[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

தொடர்ச்சி…

உலக  வாழ்வில்  மயங்கிக்  கிடக்கின்ற  ஒருவன்  தன்  மனைவி  மக்களையும்,மாடுமனை முதலானவற்றையும் விட்டு விலகிச் சென்ற அளவில் இறைவனைச் சார்ந்து இன்புறுகின்றான் என்று கொள்ளுதல்  ஏற்றதன்று. இது  புறத்துறவு  என்ற  அளவினதாகவே  அமையும். அனைத்தையும்  துறந்து  காடு அடைந்தும் இறையுணர்வு வாய்க்கப் பெறாமல் வாழ்வைப் பாழ்படுத்திக்கொண்டோர் பலர். இறையுணர்வு எய்தும் பொருட்டு  மனைவி,  மக்களையும்  மற்றுள  செல்வங்களையும்  துறந்து  செல்ல வேண்டும் என்பது நியதி ஆகாது. உள்ளத் தூய்மையின்  அடிப்படையிலேயே இறையுணர்வு- உள்ளொளி ஓங்குகின்றது ; இறை ஞானமும் இறையின்பமும் வந்து நிறைகின்றன. உள்ளத்தை இறைவன்பால் ஈடுபடச்செய்து, அவனருளில் திளைத்து அவன் படைப்பாகவே அனைத்தையும் கண்டு நிறைவாழ்வு வாழ்கின்ற ஒருவன் எங்கிருந்தாலும் புனிதனாகவே விளங்குகின்றான். காடு என்றும் வீடு என்றும் அவனுக்கு வேற்றுமை தோன்றுவதில்லை. மற்றையான் குளிக்கப்போய், சேற்றைப் பூசிக்கொண்டவனாகத் திரும்புகிறான்.

மனைவி மக்களுடன் போக போக்ய  வாழ்வில் திளைத்திருக்கும்  இறையுணர்வு  மேலிட்டவர்களாக  விளங்குதல் கூடும். எங்கும் நிறைந்தவன்  இறைவன். சிந்தனையை  அவன்பால் செலுத்த  களிறு  வளர்பெருங்காடுதான்  வேண்டும் என்பதில்லை ;  ஒதுக்கிடம்  தேடி ஓடவேண்டும் என்பதில்லை. எத்தொழிலைச் செய்தாலும் ஏது  அவஸ்தைப்பட்டாலும் முத்தர்  மனமிருக்கும் மோனத்தே  என்பது  ஆன்றோர்  மொழி  அன்றோ!  நம்  உள்ளும் புறமுமாக நிறைந்து  விளங்கும்  ஒருவனை எங்கெங்கோ தேடித்திரிவதில் என்ன பொருள் இருக்கிறது! உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறியும் திறம் இறைவனுக்கே உரிய ஒன்று அன்றோ!

புத்தர் பிரானும் விவேகானந்த சுவாமிகளும் போன்ற பெருந்துறவியர்- மாமுனிவோர் பலர் வாழ்ந்த நாடு நம்நாடு. எனினும் அவர் தம் வழியிலேயே அனைவரும் செல்வது என்பது அரிய ஒன்று. அவர்கள் மனித குலத்தைப் புனிதப்படுத்தவேண்டி தூய தொண்டு நெறி நின்றவர்கள்; அருட் செல்வர்கள். தவமும்  தவமுடையயார்க்கே  ஆகும்  என்றபடி இறையருளால்  அவர்கட்கு வாய்த்த  துறவுநெறி  அனைவர்க்கும் வாய்ப்பதாயின் அதனை விரும்பிஏற்று உலகுய்யப் பணியாற்றலாம்; பாரமார்த்திகப்  பெருவாழ்வு  வாழலாம்.

ஆனால் அனைத்தையும் ஒதுக்கிச் சென்றுதான் அவனருள் பெறவேண்டும் என்பது இல்லை. இறையுணர்வு  என்பது அனைத்தையும் வெறுத்து  அகல்வது  என்று  ஆகாது. உலகுடன் ஒன்றி நின்று அனைத்துயிர்களும் இறைவடிவாக இலங்கும் உண்மையைத் தெரிந்து,  அவற்றினிடத்தன்பு கொண்டு, எல்லாம் இறைமயம், இன்பமயம் என்று கண்டு இறைவனுக்கு ஆட்பட்டு வாழ்கின்ற எளிய வாழ்விலும் இறையுணர்வு கைகூடப் பெறலாம். எனவே அகத்துறவே இறையுணர்விற்கு அடிப்படையானது என்பது தெளிவாகின்றது. ‘யான்’,  ‘எனது’ என்று நம்மையறியாமலே நம்மிடத்து ஓங்கி வளர்ந்துள்ள செருக்குணர்வு ஒன்றைனையே நாம் வேருடன் களைய வேண்டும் ; முற்ற அகற்ற வேண்டும். ஆணவம் அகன்ற நிலையிலேயே இறையுணர்வு இடம் பெறும். அப்பொழுதுதான் மனித வாழ்வு புனிதப்படுகிறது. ”ஆங்காரம் என்னும் மதயானை வாயிற் கரும்பாய் ஏங்காமல் எந்தையருள் எய்து நாள் எந்நாளோ? ”என்றார் தாயுமானார்.


”தன்னுயிர் தான் அறப்பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்” – (குறள் : 268)

”யான் எனது என்னும் செருக்கறுப்பான் –
உயர்ந்த உலகம் புகும்.” – (வானோர்க்கு      குறள் : 346)

என்னும் திருவள்ளுவர் திருமொழிகள் இவண் நினைத்தற்பாலன.

வேதாந்தி விட்மன்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் திகழ்ந்த எழுத்தாளர்களுள் வால்ட் விட்மன் ஒருவர். எமர்ஸன், தோரோ போன்ற தத்துவ ஞானிகளின் வழிவந்தவர் அவர்.எனினும் அவர் எழுதிய செய்யுள் நடையும். அவற்றின் கருத்துக்களும் அவருடைய காலத்து எழுத்தாளர்களாலும்,அவருக்குப்பின் தோன்றிய எழுத்தாளர்களாலும், பூரணமாக ஒப்புக்கொள்ளப்படவில்லை. அர்த்தமற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட  விரும்பாத  அவரது  போக்கே  அதற்குக் காரணமாகும்.  அவர்  வாழ்க்கை  எண்ணற்ற சோதனைகட்கு உள்ளானது. ஏதோ சில கடும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு பிறருடைய பாராட்டுக்கோ, பழிப்புரைக்கோ செவிசாய்க்காமல் தம் மனம் போன போக்கில் சென்றார் விட்மன்.

1819 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்தில் லாங் ஐலண்டில் (Long Island) ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தவர் அவர். சிறுவயதில் வக்கீல் ஒருவரிடம் சேவகனாக வேலை பார்த்தார். பின்னர் ஒரு அச்சகத்தில் அச்சுக்கோப்பாளனாக வேலையில் சேர்ந்து, சிறுகச் சிறுக ஒரு  பத்திரிக்கை ஆசிரியர் நிலைக்கு உயர்ந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் உள்நாட்டுப் போர் நடைபெற்ற பொழுது யுத்த நிருபராகவும் செயலாற்றினார். இச்சமயத்தில் தான் விட்மனின் கவிதைப் புலமை வெளிப்படலாயிற்று. பள்ளிப்படிப்போ இவருக்கு அதிகம் கிடையாது. சுயமாக  உண்டான  ஞானமே  கவிதையாகப்  பரிணமித்தது.  ஆனால்  அவர்  எழுதிய கவிதைகள்  அவரை இலக்கியத்திறனாய்வாளர் தம்வசை மொழிக்கு இலக்காக்கின.

கவிதை என்பது அர்த்தமற்ற கட்டுப்பாடுகளிடையே சிக்கித் திணறும் சொற்கூட்டமன்று ; கற்பனை சிறந்த உள்ளத்தில் பொங்கி எழும் உணர்வுகளை எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவதே கவிதையாகும். ஆத்மாவைவும் உள்ளுணர்ச்சியையும் கவிதையின் மூலம்  வெளிப்படுத்தும்பொழுது இலக்கணக் கட்டுப்பாடுகட்கு இடமளித்து அதனைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பது அவர் கருத்து. ஆதலின் அவர் எழுதிய புல்லின் இலைகள் (Leaves of grass) என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபொழுது, புராதன இலக்கியப் பற்றுடையவர்கள் அதனை ஒரு புரட்சி இலக்கியமாகவே கண்டனர். அமைப்பிலும்,  கருத்திலும்  புதுமையைக்  காணவே  தளை, சீர் முதலிய இலக்கணங்கள்  அமையப்  பெறாமல்,கட்டுக்கடங்காது மனம் போன போக்கில் எழுதப்பட்டது என்று குறை கூறினார்கள்.

அவரது கருத்துக்கள் பலருக்கு விபரீதமாகத் தோன்றின. காம வெறியனாக விட்மன் அவர்கள் கண்ணில்பட்டார். ஆனால் கவியின் நோக்கம் உலகிலுள்ள உன்னதமான வி­ஷயங்களைத்தெள்ளத்தெளிய எடுத்துக் கூறுவதுதானே! அந்த நோக்கம் கொண்டு புல்லின் இலைகள் என்ற அவருடைய கவிதைத்தொகுப்பைக் காணாவிடில் அக்கவிதைகள் பிதற்றலாகவோ அல்லது காமவெறியினால் உந்தப்பட்டு எழுதப்பெற்ற கவிதைகளாகவோ தான் கொள்ளப்படும்.

வால்ட் விட்மன் அமெரிக்காவில் அப்போது தோன்றிய அதீதவாதிகள் (Transcendentalists) பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகுப்பினர்,சிந்தனையால் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகண்டு விட முடியாது. நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வு  (Intuition) நமக்கு  உதவிபுரிய  வேண்டும்  என்ற கோட்பாடு  உடையவர்கள், உள்ளுணர்வின் போக்கை, காரண, காரிய முறையால் விளக்கிக் கூற முடியாது அல்லவா! விட்மனின் ஞானநிலையை அறியாதவர்கள்  அவருடைய  கொள்கைகளை  மிகவும்  தாக்கினார்கள்.  சிலர்போற்றவும்  செய்தனர்.  தோரோ,விட்மனின் புல்லின் இலைகள் கவிதைத் தொகுப்பை முதன்முறையாக வாசித்தவுடன் (Oriental) இந்தியநாட்டுக் கருத்துகளை வியக்கத் தக்க முறையில் வழங்கும் நூல் என்றுஅதனைப் போற்றினார். எமர்ஸன் அப்புத்தகத்தை பகவத் கீதையின் சீரிய கருத்துக்களும், ஐக்கிய நாடுகளின் சாதாரண செய்தித்தாள் இலக்கியப்போக்கும் கலந்த ஒரு படைப்பு எனக் கருதினார். விட்மனுக்கு இந்து மதக் கோட்பாடுகளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது பற்றி உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. ராஜாராம் மோகன்ராய் என்ற வங்காளநாட்டுப் பெரியவர் உபநி­த்துக்களின்  மேன்மையை  விளக்கி  ஆங்கிலத்தில்  கட்டுரைகள்  எழுதி இருந்தார்.  இந்து  சமயத்திலும்,தத்துவங்களிலும் நாட்டம் கொண்ட சில நியூ இங்கிலாந்து மக்கள் அவற்றை ஐக்கிய நாடுகளில் வெளியிட்டிருந்தனர்.  அவற்றின்  மூலமாக  விட்மன்  வேதாந்தக் கருத்துக்களை  அறிந்திருக்கலாம்.  எமர்ஸன் போன்ற தத்துவ ஞானிகளின் சொல்லும், எழுத்தும் இவர்  கொள்கைகளை உருவாக்கி இருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து. உலகில் பரந்துகிடக்கும் பற்பல சொரூபங்களில் ஒற்றுமையைக் கண்டது விட்மனின் மனம். எல்லாம் ஒன்றே; அதுவே ஆத்மன் (All is One and all is Self) என்று அடிக்கடி அவர் கூறியிருப்பது வேதாந்தக் கோட்பாட்டையே நமக்கு நினைவூட்டுகின்றது.

மேலும்  எனது ஆத்மாவும் நானும் -(My Soul and I) என்று அவர் பிரித்துக்கூறுவதும், நித்தியமான நான் (The Real Me) என்று ஆத்மாவின் நித்தியத்துவத்தை  அவர்  குறிப்பிடுவதும்  இந்து  சமயக்கொள்கைகளுக்குக்  புதியன  ஆகா.  இந்து  சமயக்கோட்பாடுகளே அவை.மற்றுமோரிடத்தில்  அவர்  என்னிடமுள்ள  ஒவ்வொரு  அணுவும் உன்னிடம் உள்ளதுதான், (Every atom belonging to me as goods belongs to you) நான் நீ என்று வேறுபடுத்திப் பேசப்படுவதெல்லாம்  உண்மையில்  ஒன்றே  (The mystical identity of the real I or you)-  என்று குறிப்பிட்டுள்ளார்.  இக்கருத்துக்கள்  அனைத்தும்  இந்து  சமயத்தின் அடிப்படையானவையே.  மேலும்  மனித இயல்பில் பாகுபாடுகள் உண்டு. கீழ்த்தரமான உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தி  ஆத்மாவை மாசற்றதாகச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பகவத்கீதையில் தன் முயற்சியால் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும் என வருவதைப் பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளது. அவர் கொண்ட கருத்துக்களுக்காக அவர் பல தியாகங்கள்  புரிய வேண்டியிருந்தது. ஆனால் அவற்றிற்காக அவர் அஞ்சவில்லை. 1892 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த பொழுது அவர் பெருமை மக்களுக்கு நன்கு புலப்பட்டது. தோரோ, எமர்ஸன், விட்மன் முதலான அமெரிக்க அறிஞர்தம் கருத்துகளை இவண்  எடுத்துரைப்பது  நம்  இந்து  சமயத்தின்  பெருமையைக் காட்டுவதற்காக  அன்று ;  எந்நாட்டவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அடிப்படையான தத்துவக் கருத்துகள் மக்களில் சிலருக்கு நன்கு புலப்படுகின்றன என்பதை நிரூபித்தல் பொருட்டேயாம்.

One Reply to “[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்”

  1. வால்ட் விட்மன் கருத்துக்கள் (greatmenthink alike ) – நமது இந்திய வேதாந்த மரபின் கிளைகள் போன்றவைதான். உலகம் முழுதும் உயர்ந்தோரின் கருத்துக்களில் அடிப்படை ஒற்றுமைகள் எப்போதும் பல நூற்றாண்டுகள் நிலவிவந்துள்ளன. ஆனால் ஆபிரகாமிய மதங்கள் சகிப்பு தன்மை இன்றி, பிற நம்பிக்கைகளை ஒழிப்பதை தங்கள் கடமையாக தொடர்ந்து செய்துவந்துள்ளன. அதன் காரணமாகவே, அவர்களுக்கு மதமாற்ற வெறி என்ற தீர்க்கமுடியாத வியாதி பீடித்துள்ளது. ஆபிரகாமிய மதங்கள் மதமாற்ற வியாதியை ஒழித்தால் உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *