வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”

மணிரத்னம்  இன்று  திரைப்படத் துறையில்  ஒரு மகா மேதை,  ஒரு சிகர உச்சியில் அமர்ந்திருக்கும் கலைஞன்,  என்று தமிழ்  சினிமாவில்  மட்டுமல்ல, இந்தியப்  பரப்பு   முழுதும் ஆராதிக்கப்படும் தெய்வம். யாரும் அவரைப் பற்றி ஏதும் கேள்வி எழுப்புவது ஏதோ மத நிந்தனை செய்துவிட்டது போன்ற குற்றத்துக்கு ஆளாகும் காரியம். அந்த பிம்பத்தை பி.ஆர்.மகாதேவன் தன் புத்தகத்தில் ஏதும் சுக்கு நூறாக சிதைத்து விடவில்லை தான். ஆனால், விக்கிரகத்தின் கைகால்கள் உடைந்திருக்கின்றன. ஒரு பெரிய விரிசல் தோளிலிருந்து தொடைவரை குறுக்கே விக்கிரஹத்தைப் பிளந்திருப்பது தெரிகிறது. பிம்பம் ஒரு விக்கிரஹமாக   இன்னும் கொஞ்சம் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு மூன்று சம்மட்டி அடிகளுக்கே கூட மகாதேவனுக்கு நிறைய மூட்டை மூட்டையாக தைரியம் வேண்டும். தமிழ் சினிமா உலகில் துணை இயக்குனராகப் பணி செய்யும் ஒருவருக்கு இந்த எதிர்ப்புக் குரல் ஆகாது தான். பிழைப்புக்கு ஆகாத காரியம். வடிவேலுக்கு என்ன நடந்தது தெரியுமில்லியா? ஒரு டாப் காமெடியனுக்கே இந்த கதி.

mani01

இதற்கு முன்னால் மகாதேவன் இன்னும் சில புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தமிழ் சினிமாவின் விக்கிரஹ விநாசன் தான். கையில் ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக்கொண்டு அலைகிறார், விக்கிரஹங்கள் எங்கே என்று தேடி. நல்ல காரியம் தான். பத்திரிகைகளும், அறிஞர் பெருமக்களும், சினிமா கலைஞர்களும், ரசிகப் பெருமக்களும் செய்யாத காரியத்தைச் செய்யத் தொடங்கியிருக்கிறாரே. இதற்கு முன்னால் இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரபபடும் என்று ரிபேர் ஷாப்புக்கு போர்டு போட்ட மாதிரி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.  ரிபேர் ஷாப் தான் என்றாலும் காயலான் கடைக்குப் போக வேண்டியதையெல்லாம் அவர் எடுத்துக் கொள்வதில்லை. தமிழ்ப் படங்கள் 95 சதமானம் இப்படியாப்பட்ட காயலான் கடை சமாசாரங்கள் தான். ஏதாவது கொஞ்ச நஞ்சம் தேறும் போலிருப்பதை த்தான் அவர் ரிபேர் செய்ய எடுத்துக்கொண்டிருந்தார் அந்த புத்தகத்தில். நந்த லாலா, அங்காடித் தெரு, ஆடுகளம், அழகர்சாமி குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும்,  நான் கடவுள் போன்ற ஒரு சில தான் ஏதோ கொஞ்சம் ரிப்பேர் செய்து ஒப்பேத்தலாம் என்று அவர் முடிவு செய்து திரைக்கதையை ஆங்காங்கே திருத்தி எழுதிக் காட்டியவை. எனக்கென்னவோ இதில் ஆடுகளம், எங்கேயும் எப்போதும் இரண்டைத் தவிர மற்றவற்றைத் தொட்டிருக்கக் கூடாது. அங்காடித் தெரு, நான் கடவுள் இரண்டிலும், நான் பெரிதும் மதிக்கும் ஜெயமோகனின் பங்களிப்பு இருந்த போதிலும்.

மகாதேவன் பொறுக்கியவற்றோடு, சுப்பிரமணியபுரம், வெயில், முரண், தென்மேற்குப் பருவக் காற்று போன்றவற்றையும் சேர்த்திருக்கலாம். இவையெல்லாம் ஃபார்முலாவை உதறி, தமிழ்ப் படங்களின் மசாலாக்களையும் உதறி தம் வழியில் புதிய பாதை அமைக்கும் முயற்சி எனச் சொல்லப் பட்டாலும், எதிலும் மசாலாவும் ஃபார்முலாக்களும் உதறப் படவில்லை. முழுக்க முழுக்க அதே மசாலாக்கள் என்றில்லாமல் ஏதோ கொஞ்சம் பழக்க தோஷம், அல்லது முற்றிலுமாகத் தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்ற எண்ணமும் இருக்கலாம்.

மகாதேவன் புதிய பாதையில் செல்ல வேண்டும் என்று எண்ணிய தைரியத்தையும், செயல் முனைப்பையும் மனதில் கொண்டு தான் அவற்றை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதில் காப்பியடித்தே தம்மை வேறுபட்ட சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்ள முயலும் நந்தலாலா, எங்கேயும் எப்போதும், முரண் போன்றவற்றை ஒதுக்கியிருக்க வேண்டும். போகட்டும். ஏதோ காரணம் தேடி, சினேகா டான்ஸ் கூட, ப்ரொஜெக்டர் அறையில் ஒரு காதல் டூயட் கூட இல்லாமல் போனால் நல்லாவா இருக்கும் என்ற எண்ண ஓட்டம் உள்ளவர்களை என்ன செய்வது?

இருக்கட்டும். லேசா ஒரு பவுடர், லைட் கலர்லே கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டுட்டு வரேனே என்று சமாதானம்  சொல்கிறவர்களை என்ன செய்வது? இப்போதைக்கு “சரி” என்று சொல்லலாம்.

இவற்றிலும் உள்ள அபத்தங்களையெல்லாம் மகாதேவன் ஒவ்வொரு படத்துக்கும் சொல்லி வந்தார். ஆனால் அவர் திருத்தங்கள் சொன்னதெல்லாம் வேறு வகையான “கதை தயாரிப்பாகத்” தான் பட்டது. அது போலத் தான், மணி ரத்தினத்தின் படங்கள் பற்றி அவர் சொல்லும் போதும், நமக்குப் படுகிறது.

மணி ரத்தினத்தின் ரோஜாவோ இல்லை வேறெதுவோ ஃபில்ம் ஃபெஸ்டிவலில் இடம்பெறத் தொடங்கிய காலத்திலிருந்து, நான் அதைப் பார்க்கக் கிடைத்த காலத்திலிருந்து வடக்கிலும் சரி, தென்னாட்டிலும் சரி, எல்லாரும் அவர் புகழ் பாடக் கேட்டு வந்திருக்கிறேன். எனக்கு அவர் எந்த விதத்தில் ஒரு கலைஞன் என்று புரிந்ததில்லை. அவர் படங்களில் எந்த விதமான வித்தியாசத்தையும் அவர் படங்களின் உள்ளார்ந்த சாரத்தில் (inner core) நான் காணவில்லை. சந்தைக்கு சரக்கு தயாரிப்பவராகத் தான் எனக்குத் தோன்றியிருக்கிறார். ரோஜா விலிருந்து ராவணன் வரை. ஜிகினா வேலையில், உடையலங்காரத்தில், மேடையை ஜொலிக்கச் செய்யும் மின்விளக்கு ஜோடனைகளில் வித்தியாசமானவர். ஆனால், பார்க்கக் கிடைப்பது என்னவோ அதே கும்மாங்குத்து தான். “சையான் சையான்”, ருக்குமணி, ருக்குமணி”யை வைத்துத் தான்  வியாபாரம் நடக்கிறது.  அதைத் தான் மகாதேவன் ரஸவாதம் என்று சொல்கிறார்.

mani02

மகாதேவன் எழுத்துக்களில் நான் தொடர்ந்து பார்த்து வருவது, எனக்கு மகிழ்ச்சி தருவது, மகாதேவன் ஜிகினா அலங்காரத்தில் எல்லாம் மயங்கிவிடுவதில்லை. மகாதேவன் அதை ரஸவாதம் என்று சொல்லும்போதே அது ஏமாற்று வேலை, உண்மையான மாற்றம் இல்லை என்பதைச் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் ரஸவாதம் செய்வதில் மணிரத்தினத்திடம் ஒரு கெட்டிக்காரத்தனம், இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஓடும் ரயில் வண்டியின் மேல் கும்மாங்குத்து ஆட வைத்த தைரியம் வேறு யாருக்கு வந்தது?

மணிரத்தினமும் படங்களுக்கெல்லாம் கதை தயாரிப்பு அவரது தான். ஜெயமோகனை அழைத்தாலும் சரி. நடந்த சரித்திரத்தை, நிகழ்கால வரலாற்று மனிதர்களைச் சித்தரிப்பதாக இருந்தாலும் சரி, “எல்லாம் கற்பனை” என்று சொல்லி கதையைத் தன் இஷடத்துக்கு வளைத்துக் கொள்வது அவர்தான். அவை வரலாற்று உண்மைகள் அல்ல. நம் மற்ற தமிழ் சினிமா கதைக்காரர்கள், இயக்குனர்கள் போலவே, காரக்டர், நேடிவிடி, என்று அவர்கள் பேசும், அர்த்தம் கொள்ளும் பாணியிலிருந்து மணிரத்தினம் விலகியவர் அல்ல. ரோஜா, இருவர், பம்பாய், உயிரே, எதானாலும் சொல்லப்படுவது இந்த வரலாறு தான், இந்த மனிதர்கள் தான் என்று செய்தி பரவ வைத்து பெருமை தேடிக்கொள்ளும் அதே சமயம் ”அல்ல, இவை கற்பனையே” என்று பாதுகாப்பும் தேடிக்கொள்ளும் வழக்கம் தவறாமல் தொடரும்.  அது மட்டுமல்ல. மற்ற தமிழ் சினிமா கதைக்காரர்கள், தயாரிப்பாளர்களிடமிருந்து தான் வித்தியாசமானவன் , வேறுபட்டவன் என்று பெயர் பெற்றுக்கொண்டே அவர்கள் செய்யும் அபத்தத்தையே தானும் செய்வதில், அதை வித்தியாசமான ஜோடிப்பில் ஜொலிப்பில் செய்வதில் அவர் ரஸவாதி.

நிறையவே சொல்லலாம். ஒவ்வொரு படத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாகச் சுட்டிச் செல்லலாம். இதெல்லாம் யாருக்கு நினைவில் இருக்கிறது? படம் பார்க்கும் போதே கண்முன் காணும் அபத்தங்களைக் கண்டு முகம் சுளித்து இருக்கலாமே ஒழிய இவற்றை யார் பட்டியலிட முடியும்? இம்மாதிரியான ஒவ்வொரு படத்தின் காட்சியும் நம் முகச்சுளிப்பில் முடிவதால், ஆனால் உலகம் அவரை இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞன், 20 கோடி சம்பளம் வாஙுகுகிற ஹிந்தி  ஸ்டார்கள் எல்லாம் மணிரத்தினத்தின் படத்தில் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ரஸவாதம் தான்.

மகாதேவன் அடுக்கிச் செல்லும் அனேக சம்பவங்களில் ஒன்றைச் சொல்லலாம். படம் ரோஜா. ஒரு சமயத்தில் தீவிர வாதி சொல்கிறான் – தன் சகோதரி, சகோதரன், நண்பன், அப்பா அம்மா யாராக இருந்தாலும் கொன்று விடத் தனக்கு கட்டளை பிறக்குமானால் தயக்கமே இல்லாமல் கொன்று விடுவேன் நான் என்று சொல்கிறான். இன்னொரு காட்சியில் கதாநாயகன் அந்த தீவிர வாதியிடம் வசனம் பேசுகிறான். “நீ என்னைக் கொல்லமாட்டாய். நீ ரொம்ப நல்லவன். உன் தம்பி செத்த போது நீ என்னமா அழுதாய். உனக்கு மனசாட்சி இருக்கு. நீ என்னைக் கொல்லமாட்டாய்”   என்று வசனம் பேசுகிறான். தீவிர வாதி மனம் மாறிவிடுகிறது. கதாநாயகன் தப்பி விடுகிறான். இது டிபிகல் தமிழ் சினிமா கதை தயாரிப்பு. மணி ரத்தினத்தின் வசனம் கொஞ்சம் சுருக்கமாக இருக்கும். மற்றவர்கள் கதறிக் கதறி பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள்.  அது வெகுவாக மணிரத்தினத்திடம் குறைந்திருக்கிறது.  மற்றபடி மணி ரத்தினம் தன் அறையில்  தனிமையில் உட்கார்ந்து கொண்டு வசனம் யோசித்து எழுதுவாரே தவிர, வாழ்க்கையை, மனிதர்களை, அவர்கள் வாழும் சூழலை, சிந்தனைகளை அறிந்து கதையும் வசனமும் எழுதுவதாகவோ, கதை மாந்தர்களை அவர் அறிந்தவராகவோ சொல்வதற்கு அவர் படங்களில் சாட்சியமில்லை. இதைப் பல இடங்களில், மணிரத்தினத்தின் ஒவ்வொரு படத்திலும் மகாதேவன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தென்மாவட்ட ஒரு குக்கிராமத்தைக் களமாகக் கொண்டால், அது குக்கிராமமாக இருக்க வேண்டும். ஒரு பெண் முறைப் பையனை விரும்புகிறாள். ஆனால் அவள் தங்கைக்கு அது தெரியாதாம். அவர்கள் குடும்பத்துக்குள் பகை என்றால், பெண் பார்க்க வருகிறானாம் முறைப்பையன். தங்கையைப் பிடித்திருக்கிறது என்று சொல்கிறானாம். தென்மாவட்ட முறைபெண் கோரும் குடும்பத்தில் பெரிய இடத்து போஷாக்கு தெரியும் அரவிந்த் சாமி மாதிரி ஒரு மாப்பிள்ளை. முறைப் பெண்ணின் தங்கை மாத்திரம் ஆந்திராவிலிருந்து வந்த சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாள். தங்கைக்கு கல்யாணம் ஆகிவிடும். தங்கை தான் அவனுக்கு பிடித்திருக்கிறது. ஏனா? இதென்ன கூத்து? அரவிந்தசாமி மாப்பிள்ளையானால் வேறு யாரைப் பிடிக்கும்? ஆந்திரா ஸ்டார் மாதிரி செக்கச் செவேல் என்று இருக்க வேண்டாமா?

மகாதேவன் சொல்கிறார், “முறைப் பையன் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லும் அக்காவின் மனது தங்கைக்குத் தெரியவில்லை என்று சொல்லும் மணிரத்தினத்துக்கு திரைக்கதையும் எழுதத் தெரியாது, பெண்ணின் மனமும் தெரியாது, கிராம வாழ்க்கையும் தெரியாது. என்று. சரியாகத்தான் சொல்கிறார். உண்மையில் மகாதேவன் மணிரத்தினத்தின் எந்தப் படத்தைப் பற்றியும் சரி, தமிழ் சினிமாவிற்கு வந்துள்ள புதிய புரட்சியாளர் படங்கள் பற்றியும் சரி, கதை, வசனம் இத்யாதி விஷயங்கள் பற்றி சொல்வதெல்லாம் சரியாகவே சொல்கிறார்.

இது பற்றியெல்லாம் தமிழ் சினிமாவில் எவரும் கவலைப் பட்டதில்லை. தமிழ் சினிமாவை கலையாக உயர்த்தி, இந்தியப் பரப்பிற்கும், உலகத் தரத்திற்கும் எடுத்துச் செல்ல வந்தவர்க்கும் தெரியவில்லை. கதை ரூம் போட்டு யோசிக்கவில்லை. தன் வீட்டிலேயே அவருக்கு ரூம் இருக்கு. அங்கே தான் எல்லாம் யோசித்து எழுதுகிறார். கலைப் படைப்பிற்கு தனிமையும் தியானமும் தேவைப்படுகிறது. தமிழ் சினிமா மரபு மாறவில்லை.

சரி இந்தக் கதை காஷ்மீருக்கு நகர்கிறது. ஏன்? எப்படி? என்ன நிர்ப்பந்தம்? பாடல் காட்சிகளை கஷ்மீரில் எடுத்தால் தானே பார்க்க அழகான காட்சிகளைத் தரலாம். என்னா போட்டோக்ராபி, என்னா போட்டோக்ராபி என்று மலைப்பார்கள். இது தானே நம் மரபு? சங்கர் ஏன் தென் அமெரிக்காவில் இது வரைக்கும் போகாத இடமாகத் தேடியலைந்து கடைசியில் மச்சுப் பிச்சுக்குப் போகிறார்? கமலஹாஸன் எதற்கு கனடாவுக்கும் அமெரிக்கவுக்கும் போகிறார் டான்ஸ் ஆட? ஏன் இங்கே ஸ்டுடியோவில், இல்லை உசிலம்பட்டியில் ஆடினால் அது ஆட்டமாகாதா? சங்கர் ரொம்பக் கஷ்டப்பட்டு புதிய புதிய லொகேஷனாக தேடுவார்.  இந்த வியாதி தமிழ் சினிமாவில் அத்தனை பேரையும் தொத்திக் கொண்டு விட்டது. சிம்பு ஒவ்வொரு தடவையும் இந்தத் தடவை ஷூட்டிங் ப்ரேசிலில், டாங்கனீக்காவில் என்று சொல்கிறார். சப்ஜெக்ட் கிராமத்து சப்ஜெக்ட் தாங்க, ஷூட்டிங் தான் ஸ்விட்ஸர்லாந்தில்.

இதெல்லாம் சரி, ஆனால் இந்தக் கதை நம்பகமாகவே இல்லை. மண்வாசனையே கிடையாது என்று சரியாகவே சொல்லும் மகாதேவன் நான் கதை எழுதினால் எப்படி இதைச் சரிப்படுத்துவேன் என்று சொல்லும் கதை இன்னொரு ரக தமிழ் சினிமா கதையாகத் தான் அது வந்து முடிகிறது.  முன்னர் எழுதிய  “இங்கே திரைக்கதை பழுது பார்க்கப்படும்” என்று சொல்லி, அவர் பழுது பார்த்த ஒவ்வொரு கதையும் இந்த ரகமாகத் தான் பழுது பார்க்கப் பட்டுள்ளது.

mani03

சத்தியவானின் உயிரைக் கொண்டு போகும் யமனிடம் வாதாடி சாவித்ரி கணவன் உயிரை மீட்ட மாதிரி, – (இந்த சத்தியவான் சாவித்ரி உபமானம் கொடுத்தது நானல்ல. மகாதேவன்) –  இங்கு கதாநாயகி, தீவிர வாதிகளிடம்,  ”என் புருஷனை விட்டுவிட்டுப் நான் போகமாட்டேன்”, என்று பிடிவாதமாக அங்கேயே தீவிர வாதிகளிடம் தங்கிவிடுவாளாம். அவர்களுக்கு சுவையாக சமைத்துப் போடுவாளாம். அந்த தீவிர வாதிகளும், தெற்கே எப்போதோ வந்தவர்கள் தென் மாவட்ட சமையலை ரசித்த அனுபவத்தில் கதாநாயகி சமைத்துப் போடுவதையும் ரசித்து மெதுவாக மனம் மாறுவார்களாம். காஃபிர்களைச் சுட்டுக் கொல்லும் தீவிர வாதிகளை நம் கதாநாயகி அன்பால், தன்  தென்பாண்டிச் சமையலால் வெற்றி கொள்கிறாள். தீவிர வாதிகளின் தங்கை பிரசவ வேதனையில் இருக்கும் போது, ”நான் அவளை இந்த கதியில் விட்டுப் போகமாட்டேன்,” என்று தப்பித்து ஓட மறுக்கிறாள். தீவிரவாதிகளின் தங்கைக்கு பிரசவம் பார்க்கிறாள். தீவிரவாதிகளிடமிருந்து கதாநாயகியும் கதாநாயகனும் தப்பிக்க அந்த தங்கை தான் உதவுவாள்.  அந்த ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் தன் கிராமத்திலிருக்கும் பாட்டிக்கு டெலிபோன் செய்து ”என்ன சிகிச்சை?” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாளாம். அந்த இரவில் தொலையில் எங்கோ இருக்கும் டெலிபோன் பூத்துக்கு தீவிர வாதியின் பாதுகாப்பில் கதாநாயகன் கதாநாயகியின் பாட்டியை பிரசவ சிகித்சை பற்றிக் கேட்கப் போகிறான்.

மகாதேவன் ரிபேர் வேலையில் ஒரே பாசமழை பொழிகிறது. சிவாஜி கணேசன் சாவித்ரி ஜோடியைத் தான் புக் செய்ய வேண்டியிருக்கும். பாசமலர் பாதிப்பு இன்னும் மகாதேவனை விடவில்லை. இந்த டெக்னிக்கில் நாம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தீவிர வாதத்தை, செச்சென்யாவா, திபேத்தா, பாலஸ்தீனமா, சிரியாவா, துருக்கி- இராக் எல்லையா, சிக்கியாங்கா, எதாக இருந்தால் என்ன, நிறைய பாசம் பொழியும் தங்கைகள் தேவை. தங்கைகள் பாசம் பொழிய கண்ணீரை பக்கெட் பக்கெட்டாகக் கொட்ட வைக்கும் நீண்ட வசனங்கள் தேவை.

இந்த மாதிரி தான் மகாதேவனின் கதை திருத்த இலாகா செயல்படுகிறது. கடைசியில் மகாதேவன் சொல்கிறார்: எமனையே வென்ற சாவித்ரி போல் தீவிரவாதிகளிடம் போராடி கணவனை மீட்கிறாள் என்று திரைக்கதை அமைத்திருந்தால், படம் எங்கோ போயிருக்கும். அதோடு கஷ்மீர் மக்களின் வேதனையும் முழு வீச்சில் கொண்டுவந்திருந்தால் காலத்தால் அழியாத காவியமாக ஆகியிருக்கும். இந்த வார்த்தைகள் சமீப காலத்தில் தமிழில் அர்த்தம் இழந்த ஆவேசங்களாக ஆக்கப் பட்டவை. அர்த்தம் இழந்த தமிழ் சினிமாவை அர்த்தமுள்ளதாக ஆக்க ஆசைப்படும் மகாதேவனும் கூட இந்த மாதிரி ஆவேசங்களைத் தவிர்க்க முடிவதில்லை.

மணிரத்தினத்தின் இன்னும் சில படங்களையும் தன் பார்வைக்குட்படுத்துகிறார் மகாதேவன். அஞ்சலி, உயிரே, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால்  என்னும் இன்னம் நான்கு படங்கள்.

அஞ்சலி தவிர மற்றவையும் அரசியல் பிரசினைகளை மையமாகக் கொண்டவை. ஆனால், பிரசினை எதையும் எதிர்கொள்ளும், அதன் மையத்தை, புரிந்து கொள்ளும் எண்ணம் அவருக்குக் கிடையாது. அதன் கொதிநிலை, நீண்ட கால போராட்டம் மக்கள் அவதி எதுவும் அவருக்கு பொருட்டல்ல. ஒரு பெரிய பிரசினை வேண்டும். மணி ரத்தினத்துக்கு அது ஒரு கோட்ஸ்டாண்ட். அதில் அவர் தன் காதல் கதையை, பாடல்களை, நடனங்களை, அழகான லொகேஷன்களை, அழகான புகைப்படக் காட்சிகளைத் தொங்க விடுவார்.  ரத்தக் காட்டாறு பெருகும் அந்தப் பிரசினையே அவருக்கு தன் அழகான பாடல்/டான்ஸ் காட்சிக்கேற்ப கதைத் திருப்பங்களை,, திருகல்களைக் கொண்ட கதையாகும். ரெஹ்னா ஹி க்யா ……மிக அழகான பாடல். அழகாக நடனம் அமைக்கப்பட்டது தான். கேட்க இனிமையான, பார்க்க அழகான காட்சி. சரி. இது எதற்காக படத்தில் இடம் பெறுகிறது?. இதற்கும் படத்தின் ஆத்மாவிற்கும்  என்ன சம்பந்தம்? எது எந்த விதத்தில் பிரசினைக்கு உதவுகிறது? படத்தை வெற்றி பெற இது வேண்டும். அவ்வளவே. அது ருக்குமிணி, ருக்குமிணி என்று கிழவிகள் நடனமானாலும் சரி, “சையான் சையான்  என்று ஓடும் ரயில் வண்டியின் மேல் நின்று ஆடும் குத்தாட்டமானாலும் சரி. என்ன கற்பனை ஐயா, கலை உலக மேதைக்கு! கல்யாணம் எல்லாம் நல்லா நடந்திச்சாய்யா,? என்று கேட்டால் சாப்பாட்டிலே வடை போட்டாங்க, பிரமாதம்” என்று சொல்ல வேண்டி வந்தால் என்ன அர்த்தம்?

இந்தப் படங்கள் எல்லாம் ஒரு திவிர பிரசினையை மையமாகக் கொண்டவை தான். ஆனால் இவை அந்த பிரசினையைச் சொல்ல வந்த கதைகள் அல்ல. பிரசினையை அவ்வப்போது தொட்டுவிட்டு தொட்டு விட்டு ஓடி தன் வழிச்செல்லும் கதைகள் அவை. அந்தக் கதைகளின் அக்கறை பிரசினை அல்ல. பிரம்மாண்டமான, வித்தியாசமான, அழகான காட்சிகள் தர வழி தரும் கதைத் திருப்பங்கள். அதற்கும் உண்மை நிலவரத்திற்கும் ஒரு சம்பந்தமும் இராது. முற்றிலும் மணிரத்தினம் தன் ரூமில் தனித்து இருந்து யோசித்த கதைத் திருப்பங்கள்.  ஜனாதிபதி ஒரு பெரிய விழாவிற்கு வருகை தரும்போது அங்கு மனித வெடிகுண்டு வெடித்து ஜனாதிபதி கொல்லப்படவேண்டும். எப்படி? இது எப்படி சாத்தியம். அடிக்கு அடி கண்காணிப்பு பலமாக இருக்குமே. மனித வெடிகுண்டு கிட்ட நெருங்குவது எப்படி சாத்தியம்? இது ஏன்? ஏனா, அந்த பிரம்மாண்ட அணிவகுப்பு காட்சி படத்தில் இடம் பெற வேண்டாமா? அதுக்காகத் தான். எப்படி மனித வெடிகுண்டு ஜனாதிபதி அருகில் செல்வான்? சுலபம். கண்ட்ரோல் வயரை ஒரு தீவிர வாதி பிடுங்கி விடுவான். ஒரே குழப்பமாகும்? இப்படித்தான் கதைத் திருப்பங்கள் உருவாக்கப்படும். தமிழ் சினிமா கதைகள் உருவாகும். மனிஷா கொய்ராலா வை இந்தக் குழப்பத்தில் ஷா ருக்கான் கரகரவென்று இழுத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் காலி மண்டபத்துக்குப் போவான். அங்கு பக்கத்தில் ஒரு காலி மண்டபமும், தரதரவென்று கொய்ராலா குண்டு வெடிக்காமல் பத்திரமாக இழுத்துச் செல்வதும் தமிழ் சினிமா செட்டில் தான் நடக்கும். ஜனாதிபதிக்கான பிரமாண்ட அணிவகுப்பு, பின் சுற்றியிருக்கும் காவல்துறையினர் யாரும் மனிஷா கொய்ராலாவை ஷா ருக்கான் இழுத்துச் சென்று காலி மண்டபம் வரை செல்வதைப் பார்க்கவில்லையாம்.

இது எப்படி சாத்தியம் என்று மகாதேவன் கேட்கிறார். தமிழ் சினிமா கதை இலாகா, அது ஒரு கலை மேதையானாலும், குழுவானாலும் சாத்தியம் தான். மணி ரத்தினத்தின் படத்திலும் சரி கதாநாயகன் ஓடுவார். தீவிர வாதிகளின்ன் சரமாரியான குண்டுகள் பாயும். இருந்தாலும் அவர் தப்பிவிடுவார். இது எல்லா படங்களிலும் நடப்பது தான். மணிரத்தினத்தின் படத்திலுமா? என்பது தான் பிரசினை. ரொம்ப யோசிப்பவராயிற்றே.  இன்னும் ஒரு ரசமான விஷயத்தையும் மகாதேவன் சொல்கிறார். ”ஒரு கதாநாயகி, மனிஷா கொய்ராலா போராட்டக் காரியாகிவிட்டதால், காதல் விளையாட்டு இல்லாமல் ரசிகர்கள் படம் பார்க்கமாட்டார்களே, அதற்காக மணிரத்தினம் ஒரு இரண்டாம் கதாநாயகியை கதைக்குள் வலுக்கட்டாயமாக கதைக்குள் கொண்டுவந்து கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறார்”.

எதற்கு இந்த அபத்த கற்பனைகள். காட்சிகள்? எதற்கா? அழகாக இருக்குமே. இருவர் படத்தில் கருணாநிதி பாத்திரம் என்று சொல்லாமல் சொல்லப்படும் பிரகாஷ் ராஜ் திருமலை நாயக்கர் மஹல் தானே அது, அதன் மேல் நின்று கொண்டு சுற்றிச் சுற்றி நடந்து பேசுகிறாரா, சொற்பொழிவு ஆற்றுகிறாரா? ஏதோ செய்துவிட்டுப் போகட்டும். அதற்கு ஏன் மதுரைக்கு போய் திருமலை நாயக்கர் மஹல் மேல் தளத்துக்கு ஏறி நிற்க வேண்டும். கருணாநிதி அங்கு எப்போது எதற்குச் சென்றார்?.  மஹல் தூண்களோடு மஹலின் பிரம்மாண்ட விஸ்தாரம் அழகாக இல்லையா? அதற்குத் தான். மேலும் அது கருணாநிதி இல்லை. என் கற்பனைப் பாத்திரம். என்று பதில் வரும். தப்பித்தாயிற்றா? பால் தாக்கரேயிடம் ஒரு தடவை பட்டது போதாதா? திரும்பத் திரும்பவா அதே தப்பைச் செய்வார்கள்?

mani04

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிச் செய்தால் மகாதேவனின் புத்தகத்தையே திரும்ப இங்கு எழுதியதாகிவிடும். இந்த அரசியல் பிரசினைகள் எதுவும் இல்லாத அஞ்சலி படமாவது மணிரத்தினத்தின் வெற்றிப் பட ஃபார்முலா கைவண்ணத்திலிருந்து தப்பிக்கிறதா என்ன? இல்லை என்பது தான் மகாதேவன் கருத்து.

அஞ்சலி மனம் வளர்ச்சி குறைந்த குழந்தை. பார்க்க அழகாக இருக்காது. இதை எப்படி சினிமாவில் காட்ட முடியும்? ஆக, ஒரு அமுல் பேபி குழந்தையைத் தான் மன வளர்ச்சி குறைந்த அஞ்சலியாக ஆக்க வேண்டும் இது முதல் கோணல். குழந்தை பிறக்கும் முன்பே அது மன வளர்ச்சி குறைந்ததாக இருக்கும் இரண்டு நாளில் இறந்து விடும் என்று டாக்டர்கள் சொல்கிறார்களாம். ஆக, அது பிறந்த உடனேயே மன நலக் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வளர்கிறது. அப்பா குடும்பத்திற்குத் தெரியாமல் செய்த காரியமாம். அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியாதாகையால் குழந்தை இறந்தே பிறந்தது என்று சொல்லிச் செய்த காரியமாம். ஆனால் மன நலக் காப்பகத்திலிருந்து குழந்தை வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. குழந்தை இறந்தும் விடுகிறது. கண்ணீர்விட சான்ஸ் நிறைய இப்படி உருவாக்கிக்கொண்டே போகிறார் மணிரத்தினம். இப்படி படம் முழுதும் மகாதேவனின் அலசலுக்கு மணிரத்தினத்தின் படம் இரையாகிறது. பெரிய அலசல் ஒன்றும்  தேவையில்லை. எந்தத் தமிழ்ப் படத்தையும் போல, மணிரத்தினத்தின் படமும் எந்த பொதுப் புத்தியின் பார்வைக்கும் தாங்காது தான்.

ஆனால் மகாதேவனிடம் நான் காணும் ஒரே குறை, அவர் இந்தக் கதையைத் தான் எழுதினால் எப்படி சரி செய்திருப்பேன் என்று விவரிக்கத் தொடங்கிவிட்டால் அதுவும் சில இடங்களில் தான் வித்தியாசமாகத் தோன்றுகிறதே தவிர, பெரும்பாலும், தமிழ் சினிமா பாஷையில் “காலத்தால் அழியா திரை ஓவியமாக, அல்லது காவியமாகத் திகழும், மலரும், ஒளிவீசும்..” சரி ஏதோ ஒன்றாகத் தான் ஆகிவிடுகிறது.

ஆனாலும் மகாதேவன் ஒரு விக்கிரக விநாசன். அந்த காரியத்தை மிக நன்றாகச் செய்கிறார். திரை உலகிலிருந்து இப்படி ஒருவர் வந்துள்ளது சந்தோஷம் தரும் ஒன்று. இங்கு விக்கிரஹங்கள் நிறைய மண்டிக் கிடக்கின்றன.

மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி
ஆசிரியர்: பி.ஆர். மகாதேவன்
நிழல் வெளியீடு
விலை ரூ 100

புத்தகத்தை ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

9 Replies to “வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி””

  1. “ஆனாலும் மகாதேவன் ஒரு விக்கிர விநாசன். அந்த காரியத்தை மிக நன்றாகச் செய்கிறார். திரை உலகிலிருந்து இப்படி ஒருவர் வந்துள்ளது சந்தோஷம் தரும் ஒன்று. இங்கு விக்கிரஹங்கள் நிறைய மண்டிக்கிடக்கின்றன.

    உண்மை. உண்மை.

    நானும் திரு மகாதேவன் எழுதுவதை படித்திருக்கிறேன். ஆசிரியரின் கருத்தே தான் எனதும். திரு மகாதேவன் சில உருவாக்கப்பட்ட ,பீடத்தில் ஏற்றப்பட்ட “விக்ரகங்களை” உடைக்கிறார்.

    ஆசிரியர் சொல்வது போல் தன் வர்ஷன் கதை என்று சேர்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். தென்பாண்டி சமையல் சாப்பிட்டு மனம் மாறும் தீவிரவாதிகள் கதை சிறந்த நகைச்சுவை.சிரித்து மாளவில்லை. காமடி ட்ராக் ஒன்று தனியே தேவையில்லை.

    எல்லைப்புற துன்பங்கள் தீர என்னே அஹிம்சை வழி.:-)

    உடைத்தது சரி. ஒட்ட வைத்தது மேலும் மோசமாக இருக்கிறது சமயங்களில்.

    திரு ஜெயமோகன் சொல்வது போல நம் நாட்டில் சிலர் முதலில் பெரிய ஆள் என்று பீடங்களில் ஏற்றப்படுகிரார்கள். மணிரத்னமும் அப்படி போற்றப்பட்டவர் தான்.

    மணிரத்தினம் போன்ற ” விக்ரகங்கள்” என்ன உளறினாலும் கேட்க ஆளில்லை. தற்போதைய தலைமுறை மணிரத்னம் படங்களை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை என்று எண்ணுகிறேன்.

    “வித்யாசம் ” என்ற ஒரு வார்த்தை தமிழ் உலகில் லோல் படுகிறது. என்ன வித்யாசம் என்று பார்த்தால் உடைகள் அல்லது அவுட்டோர் தளம் அல்லது உயிரே படம் போல மலையாள ரக பாட்டு பாடும் பஞ்சாபி பெண் முகம். . கடல் படத்தில் கூட மௌன ராகம் படத்தை நினைவு படுத்தும் ராஜஸ்தான் பிரிண்ட் உடைகள் ஒரு பாட்டில். ஸ்.. முடியல .

  2. Ellam ஓகே அனா எப்படித்தான் ஸ்டோரி ரெடி பண்றது குறை என்பது எல்லாத்துலேயும் இருக்கும் தமிழ் சினிமா அப்படித்தானே சரி மகாதேவன் சார் ஒரு ஸ்டோரி ரெடி பண்ணட்டும் எப்படி இருக்குநு பார்க்கலாம்

  3. ‘ராவணன்’ போன்ற கேவலமான திரைப்படத்தை எடுத்தபோதே மணிரத்னம் இயக்குனராக இருக்க அருகதையற்றவர் என்பது மக்களுக்குத் தெளிவாகிவிட்டது. அந்த படமும் பெரிதாக ஓடியதாகத் தெரியவில்லை. ஒரு மதத்தின், அதுவும் தான் வசிக்கும் மண்ணின் மதத்தின் முக்கியமான ஒரு நம்பிக்கையை திரித்து கூறுவது எவ்வளவு மதியீனம்!!

    பம்பாய் படத்தில் ‘உயிரே.. உயிரே’ பாட்டில், கதாநாயகி கதாநாயகனை சந்திக்கவரும் ஆர்வத்தில், தனது பர்தா அவிழ்வதைக் கூட பொருட்படுத்தாமல் ஓடிவருவதாக சித்தரிக்கப்பட்டதற்கு, இஸ்லாமியர்கள் இவரது வீட்டில் கல்லை எறிந்தார்கள்.

    இந்துக்கள் மென்மையானவர்கள், ஆனால் தன்மானமில்லாதவர்கள். கற்களை எறிய வேண்டாம், அந்த திரைப்படத்தை புறக்கணித்திருக்கலாம். செய்யவில்லையே!

    வேதனையுடன்,
    பாலாஜி.

  4. திரு பாலாஜி

    உங்கள் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது. ராவணன் தமிழில் கொஞ்சம் அடி வாங்கியது நல்ல விஷயமே. ஆனால் அதுவும் ராமாயணத்தை திரித்த மட்டமான கற்பனை காரணமாக அல்ல. மக்களுக்கு மணி ரத்னம் அலுத்து விட்டதால் இருக்கலாம்.

    இன்னொரு “அறிவு ஜீவியான” ஹசன் தசாவதாரமும் கொடூரக்கற்பனை காரணமாகத் தோல்வியுறவில்லை- மக்களுக்கு சகிக்க முடியாத அளவு ஹசன் அலுத்து விட்டதால் என்று தோன்றுகிறது

    ஹிந்தியில் இந்த ராவணன் கொடூரக் கற்பனையை மக்கள் துளியும் ரசிக்கவில்லை.
    அவர்களுக்கு இருக்கும் உணர்வுகள் நம்மிடம் இல்லை.

    பகுத்தறிவு கட்சிகள் ராமாயணத்தை கண்ட படி பேசிய போதும் எழுதிய போதும் பார்த்து கொண்டிருந்தவர்கள் தானே நாம் .ரொம்ப மரத்து பொய் விட்டது நம்மில் பலருக்கும்.
    .

  5. திரு வெசா அவர்களின் கட்டுரை நன்று. பொதுவாகவே கட்டு உடைப்பவர்கள்(Deconstruction) நன்றாகவே அதனை செய்தாலும் திரும்பக்கட்டுவதில்(Reconstruction) வல்லமைப்பெற்றிருப்பதில்லை. இது ஏன் என்பது அடியேனுக்குப்புரியவில்லை.

  6. திரு.சாய் அவர்களே,
    பதிலுக்கு மிக்க நன்றி.

    //பகுத்தறிவு கட்சிகள் ராமாயணத்தை கண்ட படி பேசிய போதும் எழுதிய போதும் பார்த்து கொண்டிருந்தவர்கள் தானே நாம் .ரொம்ப மரத்து பொய் விட்டது நம்மில் பலருக்கும்.//

    இந்த எண்ணம் தான் திருத்தப் பட வேண்டும். பக்தி மார்கத்தை தோற்றுவித்த புனிதமான ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்த நாடு இது. இதுபோன்ற கேவலமானவர்கள் இன்று ஆள்வது இறைவனிட்ட சாபம் போலும்.

    காலம் மாறும், மீண்டும் தமிழகத்தின் கிருதயுகம் தோன்றும்…

  7. திரு பாலாஜி அவர்களே

    ஆமாம் . இந்த நிலை மாற வேண்டும். கழக வைரஸ் பலரை பாதித்து இருக்கிறது.

    முந்தைய தலைமுறை திருவிளையாடல் படம் பார்த்து ரசித்த அதே நேரம்
    ” ஜம்புலிங்கமே ஜடாதரா ” பாட்டையும் ரசித்தார்கள். எப்படி என்று தான் புரியவில்லை.

    சிவன் வேஷம் போட்டு காமடி செய்வது ரஜினி , ஹசன் எல்லோரும் செய்திருக்கிறார்கள். இதில் பின்னவர் வேண்டுமென்றே நிறைய செய்திருக்கிறார்.

    ” படத்தை பார்த்து சிரிச்சுட்டு போவியா-அதை விட்டு…” என்று நம்மை சுற்றி இருப்பவர்களே நம்முடன் குறை கண்டு பிடிப்பார்கள்.

    தற்போது யாரை மட்டும் தாக்கலாம் என்று கோழை பட உலகினருக்கு புரிந்திருக்கும். இனி அதிகமாக ஹிந்துக்களை இழிவு படுத்துவார்கள்.

    நிறுவன ரீதியாக ஹிந்துக்கள் இவர்களை சட்டத்தை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

  8. திரு.சாய் அவர்களே,
    திரைப்படங்களில் (இந்து) தெய்வங்களைப் பற்றி வரும்போது, அந்த காட்சிகளில் யார் யார் சம்மந்தப்பட்டுளார்கள் என்பதை வைத்து அது இந்துக்களை புன்படுத்துவதர்க்காகவா இல்லையா என்பது தெளிவாகும். நீங்கள் சொன்ன உதாரணத்திற்கே வருவோம். உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிவபெருமான் வேடம்போட்டு செய்யும் நகைச்சுவைக்கும் கமல் செய்யும் ‘நகைச்சுவைக்கும்’ நிறைய வேறுபாடு உண்டு. காட்சிகளைப் பார்க்கும்போது அதே விளங்காமல் இருக்கலாம், ஆனால் சிந்தித்தால் புரியும். அதுமக்களுக்குத் தெரியவேண்டும்!

    தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். ராவணன் திரைப்படத்தில் சீதை ராமனுக்கு ஆதரவு தராமல் “ராவணனே தேவலாம்” என்பதுபோன்ற நோக்கத்தை வெளிப்படுத்தியிருப்பது கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு ஒரு நீச்ச எண்ணம். கற்புக்கரசியாக கருதப்பட்ட ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக சித்தரிப்பது ஈனத்தனம். நேரடியாகக் கேட்கிறேன், அதே நிலையில் இவரது மனைவி இருந்திருந்தால் இப்படிச் சித்தரித்திருப்பாரா??

    இதுபோன்ற கேள்விகளில், பகுத்தறிவுக்கு வேலையில்லை. சட்டம்தான் பாயும்.

    நன்றி,
    பாலாஜி.

  9. ‘Vinasa kale vibaritha puthi’ mani ratnam could not imagine other religious character like this. If he would do something like that, he would have learnt good lesson from those faith folloers. In hindus nobody is ready to teach in those line of agitation. So he continues to do like that.As long as our people remain mute spectators this kind of maniratnams, hasans wont stop their debased act on our religion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *