வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை

[இந்தக் கள அறிக்கையை இதனைத் தயாரித்த குழுவினர் எமக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது அனுமதியுடன் அறிக்கை இந்த இணையதளத்தில் வெளியிடப் படுகிறது – ஆசிரியர் குழு]

வ.களத்தூர் கிராமம் வேப்பந்தட்டை வட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஜனவரி 2013 முதல் பிப்ரவரி வரை தீவிர மத மோதல்கள் இந்து – இஸ்லாமிய வகுப்பாரிடம் நடந்துள்ளன. இம்மோதல்கள் குறித்து பல்வேறு விதமான அறிக்கைகள் வகுப்புவாத இணைய தளங்களால் இணையம் மூலம் சமுதாயத்தில் பரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுவாக ஒரு பக்க வகுப்புவாத ஆதரவும் மற்றொரு சாரருக்கு எதிரான தீர்மானமான முன்முடிவு கொண்டவர்களும் கொண்ட ஒரு ‘உண்மை அறியும் குழு’ எனும் தனியார் குழு ஒன்று ஒரு அறிக்கையை அளித்து அதுவும் வகுப்புவாத இணையதளங்களால் பரவலாக்கப்பட்டன.

இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் நிலவும் சூழலையும் அறிய பின்வருவோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

1. திரு. லட்சுமண நாராயணன், வழக்கறிஞர் & தொழிற்சங்க தலைவர், பிரிக்கால், கோவை
2. திரு.பிரசன்னம் , மூத்த வழக்கறிஞர், சமூக நல்லிணக்க முகமை, பெரம்பலூர்.
3. திரு. அரவிந்தன் நீலகண்டன் , ஆய்வாளர் , சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், எழுத்தாளர், நாகர்கோவில்.
4. திரு. தங்கராஜ் , தமிழக சமூக பண்பாட்டு ஆய்வு மையம், காரைக்குடி
5. திரு. சிவக்குமார் , சமூக நீதீக்கான தன்னார்வலர் , திருப்பூர்
6. திரு. ஹரி பிரசாத் , RTI Activist, திருப்பூர்
7. திரு. ராஜமாணிக்கம் , பொறியாளர்,உலகத்திருக்குறள் பேரவை , திருப்பூர்

இக்குழுவினர் 20-3-2013 அன்று வ.களத்தூர் கிராமத்திற்குச் சென்று அனைத்து சமுதாய மக்களையும், மாவட்ட ஆட்சியாளரையும் சந்தித்தனர். இதர அதிகாரிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

சம்பவங்களின் பின்னணி

வ.களத்தூரில் சுமார் 10750 மக்கள் வசிக்கின்றனர். இதில் இந்து இஸ்லாமிய மதங்களைச் சார்ந்தவர்கள் ஏறக்குறைய சமமான மக்கள் தொகையில் உள்ளனர். தற்போது இஸ்லாமிய சமூகத்தவர்கள் 5600 ம் இந்துக்கள் 5150 நபர்களும் உள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருந்தது ஊர்த் தொடக்கத்தில் உள்ள 0.31 ஹெக்டேர் பரப்புள்ள நிலமாகும். இது ஒரு நத்தம் புறம்போக்கு இடம் என கருதப்படுகிறது. இதன் சர்வே எண் சர்வே எண் 119/1 ஆகும். இது இந்துக்களால் தேரடி திடலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு ஒரு இந்து சாவடியும் அமைந்துள்ளது. இந்துக்கள் இதை கோவிலுக்கு சொந்தமான நிலம் என்றே கருதுகின்றனர். இந்த இடத்தின் அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு தர்கா உள்ளது. அதை இந்திய பாரம்பரிய முறையில் இஸ்லாமியர் வழிபடுகின்றனர். அதில் இந்துக்களும் கலந்து கொள்கின்றனர். இந்த இடத்தை இஸ்லாமியரும் இந்துக்களும் பயன்படுத்துவதில் அவ்வப்போது சச்சரவுகள் எழுந்துள்ளன. ஆனால் இவை அனைத்துமே ஒரு கிராமத்தில் இணைந்து வாழும் இரு சமுதாயக் குழுக்களிடையே உள்ள நிலத் தகராறு என்கிற பரிமாணத்தை தாண்டாமல் இருந்து வந்துள்ளது. அம்மக்களிடையே பேசி அந்த பிரச்சனைகள் பெரும் கலவரங்களாக வெடிக்காமல் தீர்க்கப்பட்டதுடன் இரு சமுதாயத்தினரிடையே உள்ள நட்புகளும் பரஸ்பர புரிதலும் நீடித்து வந்துள்ளன.

ஆனால் தொடர்ந்து வெளியிலிருந்து செயல்படும் வகுப்புவாத சக்திகள் இந்த பிரச்சனையை ஒரு அடிப்படையாக கொண்டு ஒரு நிரந்தர பகை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். 1980களில் தொடங்கி பல்வேறு அமைப்புகள் இந்த நோக்கத்துடன் ஒரு சமுதாயத்தினரை மற்றொரு சமுதாயத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவதும், அமைதி பேச்சுகளை புறக்கணிக்க சொல்வதுமாக செயல்பட்டு வந்துள்ளனர். இதில் இந்த அமைப்புகள் பெரும் வெற்றி அடைந்திடவில்லை என்ற போதிலும் இப்போது மேலும் முனைப்புடன் இந்த அமைப்புகள் களமிறங்கியுள்ளமையே இப்போதைய பிரச்சனைகளின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

1951 இல் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினரும் அமைதியை காப்பாற்றுவதாக வாக்களித்தனர். அந்த இடம் இரு தரப்பினருக்கும் பொதுவானது எனவும் அங்கே தேர் நிறுத்துவதை ஏற்றுக் கொண்டும் தேர் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டு இரு தரப்பினரும் பரஸ்பர வழக்குகளையும் திரும்பப்பெற்றுக் கொண்டனர். 1984 இல் இந்துக்கள் ஒரு மிகச் சிறிய புதிய தேர் ஒன்றை உருவாக்கினர். இதை அவர்கள் மாவட்ட ஆட்சியரின் முடிவுக்கிணங்க பழைய தேரின் கிழக்கே நிறுத்தியுள்ளனர். இதற்கு எவ்வித ஆட்சேபமும் எத்தரப்பிலிருந்தும் ஏற்படவில்லை என 10-1-1985 தேதியிட்ட வட்டாட்சியர் அறிக்கை தெரிவிக்கிறது.

1990 இல் இங்கு ரம்ஸான் காலகட்டத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டது. தேர்கள் ஊர்வலத்துக்கு செல்வதற்கு இஸ்லாமியர் சிலரிடமிருந்து ஆட்சேபங்கள் எழுந்தன. அவை மதம் சார்ந்த எதிர்ப்புகள் அல்ல. தற்போது வீடுகள் பெரிதாக இருப்பதால் தேர் அந்த வீதிகளில் செல்வது இயலாதது என்று இஸ்லாமியர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ராஜவீதியில் செல்லும் தகுதி கொண்டதாக தேரும் வீதியும் இருப்பதாகவே சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இதன் பிறகு அடுத்த இருபதாண்டுகள் தேரோட்டங்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடந்துள்ளன என்பது மட்டுமல்ல, இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பர உறவுடன் இருவரது திருவிழாக்களிலும் பங்கு கொண்டுள்ளனர். அதன் பிறகு 2012-13 இல் தான் இந்த பிரச்சனைகள் மீண்டும் உருவாகியுள்ளன.

மோதல்கள் ஏற்பட்டதன் காரணிகள் – ஒரு கண்ணோட்டம்:

1951 முதல் 1984 வரை அமைதியாக இருந்த காலகட்டத்தின் பின்னர் 1985-90 வரையான காலகட்டத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதற்கான காரணத்தை நாடிய போது அந்த காலகட்டத்தில் 119/1 நிலப்பகுதியில் தேர் நிறுத்துவதை எதிர்த்து பழனி பாபா எனும் வகுப்புவாத –அடிப்படைவாத அரசியல்வாதி இங்கு பிரச்சனை உருவாக்கும் விதமாக பேசிய பேச்சுகளும் செயல்பாடுகளும் காரணமாக விளங்கியுள்ளதை காண முடிகிறது. அவர் வெளிப்படையாகவே இஸ்லாமிய தரப்பினரை அமைது பேச்சுகளில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார். ‘வி.களத்தூருக்கு விடிவுகாலம் உண்டா’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஏளனமாகவும் (’அதுவும் இருதரப்பிலும் பிரதானமானவர்களாம்’) அரசு அதிகாரிகள் கடுமையாகவும் (’அரசின் அதிகாரிகளின் மூடத்தனம்’) விமர்சிக்கப்பட்டிருந்தனர். பழனிபாபாவின் இந்த பேச்சு தனிச்சுற்றறிக்கையாக அல் முஹாஜித் -15.07.1990- எனும் பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் பழனி பாபா அந்த தேரை எரிக்கும் படி பேசியதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு தேருக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை இந்துக்கள் தரப்பில் தமிழக முதலமைச்சருக்கு 18-7-1990 அன்று அனுப்பிய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதுடன் அதன் ஒளிநகலையும் அனுப்பியுள்ளனர்.

தற்போதும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும், இஸ்லாமிய மேன்மைவாத அரசியல் சக்திகளும் வேண்டுமென்றே இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். உதாரணமாக இரு தரப்பு மக்களும் பொதுவாக மத விழாக்களை கொண்டாடவும், அதே போல இந்து தரப்பினர் காலம் காலமாக தேரை அங்கே நிறுத்தியும் வரும் இடத்தில் ‘பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் கழிப்பிடம் வசதி செய்யுமாறு’ தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது சித்திக் 21-12-2009 அன்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவை திட்டமிட்டு இந்துக்களை இழிவுபடுத்தவும் அவர்கள் உணர்வுகளை புண்படுத்தவுமான நடவடிக்கை ஆகும்.

இத்தகைய அமைப்புகள் சாராத இஸ்லாமிய பெருமக்கள் இந்துக்களுடன் எவ்வித மோதலும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர் என்பதுதான் இவற்றில் முக்கியமான அம்சமாகும். 1992 -93 இல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய அமைப்பு இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க இந்து முஸ்லீம் கலவரங்கள் ஏற்பட்ட போதும் கூட இங்கு வகுப்பு மோதல்கள் ஏற்படவில்லை என்பதும் பழனிபாபாவின் தலையீட்டினால் ஏற்பட்ட வகுப்பு கலவர சூழல் அதன் பின்னர் இருபதாண்டுகள் இல்லாமல் இருந்தது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இன்றைய பிரச்சினை

தற்போதைய பிரச்சனை ‘Popular Front of India’ (PFI) இஸ்லாமிய அரசியல் அமைப்பின் தீவிர வகுப்புவாத செயல்பாட்டைத் தொடர்ந்து உருவாகியுள்ளது. சர்வே எண் 119/1 இடத்தில் PFI அமைப்பினர் 20 x 15 அடி டிஜிட்டல் பேனரை மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் வைத்துள்ளனர். இதனையடுத்து அதனை இந்துக்கள் கடுமையாக ஆனால் சட்ட ரீதியாக எதிர்த்துள்ளனர். இதனையடுத்து குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 107 இன் கீழ் 5.1.2012 அன்று பெரம்பலூர் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் முன்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்து-முஸ்லீம் இருதரப்பாரும்

• சர்ச்சைக்குரிய பகுதியை அரசியல் மற்றும் இயக்க சார்பாக பயன்படுத்தக் கூடாது;
• திருவிழாக்கள் பயன்பாட்டுக்கு இரு தரப்பினரும் 10 நாட்களுக்கு முன்னரே வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்.
• அனுமதி பெற்ற திருவிழாக்கள் நடத்தப்பட மூன்று நாட்களுக்கு அந்த இடத்தில் வாகனங்களால் இடையூறு செய்யப்படக் கூடாது

ஆகிய முடிவுகளுக்கு ஒத்துக் கொண்டனர். இந்துக்கள் தரப்பில் 20 பேரும் இஸ்லாமியர் தரப்பில் 20 பேரும் அழைக்கப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் இந்துக்கள் தரப்பில் 20 பேரும் இஸ்லாமியர் தரப்பில் 19 பேரும் கலந்து கொண்டனர். ஆனால் இஸ்லாமியர் தரப்பில் கலந்து கொண்டாரில் சிலர் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

இதை அடுத்து 2012 முழுவதும் வழக்கமான இந்து மத ஊர்வலங்களுக்கு எதிராக மனுக்கள் கோரிக்கைகள் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்ட வண்ணம் இருந்துள்ளன. இந்த மனுக்கள் மட்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஆவணங்களில் இஸ்லாமிய தரப்பில் புதிய புதிய பிரச்சனைகள் ஏற்படுத்துவதையும் இந்து தரப்பினர் விட்டுக் கொடுத்து போக தயாராக இருப்பதையும் காண முடிந்தது.

எடுத்துக்காட்டாக 11.12.2012 அன்று ஐயப்ப சாமி ஊர்வலம் ராஜவீதியில் செல்வது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை ஐந்து இஸ்லாமிய பிரதிநிதிகளும் ஐந்து இந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்ட ஆவணத்தில், இஸ்லாமிய தரப்பில் திரு.பஷீர் அகமது 1990 ஆம் ஆண்டு கலவரத்தில் சில கூரைவீடுகள் தாக்கப்பட்டதாகவும் அதற்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை எனவும் கூறுகிறார். 2012 இல் அத்தகைய ஒரு சம்பவம் நடந்துவிடுவோமோ என தாம் அஞ்சுவதாகவும் கூறுகிறார். மேலும் சாமி ஊர்வலத்தால் இஸ்லாமியர் குடும்ப விழாக்களை அவசரம் அவசரமாக முடிக்க சொல்வதாகக் குறிப்பிடுகிறார். இந்து தரப்பில் திரு.ராமசாமி உடையார் 1990 ஆம் ஆண்டு கலவரத்துக்கு பின்னர் 1992 ஆம் ஆண்டிலேயே பரஸ்பர மரியாதையுடனும் சகோதரத்துவத்துடனும் இரு தரப்பினரும் இணைந்து தேர் திருவிழா உட்பட திருவிழாக்களைக் கொண்டாடியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தம் திருவிழா நடவடிக்கைகளில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்றும் இஸ்லாமியர் வீட்டு விசேஷங்களுக்கு ஏற்ப திருவிழா கொண்டாடுவதில் மாற்றங்கள் ஏற்படுத்த தமக்கு தடை இல்லை என்றும் தெரிவிக்கிறார். அத்துடன் தமது கோவில் மண்டபம் திருத்தி அமைக்கப்பட்ட போது கூட இஸ்லாமியர் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து அதன் வாசலை தென்புறமாக மாற்றி அமைத்ததையும் குறிப்பிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து இந்து ஊர்வலங்கள் அனைத்தும் ஆட்சியர் அனுமதியுடனேயே நடத்தப்பட்டுள்ளன. மசூதியின் முன்னர் அமைதியாக செல்லுதல், மேளதாளங்கள் தாரை தப்பட்டைகளை அங்கு முழக்காமல் இருத்தல், கோஷங்கள் போடாமல் இருத்தல் ஆகிய பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே அந்த அனுமதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்து ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என இஸ்லாமியர் தரப்பில் போடப்பட்ட வழக்கு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அனுமதி பெற்று நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தகுந்த காவல் வழங்கும்படி மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் உயர்நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து 21-01-2013 அன்று இந்துக்களின் மண ஊர்வலம் ஒன்று ராஜவீதியில் வரும் போது இஸ்லாமியர் சிலரால் தாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை கைதுகளை செய்தது. இஸ்லாமிய தரப்பில் இந்துக்கள் ’ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆட்சேபகரமான முழக்கங்களை எழுப்பி, முஸ்லிம்களை நோக்கிக் கற்களை வீசிக் காயப்படுத்தியதாக’ கூறுகின்றனர். ஆனால் மண ஊர்வலத்தில் சென்றவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்களே என்பதும் 23 ஆம் தேதி திருமணம் இருக்கும் போது ஒரு கலவரம் ஏற்பட்டால் திருமணமே நின்று போகும் அபாயம் இருப்பதாலும் இந்துக்கள் கலவரத்தை ஆரம்பித்தார்கள் என கூறுவது பொருத்தமாக இல்லை. அரசு தரப்பில் தெளிவாகவே கலவரத்தை ஆரம்பித்தவர்கள், கல்யாண ஊர்வலத்தை நோக்கி கற்களை எறிய ஆரம்பித்தவர்கள் இஸ்லாமியர்களே என கூறப்படுகிறது.

இதன் பின்னர் மாசிமகம் ஊர்வலம் தொடர்பாக நடத்தப்பட்ட அமைதிகூட்டம் இஸ்லாமிய அமைப்புகளால் புறக்கணிப்பு நடத்தப்படுகிறது. ஆனால் 2012 நிபந்தனைகளின் அடிப்படையில் மாசி மகம் ஊர்வலத்தை 25-02-2013 அன்று நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. 2012 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட பெரும்பாலான நிபந்தனைகளுடன் சில புதிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் இதில் இந்துக்களுக்கு விதிக்கப்படுகின்றன. அவற்றை இந்துக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்:

இந்துக்கள் ஏற்றுக்கொண்ட அந்த நிபந்தனைகள் வருமாறு:

முஸ்லீம் மக்களின் தொழுகை நேரத்தின் போது ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்தவும் வாண வேடிக்கைகள் மற்றும் கரகாட்டம் ஆகியவை அனைத்தும் பயன்படுத்தக் கூடாது.

1. பள்ளிவாசல் அருகில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாண வேடிக்கைகள் விடக்கூடாது.
2. முஸ்லீம் தெருக்களின் வழியாக செல்லும் போது அமைதியாக செல்ல வேண்டும்.
3. முஸ்லீம் மதத்தினரின் மனம் புண்படுத்தும் விதத்தில் கோஷங்கள் போடக்கூடாது.
4. இந்திய இறையாண்மை வழிபாட்டிற்கு எதிராக செயல்படக் கூடாது.
5. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக் கூடாது பாக்ஸ் வடிவ ஒலிப்பெருக்கிகளைதான் பயன்படுத்த வேண்டும்.
6. சிவன் கோவிலில் இருந்து பிள்ளையார் கோவில் வரையிலான இடங்களில் மட்டும் 23.02.2013 ஆம் தேதி முதல் 26.02.2013 ஆம் தேதி காலை வரை ஒலி ஒளி அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
7. டிஜிடல் போர்டுகளை மற்ற மதத்தினர் புண்படுத்தும் விதத்தில் அமைத்து கொள்ள கூடாது.
8. டிஜிடல் போர்டுகளை வைக்கத் தேவையான வாசகங்களுடன் முன் அனுமதி பெற வேண்டும்.
9. கூம்பு வடிவ ஒலிப் பெருக்கியை உபயோகிக்கக் கூடாது. சிவன் கோவில் பிள்ளையார் கோவில் மற்றும் பள்ளிகள் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்கள் தவிர்த்தும் முஸ்லீம் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு வராத விதத்திலும் மேலும் நான்கு இடங்கள் ஆக ஆறு இடங்களில் மட்டும் பாக்ஸ் வைத்து ஒலி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதே போல் மற்ற இடங்களில் ஒலி அமைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.

ஏறக்குறைய எல்லா திருவிழாக்கள் ஊர்வலங்களுக்கும் இந்துக்கள் அமைதி பேச்சுவார்த்தைகளின் போது இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் இந்து ஊர்வலங்களை அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமிய அமைப்புகளால் தூண்டிவிடப்பட்டு இஸ்லாமிய பெண்கள் சிலர் குடும்ப நல அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் சந்தித்த இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் அரசுத் தரப்பினர் கருத்து

ஏற்கனவே இந்து ஊர்வலங்களை எதிர்க்கும் முஸ்லிம்களையே இதற்கு முந்தைய தகவல் அறியும் குழு சந்தித்து அவர்களின் கருத்துகளையே ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் கருத்து என கூறியுள்ளதால் இந்து ஊர்வலங்கள் நடத்துவதில் பிரச்சனை இல்லை என கூறும் இஸ்லாமியரின் கருத்துகளையும் ஒரு முக்கிய தரப்பாக இக்குழு பதிவு செய்கிறது.

சமய சமரசத்தை விரும்பும் இஸ்லாமியர் கருத்து:

119/1 இடம் இரு சமுதாயத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் பாரம்பரிய இஸ்லாமிய நிகழ்ச்சிகளை கொண்டாட இந்துக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அந்த இடம் இரு சமுதாயத்தினருக்கும் பொதுவானது என்பதாலும் அங்கே பொதுவிழாக்கள் கொண்டாடப்படுவதாலும் அங்கே பேருந்து நிலையம் வருவதென்பதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள். இந்துக்களை எதிர்த்து அவர்களை தனிமைப்படுத்தும் செயல்களை செய்வது தமது பாரம்பரிய மத நல்லிணக்கத்துக்கு ஏற்புடையதாக இல்லை என அவர்கள் கருதுகின்றனர். இந்துக்களின் ஊர்வலங்கள் போவதிலும் அவர்களுக்கு எவ்வித தடையும் பிரச்சனையும் இல்லை என்பதுடன் அச்சத்தையும் அவர்கள் உணரவில்லை. இத்தகைய இஸ்லாமியர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா குறித்து கருத்து சொல்ல தயங்குகின்றனர். அதை மீறி தைரியமாக சொல்பவர்கள் அந்த அமைப்பே பிரச்சனைகளுக்கு காரணம் என தெளிவாகவே சொல்கின்றனர். நிர்வாகம் இதுவரை எடுத்துவந்த நடவடிக்கைகள் பாரபட்சமின்றி நேர்மையாக இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர். பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்துக்களின் கருத்து:

இந்த பிரச்சனைகள் அனைத்துமே பேசி சரி செய்ய முடிந்தவையே என்பதிலும் தாம் விட்டுக்கொடுத்து போவதிலும் இந்துக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. பெரும்பாலான இந்துக்கள் 2011க்கு முன்னாலும் 1990க்கு பின்னரும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஒரு தாய் குழந்தைகளாகவே பழகி வந்ததாக கூறுகின்றனர். மசூதியின் முன்னால் ஒலி எழுப்புவது ஆர்ப்பாட்டங்கள் செய்வது என்பது தங்களால் கற்பனையாலும் நினைக்க முடியாதது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் பாப்புலர் ப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தம்மை சாதி அடிப்படையில் பிளவு படுத்த முயற்சிப்பதாகவும் இஸ்லாமியரையும் தமக்கு எதிராக தூண்டி தனிமைப்படுத்த முயற்சி செய்வதாகவும் அவர்கள் கருதுகின்றனர். தேர் நிற்கும் இடத்தை இல்லாமல் ஆக்குவதையும் தேரோடும் வீதிகளில் இந்துக்களின் மத ஊர்வலங்களையும் மணவிழாக்கள் இதர ஊர்வலங்களையும் நிறுத்துவதன் மூலமாக இந்த தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் தம்மை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி தம் பண்பாட்டு அடையாளங்களையும் சமுதாய ஒற்றுமையையும் குலைக்க நினைப்பதாக இந்துக்கள் கருதுகின்றனர். தகவல் அறியும் குழுவினர் எனும் பெயரில் வந்தோர் தம்மிடம் பெற்ற தகவல்களை சரியாக கூறாமல் திரித்து கூறியதாகவும் அதனால் தாம் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், தகவல் தொடர்பு நிலையில் தாம் இயக்கரீதியாக செயல்படும் இஸ்லாமியரைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்த தனியார் தகவல் அறிக்கை குழுவினர் இஸ்லாமிய இயக்கங்களின் பினாமி பிரச்சார கருவியாக தமக்கு எதிராக செயல்படுவதாகவே அவர்கள் கருதுகின்றனர்.

அரசு தரப்பில்:

மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து பேசிய போது இந்திய அரசியல் நிர்ணய சட்டத்துக்கும் வகுப்பு ஒற்றுமைக்கும் களங்கமும் தீமையும் வராத நிலையிலேயே தாம் செயல்படுவதாக அவர்கள் தெரிவித்தார்கள். எந்த சமுதாயமும் அரசியல் நிர்ணய சட்டத்துக்கு புறம்பாக செயல்பட முடியாது என்றும் அவ்வாறு செயல்பட அனுமதிக்கவும் முடியாது என்றும் தெளிவாக கூறப்பட்டது.

கூறப்பட்ட சில கருத்துகள்:

திரு. ஹுசைன் பாய்

இன்னும் சொல்வதாக இருந்தால் எங்களுக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல்தான் நாங்கள் பழகி வருகிறோம். அனைத்து தரப்பினரையும் மதிக்க வேண்டும் என்பதைத்தான் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். இதுவரை நாங்கள் –அவ்வப்போது சின்ன சின்ன தகராறுகள் வந்தாலும் கூட- அப்படித்தான் பழகியிருக்கிறோம். என்று அவர் கூறினார். பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைத்து வருவதாகவும் இளைஞர்களை தவறாக வழி கெடுத்து வருவதாகவும் திரு.ஹுசைன் அவர்கள் தெரிவித்தார். பேருந்து நிலையம் அமைவது ஊருக்கு நல்லது என்றாலும் கூட இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி அவ்வாறு செய்யப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஊர் தலைவியின் கணவர் திரு, இஸ்மாயில்

பேசும் போது தேர்தல் வேறுபாடுகளினால் பிரச்சனை ஆரம்பித்ததாகவும், பேருந்து நிலையத்தை அந்த பிரச்சனைக்குரிய இடத்தில்தான் வர வேண்டுமென கூறுவது சரியான தீர்வல்ல என்றும் தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட முறையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் தமக்கு நீதியுடையதாகவே படுவதாக அவர் கூறினார். இரு தரப்பினரும் செய்த தவறுகளை அவர் கூறினார். உதாரணமாக தர்கா வழிபாட்டின் போது இசை கச்சேரி மேடை அமைப்பதில் அந்த மேடையை இந்துக்கள் மாற்றி அமைக்க சொன்னார்கள் என்பதை அவர் கூறினார்.

திரு ராமசாமி:

1895 முதலேயே இந்த பிரச்சனை நிலவுவதை சுட்டிக்காட்டும் திரு.ராமசாமி அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்துள்ளார். தாமே இஸ்லாமிய திருவிழாக்களில் கலந்துள்ளதை நினைவு கூர்கிறார் அவர். பழனிபாபா காலத்தில் இந்த வகுப்பு துவேசம் உருவாக்கப்பட்டது என்றும் அப்போது வெற்றிபெறாத முயற்சிகள் இப்போது இன்னும் அதிக பலத்துடனும் முழு மூச்சுடனும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இருந்தாலும் வெளிப்புற சக்திகளின் ஆதிக்கம் இல்லாத சூழலில் தம் இஸ்லாமிய சகோதரர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். பாப்புலர் ப்ரெண்ட் ஆஃப் இந்தியா இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக தற்போது விளங்குகிறது என அவர் சொன்னார்.

திரு.கந்தசாமி

தலித் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவரான கந்தசாமி தமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சாமி திருவிழாக்கள் அந்த சர்ச்சைக்குரியதாக இப்போது ஆக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்துள்ளதாக குறிப்பிட்டார். அந்த கோவில் திருவிழா ‘சாதி இந்து’ என அழைக்கப்படுவோருக்கு மட்டும் உரியதா? எனும் கேள்விக்கு உண்மையில் அந்த கோவிலில் தம் சமுதாயத்தைச் சார்ந்தவருக்கு சம பாத்தியதை உண்டு என்பதுடன் அந்த இடத்தின் பெயர் சாத்தன் உண்டுகட்டி எனவும் அதில் தம் சமுதாயத்தினருக்கு சடங்கு உரிமைகளும் பாரம்பரியமாக உண்டு என்றும் தெரிவித்தார். இக்கோவிலின் டிரஸ்டிகளில் தலித் சமுதாய பிரதிநிதிகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிற மாவட்டங்கள் ஊர்களில் இருப்பது போல இங்கு எவ்வித பிரிவுகளும் இல்லை என அவர் தெரிவித்தார்.

திரு. முனுசாமி

இவர் கோவில் டிரஸ்டியாகவும் உள்ளார். இளைஞர். தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரும் தமது சமுதாயத்துக்கு கோவிலில் பாரம்பரிய பாத்தியதை நினைவு தெரிந்த நாளிலிருந்து உள்ளது என குறிப்பிட்டார். கல்வி அறிவில் தம் சமுதாயம் முன்னேறிவருவதாகவும் அவர் கூறினார். இங்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டால் தமது பாரம்பரிய சடங்கு உரிமைகள் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

திரு. மணிவேல்

இளைஞரும் கூலித்தொழிலாளருமான மணிவேல் இந்த சூழ்நிலை குறித்து தெரிவித்த கருத்தின் போது இது முழுக்க முழுக்க பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஊர் ஜமாத்தினைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட நிகழ்வு என கூறினார். இஸ்லாமியர் பாரம்பரியமாக சமுதாய பொறுமையும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு அவர் ஆதாரமாக இஸ்லாமியர் பெரும்பான்மையினராக விளங்கும் லெப்பைக்குடிக்காட்டில் பள்ளிக்கு அருகிலேயே ஒரு முருகன் கோவில் அமைக்கப்பட்டு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சமூக நல்லிணக்கத்துடன் அம்மக்கள் வாழ்வதை தெரிவித்தார். இத்தகைய செயல்பாடுகளால் தம் கிராமம் அதன் பொருளாதார முன்னேற்றத்தை இழப்பதையும் இந்து இஸ்லாமிய வர்த்தக உறவுகள் பொது சந்தை அமைப்புகள் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது

இணைய தளங்கள் மூலம் இந்த ஊர் பிரச்சனை குறித்து திரிவான தகவல்களை பரப்புவது பொறுப்பற்ற செயல் என்று கூறினார். இஸ்லாமியர் இந்துக்களின் சட்ட அனுமதி பெற்ற ஊர்வலங்களைத் தடுப்பது இந்திய அரசியல் நிர்ணய சட்டத்துக்கு புறம்பானது என்றும் இதற்கும் ஆதிக்கசாதியினர் தலித்துகளை தெருக்களில் அனுமதிக்காமல் இருப்பதற்கும் வேறுபாடு இல்லை எனவும் கூறினார். மேலும் இஸ்லாமிய சமுதாயமானாலும் இந்து சமுதாயமானாலும் இந்த போக்கு தனிமைப்படுத்தும் நிலைக்கே தள்ளும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அரசியல் நிர்ணய சட்டத்துக்கு புறம்பாகவும் சமுதாய நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் நடந்து கொள்வதை அரசு இயந்திரம் அனுமதிக்க இயலாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன்

எம் குழுவிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் இஸ்லாமியரைத் தாக்கியதாகவும் அவர்களை இழிவாக பேசியதாகக் குறிப்பிடுவதையும் மறுத்தார். எவ்விதச் சார்பும் இன்றியே காவல்துறை செயல்பட்டிருப்பதாக அவர் கூறினார். இத்தகையக் குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே புனைந்து பரப்பப்படுவதாக அவர் கூறினார்.

திரு ஹுசைன் பாய் அவர்களும் திரு.ராமசாமி அவர்களும் ஒருவரை ஒருவர் உரிமையுடன் கிண்டல் செய்து கொள்ளும் குடும்ப நண்பர்களாக விளங்குவதும் அந்த உறவு தலைமுறைகளாக நீடிப்பது என்பதும், தற்போதைய நிகழ்வுகளால் அந்த ஊரில் நீடிக்கும் இத்தகைய மதங்கள் கடந்த தனிமனித உறவுகள் கெட்டுப் போய்விட கூடாது என இருதரப்பிலும் ஆதங்கம் இருப்பதையும் உணர குழுவினரால் முடிந்தது.

எமது அவதானிப்புகள்:

• 119/1 இடம் இரு சமுதாயத்தினருக்கும் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. அங்கே ஒரு இந்து சாவடியும் பாரம்பரியமான பழைய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேரும், இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உருவாக்கிய மிகச்சிறிய தேரும் உள்ளது. எனவே இது இந்துக்களின் தேரடி திடலாகவும் இரு சமுதாயத்தினரின் பாரம்பரிய சமய விழாக்கள் நடத்தும் இடமாகவும் உள்ளது. இங்கு பொது பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் இந்துக்கள் தேரை ஊருக்கு வெளியே பாதுகாப்பற்று நிறுத்த வேண்டி வருவதுடன் வகுப்பு நல்லிணக்கமும் பாதிக்கப்படும். தர்கா வழிபாடும் அதன் சமய சமரசத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் இழக்கும். ஏற்கனவே தர்கா வழிபாட்டை எதிர்க்கும் வகாபிய குழுக்கள் இஸ்லாமிய அரசியலில் மேலோங்கி விளங்குவதால் அவற்றுக்கு இதனால் அரசியல் மற்றும் இறையியல் ஆதாயங்கள் உண்டு.

• ஊர்வலங்களைப் பொறுத்தவரையில் இந்துக்கள் மத ஊர்வலங்களை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை மறுக்க இயலாது. இந்த ஊர்வலங்கள் பாரம்பரியமாக நிகழ்ந்து வந்துள்ளன என்பதையும் ஆவணப்படுத்தப்பட்ட கடந்த நூறாண்டுகளில் இந்த ஊர் பகுதியில் மிக அரிதாகவே வகுப்பு மோதல்கள் நடந்துள்ளன என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. ஊர்வலங்களை நடத்த அந்த பிராந்திய சமுதாய உறவுகளின் அடிப்படையில் சில சமரசங்களும் புதிய உறவு வழக்கங்களையும் நம் பண்பாட்டில் உருவாவதை இங்கும் காணமுடிந்தது. உதாரணமாக ரம்ஜான் நோன்பின் போது இந்துக்கள் இஸ்லாமியருக்கு உதவுவதும் அவர்கள் நோன்பு திறக்கும் போது அதில் பங்கெடுப்பதும், தேர் திருவிழாவின் போது இஸ்லாமிய பெரியவர்கள் பட்டாடைகள் அளித்து மரியாதை செய்வதும் ஆகிய பழக்க முறைகள் இங்கு உள்ளன. அவற்றை பாதுகாத்து முன்னெடுப்பதுதான் வகுப்பு ஒற்றுமைக்கு உதவும். மாறாக சமுதாய பிளவுகளை உருவாக்குவதால் தனிமைப்படுவதற்கே அது வழி வகுக்கும்.

• ஆட்சித்தலைவரும் காவல் அதிகாரிகளும் பாரபட்சமின்றி நடந்துள்ளனர் என்பதுடன் வகுப்பு மோதல்களை தவிர்ப்பதிலும் சமரசமான சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும் மிகுந்த முனைப்பைக் காட்டுகின்றனர். இது மிகவும் நேர்மறையான அம்சமாகும். இந்த சூழலைப் பயன்படுத்தி மக்கள் தங்களை பிரிவுபடுத்தும் சக்திகளிலிருந்து வெளிவர வேண்டும்.

• ஊரில் பொதுவாக மக்கள் மக்களை பிரித்து பார்க்கும் நிலை இல்லை. எம் குழு இயங்கிக் கொண்டிருந்த போதே தொழுகைக்கான அழைப்பு ஊர் முழுவதும் கேட்குமாறு மிக உயரமான நவீன மினார் கோபுரத்திலிருந்து ஒலித்தது. அது இஸ்லாமிய இந்து பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் ஒலித்தது. அதை எவரும் ஆட்சேபிக்கவோ எதிர்க்கவோ இல்லை. தேர்களுடன் ஒரு இஸ்லாமியர் மிக இயல்பாக தம் மிதிவண்டியை இணைத்து வைத்திருந்ததை எம்மால் காண முடிந்தது. ஒரு பழமையான மதரசா இந்துக்களும் அதிகமாக வாழும் வீதியில் இருந்ததை காணமுடிந்தது. இத்தகைய சமரச சூழ்நிலை ஒரு பக்கம் இருக்க மாநில அளவில் வ.களத்தூர் பிரச்சனையை பெரிதாக்குவோம் என முழங்கும் பாப்புலர் ஃப்ரெண்ட் சுவரொட்டிகளையும் காண முடிந்தது. மக்களிடையே மிக இயல்பாக இணைந்து வாழும் தன்மையே விளங்குகிறது என்பதையும் எவர் அதை குலைக்கின்றனர் என்பதையும் தெளிவாகவே அவதானிக்க முடிந்தது.

முந்தைய ’உண்மை அறியும் குழுவின் அறிக்கை’ – சில கேள்விகள்:

தமிழ்நாட்டில் தொழில்முறை உண்மை அறியும் குழுவாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் & கோ ஆவர். இவரது குழுவில் இஸ்லாமியர், இந்துக்கள், கிறிஸ்தவர் என அனைவரும் இடம் பெற்றிருப்பினும் அவர்கள் அனைவருமே ஒரே சித்தாந்த சார்புடையவர்கள் என்பது தெளிவு. எனவேதான் அவரது உண்மை அறியும் குழுவின் உண்மைநிலையை அறிந்திடவும் அவரது குழுவினால் ஏற்படுத்தப்பட்டிடும் நிலையை சமனப்படுத்திடவும் இக்குழு அமைக்கப்பட்டது. பேராசிரியர். அ.மார்க்ஸ் அவர்களின் குழு அளித்த அறிக்கையில் பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

1. பழனிபாபாவின் செயல்பாடுகள் 1990 இல் பதட்டத்தையும் வகுப்பு மோதலையும் ஏற்படுத்த காரணமாக இருந்தன என்பதை அவர் மறைத்தது ஏன்? இத்தரவினை அவரிடம் கூறியதாக திரு.ராமசாமி அவர்கள் கூறுகிறார்கள்.

2. தமுமுகவினர் அளித்த கோரிக்கையில் இந்துக்கள் தேர் நிறுத்தும் இடத்தை கழிப்பிடமாக மாற்ற அளித்த கோரிக்கை இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் என்பதையும் வகுப்பு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் அவர் அறிக்கை கூறவில்லை.இது கூட ஒருவேளை அவசியமில்லை என அவர் தவிர்த்து விட்டதாக கூறிடலாம்.

3. // டிசம்பர் 5, 2012ல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107 பிரிவின் கீழ் இரு தரப்பிலிருந்தும் 20, 20 பேர் அழைக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டபோதும் அதில் சில முஸ்லிம்கள் கையொப்பமிட மறுத்து விட்டனர். // என்று பொத்தாம் பொதுவாக கூறும் ‘உண்மை அறியும் குழுவின் அறிக்கை’ அது Popular Front of India அமைப்பினரால் 119/1 இடத்தில் வைக்கப்பட்ட டிஜிடல் பேனரால் ஏற்பட்ட பிரச்சனை என்பதை மிகவும் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டது ஏன்?

4. 1990 ஆம் ஆண்டு பிரச்சனைக்கு பிறகு இரு வகுப்பினரும் இணக்கமாக வாழ்ந்தனர் என்பதை அ.மார்க்ஸ் அவர்களின் உண்மை அறியும் குழு ஏற்றுக் கொள்கிறது. //ஒரு இருபதாண்டு காலம் பெரிய பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர். இந்துக்களின் திருவிழாவில் முஸ்லிம்கள் வடம் பிடிப்பது, முஸ்லிம்களின் விழாக்களில் இந்துக்கள் பங்கு பெறுவது என்பதெல்லாமும் கூட நிகழ்ந்துள்ளது.// ஆனால் தன் பார்வை எனும் தலைப்பின் கீழ் // 1992க்குப் பின் இது போன்ற மத ஊர்வலங்கள் சிறுபான்மையோருக்கு எதிரான வன்முறைகளாக மாறி வருவது கண்கூடு. எனவே இது குறித்த இயல்பான ஒரு அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியுள்ளதை மாவட்ட நிர்வாகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது.// என கூறுகிறது. ஆனால் 1992-க்கு பிறகு 2012 வரை இங்கு பிரச்சனைகள் ஏற்படாதிருக்கும் போது இப்போது ஏன் திடீரென இந்த அச்சம் எழ வேண்டும்? இந்த அச்சத்தை எழ வைப்போர் யார் எனும் கேள்விகள் எழுகின்றன. அ.மார்க்ஸ் அறிக்கையின் படியே கூட இங்கு இந்துக்கள் மத்தியில் எந்த இயக்க செயல்பாடும் இல்லை. எனவே இந்த அச்சத்தை இஸ்லாமியர் மத்தியில் உருவாக்கியது யார் எனும் கேள்வியே அ.மார்க்ஸுக்கு இயல்பாக எழும்பியிருக்க வேண்டிய கேள்வி ஆகும். ஆனால் அதற்கு மாறாக அவரோ 1992 உடன் வ.களத்தூர் நிலையை செயற்கையாகவும் விஷமத்தன்மையுடனும் இணைப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

5. சாதி இந்துக்கள் என்றும் தலித்துகள் என்றும் அ.மார்க்ஸ் குழுவினர் பிரித்து பேசியுள்ளார்கள். ஆனால் இந்து தலித் சமுதாயத்தினரிடம் நாங்கள் விசாரித்த போது அத்தகைய பிரிவு அவ்வூரில் நிலவவில்லை என்பதுடன் தம் சமுதாய உரிமைகளும் 119/1 நிலத்துடன் இணைந்திருப்பதையும் அதை இஸ்லாமிய அரசியல் தரப்பின் பேருந்து கோரிக்கை அச்சுறுத்துவதையும் கூறினார்கள். மேலும் அவ்வூர் கவுன்ஸிலராக சங்கீதா செந்தமிழ்செல்வன் எனும் தலித் பெண்மணி அ.மார்க்ஸ் குழுவினரால் ‘சாதி இந்து’ ‘தலித்’ என பிரித்து பேசப்படுவோரால் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷேக் அப்துல்லா எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் மற்றொரு கவுன்ஸிலரான வனிதா சுப்பிரமணியம் என்பவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றுள்ளார். இவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரே ஆவார். ஆக சாதி இந்து தலித் எனும் பிரிவு இல்லாததுடன் அந்த குறிப்பிட்ட கோவில் நிர்வாகக்குழுவில் தலித்துகளே இடம் பெற்றிருக்கும் போது எப்படி அ.மார்க்ஸ் குழுவினர் இப்படி பிரித்து பேசி அறிக்கை தயாரித்துள்ளனர் என ஊர் மக்கள் ஆத்திரத்துடன் கேட்கின்றனர். இஸ்லாமிய அரசியல் தரப்பு இவ்வாறு சாதி அடிப்படையில் இந்துக்களை பிரிக்க செய்யும் செயல்பாட்டுக்கு இவர்களும் இடம் கொடுக்கிறார்களோ என ஐயப்படுகின்ரனர். அவர்களின் ஆத்திரமும் ஐயப்பாடும் நியாயமானது என நினைக்க வைக்கவே தூண்டுகிறது அ,மார்க்ஸ் அவர்கள் இத்தரவுகளை தம் அறிக்கையில் மறைத்துள்ளது. மேலும் அ.மார்க்ஸ் குழுவினர் தம்மை வந்து சந்திக்கவில்லை என நாங்கள் சந்தித்த தலித் சமுதாயத்தினர் தெரிவித்தனர். இவர்கள் அக்கோவிலின் டிரஸ்டி குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. திருமண ஊர்வலத்தினர் இஸ்லாமியரைத் தாக்கினர் என இஸ்லாமியர் தரப்பில் கூறப்படுவது எந்த உண்மை அறியும் குழுவினருக்கும் ஐயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் திருமணத்துக்கு இரு நாட்கள் முன்னால் ஊரில் கலவரத்தை ஏற்படுத்த பெண்கள் அதிகமாக செல்லும் ஒரு ஊர்வலக்குழுவினர் விரும்புவார்களா என்பது அடிப்படையான கேள்வி. உண்மை அறியும் குழு இக்கேள்வியையே கேட்காமல் இஸ்லாமிய அரசியல் தரப்பின் கூற்றினை அப்படியே உண்மையாக ஏற்றது ஏன் என கேள்வி எழும்புகிறது.

7. ஒட்டுமொத்தமாக இந்துக்களின் தரப்பின் நியாயத்தையும் இஸ்லாமியரில் சமரச போக்கை விரும்புவோரின் தரப்பின் குரலை ஒரு சில வரிகளில் புறந்தள்ளியும் இஸ்லாமிய அரசியல் மேலாதிக்க சக்திகளின் வகுப்புவாத அரசியலுக்கு நியாயம் ஏற்படுத்தியும் வாதாடும் ஒரு சார்பு வழக்கறிஞர் அறிக்கையாக பேராசிரியர் அ.மார்க்ஸின் ‘உண்மை அறியும் குழுவின் அறிக்கை’ உள்ளதே அல்லாமல் மதச்சார்பற்ற ஜனநாயக நடுநிலைக் குழுவின் அறிக்கையாக அது அமையவில்லை என்பதே உண்மை.

எமது பரிந்துரைகள்:

சமூக நல்லிணக்கத்தை பேணுதல் மற்றும் வகுப்பு ஒற்றுமையை முன்னெடுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பின்வரும் பரிந்துரைகளை இரு தரப்பினருக்கும் அரசினருக்கும் முன்வைக்கிறோம்:

• வ.களத்தூர் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக உள்ள சர்வே எண் 119/1 இடத்தில் தேரடித் திடலாக இந்துக்கள் பயன்படுத்தி வருவதுடன் அப்பகுதியில் இஸ்லாமியரின் தர்கா வழிபாட்டு முறைகளுக்கு இயன்ற அளவு இடையூறுகள் இல்லாமல் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.

• இந்து முஸ்லீம் ஊர்வலங்கள் இந்தியா போன்ற பன்மை பேணும் நாட்டின் கிராமிய பண்பாட்டில் தவிர்க்க இயலாதவை. இவற்றை சமய நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். இதை ஏற்கனவே நம் பண்பாட்டில் செய்திருக்கிறோம் என்பதையும் அத்தகைய பண்பாட்டுத் தகவமைப்புகள் வ.களத்தூரிலும் காணப்படுகின்றன என்பதையும் நாம் கண்டோம். அவற்றை பகுத்தறிந்து அவை மீண்டும் பலப்படுத்த வேண்டுமே அல்லாது சமூக உறவுகளை பிரிக்கும் ‘தனிமைப்படுத்தும்’ முறைகளுக்கு அரசோ அல்லது இரு சமூகத்தினரோ துணை போகக் கூடாது. இவ்விடயத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் தரேஸ் அகமது அவர்களின் பார்வை இந்திய மதச்சார்பின்மையின் சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதை குறிப்பாக கூற வேண்டியுள்ளது. அவர் இத்தகைய மரபுகளை வளர்த்தெடுக்கும் முறையையும் கவனிப்பார் என்பதில் ஐயமில்லை.

• இஸ்லாமிய அரசியல் தீவிரவாத இயக்கங்கள் தீவிரமாக ஊரில் இயங்கி வருகின்றன. பழனிபாபா முதல் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா வரை இவை சமுதாயங்களை தனிமைப்படுத்தும் பார்வையுடன் இயங்குகின்றன. இந்துக்கள் ஏறக்குறைய தனிமைப்படுத்தப்பட்டு உணர்கின்றனர். எனவே விரைவில் இந்து இயக்கங்களும் இங்கு செயல்பட ஆரம்பிக்கும் என ஊகிக்கலாம்.அவ்வாறு இந்து இயக்கங்கள் இயங்கும் போது இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை பிரதி எடுக்காமல் இயங்க வேண்டிய தேசிய கடப்பாடு அவற்றுக்கு இருப்பதை உணர வேண்டும். மக்களை ஒருமைப்படுத்தும் பண்பாட்டுத்தன்மைகளை அவை வளர்க்க வேண்டும். அத்துடன் இந்துக்களை சாதிகளை கடந்து ஒற்றுமையான சமுதாயமாக வளர்த்தெடுக்க வேண்டும். தலித் சமுதாயத்தினருக்கும் இதர சமுதாயத்தினருக்கும் இக்கிராமத்தில் எதிர்ப்பும் வேறுபடுத்தும் மனபான்மைகளும் இல்லை என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். இதன் அடிப்படையில் இந்து ஒற்றுமையையும் வகுப்பு நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டியது பாரத பண்பாட்டு காப்பாளர்கள் எனும் முறையில் இந்து இயக்கங்களின் கடமையாகும். அக்கடமையை உணர்ந்து அவை செயல்பட வேண்டும்.

• பல சுவர்களில் வகுப்புவாத கட்சிகளின் கோஷங்கள் செயல்பாடுகள் தீட்டப்பட்டுள்ளன. இந்த பிரச்சார முயற்சிக்கு மாற்றாக டாக்டர். அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் தேசிய ஒற்றுமை கல்வியியல் முன்னேற்றம் மானுட சமத்துவ கருத்தாக்கங்கள் அரசு மூலமாகவும் சுவர் உரிமையாளர்கள் மூலமாகவும் எழுதப்படலாம். வகுப்புவாத சக்திகளின் பரப்புரைக்கான வெளியை இச்செயல்பாடு கட்டுப்படுத்தும்.

• இன்றைய சூழலில் இணைய தளம் வகுப்புவாத பிரிவினை சக்திகளின் ஒரு முக்கியமான பரப்புரை ஆயுதமாக மாறிவருகிறது. வ.களத்தூர் இணைய பரப்புரையை வகுப்புவாத சக்திகள் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகவே ஆகியுள்ளது எனலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் தரேஸ் அகமது இணையதளங்களின் பொறுப்பற்ற தன்மையைச் சுட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய இணையதளங்கள் காவல்துறையின் தனிப்பிரிவால் கவனிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் இணைய தளம் அதிகாரபூர்வமாக இவ்வாறு பரப்பப்படும் அவதூறுகளின் உண்மை நிலைப்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

• தம்மை மதச்சார்பற்றவர் என சொல்லிக் கொள்ளும் சில அறிவுஜீவிகள் ஒரு வகுப்புவாத இயக்கத்தின் பினாமி பிரச்சாரகர்களாக செயல்பட்டிருக்கிறார்கள் எனும் ஐயத்தை பேரா.அ.மார்க்ஸ் தலைமையிலான ‘உண்மை அறியும் குழுவின்’ அறிக்கை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ‘உண்மை அறியும் குழு’க்கள் கலவரங்கள் ஏற்படுத்தும் குழுக்களாக மாறிவிடக் கூடாதென்பது நடுநிலையாளர்களின் அச்சமாக உள்ளது. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இந்து-முஸ்லீம்-கிறிஸ்தவர் என ‘டோக்கனிஸத்தை’ கடை பிடிக்கிறார்கள். ஆனால் அதில் இடம் பெறும் அனைத்து உறுப்பினர்களும் பொதுவாக இந்து சமுதாயத்தை/மதத்தை வெறுப்போராகவும் மற்றொரு பிரிவினரின் அடிப்படைவாதத்துக்கு துணைபோவோராகவும் இருப்பது தெளிவு. அவர் தம்மை நடுநிலை உண்மை தேடும் குழுவினராக தொழில்முறை ரீதியில் காட்டி வரும் காரணத்தால் அந்த நடுநிலையைக் காட்ட அடுத்த முறை அவர் இத்தகைய ஒரு குழுவினை ஏற்படுத்தும் போது பிற சித்தாந்த ஏற்புடையோரையும் அவரது குழுவில் இணைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இத்தகைய உண்மை அறியும் குழுக்கள் உண்மையில் உண்மை அறிகின்றனவா அல்லது மேலும் வகுப்புமோதலை தூண்டிவிடுகின்றனவா என்பதை ஆராய்ந்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• மேலும் மக்களிடம் அரசு நிர்வாகம் பற்றியும் இந்திய குடியாட்சி முறை, அரசு அதிகாரிகள் பற்றிய அவ நம்பிக்கைகளை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் அரசியல் இயக்கங்களை மக்கள் வெறுக்கிறார்கள்.

எம் உண்மை அறியும் குழு வ.களத்தூரில் அனைத்து தரப்பினரும் மீண்டும் நல்ல வகுப்பு நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ்ந்து இம்மாவட்டத்துக்கும் மாநிலத்துக்கும் ஒரு சிறந்த உதாரண வகுப்பு ஒற்றுமை கிராமமாக இக்கிராமம் மாற வேண்டும் என விரும்புகிறது., அதற்கான வாய்ப்புகளையே இச்சவால்கள் உருவாக்கியுள்ளதாக நம்புகிறது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் முனைவர் தரேஸ் அகமது அவர்களின் செயல்பாடு அந்த நம்பிக்கைக்கு மேலும் உரமளிப்பதாக விளங்குகிறது.

ஜெய் ஹிந்த்!

வி.களத்தூர் பிரசினை தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய pdf கோப்பை இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12 Replies to “வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை”

  1. இந்தக்கள அறிக்கை வ.களத்தூர் வகுப்பு மோதலை ஆழ்ந்து ஆய்ந்து வரையப்பட்டுள்ளது.உண்மை அறியும் குழுவின் ஒரப் பார்வையை சரியாக அம்பலப்படுத்துகிறது.
    வ.களத்தூரில் ஹிந்து இயக்கங்கள் இல்லாததால் நிலமை இன்னும் இவ்வளவு மோசமானதாக இருக்கிறது. அவை இல்லததாலேயே இந்த உண்மை அறியும் குழு சாதி பேதங்களைப்பெரிதாக்கி தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. இருந்திருந்தால் ஹிந்து இயக்கங்களே காரணம் என்று கூறியிருப்பார்கள்.
    ஹிந்துக்களின் சதவீதம் குறைந்தால் அவர்களது வழிபாட்டுக்கும் திருவிழாக்களுக்கும் என்ன ஆபத்து நிகழும் என்பதை அனைவரும் உணரவேண்டும்

  2. There are several divisions amongst the Muslims like Shias,Sunnis,Wahhabis etc..etc….It is essential that we understand the differences between these factions and the kind of political and other support some of them get from various sources within India and outside India.Some of these forces are definitely acting with the intention of spoiling communal amity and creating a “war like” situation between the people following different religions.The leaders of such groups have to be identified and action taken as per law.The sources giving support must be identified and dealt with.Only when the Government machinery is intelligent.alert and acts timely and effectively the destabilizing forces can be destroyed/controlled/starved of support. Only this will ensure peace to all the peaceloving Indian citizens irrespective of the religion they follow.

  3. மார்க்சிய மற்றும் இந்துவிரோதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கும் செயல்பாடு இது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்து இயக்கங்கள் இது போன்ற செயல்பாடுகளில் ஏன் இறங்குவதில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை. தொட்ர்ந்து பலரும் இது போன்ற முன்முயற்சிகளிஅ எடுப்பதற்கு இது மிகச் சிரந்த முன்னுதாரணம்.

  4. 1. ஹிந்து முஸல்மான் க்றைஸ்தவர் என அனைவரையும் கொண்டதான ஒரு ஆய்வுக்குழு அளித்த அறிக்கை அதீத பக்ஷபாதத்துடனான அறிக்கை மற்றும் முற்றிலும் மதசார்பான அறிக்கை என்பது அதில் உள்ள இடைச்செருகல்கள் மற்றும் விடுபட்ட தகவல்கள் பறைசாற்றுகின்றன.

    2. அனைவரையும் ஹிந்துக்களாகக் கொண்ட குழு, கள ஆய்வு செய்து இங்கு வெளியிடப்பட்ட அறிக்கை முந்தைய அறிக்கையை தோலுரித்ததல்லாது கருத்துச் சமநிலை கொண்டதாகவும் உள்ளது வெள்ளிடைமலை.

    3.தமிழகத்தில் ஒரு புறம் இஸ்லாமிய அடிப்படை வாதமும் க்றைஸ்தவ மதமாற்ற வெறிப்பணிகளும் போட்டி போட்டு வருகையில் தமிழகத்தின் பல இடங்களில் ஹிந்துக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருவது நிதர்சனம்.

    4. ப்ரச்சினை வந்த பின் அதை அணுகுவதல்லாது இது போன்ற இடங்களை முறையாகக் கண்டறிந்து ஹிந்து இயக்கங்கள் இவ்விடங்களில் துன்புறும் ஹிந்துக்களிடமும் சமரசப்போக்கு உள்ள மாற்று மதத்தவரிடமும் தொடர்ந்து மத இணக்கப்பணிகளில் ஈடுபடுவது நன்று.

    5. மதச்சார்பற்றவர் எனச் சொல்லிக்கொள்ளும் கும்பல்கள் மிக வெளிப்படையாக ஆட்டம் போடுவது அதீத ஹிந்து வெறுப்பை பறைசாற்றுதலிலும் மற்றும் மாற்று மதத்தவரில் சமரசப்போக்காளர்களை அறவே புறந்தள்ளி அடிப்படை வாதிகள் மற்றும் பிரிவினை வாதிகளை கொம்பு சீவி விடுதலிலும் ஈடுபடுதல் மூலம். இந்த விஷயங்களைத் தொடர்ந்து ஹிந்து இணைய தளங்களில் தோலுரிக்க வேண்டும். எதிர்கொள்ளும் முறைப்பாடு எப்படி என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சற்றும் தயக்கமே இல்லாது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய கார்யம்.

    6.மாற்று மத அடிப்படை வாதக்குழுக்களின் பயங்கரவாதப் போக்குகள் சமூஹங்களைப் பிளக்கும் அடிப்படை வாதப்போக்குகள் பிரிவினைவாதத்திற்குத் துணைபோகும் போக்குகள் இவற்றையெல்லாம் சொல்வது எவ்வளவு அவசியமோ அந்த அளவு அவசியம் மாற்று மதத்தவரில் பெரும்பான்மை சஹோதரரிடம் காணப்படும் சமரசப்போக்கைக் கொண்டாடுவது.

    7. ஹிந்துக்களுடன் இணக்கமாக வாழ முனையும் மாற்று மதத்தவரின் மாண்பை ஹிந்துக்கள் போற்றுவது ஹிந்துக்களுக்கு மட்டுமன்று ஹிந்துஸ்தானத்தில் அமைதியுடன் வாழ விரும்பும் ஒவ்வொரு ப்ரஜைக்கும் நன்மை பயக்கும் விஷயம். இன்று தேசத்திற்கு மிகவும் தேவையான விஷயம்.

    8. மாற்றுமதத்தவரின் பயங்கரவாதப் போக்குகள் எந்தளவுக்குப் பேசப்படுகிறதோ அதில் ஒரு பகுதியளவுக்காவது மாற்று மதத்தவரின் மத இணக்குப் போக்குகளை வெளிப்படையாக நாம் போற்ற விழைவது நன்மை பயக்கும்.

  5. ஸ்ரீ முஷ்ணம் பூவராஹப் பெருமாள் கோயில். கடலூர் ஜில்லாவில் உள்ளது.

    இது 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று அன்று. ஆனால் வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் மிக முக்யமான மற்றும் எல்லோராலும் மிகுந்த பக்தியுடனும் ஆர்ஜவத்துடனும் வழிபடப்படும் ஒரு கோவில்.

    மாசி மகத்தின் போது பெருமாள் அருகில் உள்ள அனைத்து க்ராமங்களுக்கும் சென்று பக்தர்களுக்கு தர்சனமளிப்பார். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கிள்ளை என்ற ஊருக்கருகில் உள்ள க்ராமமான தைக்கல்லில் பெருமாள் கடலாடுவது வழக்கம்.

    பூவராஹப்பெருமாள் மதங்களைக் கடந்து இவ்விடங்களில் அனைவராலும் வழிபடப்பெறுகிறார். தைக்கல்லில் அனைத்து இடங்களிலும் செல்லும் பெருமாள் அங்குள்ள முஸல்மான் சமூஹத்தினர் படைக்கும் படையல்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்பது சிறப்பு.

    அங்குள்ள மசூதியின் முன்னமும் பெருமாள் செல்லுதலும் அதன் தலைமக் காஜி பெருமாளுக்கு மாலைகள் மற்றும் பக்ஷணங்கள் சமர்ப்பித்தலும் இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. காஜி குரான்-ஏ-ஷெரீஃப் ஓதித் தன்முறைப்படிப் பெருமாளுக்குத் தன் மரியாதையைச் செலுத்துகிறார்.

    இரவில் புஷ்பப் பல்லக்கில் வாண வேடிக்கைகளுடன் பெருமாள் இக்ராமங்களில் சேவை சாதிக்கிறார்.

    அந்தப் பகுதியை ஆட்சி செய்த நவாபுக்கு தீர இயலா வ்யாதி வந்து துன்புற்றபோது அவரிடம் இரக்கம் கொண்ட ஒரு மாத்வ ப்ராம்மணர் பெருமாள் கோவிலில் தான் பெற்ற தீர்த்தம் மற்றும் துளசீதளத்தை அவருக்குக் கொடுக்கிறார். அதை மரியாதையுடன் ஏற்று உட்கொண்ட நவாப் சுகம் பெறுகிறார். அந்த நன்றிக்கடனுக்காக பல ஏக்கர் நிலத்தை அந்த மாத்வருக்கு (வெங்கட ராயர்?) நவாப் தான சாசனம் செய்துள்ளார். இன்று வரை மாத்வர்களிடம் அந்த நிலபுலன் கள் உள்ளன.

    மற்ற ஹிந்து தெய்வங்கள் அங்குள்ள முஸல்மான் களால் கொண்டாடப்படுவதில்லை. பின்னிட்டும் ஹிந்து முஸல்மான் இணக்கம் தமிழகத்தில் தளைப்பதற்கு இதை ஒரு உதாஹரணமாகச் சொல்லலாம். இது நான் சமீபத்தில் கேட்ட வ்ருத்தாந்தம். மேலும் இணையத்திலும் வாசித்து, இந்த சந்தர்ப்பத்தில் சொல்லப் பட வேண்டிய விஷயம் என்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    முஸல்மாணியர் பெருமாளுக்குப் படையல் செய்யும் சித்ரம் இதன் கீழ் இட்டுள்ளேன். பதிவாகவில்லையானால் தனியாக இணைய தளத்திற்கு அனுப்புகிறேன்.

    ஹேமாம்புஜ வல்லி சமேத பூவராஹப் பெருமாள் தமிழகத்தில் அனைத்து சமூஹ மக்களும் ஒருவருடன் ஒருவர் பரிவுடனும் அமைதியுடனும் வாழ அருள் புரிய இறைஞ்சுகிறேன்.

  6. இதுவரை இந்து இயக்கங்கள் அங்கு இல்லாமல் இருப்பது மனவருத்தத்தை அளிக்கிறது!! அங்கு உள்ள இந்து இளைஞர்களுக்கு நமது இந்து மத போதனை செய்ய வேண்டும். நல்ல மனிதர்களாக வாழ்ந்தால் மட்டும் போதாது வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். ஆம். நல்லவர்களாக வாழும் இந்துக்களை வல்லவர்கலாக்க வேண்டும்.

  7. நல்ல அறிக்கை. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டால் இன்னும் நிறைய பேரை சென்றடையும்.

  8. இந்த உண்மை அறியும் குழுவின் தலைவர் பெயரே ஏதோ கம்யூனிச ரசியப் பெயர் போல் உள்ளதைப் பார்த்தாலே இவர்கள் போகின்ற இடங்களிலெல்லாம் ‘ ஜாதி இந்த’ தலித் என்று பிரித்து பிரித்துத்தான் குறிப்பிடுவார்கள்.அதிலும் இவர்கள் ஜாதி இந்து என்று ஒரு சாராரையும் ‘ தலித் ‘ என்று இன்னொருவரையும் குறிப்பிடுவர். இது இவர்களின் பிரிவினைப் பார்முலா . இந்த மாதிரி குழுக்கள் நமது சமுதாயத்தைப் பிரிக்கும் வேலையைச் செய்வார்கள் முதலில் . அப்புறம் இறைத் தூதர்கள் அங்கி தரித்து பண மூட்டைகளுடன் வந்து ஞானஸ்நாணம் பண்ணி அவர்களுக்கு ஞானமேட்படுத்தி அவர்களை தேவனின் பிள்ளைகளாக்கி விடுவார்கள்.
    இப்படிப்பட்ட குழுக்களை மக்கள் புறம் தள்ள வேண்டும்.இந்த செய்திக்குரிய ஊரைப் பொருத்தவரை ஹிந்து முஸ்லிம்கள் இருவருமே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ளது தெரிகிறது.அதன் படியே இன்றளவும் நடந்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.இந்த பழனி பாபா வந்து ஆரம்பித்து விட்டுச் சென்றதையே இப்போது பாப்புலர் பிரன்ட் கட்சிக் காரர்களும் செய்கிறார்கள். இதை இந்த ஊர் இஸ்லாமியப் பெருமக்கள் உணர்ந்து கொண்டால் சரி.

  9. சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு நண்பர் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.தெருப்பெயர்களில் சாதிப்பெயர்கள் இருப்பதாலோ, மாவட்டங்களின் பெயர்களில் உள்ள தலைவர்களின் பெயரை எடுத்துவிட்டதாலோ, போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் உள்ள தலைவர்கள் பெயரை எடுத்துவிட்டதாலோ, சாதி சண்டைகள் குறையாது. பல்கலை கழகங்களின் பெயரில் தலைவர்கள் பெயர் இன்னமும் இருக்கிறதே , ஏனுங்க நீக்கவில்லை ? பள்ளி சான்றிதழ்களில் சாதிப்பெயர்கள் இருக்கும் வரை ஜாதி சண்டைகள் ஓயாது. மேலும் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களில் தலைவர்கள் பெயர் இருந்தால் சாதி சண்டை வரும் என்று சொல்லி, அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர் போன்ற தலைவர்களின் பெயரை நீக்கிய கருணாநிதி, பல்கலைகழகங்களின் பெயர்களில் ஒட்டிக்கொண்டுள்ள அரசியல் தலைவர்களின் பெயரை ஏனுங்க எடுக்கவில்லை ? எல்லாம் ஒரே பித்தலாட்டம் தான். சாதியை ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது, ஏனெனில் சாதிகளின் பெயரால் சலுகைகள் கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை, சாதிகளும், சாதி சங்கங்களும், சாதிகள் அடிப்படையிலான ஓட்டுவங்கிகளும் அரசியல்வாதிகளால் தொடர்ந்து வளர்க்கப்படுகின்றன. சாதிகளை ஒழிப்போம் என்று மேடைகளில் வீராவேச குரல் கொடுக்கும் பல தலைவர்கள் தான், ஒவ்வொரு தேர்தலிலும் , அந்த அந்த தொகுதியின் பெரிய சாதி என்ன என்று பார்த்து , சட்டசபை மற்றும் பார்லிமெண்டு தேர்தல்களில், அந்த பெரிய சாதி வேட்பாளரை நிறுத்துகிறார்கள். நமது இந்திய அரசியல் அமைப்பில், சாதிகளை ஒழிப்போம் என்று சூளுரை உரைப்பவர்கள் அனைவரும் ஒன்று விஷயம் புரியாதவர்கள் அல்லது பேமானிகள், பித்தலாட்டக்காரர்கள் மட்டுமே. பள்ளிகளுக்கு நிலம் மற்றும் கட்டிடங்களை நன்கொடையாக கொடுத்தவர்கள் , தங்கள் பெயரை, பள்ளிக்கு வைக்கவேண்டும் என்ற கண்டிஷனின் பேரில் தான் , நன்கொடை வழங்கினர். எனவே எந்த பள்ளியின் பெயரையும் மாற்ற முடியாது. அப்படி மாற்றினால், நன்கொடையாக பெற்ற நிலம் மற்றும் கட்டிடத்தை , நன்கொடையாளருக்கே திருப்பி கொடுக்கவேண்டும். இது நடக்கிற காரியம் அல்ல. அது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்று சிலர் சொல்வது போல, முதலில் நம் பல்கலைகழகங்களின் பெயருடன் ஒட்டியுள்ள , அரசியல் தலைவர்களின் பெயரை நீக்குங்கள் பார்க்கலாம். நம் தமிழகத்தில் சாதியை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் எல்லாமே ஒன்று புரியாதவர்கள் அல்லது பித்தலாட்டக்காரர்கள். நமது அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படாதவரை , இந்த பித்தலாட்டங்கள் தொடரும். சாதி சண்டைகள் வளர நமது அரசியல் அமைப்பு சட்டமே முக்கிய காரணம். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் பலரும் குழப்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *