விதியே விதியே… [நாடகம்] – 3

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

அந்த பிருமாண்ட மாளிகை, சூரியனை மறைத்தபடி வானுயர உயர்ந்து நிற்கிறது. அதன் முன்னால் எண்ணற்ற கம்பங்கள் ஊன்றப்பட்டிருக்கின்றன. சில கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. சில கம்பங்கள் பாதி பூமியில் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னாலும் சிலர் விறைப்பாக நடந்து வந்து நிற்கின்றனர். தங்கள் கைகளில் இருந்த கொடிகளைக் கம்பத்தில் கட்டுகின்றனர். அவர்கள் கட்டி முடித்த சிறிது நேரத்தில் சங்கொலி கேட்கிறது. உடனே அனைவரும் தத்தமது கொடிகளை ஏற்ற ஆரம்பிக்கின்றனர். சில கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கின்றன. சில கொடிகள் தரையோடு தரையாக மண்ணில் விழுந்து புரளுகின்றன. மேலும் சில கொடிகள் ஏராளமான ஒட்டு வேலைபாடுகளுடன் இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னால் இருக்கும் நபர்களும் தத்தமது கொடிகளை ஏற்றி கம்பீரமாக சல்யூட் அடிக்கின்றனர்.

குழந்தைகள் தொட்டிலைத் தள்ளியபடி செல்கின்றனர். உள்ளே ஒரு பரந்து விரிந்த அரங்கில் ஏராளமான டி.விகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு காட்சி. ஒரு டி.வியில் மக்கள் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு விறகைக் கூட்டி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொன்றில் பாலைவன வெய்யிலில் ஒற்றை ஈச்ச மரத்தின் நிழலில் ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டு களைப்புடன் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சில இடங்களில் அதி நவீன கட்டடங்களில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு விண்வெளிக் கலத்தின் பாகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் ஆதிவாசிகள் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு ஈட்டியால் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் ஒரு பகுதி வெளிச்சத்தில் இருக்கிறது. இன்னொரு பகுதி இருளில் மறைந்திருக்கிறது. ஒரு பகுதியில் கூச்சலும் குழப்பமும் மிகுதியாகக் கேட்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படும் அந்தப் பகுதியை குழந்தைகள் கூர்ந்து பார்க்கின்றனர். அது ஈழம்..! மெள்ள மெள்ள புதை மணலில் அழுந்திக் கொண்டிருக்கிறது. இலங்கையும் நீரில் பனிக்கட்டி பாதி முங்கி பாதி மிதந்தபடி இருப்பதுபோல் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே மிதந்தபடி இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இங்குமங்கும் ஓடுகின்றனர்.

பிற பகுதியில் இருக்கும் மக்கள் அங்கு நடப்பது குறித்து எந்த சலனமும் இல்லாமல் தத்தமது வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மங்கலான விளக்கொளியில் காதல் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். திராட்சை ரச குப்பிகளை உயர்த்தி சியர்ஸ் சொல்லிக் குடிக்கின்றனர். விமான நிலையங்களில் வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகின்றனர். ஈஸி சேரில் நன்கு சாய்ந்தபடி தேநீர் அருந்தியபடியே பேப்பர் படிக்கின்றனர்.

பக்கத்தில் தமிழ்நாட்டில் மேடையில் ஒரு பாயை விரித்து வைத்திருக்கிறார்கள். முதலில் ஒரு குழு மேடை ஏறுகிறது. மற்ற குழுவினர் வரிசையாக மேடை ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். முதல் குழு தனது பேனரை விஸ்தாரமாக பின்னால் கட்டுகிறது. பக்க வாத்திய கலைஞர்கள் சூழ தோளில் மஞ்சள் துண்டும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்த பாகவதர் அரங்கத்தினரை வணங்கிவிட்டு அமர்கிறார். பாடுவதற்கு முன் மைக்கை சரி செய்து கொள்கிறார். ஃபிளாஸ்கில் இருந்து சூடான பாலை எடுத்துக் குடித்து தொண்டையை இதப்படுத்திக் கொள்கிறார். பெருங்குரலில் ஒப்பாரி பாட ஆரம்பிக்கிறார். பக்க வாத்தியக் கலைஞர்களை ஓரக் கண்ணால் உற்சாகப்படுத்தியபடியே இழுத்து இழுத்து ஒப்பாரி பாடுகிறார்.

அவர் பாடி முடித்ததும் சபா காரியதரிசி வந்து பாடிய குழுவுக்கு பொன்னாடை போர்த்துகிறார். அவர்கள் இடது பக்கமாக இறங்கிச் செல்லும்போது இன்னொரு குழு வலது பக்கமாக மேடை ஏறுகிறது.

அந்த கோஷ்டி வந்து தனது பேனரை மாட்டுகிறது. இவர்கள் சாதாரண வேட்டி அணிந்து கொண்டிருக்கிறார்கள். வட்டமாக ஒருவரை ஒருவர் கட்டிப் படித்தபடி அமர்ந்து கொள்கிறார்கள். நெஞ்சிலும் தலையிலும் அடித்தபடியே ஒப்பாரி பாடுகிறார்கள். கேமரா ஒன்று இந்த இசை நிகழ்ச்சியை கவர் செய்து கொண்டிருக்கிறது. வட்டமாக அமர்ந்துவிட்டதால் கறுப்பு சால்வை போர்த்திய தலைவருடைய முகம் கேமராவில் சரியாகப் பதிவாகாமல் இருக்கிறது. கேமரா மேன் அதை சொல்லவே தலைவர் எழுந்து முழங்காலிட்டு அமர்ந்து கொள்கிறார். இப்போது ஃபிரேமுக்குள் தன் முகம் சரியாக வருகிறதா என்று கேட்டு உறுதி செய்து கொள்கிறார். கேமராமேன் ஃவியூஃபைண்டரில் பார்த்து தலைவருடைய முகம் தெளிவாகத் தெரிவதை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டு கட்டை விரலை உயர்த்தி காட்டுகிறார். ஒப்பாரி தொடர்கிறது.

sri-lanka-army-executions1

ஈழத்தில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள். கதறுகிறார்கள். புதைகிறார்கள். ஒவ்வொருவரும் தான் தப்பிப்பதற்காக அடுத்தவரை காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அப்படிச் செய்தும் எந்தப் பலன் இன்றி அவர்களும் புதைகிறார்கள். நாற்காலியில் அமர்ந்து மது அருந்தியபடி அதை வேடிக்கை பார்க்கும் சிலர் சிறு கட்டைகளையும் சின்ன கயிறுகளையும் எடுத்துப் போடுகிறார்கள். புதைகுழியில் சிக்கியவர்கள் அதைப் பிடிக்க முயன்று மேலும் குழியில் புதைகிறார்கள். கரையேறும் சிலரையும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு புதை மணலில் வீசுகிறார்கள்.

குழந்தைகள் இதையெல்லாம் பார்த்தபடியே சுற்றி வருகிறார்கள். அந்தப் பக்கமாக வரும் கோட் சூட் போட்ட ஒருவர் : குழந்தைகளே நீங்களெல்லாம் யார்..? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?

குழந்தை : நாங்களெல்லாம் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள்.

ஐ.நா. தலைவர் : கொல்லப்பட்டவர்களா..? எந்தவிதத்தில்.

குழந்தை : அப்படியென்றால்..?

தலைவர் : அதாவது வெள்ளத்தில் இறந்தீர்களா..? வறட்சியில் இருந்தீர்களா..? போரில் இறந்தீர்களா..? நோயினால் இறந்தீர்களா..? ஊட்டச் சத்து குறைவினால் இறந்தீர்களா..?

குழந்தை : இது தெரிந்து என்ன ஆகப்போகிறது..?

ஐ.நா. தலைவர் : அப்படி இல்லை குழந்தைகளே. என்னவிதத்தில் இறந்தீர்கள் என்று தெரிந்தால்தான் அதற்குத் தகுந்த நிவாரணம் வழங்க முடியும்.

குழந்தை : நிவாரணமா..?

ஐ.நா. தலைவர் : ஆமாம். ஒவ்வொரு இழப்புக்கும் ஒவ்வொரு நிவாரணம் என்று தீர்மானித்திருக்கிறோம். (ஒரு ரிஜிஸ்டரை எடுத்துக் காட்டுகிறார்.) பார் இதில் எல்லாம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் இறந்தால் உணவுப் பொட்டலங்கள், துணிமணிகள் கொடுப்போம். நோயில் இறந்தால் மருந்து, மாத்திரைகள் கொடுப்போம். வறுமையில் வாடினால் நோட்டு, புத்தகங்கள் கொடுப்போம். இந்த ஆண்டில் இதுவரை ஐந்துகோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து 111 ரூபாய்க்கு மருந்துகள் கொடுத்திருக்கிறோம். இது போன ஆண்டு கொடுத்ததைவிட ஒரு கோடியே 33 ஆயிரம் ரூபாய் அதிகம். 49 கோடியே 89 லட்சத்து 93 ஆயிரத்து 756 ரூபாய்க்கு ரொட்டித் துண்டுகள், பழச்சாறுகள் கொடுத்திருக்கிறோம்.

குழந்தை (குறுக்கிட்டு) : ஆனால், நாங்கள் நிவாரணம்கேட்டு வரவில்லை…

தலைவர் (சிறிது அதிர்ச்சி அடைபவர் சுதாரித்துக் கொண்டு) : பிறகு..?

குழந்தை : நீதி கேட்டு வந்திருக்கிறோம்.

ஐ.நா. தலைவர் : நிதியா… எவ்வளவு வேண்டும். கேளுங்கள். சர்வ தேசத் தலைவர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்து உடனே கொடுத்துவிடுகிறோம்.

குழந்தை : நிதியில்லை. நீதி

ஐ.நா. தலைவர் : நீதியா… அப்படியென்றால் (சிறிது குழம்புபவர்)ஓ… நீதியா..? அதுவும் நாங்கள் வழங்கவே செய்கிறோம். எங்கள் சர்வதேச நீதிமன்றத்தால் தீர்க்கப்படாத பிரச்னைகளே கிடையாது. சரி… உங்கள் வழக்கு என்ன..?

குழந்தைகள் : அப்பாவிகளான நாங்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டோம்.

ஐ.நா. தலைவர் : அது மிகவும் வேதனை தரும் விஷயம்தான்…

குழந்தைகள் : எங்களைக் கொன்றவர்களை விசாரணை செய்ய வேண்டும்.

ஐ.நா. தலைவர் : மிகவும் நியாயமான விஷயம்தான். சொல்லுங்கள் யாரை விசாரிக்க வேண்டும்.

குழந்தைகள் : உங்களைத்தான்.

தலைவர் (அதிர்ந்துபோய்) : என்னது… என்னையா..? எதற்கு..?

குழந்தைகள் : இலங்கையில் கண் முன்னே ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியபோது, ஆயிரம் ஆண்டுகள் கழித்து உருகப் போகும் பனிப் பாறைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவந்ததற்கு…. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது கொத்து குண்டுகள் வீசப்பட்டபோது மவுனமாக அதைப் பார்த்து ரசித்து வந்ததற்கு. பின் வாசல் வழியாக பேரழிவு ஆயுதங்களை விற்றுவிட்டு, முன் வாசல் வழியே உலர் உணவுப் பொட்டலங்களை அனுப்பிக் கொண்டிருந்தமைக்கு. ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளியின் மூச்சு முட்டல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு… இன்னும் சொல்லப்போனால், அந்த ஆக்ஸிஜன் சிலிண்டரின் வால்வை ரகசியமாக மூடிய குற்றத்துக்கும் சேர்த்து உங்களை கூண்டில் ஏற்றி விசாரிக்க விரும்புகிறோம்.

SL_Tamil_children_and_westernerஐ.நா. தலைவர் : நீங்கள் நீதி கேட்டு வந்த இடம் சரிதான். ஆனால், குற்றவாளியாக நீங்கள் குறிப்பிடுவதுதான் சரியில்லை. உண்மையில் ஒரு நாட்டின் இறையாண்மை இன்னொரு நாட்டினால் பாதிப்புக்கு உள்ளானால்தான் ஐ.நா.சபை தலையிட்டு தீர்த்துவைக்க முடியும். உள்நாட்டுக் கலவரத்தை அல்லது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் ஒரு  பிரச்னையை பொது அரங்கில் விவாதிக்கத் தயாராக இல்லையென்றால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

குழந்தை : ஒரு நாட்டின் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவினரால் அடக்கி ஒடுக்கப்பட்டால் நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்களா..? உலகம் முழுவதிலும் அமைதி என்பதுதானே ஐ.நா. கொடியில் இடம்பெற்றுள்ள ஆலிவ் இலைகள் சொல்லும் செய்தி…

ஐ.நா. தலைவர் : ஆமாம்.

குழந்தை : அதர்மம் எங்கு தலை தூக்கினாலும் ஐ.நா. அவதாரம் எடுத்து அதை அழிப்பதுதானே முறை.

ஐ.நா. தலைவர் : அதுவும் உண்மைதான்.

குழந்தை : இதில் இறையாண்மை குறித்த கேள்வி எங்கு வருகிறது. ஒரு மனிதன் மனிதனாக நடந்து கொள்ளும் வரைதானே அவனுக்கு அதற்கான மரியாதை கொடுக்க முடியும். அவன் தவறு செய்து குற்றவாளியாகிவிட்டால் மனிதனுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே… ஒரு அரசு தன் மக்களை அமைதியாக வாழ வழி செய்து தரும்போதுதான் அதற்கு இறையாண்மை இருக்கும். அது தன் கடமையில் இருந்து தவறிவிட்டால் அதைத் திருத்த வேண்டியது ஐ.நா.வின் பொறுப்புதானே.

ஐ.நா. தலைவர் : கோட்பாட்டு அளவில் இது என்னவோ உண்மைதான். ஆனால்,  நடைமுறையில் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் குடும்பத் தலைவனுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள். அவர்தான் அவர்களுக்கான நல்லது கெட்டதைப் பார்த்துச் செய்து தரவேண்டும். பஞ்சாயத்துத் தலைவருக்கு குடும்பத் தலைவரைவிட அதிகாரம் உண்டுதான். ஆனால், குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் குடும்ப விஷயத்தில் தலையிட முடியாது.

ஒரு நாட்டில் நடக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை சண்டை என்பது குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி சண்டையைப் போன்றது. தான் சரியாக மதிக்கப்படவில்லை என்று நினைக்கும் மனைவிக்கு பிரிந்து செல்ல உரிமையும் உண்டு. பிரியவிடாமல் தடுத்துத் தக்க வைக்கும் அதிகாரம் கணவனுக்கும் உண்டு. இருவர் பக்கத்திலுமே அவரவருக்கான நியாயங்கள், தர்மங்கள் இருக்கும். இந்தக் குடும்பத் தகராறில் ஒரு பஞ்சாயத்து தலைவரால் என்னதான் செய்ய முடியும். “சண்டை போடாம சேர்ந்து வாழுங்க’ என்று அறிவுரை மட்டுமே சொல்ல முடியும். அதைத்தான் செய்தோம்.

சமமாக நடத்தப்படவில்லை என்று நினைக்கற ஒரு பிரிவினருக்கு தங்களுடைய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளவும் யார் தங்களை ஆள வேண்டும் என்றும் தீர்மானிக்கும் உரிமையும் நிச்சயம் உண்டு. அதேபோல் ஒரு தேசத்துக்கு அதன் இறையாண்மை, ஒற்றுமையை எப்பாடுபட்டாவது கட்டிக் காப்பாற்றும் உரிமையும் உண்டு. இலங்கை விஷயத்துல யார் பக்கம் சரின்னு எங்களுக்கே ஒண்ணுமே புரியலையேம்மா… ரொம்பவும் குழம்பித்தான் இருக்கோம். ரெண்டு பிரிவினரும் சேர்ந்து வாழுங்கன்னுதான் சொல்றோம். அந்த நம்பிக்கைலதான் நல்லெண்ணக் குழுக்களை அனுப்பினோம். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்து பார்த்தோம்.

குழந்தை : கூடவே ஆயுதங்களையும் அது வாங்கத் தேவையான பணத்தையும் இரு தரப்புக்கும் அனுப்பியும் வந்தீர்கள். அல்லவா..?

தலைவர் (புருவத்தை நெரித்தபடி) : என்ன சொல்கிறீர்கள்..? ஆயுத விற்பனைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

குழந்தை : ஆயுதங்களை விற்கும் நாடுகளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல முடியுமா உங்களால்.

ஐ.நா. தலைவர் : அது என்னவோ முடியாதுதான்.

குழந்தை : அப்படியானால், ஆயுதங்களை விற்று அழிவை ஏற்படுத்தும்  நாடுகளுக்கு ஆதரவும் தருவீர்கள். ஆயுதங்கள் விற்ற காசில் இருந்து அவர்கள் உங்களுக்குப் போடும் பிச்சையை எடுத்துக்கொண்டு அந்த ஆயுதத்தால் அழியும் மக்களுக்கு நிவாரணமும் செய்வீர்கள் இல்லையா..? சாராயம் குடித்து அழிபவரின் குழந்தைகளுக்கு சாராயக் கடை அதிபரிடம் பிச்சை எடுத்து, நோட்டு புத்தகம் வாங்கித் தருவீர்கள். இல்லையா..?

ஐ.நா. தலைவர் : அப்படியில்லை குழந்தாய்… வளர்ந்த நாடுகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்வதால்தான்  வளரும் நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன என்பது வேடிக்கையான வாதம். எந்தவொரு இடத்திலுமே ஆயுதங்கள் கிடைக்கிறது என்பதனால் சண்டை மூளுவதில்லை. சண்டை மூள்வதனால்தான் ஆயுதங்கள் தேடிப் பெறப்படுகின்றன. மேற்கு நாடுகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யாவிட்டாலும் வளரும் நாடுகளில் சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஏ.கே.47ம் போபார்ஸும் இல்லையென்றால் ஈட்டியையும் கத்தியையும் எடுத்து வெட்டிக்கொண்டு மடிவார்கள்.

குழந்தை : வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்ட வளர்ந்த நாடுகள் செய்யும் தந்திரங்கள்தானே இவையெல்லாம்.

ஐ.நா தலைவர் : அப்படியில்லையம்மா. வளரும் நாடுகளில் சண்டை நடப்பதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது, அதிக மக்கள் தொகை, சொந்த நாட்டு நலனில்  அக்கறை அற்ற  அரசியல்வாதிகள், சமூகத்தின் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்காமல் அதிகாரத்துக்கு அடியாளாகப் பணிபுரியும் அறிவுஜீவிகள் மற்றும் ஊடக வர்க்கம், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் இவைதான் பிரச்னைக்கு மூலகாரணம். இதனால்தான் அந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதை  அந்த நாட்டில் உள்ள பிரிவினை சக்திகள் பெரிதுபடுத்திக் கொள்கிறார்கள், குரங்கு தன் புண்ணைத் தானே சொரிந்து சொரிந்து பெரிதாக்கிக் கொள்வதைப் போல். என்ன… வளர்ந்த நாடுகள் இப்போது ஆயுத உற்பத்தியிலும் முன்னணியில் இருப்பதால் வளரும் நாட்டினர் அந்த ரெடிமேட் பீரங்கிகளை வாங்கி சுட்டுக் கொண்டு மடிகிறார்கள். இல்லையென்றால், நிதானமாக தங்கள் விஞ்ஞானிகளைக்கொண்டு சுதேசி ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டு செத்து மடிவார்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், மேற்கு நாடுகள் ஆயுதங்கள் தருகின்றன என்றால் வளரும் நாடுகள் ஏன் அதை வாங்குகின்றன என்ற ஒரு எளிய கேள்வியும் இருக்கத்தானே செய்கிறது.

United Nations Secretary-General Ban shakes the hand of Sri Lankan President Rajapaksa at the presidential residence in Kandyகுழந்தை :  இப்படி அலட்சியமாகப் பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை. நீங்கள் உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்படி வலியவர்களுக்கு வெண் சாமரம் வீசக்கூடியவர் என்பது தெரியாமல் போய்விட்டது.

ஐ.நா. தலைவர் : அப்படியில்லையம்மா… ஒருவர்  தவறுகளையெல்லாம் தான் செய்துவிட்டு மற்றவர் மேல் பழியைப் போட்டால் எப்படி நியாயம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என் கண்மணியே.

குழந்தை : ஆனால், நீங்கள் இதே அளவுகோலை எல்லா இடங்களிலும் கடைப்பிடிப்பதில்லையே.

ஐ.நா. தலைவர் : எதனடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள். ஐ.நா. மாளிகையின் முன்னால் பறக்க விடப்பட்டிருக்கும் தேசக் கொடிகள் சமத்துவத்தை அல்லவா எடுத்துக்காட்டுகின்றன.

குழந்தை : ஆனால், கொசோவாவில் இது போன்ற ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நீங்கள் தலையிட்டு சுய ஆட்சி உருவாக்கிக் கொடுத்தீர்களே… அதை எந்த அடிப்படையில் செய்தீர்கள். அல்பேனியர்களுக்கு ஒரு நியாயம்.  ஆசியர்களுக்கு ஒரு நியாயமா..? போஸ்னியா, கிழக்கு தைமூர், இரான் இராக், குவைத் என எத்தனை இடங்களில் தலையிட்டிருக்கிறீர்கள்.  அவ்வளவு ஏன்… இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு கேவலம் இரண்டாயிரத்து சொச்சம் பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து தீவிரவாதிகளை மட்டுமல்ல அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளையும் அழிப்போம் என்று களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தி வருகிறீர்களே…

இலங்கையில் அதைவிட நூறு மடங்கு அவலங்கள் நடந்த பிறகும் இறையாண்மை, குடும்பத் தலைவர் என்று கதையளந்து கொண்டிருக்கிறீர்களே… அமெரிக்காவில் கேவலம் வெறும் இரண்டு கட்டடங்கள் மட்டுமே இடிந்து விழுந்தன. இங்கோ ஒரு தேசமே நொறுங்கிக் கிடக்கிறதே..? ஐ.நா. என்பது உலக நாடுகளின் பிரதிநிதியா..? அல்லது அமெரிக்காவின் அடியாளா..?

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். .. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யாரும் ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்று தடுத்திருக்க வேண்டும். பண உதவிகள் செய்வதை நிறுத்தி இருக்க வேண்டும். ஐ.நாவின் சர்வதேச அமைதிப் படையை அனுப்பி இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வுக்கு வர கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். அதைச் செய்யாதவகையில் இந்த அழிவுகளுக்கெல்லாம் நீங்கள்தானே காரணகர்த்தாவாகிறீர்கள். ஒரு குடும்பத்துக்குள் வாய் வார்த்தையாக சண்டை நடந்தால் உங்களால் தலையிட முடியாதுதான். வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் மடிந்தால் தலையிட்டுத்தானே ஆகவேண்டும். கணவன் மனைவியைக் கொன்றால் அது குடும்பப் பிரச்னை என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது கொடூரம் அல்லவா..? ஒரு இனப் படுகொலையைத் தடுக்கும் அதிகாரம், கடமை உங்களுக்கு இல்லையா..?

ஐ.நா. தலைவர் : முதலில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். ஐ.நா. என்பது நீங்கள் நினைப்பதுபோல் சர்வ வல்லமை கொண்ட ஒரு அமைப்பு அல்ல. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கௌரவ அமைப்பு. அதன் அதிகாரம் என்பது பெயரளவிலான ஒன்றுதான்.

காஷ்மீரிலும் சுய ஆட்சி கேட்டு சண்டை நடந்துவருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் சண்டை நடைபெற்று வருகிறது. சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையில் சண்டை நடக்கிறது. இப்படியாக உலகின் பல இடங்களில் இத்தகைய பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் எங்களால் தலையிட முடிவதில்லை. எது பெரிய அளவுக்கு அச்சுறுத்தலாக வளரும் என்ற பயம் இருக்கிறதோ அதை மட்டுமே முன்னுரிமை கொடுத்து தீர்க்க முடியும். மற்றபடி ஒவ்வொரு நாட்டு மக்களின் நலனையும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் கவனிக்க வேண்டும். வழிகாட்டிகளால் வழியைக் காட்டத்தான் முடியும்.  போய்ச் சேரும் இடத்தை வாகனத்தை ஓட்டுபவர்தான் தீர்மானிக்கவேண்டும். ஒருவகையில் ஐ.நா. என்பது கடவுளைப் போன்றது. தவறுகளை அதனால் தடுக்க முடியாது.

இரண்டாவதாக, இலங்கையில் நடப்பது இனப் படுகொலை அல்ல. இனப்படுகொலை என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இன்னொரு பிரிவினரால் முற்றாகக் கொல்லப்படுவதுதான். இலங்கையில் தனி நாடு கேட்கும் வடக்கு கிழக்கு பகுதியில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்குத் தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பல பிரிவினர்  சிங்களர்களுடன் இணக்கமாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள். எனவே, இது இனப்படுகொலை அல்ல. ஒரு தேசத்தை பிரிக்க விரும்பும் தீவிரவாதிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வழிக்குக் கொண்டுவர முயன்று வருகிறது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பொதுவாக ஒரு வீட்டில் பிரச்னை என்றால் அண்டை வீட்டில் இருப்பவர் அதில் தலையிட்டுத் தீர்த்து வைப்பதுதான் நல்ல பலன் தரும். எல்லா பிரச்னையையும் ஆலமரத்தடிக்குக் கொண்டுவருவது நல்லதல்ல. அந்தவகையில் இந்தப் பிரச்னையை இந்தியாவிடமே ஒப்படைத்திருந்தால் அல்லது இந்தியா உரிய கவனம் செலுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்கவே செய்யாது.

குழந்தை : இந்தியா மட்டும் என்ன செய்திருக்க முடியும்..?

sri-lanka-genocide-tamil-civilian-interment-camp-vavuniya

ஐ.நா. தலைவர் : இந்தியா வல்லரசுக் கனவுகளுடன் இருக்கும் ஒரு தேசம். இலங்கை என்பது இந்தியாவின் இன்னொரு மாநிலம் போன்ற ஒரு நாடுதான். கலாசாரரீதியாகவும் பெரும் தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் பிறந்த புத்தர் தோற்றுவித்த மதம்தான் இலங்கையில் பெருமளவில் பின்பற்றப்படுகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இந்தியாவிலும் பெருமளவில் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெருமளவில் இலங்கையில் இருக்கின்றனர். இவ்வளவு உறவுகள் கொண்ட இந்தியா தன் வல்லரசுக் கனவுக்கு விடப்பட்ட முதல் சவாலாக, வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இலங்கை பிரச்னையில் தலையிட்டு அந்த பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லையே… காந்தி தேசம் தன் காலடியில் நடந்த வன்முறையைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டதே. இது தவறில்லையா..?

இன்னும் சொல்லப் போனால், அது சும்மா இருக்கவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணமே. முதலில் போராளிகளுக்கு பணமும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தது. அதன் பிறகு சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது ஒரு துர்பாக்கியமான சம்பவம்தான். ஆனால், அதற்காக, இப்படிச் செயல்பட்டிருக்கக்கூடாது. இலங்கை அரசு சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்ததும் இந்தியாவும் அலறி அடித்துக் கொண்டு ஆயுதங்களை சிங்கள அரசுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா மட்டும் இந்தப் பிரச்னையில் இன்னும் கொஞ்சம் நிதானமாக அதிக அக்கறையோடு செயல்பட்டிருந்தால் பிரச்னை எளிதாகத் தீர்ந்திருக்கும்.

குழந்தைகள் : அப்படியானால், உங்கள் மேல் எந்தத் தவறும் இல்லையா..?

ஐ.நா. தலைவர் : எமது கரங்களில் ரத்தக் கறைகள் படிந்ததில்லை. இனி ஒருபோதும் படியவும் போவதில்லையம்மா… இதோ பார் இப்போது கூட இலங்கைக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கோப்பில் கையெழுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

குழந்தைகள் சோர்வுடன் அந்த இடத்தை விட்டுச் செல்கின்றன.

ஐ.நா. தலைவர் : நில்லுங்கள் குழந்தைகளே… இவ்வளவு தூரம் வந்துவிட்டு எதுவும் சாப்பிடாமல் போனால் எப்படி? வாருங்கள்.

குழந்தை : “கொலைகாரன் வீட்டில் சாப்பிட்டாலும் சாப்பிடுவோமே தவிர குற்றத்தை ஒப்புக்காதவர்கள் வீட்டில்  கையை நனைக்க மாட்டோம்’

என்று சொல்லியபடியே குழந்தைகள் தொட்டிலைத் தள்ளிக்கொண்டு திரும்பிச் செல்கின்றன. சிறிது நேரம் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.நா. தலைவர் பிறகு, எதுவும் நடக்காததுபோல் தன் பணிகளில் ஈடுபடுகிறார்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

 

One Reply to “விதியே விதியே… [நாடகம்] – 3”

  1. //இந்தியா தன் வல்லரசுக் கனவுக்கு விடப்பட்ட முதல் சவாலாக வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இலங்கை பிரச்னையில் தலையிட்டு அந்த பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லையே//

    1987-ம் ஆண்டு சிறந்த ஏற்பாட்டை செய்து கொடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கைச்சாத்திட்ட இலங்கை-இந்திய ஒப்பந்த படி இலங்கை தமிழர் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை கொண்ட திட்டம். அதை நாசம் செய்தவர்கள் புலிகள். இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு வரை இந்தியா நடந்து கொண்ட முறை மிக தவறு. இந்த ஒப்பந்தத்தில் இருந்து இப்போ வரை பெரும்பாலும் சிறப்பாகவே இந்தியா செய்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *