அர்த்தமற்ற புகார்கள்

“சார்! இவன் என்னைக் கிள்ளறான் சார்!”.

“இல்ல சார் இவந்தான் என் சிலேட்டை ஒடைச்சிட்டு சும்மாவானும் சொல்லறான் சார்”

ஒரு எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்புப் பிள்ளைகள் தங்கள் ஆசிரியரிடம் கூறும் புகார்கள் இவை. அந்த ஆசிரியர் “டேய் சண்டை போடாம உட்காருங்கடா” என்று சொல்லிவிட்டு அடுத்த வகுப்பு ஆசிரியரிடம் அரட்டை அடிக்கப் போய்விடுவார். இதுபோன்ற காட்சிகளைப் பள்ளிக்கூடங்களில்தான் பார்க்கமுடியும். அந்த குறையைப் போக்க இப்போது அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கத் தொடங்கி விட்டன.

நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை ‘ரத்தக் கறை படிந்த கை” என்று சொல்லிவிட்டாராம். போச்சு எங்கள் புனிதம், கெட்டது எங்கள் நல்ல பெயர், ஐயா தேர்தல் கமிஷனரே அப்படிச் சொன்ன மோடியை விசாரியுங்கள் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறது. இப்படி நாளொரு புகாரும், பொழுதொரு குற்றச்சாட்டுமாக காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறது.

modi-in-trichy-2

2002இல் குஜராத்தில் நடந்த படுகொலை என்றெல்லாம் வாய் ஓயாமல் நரேந்திர மோடி மீது அன்று தொடங்கி இன்றும் கூட வசைபாடி குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பே இல்லாத புனிதமான சுத்த ஸ்வயம் பிரகாச கட்சிகள் எல்லாம் இன்றும் மோடியை ரத்தக் கறை படிந்தவர் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வரும் நிலையில் மோதி மீது இவர்கள் குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போலத்தான் இருக்கிறது. இதே மோதியை “மரண வியாபாரி” என்று விளித்தவர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவி என்பதை மக்கள் மறந்து போய்விடவில்லை.

இந்திரா காந்தி கொலையுண்டதை அடுத்து டெல்லி தெருக்களில் சீக்கியர்கள் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்டதை என்னவென்று சொல்வது? அதில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களின் கரங்கள் பன்னீரில் தோய்ந்து சந்தனத்தால் பூசப்பட்டிருந்ததா என்ன? மகாத்மா காந்தி போதித்த அகிம்சை முறைகளையெல்லாம் அவர்கள் கைகழுவி எத்தனை காலம் ஆயிற்று. மகாத்மாவா அது யார்? அவருடைய பெயரின் பிற்பகுதிப் பெயர் மட்டும் எங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறதே தவிர மகாத்மா அல்ல என்பார்கள் இப்போது கேட்டால்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்திய அரசியல் வாதிகள் செய்த தவறு, காங்கிரஸ் கட்சியின் மூவண்ணத்தை அப்படியே தேசியக் கொடியில் ஏற்றுக் கொண்டதுதான். தங்களது காங்கிரஸ் கொடியில் இருந்த இராட்டினத்தைத் தூக்கிவிட்டு அசோக சக்கரத்தை மட்டும் சேர்த்துக் கொண்டு இதுதான் தேசியக் கொடி என அறிவித்தது அப்போதைய இந்திய மக்களிடம் ஒரு பிரமையை (ஏன் பிரேமையை என்று கூட சொல்லலாம்) ஏற்படுத்திவிட்டது. அதன் பயனாய் இன்றும் கூட காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள் சாமர்த்தியக் காரர்கள்.

யுத்தம் என்றால், அதில் பன்முகத் தாக்குதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு அடிக்கும் ஐயோ, அடிக்கிறான், காலில் அடிக்கிறான், முதுகில் அடிக்கிறான், பிரஷ்ட பாகத்தில் அடிக்கிறான் என்று அலற ஆரம்பிப்பவர்கள் அப்படிப்பட்ட யுத்தத்திற்கே வந்திருக்கக் கூடாது. அடடா! நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அறிவித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் தூக்கம் கெட்டுவிட்டது. உணவு உள் செல்வதில்லை. சதா காலமும், தூக்கத்திலும் கூட மோதி நினைவுதான். கனவிலும் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் பாவம் நரேந்திர மோடி.

மோடியின் பெயரைச் சொல்லும்போதோ, அல்லது அவர் மீது குற்றம் சாட்டும் போது, சில காங்கிரஸ்காரர்கள் முகத்தில் குறிப்பாக மனீஷ் திவாரி எனும் பத்திரிகை தொடர்பாளர் ‘கம்’ அமைச்சர் முகத்தில் எள்ளும் கொள்ளும் படபடவென்று வெடிக்கிறது. குரோதம் கொப்புளிக்கிறது. ஏன் அத்தனை வெறுப்பு, ஏன் அத்தனை பயம்!

காங்கிரஸ்காரர்களுக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் இருக்கிறது. அப்படி அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தித் தேர்தல் களத்தில் நின்று தங்கள் கருத்துக்களை முன் வைத்தும், எதிராளிகளின் கொள்கைகளை, நடவடிக்கைகளை, செயல்பாடுகளை, திட்டங்களை விமரிசனம் செய்யும்போது அதில் அடங்கியுள்ள உண்மை நிலைமை பரிசீலித்து அதற்குத் தகுந்த முறையில் பதில், விளக்கம் அல்லது உண்மை நிலை இவற்றை விளக்க வேண்டுமே தவிர சும்மா சிறுபிள்ளைத் தனமாக ‘பொல்லாங்கு’ சொல்வது என்பது வீரர்களுக்கு அழகல்ல.

தேர்தல் களம் என்பது ஒரு போர்க்களம் போன்றது. அதில் வெல்வதற்கு பல வழிகள் உண்டு, அதாவது நேர்மையான, சட்டபூர்வமான, ஆக்க பூர்வமான வழிகள். எதிர் கட்சிகள் என்றால், ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், ஊழல்களை வெளிக் கொண்டுவருவதும் அவர்களது கடமை. அதைத் தொடர்ந்து பேசி மக்கள் அரங்கில் வைத்துத் தாங்கள் வந்தால் தவறுகள் திறுத்தப்படும், இனி தவறுகள் நடக்காமல் ஆட்சி புரிவோம், ஊழல்கள் விசாரிக்கப்படும், ஊழல் வாதிகள் நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவார்கள், கடந்த காலத்தில் இவர்கள் செய்த தவறுகள் திறுத்தப்படும் என்றெல்லாம் பேசத்தான் செய்வார்கள். ஆளும் கட்சி எதிர் கட்சிகளின் புகார்களை நாகரிகமாக மறுக்கலாம், தங்கள் சாதனைகளை அவிழ்த்து விடலாம். அதை விடுத்து எதிர்கட்சிகள் இவர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தோ, அன்னையே, தொன்னையே என்றெல்லாம் பல்லாண்டு பாடிக் கொண்டா இருப்பார்கள்? குறைகளைக் கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் வைக்கத்தான் எதிர் கட்சிகள் இருக்கின்றன. இங்கு என்ன சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது, இவர்களை எதிர்த்து எந்த முணுமுணுப்பும் இருக்கக்கூடாது என்பதற்கு?

Congress_cartoonமுன்பெல்லாம் இவர்களை எதிர்த்து நின்றவர்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார்கள். இவர்களைப் போல இல்லாமல் தங்கள் பேச்சிலும், செயலிலும், பதில் சொல்வதிலும் மிகுந்த நாகரிகத்தைக் கடைப்பிடித்து அடாவடிப் போக்கைக் கையாளாமல் இருந்தார்கள். அதனால் சண்டப் பிரசண்டர்களான காங்கிரஸ்காரர்கள் தங்கள் போக்கில் பேசிக்கொண்டு, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டு, எங்களைக் கேட்க இங்கு யார் என்று சவால் விட்டுக் கொண்டு ஜெயித்து வந்தார்கள். இப்போது இவர்களை நேருக்கு நேர் நின்று சவால் விட்டு இவர்களது பொய்களைத் தூள் தூளாக்கிக் கொண்டு உண்மையை பிட்டுப் பிட்டு வைத்து தோலுரித்துக் காட்டுவதற்கு நரேந்திர மோதி அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தினம் ஒரு கூட்டம், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்துவதும், அதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து கேட்டு அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் இவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் காங்கிரஸ் தலைவர்களின் ஓலம், ஐயய்யோ மோடி எங்களை அப்படிச் சொல்லிவிட்டார், இப்படிச் சொல்லிவிட்டார் என்று புகார்க்காண்டம் படிக்கத் தொடங்கியிருப்பது.

ஒரு சிறு பிள்ளை, இந்திய அரசியலில் ஏதோ மாபெரும் சாதனைகளைப் படைத்துவிட்டவர் போலவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்திலும், எதிர் கட்சிகளும் மக்களுக்கு எதிராக திரண்டெழுந்து விட்டதைப் போலவும், அதைத் தடுத்து நிறுத்த புறப்பட்டு விட்டவர் போலவும், முகத்தையும் மிகக் கடுமையாக வைத்துக் கொண்டு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் பேசுவதும், மத்திய அரசு தரும் நிதியை எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லை, அவர்களே பயன்படுத்திக் கொண்டார்கள் என்றெல்லாம் ஒருவர் பேசுவது நன்றாகவா இருக்கிறது. பா.ஜ.க. திருடர்கள் கும்பலாம், என்ன இது? நாகரிகமாகப் பேசும் பேச்சா இது. மோதி மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ்காரர்கள் இவருடைய பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்கள். தங்க ஊசி என்றால் கண்ணிலா எடுத்துக் குத்திக் கொள்வார்கள். கிருபளானி, ராஜாஜி, காமராஜ், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற சுதந்திரப் போர் தியாகிகளையெல்லாம் தூக்கிக் கடாசியவர்கள் தானே இவர்கள். தாங்கள் மட்டுமே தான் இந்த நாட்டை ஆள வேண்டும், எதிர் கட்சிகள் வந்துவிடக் கூடாது என்கிற நோக்கில் தங்கள் எதேச்சதிகாரம், ஊழல் போன்றவைகளுக்காக தரம் தாழ்ந்து பேசுவதோ நடந்து கொள்வதோ இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நடைபெறக் கூடாது. ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் பாசிசம் போன்ற கொள்கைகளைக் கடைபிடிக்கும் நாடு அல்ல இந்தியா. புத்தரும், அசோகரும், காந்தியும் அகிம்சையை போதித்த நாடு. ஜனநாயகம் மக்களின் உரிமை. அதைக் கூறு போட்டுத் தங்களுக்கு ஆதாயம் தேடும் எவரும் இங்கு நிலைத்து ஆண்டதில்லை. வரலாறு சொல்லும் உண்மை இது. புரிந்து கொண்டால் சரி, இல்லையேல் மக்கள் கையில் இருக்கும் வாக்குச்சீட்டு பதில் சொல்லும் இவர்களுக்கு.

7 Replies to “அர்த்தமற்ற புகார்கள்”

  1. கோபாலன் தாத்தாஜி ! 25வயது இளைஞ்சனின் குரலாக அல்லவா ஒலிக்கிறது !
    பார்ப்போம்! நாம் விரும்பும் மாற்றம் வருகிறதா என்று. தமிழகம் கணிசமான வெற்றியை பெற்றுத்தருமா? திராவிடக்கட்சிகள் என்ற தடையைக் கடக்கமுடியுமா ?

  2. KMV,
    already people has register their strong comment on that article in savukku. savukku has said earlier that TN Police hide the encounter issue but that was totally fake news. even I have asked the proof or say sorry to readers — till date no response. in short – whatever they write don’t assume that that news is 100% right.

  3. முந்தரா புகழ் நேரு நகர்வாலா புகழ் இந்திராகாந்தி போபோர்ஸ் புகழ் ராஜீவ்காந்தி இவைகளுக்கு மேல் சிகரம் வைத்தது போல் சோனியா வழிகாட்டுதலில் 2ஜி ஊழல் விளையாட்டில் ஊழல் நிலக்கரி ஊழல் விமான ஊழல்.போதுமா இன்னும் வேணுமா. வெட்கம்கேட்டு மக்கள் முன்னால் நடமாடுகிறார்கள் மக்கள் 2014 தேர்தலில் பாடம் கிடைக்கும்.

  4. // நாம் விரும்பும் மாற்றம் வருகிறதா என்று. தமிழகம் கணிசமான வெற்றியை பெற்றுத்தருமா? திராவிடக்கட்சிகள் என்ற தடையைக் கடக்கமுடியுமா ? //

    முதலில் அதற்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கவேண்டும் :

    1. களத்தில் இறங்கி செயலாற்றும் துடிப்பு மிக்க கூட்டம் தமிழக பா.ஜ.க-வில் இருக்கவேண்டும். அவர்கள் மக்கள் மனதில் பதியும்படி களத்தில் இருக்கவேண்டும். ஒரு திராவிட கட்சியின் மா.செ பெயர் தெரியும் அளவுக்கு கூட பா.ஜ.க. தலைவர்கள் அரங்கில் படவேயில்லை. பொன்.ராதாகிருஷ்ணனை, இல.கணேசனை, தமிழிசை சௌந்தரராஜனை விட்டால் பிரபலமானவர்கள் யாரென்றே தெரியவில்லை.

    2. முக்கியமான விஷயம், தமிழர்கள் முதலில் மாற்றம் வேண்டும் என்று உள்ளார்ந்த அக்கறையோடு நினைக்கவேண்டும். அப்படி நினைப்பவர்கள் அத்தனை பேரும் வக்குச்சாவடிக்கு வரவேண்டும். பணத்துக்கும் பாட்டிலுக்கும் பால் மேல் சத்தியத்துக்கும் விலைபோகாமல் இருக்கவேண்டும்.

  5. வணக்கம்
    திருவாளர்கள் பொன் ராதா கிருஷ்ணன் இல கணேசன் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தவிர வேறு யாருமே தமிழகத்தில் விலாசம் இல்லாமல் போய் விட்டார்களா? நானும் அவர்களை மதிக்கிறேன், ஆனாலும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தாம் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விவாதத்திலும் பொறுமையுடனும் தர்க்க பூர்வமாகவும் தன் கருத்தை எடுத்து வைக்கிறார்களே. திருமதி வானதி சீனிவாசன் அவர்களைப்பற்றி நான் செல்லும் சில கிராமத்தில் படித்த நம்மவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர், இதே போல் தான் திரு ஹெச் ராஜாவும்,
    வந்தே பாரத மாதரம்
    அன்புடன்
    நந்திதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *