உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டாவிருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு.
2009 ல் தொலைதொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, நியாயமற்ற நடைமுறைகளின் மூலமாக தனக்கு பிடித்தமானவர்களுக்கு 2 ஜி அலைக்கற்றைகளை இஷ்டத்துக்கு வாரி வழங்கினார். இதனால் அரசு கஜானாவுக்கு சுமார் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் (சி.ஏ.ஜி) வினோத் ராய் கூறினார். 3 ஜி அலைக்கற்றைகளை போட்டி மிகுந்த ஏல முறையில் விற்பனை செய்ததன் மூலமாக அரசுக்கு கிடைத்த வருவாயின் அடிப்படையில் இந்தக் கணக்கீட்டை சி.ஏ.ஜி செய்திருந்தார். ஏல முறையில் 2 ஜி விற்பனை செய்யப்படாதது, முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற பெயரில் மோசடி நிறுவனங்களுக்கு செய்த முறையற்ற ஒதுக்கீடுகளால் அரசுக்கு அப்போது இந்த இழப்பு ஏற்பட்டது.
சி.ஏ.ஜி. அறிக்கையால் நாடே அதிர்ந்தது. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ஆ.ராசா பதவி விலக வேண்டி வந்தது. அவரும், திமுக தலைவரின் மகள் கனிமொழியும், பல மோசடி நிறுவனங்களின் நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் கைதாகினர். அமைச்சர் ஆ.ராசா காலத்தில் செய்யப்பட்ட, 122 முறையற்ற 2 ஜி ஒதுக்கீட்டு உரிமங்களை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத மிகப் பெரிய ஊழலாக 2 ஜி ஊழல் அமைந்தது. (இதை இப்போது ரூ. 1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது தனிக்கதை).
இந்நிலையில் தான், சி.ஏ.ஜி.யின் கணக்கு புள்ளிவிவரங்கள் தவறானவை என்று காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அமைச்சர்கள் சிலரும் தொடர்ந்து புலம்பி வந்தனர். அவர்களுக்கு சி.ஏ.ஜி. தகுந்த விளக்கத்தை கொடுத்து வந்தார். அடிப்படையில் சி.ஏ.ஜி. என்பது அரசியல் சாசனப் பதவி. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் இழப்புகளைக் கண்டறிந்து எச்சரிக்கவே இந்தப் பதவியை நமது முன்னோர் உருவாக்கி இருக்கின்றனர். இவரது அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவும் சட்டமன்ற குழுக்களும் பரிசீலித்து தக்க பிராயச்சித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில் விசித்திரம் என்னவென்றால் சி.ஏ.ஜி. அரசுக்கு அளிக்கும் எச்சரிக்கை புள்ளிவிவரங்கள் அரசின் ஊழல்களை அமபலப்படுத்தி விடுகின்றன. இதை அரசால் ஏற்க முடிவதில்லை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் சந்தி சிரிக்கக் காரணமானது சி.ஏ.ஜி. தான் என்பதால், அதன் மீது காங்கிரஸ் அதீத கோபத்தில் இருக்கிறது. அண்மையில் கூட, சி.ஏ.ஜி. அமைப்பை மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றி தனியொருவரின் அதிகாரத்தை (வினோத் ராய்) முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் இப்போது பதுங்கி இருக்கிறது மத்திய அரசு.
இருப்பினும் சி.ஏ.ஜி. மீது மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, மனிஷ் திவாரி, ப.சிதம்பரம், கபில் சிபல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் அனுதினமும் புழுதி வாரித் தூற்றி வருகின்றனர் இந்த நிலையில் தான், 2 ஜி ஏல விற்பனை இப்போது நடந்து முடிந்திருக்கிறது.
இந்த ஏலமே மத்திய அரசால் நீதிமன்றக் கண்டிப்புக்கு அஞ்சி நடத்தப்பட்டது தான். அதே சமயம் இதை தனது நிலையை நியாயப்படுத்த கிடைத்த வாய்ப்பாக காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டுள்ளது. ஆட்சியில் இருப்பதால் கிடைத்துள்ள அதிகார பலத்தாலும், ஏற்கனவே நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான நிறுவனங்களின் உதவியாலும், இந்த ஏல விற்பனையை, பெயருக்கு நடத்தி இருக்கிறது மத்திய அரசு. ஏலம் நடத்துபவரும் ஏலத்தில் பங்கேற்பவரும் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அது தான் தற்போது நடந்திருக்கிறது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முதலில் ஜி.எஸ்.எம். பிரிவில் ஏலம் நவ. 15 ல் நடந்திருக்கிறது. இதில் அரசுக்கு ரூ. 28,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலத்தில் கலந்துகொண்ட நிறுவனங்கள் கோரியது ரூ. 9,400 கோடிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மட்டுமே. நிறுவனங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகத்தாலும் அதற்கு அரசு அனுசரணையாக இருந்ததாலும், இப்போது அரசுக்குக் கிடைத்திருப்பது ரூ. 5,000 கோடி (நிறுவனங்கள் ஏற்கனவே பெற்ற உரிமங்களுக்கு செலுத்திய முன்பணத்தைக் கழிப்பதால்) மட்டுமே. இனிமேல் நடைபெறப் போகும் சி.டி.எம்.ஏ. பிரிவுக்கான ஏலம் எப்படி இருக்கும் என்பதை இப்போதே தீர்மானித்துக் கொள்ளலாம்.
இந்த வருவாய் குறைந்தது ஏன் என்று கவலைப்பட்டிருக்க வேண்டிய மத்திய அரசோ பொருள் பொதிந்த புன்னகையுடன் வேடிக்கை பார்க்கிறது. ஏலம் கேட்க மறுத்த தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கையாக இந்த அலைக்கற்றைகளை அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடட் (பி.எஸ்.என்.எல்), விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடட் (வி.எஸ்.என்.எல்) ஆகியவற்றுக்கு அரசு வழங்கி இருக்க வேண்டும். அப்போது அரசு நிறுவனங்களில் நஷ்ட நிலையும் மாறி இருக்கும். ஆனால், மத்திய அமைச்சர்களோ இதை சி.ஏ.ஜி.யின் கணிப்புக்குக் கிடைத்த தோல்வியாக தம்பட்டம் அடித்து மகிழ்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்!
குறிப்பாக அமைச்சர்கள் ப.சி, கபில் சிபல் (இவர் தான் இப்போது தொலைதொடர்பு துறை அமைச்சர்!), மணிஷ் திவாரி போன்றவர்கள், ”பார்த்தீர்களா இதைத் தானே சொல்லி வந்தோம். சி.ஏ.ஜி. கற்பனையில் கூறிய கணிப்புகளால் நாட்டுக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டுவிட்டது! 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இதற்கு முன்னர் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று நாங்கள் சொல்லி வந்ததை இப்போதைய ஏலம் வெளிப்படுத்திவிட்டது!” என்றெல்லாம் ஆர்ப்பரிக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சிலர், ஒருபடி மேலாகச் சென்று, சி.ஏ.ஜி. பதவி விலக வேண்டும் என்றும் குரல் கொடுக்கிறார்கள்! என்னே கொடுமை இது?
இந்த ஏலத்தில் மும்பை, தில்லி, கர்நாடக வட்டங்களில் ஏலம் கேட்கவே ஆளில்லை. உண்மையில் இப்பகுதிகளில் தான் அதிகப்படியான செல்போன் உபயோகம் உள்ளது. எனவே இந்த வட்டங்களில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கையைக் கொண்டே ஏல ஆரம்ப கேட்பு விலையும் அதற்கான காப்புத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கூட்டு சேர்ந்துகொண்டு, இப்பகுதிகளில் ஏலமே கோராமல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் உண்மையான விலை அம்பலமாகாமல் தடுத்துள்ளன. இது ஒருவகையில் திட்டமிட்ட சதியாகும். 2009 ல் அமைச்சர் ஆ.ராசா செய்ததற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதே சமயம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரமுகர்களையும், அதில் லாபம் கண்ட திரைமறைவுப் புள்ளிகளையும் காப்பாற்ற இந்த ‘சிண்டிகேட் கூட்டணி’ உதவி இருக்கிறது. எனினும் இப்போதும் நீதிமன்றம் இதில் தலையிட முடியும் என்ற நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது.
ஜி.எஸ்.எம். ஏலத்தில் தீர்மானிக்கப்படும் விலையின் அடிப்படையில், முன்னர் 4.4 மெகா ஹெர்ட்சுக்கு மேல் அலைக்கற்றைகளைப் பெற்றுப் பயன்படுத்தி வருவோருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட இருந்தது. இதுவும் சிண்டிகேட் அமையக் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் நடக்கும் ஏலம் போல மாறிவிட்டது. நியாயமான அரசாக இருந்திருந்தால் தனியார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து, ஏலத்தை கேலிக்குரியதாக்கி இருப்பதால், மறு ஏலத்துக்கு உத்தரவிட்டிருக்கும். ஆனால், ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமான தற்போதைய மத்திய அரசே தான் இந்த கூட்டுக் களவாணித் தனத்துக்கு துணை போயிருக்கிறது!
இப்போது ஆ.ராசா தனது திருவாயை மறுபடியும் திறக்கக் கூடும். ‘’இதையே தான் நான் அன்று செய்தேன் தொலைதொடர்புத் துறையில் மாபெரும் பாய்ச்சல் நிகழ நான் அளித்த கட்டணக் குறைவான ஒதுக்கீடுகளே காரணம் என்று இப்போது நாடு உணர்ந்திருக்கும் என்று அவர் சொல்லலாம். அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடமும் அளிக்கப்படலாம். எல்லாம் நம் நாட்டின் தலைவிதி. பேய்களிடம் ஆட்சிப்பொறுப்பை அளித்துவிட்டு நாட்டில் அக்கிரமம் நடக்கிறதே என்று அங்கலாய்ப்பதில் பொருளில்லை. ஆயினும் சிலப்பதிகார வரிகள் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன – ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’. இதை நமது பிரதமர் மன்னுமோகன் மறந்துவிடக் கூடாது.
***
ஏலம் குறைய காரணங்கள்:
* 2008 ல் இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.34 கோடி மட்டுமே. அப்போது புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருந்தது. அதன் அடிப்படையில் தான் சி.ஏ.ஜி. தனது கணிப்பை வெளியிட்டது, உண்மையில் அப்போது ஏலம் விடப்பட்டிருந்தால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் நல்ல விலைக்குப் போயிருக்கும். 2008- 2009 ல் ஒரே மாதத்தில் மட்டும் 2 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
* தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே பெற்ற அலைக்கற்றைகளில் 75 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அலைக்கற்றைகளுக்கு கிராக்கி குறைவது எதிர்பார்க்கக் கூடியதே.
* செல்போன் நிறுவனங்களிடையிலான போட்டியால் பயன்பாட்டுக் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ள சூழலில், இனிமேல் இத்துறையில் கூடுதல் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் தயங்குவதும் ஏற்கக் கூடியதே. அரசு செல்போன் நிறுவனங்களுக்கு விலைபோகாத அலைக்கற்றைகளை வழங்கினால் தனியார் நிறுவனங்கள் உஷாராக வாய்ப்பு இருந்தது. அதை அரசு தவிர்த்துவிட்டது.
* ஊழல் மயமான மத்திய அரசு மீதான நம்பகத் தன்மை பாதிப்பு, பொருளாதார தேக்கநிலை, அரசின் ஆர்வமின்மை ஆகியனவும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் சுரத்தின்றிப் போனதற்கு காரணங்கள். இதை மறந்துவிட்டு, அரசு அமைப்பான சி.ஏ.ஜி.ஐ அமைச்சர்களே விமர்சிப்பதும் அதன் கணிப்புகளை தோல்வி என்று வர்ணிப்பதும் உச்சகட்ட அவல நகைச்சுவையாகவே உள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை மிக நேர்த்தியாக எழுதி 2G Spectrum Scam என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 2011 ல் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். ஊழலுக்கு எதிராகப் போராடுவோருக்கு இந்நூல் பல திறப்புகளை அளிக்கக் கூடியது. இந்நூலை தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சேக்கிழான் அவர்கள் அருமையாகத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
”தமிழ் ஹிந்து இணையதளத்தில் நான் எழுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த கட்டுரைகளே இந்த வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்தன.. சுவாமி போன்ற மேதை எழுதிய புத்தகத்தை, அதுவும் பெரிய அளவிலான,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புத்தகத்தை என்னால் மொழி பெயர்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. எனினும் சவாலாக இதை மேற்கொள்ள முடிவு செய்தேன்.. இந்த கடும் உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. கிழக்கு பதிப்பகம் இந்நூலை சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறது. இதில் என் பங்கும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது- தேசத்துக்கு என்னால் ஒரு சிறு பணி ஆற்றப்பட்டுவிட்டது” என்று புத்தகத்தை மொழிபெயர்த்த அனுபவம் குறித்து சேக்கிழான் தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
2G ஸ்பெக்ட்ரம் ஊழல்
சுப்பிரமணியன் சுவாமி (தமிழில்: சேக்கிழான்)
பக்கங்கள்: 240
விலை: ரூ. 195
கிழக்கு பதிப்பகம், சென்னை.புத்தகத்தை இணையம் மூலம் இங்கே வாங்கலாம்.
எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம் உள்ளது. இன்றைய 4G காலகட்டத்தில் 2G என்ற தொழில் நுட்பம் எத்துணை வரவேற்பைப் பெறும்? அதாவது, எல்.ஈ.டி டீவிக்களின் காலத்தில் சி.ஆர்.டி ட்யூபைக் கொண்டு தயாரிக்கப்படும் பெரிய தொலைக்காட்சியை யார் வாங்குவார்கள்? இதை தயைசெய்து தெளிவிக்கவும்.
மேலும், நீ அடிக்கிற மாதிரி அடி, நான் அழற மாதிரி அழுகிறேன் என்று லெட்டர் பேடு கம்பெனிக்களைக் கொண்டு இந்த மாதிரி ஒரு ஏலம் நடக்கலாமல்லவா?
அட போங்கப்பா நீங்களும் உங்கள் வியாக்கியானமும்… இதே மாதிரி கட்டுரையை எல்லா விஷயத்திலும் எழுதுங்கள்… உங்களின் மு.க. எதிர்ப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை… “சுவாமி போன்ற மேதை எழுதிய புத்தகத்தை” உங்களுக்கே வெட்கமாக இல்லையா இந்த வார்த்தைகளுக்கு ?
சாரவ்,
ஒரு அரசியல் கோமாளி என்பதுபோலத்தான் நாம் சுவாமியை நடத்தி வருகிறோம். ஆனால் அவர்தான் இதுபோன்ற ஒரு மெகா ஊழலை வெளிக்கொண்டுவந்தார். அவரால்தான் சோனியா போன்றவர்களெல்லாம் பிரதமர் பதவியில் அமர நேர்ந்த பெரும் அரசியல் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரால்தான் ஜெ உள்ளே போக நேர்ந்தது.
சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு பொருளாதார மேதைதான். இதை ஒப்புக்கொள்ள உங்களுக்கு வேண்டுமானால் கருப்பும் சிவப்புமான வண்ணங்கள் கண்களையும் மனதையும் மறைக்கலாம். எல்லாருக்குமே அப்படி இருக்கவேண்டுமா என்ன ?
அவர் தனது கல்விப்புலத்தில் மேதையாக இருந்ததால்தான் தான் முழு உதவித்தொகை வழங்கப்பட்டு படித்த ஹார்வர்ட் பல்கலையே அவருக்கு அங்கெ வருகைதரு பேராசிரியர் பதவியையும் வழங்கியது. (பின்னே உண்மையிலேயே படித்து டாக்டர் பட்டம் (Ph.D) வாங்கிய அவர் போன்றவர்களுக்கு அல்லாமல் பல்கலை கழகங்களை தனக்கு பட்டம் வழங்கவைத்த போலிகளுக்கா கொடுப்பார்கள் ஹார்வர்ட் பல்லை போன்ற உயர்கல்வி நிறுவனத்தார் ?)
கருத்து வேறுபாடுகளை மீறி ஒரு அறிவாளியை அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் நேர்மையான மனது இல்லாமல் போனது குறித்து உங்களுக்கு வெட்கமாக இல்லை; ஆனால் அப்படி ஒப்புக்கொல்பவர்களை பார்த்து ‘உங்களுக்கு வெட்கமாக இல்லையா’ என்று பொதுவில் கேட்க வந்துவிட்டீர்கள். துளியும் கூசவில்லை உங்களுக்கு ?
என்ன செய்வது நோயாளிக்கு ஆரோக்கியமானவனை கண்டால் அடிவயிற்றில் தீ எறிவது இயற்கைதான்.
அன்புள்ள பொன் முத்துகுமார்,
சுப்பிரமணியம் ஸ்வாமி பாப்பானாச்சே, அதையல்லவா நீங்கள் முதல்லே கவனிச்சிருக்கணும். அதைப் பொருத்துத் தானே மற்ற எல்லா வாதங்களோ வசவுகளோ வரும்? சாரவ் போன்றோரின் எழுத்துக்களை இங்கு முன்னர் பார்த்திருந்தால், “வெட்கமா இல்லே?” என்று கேட்கும் அவசியமே இருந்திராது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு , மத்திய அரசின் அரசிதழில் இந்த மாதம் கடைசி நாளுக்குள் அச்சிடப்பட இருக்கிறது. 2007 – ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட , மத்திய அரசில் தயிர்வடை தின்னும் திமுகவினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதோ உச்ச நீதிமன்றம் தயவால் இக்காரியம் நடக்கிறது. மத்திய அரசில் பதவியில் இருக்கும் அரசு செய்யவேண்டிய வேலையை செய்யாமல் தூங்குவதனை, தட்டிக்கேட்டு , இதனை திமுக குடும்ப அமைச்சர்கள் 2007 -2012 க்கு இடைப்பட்ட காலத்தில் செய்யாமல் தங்கள் பேரன் பேத்திகளுக்கு ஜாமீன் வாங்குவதிலேயே காலத்தை போக்கிவிட்டனர். தமிழகத்தின் சாபக்கேடான இந்த குடும்ப கட்சிக்கு , மக்கள் வரும் தேர்தலில் நல்ல ஆப்படிக்க இருக்கிறார்கள்.