சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!

அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக இடம் பிடித்த செய்திகளைப் பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் வகிப்பவை பாலியல் அத்துமீறல்கள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. குறிப்பாக தெஹல்கா இணையதளத்தின் ஆசிரியர் தருண் தேஜ்பால் (50) தொடர்பான குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

.
‘ஊருக்கெல்லாம் சகுனம் சொன்ன பல்லி, தவிட்டுப் பானையில் விழுந்ததாம் துள்ளி’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கலாம். அதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் தான் தருண் தேஜ்பால். இவர் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவந்த புலனாய்வுப் பத்திரிகையாளராக அவதாரம் எடுத்ததே காங்கிரஸ் கட்சிக்காகத் தான். அக்கட்சியின் வாயாடி அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் தான் தருண் தேஜ்பால். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அதற்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தளம் தெஹல்கா.

.
இவர்கள் நன்கொடை தருவதாக விரித்த வலையில் விழுந்து பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் பதவியும் மரியாதையும் இழந்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான செய்திகளை பொய்களைக் கலந்து உற்பத்தி செய்வதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த தளம் இது. இதன் புலனாய்வு நடவடிக்கைகளால் அஞ்சிய அரசியல்வாதிகள் பலரும் நமக்கெதற்கு வம்பு என்று கும்பிடு போட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். இந்த அச்சத்தையே மூலதனமாக்கி, மிரட்டல் மற்றும் தரகு மூலமாக பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் தேஜ்பால் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

.
என்ன தான் ஊழலை எதிர்த்து முழங்குவதாகக் கூறினாலும், தெஹல்காவின் பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பாது. அதனால் தானோ, பாலியல் புகாருக்கு உள்ளான தேஜ்பாலுக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது!

1980-லிருந்து பத்திரிகையாளராக உள்ள தேஜ்பால், ஆங்கில நாவல் எழுத்தாளராகவும் பிரபலமானவர். 2007-லிலிருந்து தெஹல்கா வார இதழாகவும் வெளிவருகிறது. பத்திரிகை நடத்துபவர்களின் அதிகார மேலாண்மை அனைவரும் அறிந்தது. அதிலும், தேஜ்பால் ஆளும் கட்சியின் இடைத் தரகர் வேறு. வெளிநாட்டு நாகரிகத் தாக்கமும், மேல்மட்டத் தொடர்புகளும் தேஜ்பாலின் அட்டகாசத்திற்கு வித்திட்டுவிட்டன.

.
இவர் கடந்த நவம்பர் 20-ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு (தெஹல்கா நடத்திய நிகழ்ச்சி அது) சென்றபோது, சக பெண் ஊழியர் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி நடந்த ஓட்டலின் லிஃப்டில் சென்றபோது பெண் பத்திரிகையாளரை உள்ளே தள்ளி பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.

.
அதுகுறித்து அந்தப் பெண், தனது பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. தலைநகரில் தேஜ்பாலை அறிந்தவர்கள் எவருமே இத்தகைய புகாரால் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். இவ்வாறு சக பெண் பத்திரிகையாளர்களிடம் அத்து மீறுவது அவரது இயல்பான வழக்கம். இதுவரை யாரும் இதை எதிர்க்கவில்லை. இப்போது ஒரு பெண் பத்திரிகையாளர் துணிந்துவிட்டார். பணியாற்றும் இடத்தில் புகார் செய்தும் பலனில்லாததால், இணையதளத்தில் தனது பிரச்னையை அம்பலப்படுத்தினர் அந்தப் பெண்.

.
அதையடுத்து இப்பிரச்னை பூதாகரமானது. தேசிய மகளிர் ஆணையம், பெண்ணுரிமை அமைப்புகள் போன்றவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவே, தருண் தேஜ்பால் அவசர அவசரமாக விளக்கம் அளித்தார். மதுபோதையில் தான் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டுவிட்டதாகவும், அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

.
அதாவது அவர் வருத்தம் தெரிவித்தால், உடலாலும் உள்ளத்தாலும் சிறுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் பாதிப்பு காணாமல் போய்விடும் என்று எண்னி இருப்பார் போல. அவர் 6 மாதங்களுக்கு ஆசிரியராக இல்லாவிட்டால் அந்த்ப் பெண்னின் ‘பாதிப்பு’ இல்லாமல் போய்விடும். என்ன ஓர் அற்புத விளக்கம்!

.

இதுதான் ஊடக தர்மமா?

இதனிடையே, பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த நிர்பந்தங்களால், சம்பவம் நடைபெற்ற மாநிலமான கோவாவில், தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கோவா போலீஸாருக்கு ஒத்துழைக்க தேஜ்பால் மறுத்தார். மேலும் கோவா போலீஸாரை மிரட்டவும் செய்தார். சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்களில் இருந்த காட்சிகளில் தேஜ்பாலின் அத்துமீறல்கள் பதிவாகி இருந்தன. அதை அறிந்த பிறகே தேஜ்பாலின் கொட்டம் அடங்கியது. இதனிடையே கைதாவதிலிருந்து முன்ஜாமின் பெற அவர் முயன்றார்.

.
கோவாவில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் (நவம்பர் 30) நடைபெற்றபோது, புகார் அளித்த பெண்ணின் பெயரை தேஜ்பாலின் வழக்குரைஞர் வெளிப்படுத்தினார்.  பாலியல் புகார் கூறுபவரின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்பதை மீறி இவ்வாறு நடந்துகொண்டதை நீதிபதியே கண்டித்திருக்கிறார். சக ஊழியரை போதையில் அணுகியபோதே தேஜ்பாலின் தொழில்தர்மம் சந்தி சிரித்துவிட்டது. அவரது பெயரைக் கூறி மேலும் சிறுமைப்படுத்த முயன்றபோது, தேஜ்பாலின் ஊடக தர்மமும் நீதிமன்றத்தில் அம்பலமானது.

.
இப்போது தேஜ்பால் மீது புகார் கூறிய பெண் வேலையை இழந்திருக்கிறார். அவரை வேறெந்த ஊடகமும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதனால் தான் பல பெண்கள் பணியிடங்களில் நிகழும் அத்துமீறல்களை சகித்துக் கொண்டு விரக்தியாக காலம் தள்ளுகிறார்கள்.

.
நீதிமன்றத்தில் வாதிட்ட தேஜ்பாலின் வழக்குரைஞர், தேஜ்பால் அத்துமீறினாலும் பலவந்தப்படுத்தவில்லை என்று கூறி இருக்கிறார். இவரது கண்ணோட்ட்த்தில் பலவந்தம் என்றால் என்ன என்று புலப்படவில்லை. ஆனால், புகார் கூறிய பெண் மிகவும் தைரியமாக தேஜ்பாலின் நடவடிக்கைகளை துணிச்சலான அறிக்கை மூலமாக (நவம்பர் 29) அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இதோ அவரது அறிக்கை:

தேஜ்பாலின் அத்துமீறல் விவகாரத்தில் எனக்கு பரந்துபட்ட அளவில் ஆதரவு கிடைப்பது ஆறுதளிக்கிறது. அதே நேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதியாக்கப்படுவது ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.

பெண்கள் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் பெண்ணிய அரசியல் என்பது அரசியல் கட்சிகளால் பாதிக்கப்படுகிறது. இது பெண்கள் மீதான வன்முறை, பெண்களின் அதிகாரம் தொடர்பான பிரச்னை. இதில் அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

தருண் தேஜ்பால் என்னை பலாத்காரம் செய்வதற்கு முன்பும் பின்புமான என்னுடைய செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகளின் விமர்சகர்கள் பலரும் பலவாறு கேள்வி எழுப்புகின்றனர். பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரையறைகளைக் கொடுத்திருக்கிற தோ, அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால் செய்தார்.

நான் என்னுடைய தாயார் ஒருவரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குரலை எழுப்பி இருக்கிறேன். என்னுடைய தந்தையார் பல ஆண்டுகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தேஜ்பாலை போல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான் போராடவில்லை. இது என்னுடைய உடல். எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் என்ற பெயரால் எவரும் என் உடலில் விளையாட அனுமதிக்க முடியாது. நான் புகார் தெரிவித்திருப்பதால் இழந்திருப்பது பணியை மட்டுமல்ல. என்னுடைய நிதிப் பாதுகாப்பையும் கூடத் தான்.

இந்தப் போராட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கையில், பெண்கள் தங்களைச் சுற்றிய பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்றே எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். நமது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நமது பலத்தை சீர்குலைத்து அதையே நமக்கு எதிரான பலவீனமாக்குவார்கள். இந்த விஷயத்தின் நான் அமைதியாக இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் டெஹல்கா நிறுவனத்தின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. ஆனால் இது,  வார இதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால்தானே தவிர பணியாளராகிய என்னால் அல்ல. அனைவரது ஆதரவுக்கும் நன்றி.

இவ்வாறு அப்பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

காண்க:  தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

கயவன் தேஜ்பாலுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

இந்நிலையில் தெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் தனது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை உடனே விசாரிக்காமல் காலம் தாழ்த்தியதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்கிறார். தெஹல்கா நிறுவனத்தின் சில பங்குதாரர்களும் விலகி உள்ளனர்.  மொத்தத்தில், சதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் ஊடகம், தனது தவறுகளாலேயே தனது புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது.

.
பாலியல் புகாரில் தேஜ்பால் தப்பிக்க முடியாது என்பது தெரிந்தவுடன், பாஜக அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாக தேஜ்பால் தரப்பினரும் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களும் புலம்பி வருகின்றனர். குஜராத் முதல்வர் மோடியை இளம்பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமான அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி இதைச் சொல்வது தான் வேடிக்கை. குஜராத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டதற்காக போலீஸ் பாதுகாப்பு அளித்த மோடியை வில்லனாக சித்தரிப்பவர்கள், கையும் களவுமாக சிக்கியுள்ள் தேஜ்பாலைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

தேஜ்பால் தரப்பினரின் திசைதிருப்பும் பிரசாரங்களை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (பாஜக) மறுத்திருக்கிறார். ‘தருண் தேஜ்பால் தொடர்பான வழக்கில் அரசியல் நிர்பந்தம் ஏதும் இல்லை. இந்த வழக்கின் போக்கை தாம் கண்காணிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவான பிறகே கோவா போலீஸார் என்னிமிடம் வழக்கின் விவரங்களை தெரிவித்தனர்’ என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

.
மெல்ல சிறு அவல் கிடைத்தாலும் ஊதிப் பெரிதாக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், தேஜ்பால் விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இதுபற்றியெல்லாம் ’24 மணிநேர விவாதங்கள்’ நடத்தப்படக் கூடாதா? நடத்தினால், கண்னாடி வீட்டுக்குள் இருந்து கல் வீசுவதாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வா?

.
இப்போது தேஜ்பால் கைதாகி இருக்கிறார். லாக் அப் அறையில் போலீஸ் விசாரணையில் கதறி அழுகிறாராம் ‘ஊழலுக்கு எதிரான’ இந்த ஹீரோ! அவருக்கு இப்போதும் ஊடக உலகில் சிலர் ஒத்தாசை செய்கிறார்கள். எல்லாமே மோடியின் சதியாம். மோடியா, உடன் பணிபுரியும் மகள் வயதுடைய பெண்ணை (பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி வேறு! தேஜ்பாலின் அக்குறும்புகளை அவரது மகளிடமே சொல்லி அழுதிருக்கிறார் அந்த பெண் பத்திரிகையாளர்) பலவந்தம் செய்யச் சொன்னார்? .

தேஜ்பால் இந்த வழக்கில் அவர் செய்த பாவத்திற்குரிய தண்டனை பெறட்டும். அதற்கு பல்லாண்டுகள் ஆகலாம். எனினும், இவ்விவகாரத்தில் துணிந்து புகார் செய்த அந்தப் பெண் போற்றுதலுக்குரியவர். அவரது எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, நியாயமான ஊடகங்கள் உதவ வேண்டும்.

.
இவ்விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஊடகத் துறையில் பெண்கள் சில சமரசங்களைச் செய்தால் தான் முன்னேற முடியும் என்ற நிலை இருப்பது உண்மையா? அவ்வாறு இருக்குமானால், ஊருக்கு உபதேசம் செய்ய தார்மிக உரிமை ஊடகங்களுக்கு உண்டா?

மேலைநாட்டு மோகமும் மது பரிமாறும் விருந்துகளும் நமது ஊடகத் துறையைப் பற்றியிருக்கும் சாபக் கேடுகள் என்பதை நமது ஊடக நண்பர்கள் இனியேனும் உணர்ந்து தவிர்ப்பார்களா?

.
இக்கேள்விகளுக்கு நியாயமான பதில் அளிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேஜ்பால் விவகாரம் நம் கண்ணுக்குத் தெரியவந்துள்ள ஒரு பிரச்னை மட்டுமே. ஊடகங்கள் சுயபரிசீலனை செய்தாக வேண்டிய விஷயம் இது.

 

14 Replies to “சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!”

 1. சூப்பர் தலைப்பு சேக்கிழான் அவர்களே, தலைப்புக்கு முதல் நன்றி. இந்த டெஹெல்கா பல்லி கடைசியில் போக வேண்டிய சிறைச்சாலையில் தான் போய் சேர்ந்திருக்கிறது. காங்கிரசின் சொம்பு தான் இந்த ஒருதலை டெஹெல்கா . விரைவில் மூடுவிழா காணும் பத்திரிகை ஆகப்போகிறது.

 2. இவ்வாறு சக பெண் பத்திரிகையாளர்களிடம் அத்து மீறுவது அவரது இயல்பான வழக்கம். இதுவரை யாரும் இதை எதிர்க்கவில்லை. Without any proof, the writer is throwing mud on other women who worked with Tejpal!.

 3. அன்புள்ள கே.எம்.வி,

  நான் எழுதியிருப்பது தலைநகர வட்டாரத் தகவலைத் தான். சில விஷயங்களை எழுதித் தானே ஆக வேண்டியிருக்கிறது? 🙁

  //இதனால் தான் பல பெண்கள் பணியிடங்களில் நிகழும் அத்துமீறல்களை சகித்துக் கொண்டு விரக்தியாக காலம் தள்ளுகிறார்கள்.// என்றும்

  //ஊடகத் துறையில் பெண்கள் சில சமரசங்களைச் செய்தால் தான் முன்னேற முடியும் என்ற நிலை இருப்பது உண்மையா? அவ்வாறு இருக்குமானால், ஊருக்கு உபதேசம் செய்ய தார்மிக உரிமை ஊடகங்களுக்கு உண்டா?// என்றும்,

  -இதே கட்டுரையில் நான் எழுதி இருப்பதை கவனிக்கவில்லையா?

 4. Kudos to the article.

  Indian Express states that Hon`ble Tejpal Maharaj owns a village in Goa.

  Probably, the root cause-the source of accumulation of wealth should also be included in the investigation.

  Then only such kind of people with the power of money and influence with politicians will not do such kind of mistakes in future.

  Thx

 5. tejpal is strong congress supporter. if tejpal’s supportes know, let them tell, what is the value of his properties and how he aquired it. in first post, there was an article about his share “play”.
  i wish, tejpal’s supporters will disprove it.
  a lady reporter already reported about him before. but because of his political connections, it was subdued. only tejpal can throw mud on the people whom he does not like.
  again i am saying, i never saw tehelka magazine anywhere, except internet.
  if tejpal’s supporters know, let them tell how many copies of tehelka are sold weekly.
  there was one more reoprt about tejpalthat he dismissed one reporter, because he wrote about congress chief minister connecting with mines scam. If a man misbehaves with his employee in a public place or work place, there is huge possibility, that he is a regular offender and womanizer.

 6. //ஊடகங்கள் சுயபரிசீலனை செய்தாக வேண்டிய விஷயம் இது.// ஊடகங்களின் தவறான வழிநடத்தல்களினால்தான் தேசத்தில் பல குழப்பங்கள். தங்களது தர்மத்தில் நடக்காததனால் ஊடகங்கள் இந்நிலையை ஏற்படுத்தியுள்ளன.

 7. உப்பை தின்ற இந்த மனித வடிவ அரக்கன் நிரந்தரமாக கம்பிகளுக்கு பின்னே களிதின்ன வேண்டும். பா.ஜ.க.வை எந்தவிததிலெல்லாம் சிறுமை படுத்தவேண்டுமோ அதனையே தனது முழு தொழிலாக செய்தவன். தெய்வம் அத்தகைய நபரை நின்று தண்டித்து விட்டது. இவனுக்கு கொண்டைவேறு!

 8. இது மாதிரி வழக்குகள் விரைவில் தீர்க்கப்படவேண்டும். குற்றவாளி தண்டனை முடிந்தபிறகு மக்கள் முன்னிலையில் சுதந்திரமாக நடமாடுவர். திரும்பவும் குற்றம் செய்வர் மன்னிக்கபடுவர். இது தொடர்கதை. உடல்ரீதி தண்டனையை விட உள்ளரீதியில் இருக்கவேண்டும். குற்றவாளியை பொதுஇடங்களில் மாறி மாறி கட்டி வைத்து உமிழவேண்டும். பாலியல் இன்பம் ஒரு நொடி. ஆனால் இந்த துன்பம் சாகும்வரை மறக்காது.

 9. Sri Bangaru Lakshmanan is a dalit Bjp face and he was the BJP president then. When some one came on friday evening and offered some money as a donation Rs 3 lacs, sentimentally he will not refuse due to refuting the arrival of goddess lakshmi. This money was not given for any specific purpose but a donation. He was trapped by this Tekelha since christian missionaries,congress and Sonia were afraid that all dalits would galvanize towards BJP and conversion would not be possible and also Dalits would naturally vote for BJP. so he was trapped and supreme court pronounced him to undergo jail sentence of 3 years for this. Now Tejpal will undergo up to 7 years for the dirty trick he did on many of innocent people. They forced bribe on leaders and put them in trouble later. Now this guy fell himself in trap.

 10. இந்த மாதிரி கேடு கேட்ட ஆள் நடத்தும் பத்திரிகை எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் பத்திரிக்கையாக இருக்கும்? ஒரு அப்பாவி மனிதரை வேண்டுமென்றே தரம் தாழ்த்திய இந்த ஆளின் கேடுகெட்ட தனம் அம்பலமானதில் பாதிக்கப்பட்ட அந்த வீரப் பெண்ணின் தைரியமே முதற்காரணம். பாதிக்கப் பட்ட அந்தப் பெண்ணிற்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டியது ஒவ்வொரு நல்லுள்ளங்களின் கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *