ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11

adi_sankara_with_sunசீவராசிகளின் பரிணாம வளர்ச்சி எனும் ஏணியின் உச்சியில் ஒருவேளை மனிதன் இல்லாது போனாலும், சுற்றுமுற்றும் பார்த்து அவன் அறிந்தவைகளில் அந்த ஏணியின் மேல்நிலைகளில் தான் இருப்பது அவனுக்குக் கண்கூடு. அவன் அந்த நிலையில் இருப்பதாலும், மேலும் அந்த வளர்ச்சிக்கு அவன் உதவலாம் என்பதாலும், அதற்கு உதவவேண்டிய கடமை தனக்கு இருப்பதை அவன் உணர்கிறான். அதனால் உந்தப்பட்ட அவன் அனைத்து சீவராசிகளையும் உள்ளடக்கி ஒரு சமத்துவப் பார்வையை வளர்க்கும் ஆன்மா எனும் பேரறிவைப் பெறுவதே தனது பிறப்பின் பயன் என்று, உலகில் அப்படி வாழ்ந்து காட்டிச்  சென்ற ஆன்றோர்களின் மூலம் அறிகிறான்.உலகில் மற்ற விஷயங்களை அறிவது சாதாரண அறிவென்றும், பிறப்பின் பயனை உணர்வதே பேரறிவு என்றும் தெளிவு பெற்ற அவன், அதனை அடைய முயற்சிக்கும் போது ஒரு முமுக்ஷு ஆகிறான்.

 

 

21. देहेन्द्रियगुणान्कर्माण्यमले सच्चिदात्मनि |

अध्यस्यन्त्यविवेकेन गगने नीलतादिवत् ||

 

தேஹேந்த்ரியகுணான்கர்மாண்யமலே சச்சிதாத்மனி |

அத்யஸ்யந்த்யவிவேகேன ககனே நீலதாதிவத் ||

 

தேகம் பொறிகள் திகழ் குணங்கள் வினைகள்

ஆகுமிவை தூய சச்சிதான்மாவில் – மோகத்தால்

கற்பிப்பர் சுத்த ககனத்தில் நீலமுதல்

கற்பித்தல் போலக் கருது

 

(நிறமற்ற பரிசுத்தமான ஆகாயத்தில் நீலம் போன்ற வர்ணங்கள் இருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதுபோல, தூய்மை நிறைந்த சச்சிதானந்த சொரூபமான ஆத்மாவில் உடல், ஐம்பொறிகள், அவைகளினால் வரும் குணங்கள், நல்வினை, தீவினை ஆகிய இவை எல்லாவற்றையும் பகுத்தறிவில்லாத அவிவேகிகள் கற்பனை செய்துகொள்வார்கள் என்று தெரிந்துகொள்.)

 

நமது உண்மையான நிலையை உணர்வதற்கு உடல் ஒரு கருவி என்று முன்பு பார்த்தோம். அந்த உடல் உலகில் இயங்கும் போது நாம் பிறந்தது, வளர்ந்தது, பார்ப்பது, கேட்பது போன்ற இயக்கங்களும், நம் வளர்ச்சியில் உள்ள இளமை, முதுமை போன்ற நமது நிலைகளும், ஆன்மாவைச் சார்ந்தது என்று ஆன்மாவைப் பற்றி அறியாத பாமரர்கள் கருதுவார்கள். அதில் உள்ள தவறை ஓர் உவமை மூலம் இங்கு சங்கரர் விளக்குகிறார். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் நிறம், குணம் இவை எதனையும் கொண்டிராதபோதும், அதைப் பற்றி அறியாதவன் ஆகாயம் நீல நிறத்துடன் கூடியது என்று எப்படிக் கருதுவானோ அதே போல அவிவேகி ஆன்மாவை குணத்தோடு சம்பந்தப்படுத்தி தவறாக அறிகிறான். தொலைவில் இருப்பதால் ஆகாயம் நீல நிறமாகக் காணப்படுகிறது என்பதை விவேகி அறிவதுபோல ஆன்மாவையும் அவன் உடல், இந்திரியங்களுடன் சம்பந்தப்படுத்தாது அவை அனைத்துக்கும் மூல காரணம் என்றும் அறிகிறான்.

 

இளமையும் முதுமையும் உடலைச் சார்ந்த நிலைகள் போல, பார்த்தல், கேட்டல் போன்றவை இந்திரியங்களைச் சார்ந்த தொழில்கள். இவைகளை ஆன்மாவுடன் தொடர்புகொண்டு பார்ப்பது ஆன்மாவைப் பற்றிய அறியாமையால். விவேகம் எனப்படுவது தேக, இந்திரியங்களின் குணங்களையும், ஆத்ம சொரூபத்தின் லக்ஷணத்தையும் பிரித்து அறிவதே ஆகும். ரமணர் கூறுவதுபோல் “உள்ளதை உள்ளபடி உள்ளத்தே உள்ளுவதே” உண்மை ஆகும்.

 

 

22. अज्ञानान्मानसोपाधेः कर्तृत्वादीनि चात्मनि |

कल्प्यन्तेsम्बुगते चन्द्रे चलनादि यथाम्भसः ||

 

அஞ்ஞானான்மானசோபாதே கர்த்ருத்வாதீனி சாத்மனி |

கல்ப்யந்தேம்புகதே சந்த்ரே சலனாதி யதாம் பஸஹ ||

 

மனமாம் உபாதி மருவு கர்த்தத்வ

இனமாய் அவற்றை அறிவின்மை – எனும் மயலால்

ஆன்மாவில் கற்பிப்பர் அப்பு அலைவை நீர் தோன்றும்

வான் மதியில் கற்பிக்குமாறு

 

(வானத்தில் அசையாது நிற்கும் நிலவானது, நீரில் பிரதிபலிக்கும்போது அந்தத் தண்ணீரின் அசைவுகளால், நிலவே அசைவதாகப் பார்க்கப்படுவது நமது கற்பனை என்பதுபோல, மனமாகிய உபாதியால் ஏற்படும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்னும் அறியாமை மயக்கத்தினால் நடக்கின்ற அனைத்தையும் ஆத்மாவினுடையதாக நினைக்கின்றனர்.) Atman

 

முன்பு இதே போன்ற வேறோர் உவமையை நாம் பார்த்தோம். சூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொருவனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணிக்கிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையா நிலவின் அசைவுகள் என்ற இந்த உவமையால் சங்கரர் விளக்குகிறார்.

 

நீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.

 

உபாதி என்பது ஆதாரம் ஆகும். இங்கு மனம்தான் ஆதாரம் என்பதால் “மனமாகிய உபாதி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிலவின் பிரதிபிம்பம் நீரில் தோன்றுவதுபோல, ஆன்மாவின் சைதன்ய ஒளிக்கதிர்கள் நமது மனம் மூலம் நமக்குப் பிரகாசிக்கிறது. அதாவது ஆன்மாவே மனத்தை ஒளிர்விக்கிறது. எப்படி உடல் நமக்கு ஒரு தூலக் கருவியோ, அதேபோல மனம் நமது நுண்ணிய கருவியாகும். இவைகளின் மூலமே நாம் ஆன்மாவை அறியவருகிறோம். ஆனாலும் அவைகள் கருவிகளே அன்றி அவைகளே முடிவானவை அல்ல.

 

எப்படி நீரின் குணங்களும், நிறங்களும் ஆகாயத்தில் இருக்கும் நிலவைப் பாதிக்காதோ, அதேபோல மனதின் விசேஷங்கள் ஆன்மாவைப் பாதிக்காது. ஆனால் நீரில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பம் பாதிக்கப்படுவதுபோல, மனதளவில் உருவாகும் எண்ணங்களும் செயல்களும் வினைச்சக்கரச் சுழற்சியால் பாதிக்கப்படும். அப்படிப் பாதிக்கப்படுவது மனமே அன்றி ஆன்மாவல்ல. ஆனாலும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாதவர்களுக்கு மனத்தின் சலனங்களும் ஆன்மாவின் சலனங்களாகவே தோன்றும். ஆக வினையை ஆற்றுவதும் அதன் பலன்களை அனுபவிப்பதும் மனம் எனும் உபாதியே அன்றி, ஆன்மாவல்ல. இதனை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள ஒருவன் ஆன்மாவை நோக்கி தன் முழு கவனத்தையும் திருப்ப வேண்டும்.

 

 

23. रागेच्छासुखदुःखादि बुद्धौ सत्यां प्रवर्तते |

सुषुप्तौ नास्ति तन्नाशे तस्माद्बुद्धेस्तु नात्मनः ||

 

ராகேச்சாசுகதுக்காதி புத்தெள சத்யாம் ப்ரவர்த்ததே |

சுஷுப்தோ நாஸ்தி தன்னாஷே தஸ்மாத்புத்தேஸ்து நாத்மனஹ ||

 

விருப்பு ஆசை துன்பு இன்பு மேலும் இவை போல்வ

இருப்பவாம் புத்தி இருப்பால் – இருப்பில்லாத்

தூக்கத்தில் இன்று அதனால் சொந்தம் அவை புந்திக்கே

ஓர்க்குக ஆன்மாவிற்காகுமோ

 

 

(அன்பு, ஆசை, துன்பம், இன்பம் தவிர இவை போன்றவை எல்லாமும் நமது புத்தியினால் உண்மையில் இருப்பன போன்று தோன்றுகின்றன. புத்தி செயல்படாது இருக்கும் நம் உறக்கத்தில் அவை எதுவுமே தோன்றாததனால், அவைகள் புத்தியை மட்டுமே சார்ந்தவை ஆகும். அவை ஆத்மாவிற்கானது என்று சொல்ல முடியுமோ என்று கூர்ந்து ஆராய்ந்து அறிக!)

 

ஒருவனது வாழ்க்கை அனுபவங்களைப் பார்த்தால், அவைகளை சில பொருட்களின் மேல் இருந்த அவனது விருப்பங்களால் விளைந்தவைகளாகவும், சிலவற்றின் மேல் அவனுக்கு இருந்த வெறுப்புகளால் விளைந்தவைகளாகவும் காண்பான். இப்படியாக அவனது மனத்தில் தோன்றிய விருப்பு-வெறுப்பு எண்ணங்களுக்கு ஏற்ப அவனது உடல் மற்றும் மனதளவில் அவைகள் இன்பமோ துன்பமோ கொடுத்திருந்தன. அத்தகைய மனமும் அதை இயக்கும் அவனது புத்தியும் அவனுக்கு எழும்பாத அவனது ஆழ்ந்த உறக்கத்தில், அவனுக்கு விருப்பமோ வெறுப்போ எதுவும் தோன்றுவது இல்லை.

 

உறக்கத்தில் இல்லாத விருப்பும், வெறுப்பும் ஒருவனது நனவு மற்றும் கனவு நிலைகளில்தான் தோன்றுகின்றன. முழு நினைவோடு உள்ள நிலையான நனவு நிலையில் ஒருவனுக்குத் தூல உடலும் அது சம்பந்தமான அனுபவங்களும் அமைகின்றன. ஒருவனது கனவு நிலையில் அவனுக்கு நுண்ணிய உடலும், அதற்கேற்ற அனுபவங்களும் நேர்கின்றன. நாம் காணும் கனவு அனுபவங்கள் கனவு நிலை இருக்கும் வரையில் நனவு அனுபவங்களைப் போலவே நீடிக்கின்றன. ஆகையால் இவ்விரு அனுபவங்களுக்கும் தகுந்தபடியான வெவ்வேறு உடலும், மனமும் அதை இயக்கும் புத்தியும் தேவைப்படுகின்றன. கனவு நீங்கியவுடன் அங்கு இருந்ததெல்லாம் நீங்கியும், ஆனால் நனவில் உள்ளவைகள் மீண்டும் தொடர்ந்து வருகின்றன என்ற ஒரு வித்தியாசத்தைத் தவிர நனவு-கனவு அனுபவங்களில் வேற்றுமை ஏதும் இல்லை. கனவிலிருந்து விடுபட்டு நாம் நனவு நிலை திரும்பியதும்தான் நாம் அதுவரை கண்டது நிலையற்ற ஒன்று என்று தெளிகிறோம். அத்தகைய நனவு மற்றும் கனவு நிலைகளில்தான் நமது விருப்பு-வெறுப்பின் காரணமாக இன்ப-துன்பம் அடைகிறோம்.

 

ஆனால் ஆன்மாவோ எங்கேயும், எப்போதும் உள்ளது எனப்படுகிறது. அதனால் விருப்பும், வெறுப்பும் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், அந்த அனுபவங்கள் நமது உறக்க நிலை உட்பட எல்லா நிலைகளிலும்  தோன்றவேண்டும். ஆனால் நமது உறக்க நிலையில் நமக்கு உடலைப் பற்றிய உணர்வோ, மனமோ, புத்தியோ கிடையாது என்றாலும், “நன்கு உறங்கினோம்” என்று பின்பு சொல்லக்கூடிய அளவிற்கு ஓர் ஆனந்த அனுபவம் மட்டும் இருக்கிறது. அந்த அனுபவம் நனவு-கனவு நிலைகளில் உள்ளதுபோல விருப்பு-வெறுப்பு காரணமாக அமைவதில்லை. ஆகையால் விருப்பு-வெறுப்பு குணங்களையும், இன்ப-துன்ப நிலைகளையும் புத்தியுடன் கூடத்தான் தொடர்புபடுத்திச் சொல்லமுடியுமே அல்லாது, எப்போதும் இருக்கும் ஆன்மாவுடன் எப்படி சம்பந்தப்படுத்திச் சொல்ல முடியும்? அவைகள் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், உறக்கத்திலும் இன்ப-துன்பங்கள் நேர வேண்டும். ஆனால் அப்போது நமக்கு ஆனந்த அனுபவம் ஒன்றே அமைகிறது.  ஆன்மா எப்போதும் உள்ளது என்றால், உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்த அனுபவம் நனவு நிலையிலும் இருக்க வேண்டும் என்றாகிறது. அப்படியென்றால் அதை நாம் ஏன் உணர்வதில்லை என்றுதானே பார்க்கவேண்டும்?

 

 

24. प्रकाशोsर्कस्य तोयस्य शैत्यमग्नेर्यथोष्णता |

स्वभाव: सच्चिदानन्दनित्यनिर्मलतात्मनः ||

 

பிரகாஷோர்கஸ்ய தோயஸ்ய ஷைத்யமக்னேர்யதோஷ்ணாதா |

ஸ்வபாவஹ சச்சிதானந்தநித்யநிர்மலதாத்மானஹ ||

 

அருக்கன் தனக்கொளி அப்புக்குத் தட்பம்

எரிக்கு உட்டணமும் இயல்பாய் – இருக்கையெனச்

சத்து சித்து ஆனந்தம் சார் நித்தம் சுத்தம் இயல்பு

ஆன்மாவுக்கு என்று ஓர்

 

(சூரியனுக்குப் பிரகாசமும், நீருக்குக் குளிர்ச்சியும், நெருப்புக்குச் சூடும் அதனதன் இயல்பாக அமைவது போல, ஆன்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் இருப்பதோடு நித்தியமாயும், நிர்மலமாயும் இருப்பதே அதன் இயல்பு என்பதை உணர்வாயாக.)

 

இங்கு ஆன்மாவின் லக்ஷணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. “சத்” என்றால் இருப்பு, “சித்” என்றால் அறிவு, “ஆனந்தம்” என்றால் பேரின்பம். இவைகள் அனைத்தையும் கொண்டுள்ளது என்பது தவிர, ஆன்மா இங்கு உண்டு அங்கு இல்லை என்றில்லாது, இப்போது இருக்கிறது அப்போது இருக்காது என்றில்லாது எங்கும், எப்போதும் உள்ளதால் அது நித்தியமாயும், அது சுத்தமாய் எந்தவித கலப்பும் இல்லாததால் நிர்மலமாயும் இருப்பது அதன் இயல்பு. ஆதலால் இவை அனைத்தையுமே ஆன்மாவிலிருந்து பிரித்து அறியமுடியாது. சூரியனிடமிருந்து பிரகாசத்தையும், நீரிலிருந்து தண்மையையும், நெருப்பிலிருந்து உஷ்ணத்தையும் அதனதனிடமிருந்து எப்படி தனியே பிரித்து அறியமுடியாதோ, அதேபோல ஆன்மாவிடமிருந்தும் மேற்சொன்ன அதன் தன்மைகளைப் பிரித்து அறியமுடியாது.

 

கூட்டத்தில் ஒருவர் தொப்பி போட்டுக்கொண்டிருந்தால், அவரை “தொப்பி போட்டிருப்பவர்” என்று தற்காலிகமாகக் குறிப்பிட்டுச் சொல்வதை “தடஸ்த லக்ஷணம்” என்று சொல்வார்கள். அதேபோல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்றிவ்வாறான தொழில்களைக் குறிப்பிட்டு இறைவனை வர்ணிப்பதும் “தடஸ்த” லக்ஷணப்படியே தான். இவைகளை இறைத்தன்மையில் இருந்து பிரித்து அறியமுடியும். ஆனால் இறைவனின் “ஆன்ம மயம்” என்ற ஸ்வரூப லக்ஷணத்தை அப்படிப் பிரித்து அறியமுடியாது. அப்படிப் பிரித்து அறியமுடியாத ஒன்றை அப்பொருளின் “தர்மம்” என்று குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. அதாவது நீரின் தர்மம் குளிர்ந்து இருப்பதும், நெருப்பின் தர்மம் வெப்பமாயிருப்பதும் போல, சச்சிதானந்தமும், நித்யத்வ நிர்மலமும் ஆத்மாவிலிருந்து பிரித்து அறியமுடியாத தர்மங்கள் ஆகும்.

 

நீருக்குக் குளிர்விக்கும் குணத்தையும், நெருப்பிற்குச் சுடும் குணத்தையும், காற்றுக்கு சலித்துத் திரட்டும் குணத்தையும் யார் கற்பித்தார்கள்? அவை இயற்கையாகவே அதனதன் குணமாக இருப்பதுபோல, மனத்திற்கு ஒரு பொருளைப் பற்றும் குணமும், பற்றிய பொருளை அனுமானிக்கும் குணம் புத்திக்கும், அனுமானித்த பொருளை தனது என்று அபிமானிக்கும் குணம் அகங்காரத்திற்கும், அபிமானித்த பொருளை சிந்திக்கும் குணம் சித்தத்திற்கும் இருப்பது இயற்கையாக நிகழ்வதே. இவை எதையுமே அடக்க அடக்க அவை மேலும் மேலும் எழும்பி ஒருவனை வதைக்கும். அவை அனைத்தையுமே இயல்பாக இருக்கும் ஆன்மாவின் சந்நிதானத்தில் நிகழும் நிகழ்வே என்றும், அதற்கும் தன் இருப்பிற்கும் தொடர்பில்லை என்று ஆன்மாவை முன்னிறுத்தி இருப்போமானால் நமது உள்ள நிலை காலப்போக்கில் தெளிவாகும்.

 

 

25. आत्मनः सच्चिदंशश्र्व बुद्देर्वृत्तिरिति द्वयम् |

संयोज्य चाविवेकेन जानामीति प्रवर्तते ||

 

ஆத்மனஹ சச்சிதம்ஷச்ரவ புத்தேவ்ருத்திரிதி த்வயம் |

சம்யோஜ்ய சாவிவேகேன ஜானாமீதி ப்ரவர்த்ததே ||

 

சத்து சித்து என்னத்தகும் ஆன்ம அம்சமும்

புத்தி விருத்தி புகல் ஒன்றும் – ஒத்த

இரண்டோடு மூடத்தால் யான் அறிகின்றேன் என்று

ஒருத்தன் தொழில் படுவன் ஓர்

 

il_fullxfull.214417904(“சத்” உருவம் எனப்படும் ஒருவனது இருப்பும், “சித்” உருவம் எனப்படும் ஒருவனது அறிவும் நமக்குத் தெரிகின்ற ஆன்ம சைதன்ய வெளிப்பாடுகள். அவைகள் நம் புத்தியின் விருத்தியுடன் இணைந்து அறியாமையினால் “நான் அறிகின்றேன்” என்று ஒருவன் செயல்படுகிறான் என்பதை அறிவாயாக.)

 

ஒருவன் ஒரு செயலில் ஈடுபட்டாலும், ஈடுபடாவிட்டாலும் அவனது இருப்பைப் பற்றி எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. அதேபோல நல்ல விதமாகவோ, அல்ல வேறு விதமாகவோ இயங்கும் அறிவு  ஒவ்வொருவனுக்கும் இருப்பதையும் நாம் நன்கு அறிகிறோம். இவை இரண்டுமே ஆன்மாவின் வெளிப்பாடுகள்தான் என்றாலும், அவை அவனவன் புத்தியினால் இருப்பதாகவும், இயங்குவதாகவும் அறியப்படுவது ஒருவனது அஞ்ஞானத்தினால் தான். ஆத்மா பார்ப்பதும் இல்லை, பார்க்கப்படுவதும் இல்லை. “சத்”தாகிய ஆன்மா “நான்” என்று சொல்லாது; “ஜடம்” ஆகிய உலகமும் தன்னை “நான்” என்று அறிவிக்காது. ஆத்மாவின் “சத்சித்” அம்சத்தையும், புத்தியின் விருத்தியில் ஒன்றையும் ஒன்றாக இணைத்து இடையில் தோன்றும் ஜீவன் ஒருவன் “நான் அறிகின்றேன்” என்று செயல்படுகிறான். இவ்வாறு சித்தையும், ஜடத்தையும் இணைத்து உருவாகும் ஜீவனை “சித்ஜடக் கிரந்தி” என்று சொல்வார்கள்.

 

ஆத்மா புத்தியில் பிரதிபலிக்கும்போது அதன் “சத்-சித்” சொரூபம் புத்திக்கே உள்ளதாகத் தோன்றுகின்றது. அந்த புத்தியே தானாக ஒருவன் நினைக்கும்போது அவனுக்கு அகந்தை உண்டாகிறது. அப்போது அவன் தான் வேறு, தான் காண்பதால் உலகம் வேறு என்று நினைக்கிறான். இதனால் உலகம் உள்ளதை உள்ளபடி உணராமல், ஒவ்வொருவனும் தனக்கே உரிய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் ஞான விசாரத்தினால் அஞ்ஞானம் அழிந்த ஜீவனுக்கு, ஜீவ பாவம் அழிந்து ஆன்ம சொரூபம் ஒன்றே விளங்குகிறது. அந்த நிலையை அனுபவத்தில் உணர்வது ஒன்றே பிறந்த ஒவ்வொரு சீவராசியின் வாழ்க்கைப் பயணத்தின் இறுதி நிலை.

(தொடரும்)

2 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11”

  1. ஆன்ம போதம் இனிமை. தந்த தமிழ் இந்துவுக்கும், திரு இராமன் அவர்களுக்கும் நமது நன்றிகள். உணவு, உடை, இருப்பிடம் இவை பற்றிய சிந்தனையே பெரும்பான்மையோர் மனதில் எப்போதும் இருப்பதால், ஆன்மீக சிந்தனை , ஆன்மீக நாட்டம் என்பது எப்போதும் மூன்றாம் பட்சமாக தான் இருக்கும். ஆனால் இந்த ஆன்மீக நாட்டம் இளம் வயதிலேயே வருவதற்கு நல்ல கொடுப்பினை இருந்தால் தான் முடியும். எல்லோரும் தனலட்சுமி ( பணம், காசு, சொத்து ) பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்தால் , எப்படி ஆன்மிகம் என்ற குகைக்குள் நுழைய முடியும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *