நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?

morning_hindutvaசில ஆண்டுகளுக்கு முன்னர் ‘அவுட்லுக்’ பத்திரிகையில் எஸ்.ஆனந்த் என்பவர் ஒர் விஷயத்தை சொல்லியிருந்தார்:

When I set out on this essay, a friend suggested I ask around for the equivalent of the word Reason—reason the abstraction as opposed to reason the efficient cause—in Indian languages. Many pointed to the word for efficient cause, kaaran, and its derivatives. In Tamil, a non-Sanskritic language, I was led to paguththarivu, an early 20th-century word, a product of the Periyar-led rationalist movement, that connoted rationalism.

Reason என்பதன் வேர் என்ன?

நீங்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி பகுப்பினை ஏற்றுக் கொள்பவர் என்றால் இதன் வேர்கள் தொல்-இந்தோ ஐரோப்பியத்தில்   *ar- என்பதிலிருந்து வந்திருக்கலாம் என மொழியியலாளர் கருதுகின்றனர்.   அதன் பொருள் ‘பொருத்துதல்’ அல்லது ’இணைத்தல் ‘ என்பது.  கிரேக்கத்தில் இது வலுவான மரபாக வளர்த்தெடுக்கப்படும் முன்னால் ரோமானிய பேரரசாக்கம் அதனை தேக்கப்படுத்தியது. அலெக்ஸாண்ட்ரியா போல எஞ்சி நின்ற இடங்களிலும் அறிவியக்கம் கிறிஸ்தவத்தினால் முடக்கி ஒடுக்கப்பட்டது.  அரிஸ்டாட்டிலின் தத்துவம் + கிறிஸ்தவ இறையியல் ஆகியவற்றின் இணைப்பில் சமைக்கப்பட்ட ஒரு உலகப்பார்வையை மறுக்கும் எதுவும் இரக்கமின்றி அழித்தொழிக்கப்பட்டது.  சிலுவைப் போர்களின் போது அரேபியா சேகரித்து வைத்திருந்த பழமையான கிரேக்க இந்திய பாரசீக அறிவுப்புலங்கள் ஐரோப்பாவுக்குள் மீண்டும் நுழைந்தன. புது மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. தொழில் புரட்சி என அழைக்கப்படும் இயக்கத்தின் தொடக்க சலனங்கள் உருவாகின. ஐரோப்பாவின் காலனியம் மூலமாக அறிவியல் ஒரு பெரும் நிறுவனமாக மாறி தொழில் புரட்சி உச்சம் கொள்ள ஆரம்பித்த பிறகு காரண காரிய இணைப்பை சொல்லும் அறிவுக்கு Reason என்றும் அதனை அடிப்படையாக கொண்ட சிந்தனை rationalism என்றுமாயிற்று.

’Reason’ என்பதன் தொல்-இந்தோ-ஐரோப்பிய வேர் சொல்லான ‘  *ar- ’ எனபதன் ‘abstraction’ பாரதத்தின் மிக தொடக்கங்களில் இருந்தே ’ரிதம்’ எனப்பட்டது. (William K Mahony, The Artful Universe: An Introduction to the Vedic Religious Imagination, SUNY Press, 1998, பக்.235  )  அதனையே சத்தியம் என அழைக்கின்றனர். ’வெல்வது சத்தியமே; ரிதமின்மை அல்ல’ drum1என்பது உபநிடத குரல்.   ரிதத்தின் வெளிப்பாடே தர்மம். தர்மத்துக்கான தனித்தமிழ் சொல் அறம்.  அறம், அறிவு, ரிதம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு தொன்மையான இழையாக ‘*ar-’ எனும் வேர் சொல்லைக் காணலாமா?  ’ஆம்’ என கொண்டால் தமிழின் தொல் வடிவமும் தொல் இந்தோ ஐரோப்பியம் என மொழியியலாளர்களால் அழைக்கப்படுவதும் ஒரு மூலத்திலிருந்து கிளை பிரிந்தவையாக இருக்கலாம்.  சிவனின் உடுக்கையின் இரு பக்கங்களிலிருந்து தமிழும் சமஸ்கிருதமும் எழுந்ததாக சொல்லப்படும் தொன்ம படிமத்தில் ஒரு ஆதி மொழியியல் உண்மை பொதிந்திருக்கலாம்.

பாரத ஞான மரபுகள் அறிவு என்பதை பல தளங்களில் இயங்கும் இயக்கமாக கண்டன. பசு அறிவு, பாச அறிவு பதி அறிவு என அறிவு வெளிப்படும் நிலை-இயக்கத் தன்மைகளை நம் மரபு நமக்கு அளிக்கிறது. ரிதத்தை கண்டடையும் எல்லா நகர்வும் அறம் கொண்டதாக அமையும் என்பதையும் நம் மரபு நமக்கு சொல்கிறது. இரக்கமற்ற ஒரு பிரித்தறிதலை முன்வைத்து அதன் உச்சத்தில் அனைத்தையும் இணைத்தறியும் ஒரு பேரறிவை அது காட்டுகிறது. ஆதாரமாக இந்த பட்டினத்தார் பாடலை பாருங்கள்:

pattinathar1மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ, தோலிடைப்
புகவிட்டு பொதிந்த புண்ணோ, புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ, கூறு செய்து
இடையிடை நிற்கும் எலும்போ, எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ, வழுவழுத்து
உள்ளிடை யொழுகும் வழும்போ, மெள்ள நின்று
ஊரும் புழுவின் ஒழுங்கோ, நீரிடை
வைத்த மலத்தின் குப்பையோ, வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ, உடம்பிற்குள்
பிரியாதொறுக்கும் பிணியோ தெரியாது

இன்னது யான்என்று அறியேன், என்னை
எங்கும் தேடினேன். யாதிலும் காணேன்….
நின் தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப்படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றலின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும்
என்னையும் கண்டேன், பிறரையும் கண்டேன்;
நின்னிலையனைத்தையும் கண்டேன்;

buddhaqபிறித்தறிதலின் உச்சத்திலிருந்து முழுமை அறிவுக்கு நகரும் போது அதில் அறம் இயல்பாக  வெளிப்படுகிறது. தானாக பிறரை அறிதல்.  இதிலிருந்தே சமூக நீதி  உருவாகிறது. சமூக ஜனநாயகத்துக்கான மிகச்சிறந்த ஆன்மிக அடிப்படை இதுதான். இதுவே ஜனநாயகத்துக்கு உறுதியான அடித்தளமாக அமைய முடியும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியவர் பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்.  ‘அஹம் பிரம்மாஸ்மி’ ‘தத்வமஸி’ ஆகிய உபநிடத மகாவாக்கியங்களே ஜனநாயகத்துக்கு மிகச்சிறந்த மெய்யியல் அடிப்படையாக ஆக முடியும் என்றார் அவர்.   பாரதம் மட்டுமே ஜனநாயகத்துக்கான ஆன்மிக அடிப்படையை கொண்டிருக்கிறது என்பதை அவர் தொடர்ந்து சொல்லி வந்தார். பாராளுமன்றத்தில் சோவியத் மயக்கத்தில் இருந்த சோஷலிஸ்ட்கள் அவரை எதிர்கொண்ட போது புத்தருக்கு முந்தைய உபநிடத காலங்களிலிருந்தே பாரத சமுதாயத்தில் ஜனநாயகம் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். பௌத்த சங்கங்கள் ஜனநாயகத் தன்மை கொண்டவை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

br_ambedkar_185_20070820மேம்போக்காக பார்க்க இந்திய அமெரிக்க சட்டங்களின் அறிமுக பிரகடனங்கள் (preamble) ஒன்று போல இருப்பது போல தோன்றும் . ஆனால் அதில் நுண்ணிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் சட்ட வல்லுநர், ஆர்.ஜி.சதுர்வேதி .  அமெரிக்க பிரகடனம் ‘establish justice’ என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice’   என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது – அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது ஒரு primordial reality. சட்டம் அந்த நீதியை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் ஒரு கருவி.  (R.G.Chaturvedi, State and the Rights of Men, Metropolian Book Co.1971, p.190)

ரிதம், அறிவு, அறம் இவற்றை போல ஒரு primordial reality. அரசியல் சட்டத்தின் முன் பிரகடனத்தில் இந்த பாரத சாஸ்வத சத்தியத்தை  யாரால் இத்தனை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்க முடியும்?

ஒரு போதிசத்வரைத் தவிர.  இன்று நவம்பர் 26.

நாளை மீண்டும் சந்திப்போம்.

1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம்  சுதந்திரத்திற்குப் பின் கட்டமைக்கப் பட்ட சட்டசபையால் (Constituent Assembly)  ஏற்கப் பட்டது.  இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கியமான ஒரு தினம் நவம்பர் 26.

8 Replies to “நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?”

 1. அமெரிக்க பிரகடனம் ‘establish justice’ என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice’ என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது – அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது ஒரு primordial reality. சட்டம் அந்த நீதியை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் ஒரு கருவி. (R.G.Chaturvedi, State and the Rights of Men, Metropolian Book Co.1971, p.190)

  அருமை, அருமை; எடுத்துச் சொல்லவும் சொல்லப்பட்டவைகளை எடுத்துக்காட்டி விளக்கவும் ஒரு சிலராவது இருக்கிறீர்களே! இதுவே மக்கள் தொண்டு.

 2. Reason என்பதிலிருந்த வந்த rationality என்ற சொல்லை பகுத்தறிவு என்று கூறலாம் என்று ஜயமோகன் தன் பதிவொன்றில் குறிப்பிட்டு சற்றே ஈவெராவையும் சிலாகித்திருந்தார். அது பற்றி தமிழ்ஹிந்துவில் அரவிந்தனின் கட்டுரை கூட வந்திருந்தது. (http://tamilhindu.com/2013/11/tea1/) rational என்று சொல்லுமிடங்களில் பகுத்தறிவு என்ற பயன்பாட்டை தமிழில் பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலும் இதன் வேர்ச்சொல் நம்மை ரிதம் என்ற சொல்லுக்கு இட்டுச் செல்வதால் அதன் தற்கால மொழிபெயர்ப்பாக ஒழுங்கசைவு என்பதையும் அசைவொழுக்கம் என்பதாகவும் கூற முடியும். மேலும் இம்மொழியாக்கத்தின் அடிப்படை ஒழுக்கம் என்பதிலிருந்து வருவதாலும் rational என்பது அறிவுடன் தொடர்பு படுத்தப்படுவதாலும் அறிவொழுக்கம் என்ற சொல்லைக் கூட நாம் பயன்படுத்தலாம். பகுத்தறிவு என்ற சொல் எங்கு பயன்பட்டாலும் தமிழ்நாட்டில் இறைமறுப்பை பலருக்கும் நினைவு படுத்தும் அவலம் இருப்பதால் இதற்கான தேவையும் இருக்கிறது.

 3. மிக்க நன்றி அரவிந்தன் நீலகண்டன்;//பாரத ஞான மரபுகள் அறிவு என்பதை பல தளங்களில் இயங்கும் இயக்கமாக கண்டன// பன்மைதன்மைக்கும் இதற்கும் ஆதாராமாகவே நம் மரபு இருந்திருக்கிறது அதுவே மக்களுக்கு அருகில் பல விழுமியங்களை கொண்டு சேர்த்திருக்கிறது; பகுத்து அறிய தனிப்பட்ட முறையில் தேவையே இல்லாத பொது வலுக்கட்டாயமாக ஒரு ஒற்றை படைத்தன்மையை (மெக்கால/மேற்கால கல்வி !) திணித்துவிட்டு பிறகு பகுத்து அறியுங்கள் என்று போதிக்கப்பட்டது; நம் வரலாறில் நிழந்ததற்கு காரணமானவர்களை தோலுரிக்கவேண்டும். அதுவே பகுத்தறிவு இறைய எதிர்ப்புத்தன்மை என்பதை குறுகிய புத்திகாரர்கள் தான் பகுத்தறிவு என்றனர்; சார்வாகத்தை குறிப்பிட்டு எந்த குழுக்களும் முன்னெடுக்கவில்லை, நம் ஹிந்து மதத்தில் அதற்கும் ஒரு குழு/இயக்கம் முன்னெடுக்க படுமானால் எல்லாமும் சரியாகும்; நீங்களும் ஜெயமோஹனும் இவ்வகையில் சரியான பொருத்தம் என்பதே என் எண்ணம்

 4. ஓகை அவர்களே : ரிதம் அல்லது சினர்ஜி ஒத்திசைவு என்று எழுதபடுகிறது; பகுத்தறிவு என்ற வார்த்தை கற்பழிக்கபட்டதினால் அர்த்தத்தை புனருத்தாரணம் செய்யனுமா அல்லது புது வார்த்தை வேண்டுமா என்பது நீங்கள் எழுதியதில் சரிவர தெரியவில்லை.

 5. NVR,
  ரிதம் என்று சொன்னது ஆங்கில Rhythm அல்ல. அது ऋत என்பதினை தமிழ் படுத்தியது.

 6. அ.நீ.யும் , ஜெயமோகனும் கருத்தியலில் வெவ்வேறு பார்வை கொண்டவர்கள்.

 7. nvr//பகுத்தறிவு என்ற வார்த்தை கற்பழிக்கபட்டதினால் அர்த்தத்தை புனருத்தாரணம் செய்யனுமா அல்லது புது வார்த்தை வேண்டுமா என்பது நீங்கள் எழுதியதில் சரிவர தெரியவில்லை//

  thinking rationally என்பதை பகுத்தறிவோடு சிந்தித்தால் என்று எழுதுவதை விட அறிவொழுக்கத்தோடு சிந்த்தித்தால் என எழுதலாம் என்பது என் யோசனை. ஒத்துவருமானால் பயன்படுத்தலாம். அல்லது மேம்படுத்தலாம். (அல்லது படுத்தலாம் என்று சொல்லாதீர்கள்!)

 8. பட்டினத்தார் பாடலை படிக்க முடிந்ததற்கு மிக நன்றி. இதை கணினியில் ‘சேவ்’ பண்ண முடிந்தது இன்று. மிக நன்றி. இனி இந்தப்பாடல் வரும் நூல் விபரங்களையும் தெரியப்படுத்தினால் நன்று.
  மேலும் பாபா சாஹேப்பின் மேற்கோள் வரும் நூலையோ அல்லது பிரசுரத்தையோ அதன் விபரங்களையும் தெரியப் படுத்த வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *