கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

கந்தர் கலிவெண்பா என்பது முருகக் கடவுளிடம் விண்ணப்பம் செய்து கொள்ளும் முறையில் அமைந்துள்ளது. இப்படி கலிவெண்பாவால் அமைந்த பல பிரபந்தங்கள் பல பிற்காலத்தில் இயற்றப் பெற்றுள்ளன. இந்தக் கலி வெண்பாவை இயற்றியவர் குமரகுருபரர்.

முருகப் பெருமான் குமரகுருபரருக்குப் பூவைக் காட்டியதால் ஊமை நீங்கப் பெற்று பூமேவு என்று பாடலைத் தொடங்கினர் என்றும் மங்களகரமாகப் பூ என்று தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. 122 வரிகளைக் கொண்ட இப் பாடல் பலராலும் பாராயணம் செய்யப் படுகிறது.

இப்பாடலில் முருகனுடைய திரு அவதாரம், திருவிளையாடல்கள், முருகனின் கேசாதிபாத வருணனை, நான்முகனைக் குட்டிச் சிறை வைத்தது, தந்தை யாகிய பரமேச்வரனுக்கே ப்ரணவத்தை உபதேசித்தது கிரவுஞ்ச மலையைப் பிளந்தது, சூரனை வதம் செய்தது, தெய்வயானை வள்ளி திருமணங்கள் ஆகிய செய்திகளைச் சுவைபட விவரிக்கிறார். மேலும் முருகனின் ஆறு முகங்களின் அழகையும் பன்னிரு கரங்களின் செயல்களையும் தெரி விக்கிறார்.

முருகன் அவதாரம்
murugan-birth

சூரபத்மன் என்ற அசுரன் தவங்கள் பல செய்து சிவபெருமானிடமிருந்து பல வரங்கள் பெற்றான்.சிவனுடைய மகனால்தான் அவனுக்கு மரணம் ஏற் படும் என்று வரமும் பெற்றிருந்தான். வரபலம் பெற்ற சூர பத்மன் தேவர்களை மிகவும் துன்புறுத்த ஆரம்பித்தான். தேவர்கள் எல்லோரும் அவனுக்கு அடிமைகள் போல் வேலை செய்ய வேண்டும் என்று கட்டளை யிட்டான். அவர் கள் மீன் பிடிக்கும் தொழில், தண்ணீர் தெளிக்கும் தொழில் கள் செய்யும் படி கட்டாயப்படுத்தினான்.

இதனால் துன்பமடைந்த தேவர் கள் எல்லோரும் ஒன்று கூடி தேவதேவனான மகாதேவனி டம் முறையிட்டார்கள். இவர்கள் துன்பத்தைக் கண்டு இரங் கிய பெருமான் தனது ஐந்து முகங்களான ஈசானம், தத்புரு ஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், இவற்றோடு கீழ்நோக்கிய முகமான அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகமாக்கி அவற்றை ஆறு தீப்பொறிகளாக்கினான். இத் தீப் பிழம்பைக் கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.இதைக்
கண்ட பெருமான் அந்த ஆறு பிழம்புகளையும் தன் பொற்கரத்தால் எடுத்து வாயுதேவனிடம் கொடுத்தான். வாயு தேவ னாலும் அந்த வெம்மையைத் தாங்க முடியவில்லை.

அதனால் அவற்றை அக்கினி தேவனிடம் கொடுக்க அக்கினி தேவன் அந்தப் பிழம்புகளைக் குளிர்ச்சி பொருந்திய கங்கை நதியில் கொண்டு சேர்த்தான். ஆனால் அவளாலும் அந்த வெப்பத்தைச் சிறிது நேரத்திற்கு மேல் பொறுக்க முடிய வில்லை. எனவே கங்கை அவற்றை சரவணப் பொய்கையில் கொண்டு போய் விட்டாள். சரவணப் பொய்கையில் அப்பிழம்புகள் ஆறு குழந்தைகளாகி விட்டன. அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்த்தனர்.செஞ்சடைக் கடவுளான சிவ பெருமான் உமையம்மையோடு சென்று அவளுக்கு அக் குழந்தைகளைக் காட்டினார். அக்குழந்தைகளைக் கண்ட உமா தேவி மகிழ்ந்து அக்குழந்தைகளுக்குப் பாலூட்டினாள். பின் அக்குழந்தைகளை ஒன்றாகச் சேர்த்தணைத்தாள். ஒன்றாகச் சேர்க்கப் பட்ட அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்று பெயர் சூட்டினாள். பெருமான் ஸ்கந்தனை வாரியணைத்து அன் போடு உச்சி முகர்ந்தார். இதை

… ஆங்கொரு நாள்
வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும்—தந்து

திருமுகங்களாறாகிச் செந்தழற் கண்ணாறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறுய்ப்ப—விரிபுவனம்

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற் பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண்

எடுத்தமைத்து வாயுவைக் கொண்டேகுதி யென்றம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு

பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் போதொருசற்று

அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் – சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய்-முன்னர்

அறுமீன் முலை உண்டழுது விளையாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன்—குறுமுறுவற்

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக்காட்டுதலும்
அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும் – தன்னிரண்டு

கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச்—செய்ய

முகத்திலணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத்தளித்துச்—சகத்தளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே.

என்று விவரிக்கிறார் குமரகுருபரர்.

அயனைச் சிறையிட்டது.

shivamuruga1ஒரு சமயம் பிரமன் கைலை மலைக்குச் சென்றார். அந்த சமயம் முருகன் அங்கு விளை யாடிக் கொண்டிருந்தான். சிறு பையன் தானே என்று நினைத்து மிக அலட்சியமாகச் சென்ற பிரமனை முருகன் வழி மறித்தான். ”உமது தொழில்?” என்று கேட்ட முருக னுக்குப் படைப்புத் தொழில் என்று விடையளித்தார் பிரமன். ”அப்படியா, சரி படைப்புத் தொழில் செய்யும் உமக்குப் பிரண வத்தின் பொருள் தெரியுமா?” என்று கேட்டான் முருகன். இதைக் கேட்ட பிரமன் பொருள் தெரியாமல் திரு திருவென விழித்தார். “ப்ரணவத்தின் பொருள் தெரியாத நீர் படைப்புத் தொழில் செய்வது எப்படி?” என்று அவர் தலையில் குட்டிச் சிறையிலிட்டான் முருகன். இதனால் படைப்புத் தொழில் தடைப்பட்டது. முருகனே அந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கினான். இதை அருணகிரிநாதர்

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒரு சிறை விடுத்தனை.

என்று திருப்புகழில் போற்றுகிறார்.

பிரமன் சிறைப்பட்டதைக் கேட்ட சிவபெருமான்முருகனிடம் வந்து பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி சொன்னார்.முருகன் மறுக்கவே “பிரமனுக் குப் ப்ரணவத்தின் பொருள் தெரியவில்லை என்று சொல்லும் உனக்கு அதன் பொருள் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும். ஆனால் இப்படிக் கேட்டால் சொல்ல முடியாது ”நீங்கள் சீடனாக அமர்ந்து கேட் டால் நான் குருவாக உப தேசம் செய்வேன் என்றான் குமரன். அப்படியே பெருமான் சீடனாக அமர்ந்து பாடம் கேட்க முருகன் அவருடைய திருச் செவியில் உபதேசம் செய்தான். தகப்பன் சாமியாக சுவாமி மலையில் விளங்குகிறன். இதை

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா

என்று பாடுகிறார் அருணகிரிநாதர். இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் தொகுத்து

… படைப்போன்
அகந்தையுரைப்ப மறையாதி எழுத்தென்று
உகந்த ப்ரணவத்தின் உண்மை புகன்றிலையால்

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்கன்?என்று
குட்டிச் சிறை யிருத்தும் கோமானே! மட்டவிழும்

பொன்னங் கடுக்கைப் புரி சடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்ததோனே.

என்று குமரகுருபரர் வியந்து போற்றுகிறார்.

கேசாதி பாத அழகு

இறைவனுடைய திரு உருவத் தைப் பாதம் முதல் திருமுடி வரை வருணிப்பதை பாதாதி கேச வருணனை யென்றும், திருமுடியிலிருந்து திருவடி வரை வருணிப்பதைக் கேசாதிபாத வருணனை யென்றும் சொல்வார்கள். குமரகுருபரர் இங்கே முருகனின் திருமுடியி லிருந்து தொடங்கி திருவடி வரை வருணிக்கிறார்.

tiruchendur murugan

முருகனின் மணி முடிகள் நவரத்தினங்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசுகின்றன. துண்டமாகிய ஆறு பிறைகளை வரிசையாகப் பதித்தது போன்ற நெற்றியில் திருநீறும் பொட்டழகும் இலங்குகின்றன. பன்னிரண்டு தாமரை பூத்தது போல் அருளும் பன்னிரண்டு கண்கள். பல சூரியர்கள் ஏக காலத்தில் உதித்தது போன்ற மகரக் குழைகள் காதுகளில் பளீரிடுகின்றன.முருகனின் புன்சிரிப்பு நிறைந்த செவ்வாய்! நமது பிறவித் தாகத்தைத் தீர்க்கும் மொழிகள்!
இந்த அழகை குமரகுருபரரின் வாய்மொழியாகக் கேட்போம்.

…. சந்நிதியா நிற்கும் தனிச் சுடரே! எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே!—மின்னுருவம்

தோய்ந்த நவரத்னச் சுடர் மணியாற் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும்—தேய்ந்த பிறைத்

துண்ட மிருமூன்று நிறை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்த நுதற் பொட்டழகும்—விண்ட

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள் பொழியும் கண்மலர் ஈராறும்—பருதி

பலவும் எழுந்து சுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக்குழையும்—நிலவுமிழும்

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
ஜன்ம விடாய் தீர்க்கும் திருமொழியும்

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையாள் வேட்டணைந்த
அம்பொன் மணிப் பூண் அகன் மார்பும்—பைம்பொற்

புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும்
அரைஞாணும் கச்சையழகும்—திருவரையும்

நாதக்கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்தணிந்த பரிபுரமும்—சோதி இளம்பருதி

நூறாயிரங்கோடி போல வளந்தரு தெய்வீக வடிவும்.. “

என்று முருகனுடைய அழகைக் கேசாதி பாதமாக வருணிக்கிறார்.

ஆறுமுகங்கள்

ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

murugan_six_faces_shanmukha

இந்தப் பாட்டை நாமெல்லோருமே நிறையக் கேட்டிருப்போம். அருணகிரிநாதரின் இந்தத் திருப்புகழைப் போலவே குமர குருபரரும் முருகனின் ஆறு திருமுகங்களையும் போற்றிப் பரவுகிறார். முருகனின் திருமுகங்கள் எப்படிப் பட்டவை என்று பார்ப்போம். அவை திருமுகம், மலர்முகம், கமல முகம், மலர்வதன மண்டலம், முகமதி, தெய்வத்தாமரை என்றெல்லாம் பாராட்டுகிறார்.

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகம்—எவ்வுயிர்க்கும்

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும்—சூழ்வோர்

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும்—விடுத்தகலாப்

பாச இருள் துரந்து பல்கதிரில் சோதி விடும்
வாசமலர் வதன மண்டலமும்—நேசமுடன்

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகமளிக்கும் முகமதியும்—தாகமுடன்

வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும்
தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்

என்று ஆறுமுகங்களின் அழகையும் எடுத்துக் காட்டுகிறார்.

பன்னிரு கரங்கள்

குகையில் பூதத்தால் சிறை வைக் கப்பட்ட நக்கீரர் சிறைமீட்கும்படி முருகப் பெருமானைப் பாடிய பாடல் “திருமுருகாற்றுப்படை” அதில் முருகனு டைய அறுபடை வீடுகளையும் அதில் குடி கொண்டிருக்கும் முருகனையும் போற்றுகிறார். திருச்செந்தூர் முருகனைப் பாடும் பொழுது அவனுடைய பன்னிரு திருக்கரங்களின் செயல்களையும் பாடுகிறார். அவரை அடியொற்றி குமரகுருபரரும் செந்தில் முருகனின் பன்னிருகைகளின் சிறப்புக்களை
போற்றுகிறார்.

வேரிக்கடம்பும் விரைக்குரவம் பூத்தலர்ந்த
பாரப்புய சயிலம் பன்னிரண்டும்—ஆரமுதம்

தேவர்க்குதவும் திருக்கரமும், சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும்— ஓவாது

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும்—மார்பகத்தில்

வைத்த கரதலமும் வாம மருங்கிற் கரமும்
உய்த்த குறங்கில் ஒரு கரமும்—மொய்த்த

சிறுதொடி சேர் கையும் அணிசேர்ந்த தடங்கையும்
கறுவு சமர் அங்குசஞ்சேர் கையும் தெறுபோர்

அதிர் கேடகம் சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும்

என்று பன்னிருகைகளின் செயல்களைப் போற்றிப் பரவுகிறார்

சூரபத்மனோடு போர்

முருகப் பெருமான் எந்த நோக் கத்திற்காக அவதாரம் செய்தாரோ அந்த சூரசம்ஹார நிகழ்ச்சியையும் விவரிக்கிறார்.

சூரபத்மனுடைய அடக்கு முறை களால் துன்பமடைந்த தேவர்களுடைய குறை தீர்ப்பதற்காக முருகன் சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூரில்
கடலருகே கருணை வெள்ளமெனத் தவிசில் வீற்றிருந்தான். படைவீடும் அமைத்தான். சூரனிடம் வீரபாகுவைத் தூதாக அனுப்புகிறான். ஆனால் ஆணவமே உருவான சூரன் தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க மறுத்து விடுகிறான்.அத னால் சூரனுக்கும் முருகனுக்கும் போர் தொடங்குகிறது. முரு கனைச் சின்னஞ்சிறு பாலன் தானே என்று சூரன் நினைத்தது தவறாகிப் போய் விடுகிறது. அதனால் தனது மாயையால் பலவித மாயப் போர்களைப் புரிகிறான். அசுரர்களுடைய ரத, கஜ, துரக, பதாதிகள் என்ற நால்வகைப் படைகளோடு பானு கோபன், சிங்கமுகனையும் முருகன் வென்று விடுகிறான்.

கிரவுஞ்சமலையையும் தூளாக்கி தாருகாசுரனையும் வதைக்கிறான் முருகன். மாயங்களில் வல்லவனான சூரன் கடலில் புதுமையான மாமரமாகி நிற் கிறான். இந்த மரத்தின் வேர் மேலாகவும், மரத்தின் மற்ற பகுதிகள் நீருக்குள் கீழாகவும் இருக்கும். இதைக் கண்ட முரு கன் கடலை வற்றச் செய்து வேலால் அந்த மாமரத்தைம் . பிளக்கிறான். சூரன் உடல் இரு கூறாகி ஒரு கூறு மயிலாகவும் ஒரு கூறு கோழியாகவும் பிரிகிறது. முருகன் மயிலைத் தன் வாகனமாக்கிக் கொண்டு கோழியைத் தன் கொடியாக வும் கொண்டு மயில் வாகனனாகவும் கோழிக் கொடியோ னாகவும் விளங்குகிறான்.

தெள்ளுதிரை கொழிக்கும் செந்தூரில் போய்க்
வெள்ளமெனத் தவிசின் வீற்றிருந்து—வெள்ளைக்

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்திற் புக்கு இமையோர் வாழச்

சூரனைச் சோதித்து வருகென்று தடந்தோள் விசய
வீரனைத் தூதக விடுத்தோனே—காரவுணன்

வானவரை விட்டு வணங்காமையாற் கொடிய
தானவர்கள் நாற்படையுடன் சங்கரித்துப்—பானுப்

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனை வென்று வாகை முடித்தோய்—சகமுடுத்த

வாரிதனில் புதிய மாவாய்க்கிடந்த நெடுஞ்
சூருடலங்கீன்ற சுடர்வேலோய்—போரவுணன்

அங்கமிரு கூறாய் அடல்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் அங்கவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே—மாறிவரு

சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென
மேவத் தனித்துயர்த்த மேலோனே—மூவர்

குறை முடித்து விண்ணங்குடி யேற்றித் தேவர்
சிறை விடுத்தாட் கொண்டளித்த தேவே!

என்று அந்த வரலாற்றை விவரிக்கிறார்.

திருமணங்கள்

தேவர்களின் சேனைக்கதிபதியாகி சூரனை வதைத்து, தேவர்கள் சிறை மீட்டு, இந்திராணி மாங்கல்யம் காத்த முருகனுக்குத் தேவேந்திரன் தன் மகள் தேவ சேனையைத் மணமுடித்து வைக்கிறான். முருகன் தேவசேனாபதியாக விளங்குகிறான்.

சிவமுனிவரின் அருளால் மானின் மகளான வள்ளி குறவர் குடியில் வளர்ந்து வந்தாள். ஏனற் புனம் காத்த வள்ளியை விரும்பி வந்தான் முருகன். வேட னாக வந்த முருகன், பின் விருத்தனாக வந்து வள்ளி தந்த தேனும் தினைமாவும் உண்டு மகிழ்ந்தான். பின் அவளையும் மணந்தான்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், முதலான ஆறுபடை வீடுகளிலும் குடி கொண்ட ஆறுமுகன் சரவணபவ என்னும் ஆறெழுத்தை ஓதும் அன்பர் சிந்தையிலும் குடி கொள்கிறான் இவற்றை யெல்லாம் தொகுத்துப் பாடுகிறார் குமரகுருபரர்.

சைவக் கொழுந்தே, தவக்கடலே வானுதவும்
தெய்வக்களிற்றை மணம் செய்தோனே— பொய்விரவு

காமம் முனிந்த கலை முனிவன் கண்ணருளால்
வாம மடமானின் வயிற்றுதித்துப் பூமருவு

கானக் குறவர் களிகூரப் பூங்குயில் போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து—மேன்மை பெறத்

தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கொடியை மணந்தோனே-உள்ளமுவந்து

ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறுமவர் சிந்தை குடி கொண்டோனே

என்று தெய்வயானை, வள்ளி இருவரையும் வீரமும் காத லும் வெளிப்பட மணந்து கொண்டதை விவரிக்கிறார்.

தசாங்கம்

சூரனை வெற்றி கொண்ட வெற்றி வேலனுக்குரிய தசாங்கங்களை விவரிப்பதைப் பார்ப்போம். அவை (1) மலை, (2) ஆறு, (3) நாடு. (4) நகர், (5) குதிரைப் படை (6) யானைப்படை, (7) மாலை, (8) கொடி, (9] முரசு (10) ஆணை.

1. அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் (மலை)

2. சுகலளிதப் பேரின்ப வெள்ளப் பெருக்காறும் (ஆறு)

3. மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும்

4. பாரின்பம் எல்லாம் கடந்த இரு நிலத்துள் போக்கு
வரவல்லாது உயர்ந்த அணிநகரும் (நகர்)

5. .. தொல்லுலகில்
ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்து ஐந்தெழுத்தைக்
கூறி நடத்தும் குரகதமும் (குதிரை)

6. ஏறுமதம் தோய்ந்து களித்தோர் துதிக்கையினால்
பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும்

7. வாய்ந்தசிவ பூரணத்துள் பூரணமாம் போதம்
புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும்
8. காரணத்துள் ஐந்தொழிலும் ஓவாது
அளித்துயர்த்த வான்கொடியும்

9 வந்த நவநாத மணி முரசும்—சந்ததமும்
நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்

10. புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும்

என்று முருகனின் தசாங்கங்களையும் தெரிவிக்கிறார்.

வேண்டுகோள்

kumaraguruparaகந்தர் கலிவெண்பாப் பாடலின் இறுதியில் வேண்டுகோள் விடுக்கிறார் குமரகுருபரர். அவரு டைய வேண்டுகோளைக் கேட்போமா?

செந்தில் பதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளே! பலகோடி ஜன்மங்களில் சேர்ந்த பகையும், அகால மரணமும், பலகோடி இடையூறுகள், பல பிணிகளும் பலகோடி மா பாதகங்களும், பில்லி, சூனியம், ஏவல், போன்றவைகளும், பாம்பு, பிசாசு, பூதம் நெருப்பு, வெள்ளம், ஆயுதங்கள், விஷம், கொடிய மிருகங்கள் முதலியவைகளும் எங்கு எந்நேரம் வந்து எங்களை எதிர்த்தாலும் அங்கே அப்பொழுது பச்சை மயில் வாகனத்தில், பன்னிரண்டு தோள்களும், வேலும், திருவரையும், சீறடியும், கருணை பொழியும் ஆறுமுகமுமாய், எதிர்வந்து எங்கள் துன்பங்களை யெல்லாம் பொடியாக்க வேண்டும். என்று வேண்டுகிறார்இதைப் பாடலில் பார்ப்போமா?

பல்கோடி ஜன்மப்பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும்—பல்கோடி

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசு மடல்
பூதமும் தீ நீரும் பொருபடையும்—தீதகலா

வெவ்விடமும் துஷ்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்த்தாலும்—அவ்விடத்தில்

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும்
அச்சமகற்றும் அயில் வேலும்—கச்சைத்

திருவரையும், சீறடியும், செங்கையும், ஈராறு
அருள்விழியும், மாமுகங்கள் ஆறும்—விரிகிரணம்

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓர் ஆறும்
எந்தத் திசையும் எதிர் தோன்ற—வந்து இடுக்கண்

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்து..

என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இது மட்டுமல்ல தமிழ்ப் புலமை யும் வேண்டுமென்கிறார். பலவிதமாகக் கவி பாடும் திறமை யும், அஷ்டாவதானமும் கைகூட வேண்டுமென்கிறார்.

ஆசுகவி முதல் நாற்கவியும் அட்டாவதானமும் சீர்ப்
பேசுமியல், பல்காப்பியத் தொகையும்—ஓசை

எழுத்து முதலாம், ஐந்திலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து—ஒழுக்கமுடன்

இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் தம்மை விடுத்து

ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் சேய

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கும் முன்னின்று அருள்.

என்று முடிக்கிறார்.

122 அடிகளில் முருகன் அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்.

9 Replies to “கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை”

 1. ஞான குருவாம் கந்தப்பெருமானின் புகழைப்பாடும் கந்தர் கலி வெண்பாவை தெளிவான விளக்கங்களோடு தந்த அம்மா ஜெயலக்ஷ்மி அவர்களுக்கு நமது நமஸ்காரங்கள். வையகம் உய்யப்படித்து , இறைச்சக்தியின் அங்கமாக மாறுவோம்.

 2. அழகுப் பெருமானைப் பற்றிய அரியகட்டுரை கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைகின்றோம்…

 3. எனது 7 வயதில் மனனம் செய்து பெரியவர்களிடம் பாடிகான்பித்து பரிசு பெற்றுதந்த பாடல் இந்த கந்தர்கலிவெண்ப, மறுபடியும் இதை பற்றி தெரிந்துகொள்வதில் மிக்க சந்தோஷம் .

 4. ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அம்மைக்கு முருகார்ந்த நமஸ்காரம்.

  தித்திக்கத் தித்திக்க கந்தனைப் பற்றிய வ்யாசம். குமரகுருபர ஸ்வாமிகள் செந்திலாதிபனுக்குச் சமர்ப்பிக்கிறார்.

  நடுநடுவே தாங்கள் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் திருப்புகழிலிருந்தும் வேறு எடுத்துச் சொல்லி அமுதுடன் அமுது கலந்துள்ளீர்களா?

  நீங்கள் கந்தர்கலி வெண்பாவுடன் திருப்புகழமுது படைக்காத இடங்களில் எங்கள் வள்ளல் பெருமான் என்ன சொல்லியிருப்பார்? என்ன சொல்லியிருப்பார் என்று மனம் அலைபாய அலைபாய……

  ச்ரத்தை குறைந்த சிறுமதிக்கு எட்டியவரை அமுதில் மூழ்கினேன். எங்கள் பழனியாண்டவனின் அழகு சொல்லியும் மாளும்.

  எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் :-

  கார்த்திகைப் பெண்டிரும் உமையாளும் ஸ்தனபானமளித்தது:-

  திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
  அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
  விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
  குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.

  மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும்
  வடிவுடன் வளர்ந்திருக்கும் வாழ்வினான்
  மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்றுதித்து
  மலை இடியவுந்துணித்த தோளினான்

  கேசாதி பாத வர்ணனை.

  எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
  யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் …… துங்கநீள்பன்

  னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
  ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் …… செம்பொனூலும்

  மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
  முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் …… செங்கைவேலும்

  முழுதுமழ கியகுமர

  ஸ்ரீ கோபாலசுந்தரம் ஐயா அவர்களது பதவுறை :-

  எழுத முடியாத எழிலுடைய ஆறு திரு முகங்களும், அழகிய நெற்றியும், வைரம் மத்தியில் பொதிக்கப்பட்டு அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய அணிகலன்களும், பரிசுத்தமான, நீண்ட பன்னிரண்டு கருணை பொழியும் கண் மலர்களும், விளங்கும் பன்னிரண்டு குண்டலங்களும், ரத்னக் காதணியும், தாமரை போன்ற கைகளும், செம்பொன்னால் ஆகிய பூணூலும், சொல்லிப் புகழத் தக்க உடை மணியும், அரையில் கட்டிய நாணும், இரு திருவடிகளும், முத்தாலான கிண்கிணியும், அழகிய மயிலும், திருக் கரத்தில் வேலாயுதமும், (இவ்வாறு) முழுதும் அழகு மயமாக உள்ள குமரனே,

  எழுதரிய அறுமுகப்பெருமான் அழகை குமரகுருபரரும் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானும் எப்படி எப்படி அமிழ்ந்து அமிழ்ந்து தமிழ்ப்பமாலைகளால் ஸ்துதி செய்கிறார்கள். பாருங்கள் கண்ணெதிரில் தெரிகிறான் அன்றோ?

  அவனழகை மனதில் நினைத்து ஓதினால் அருகில் வந்து

  நம்

  கன்னத்தைத் தொட்டு கையைப்பிடித்து நம்முடன் கொஞ்சானோ

  பாதாதிகேசஞ்செப்பும் கந்தரலங்காரம் :-

  திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
  பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
  மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
  குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.

  \\\ பன்னிரண்டு தோள்களும், வேலும், திருவரையும், சீறடியும், கருணை பொழியும் ஆறுமுகமுமாய், எதிர்வந்து எங்கள் துன்பங்களை யெல்லாம் பொடியாக்க வேண்டும். என்று வேண்டுகிறார்இதைப் பாடலில் பார்ப்போமா?\\\

  எனக்கு உடன் நினைவில் வந்தது :-

  நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
  கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
  தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
  தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

  சேர்த்துச் சேர்த்து வாசிக்கையில் என்ன தான் அழகு.

  ச்ரத்தை குறைந்த என் சிறுமதிக்கு எட்டா எங்கள் வள்ளல் அருணகிர்ப்பெருமான் வாக்கை மற்றுமுள்ள பெரியோர் பகிரலாமே.

  கந்தனைப் பேசப் பேச நாவினிக்குமே. வாசிப்பவர் உளம் குளிருமே. முருகன் உகந்து உள்ளுறைவானே. முருகன் உள்ளுறைவோர் தம் திருத்தாள்களில் நம் சென்னியிருத்தக்கடவோமே.

  வேலும் மயிலும் சேவலும் துணை

 5. Thanks for posting an article about KANDHAR KALI VENBA In our family at Srivaikuntam this as our family prayer song like Shashti Kavasam Though today we all forgot these verses we can not forget our family came up to a level bcos of Kandhar Kali Venba As a forward community student I got an annual stipend of Rs.200/= in my college days ( Sri KGS Arts College Srivaikuntam ) All the male members of our family ate noon meal at their mutt in srivaikuntam by reciting this Kandhar Kali Venba in school days As a teacher my father went to Varanasi by reciting this song I too went to Varanasi at the age of 18 by reciting the Kandhar Kali Venba No doubt Thirupanandhal mutt did good services in the name of its first pontiff Sri Kumara Guruparar Happy to mention 2day PALAM Mr KALYANA SUNDARAM worked as a librarian in the KGS Arts college

 6. அன்புள்ள பாரதி சுதன்,
  தாங்களும் ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரர் ஆண்கள் உயர் நிலைப் பள்ளி மாணவர் என்று கேட்க மிக்க மகிழ்ச்சி. என் தகப்பனார் திரு’ ஏ கே கிருஷ்ணன் அவர்கள் அந்தப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகள் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணி புரிந்தார். என் சகோதரர்கள் மூவரும் என் மாமாக்கள் மூவரும் அந்தப் பள்ளியில் தான் கல்வி பயின்றார்கள். நானும் அங்குள்ள குமரகுருபரர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தான் பயின்றேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தேவாரம் கற்றுக் கொடுத்து போட்டியும் வைப்பார்கள் முதல் பரிசு பெற்ற மாணவ/மாணவிக்கு ரூ100ம் பெற்றோர் காசிக்குச் செல்லவும் போக்குவ்ரவுச் செலவும் காசி மடத்தில் தங்க ஏற்பாடும் செய்து தருவார்கள். தங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. சொந்த ஊர்க்
  காரர் அறிமுகம் செய்து கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி.

  அன்புள்ள ஜயலக்ஷ்மி

 7. எனக்கு இப்போது நீங்கள் யார் என்பது தெரிகிறது எனது அத்தை உங்களுடன் கூட படித்தவர் ஸ்ரீமதி A திரிபுரசுந்தரி இப்பொழுது அபுதாபியில் இருக்கிறார் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவுகள் மறப்பது இல்லை என் இயற்பெயர் தர்மராஜன் ஸ்ரீ குமரகுருபரர் தொடர்பான இவ் வளைத்ததில் முந்தய பதிவில் குட எனது குறிப்பை பதிவு செய்துள்ளேன் தங்களை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு கட்டுரையை எழுதி இருக்க முடியாது தங்கள் முயற்சி தொடர எல்லாம் வல்ல கந்தவேளும் குருநாதர் ஸ்ரீ குமரகுருபரர் அருளும் கிட்ட ஆண்டவனை துதிக்கிறேன் என் தொலைபேசி 9382645943

 8. நேரிசை கந்தர் கலி வெண்பா மிக இனிது.

  கார்த்திகைப் பெண்டிரும் உமையாளும் ஸ்தனபானமளித்தது:-

  கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல் இனிது.

  திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
  அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
  விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
  குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.

  கட்டளைக் கலித்துறையில் அமைந்த கந்தரலங்காரமும் இனிது.

  வ.க.கன்னியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *