்கது என்பது என் புரிதல். ஆஜன்ம ஞானியான ஜடபரதரும் தொழிலில் கசாப்பு வ்யாபாரியான தர்மவ்யாதரும் ஞானியாகப் பெரியோர்களால் சுட்டப்படுகின்றனர். இவர்களது ஞானத்திற்கு மொழியறிவை காரணமாக சொல்ல இயலாதே.

  என் புரிதலில் பிழை இருப்பின் களையவும்.

  \\\\அவ்வாறு திரு முறைகளை விரிவாக்கப் புகுந்தால் அபிமானங் காரணமாகவும் பெருமை காரணமாகவும் இத்தொகுப்பு விரிவடைந்து கொண்டே செல்லும். \\\\

  மேற்கண்ட கூற்றிலும் ஒரு சம்சயம்.

  த்ராவிட வேதம் என்ற படிக்கு அறியப்படும் பன்னிரு சைவத்திருமுறைகளும் நாலாயிர திவ்யப்ரபந்தமும் முறையே இறையருளால் அவதரித்த பெரியோரால் வகுக்கப்பட்டவை. இப்பனுவல்கள் வேதமாகவே அறியப்படுபவை. அதுவும் வேதங்கள் பரம்பொருளை ‘நேதி’ ‘நேதி’ – இதுவல்ல இதுவல்ல என்று மறைத்தே காட்டுகையில் தமிழ் மறைகள் பரம்பொருள் இதுதான் எனச்சுட்டிக்காட்டுவதாயும் பெரியோர் சொல்வர்.

  அதேசமயம் வேதங்களைப் பற்றிச்சொல்கையில் ‘அனந்தா வை வேதா:’ என்றும் சொல்வர். அதாவது வேதங்களுக்கு எல்லையில்லை என்பர்.

  எப்படி வேதங்களுக்கு எல்லையில்லையோ அதுபோன்றே அவை பேசும் பொருளையே பேசும் தமிழ் மறைகளும் வாஸ்தவத்தில் எல்லையில்லாதவைகளாகவே இருக்க வேண்டுமல்லவா.

  பின்னிட்டும் இப்புவிவாழ் மக்களிடம் பரம கருணை கொண்டு வேதங்களை வகுத்தளித்தவர் வ்யாஸாசார்யர். வ்யாசர் வகுத்தளித்த சாகைகளின் (கிளைகள்) எண்ணிக்கைப்படி இன்று வேதங்கள் ப்ரசலிதமாய் இல்லை. பல சாகைகள் விலுப்தமாய்ப்போனதால் குறைவாகவே இன்று சாகைகள் புழக்கத்திலுள்ளன. ஆனாலும் விலுப்தமான சாகையை ஒரு சாமானியர் மீட்டெடுக்க இயலாது. வ்யாச துல்யமான ஒரு அருளாளராலேயே அது சாத்யம்.

  அது போலவே தமிழ்மறைகளும் எல்லையில்லாதவை என்றே எனது புரிதல். ஆனாலும் எப்போது அருளாளர்களால் வகுக்கப்பட்டு விட்டதோ வகுத்த அருளாளர்களையொத்து இறைவனால் நியமிக்கப்பட்டு அவதரிக்கும் அருளாளர்களாலேயே அதிகப்படி ஒரு அக்ஷரம் கூட சேர்க்க இயலும் என்பது என் புரிதல். எனது புரிதலில் பிழையிருப்பின் களைய வேண்டுகிறேன்.

  வேதங்கள் ஸ்வத: ப்ரமாணங்கள் என்று சொல்வர்.

  பூஜைகளில் த்யானம், ஆவாஹனம், அர்க்யபாத்யம் இத்யாதி ஷோடச உபசாரங்களை (பதினாறு உபசாரங்களை) ஒன்று புருஷ ஸூக்த விதானப்படி அல்லது சதருத்ரீயப்படி செய்வது மரபு. திருப்புகழ் ஓதுங்கால் எங்களுக்கு ஷோடசோபசாரங்களும் கந்தர் அலங்காரம், திருப்புகழ் வழியே தான். வள்ளி கல்யாணம் கொண்டாடும் போதும் எங்கெங்கெல்லாம் வேதமந்த்ரங்களோ அங்கெல்லாம் திருப்புகழ் வழி தான். நான் திருப்புகழ் ஸ்வத: ப்ரமாணம் என்று சொன்னால் அது அதிகப்ரசங்கமாக இருக்கும். அப்படி வெளிப்படையாகச் சொல்லாது ஆனால் நடைமுறையில் திருப்புகழ் வழியாகவே எங்கள் வழிபாடுகளை சான்றோர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதை சங்கையில்லாது சொல்லவியலும்.

 20. //வடமொழி அறிவும் வேத உபநிடதங்களின் அறிவும் சமய உணர்ச்சிக்குத் தேவை என்பது உண்மையானாலும் தமிழை அறியாமல் திருமுறைகளையும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அறியாத வட்மொழி வேதாகம அறிவு போலி ஞானத்தையே தரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..//

  தமிழ் நாட்டில் பிறவாத எவருமே ஞானத்தை அடையமுடியாத? இங்கு அறிவு வேறு ஞானம் வேறு என்றே உணர்கிறேன்

 21. /தமிழ் நாட்டில் பிறவாத எவருமே ஞானத்தை அடையமுடியாத?/
  ”அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் பாடியருளினார். அப்பாலும் என்றதன் பொருள்: சுந்தரர் வாழ்ந்த காலத்துக்கு முன்னும் பின்னும் தமிழ்மொழி வழ்ங்கிய நாட்டின் எல்லைக்கு அப்பாலும் என விரிந்த பொருள் கூறுவர். எனவே இந்தக் கேள்வி எழ்வே வாய்ப்பில்லை. முள்ளிச் செடிக்கும் நாரைக்கும் சிவம் முத்தி கொடுத்த செய்திகளைச் சைவ இலக்கியம் பேசுகின்றது. முத்திக்கு பரஞானம் என்னும் உண்மை ஞானமே வேண்டும் என்றும் பாச பசுஞானங்களான அபரஞானங்கள் பரஞானத்தைப் பற்றி அறியத் துணை செய்யும் என்றும் பரஞனம் திருவருளால் ம்ட்டுமே பெறத்தக்கது என்றும் சைவ சாத்திரங்கள் கூறும். ஐயம் வேண்டாம். தமிழ் நாட்டில் பிறவாதவ்ரும் தமிழ்மொழி அறியாதவரும் சிவனருள் பெற்றால் மெய்ஞ்ஞான உணர்ச்சி கூடலாம்..

 22. பெரியவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, வணக்கம்/இருவினை முமலமுமற இறவியொடு பிறவியற
  ஏக போகமாய் நீயு நானுமாய்
  இறுகும்வகை பரமசுகமதனை யருளிடைமருதில்
  ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே.

  எனக்கு திருப்புகழுக்கு வ்யாக்யானம் அளித்த சான்றோர்கள் வ்யாக்யானங்கள் அளிக்கையில் அருணகிரிப்பெருமான் இவற்றால் தெளிவு படுத்துவது அத்வைத பரமானந்த முக்தி என்று விளக்கியுள்ளார்கள்/திருப்புகழ் அன்பரான தங்களுடன் திருப்புகழ் அன்பனான அடியேன் இத்திருப்புகழ் வரிகளைச் சிந்திக்கும் பேறு பெற்றேன். முதலில் , ‘ஏகம்’ என்ற சொல் இருக்க ‘அத்துவிதம்’ என்ற பதத்தை முத்தியைக் குறிக்கப் பெரியோர்கள் பயன்படுத்தியது ஏன்? எனச் சிந்திக்க வேண்டும். உயிர் என ஒன்றில்லை, பிரம்மே அனைத்தும். பிரமமே, உலகத்தில் பிறந்து குப்பை மலவழ்வினை நிஜமென உழன்று கசுமாலமாக வாழ்கின்றது என்பவர்களுக்குக் கூறத் தக்கதொன்றும் இல்லை. உயிர் என ஒன்றுண்டு. அந்த உயிர் வினையினால் பல்வேறு காயப் பிறப்பினை எய்துகின்றது. பிறப்பிறப்பினில்உழன்று மலபரிபாகம் உற்றபொழுது , முருகனாகிய குரு வந்து தோன்றி,’ இருவினை முமலமுமற, இறவியொடு பிறவியற்’ ‘நீடார்ஷ டாத ரத்தின் மீதே பராபரத்தை நீகாண்’ என்ற மந்திர வாக்கியத்தை அருளுகின்றார். அதன்படி உயிரானது “நீ(முருகன்) வேறெனாதிருக்க நான் (உயிர்) வேறெனாதிருக்க நேராக வாழும் பேறு பெறுகின்றது.. ‘நேராக வாழ்தல் என்றால் அறுமுகச் சிவ வியாபகத்தில் உயிர் வியாப்பியமாகக் கந்து நிற்றல் என்பது பொருள் அங்குச் சிவமெனும் பொருளும் ஆன்மா எனும் பொருளும் இரண்டும் உண்டு. சிவம் வியாபகமாகவும் ஆன்மா வியாப்பியமாகவும் பிரிவற நேராக இருக்கின்றன. சிவமும் ஆன்மாவும் ஆகிய இரண்டும் இறுகி நிற்கும் அந்த நிலையை, அருணகிரிப் பெருமான் ‘ஏகபோகமாய் நீயும் நானுமாய்’ என்று கூறுகின்றார்.’நீயும் நானுமாய்’ என்றதனால் அங்கு முருகனும் உண்டு ஆன்மாவும் உண்டு. இருவரும் தனித்தனியே நின்றால் போகம் இல்லை. எனக் கூறும்படி ஏகபோகமாய் இறுகின்போதுதான்’பரமசுகம்’மாகிய இன்பம் உயிருக்கு விளையும். ஏகநாயகனாகிய திவிடைமருதூர்ப் பிரானைத் தன்னோடு இறுகும் வகை அருணகிரிப் பெருமான் வேண்டுகின்றார்.. அதுவே வீட்டின்பம் என்று சைவசித்தாந்தம் கூறும். மலத்தால் உயிர் கட்டு ண்ட நிலையிலும் இறைவன் உயிரோடு அத்துவிதமாகத்தான் உள்ளான். இந்நிலையில் அவன் மறைந்து உயிரே உள்ளது எனத் தோன்றுமாறு நிற்கின்றான். முத்திநிலையில் உயிருள்ளது என்றாலும் முதல்வனே உள்ளான் ஆன்மா என ஒருபொருள் இல்லை எனத் தோன்றும். இதனை’ ஏகனாகி இறைபணி நிற்றல் எனச் சாத்திரம் கூறும். உயிரென ஒருபொருள் இல்லையென்றால் முத்தி யாருக்கு? வேத ஆகமங்கள் கூறும் ஆசார ஒழுக்கங்கள் யாருக்கு? என்ற ஐயங்கள் எழக் கூடும். அருணகிரிப் பெருமான் கூறும் முத்தி நிலைக்குச் சங்கரபாடியம் துணை செய்யுமா என்பது எனக்கு ஐயமே.

 23. தொன்றுதொட்டு நான்மறை ஆறங்கம் என்றே ஆன்றோரால் கூறப்பட்டு வருகின்றது. வேதம் எல்லையற்றது எனில் பெரியோர் இவ்வாறு தொகை கொடுத்து வரையறுத்ததேன்? வேதங்கள் ஸ்வத: ப்ரமாணங்கள் என்று சொல்வர். இது உங்களுடைய கருத்தில் ஆழப்பதிந்து விட்டதனால் அல்லவா ‘நான் திருப்புகழ் ஸ்வத: ப்ரமாணம் என்று சொன்னால் அது அதிகப்ரசங்கமாக இருக்கும்.’ என்று கூறுகின்றீர்கள். நான் திருப்புகழை திருமுறையாகக் கருதாதபோதிலும், ‘நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக் கருவறுக்கு பிறவாமல்’ நிறைப்புகழ் வாய்ந்த திருமந்திரமாகப் போற்றுகின்றேன். ‘யாருமே அற்றவனென் மீதஒரா பத்துறவ ராமலே சுற்றிலுமி ருந்துகாத்திடும்’ கவசமாக உணர்கிறேன். வளமார்திருப்புகழைத் தமிழ் வேதம் என்று சொல்லக் கூசமாட்டேன். ஆனால், இதனைத் திருமுறை என்று சொல்லிப் பெரியோர்கள் செய்த வரையறையை ஏன் களைய வேண்டும்? அதற்குத் தேவை என்ன?

 24. திருப்புகழ் மீது அதிக பற்றுதல் கொண்ட அன்புள்ளங்களின் திருவடிகளைச் சென்னி சேர்த்துப் போற்றுகின்றேன்..

  யான் கேட்பது இவ்வளவு தான்.. ‘திருப்புகழைத் திருமுறைகளுள் சேர்க்கத் தேவையில்லை.. சேர்க்க விரும்புவதன் நோகக்ம் அது பிற்சேர்க்கை, திரிபு, அழிவு இன்றி அப்படியே காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தாலேயாம்.. ஆக, குறைந்த பட்சமாக திருப்புகழ்களை அப்படியாவது வரையறை செய்யலாமே.. அருணகிரியாரின் காலத்துக்குப் பின் பிறந்த புலவர்கள் பலர் அவரைப் பின்பற்றி அதே சந்தம், எடுப்போடு புகழ்மாலைகள் பாடி இருக்கிறார்கள்.. அவையும் திருப்புகழ்களோடு இணைந்து விடும் அபாயம் இன்றைக்கு இருக்கிறது..

  உதாரணமாக யாழ்ப்பாணத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் நல்லூர் முருகன் பேரில் அழகான பாமாலை புனைந்திருக்கிறார்.. அதுவும் ‘ஞான தவ யோகர் சேரும் நல்லையூரில் நாளும் அருள் கூடும் பெருமாளே’ என்றே நிறைவாகிறது.. அதையும் திருப்புகழ்களுள் ஒன்றாக கருதி மயங்குவோர் பலர் இருக்கிறார்கள்.

  கந்தரனுபூதி ஐம்பத்தொரு பாடல் என்றே படித்திருக்கிறோம்.. ஆனால் பழம்புத்தகம் ஒன்றில் 101 பாடல்கள் இருக்கின்றன.. அவையும் இலக்கிய, பொருள் மரபில் முன்னுள்ள பாடல்களுக்கு இணையாகவே அமைந்திருக்கின்றன..

  ஆகவே, இத்தகு சிக்கல்களிலிருந்து இப்பக்திப் பெட்டகங்கள் பாதுகாக்கப்பெற வேண்டும்.. இந்தப் பிரச்சினை திருமுறைகளுள் ஒன்றான திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகங்களுக்கு நேர்வதில்லை.. ஏனெனில் அவை ஒரு வலுவான தொகுப்புக்குள் இணைந்து விட்டன..

  மிக மிகப்பெரியவரான முத்துக்குமாரசுவாமி அவர்கள் திருமுறை தொடரக்கூடாது என்று கருதுகின்ற போது, அது பற்றிச் சொல்வதற்கு யான் யார்..? ஆகவே, என் கருத்திலிருந்து விடுப்ட்டுக் கொள்கிறேன்.. திருமுறைகள் பன்னிரண்டாகவே இருக்கட்டும்.. என்றாலும் பிற்கால அருள் நூல்கள் ஒரு பெயரிடப்பெற்று தொகுப்புச் செய்யப்பட வேண்டும் என்ற அளவிலாவது என் கருத்தை முன் வைக்கிறேன்..

  அந்த நூல்களைச் சைவஉலகம் திருமுறைகளுக்கு அடுத்த படியில் வைத்து பாராட்டுமா..? அந்தத் தொகுப்புச் சாத்தியமா..? எந்த எந்த நூல்களைத் தொகுக்கலாம்..?, எப்படித் தொகுப்பது..? தொகுப்பிற்கு எந்ந திருநாமம் இடுவது..? என்கிற வினாக்கள் இங்கும் எழுந்து நிற்கின்றன…

 25. மதிப்பிற்குறிய ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசயருக்கு சிறியேனின் வணக்கம்.

  \\\\ஐயம் வேண்டாம். தமிழ் நாட்டில் பிறவாதவ்ரும் தமிழ்மொழி அறியாதவரும் சிவனருள் பெற்றால் மெய்ஞ்ஞான உணர்ச்சி கூடலாம்..\\\

  ஞானம் என்பது அத்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் என எந்த தத்துவார்த்தத்தில் அடங்கும் விஷயமானாலும் விண்டுரைக்கவியலாத இந்த வஸ்து விசேஷத்தை மொழியறிவிற்கு அப்பாற்பட்டதாய் விளக்கியமைக்கு நன்றி.

  மஹாலிங்கப்பெருமானை முன்னிறுத்தித் திருவிடைமருதூர் திருப்புகழ் வாயிலாக இவ்வளவு தெளிவுடன் எளிமையாக சைவ சித்தாந்தத்தை விளக்க்கிச்சொன்னமைக்கு மனமார்ந்த நன்றிகள். கூடவே “நாவேறு பாமணத்த குறத்தி வள்ளிமணவாளப்பெருமானின் திருப்பாதாரவிந்தங்களால்” சைவ சித்தாந்தம் பற்றி விளக்கியமையும் மிக அருமை. நான் பலமுறை வாசிக்க வேண்டிய மறுமொழிகளுள் இதுவும் ஒன்று. மஹாலிங்கம் என்றதும் பல க்ஷணங்கள் மனது ஸ்ரீதர அய்யாவாளின் நினைவிலும் மாத்ருபூதேச்வரர், கர்க்கடகேச்வரர் போன்ற இறைவன் திருமூர்த்திகளிலும் சென்றமைக்கும் மிகுந்த நன்றிகள்.

  ஒரு குறையும் கூடவே. நமது தளத்தில் ஸ்ரீவைஷ்ணவத்தை எப்படி ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் பல வ்யாசங்கள் மூலமும் ஸ்ரீமான் சார்ங்கன் அவர்கள் தமது எண்ணிறந்த உத்தரங்கள் மூலமும் விளக்குகிறார்களோ அது போல் சைவ சித்தாந்தம் பற்றியும் தாங்களும் ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா மஹோதயர் அவர்களும், சிவத்திரு சோமசுந்தரம் மஹோதயர் அவர்களும் சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயர் அவர்களும் பற்பல வ்யாசங்களைச் சமர்ப்பிக்க வேணுமாய் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  ஒரு அபிப்ராய பேதத்தைச் சம்பாஷிக்குமுகமாகக்கூடத் திருப்புகழமுதத்தைச் சுவைக்க அருளப்பண்ணிய எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் அசீம கருணையை என்னென்று சொல்வது. அவரால் அல்லவோ உலகோரை வருந்திக்கூப்பிட்டு

  “பெருத்த பாருளீர் நீங்கள் வாருமே – வந்து
  மயிலையும் அவன்திருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
  இயலையும் நினைந்தி ருக்க வாருமே.”

  என வள்ளிக்கு வாய்த்த பெருமானின் திருவடியில் இருத்தவியலும்.

  \\\பிரம்மே அனைத்தும்\\\ இது தான் அத்வைதம் என பல்லாண்டு முன் நான் கேட்ட வேதாந்த பாடம் சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன்.

  \\\\பிரமமே, உலகத்தில் பிறந்து குப்பை மலவழ்வினை நிஜமென உழன்று கசுமாலமாக வாழ்கின்றது என்பவர்களுக்குக்\\\\

  பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே என்று தான் அத்வைதிகள் சொல்வார்கள். பிறத்தல், இருத்தல், வளர்தல், தேய்தல் மற்றும் அழிவு போன்றவைக்கு அத்விதீய பரவஸ்து உட்படாதது என்றும் அவை வ்யாவஹாரிக சத் மட்டுமே என்றும் வேதாந்தபாடம் கேட்டுள்ளேன். அதற்கு மாறாகச் சொல்லப்படும் விஷயம் அத்வைதமாகாது. ஆகவே பரவஸ்துவை விகாரங்களுக்கு உட்படுபவதாய்ச் சொல்பவர்களுக்குச் சொல்ல ஏதுமில்லை என்பது புரிகிறது. வேதாந்த பாடம் கேட்டு பல்லாண்டு ஆகி ச்ரவண, மனன, நிதித்யாசனம் தேய்ந்தபடிக்கு வேதாந்தம் பற்றிப் பேசும் அருகதை எனக்கில்லை. இத்துடன் இந்த விஷயத்தில் அமைகிறேன்.

  \\\\ வேத ஆகமங்கள் கூறும் ஆசார ஒழுக்கங்கள் யாருக்கு? \\\\

  வஸ்துவிவேகம், வைராக்யம், நிறைவான சமாதி ஷட்குணசம்பத், முமுக்ஷுத்வம் போன்ற சாதன சதுஷ்டயத்தில் நிறைந்த தகுதியிலா மந்த அதிகாரிகளுக்கு என்று பெரியோர் சொல்வர்.

  \\\\அருணகிரிப் பெருமான் கூறும் முத்தி நிலைக்குச் சங்கரபாடியம் துணை செய்யுமா என்பது எனக்கு ஐயமே.\\\

  மதிப்பிற்குறிய ஐயா, ச்ருதியானால் ஒரே பொருள் தான். அதை விளக்குமுகமாக பாஷ்யம் அருளிய த்ரிமதாசார்யர்களான சங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாசார்யர் போன்றோரின் விளக்கங்களில் வேற்றுமை உண்டே. என் அபிமானத்தினால் மறைக்கு சமமாய் நான் போற்றும் திருப்புகழமுதம் ஒன்றேயாயினும் வ்யாக்யானங்கள் அவரவர் புரிதலின் படி என்பது என் தாழ்மையான கருத்து. கூடவே பரதேசியான எனக்கு இப்படி கூடமான பரவஸ்துவை திருப்புகழ் வழியாய் விளக்கிய எனது ஆசான் களை நினைவு கூர நேர்ந்ததும் பெரும் பாக்யமே.

  \\\\\வளமார்திருப்புகழைத் தமிழ் வேதம் என்று சொல்லக் கூசமாட்டேன். ஆனால், இதனைத் திருமுறை என்று சொல்லிப் பெரியோர்கள் செய்த வரையறையை ஏன் களைய வேண்டும்? அதற்குத் தேவை என்ன?\\\\\

  சாமான்யர்களான மனிதர்கள் வேதங்களாயினும் தமிழ்மறைகளாயினும் வரையறையைக் களைய முனைதல் என்பது சரியல்ல என்பதில் எனக்கு முழு உடன்பாடுண்டு.

  பூஜ்ய சனாதன கோஸ்வாமிகள் சைதன்ய மஹாப்ரபுவின் அருளாணைப்படி ஹரிபக்தி விலாசம் போன்ற க்ரந்தமெழுதி பரந்து விரிந்த உலகோரின் பால் கருணையால் வழிபடு முறைகளில் மாறுதல்கள் மற்றும் ஒழுங்குகள் ஏற்படுத்தினும் இது போன்ற மஹான் கள் சம்ப்ரதாய ப்ரவர்த்தகர்களாய் ஆகி இந்த சம்ப்ரதாயம் ஸ்ரீ வைஷ்ணவம் மற்றும் பரமவைஷ்ணவம் (மாத்வ) போன்ற சம்ப்ரதாயங்களிலிருந்து தனித்தே இயங்குகிறது என்பதும் நோக்கத்தக்கது.

 26. பெரியவர் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்./எனக்கு திருப்புகழுக்கு வ்யாக்யானம் அளித்த சான்றோர்கள் வ்யாக்யானங்கள் அளிக்கையில் அருணகிரிப்பெருமான் இவற்றால் தெளிவு படுத்துவது அத்வைத பரமானந்த முக்தி என்று விளக்கியுள்ளார்கள். உள்ளபடியே திருப்புகழ் வ்யாக்யானங்களை சௌபாக்ய பாஸ்கரம், சங்கரபாஷ்யம் போன்று சாஸ்த்ர நூல்கள் வாயிலாக விளக்கியுள்ளனர் பெரியோர். கூடவே வள்ளல் அருணகிரிப்பெருமான் சர்வஜனப்ரியர். அவர் சாக்தருக்கு சாக்தர். அத்வைதிக்கு அத்வைதி. சைவருக்கு சைவர் என்றும் சொல்லியுள்ளார்கள். சத்யமான வார்த்தைகள் என உணர்கிறேன்/ அருணைமுனிவரின் வாக்குகளுக்கு மேற்காட்டிய முறையில் பெரியோர்கள் அருளிய வியாக்கியானங்கள எனக்குக் கிடைக்கும்படி உதவ வேண்டும். இதனால் புதிய விளக்கம் பெறக் கூடும். நன்றியுடையேன்.

 27. மதிப்பிற்குறிய ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசயர் அவர்களுக்கு வணக்கம். தற்போது நான் வெகுதொலைவில் இருக்கிறேன். தமிழகம் வரும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

 28. ஒரு களப்பணியாளனாக சொல்கிறேன்.. கோயில்களில் தமிழ்முறை என்னும் பேரில் திராவிட பின்புலத்தில் இயங்கும் கும்பல் கோயில்களை சீரழித்து சின்னாபின்னமாக்கி வருகிறது.. கொங்குப்பகுதியில் ஏராளமான பழமையான கோயில்கள் அதன் பொழிவை இந்த திருட்டுக் கூட்டத்தால் பரி கொடுத்து நிற்கின்றது.. ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று பார்க்கையில் கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது.. தமிழ் என்ற சொல்லை ஒட்டு சேர்த்துக் கொண்டால் எந்த அயோக்கியனும் கோயில் விசயங்களில் தலையிடலாம் இல்லையா..??

 29. பெரியவர்களுக்கு வணக்கம். இங்கே பதிவு செய்யப் பட்ட கருத்துகளைப் படித்தப் பிறகு ஒன்று நன்றாகப் புலனாகிறது. சைவம் இற்றைய நிலையில் பல தெய்வ வழிபாடாகிப் போனதால் இவ்வளவு விமர்சனம்! தேவாரத் திருமுறையும் திருவாசகமும் திருகோவையாரும் ஒரு சேர் வாசகம். சிவனல்லாது பிற தெய்வ வழிபாட்டில் நில்லாதார் நால்வர் என்பதற்குச் சான்று வேண்டுமோ? காலத்தால் பிற்சேர்க்கையாக வந்து திருமுறை இன்று சிவநெறியில் இருந்து தடம் புரண்டு போயுள்ளது. இது காலத்தின் கோலம். சைவம் சைவமாக இருக்க வேண்டுமானால் அது சிவபரத்துவத்தை போற்றுவதாக தொடர்ந்து நிலைபெற வேண்டும். இதனை மாற்றிச் சிவ நிந்தனை பெற வேண்டாமே. சிவ சிவ.

 30. அன்புள்ள திரு கிருஷ்ணகுமார், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஹவாய் தீவில் சைவசித்தாந்த மரபை சேர்ந்த கவாய் ஆதீனத்தின் 162 – ஆவது குருமகா சன்னிதானம் சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி அவர்கள் ( நந்திநாத கைலாச பரம்பரை ) சைவர்களாக உள்ள இந்து பெருமக்களுக்கு வழிகாட்டும் நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் பற்றிய முழுவிவரங்களை gurudeva.org என்ற இணையதளத்தில் காணலாம்.
  வெளிநாடுவாழ் இந்து சைவ அன்பர்கள் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் இந்து சைவர்கள் அனைவருமே படித்துப்பயன்பெறவேண்டிய அற்புதமான நூல்கள் ஏராளம் இந்த கவாய் ஆதீனத்தால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.சைவசித்தாந்தத்தின் பல்வேறு பிரிவுகளை பற்றிய தகவல் விளக்கங்கள் அடங்கிய சுரங்கங்களாக இந்த நூல்கள் உள்ளன.

  DANCING WITH SIVA ,
  LIVING WITH SIVA,
  MERGING WITH SIVA,
  LOVING GANESHA, – என்று நூற்றுக்கணக்கிலான நூல்களை வெளியிட்டுள்ளனர். அற்புதமான நூல்கள். இந்த நூல்களின் மின்வடிவ பிடிஎப் (EPDF) பதிவிறக்கம் இலவசமாக செய்துகொள்ளலாம். தமிழகத்தை விட்டு வெகுதூரம் தள்ளி இருக்கும் திரு கிருஷ்ணகுமாரை போன்ற அன்பர்கள் இந்த மின் நூல்களை பதிவிறக்கம் ( DOWNLOAD) செய்து பயன்படுத்தலாம். நான் இந்த நூல்களில் மூழ்கி முத்து எடுத்து வருகிறேன்.
  இவற்றில் சில நூல்களை மோதிலால் பனாரசிதாஸ் நூல்வெளியீட்டாளர்கள் இந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளனர்.(www.mlbd.com)
  கவாய் ஆதீனத்திற்கும், அதன் மஹாஸன்னிதானங்களுக்கும், அவர்களின் இந்து சைவ தொண்டிற்கும் தலைவணங்குகிறோம். அவர்களின் நல்லாசியை வேண்டி பிரார்த்திக்கிறோம்.
  இவரைப் போன்ற குருநாதர்களின் நினைவே நம்மை கடைத்தேற்றும்.
  ஓம் – நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா -( உச்சிஷ்ட மகா கணபதியின் மூலமந்திரம் )
  அருள்தரு பெரியசாமி துணை .
  ஓம் ஸ்ரீ கிருஷ்ண வில்லோத்பனாய ஸ்வாஹா.
  ஓம் ஸ்ரீ சத்குரு சைவசித்தாந்த நந்திநாத கைலாச பரம்பரை சிவாய சுப்ரமுனிய சுவாமி துணை.
  நன்றாக குருவாழ்க குருவே துணை .
  வையகம் வளமுடன் வாழ்க .

 31. பெரியவர்களுக்கு வணக்கம். இங்கே பதிவு செய்யப் பட்ட கருத்துகளைப் படித்தப் பிறகு ஒன்று நன்றாகப் புலனாகிறது. சைவம் இற்றைய நிலையில் பல தெய்வ வழிபாடாகிப் போனதால் இவ்வளவு விமர்சனம்! தேவாரத் திருமுறையும் திருவாசகமும் திருகோவையாரும் ஒரு சேர் வாசகம். சிவனல்லாது பிற தெய்வ வழிபாட்டில் நில்லாதார் நால்வர் என்பதற்குச் சான்று வேண்டுமோ? காலத்தால் பிற்சேர்க்கையாக வந்து திருமுறை இன்று சிவநெறியில் இருந்து தடம் புரண்டு போயுள்ளது. இது காலத்தின் கோலம். சைவம் சைவமாக இருக்க வேண்டுமானால் அது சிவபரத்துவத்தை போற்றுவதாக தொடர்ந்து நிலைபெற வேண்டும். இதனை மாற்றிச் சிவ நிந்தனை பெற வேண்டாமே. சிவ சிவ

  இந்த கருத்துதான்ஏற்புடையது. அனைவரும் சைவ சித்தாந்த்தை மறந்து ஒரு தெய்வ வழிபாட்டினை மறந்து தத்தம் கொள்கையினை கூறுவதாக அமைந்துள்ளது நன்றி

 32. Respected sir,
  Pranams.
  Your sincere service to our religion is commendable. That too now.
  Please let me get a e- copy of Brammasri. Senthinathaiyers Devaram vedasaramor any link.
  Iam researching on the subject.
  I will be indebted to you sir
  Tq
  Dr. V. Gugaramanan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *