இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒருவழியாக ஐ.நா.சபை மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றி இருக்கிறது, உலகின் தன்னிச்சையான காவல்காரனான அமெரிக்கா.

மறக்க முடியாத படுகொலைகள்
மறக்க முடியாத ஈழப் படுகொலைகள்

எதிர்பார்த்தது போலவே,  இந்தத் தீர்மானத்தில் எந்த சுக்கும் இல்லை.  இதற்கே இந்த ஆர்ப்பாட்டம். இதை முன்வைத்து இரு வாரத்துக்கு மேலாக தமிழகம் கிளர்ந்து துடித்தது.

குதிரை தப்பிய பின் லாயத்தைப் பூட்டிப் பலனில்லை என்பதை நாம் எப்போது உணரப் போகிறோமோ தெரியவில்லை.  2009  ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது ஏதோ வேற்றுக் கிரகத்தில் நடப்பது போல வேடிக்கை பார்த்திருந்த அதே தமிழகம், இப்போது குதித்துக் கொந்தளிக்கிறது.

சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் யுத்தத்தின்  கடைசி இரண்டு நாட்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்த கொலைவெறிக்கு உதவியது அப்போதைய மன்மோகன்  சிங்-  சோனியா அண்ட் கோ தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு தான். அந்தக் கூட்டணியில்- வெற்று அறிக்கைகளை வெளியிட்டபடி இருந்த கருணாநிதியின்-  திமுகவும் இருந்தது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலைக்கு பதிலடியாக தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது என்ன?  மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 27 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஈழத் தமிழரின் சர்வ நாசத்துக்குக் காரணமான இக்கட்சிகளுக்கு வாக்களித்த அதே தமிழகத்தில் தான் இன்று அனாவசிய கொந்தளிப்பு.

திமுக தலைவர்  ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ செய்த கதையாக ஆளும் கூட்டணியிலிருந்து விலகி இருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. தமிழக மக்கள் மட்டும் என்னவாம்?  இன்று காட்டும் இதே தீவிரத்தை 2009 ல் காட்டி இருந்தால், அன்றைய தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாடம் புகட்டி இருந்திருந்தால், இலங்கை வாழ் தமிழரின் நிலைமை மிகவும் கேவலப்பட்டுப் போயிருக்குமா?

திடீர் ஆவேசத்துக்கு காரணமானபாலசந்திரன் படுகொலை
திடீர் ஆவேசத்துக்கு காரணமான
பாலசந்திரன் படுகொலை

ஒரு முக்கியமான உளவுத் தகவல். இலங்கைப் போரின் கடைசி கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல முன்னணி தலைவர்கள் இலங்கை ராணுவத்திடம் வேறு வழியின்றி சரணடைந்தனர். அவர்களை காவலில் வைத்திருந்த இலங்கை அரசு, இந்திய தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக (காங்கிஸ் வெற்றி) வந்தவுடன், அவர்களை சுட்டுக் கொன்றது என்பது தான் தகவல். ஆக, இலங்கை அரசு இந்திய ஆட்சியில் மாற்றம் தேர்தலால் வந்துவிடுமோ என்று அஞ்சி இருக்கிறது. அவ்வாறு நமது தமிழக மக்கள் அப்போது தீர்ப்பெழுதவில்லையே?  இப்போது மட்டும் என்ன இந்த ஆவேசம்?

பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது கசிந்ததால் தான் இந்த ஆவேசம் என்கிறார்கள். இதே ஆவேச முழக்க அரசியல்வாதிகள் (வைகோ,  நெடுமாறன்,  சீமான் உள்ளிட்ட பலர்) பிரபாகரன் கொல்லப்பட்டதை இன்னமும் கூட ஏற்க மறுத்து கதை கட்டிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை நம்பினால் நாசம் தான்  என்று தெரிந்தே, இம்முறை மாணவர்களின் போராட்டம், இவர்களை சற்றே விலகி நில்லும் பிள்ளாய் என்று கூறி விளக்கி வைத்திருக்கிறது. ஆயினும், இந்த ஆர்ப்பாட்டங்களால் என்ன பயன்? கொத்துக் குண்டுகளுக்கு நமது சொந்த சகோதரர்கள் செத்து விழுந்தபோது வராத கோபம் இப்போது வந்து பயன் என்ன? இது வெறும் கழிவிரக்கமாகவே பல்லிளிக்கிறது.

ஆயினும், ஒரு விஷயம், இந்த மாணவர்களின் போராட்டம் இல்லாதிருந்தால்,  சுயகாரியப் புலியான கருணாநிதி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி இருக்கவே மாட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கடந்த  9 ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்த, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல கோடி ஏப்பம் விட்ட கட்சிக்கு இப்போது ஈழத் தமிழர் மீது திடீர் அக்கறை வந்ததற்குக் காரணம், மாணவர்களின் போராட்டம் தான். மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைமையான காங்கிரஸ் கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்துவதிலும், திமுகவின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும் இப்போராட்டம் உதவி இருக்கிறது. இதை மறுக்க இயலாது.

நமது போராட்டம்இவர்களுக்கு விடியலைத் தருமா?
நமது போராட்டம்
இவர்களுக்கு விடியலைத் தருமா?

ஆனால், மாணவர்களின் போராட்டத்தில் சில இடங்களில் ஊடுருவிய தேச விரோதிகள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விட்டதையும் காண முடிந்தது. எந்த தனித் தமிழ்நாடு கும்பலால் ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் ஆதரவை இழந்தார்களோ,  அதே கும்பல் தான் இப்போது காங்கிரஸ் மீதான கோபத்தை இந்திய ஒருமைப்பாடு மீதான வெறுப்பாக மாற்ற முயன்றது. இதை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி இருக்க வேண்டும். எப்போதும் இவ்விஷயத்தில் தெளிவாக செயல்படும் ஜெயலலிதா  இம்முறை அமைதி காத்தது புரியாத புதிர்.

ஒருவேளை, மாணவரின் போராட்டம் கருணாநிதிக்கும்  காங்கிரசுக்கும் தானே எதிரானது என்று அவர் கண்மூடி அமர்ந்திருக்கலாம். ஆனால், சில புல்லுருவிகள் இடையில் நிகழ்த்தியுள்ள சேதாரம் சாதாரணமானது அல்ல.  அரசு கண்டுகொள்ளாது என்பது அம்பலமானவுடன், தெருவில் இறங்கியவர்களின் வேகம் அதிகரித்தது. வழக்கம் போல, ஊடகங்கள் இதை மேலும் பெரிதுபடுத்திக் குளிர் காய்ந்தன. இதனால், நமது மாணவர்களின் படிப்பு பாழாவது குறித்து யாருக்கும் கவலை இல்லை.

ஈழத் தமிழர் மீது நமக்கும் கவலை உண்டு. ஆனால்,  அமெரிக்கா கொண்டுவந்த  ‘உதவாக்கரை’  தீர்மானத்துக்காக தமிழகத்தில் நமது மாணவர்கள் ரயிலை மறிப்பதாலும்,  கல்லூரிக்கு செல்லாமல் தெருவில் அமர்வதாலும், ஈழத் தமிழருக்கு என்ன பயன் கிடைத்துவிடும்?  போதாக்குறைக்கு, சுற்றுலா வந்த இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுக்களை தாக்கி ‘புண்ணியம்’ கட்டிக் கொண்டிருக்கின்றனர், சில பிரிவினைவாதிகள். இந்த தாக்குதலுக்கு, இலங்கையில் குற்றுயிரும் குலை உயிருமாகத் தவிக்கும் நமது சகோதர தமிழர்கள் தான் பதிலடி பெறப் போகிறார்கள்!

இவர்களின் கஷ்டம்நமக்கு அரசியல் கருவியாகலாமா?
இவர்களின் கஷ்டம்
நமக்கு அரசியல் கருவியாகலாமா?

மாணவர்களின் போராட்டம் எந்த நோக்கமும் இல்லாமல், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருந்தபோதே, அதன் தெளிவின்மை புலப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். அமெரிக்கத்  தீர்மானம் குறித்து அரசு எடுக்கப்போகும் நிலையை இந்த அளவுக்கு மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இலங்கைப் போரில் இந்திய அரசு உதவியதை அந்நாட்டு அரசு வெளிப்படுத்தி விடும்  என்று சோனியா கும்பல் அஞ்சுகிறதா? அப்படியெல்லாம் அஞ்சவே தேவையில்லை.  2009 மே மாதமே,  மகிந்த ராஜபக்ஷே இந்த வெற்றி முழுவதும் தன்னால் தான் வந்தது என்று பறை சாற்றிவிட்டார். தனது ராணுவ  தளபதி பொன்சேகோவைக் கூட இந்த வெற்றியில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டதற்கு பொன்சேகோவுக்கு கிடைத்த சிறைப் பரிசு அனைவரும் அறிந்தது தான்.

பிறகு ஏன் இந்திய அரசு தடுமாறியது? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறதா?  அப்படியானால், இந்த அரசு இதுவரை செய்த தவறுகளுக்காக, குறுகுறுத்தே காணாமல் போயிருக்க வேண்டும். இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டுப் போர் இந்திய அரசால் வழிநடத்தப்பட்டது என்ற தார்மிக உண்மை தான் இந்திய அரசை செயல்படாமல் தடுக்கிறது. உண்மையில் இலங்கையில் போருக்குப் பிந்தைய தமிழ் மக்களின் வீழ்ச்சி மிகவும் கொடுமையானது. இதற்காக, இந்திய அரசு தான்- இலங்கை அரசுக்கு போரில் உதவியதற்காகவே –  உரிமையுடன்  ஐ.நா. சபையில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போதும் (2013), இதற்கு முன்னரும் (2011) அமெரிக்கா தான் இலங்கையை எச்சரிக்கும் விதமாக் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த இரண்டு முறையும், இந்திய அரசு அடித்த பல்டிகள், தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய செய்த முயற்சிகள், உலக நாடுகள் நடத்திய நாடகங்கள் அனைத்தையும் நாம்  இருக்கை நுனியில் அமர்ந்து நகம் கொறித்தபடி வெறித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தீர்மானங்களே வெறும் நாடகம் என்பதை அமெரிக்காவை புரிந்த அனைவரும் உணர்வார்கள்.  ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் போர் தொடுத்த அமெரிக்கா, ஐ.நா.சபையில் மனித உரிமைக்காக தீர்மானம் கொண்டுவருகிறது  என்றபோதே, நமக்கு ஒரு விஷயம் புரிந்திருக்க வேண்டும். இது ஒரு சர்வதேச நாடகம்; பிற நாடுகள் மீதான அதிகாரத்தை முறைப்படுத்தும் ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். இதில் அமெரிக்காவின் கூட்டாளி இந்தியா என்பதையும், இதற்கு முந்தைய தீர்மானத்தின் போதே நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

நமது துரதிர்ஷ்டமோ, இலங்கைவாழ் சகோதர தமிழ் மக்களின் துரதிர்ஷ்டமோ- தொலைநோக்கு சிந்தனையோ, அறிவார்ந்த கண்ணோட்டமோ இல்லாதவர்களின் கரங்களில் தமிழகம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. சுயநலமே நோக்கமாகக் கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இதில் ஒவ்வொரு விதமான கணக்குகள். இப்போது மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியதிலும் கூட தெளிவான கணக்கு உண்டு.

இந்தக் கணக்கு காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். காங்கிரஸ் என்ன பாஜகவா? பதவியில் இருக்கும் வரை சுகம் அனுபவித்துவிட்டு வெளியேறி எதிரணியுடன் சேர்வதை வேடிக்கை பார்க்க? காங்கிரஸ் கட்சியின் ஏவல் நாயான சி.பி.ஐ.  நடத்திவிட்டது ஒரு அதிரடி ரெய்டு. வெளிநாட்டு ஆடம்பர கார்களை வாங்கியதில் ஸ்டாலின் குடும்பம் செய்த பித்தலாட்டம் இப்போது தான் சி.பி.ஐ.க்கு நான்கு ஆண்டுகள் கழித்து நினைவுக்கு வந்ததாம். நடந்தது ரெய்டு. இது தனக்கு தெரியவே தெரியாது என்று சாதிக்கிறார்கள் மன்னுமோகனும் ப.சி.யும், அவர்களின் கும்பல் தலைவி சோனியாவும். கருணாநிதி வேண்டுமானால் இதை நம்பலாம். இன்னமுமா இந்த நாடு இவர்களை நம்புவது?

கண்முன் அனாதைகளாக்கப்பட்ட நமது சகோதரர்கள்
கண்முன் அனாதைகளாக்கப்பட்ட
நமது சகோதரர்கள்

ஆக, இலங்கைத் தமிழரின் இழிவான நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை விட, தன்னை கைவிடுவோரை கழுத்தறுப்பதே காங்கிரஸ் கட்சியின் உயர்கொள்கை என்பது இப்போது பள்ளி மாணவனுக்கும் தெரியும். இந்த காங்கிரஸ் கட்சிக்குத் தான் முலாயமும், மாயாவதியும் மாய்ந்து மாய்ந்து ஆதரவளிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன கஷ்டமோ, யாரறிவார்?

இந்திய அரசியல் இப்படித் தான் கீழ்த்தரமாக கிடந்தது நாறும். நாம் விஷயத்துக்கு வருவோம். இப்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் ஏதேனும் உப்புச் சப்பு இருக்கிறதா? இதை கவுன்சிலில் உள்ள 47 நாடுகளில் 25 நாடுகள் மட்டுமே ஆதரித்தாலும், பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் வென்றிருக்கிறது. 13 நாடுகள் எதிர்த்துள்ளன. அதில் பாகிஸ்தான், மாலத்தீவுகள், இந்தோனேசியா, அரபு எமிரேட்ஸ் ஆகியன உண்டு. மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகள் நடுநிலைமை வகித்தன.

ஆரம்பத்திலிருந்து தூங்கி வழிந்துவிட்டு, கடைசி நேரத்தில் பெயரளவுக்கு இந்தியா பரிந்துரைத்த  7 திருத்தங்கள் மறுதலிக்கப்பட்டன. ‘வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டும்; போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் அப்பாவி மக்கள் உயிரிழந்தது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்’-  என்பவை அவற்றில் சில. இந்த சுதந்திரமான விசாரணை உலக நாடுகளால் நடத்தப்பட வேண்டுமா? என்பதில் வழக்கம் போல இந்தியா சொதப்பியது. இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படாது என்று தெரிந்தே கடைசி நேரத்தில் கொண்டுவரப்பட்டன. உண்மையான ஆர்வத்துடன் அவை கொண்டு வரப்பட்டிருந்தால் நிச்சயம் அவற்றை ஏற்கச் செய்திருக்க முடியும். எல்லாம் நாடகம்.

“இலங்கைத் தமிழருக்கு சம உரிமை அங்கீகாரம் அளிப்பதகான 13வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை  இலங்கை சென்று பார்வையிட வேண்டும். போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நட்பு நாடாக உள்ள இலங்கையுடன் தொடர்பை முறிக்க முடியாது. அங்குள்ள பிரச்னைகளில்  தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என்றெல்லாம் அமெரிக்க தீர்மானம் கூறுகிறது.

இதில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து எங்காவது ஒரு வார்த்தை இருக்கிறதா? அல்லது, இலங்கை  அரசின் போர்க் குற்றங்கள் குறித்த கண்டனங்கள் எதாவது இருக்கின்றனவா? இந்த அதிமேதாவித் தனமான தீர்மானத்தை ஆதரிக்கத் தான் இரண்டு வாரம் யோசித்தது நமது மத்திய அரசு. இந்தத் தீர்மானத்தால் புளகாங்கிதம் அடைத்து தான் நமது மாணவர்கள் தங்கள் படிப்பைத் துச்சமெனத் துறந்து தெருவில் இறங்கினார்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

இவர்களையாவது வாழவிடுங்கள்தமிழக அரசியல்வாதிகளே!
இவர்களையாவது வாழவிடுங்கள்
தமிழக அரசியல்வாதிகளே!

இத்தனைக்கும் பிறகு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. ‘இந்தியா, தீர்மானத்தை அரசியல் நிர்பந்தத்தால் ஆதரித்துள்ளது. அதற்காக அஞ்ச வேண்டியதில்லை’ என்று இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார். அவருக்கும் கூடத் தெரிந்திருக்கிறது. நமக்கு?

தீர்மானம் நிறைவேறிய பிறகு தான் அதன் மோசடி மாணவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இப்போது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள் மாணவர்கள்.   இங்கு போராடி என்ன பயன்? வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கௌவச் செய்வது தானே ஒரே தீர்வு? காங்கிரஸ் தோற்றால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமே, அதை மாணவர்களை உசுப்பிவிடும் உதயகுமார் வகையறாக்கள் விரும்புவார்களா என்ன?

இந்த நிலைமை இன்னமும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? சொந்த சகோதரர்கள் துயரத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத கல்லுளி மங்கர்களின் கடைசிக்கட்ட நாடகங்களை இன்னமும் எத்தனை நாட்களுக்கு நாம் பொறுமையுடன் சகித்திருக்கப் போகிறோம்?

வாய்ச்சொல் வீர்களும், சுயநல அரசியல் வீணர்களும் இலங்கைத் தமிழரின் வாழ்வை பணயம் வைத்து சூதாட்டம் ஆடி வருவதை நாம் எப்போது தடுக்கப் போகிறோம்? என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

இந்தியாவின் இறையாண்மையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கத்துடனும், இந்திய வம்சாவழியினரின் நலனுக்காகப் பாடுபடும் திண்மையுடனும் மத்தியில் எப்போது நல்லரசு உருவாகும்? அப்போது தான் நமது சகோதரர்களின் சோகம் தீரும். அதுவரை, மாறி மாறி பழி கூறி, நமது தலையில் நாமே மண்ணைப் போடும் கொடுமைகள் தொடரும்.

15 Replies to “இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?”

 1. காங்கிரசை உதயகுமார் அல்ல அவர் எள்ளுத்தாத்தா வந்தால் கூட , ஆட்சியில் நிலைக்க வைக்க முடியாது. ஏனெனில் பாகிஸ்தானும், தாலிபானீய நாசகாரர்களும் , உலகில் அமைதி நிலைக்க கூடாது என்று என்னும் இதர தீவிரவாத இயக்கங்களும், இந்தியாவில் காங்கிரஸ் போன்ற தேசவிரோத இயக்கம் ஆட்சியில் தொடர்வதையே விரும்புகின்றன.

  ஆனால், அதிர்ச்சி தரும் உண்மை என்னவெனில், நம் தேசத்து மக்களில் 90 சதவீத மக்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். எஞ்சிய பத்து சதவீத மக்களே, இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த ஆர்வலர்கள். எப்படி என்பதை விளக்குகிறேன்.

  1. எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோக்காரர் ஐந்து கட்சிகளின் உறுப்பினர் அட்டையை வைத்துள்ளார். அவர் ஒரு முறை ATM கார்டை சட்டைப்பையில் இருந்து எடுக்கும்போது தவறுதலாக கீழே விழுந்து விட்டன. என்னய்யா இவ்வளவு, என்றேன் ? வேறே என்னங்க பண்ணுறது, அந்த அந்த கட்சி கூட்டத்துக்கு போகும்போது அதை எடுத்துக்கொண்டு போனால் , தினப்படியில் ஐம்பது ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என்றார். அது சரி, நீங்க உண்மையிலேயே எந்த கட்சி? என்றேன். நமக்கு எதுக்குங்க கட்சியெல்லாம். நானெல்லாம் சோத்துக்கட்சி தானுங்க. ஒவ்வொருமுறையும் தேர்தலில் பெரிய கொள்ளைக்காரன் வேண்டாம், சிறிய கொள்ளைக்காரன் யார் என்று பார்த்து ஒட்டு போடுறேன் அவ்வளவு தான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், போலிஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் ஆளுங்கட்சியின் உறுப்பினர் அட்டையை காட்டி சில காரியங்களை, குறைந்த செலவில் சாதித்துக்கொல்கிறேன்- அவ்வளவுதான் என்றார்.

  2. விலைவாசி இந்தியா முழுவதும் மிக அதிகமாக உள்ளது. சாதாரணமான கீழ்த்தட்டு மக்கள் நிம்மதியாக வாழமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியால் கொடுக்கப்படும் இலவச வாக்குறுதிகளையும், இலவசமாக கிடைக்கும் கறிவிருந்து, பணம் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டு , எதிர்க்கட்சிக்கு ஒட்டு போட்டு, அதிர்ச்சி வைத்தியம் செய்துவிடுகிறார்கள் மக்கள். 2011- லே திமுக செய்யாத கறிவிருந்தா? தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இரவில் கரண்டை கட் பண்ணிவிட்டு, குடிசை தோறும் பணம் வீசப்பட்டது எல்லோருக்கும் தெரியும். வரும் 2014 தேர்தல் , இந்திய அரசியல் கட்சிகளுக்கு, முக்கியமாக குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ், திமுக, ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமையும்.

  3. அதிக அளவில் ஊழல் நடைபெறுவதால், எல்லோருக்கும் கிடைக்கவேண்டிய சில, பல வசதிகளை ஒரு சிலரோ, அல்லது அந்த ஒரு சிலரின் மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி பெயர்களில் , பணம் முழுவதும் வெளிநாடு போய்விடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. எனவே, ஆதர்ஷ், டூஜீ, நிலக்கரி, சுரங்கம், கிரானைட்டு என்று எல்லா ஊழலும் சேர்ந்து , இம்முறை காங்கிரசை அழித்துவிடும்.

  4. அந்த காங்கிரசை காப்பாற்ற , பகுத்தறிவு கடவுள்களாலோ , செக்குலரிச பொய்யர்களாலோ ,நிச்சயம் முடியாது.

  5. எங்கேயோ ஒரு மேலுலகத்திலிருந்து ஒரு தேவதூதன் இறங்கிவந்து நம்மை காப்பான் என்று, ஆபிரகாமிய மதத்தை சேர்ந்தவர்கள் கூட நம்பவில்லை. கடவுள் வந்து நம்மை காப்பாற்ற மாட்டார் என்று எண்ணுவதால் தான், அவர்களே கையில் துப்பாக்கி, வெடிமருந்து என்று அலைகிறார்கள். அதைப்போலவே, இருக்கிற நபர்களுக்குள் , இவர் கொஞ்சம் பரவாயில்லை என்ற அடிப்படையில் , choosing the lesser of the evils – இருப்பதில் குறைந்த தீமையே தேர்வு செய்யப்படுகிறது. காங்கிரஸ் இன்று இருக்கும் கட்சிகளுக்குள் மிக அதிக தீய சக்தியாக விளங்குவதால், இந்தியா முழுவதும் ஒதுக்கி வீசப்படும்.

 2. தற்போதைய போராட்டதில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவே. இது திட்டமிட்டு ஒரு சிலரால் தூண்டிவிடப்பட்டது என்பது அனைத்து தரப்பினருக்கும் புரிகிறது.

  கட்டுரையாளர் கூறுவது போல உயிரை வருத்தி நடக்கும் போராட்டங்களை விட, ஒரு நல்ல அரசாங்கம் மத்தியில் அமைந்தால் அதன் மூலம்தான், இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

  நம்புவோம் நல்லதே நடக்குமென்று…

 3. Tamils lost their political power at Central level to take care of the welfare of the Tamils in the last 45 years (to be precise from 1967 when CNA came to power) mainly because of the following reasons;
  1)Anti Hindu,Anti Indian,Anti North Indian and Brahmin hatred and propaganda unleashed by the DK and DMK through public speeches,cinemas,dramas,written articles,government policies,recruitments and very happily supported by the people of Tamilnadu.In addition to this Anti Malayalee,Anti Kannadiga and Anti Telugu language and regional hatred was fanned by DK and DMK leaders mainly Shri.Veeramani and Shri.Karunanidhi.All these have alienated the Tamils from the main cultural and religious stream of India and thus from the political stream also as a result.Whatever political power was gained by these forces at Central level that was used only to spread corruption to unimaginable leves and amass wealth and to further their caste and religious conversion(anti hindu) interest.The Tamils have lost all their moral and spiritual and political power to help themselves or to help others.This loss has been aggravated by craze for cinema and drunkenness.
  Only solution is return to pre- 1967 situation in Tamilnadu with Hindu culture and Kamaraj rule which I think the Tamils neither deserve nor are they destined to get.

 4. \\\\இங்கு போராடி என்ன பயன்? வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கௌவச் செய்வது தானே ஒரே தீர்வு? காங்கிரஸ் தோற்றால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமே, அதை மாணவர்களை உசுப்பிவிடும் உதயகுமார் வகையறாக்கள் விரும்புவார்களா என்ன?\\\

  உண்மை ஆனால் 2014 வரை இன்னும் என்னென்ன நாடகங்கள் பாக்கி உள்ளதோ?
  ஆனால் காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கு வந்தால் அந்த பெருமைக்கு எதிர் கட்சிகளே காரணமாக இருக்கும். அவர்கள் பூசல்கள் முடிந்த பின்னர் யாரை பிரதமர் வேட்பாளராக் அறிவிப்பர்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

  எனக்கு தெரிந்து படித்தவர் பலர் ஒரு வித மனச்சோர்வில் இருக்கிறார்கள்- ஓட்டு போடுவதே வேஸ்ட் என்பது போல -இருக்கும் ஒரு உரிமையையும் பயன்படுத்தா விட்டால் என்ன ஆகும்?

  ஆனால் சுற்றுலா பயணிகளை- சர்ச் வருபவர்கள் , பிக்குகள் என்று எல்லாரையும் அடிக்கும் வெறித்தனம் உண்மையில் சொந்த சகோதரன் அங்கு பதிலுக்கு அடி வாங்கட்டும் , நமக்கு அரசியல் முக்கியம் என்ற திமிரில் செய்யப்படும் வேலை தான். இதை ஆரம்பத்திலேயே அடக்காமல் மாநில அரசாங்கம் என்ன சாதிக்க நினைக்கிறதோ தெரியவில்லை.

  சாய்

 5. https://puthu.thinnai.com/?p=19394

  இந்த கட்டுரை அர்த்த ராத்திரியில் [ அவர்களுக்கு பகல் தான் ] அமெரிக்காவிலிருந்து தொலைபேசி மூலம் வரும் அழைப்புக்களுக்கும், மாணவர் போராட்டங்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி சொல்கிறது.

 6. ஐயா அத்விகா,
  கட்சி சாராதவர்கள் இந்துக்கள்.
  முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எப்பவும் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதை தீர்மானிப்பது முறையே ஜமாத்தும், சர்ச்சுகளும்தான்.
  இந்துக்கள் ஜாதி, மொழி, இனம் ரீதியாக பிரிந்துகிடப்பதாலேயே இந்த இழி நிலை. ,

 7. சேக்கிழான் அவர்களே……

  தன்னுடைய சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து காக்க வக்கில்லாத நம் தலைவர்கள் , அந்நிய நாட்டு மக்களை எங்கிருந்து காப்பாற்றப்போகிறார்கள்?

  திரு .ஜெயமோகன் அவர்களின் ” உலகின் மிகப்பெரிய வாழைப்பழம் ” கட்டுரை படித்தீர்களா?

 8. எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் உலகின்” மிகப்பெரிய வாழைப்பழம்” கட்டுரை இதோ……

  https://www.jeyamohan.in/?p=34957

 9. வாய்ச் சொல் வீரர்கள் என்று மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை குறிப்பிட்டால் ஒன்றும் தவறில்லை. விவேகமற்ற முதிர்ச்சியற்ற விடலைகளை கூட்டிவைத்துக்கொண்டு புதிய தலைமுறை போன்ற தொலைக்கட்சிகள் நாடகமாடுகின்றன. இங்கு கூச்சல் போட்டாலோ தீக் குளித்தாலோ ராஜபக்சேவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பகுத்தறிவுக்கும்பலுக்கும், மாணவ கண்மணிகளுக்கும் தெரியாதா? அரசியல் வியாபாரம் என்ற வகையில் அந்நாளில் ஹிந்தி எதிர்ப்பு, இப்போது இலங்கை தமிழர் பிரச்சனை. விடுதலைபுலிகளின் மனித உரிமை மீறல்களில் எத்தனை அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். தமிழ் இனமானக்காவலர்கள் அதைப்பற்றி வருத்தம் தெரிவித்துள்ளனரா? போர் நடக்கும்போது இந்த மாணவர்களும் மற்ற தமிழ் வியாபாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தனர் ? மாணவர்கள் முதலில் தங்கள் எதிர்காலத்தை எண்ணிபார்க்கவேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம். தீக்குளிக்கும் இளைஞர்கள் தங்கள் தலைவர்களாக எண்ணிகொண்டிருக்கும் கட்சித் தலைவர்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ ஏன் தீக்குளிப்பதில்லை என்று ஒரு நிமிடம் எண்ணி பார்க்கவேண்டும். இலங்கையிலிருந்து வரும் பிக்குகளையும் சுற்றுலா பயணிகளையும் தாக்கும் அறிவற்ற போக்கு எதிர் விளைவுகளை உண்டாக்காதா என்று உதிரி தமிழர் இயக்கங்கள் எண்ணி பார்ப்பது நன்று. நாடகமாடும் திமுக திக மதிமுக போல் மானவர்குழுக்களினாலும் எந்த நன்மையையும் இல்லை

 10. தங்களது கருத்து சரியல்ல. ஆபிரகாமிய மதத்தவரில் பலர் தங்கள் சர்ச்சின் மற்றும் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் அடிமையாக இருந்தாலும், எல்லோரும் அப்படி அல்ல. அதிகமான விலைவாசியால் சாதாரணமான மக்கள் திணறும்போது, மதங்கள் செத்த நாயை செருப்பால் அடித்தது போல செயலிழந்துவிடும். அதிக சிரமங்கள் வரும்போது, தங்களை எந்த கடவுளும் காப்பாற்ற போவதில்லை என்ற உண்மை உரைக்கும். அப்போது ஆபிரகாமிய மதங்கள் காலாவதியாகிவிடும்.

 11. மேலும் (vigilonline.com) இலங்கையில் சைனாவின் ஊடுறுவல் மற்றும் இந்தியாவின் கையாலாகாத தனம் பற்றி சாடி ஒரு கட்டுரைஉள்ளது. இதை தவிற உதயகுமாரின் அரைகூவல் என்ன என்பதைப்பற்றியும் அதன் பின் விளைவுகள் பற்றியும் ஒரு கட்டுரை வந்துள்ளது அவசியம் எல்லோரும் இவற்றைப் படிக்க வேண்டும்.

 12. இதில் இந்தியா, மத்திய அரசு என்ற பதங்கள் காங்கிரஸ் அரசு என்று மாற்றபட வேண்டும்.

  இல்லையெனில் இப்பதிவின் நோக்கமே தலைகீழாகிறது.
  //மாணவர்களின் போராட்டத்தில் சில இடங்களில் ஊடுருவிய தேச விரோதிகள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விட்டதையும் காண முடிந்தது.//

 13. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை.
  ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.

  1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.

  தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
  இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை)

  இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.

 14. இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழத்தை உருவாக்கித்தர இந்திய மத்திய அரசு (!?) நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை சர்வ வல்லமையும் பொருந்திய மத்திய அரசில் இருப்பவர்களும் வட இந்திய ஊடகங்களும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் விமர்சித்தார்கள். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று காரணம் கூறப்படுகிறது. இலங்கையின் பிரச்சினைக்குரிய வடகிழக்கு பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது புத்திசாலித்தனமானதாக இருந்திருக்கும். வரலாற்றுரீதியாக பார்க்கும் போது அத்தீவின் வடகிழக்கு பகுதி சிங்களப்பகுதியோடு ஒத்திருந்ததை விட பல வகைகளிலும் தென்னிந்தியாவோடு தான் (குறிப்பாக தமிழகத்தோடு) அதிகம் ஒத்திருந்தது. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே. காலனிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகள் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அடங்கியிருந்தன. அவ்வாறே நிர்வாகமும் செய்யப்பட்டன. பிற்பாடு தான் கடல் கடந்து நிர்வாகம் செய்வது சிரமம் என கருதப்பட்டு அத்தீவின் தமிழ்ப்பகுதிகள் சிங்களப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு கொழும்பு நிர்வாகத்தின் கீழ் வந்தன. இலங்கை தனிநாடாக இருந்தாலும் அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டை விட சிறியது தான். மக்கள் தொகையோ வெறும் இரண்டு கோடி. ஆகையால் இலங்கையின் வடகிழக்குப்பகுதியை தமிழகத்தோடு இணைப்பது சாத்தியமான ஒன்றே. இப்படி ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் பிரச்சினை இல்லாமல் ஏற்றுக்கொள்ளும். இந்திய தேசவிரோத செயல் என்று யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இத்தகைய இணைப்பு ஏற்பட்டால் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஈழத்தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் நன்மை தான் விளையும்.”ஈழ நிலம் தமிழ்நாட்டுடன் இணைவதன் மூலம் ஈழத்தமிழர்களும் இந்திய அடிமைகளாக மாறவேண்டுமா? தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தியாவில் அடிமைகளாக இருப்பது போதாதா?” என ஈழத்தமிழர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் வேறு வழி இல்லை. தனித்தமிழீழம் என்பது சாத்தியமாக முடியாத ஒரு கனவு. 1871ல் மொத்த இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த தமிழர்கள் இப்போது வெறும் பதினைந்து சதமாக குறைந்துபோய் உள்ளார்கள். சிங்கள அரசின் தொடர்ச்சியான சிங்களக்குடியேற்றம், ராணுவமயமாக்கம், புத்தமயமாக்கம் ஆகியவற்றால் ஈழம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடுதல் ஆகியவற்றால் ஈழமக்கள் நாசமடைந்து வருகிறார்கள். இதே பாணியில் சம்பவங்கள் தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருட காலத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் முற்றிலும் அழிந்து போவார்கள். இப்படி அழிந்து போவதை விட தமிழ்நாட்டோடு இணைந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மேலானது. மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஈழ மக்களுக்கு பரந்து விரிந்த இந்தியா பாதுகாப்பானது. தமிழக மீனவர்களும் நாள்தோறும் உயிருக்கு பிரச்சினையை சந்திக்க வேண்டியதில்லை. கச்சத்தீவு தகராறும் இருக்காது. இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தால் எளிதாக சமாளிக்கும் சாத்தியமும் உண்டு. சேது சமுத்திரம் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லை. இந்திய ராணுவத்தளமாக இருக்கும் திருக்கோணமலையில் கப்பல்கள் வசீகரமாக நங்கூரமிடலாம். இந்துமாக்கடல் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் இந்திய அரசு தனது பிடியை இறுக்கி வைத்துக்கொள்ள முடியும். பாக்கிஸ்தான், வங்காள தேசம், சீனா ஆகிய பகை நாடுகளால் சூழப்பட்ட இந்தியாவுக்கு கடல் பிராந்தியத்தின் மீதான ஆளுகை மூலம் வலிமை உண்டாகும். இலங்கையின் கிழக்கில் அம்பாறை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் தமிழ் மற்றும் அரபி இரத்தக்கலப்பு கொண்டவர்கள். இவர்கள் பலரின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து போய் குடியேறியவர்கள் தான். இந்தியாவோடு இணைவதன் மூலம் உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய நாட்டோடு இணைந்த உணர்வு இம்மக்களுக்கு உண்டாகும். சிங்களருக்கு பயப்படவேண்டிய தேவையே இல்லை. இதையெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யோசிக்க வேண்டும். ”ஈழத்தமிழர்களுக்கு என தனிப்பட்ட அடையாளம் உண்டு. தமிழ்நாட்டோடு இணைவதன் மூலம் அந்த அடையாளத்துக்கு பாதிப்பு உண்டாகும்” என ஈழ மக்கள் நினைத்தால் மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் சுயாட்சி கவுன்சில் மாதிரியான ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் இந்திய சுதந்திர தினத்தின் போது தங்கள் வீடுகளின் மீது இந்திய தேசியக்கொடியை ஏற்றியவர்கள் தானே ஈழ மக்கள். பின் எதற்கு தயங்க வேண்டும்?

 15. மாணவர்கள் போராட்டம் என்பது புயல் போல திடீரென அதிகரித்து பெரியபெரிய விளைவுகளை செய்து விட்டு அடங்கி விடும் ! அந்த சக்தி பொங்கும்போது ஆக்கத்தை நோக்கி திருப்ப வேண்டும் !

  உலக நாடுகளோ முக்கியமாக இந்திய அரசோ ஒருபோதும் ஆதரிக்காத தனி ஈழ கோரிக்கைக்காக போராடினால் அது நடக்காது அதை விட இந்திய அரசுக்கு நன்மை கொடுக்கக்கூடிய

  “இலங்கையை கைப்பற்று ; அதை இந்தியாவோடு சேர்த்துக்கொள்“

  என்ற போரட்டம் நடத்தினால் அது நடக்கும் ! இந்தியாவின் குடைக்கு கீழே சிங்களவர்களும் தமிழர்களும் தனித்தனி மாநிலமாக நிம்மதியாக இருக்கமுடியும் ! பல நூற்றாண்டுகளாகவே தமிழர்கள் சிங்களவர்களையோ அல்லது சிங்களவர்கள் தமிழர்களையோ அடக்கி ஒடுக்கிதான் வந்திருக்கிறார்கள் ! ஒரு சிறு நாட்டுக்குள் இரண்டு அரசுகள் இருப்பதுவோ அதுவும் உரண்டாமல் இருப்பதுவோ சாத்தியமானதல்ல !

  இலங்கைக்கு எதற்கு தனி அரசு ?

  பிரிட்டீஷ் வைசிராயின் கீழ் இந்தியாவும் இலங்கையும் இரண்டும்தான் காலனியாக இருந்தன ! ஒரே நிர்வாகத்தில் இருந்த இலங்கையை வெள்ளைகாரர்கள் வேண்டுமென்றே பிரித்து சுதந்திரம் கொடுத்தார்கள் !!

  அதை கைப்பற்றிக்கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது !

  அகண்ட தமிழகம் கேட்டு தமிழர்கள் போராடி விடுவார்கள் உரண்டுவார்கள் என்ற பயம் வட இந்திய அரசியல்வாதிகளூக்கு வராமலும் இருக்கும் !

  ஆகவே அகண்ட பாரதம் கேட்டு முழு இந்தியாவையும் தூண்டி விடுவதுதான் சரி !!

  இல்லாவிட்டால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் மூக்கை நுழைத்து இலங்கையை படாத பாடு படுத்தப்போகிறார்கள் !

  பாக்கிஸ்த்தான் பங்களாதேஷ் என்பவை ஒரு மதம் என மூலச்சலவை செய்யப்பட்டவர்களின் தேசம் அவற்றை இனைக்கவே முடியாது ! இப்போது சன்னி சியா என குண்டுபோட்டு கலகத்தை ஆரம்பித்து விட்டார்கள் ! அவர்களை விட்டு விடுவதுதான் நிம்மதி !! காஸ்மீருக்காக கோடிக்கணக்கில் பணம் செலவளித்து பிராண்டிக்கொண்டிருப்பதை விட இலங்கையை கைப்பற்றுவது எளிமையானது !!

  சிங்களவர்களின் தகப்பன் பெங்காளி — விஜயன் ! தாய் தமிழச்சி ! மதமோ இந்து மதத்தின் ஒரு பிரிவான பவ்த்தம் ! பவ்தத்தின் முக்கியமான புனித தலங்கள் இந்தியாவில்தான் உள்ளன ! சிங்களவர்கள் இந்தியாவோடு எளிதில் ஒத்துப்போவார்கள் !

  தனி ஈழத்தை ஆதரிக்கக்கூடாது என ராஜிவ் முதல் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்தவர்கள் வட இந்தியர்களல்ல ! இந்தியாவின் மூன்று பாதுகாப்பு ஆலோசகர்களும் மலையாளிகளே !

  நேற்றுத்தான் தமிழை விட்டு பிரிந்த மலையாளிகள் கூட தனி ஈழம் வந்தால் தமிழ் பிரிவிணைவாதிகள் மறைமுக பலமடைந்து இந்திய அரசுடன் உரண்டிக்கொண்டுதான் இருப்பார்கள் என்ற தொலைநோக்கு பார்வையுடன் ஈழத்தை ஆதரிக்காத முடிவில்தான் உள்ளனர் ! அது ஓரளவு உண்மையும் கூட !

  இந்திய அரசைப்பொருத்து ஈழத்தை ஆதரிப்பது சொந்த செலவில் செய்விணை வைத்துக்கொள்ளுவது போலத்தான் !!

  அதனால் இலங்கை இறையாண்மைக்குள் ஒற்றுமை சமத்துவம் என பேசிக்கொண்டுதானிருப்பார்கள் ! சிங்களவர்களும் தமிழர்களை கொடுமைப்படுத்திக்கொண்டுதானிருப்பார்கள் !

  தொலைநோக்கு பார்வை என்பது அகண்ட பாரதம் கேட்டு இந்திய அரசை தூண்டி விடுவது மட்டுமே !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *