இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

தொடர்ச்சி…

31.1 இறைவனிடம் செல்

போரும் முடிந்து விபீஷணனும் இலங்கையின் அரசனாக அரியணையேறி அமர்ந்துவிட்டான். இராமர் அயோத்தியிலிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களும் ஆகிவிட்டன. சரியாக பதினான்கு வருடங்களுக்கு மேல் ஒரு நாள் கூட அதிகமாகி விட்டால், தான் அரசப் பிரதிநிதியாகவும் இருக்க மாட்டேன், உயிருடனும் வாழமாட்டேன் என்று பரதன் சொன்னது இராமரின் ஞாபகத்தில் இருந்தது. தான் இப்போது இருப்பதோ இலங்கையில், செல்லவேண்டியதோ அயோத்திக்கு, இவ்வளவு தூரத்தை இருக்கும் குறைந்த காலத்தில் எப்படிக் கடப்பது என்று இராமருக்குக் கவலை வந்துவிட்டது.

குபேரனிடம் இருந்து ராவணனால் கவரப்பட்ட புஷ்பக விமானத்தில் செல்லலாமே என்று விபீஷணன் சொல்லி, அதை அவர்களின் உபயோகத்திற்குக் கொடுத்தான். இராமரும் அதற்குச் சம்மதித்து, விபீஷணனுக்கு பிரியாவிடை சொல்லிவிட்டு, சுக்ரீவனையும் வானரர்களோடு கிஷ்கிந்தாவிற்குப் புறப்படச் சொன்னார். பரதனை இராமர் உடனே பார்க்கவேண்டிய அவசரம் அவர்களுக்குப் புரிந்தாலும், இராமரைவிட்டுப் பிரிய மனமில்லாது, தாங்களும் அயோத்யா செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

अयोध्यां गन्तुमिच्छामः …. ।। 6.125.21 ।।

अयोध्यां, அயோத்யை गन्तुम्, செல்ல इच्छामः விரும்புகிறோம்.

நாங்களும் அயோத்யா செல்ல ஆசைப்படுகிறோம்.

ஒரு வியாபார உலகில்தான் வேலை முடிந்ததும் கூலி வாங்கிக்கொண்டு, வேலையாட்களும் முதலாளியும் அவரவர்கள் இடத்திற்கு பிரிந்துபோவார்கள். வானரர்கள் இராமருக்கு பணி செய்தது அப்படியல்ல. அது அன்பினால் விளைந்தது, பாசத்தினால் கட்டுண்டது. அங்கு கூலியும் இல்லை, அதனால் பிரியவும் மனமில்லை. பாசமானது பணி முடிந்தும் தொடர்கிறது. இராமராலும் அதை அறுத்து எறியமுடியாது. அயோத்யா வருகிறோம் என்றால் அழைத்துப் போக வேண்டியதுதான்.

இந்த ஸ்லோகம் மிகவும் பொருள் வாய்ந்தது. ஒவ்வொருவனின் லட்சியமும் அயோத்யா போவதுதான் என்பதையும் குறிக்கிறது. இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், “இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு” என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நாம் “ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அனயஹ” (43) என்று சொல்லும்போது “ராமா, நீயே எந்தன் வழி; நீயே துணை; நீ வழி காட்டுகிறாய்; நீ தவறான பாதையில் அழைத்துப் போகமாட்டாய்” என்றுதானே கோரிக்கையும், நம்பிக்கையும் வைத்து வேண்டுகிறோம்.

31.2 காக்க காக்க, கனிவுடன் காக்க

rama_returning_to_ayodhyaஇராமர் வானரர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்வதற்கு உடன்பட்டார். அயோத்தி செல்லும் வழியும், முன்பு அவர்கள் வந்த அதே வழியாய் இருக்கவே, விமானம் கடல் மீது பறக்கும்போது வானரர்கள் கடல் மீது கட்டிய பாலத்தையும், அக்கரையில் விபீஷணனைச் சந்தித்தபோது தாங்கள் இருந்த இடத்தையும் சீதைக்குக் காட்டிக் கொண்டே சென்றார். கிஷ்கிந்தை அருகே பறந்து கொண்டிருக்கும்போது, சீதைக்கு வானரர்களின் மனைவிமார்களும் அயோத்திக்கு வந்தால் நன்றாயிருக்குமே என்று சொல்ல விமானம் கீழே இறங்கியது.

தாரா மூலம் சுக்ரீவனும் சீதையின் விருப்பத்தை வானரப் பெண்மணிகளிடம் சொல்ல, அவர்களும் மிக்க மகிழ்ந்ததும் அல்லாமல் சீதையுடன் போவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியும் அடைந்தனர். உடனே அவர்கள் எல்லோரும் தங்கள் முகத்தை நன்கு கழுவி, அதற்கு வேண்டிய பூச்சுக்களும் போட்டுக்கொண்டு, தலை அலங்காரங்களைச் சரி செய்யும் வேலையிலும் இறங்கினர். நேரம் ஆகிறது என்று சுக்ரீவன் அவர்களை எவ்வளவு அவசரப்படுத்தியும் எதுவும் எடுபடவில்லை. சீதை ரொம்பப் பேரழகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அவர் முன் நாங்கள் போய் நிற்கவேண்டுமென்றால் ஏதாவது செயற்கையாகவாவது எங்களைக் கொஞ்சம் அழகுபடுத்திக்கொள்ள வேண்டாமா என்ற அவர்களின் கேள்வியே சுக்ரீவனுக்கு ஒட்டுமொத்த பதிலாக இருந்தது. சுக்ரீவனின் ஆணையோ, இல்லையோ எங்களுக்கு நேரம் போவதைவிட இது ரொம்ப முக்கியம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

नेपथ्यं विधिपूर्वेण कृत्वा चापि प्रदक्षिणम् ।
अध्यारोहन् विमानं तत् सीतादर्शनकाङ्क्षया ।। 6.126.32 ।।

सीता, சீதையை दर्शनकाङ्क्षया, காண வேண்டும் என்ற வேட்கையால் विधिपूर्वेण, முறைப்படி, नेपथ्यम, அலங்காரம் कृत्वा, செய்துகொண்டு विमानं, (புஷ்பக) விமானத்தை प्रदक्षिणम् , பிரதக்ஷிணம் चापि, செய்துவிட்டு तत्, அதில் अध्यारोहन् ஏறினர்.

சீதையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையால் அவர்கள் முறைப்படி அலங்காரம் செய்துகொண்ட பின்னரே, புஷ்பக விமானத்தை வலம் வந்துவிட்டு அதில் ஏறினார்கள்.

வால்மீகி விவரமாகத்தான் பெண்களின் மனதை அளந்து பார்த்திருக்கிறார் போலிருக்கிறது. மிக அழகான ஒரு பெண்மணி முன்னால் எந்தப் பெண்கள்தான் தன்னை கொஞ்சமாவது அழகுபடுத்திக் கொள்ளாமல் போட்டது போட்டபடி போய் நிற்பாள்? அது சரி, பெண்கள் உடை உடுத்துவதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் நேரம் செலவழிப்பதும், காத்திருக்கும் ஆண்கள் அவர்களை அவசரப்படுத்துவதும் என்று அன்றிலிருந்து இன்றுவரை இதே கதைதானா? ஏதோ நம் வீட்டில் தினம் தினம் நடப்பது போல் இருக்கிறதா உங்களுக்கு? கவலை வேண்டாம், கனிவோடு காத்திருங்கள்; இராமரையே காக்க வைத்தவர்கள் உங்களுக்கு மட்டுமா விதிவிலக்கு அளிப்பார்கள்?

31.3 மனிதனின் பார்வையில்

நேராகவும் வேகமாகவும் சென்ற அந்த விமானம், அயோத்தியின் எல்லையை காலாகாலத்தில் சென்றடைந்துவிட்டது. இராமர் வன வாசம் சென்றிருந்த அந்தப் பதினான்கு வருடங்களும், பரதன் அரியணை மீது உட்கார்ந்திருக்காவிட்டாலும் அவன்தான் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான். அந்தக் கால கட்டம் முழுவதும் இரு சகோதரர்கள் இடையேயும் எந்தவிதத் தகவல் பரிமாற்றமும் இல்லை. சாதாரணமாக ஒருவன் வாக்குக் கொடுத்து வெகுகாலம் ஆகிவிட்டால், அது அவனுக்கு மறந்தும் போயிருக்கலாம், அல்லது அது இனியும் செல்லுபடியாகுமா என்ற சந்தேகமும் வரலாம் என்பதை எவரிடமும் எதிர்பார்க்கக்கூடியதே. ஏனென்றால் காலம் மாறினால் காட்சியும் மாறலாமே! அப்படி இராமருக்குத் தோன்றியதாலும், தற்போது பரதனுடைய மனோநிலை எப்படி இருக்கிறது என்று தெரியாததாலும், அவர் அனுமனை அனுப்பி பரதனது நிலை எப்படி இருக்கிறது என்று கண்டறியச் சொன்னார். ஒரு வேளை பரதனுக்குத் தானே ஆட்சியில் தொடரலாம் என்ற நினைப்பு இருக்குமானால், அவருக்கு அயோத்திக்கு வந்து அந்த நிலையில் எந்த விதமான குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஆசை அறவே இல்லை.

…. पितृपैतामहं राज्यं कस्य नावर्तयेन्मनः ।। 6.128.16 ।।

पितृपैतामहं, தந்தைதந்தை பாட்டன் (வாரிசு வழி வந்த) राज्यं, ராஜ்ஜியத்தை
कस्य எவனுக்குத்(தான்) (அரசாள) मन:, மனசு न आवर्तयेत् , செல்லாது?

வாரிசு வழியாக வந்த ஆட்சிபாரத்தைச் சுமப்பதற்கு எவருக்குத்தான் ஆவல் இருக்காது?

இக்காலச் சட்டத்திலும் ஓர் ஒப்பந்தம் செல்லுபடியாகும் காலக்கெடு என்ற ஒன்று இருக்கிறது. அதுதவிர ஆளுமை உரிமை என்ற ஒரு சட்டமும், ஒருவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருந்தானானால் அவனுக்கு அந்த இடத்திற்கு உரிமை கோரவும் சில வரைமுறைகள் இருக்கின்றன. கைகேயி இராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்யக் கூறியதற்கும் மேற்சொன்னதுபோல இருந்த அந்தக் காலத்தைய சட்டம் அவளுக்குத் தெரிந்ததாலோ என்னவோ என்று சந்தேகப்படவும் இடம் இருக்கலாமே! அப்படியானால் இராமர் அரியணை ஏறுவதில் அத்தகைய சட்டம் குறுக்கே வரலாமே.

அதுபோன்ற சமயத்தில், அன்றும் இன்றும் வாக்குக் கொடுக்கும்போது நம்பத்தகுந்த சாட்சிகள் இருந்தால், எழுத்து மூலம் இல்லாவிட்டாலும் சட்டம் அதை ஒத்துக்கொள்ளும். ஆனால் நீதி, நேர்மை சார்ந்த வழிகளின்படி வாக்கு ஒன்றே போதும்; அதற்கு சாட்சியங்களும் தேவையே இல்லை. அதனால் பரதன் போன்றவர்களுக்கும் சாட்சியும் தேவையில்லை, வாக்கு ஒன்றே போதும் என்று இராமருக்கு நன்றாகவே தெரிந்தாலும், இங்கு அவர் சாதாரண மனிதன் போல, தான் செய்யப்போவதில் கொஞ்சம் கவனமாக இருக்கிறார் என்றே சொல்ல முடியும். இப்படிப் பார்ப்பதும் ராம ராஜ்ஜியத்தின் ஒரு அங்கம் என்றால், எல்லா ஆட்சி முறைகளிலும் விட்ட குறை தொட்ட குறை என்று ஏதேனும் ஒரு பங்கம் இருக்குமோ? நம் கண் முன்னே பேசிக்கொண்டிருப்பவரையும், அவரது வார்த்தைகளையும் நம்பாமல், யாரோ நாலு பேர் எப்போதோ வாதம் செய்து எழுதிவைத்த சட்டம் என்ற ஒரு கழுதையை நம்புவது, என்னே மனிதத்தனம்!

31.4 ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ!

வெளியே எப்படி நினைத்தாலும் சொன்னாலும், இராமர் அனுமன் இருவருமே தங்கள் மனதுக்குள் நினைத்தபடியே, பரதன் தனது அண்ணன் இராமரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்லாமல், அவன் சொன்ன சொல்படியே இராமர் வனத்தில் வாழ்ந்து வந்ததுபோல அயோத்தியின் எல்லைக்கு வெளியே ஒரு குடிசை கட்டிக்கொண்டு, அங்கு தங்கியே இராமரின் பிரதிநிதியாக ஆட்சி செய்தான். அரியணை ஏறாதது மட்டுமல்ல, அயோத்தி மாநகரின் உள்ளே கூட பரதன் செல்லவில்லை. கைகேயி இராமருக்குக் கொடுத்த வனவுரி போன்ற உடையையே தானும் உடுத்தி அங்கே வாழ்ந்திருந்தான். அந்த இடத்தில்தான் அனுமன் பரதனை சந்திக்கிறான்.

Rama-returns-to-Ayodhya-2

அயோத்தி அரசை இராமர் இல்லாத பதினான்கு வருடங்களும் கட்டிக் காப்பாற்றி இராமர் வந்தவுடன் அதைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற ஒன்றுதான் பரதனது உண்மையான நோக்கமாக இருந்தது. அனுமனுக்கு பரதனைப் பார்த்தவுடன் பெருமையாக இருந்தது, அவனது எண்ணங்களை அறிந்ததும் மிக மிக உணர்ச்சிவசப்பட்டான். இராமர் கூடிய சீக்கிரமே அங்கு எழுந்தருளப்போகிறார் என்று கேட்டதும் பரதன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான். இராமரது வனவாசத்தில் அதுவரை நடந்த நிகழ்ச்சிகளை, குறிப்பாக ராவணன் சீதையை அபகரித்து எடுத்துப் போனதையும், இராமர் சுக்ரீவனைச் சந்தித்து வானரர்களின் நட்பைப் பெற்றதையும், வானரர்கள் கடலின்மேல் பாலம் கட்டி அங்கு சென்று போர் புரிந்ததையும், ராவணனைக் கொன்று சீதையை மீட்டியதையும் விவரமாகச் சொன்னான்.

மறுநாள் பரதன் இராமரைச் சந்தித்தபோது அனைவரும் நெகிழ்ந்து உருகியது பற்றி நம்மால் வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியுமா? இராமர் சொன்னபடி ஆட்சி பாரத்தை ஏற்கத் திரும்பி வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துவிட்டு, அங்கேயே ஆட்சிப்பொறுப்பை இராமரிடம் ஒப்படைத்தான்.

… गुरुं भारं न बोदुमहमुत्सहे … ।। 6.131.3 (மூல ஆசிரியரின் குறிப்புப்படி)

गुरुं, மிகுந்த, भारं, பாரத்தைச், वोढुं, சுமக்க, अहं, நான், न उत्सहे , விரும்பவில்லை.

இனியும் இந்த ஆட்சி பாரத்தைச் சுமக்க நான் விரும்பவில்லை.

கங்கை நதிக்கரையில், பரதனின் மேன்மையை உணர்ந்து குகன், “ஆயிரம் இராமர் உனக்கு ஈடு ஆவாரோ?” என்று அன்றே சொல்வதாக கம்ப இராமாயணத்தில் வரும்். இந்த இடத்தில் அதைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, குகனுக்குக் கூட நடக்கப்போவது நன்றாகவே தெரிந்திருக்கிறது என்று சொல்லலாம். ஒரு இராமரின் கதையைப் படித்தோம். ஆயிரம் இராமர்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் நம்மால் முடியுமா?

இறுதியில்…

நீதி, நேர்மை என்று வாயாரச் சொல்லலாம், ஆனால் தான் பட்டியலிட்ட பதினாறு குணங்களுடனும் ஒருவனாவது வாழ்ந்திருக்கிறானா என்ற சந்தேகம் வால்மீகிக்கு வரவும், நாரதர் அவரிடம் இராமரைப் பற்றிப் புகழ்ந்து பாடிய பிறகு, ஒருவர் அப்படி இருக்க முடியும் என்றால் பலரும் அப்படி இருக்க நிச்சயமாக முயற்சி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அப்போதுதான் வால்மீகிக்கு வந்தது. ஆனாலும் அதைச் சொல்லும் வழி பலருக்கும் ஓர் ஊக்கம் கொடுக்கும் வகையில் அமையத் தருணம் பார்த்து, அதுவும் நேர்ந்ததும் இராமாயணம் பிறந்தது என்று முன்பே பார்த்தோம்.

எல்லோருக்கும் நல்லது கெட்டது என்பது தெளிவாகவே தெரியும் என்றாலும், வாய்ப்பு என்று கிடைத்தால் தன் ஆசாபாசங்களினாலோ அல்லது அவை தரும் உடனடி இன்பங்கள் என்பதாலோ, கெட்ட வழிகளில் போவதையே பலரும் விரும்புகின்றனர். அத்தகைய இன்பம் நீண்ட காலம் நீடிக்காது என்பதும் அன்றி அவைகளினால் துன்பங்கள் வரும் என்று தெரிந்திருந்தாலும், மின் விளக்கைப் பார்த்து அதில் விழும் விட்டில் பூச்சிகள் போல, பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, குலவிளக்காக இராமரை முன்னிறுத்துவோம் என்றெண்ணி, வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின் இலக்கு. அதைக் கேட்டு ரசித்து, அது சொல்லும் வழியில் நடக்க நமக்கு அந்த இராமரே வழி காட்டட்டும்.

முற்றும்.

பின்னுரை:

எஸ்.ராமன்
எஸ்.ராமன்
இத் தொடரின் தொடக்கத்தில் சொன்னதுபோல மூல ஆசிரியர் தேர்ந்தெடுத்த செய்யுட்களையும், IIT கான்பூரின் இணைய தளத்திலிருந்து அந்தச் செய்யுட்களுடன் இணைந்து வந்த விளக்கங்களையும் சுந்தர காண்டம் வரை கொடுத்து வந்தேன். யுத்த காண்டம் வந்ததும் கதையில் வரும் ராவணனுக்கு மட்டும் அல்லாது, எனக்கும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. IIT கான்பூர் எடுத்துக்கொண்ட வேலை திட்டப்படி முடியவில்லை போலிருக்கிறது. அதனால் அத்தளத்தில் அதற்குமேல் செய்யுள் மற்றும் சொற்கள் அளவில் விளக்கங்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால் வால்மிகியின் மூலச் செய்யுட்கள் மட்டும் அங்கு இருந்தன. அது தவிர மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கடைசிச் செய்யுளும் அந்த அத்தியாயத்தில் இல்லை. எனக்கு சம்ஸ்க்ருதத்தில் போதுமான பயிற்சி இல்லாததால் எனது ஐம்பத்துமூன்று வருட காலத்தைய நண்பனும், அன்றிலிருந்தே சம்ஸ்க்ருதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவரும், அணு விஞ்ஞானியாய் இருந்து ஒய்வுபெற்றவருமான Dr. P. S. பர்வத நாதன் அவர்களின் துணையோடு, தொடரின் 22-ம் பகுதியிலிருந்து சம்ஸ்க்ருதச் சொற்களுக்குப் பொருளும் அவரே எழுதப்பெற்று, தொடரை இனிதே முடித்துள்ளேன். அன்னாருக்கு என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் உளமிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மொழியாக்கத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பது பகுதி, மூலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து நான் எழுதியுள்ளேன். மூல ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தில் இங்கங்கு என்று எனது எண்ணங்களையும் சேர்த்துள்ளேன். தொடக்கம் முதலே என்னை எழுதச் சொல்லியும், பதிவு செய்தும் ஊக்கமளித்த இத்தளத்தின் ஆசிரியர் குழு, மற்றும் வாசகர்கள் உட்பட அனைவரும் எனது நன்றி கலந்த வணக்கத்தை ஏற்குமாறு வேண்டுகிறேன்.

பின்னுரைக்குப் பின் உறை

ஆமாம், முன்பு எப்போதோ செய்துவைத்த பொருளுக்குப் போடப்படும் உறை போன்றதுதான் இது. மேலே காணப்படும் பின்னுரையையும் சேர்த்து, 2012 மே மாதம் நடுவில் இந்தத் தொடரை நான் எழுதி முடித்து அனைத்தையும் இணைய தளத்திற்கு அனுப்பிவிட்டேன். அதனால் மறுமொழிகளைப் பார்த்து, பின் வந்த தொடர்களில் எதையும் மாற்றவும் இயலவில்லை.

இந்தத் தொடர் ஆரம்பிக்கப்படும் முன் என் எண்ணம் வேறெதிலோ சென்று கொண்டிருந்தது. ஆனால் இறுதியாக அமைந்தது இந்தத் தொடர்தான். எனக்கு ஓரளவு சம்ஸ்க்ருதம் படிக்க, எழுதத் தெரியுமே தவிர இலக்கணமோ, பொருளோ எதுவும் தெரியாது. அவ்வப்போது சம்ஸ்க்ருதம் படிக்க ஆரம்பித்து அப்போதைக்கப்போதே தொடராமல் போனதுதான் என்னுடைய கதை. நான் கடைசியாக சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ள முயன்றது 2011-ல் திரு. பாலசுப்ரமணியன் என்பவரிடம். இந்த இணைய தளத்தில் திரு. வெங்கட் சுவாமிநாதன் தனது “மலர்மன்னனுக்கு அஞ்சலி” கட்டுரையின் மறுமொழிகள் ஒன்றில் திரு. பாலசுப்ரமணியன் அவர்களை, திரு.ஜடாயு எடுத்த போட்டோ ஒன்றில் தனக்குப் பின் உட்கார்ந்த்திருப்பவர் என்று சொல்லி, அறிமுகப்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்.

அவரைப் பற்றிப் பின்பும் பார்ப்போம்.

2012-ம் வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை இந்த இணைய தளத்திற்கு என்ன மேலும் எழுதலாம் என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்தேன். அப்போது சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. பயணம் செல்வதற்கு முன், அங்கிருக்கும்போது எழுதுவதற்காக எனது புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்தபோது, இத்தொடரின் ஆங்கில மூல புத்தகம் என் கண்ணில் பட்டது. அதுவரை நான் அதைப் படித்திருக்கவில்லை. அதைப் பிரித்துப் பார்க்கும்போது, எனது சம்ஸ்க்ருத ஆசை மறுபடியும் துளிர் விட்டு, பொழுது நிறைய கிடைக்கும்போது அதைப் படித்து சம்ஸ்க்ருதத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அதை எடுத்துக் கொண்டேன். அங்கு சென்ற நான் பலவற்றையும் படிக்கும்போது, இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சிறு பிரிவிலும் ஒரு ஸ்லோகமும், ஒரு நீதியும் இருப்பதைப் படித்தபோது, இதை மொழி பெயர்த்து அனுப்பலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே புத்தகத்தில் மூல எழுத்தாளரான திரு லக்ஷ்மி நாராயணனின் மின்னஞ்சல் விவரம் இருந்ததால், அதன் மூலம் அவரது அனுமதியையும் கேட்டேன். அவரோ பெருந்தன்மையுடன், பகீரதன் கங்கை நீர் கொண்டு வந்தாலும், நாமும் அதைப் பருகுகிறோம் அல்லவா? ராமர் கதையை எழுத நான் யார் அனுமதி கொடுப்பதற்கு? தாராளமாகச் செய்யுங்கள் என்றார். (எனக்கு அவரை முன்பே அறிமுகம் கிடையாது. நான் இருக்கும் இடத்தில் இருந்து நான்கு தெருக்கள் தள்ளிதான் அவர் வசிக்கிறார் என்றும், அவர் எனது நண்பர் ஒருவரின் சகோதரியைத்தான் மணம் புரிந்துள்ளார் என்றும் எனக்கு இந்தியா திரும்பி வந்தபின் தான் தெரிய வந்தது.)

rama_pattabhishekam_1அனுமதி பெற்றதும், முதல் மூன்று பகுதிகளை எழுதி அனுப்புகையில், ஸ்ரீ ராம நவமி 2012 ஏப்ரல் முதல் தேதி வருகிறது என்பதைப் பார்த்த நான் பதிக்கத் தகுந்தது என்றால் ராமர் நன்னாளில் தொடங்கலாம் என்று இணைய தளத்தாருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதை வரவேற்று அவர்களும் அப்படியே பதிக்கத் தொடங்கினார்கள். சம்ஸ்க்ருதம் அறியாததால் எல்லாம் சரியாக அமைய வேண்டுமே என்று IIT Kanpur இணைய தளத்திலிருந்து ஸ்லோகத்தின் மூலமும், ஆங்கிலத்தில் அவர்கள் கொடுத்திருந்த பொருளையும் எடுத்துக்கொண்டு தொடரைத் தொடர்ந்தேன். அந்த இணைய தளமும் என்னைப் பாதிக் கிணறுதான் தாண்ட வைத்தது என்பதை முன்பே கூறியுள்ளேன். மீதியை என் நண்பன் மூலம் செய்து முடித்தேன்.

தொடருக்கு வந்த மறுமொழிகள் மூலம், திரு. ஜடாயுவும். திரு. சிவஸ்ரீ பூஷண் அவர்களும் சுட்டிக்காட்டிய திருத்தங்களை, தொடர் எழுதியபோது எனக்குத் தெரிந்திருக்கவில்லை; தொடர் வந்த போது மேலும் தவிர்க்க முடியாதும் போயிற்று. அவர்களைத் தவிர, சம்ஸ்க்ருத மூல ஸ்லோகத்தின் பொருளும் பல இடங்களில் சரியாகத் தரப்படவில்லை என்று திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் அண்மையில் கூறியதால், இப்போது அவருடைய துணையுடன் அனைத்தையும் திருத்திக் கொண்டிருக்கிறேன். எல்லாத் திருத்தங்களையும் முடித்துவிட்டு, நம் தள நண்பர்கள் தொடங்கியுள்ள “இந்துத்வா பதிப்பகம்” மூலம் இத்தொடரைப் புத்தக வடிவில் வரும் ஜூலை மாத அளவில் அச்சிட்டு வெளியிடலாம் என்பது எங்கள் திட்டம்.

இத்தொடரை வரவேற்று மறுமொழிகளைத் தொடர்ந்து அளித்த வாசகர்களுக்கும், குறைகளை நீக்கச் செய்து நிறைபெற உதவி செய்துள்ள வாசகர்களுக்கும், இது புத்தக வடிவில் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்பிய நேயர்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் கூறிக்கொள்கிறேன்.

4 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)”

  1. இந்த தொடரை நான் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது, தளத்தில் நுழைந்து படிக்கும் வாய்ப்பு பெற்றேன். இராமன் என்பது ஒரு புனித நாமம். எனக்கு இராமன் கம்பன் மூலமாக மட்டுமே அறிமுகமானான். காலம் சென்ற நீதி அரசர் ஜனாப் முகமது இஸ்மாயில் அவர்கள் கம்பன் கழகத்தில் கம்பராமாயணம் தரமான தாளில் அச்சிட்டு தந்த போது, நூலகம் மூலம் படிக்கும் பாக்கியம் மீண்டும் பெற்றேன். அப்போது வாங்க கையில் காசு கிடையாது. இன்று என் வீட்டில் முழு கம்பராமாயணமும், பல பதிப்பகங்களின் வெளியீடுகளையும் வாங்கி சேர்த்து வைக்க இறைஅருள் கை கூடி உள்ளது. ஆனால் சோ துக்ளக் பத்திரிகையில் வால்மீகி ராமாயணம் பற்றி எழுதிய தொடரை , சில வாரங்கள் படித்தும், சில வாரங்கள் துக்ளக் இதழ்கள் , நான் கடைக்கு போய், வாங்கும் முன்னரே விற்று தீர்ந்து போனதால் படிக்க முடியாமலும் போனது. எங்கள் பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் திராவிட இயக்கங்களின் தவறான போதனைகளால் மனநிலை பாதிக்கப்பட்ட சில ஆசிரியர்கள் எங்களுக்கு வாய்த்ததால், வால்மீகியை இன்னும் பல முறை கொளுத்தி, எரிக்கவேண்டும் என்ற அறிவுரையே எங்களுக்கு வழங்கப்பட்டது. என்னுடைய சகோதரி படித்து விட்டு , வேலை இல்லாது இருந்தபோது , பல தேர்வுகளையும் எழுதி ஏதாவது வேலை கிடைக்காதா என்று, எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு வயதான பாட்டி , தினசரி சுந்தர காண்டம் படித்து, அனுமான் ( மாருதி/ ஆஞ்சநேயர்) படத்தில், தினசரி ஆஞ்சநேயர் வாலில் ஒரு போட்டு வீதம் ஒரு மண்டலம் பூர்த்தி செய்து, கடைசிநாள் பொட்டு வைத்து முடித்தபோது, வீட்டு வாசலில் போஸ்ட்மேன், அவளுக்கு அரசு பணிக்கு நியமன ஆணை வந்த பதிவு தபாலை கொண்டுவந்து கொடுத்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. எங்கள் வீட்டில் வால்மீகி ராமாயணம் இல்லாததால், நூலகத்தில் இருந்து கம்பராமாயணம் வாங்கி வந்து, அதிலுள்ள சுந்தர காண்டத்தை தான் என் தங்கை வாசித்தாள். வால்மீகியின் இராமாயணத்தை பிரதி பத அர்த்தத்துடன் வாங்கி வைத்துள்ளேன். ஆனால் இன்னமும் , அவ்வப்போது ஓரிரு சர்க்கங்களை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு தமிழ் ஹிந்துவில் திரு எஸ்.இராமன் அவர்கள் எழுதிய இத்தொடர் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. என் நன்றிகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

  2. வால்மீகியை முழுவதும் படிக்க முடியாதோருக்கு , இந்த தொடர் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. புருஷோத்தமன் இராமன் 1.பிறன்மனை நோக்கா பெருந்தகையாளன் 2. பிதுர்வாக்கிய பரிபாலனம் ( தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ) என்ற கருத்தாக்கங்களுக்கு உதாரணமாய் விளங்கினான். அரசன் என்ற முறையில் , நாட்டு மக்களின் அபவாதம் தவிர்க்க , சீதையை காட்டுக்கு அனுப்பினான். கணவன் என்ற முறையில் தன் மனைவியை கைவிட்ட துயரத்தினை அடைந்தான். தன் மனைவியை கைவிடாமல், தன்னுடைய அரச பதவியை துறந்து, தன் தம்பிகளில் ஒருவரிடம் நாட்டை ஆளும் உரிமையை ஒப்படைத்து , மனைவியை காட்டுக்கு அனுப்பாது ,தன் மனைவிக்கு தக்க கணவனாக வாழ்ந்திருந்தால் , இன்னமும் உயர்வு பெற்றிருப்பான். ஆனால் என்ன செய்வது ? விதி யாரை விட்டது ? இராம நாமம் இவ்வுலக துயர்களை துடைக்கும் அற்புத மந்திரம். அதனை தினமும் ஓதி, இக , பர நன்மைகளை மனித இனம் பெறட்டும். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் ! சிறந்த தொடரை வழங்கிய ஆசிரியர் திரு ராமன் அவர்களுக்கும், தமிழ் இந்துவுக்கும் , நமது நன்றிகளும், வாழ்த்துக்களும் ஒன்று சேரட்டும். இது போன்ற பணிகள் மேலும் தொடர இறை அருளை வேண்டுகிறோம்.

  3. ராமகாதை கோடிக்கணக்கான முறை சொல்லப்பட்டாலும் அலுக்காமல் ஒவ்வொரு முறையும் கேட்பவர்களின், படிப்பவர்களின் உணர்ச்சிகளை மேம்படுத்தும் உன்னதமான காவியம். ராம ராம ராம ராம…….

  4. இராமாயணத்தில் பாலகாண்டம் வரையில் அதற்குப் பின் பட்டாபிஷேக அறிவிப்பு வரையிலும் படித்து நிறுத்தினாலும் பரவாயில்லை! ஆனால் ராமர் வனவாசம் செல்வது வரை படித்தாலோ, உபன்யாசம் செய்தாலோ பட்டாபிஷேகம் வரை குறைந்தபட்சம் சுந்தரகாண்டம் வரையாவது படித்து, அல்லது உபன்யாசம் செய்து நிறுத்தலாம்,, எங்கேயோ சொல்லக் கேட்டது! நல்ல விளக்கங்களுடன் நுணுக்கமான உணர்வுகளை அழகாக தந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *