ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10

<<< முந்தைய பகுதிகள்

பஞ்ச கோசங்களும் ஆத்மாவைப் போலத் தோற்றம் அளித்தாலும், அவை ஆன்மாவல்ல என்றும், ஆன்மா மூன்று சரீரங்களையும் தாண்டி அவைகளையும் உள்ளடக்கி உள்ளது என்றால், ஆத்மா எங்கு இருக்கிறது என்று இப்போது பார்ப்போம்.

[17]

सदा सर्वगतोsप्यात्मा न सर्वत्रावभासते |
बुद्धावेवावभासेत स्वच्छेषु प्रतिबिम्बवत् ||

ஸதா சர்வகதோப்யாத்மா ந சர்த்ராவபாசதே |
புத்தாவேவாவபாசேத ஸ்வச்சேஷு பிரதிபிம்பவத் ||

எங்குமே என்றும் இருப்பினும் ஆன்மாவும்
எங்குமே ஆன்மா இலகிலை – துங்கமாம்
புத்தியிலேயே பொலியும் நிழல் சொச்சமாம்
வத்துவில் தோன்றும் வகை.

ஆத்மாவானது எப்போதுமே எங்குமே நிறைந்து இருந்தாலும் எந்த இடத்திலும் ஆத்மா பிரகாசிப்பதில்லை. சுத்த ஸ்படிகம் போன்ற நிர்மலமான பொருட்களில் பிரதிபிம்பம் காட்சியளிப்பதைப் போல கூர்மையான, நுண்ணிய புத்தியிலேயே ஆத்மா பிரகாசிக்கும்.

atman_self_realizationஆத்மா எங்கும் உள்ளது, எல்லாவிடத்திலும் நிறைந்து இருக்கிறது என்றால் அதைப் பார்ப்பதற்கு ஏன் அவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று யாராவது கேட்டால் அது நியாயமானதுதானே? அது ஏன் எளிதாகக் காணப்படவில்லை என்றால் அதைத் தேடி அறிந்துகொள்ள முனைபவர் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். ஆத்மா ஒருவனுக்கு வெளியே உள்ள பொருள் என்றால் அதைத் தேடிக் கண்டுபிடித்து அவனிடம் கொடுத்து விடலாம். கேட்கும் அவனுள்ளே ஆத்மா இருப்பதை அவன்தானே கண்டுபிடிக்க முயல வேண்டும்? அப்படியே முயன்று பார்த்து ஒருவனால் அறிய முடியவில்லை என்றால், அவன் அதற்கு இன்னமும் தயாராகவில்லை என்று பொருள். அதாவது, மற்ற பொருட்களைத் தேடுவதுபோல அவன் ஆன்மாவை அறிவார்த்தமாகத் தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். ஒருவனது அறிவுக்கே ஒளி கொடுக்கும் அதை எப்படி அடைவது அல்லது உணர்வது என்று பார்க்கவேண்டும்.

சரி, எங்கும் நிறைந்து இருக்கிறது என்றால் ஏன் காணப்படவில்லை? காணப்படவில்லை அல்லது உணரவில்லை என்று தோன்றுகிறது அல்லவா, அப்படித் தோன்றுவது யாருக்கு என்று தெரிகிறதா? தெரியவில்லையே என்று சொல்லி வைராக்கியம் இல்லாதவர்கள் அந்த இடத்திலேயே நின்றுவிடுவார்கள். அப்படிச் செய்யாது மேலும் தொடரவேண்டும் என்பதுதான் முக்கியம். எப்படி ஒரு கண்ணாடி மேல் அழுக்கு படர்ந்திருந்தால் அதில் பிரதிபிம்பம் பார்க்க முடியாதோ, அந்த நிலைக்கும் சாதகனின் இப்போதைய நிலைக்கும் வித்தியாசம் இல்லை. பிரதிபிம்பம் தெரியாததால் அங்கு கண்ணாடி இல்லை என்றா சொல்லமுடியும்? அதன்மேல் உள்ள அழுக்கைத்தானே துடைக்க வேண்டும்? கண்ணாடிமேல் உள்ள அழுக்கைத் துடைப்பாதாவது ஓர் எளிதான வழி.

அப்போதுதான் வெட்டி எடுக்கப்பட்டு வந்த பளிங்குக் கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலும் பிரதிபிம்பம் அறவே தெரியாது. ஆனால் அதைத் தேய்க்கத் தேய்க்க அதன் பளபளப்பும் மெருகும் கூடிவரவே, பிரதிபிம்பம் நன்கு தெரியவரும். இருந்தும் கண்ணாடி போல் இருக்காது என்பது வேறு விஷயம். வெறும் கண்ணாடி என்றால் அழுக்கைத் துடைத்தால் போதும்; பளிங்குக் கல்லையோ வெகு நேரம் மிகவும் அழுத்தித் தேய்த்து பாடுபட வேண்டியிருக்கிறது. அதேபோல ஆன்மாவை மூடியிருக்கும் கோசங்களைப் பொருத்து வெவ்வேறு சாதகனின் முயற்சியும் அமையவேண்டும். ஆத்மா தானே பிரகாசிக்காது இருப்பதன் காரணம் அந்தக் கோசங்களே.

ஆத்மாவைப் பற்றிக் கேட்டு அறிவது வெறும் புத்தியளவிலே மட்டும்தான் என்று பார்த்தோம். அதை உணர்வதற்கு நாம் எடுக்கும் விசாரம், தியானம் போன்ற முயற்சிகள் தொடக்கத்தில் “நான்” என்ற எண்ணத்தோடு ஆரம்பிக்கப்படுவதுதான். இந்த “நான்” உடல், மனம் என்று தூலத்திலிருந்து நுண்ணிய வடிவான அகங்காரமாக மாறிச்் சென்று கொண்டிருக்கும். தியானத்தால் பக்குவப்பட்ட நிலையில் நிர்மலமான நுண்ணிய மனமானது தன்னுள் கிளம்பும் எண்ணங்களை கவனித்துக்கொண்டு இருக்கும். நம் கோசங்களுக்குத் தகுந்தாற்போல் அவ்வப்போது கிளம்பும் எண்ணங்களைத் தொடராமல், அந்த எண்ணங்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால் ஒரு நிலையில் கேள்வி எதுவும் கேட்காத, கவனம் ஒன்றையே கொண்டிருக்கும் நம் அறிவு மிகவும் நுண்ணியதாகும். அப்படிப் பழகப் பழக அந்த நுண்ணிய அறிவு எந்தவித முயற்சியும் செய்யாது தனது இயல்பான நிலையிலே நிற்கும்போது ஆத்மா தானே பிரகாசிக்கும் என்கிறார் சங்கரர்.

[18]

देहेन्द्रयमनोबुद्धिप्रकृतिभ्यो विलक्षणम् |
तद् वृत्तिसाक्षिणं विद्यादात्मानं राजवत्सदा ||

தேஹேன்த்ரயமனோபுத்திப்ரக்ருதிப்யோ விலக்ஷணம் |
தத்வ்ருத்திசாக்ஷிணம் வித்யாதாத்மானம் ராஜவத்சதா ||

உடல்கருவி உள்ளமொடு புத்தி மாயை
விடவேறு அவற்றின் விருத்தி – யுடனே
எவைக்குமே சாட்சியாம் என்றும் ஆன்மாவை
அவைக்கு அரசன் போல அறி.

தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி, அஞ்ஞானம் முதலான இவைகளின் தன்மைக்கு வேறானதாய், அவைகள் செய்யும் காரியத்தோடு அனைத்திற்குமே சாட்சி மட்டுமே ஆன ஆத்மாவை எப்போதும் அவைகளுக்கு அரசனைப் போல அறிவாய்.

“நான்” இந்திரியங்கள் இருக்கும் உடல் மட்டும் அல்ல, அதற்கும் மேலானவன்; அவைகளால் தெரியவரும் உலகத்தில் உள்ளவைகளைப் பற்றிய எனது எண்ணங்களின் தொகுப்பான மனதிற்கும் மேலானவன்; எனது எண்ணங்களை வகைப்படுத்தி, தொகுத்து அவைகளினின்றும் பல உருவகங்களை உருவாக்கிச் செயல்படும் எனது புத்தியாகிய அறிவுக்கும் மேலானவன் என்று தூலத்திலிருந்து நுண்ணிய நிலைக்கு “நான்” செல்லச் செல்ல ஓர் அமைதி கிடைக்கிறது. அந்த அமைதியில் நான் ஆழ்ந்து இருக்கும்போது, நான் இருக்கிறேனா என்ற சந்தேகமா வரும்? நான் இருப்பதால்தானே, எனது அந்த அமைதி நிலையையும் அனுபவிக்க முடிகிறது. மெதுவாக அந்த நிலையை விட்டு, நான் அங்கு வந்த வழியிலேயே பின்னோக்கிச் சென்றாலும் அமைதியில் இருக்கும் நான்தானே அப்போதும் இருப்பேன்? முன்பு அமைதியில் ஆழ்ந்த “நான்” இப்போது ஒரு சாட்சியாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

upanishad1

எப்போது புத்தி அடங்கி உலகினைப் பற்றி அறிவிக்காது, நமது இருப்பைப் பற்றி மட்டுமே அறிய வைக்கிறதோ அப்போது உள்ள “நான்” எனும் உணர்வு அப்போது மட்டும் அல்லாது, எப்போதும் உள்ள தனது இயல்பே என்று உணர்ந்து, தனது எல்லா நிலைகளிலும் அப்படியே ஒருவன் இருப்பதுதான் ஞானம் அடைவது அல்லது முக்தி பெறுவது என்று சொல்வார்கள். அந்த நிலையில் ஒருவனுக்கு உலகம் என்று தனியாகத் தெரியாது; எல்லாம் தானே என்று உணரப்படும். அதனால் உலக காரியங்களில் ஈடுபடும்போதும் தனக்கே எல்லாம் செய்துகொள்வது போலவே உணரப்படும். அதனால் உலகமும், உலகில் உள்ளவைகளும் தெரிந்தாலும் அதை வேறாகப் பார்க்க மாட்டான். எப்போது உலகம் என்ற ஒன்று தனியாகத் தெரிகிறதோ அப்போது தன்னையும், தன்னைத் தவிர உலகில் உள்ள அனைத்தையும் வேறு வேறாகவேப் பார்க்கும் மனநிலை வளரும்.

நடக்கும் அனைத்தையும் வெறும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசனை, ஆழ்ந்த அமைதி நிலைக்கு ஒப்பாக இங்கு சொல்கிறார். ஓர் அரசனின் கண்காணிப்பில்தான் அனைவரும் தத்தம் வேலைகளை செய்கின்றனர். அதேபோல் உடல், மனம் இவைகளைக்கொண்டு நடக்கும் உலக காரியங்களை ஆத்மா ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது பழைய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தால், அந்தப் படம் எடுக்கப்பட்ட போது நம்மை நாமாக உணர்ந்த மாதிரித் தானே இப்போதும் நம்மை உணர்கிறோம்? நமது உடல் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் எப்போதும் நம்மை நாமாகத்தானே உணர்கிறோம்? அந்த உணர்வில் எந்த மாற்றமும் இல்லையே? அப்படியானால் வேறு மாதிரி இருப்பது எது என்று சிந்தித்துப் பாருங்கள்.

[19]

व्यापृतेष्विन्द्रयेष्वात्मा व्यापारिवाविवेकिनाम् |
दृश्यतेsभ्रेषु धावत्सु धावन्निव यथा शशी ||

வ்யாப்ருதேஷ்விந்த்ரயேஷ்வாத்மா வ்யாபாரிவாவிவேகினாம் |
த்ருஷ்யதேப்ரேஷு தாவஸ்து தாவன்னிவ யதா ஷஷி ||

கருவிகளின் தொழில் கண்ட அவிவேகி
கருத்தன் போன்று ஆன்மாவைக் காண்பான் – துரிதமாய்
ஓடும் மேகம் கண்டு உணர்விலி சந்திரனே
ஓடுகிறான் என்பதை ஒத்து.

ஆகாயத்தில் வேகமாக ஓடும் மேகங்களைப் பார்த்த பகுத்தறிவில்லாத ஒருவன் சந்திரனே வேகமாகப் போகிறது என்று சொல்வதைப்போல, ஐந்து கர்ம இந்திரியங்களின் மூலம் செய்யப்படும் செய்கையைப் பார்த்து உள்ளதையும் இல்லாதையும் பிரித்துப் பார்த்து அறியமுடியாதவன் ஆன்மாவே செயலில் ஈடுபடுவதாக நினைப்பான்.

உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது. நாம் பயணம் செய்யும் ரயில் வண்டி வழியில் ஒரு ஸ்டேஷனில் நின்றுகொண்டு இருக்கும்போது, பக்கத்துத் தண்டவாளத்தில் உள்ள மற்றொரு ரயில் எதிர்ப்புறமாகக் கிளம்பினால் நமது வண்டியே கிளம்பிவிட்டது போலத் தோன்றுவது நமது அனுபவம்தானே? அதேபோல வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் நகரும்போது, அவைகளின் பின்னால் உள்ள சந்திரன் நகர்வதுபோல் நமக்குத் தோன்றும். அதை நன்கு கவனித்துப் பார்ப்பவனுக்குத்தானே எது நிலை கொண்டுள்ளது, எது நகர்கிறது என்று தெரியும்? அதே போல, உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்து அறிய முடியாதவன், ஆன்மாவின் சந்நிதானத்தில் உடலின் கர்ம இந்திரியங்களால் நிகழும் நிகழ்ச்சிகளை ஆன்மாவே ஈடுபட்டுச் செய்வதாக நினைக்கிறான்.

ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டிய ஆவலோ, நிர்ப்பந்தமோ இருக்கிறது. அதனால் அவன் அந்த வேலையைச் செய்கிறான். ஆவலோ, நிர்ப்பந்தமோ எனக்கு இல்லை, தன்னிச்சையாகச் செய்கிறேன் என்று சொல்லி, தான் எப்போது வேண்டுமானாலும் அதை நிறுத்திக் கொள்ளலாம் என்று ஒருவன் சொல்லலாம். அங்கும் இச்சை என்பது ஆவலே, அவன் வேலையை நிறுத்தாது செய்து கொண்டிருக்கிறான் என்பதும் அவனது ஆவலின் நுண்ணிய வடிவமே. ஏனென்றால் அவன் அந்த வேலையைச் செய்யாது இருந்தால், அந்த வேலையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பான். வேலை செய்யப்பட்டால் அது தூல வடிவிலும், வேலையைப் பற்றி யோசனை மட்டும் செய்து கொண்டிருந்தால் அது நுண்ணிய வடிவிலும் இருக்கிறது என்றுதான் பொருள். ஆக ஒன்று நடக்காமல் அதைப் பற்றிய எண்ணங்கள் இருக்கிறது என்றால் அப்போது அவனது மனமும் புத்தியும் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இப்படியாக உலக விஷயங்கள் அனைத்தும் மனம், புத்தி அளவிலே நடந்து கொண்டிருந்தாலும், ஆத்மா இருப்பதாலேயே மனமும் புத்தியும் இயங்குவதால் உலகில் நடப்பதைப் பார்ப்பவர்கள் ஆத்மாவே அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். நடப்பவைகளுக்கு ஆத்மா ஒரு சாட்சியே. ஒவ்வொருவரின் மனமும், புத்தியும் வெவ்வேறாக இயங்குவதாலேயே பேதங்கள் தெரிகின்றன. ஆனால் அவைகளுக்கும் ஆதாரமான ஆத்மா அளவில், பேதங்கள் ஏதும் இல்லாது அனைவரும் ஒன்று என உணர்வார்கள். மனமும் புத்தியும் இயங்கும் அளவில் அந்த ஒற்றுமையைக் காண்பது அரிது.

[20]

आत्मचैतन्यमाश्रित्य देहेन्द्रियमनोधियः |
स्वक्रियार्थेशु वर्तन्ते सूर्यालोकं यथा जनाः ||

ஆத்மசைதன்யமாஸ்ரிதய தேஹேந்த்ரியமனோதியஹ |
ஸ்வக்ரியார்தேஷு வர்தந்தே சூர்யாலோகம் யதா ஜனாஹா ||

ஞானவொளி ஆன்மாவை நண்ணி உடல் பொறிகள்
மானதம் புத்தியிவை மன்னு தமக்கு – ஆன தொழில்
ஆற்றிடும் ஆதித்தன் அவிர் ஒளியால் மக்கள் தொழில்
ஆற்றுவது போலும் அறி.

sunrise_on_oceanசூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல, ஞானப் பிரகாசமான ஆத்மாவைச் சார்ந்து உடல், இந்திரியங்கள், மனம், புத்தி முதலானவைகள் தமக்குண்டான தொழில்களான விஷயங்களில் பொருந்தி செயல்படும் என்று அறிவாயாக.

ஆன்மாதான் எல்லாம், அது இருப்பதால்தான் மற்றதெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமானமாக சூரியன் உதித்ததும் அனைவரும் தத்தமது தினப்படி வேலைகளை ஆரம்பித்துச் செய்துகொண்டு இருப்பதைக் காட்டுகிறார். அந்த வேலைகள் நடப்பது சூரியன் உதித்தபின்தான் என்பதால் அவைகளுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்? அவை செய்யப்பட்டாலும், செய்யப்படாமலே இருந்தாலும் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு வந்தது? ஒன்றுமில்லை அல்லவா, அதேபோல ஆன்மா இருப்பதால்தான் இந்திரியங்களும், மனமும், புத்தியும் இயங்குகின்றன என்றாலும் அவைகளின் இயக்கத்தால் ஆன்மா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. உலகையே ஒளிர்விக்கும் சூரியனைப் போல, எல்லா இந்திரியாதிகளையும் ஒளிர்வித்தாலும் ஆன்மா நடக்கும் எல்லாவற்றிற்கும் வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மா எந்த இயக்கத்திலும் பங்கு கொள்வதில்லை.

இந்திரியங்கள், மனம், புத்தி இவைகளில் எதனை எடுத்துக்கொண்டாலும் மனிதர்களிலும் சரி மற்ற உயிர்வாழ் இனங்களிலும் சரி ஒன்றுக்கொன்று வேற்றுமைகள்தான் இருக்கும். மற்ற இனங்கள் அதைப் புரிந்துகொள்ளாது போனாலும், மனிதனும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஒரு சமத்துவப் பார்வை வளர வாய்ப்பே இல்லை. அது வளர வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் ஆன்மா ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வதையும், அதுவே அனைத்தின் அடிப்படை உண்மை என்று தெளிந்து கொள்வதையும் மனித வளர்ச்சியின் பரிமாணங்களில் ஒன்று எனக் கொள்ளலாம்.

உலகியவாழ் இனங்களில் இப்போது நாம் காணும் மனித இனம் தோன்றியது சுமார் இருபது முப்பது ஆயிரம் ஆண்டுகள் முன்புதான் என்றாலும், அவர்களின் பரிணாம வளர்ச்சி சுமார் முன்னூறு ஆயிரம் ஆண்டுகள் முன்பே தோன்றிவிட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கால கட்டத்தில்தான் நம் மூளை தற்போதைய அளவிலும், திறமையிலும் வளர்வதற்கு ஏற்றபடி மண்டையோடுகள் முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதற்கு முன் தோன்றிய மனிதனைப் போன்று இரண்டு காலில் நடந்த மூன்று இனங்களின் மண்டையோடுகள் அளவில் சிறியதாகவே இருந்திருக்கின்றன. அதேபோல பேசும் தன்மைக்கு உண்டான குரல் வளமும், அமைப்பும் படிப்படியாகவே வளர்ந்திருக்கின்றன. பேசும் திறமையும், மூளை வளர்ச்சியுமே மற்ற வளர்ச்சிகளுக்கு ஆதாரமாய் இருந்திருக்கின்றன. மனிதனைப் போன்ற மற்ற இனங்களில் ஒன்றிரண்டு மனித இனத்துடன் கூடவே வளர்ந்து இறுதியில் மேலும் வளராது அழிந்தும் போய்விட்டன. இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது உடலுக்கு மூளையும் அதனால் இயங்கும் இந்திரியங்களும் எவ்வளவு முக்கியமோ அப்படியே மனித இனத்தின் இனி வரக்கூடிய பரிணாம வளர்ச்சிக்கு, அவனையும் உள்ளடக்கிய அனைத்து ராசிகளுக்குமான உயிரையும் தாண்டிய பொதுவான ஒரு அடிப்படை அமைப்பு தேவை என்பதும், அதுவே அனைத்தையும் உள்ளடக்கும் ஆத்மா என்றும் நாம் கொள்வது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆத்மா இல்லையெனில் நாம் இல்லை என்பதை விட வேறு எதுதான் உண்மையாய் இருக்க முடியும்? மேலும் அதற்குக் காரணம் வேண்டுமானால், அனைத்து ராசிகளிலும் இப்படியாக யோசிக்கக் கூடிய இனம் மனித இனம் ஒன்றுதான் என்பதைச் சொல்ல முடியும். அதே சமயம் பிரபஞ்சத்தையும், தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அறிந்தாலும் தான்தான் பரிணாம வளர்ச்சியின் ஏணியில் இறுதியாக இருக்கிறான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாதும் இருக்கிறான். அது தவிர ஆத்மாவை உணர்ந்து வாழ்ந்து காட்டிச் சென்ற சில ஆன்றோர்களையும் அவன் அறிந்துள்ளான். அதனால் அவனது தினசரி அனுபவங்களையும் தாண்டி மேலும் வளர்வதற்கான காரணக் கூறுகள் இருப்பதும் அவனுக்குத் தெரிகிறது.

(தொடரும்)

2 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10”

  1. ஆத்மபோதம் படிக்க தேனாக இனிக்கிறது. ஆனால் மனத்தினை கட்டுப்படுத்துவது என்பது முடிந்த காரியம் தான் . ஆனால் பூர்வஜன்ம அருள் இருந்தால் தான் சாத்தியம். திரு இராமனுக்கு நம் நன்றிகள்.

  2. ஒருவன் ஆண்மமலர்ச்சி அடைந்தபிறகு எவ்வாறு அவன் வாழ்கையை நடத்தவேண்டும் ( இல்லறவாசி )

    பதில் மிகவும் அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *