“அந்த 5000 வருடங்கள் பழைய கடவுள் உறுதியான கார்ட் போர்ட் அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக என்னிடம் வந்து சேர்ந்தார்.. 9000 மைல்களுக்கு அப்பால், தென்னிந்தியாவின் ஒரு தொலைதூர மூலையில் மண்ணிலும் உலோகத்திலும் நெருப்பிலும் வியர்வையிலும் பிறந்து, வரலாற்றிலும் மரபிலும் யுகங்கள் கடந்து, கனெக்டிகட் நகரத்தின் ஒரு கடை வழியாக என்னை வந்தடைந்திருக்கிறார்… “
Mark Morford என்ற அமெரிக்க எழுத்தாளர், யோக பயிற்சியாளர் ஒரு பெரிய நடராஜர் சிலையை வரவழைத்து தன் வீட்டில் வழிபடு தெய்வமாக நிறுவியது குறித்து எழுதிய ஒரு பத்திரிகைக் கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மேலே உள்ளவை அக்கட்டுரையின் ஆரம்ப வரிகள்.
நடராஜ தத்துவத்தைப் பற்றியும் அந்தத் திருவுருவின் கலைச் செழுமை பற்றியும் அவருக்கு மிக எளிமையான, ஆனால் ஆன்மீக நோக்கு கொண்ட ஒரு புரிதல் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமும் பூரணமும் விசாலமும் வாய்ந்த ஒரு கடவுளை எப்படி நான் ஒரு சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து சம்பிரதாயமாக வணங்குவது என்று திகைக்கிறார்.
“உங்களது கடவுள்களை எப்படி பிரதிஷ்டை செய்வீர்கள்? எப்படி முறைப்படி போற்றுவீர்கள்? எந்த வகையான பேரதிர்ச்சியுடன், மூச்சடைக்காமல் தலைகுனிந்து வணங்குவீர்கள்? எனக்கு சர்ச்சுகளில் நம்பிக்கை இல்லை. குற்ற உணர்விலும் அவமதிப்பிலும், ஒரு கூச்சலிடும் நியாயத் தீர்ப்புக் காரரிடம் உங்களது அடையாளத்தைத் தொலைத்து விடுவதில், பாவத்திலும் வெட்கத்திலும் நிறைந்து, ஒரு கட்டையில் ஆணியடிக்கப் பட்டு ரத்தவிளாறாகி நிற்கும் உடலின் கோர உருவத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவற்றால் புனிதமானது எதையும் அடைய முடியாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்?
இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? மாயையை அழித்து, அறியாமையைத் தோற்கடிக்க முயன்றால் என்ன? ஒவ்வொரு சுவாசத்திலும், புன்னகையிலும், பாடலிலும், கைகுலுக்கலிலும், காயத்திலும், பரவசத்திலும், வேதனையிலும், சாவிலும் முழுமையான உணர்வுடன் இருந்து பார்த்தால் தான் என்ன? அது என்னால் முடியும். அதை நோக்கி சுவாசிக்க, கண்ணசைக்கவாவது முடியும்.. கடவுளர்கள்? திருப்பிக் கண்ணசைப்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த விஷயம் அல்லவா?”
இப்படி முடிகிறது அந்தக் கட்டுரை.
நடராஜரின் திருவுருவம் உலகின் எந்த மூலையிலும், பிரக்ஞையும் தேடலும் கொண்ட மனிதர்களிடம் ஒரு ஆன்மீகமான பிரமிப்பையும் மூச்சடைப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம். அப்பரையும் மணிவாசகரையும் மட்டுமல்ல, கார்ல் சாகன், ப்ரிட்ஜாஃப் காப்ரா, ஆனந்த குமாரசுவாமி, புதுமைப்பித்தன் போன்ற நவீன மனங்களையும் ஆடவல்லானின் பேரெழில் கொள்ளை கொண்டிருக்கிறது.
நமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக, சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிமமாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது. பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர். அந்த வகையில் நடராஜர் காலமாகவும், காலம் கடந்த காலாதீதமாகவும் இரண்டு நிலைகளிலும் தொடரும் சலனமாக இருந்து உறைகிறார் எனலாம்.
எல்லையொன்றின்மை எனும்படி விரிந்து கிடக்கும் ஆடலரசனின் அற்புதப் பான்மைகளை அழகாக வடித்தெடுத்து நமக்கு அளித்திருக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த கலை வரலாற்று ஆளுமைகளில் ஒருவரான சி.எஸ்.சிவராம மூர்த்த்தி. தனது வாழ்நாள் முழுவதும் நடராஜரைக் குறித்த தியானத்திலும் கல்வியிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்த மனம் அவருடையது. அதன் பயனாக, Nataraja in Art, Thought and Literature என்ற மகத்தான நூல் 1974ம் ஆண்டு உருவானது. பெரிய அளவு தாளில் 400 பக்கங்களுக்கு மேல் பல புகைப்படங்களுடன் விரியும் இந்த நூல் நடராஜரைக் குறித்த முழுமையான கலைக்களஞ்சியம் என்று சொல்வதற்குத் தகுதியானது. நாட்டியம், கரணங்கள், சிவ நடனத்தின் வேத மூலங்கள், சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நிகழ்த்து கலைகளிலும் நடராஜரின் வெளிப்பாடுகள் என விரிகிறது இந்த நூல். சோழர் காலத்திய நடராஜர் செப்புப் படிமங்கள், கேரளக் கோயில்களின் சிவ நடன ஓவியங்கள், சாளுக்கிய, காகதீய, ஹொய்சள காலத்திய நடராஜ சிற்பங்கள், வங்கத்திலும் ஒரிசாவிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியே இலங்கை, நேபாளம் கம்போடியா, இந்தோனேசியா, பாலி, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ள சிவ தாண்டவ மூர்த்திகள் என்று அனைத்தையும் ஆவணப் படுத்தியிருக்கிறார்.
நடராஜ மூர்த்தியின் சிற்ப லட்சணங்களும் அழகியலும், தத்துவ விளக்கங்களும் பிற்காலச் சோழர்களின் காலமான 9-10ம் நூற்றாண்டுகளில் தான் உருவாகி வளர்ந்தன என்று பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளும், அறிவியல் முறையிலான அகழ்வு-உலோக ஆய்வியல் (archeo-metallurgy) பரிசோதனைகளும் 6-7ம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்திலேயே இது நிகழ்ந்து விட்டதை நிரூபிக்கின்றன.
ஆரம்பத்தில் உற்சவங்களில் மரத்தால் செய்யப் பட்ட நடராஜ மூர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கல்லிலும் உலோகத்திலும் அவை வடிக்கப் பட்டன. சீயமங்கலத்தில் உள்ள தூண் சிற்பமும், கூரம் கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டு சென்னை அருங்காட்சியத்தில் உள்ள நடேசர் உலோகப் படிமமும் தமிழகத்தின் மிகப் பழமையான நடராஜ சிற்பங்களின் வகையைச் சார்ந்தவை.
எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். வஸ்திரங்களும் மாலைகளும் இன்றி இயல்பான எழிலுருவில் நடராஜரைக் காண மனம் விழையும். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜரின் திருமுகம் நேராகவோ, ஒரு பக்கமாக சாய்ந்தோ இருப்பது, உடுக்கையும் அக்னியும் தரித்திருக்கும் மேற்கைகள் உயர்ந்து அல்லது தாழ்ந்து இருக்கும் கோணம், சடா மகுடத்தின் அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்.
2010ம் ஆண்டு திருவாதிரைத் திருநாள் அன்று சிதம்பரத்திலேயே சபா நாயகரை தரிசனம் செய்யும் நற்பேறு கிட்டியது. தில்லைக் கோயிலின் பெரும்பரப்பு முழுவதும் மக்கள் திரள். உள் மண்டபத்துள் அடியார் குழாத்துடன் காத்திருப்பு. மதியம் இரண்டு மணி ஆருத்ரா தரிசன நேரம் நெருங்கியது. மெல்ல வாத்திய ஓசை எழுந்து, பின் பெரும் நாதமாக வளர்ந்தது.. நீண்ட கொம்பு வாத்தியங்கள், எக்காளங்கள், சங்குகள், உடுக்கைகள், பிரம்ம தாளங்கள் முழங்கின. தீவட்டிகளை சட்டமாகச் சொருகிய பெரும் தீச்சுடர்களைச் சுமந்து தீட்சிதர்களும் அடியார்களும் தோளோடு தோள் சேர்த்து சன்னதத்துடன் அந்த தாளகதிக்கு ஆடி வர, சகல ஆபரணங்களுடன் சபாநாயகர் மண்டபத்துக்குள் நுழைந்தார் ! பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள்.. வார்த்தைகள் எதுவும் அந்த நேரத்தில் வரவில்லை. அற்புத தரிசனம் ! “கனக சபாபதி தரிசனம் ஒரு நாள் – கண்டால் கலி தீரும்” என்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் தான் ஞாபகம் வந்தது.
சிதம்பரம் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலுள்ள மற்ற முக்கிய கோயில்களையும் பார்த்துக் கொண்டே சென்றோம். சீர்காழியில் நடராஜர் சிவகாமி திருவுலாக் காட்சி அற்புதமாக இருந்தது. எங்கும் திருவாதிரை விழாக் கோலம். திருவெம்பாவைப் பாடல்களும் நடராஜர் அபிஷேகமும் களை கட்டிக் கொண்டிருந்தன.
திருக்கடையூரில் சன்னிதிகள் எல்லாம் பார்த்து முடித்ததும் நடராஜரைத் தேடிக் கொண்டிருந்தேன். வெளி மண்டபத்தில் இருந்தார். திருவாதிரை ஊர்கோலம் எல்லாம் முடிந்த களைப்பில், அலங்காரங்கள் எல்லாம் துறந்த நிலையில் அட்டைப் பெட்டிகளுக்கு இடையில் கொலுவிருந்தார் அம்பல வாணர். அமெரிக்க ஆப்பிள்களை சுமந்து வந்திறங்கிய அட்டைப் பெட்டிகள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
கிட்டத்தட்ட 30 அல்லது 40 ஆண்டுகளுக்கும் முன்னே அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட “Tao of Physics” என்ற நூல் ஒளிக்கதிர்களின் அசைவுகள் பற்றிய ஆய்வுகளைச் சொல்வதாகும். இதன் ஆசிரியர் Frittjof Capra தன் அறிவியல் நூலின் அட்டையில் ஆடுகின்ற நடராஜாவின் படத்தைத்தான் போட்டிருந்தார்.
சிரிப்பார் களிப்பார த்யாநிப்பார் , திரண்டு திரண்டு உன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேராயிருந்து உன்திருநாமம்
தரிப்பார் பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார் — அவர்முன்னே
நரிப்பாய் நானும் இருப்பேனோ ? நம்பீ ! எனைத்தான் நல்காயே !
திருவாசகம்
ஆம். அறநிலை துறையை பொருத்தவரை இவர் பணத்தை சம்பாதித்து கொண்டுக்கும் ஒரு சிலை… ஊர்வலத்திற்கு சென்று பணத்தை சம்பாத்தித்து கொடுதாயிற்று… அதனால் தான் மூலையில் போட்டு உள்ளனர்.
அந்த பெட்டியில் போடாமல் விட்டார்களே என்று சந்தோஷப்படுங்கள்..
கொசுறு செய்தி: சென்ற ஆதிமுக ஆட்சியில் நடந்த 400 கோடி மதிப்பிலான தங்கத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை நடத்த ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு இன்னும் கிடப்பில் போட்டு வைத்து இருக்கிறார்..
ஆதிமுக ஆட்சியில் திமுகவுக்கு ஆதராக இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் தனபாலன் உள்ளார் என்று பல குற்றச்சாட்டுகள் இருந்தும் இவர் மீது யாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை…
வள்ளல் அருணகிரிப்பெருமான் :
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் முருகோனே
கட்டுரையின் நோக்கம் புரியவில்லை . கனகசபை கலி நடனத்தை ஒருமுறை கண்டால் கலி தீரும் என்றால் திரும்ப திரும்ப ஆண்டவன் திருமணியை ஏன் அனுபவிக்கவேண்டும்
The temple should be out of clutches of people who steal.
அருட்பா கூறுவது போல:
‘பார்த்தாலும், நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பு’
அல்லவோ நடராசன்? நம் மனத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப அவனை எவ்வாறாயினும் வழிபடலாமே!
சிந்தனையைத் தூண்டி விடும் அழகான கட்டுரை. எழுத்தாளருக்கு நன்றி.
நடராஜர் பற்றிய புத்தகம் யார் வெளியீடு எனத் தெரிவித்தால் நலம்.
மீனாக்ஷி பாலகணேஷ்
அன்புள்ள Meenakshi Balganesh அவர்களுக்கு நன்றி.
அந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் Publications Division, Ministry of Information & Broadcasting, Govt. of India.
https://publicationsdivision.nic.in/b_show.asp?id=61
வழக்கமான கடைகளில் கிடைக்காது. அவர்களது விற்பனை நிலையத்திலோ அல்லது சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர்களது கடையிலோ தான் பெற முடியும்.
திரு ஜடாயு அவர்களுக்கு, நன்றி.
கோனேரிராஜபுரம்(பழைய காலத்தில் திருநல்லம்) நடராஜரையும் ஒரு முறை பார்த்துவிட்டு வாங்க. நடராஜர் நகங்களோடும், மச்சத்தோடும் நிஜமான உயிருள்ள ஆண் போலக் காணப்படுவார். செம்பியன் மாதேவி செய்த திருப்பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் அந்தக் கோயிலில் உண்டு. குந்தவையும் நிவந்தங்கள் அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் இருப்பதாய்க் கூறுகின்றனர். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். என்றாலும் நினைவூட்டலுக்காக……….. 🙂
அடல்வல்லானைப்பற்றி அழகாக வரைந்த ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு நன்றி.
சிதம்பரத்தில் படிக்கவேண்டும் என்று நினைத்ததில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் அவன் திருவடியில் இருக்கும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்தது. தினம்தோறும் ஆலய வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாதவன் என்றாலும் தோன்றுகின்ற நேரத்தினை அவனது அழைப்பாய் எண்ணி தரிசிப்பது வழக்கம்.பெரும்பாலான ஆனித்திருமஞ்சத்தின் போதும் திருவாதிரையின் போதும் நடராஜனை தரிசனம் செய்தது உண்டு. தில்லையில் தரிசிக்க முக்தி என்று சொல்வார்கள். தில்லையில் தரிசனம் அளிக்கும் நிறைவே நிறைவென்பேன்.
ஆன்மிகத்தில் நம்தேசம் அடைந்த உச்சத்திற்கும் ஆழத்திற்கும் ஒரு அற்புதமான உதாரணம் ஸ்ரீ நடராஜரின் அற்புதவடிவம் என்றால் மிகையன்று. குனித்தப்புருவமும் கொவ்வைசெவ்வாயும் கொண்ட ஆடல்வல்லான் திருவடி பணிவோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் உரிய இறைவா போற்றி என்று சொல்கிறோம்.
இந்த சீனத்து அன்பரின் தெய்வீக மணம் கமழும் இன்னிசைப் பாடல்கள் அதை உணர்த்துகின்றன என்றால் மிகையாகாது
கேட்டுமகிழுங்கள் சீனத்து இளைஞர் ஆடல்வல்லானை தெய்வீகமாகப் பாடுவதை
https://www.youtube.com/watch?v=rOY9jHc8gsA
ஒலிப்பதிவு அவ்வளவாகத் தெளிவாக இல்லை. பின்னும் bhavam அருமையாக வெளிப்படுகிறது
//நமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக, சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிமமாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது. //
தமிழர்களின் நுண்ணறிவாற்றளுக்கு மிக சிறந்த எடுத்துகாட்டு . இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அறிவியல் பூர்வமான நடராசரின் திரு உருவ வழிபாடு நம் தமிழ்நாட்டில் இருப்பது தமிழர்களின் அறிவு திறனுக்கு மேலும் ஒரு சான்று. இன்றைய 2oஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளால் பகுத்தறிய பெற்ற அணுவியல் கோட்பாட்டை. அன்றே தமிழர்களால்( 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு)பகுத்தறிந்து கூறபெற்றது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை தர கூடிய ஒன்று…
‘சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து என்று வந்தாய் என்னும் திருக்குறிப்பே’