கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி

ல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை எனபது முதுமொழி. பாரதியும்‘காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுத்தே’ என்று சொல்கிறான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் காரிகைகள், கணவனின் காரியங்களில் கை கொடுத்திருக்கிறார்கள். என்பதை நமது இதிகாச புராணங்களில் காப்பியங்களில் பார்க்க முடிகிறது.

சம்பராசுரப் போரிலே தசரதனுக்குக் கைகேயி தேரோட்டினதாகத் தெரிகிறது. சத்ய பாமாவும் கண்ணனுக்குத் தேரோட்டினாள் என்று பார்க் கிறோம். சுபத்திரையும் தேரோட்டுவதில் திறமை பெற் றி ருந்தாள். எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். அவள் அன்னையாகவோ மனைவியாகவோ சகோதரியாகவோ, ஏன் மகளாகவோ கூட இருக்கலாம். ஒரு காரியம் நிறைவேற அவர்கள் ஒத்து ழைப்புத் தந்தி ருக்கிறார்கள். இத்தகைய பெண்களைப் பார்க்கலாம். இல்லறத்தானுக்கே கடமைகள் அதிகமாக விதிக்கப்பட்டிருக்கின்றன. துறவு பூண்டவர்களையும் இல்லறத்தான் பேணவேண்டும். துறவிகள் பிக்ஷை கேட்கும் போதும் பிரும்மச்சாரிகள் பிக்ஷை கேட்கும் போதும் இல்லறத்தான் தான் அவர்களுக்கு பிக்ஷை அளிக்க முடியும். அப்படி இல்லறத்தான் துறவிகளுக்கும் அடியார்களுக்கும் பிக்ஷை அளித்து உபசரிக்க வேண்டும் என்றால் கைப்பிடித்த காரிகையின் முழு ஒத்துழைப்பு வேண்டும். வாசலில் வரும் பிச்சைக் காரன் கூட என்ன சொல்கிறான்? ‘அம்மா தாயே ஏதா வது போடு தாயே’ என்று தான் கேட்கிறான். பெண் அன்னபூரணி, சங்கரனே அவளிடம் பிக்ஷை கேட்கி றான்! அவள் தர்மசம்வர்த்தனி! அறம்வளர்த்த நாயகி!
அவள் செல்விருந்து அனுப்பி வருவிருந்து எதிர் நோக்குபவளாக யிருக்க வேண்டும்.

அசோகவனத்தில் இருக்கும் சீதை, விருந்தினர் வந்தால் ராமன் என்ன செய்வான்

‘அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்?

என்று அழுங்குகிறாள்

’விருந்து வந்த போது என் உறுமோ?’

என்று விம்முகிறாளாம்.

கண்ணகியும் கோவலனைப் பிரிந்த நிலையில் இருந்த போது

’அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை

என்று விருந்தினரை உபசரிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறாள்.

avvaiyar1ஆனால் இதெல்லாம் எப்போது? கொண்ட மனைவி குணவதியாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஔவையார் ஒரு பாடலில் சொன்னது போல் மனைவி வாய்த்து விட்டால்? ஒரு சமயம் ஔவையார் ஒருவனிடம் ஒருவனிடம் இன்று உன் வீட்டில் உணவு தர முடியுமா?’ என்று கேட்டாள். அவன் மனைவி மிகவும் வாயாடி, அடங்காப் பிடாரி. மனைவியின் குணம் தெரிந்திருந்தும் ஔவையின் பசியை உணர்ந்து, அவரைத்தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஔவையாரைத் தன் வீட்டுத் திண்ணையில் உடகார வைத்து விட்டுத் தான் மட்டும் உல்ளே சென்று மனைவியிடம் இதமாக, நைச்சியமாகப் பேசி அவளுக் குப் பேன் பார்த்து, ஈர் உருவி சைத்யோபசாரம் செய்து ஔவையார் வந்திருப்பதையும் அவருக்கு உணவு அளிக்க வேண்டும்’ என்று சொன்னான். அவ்வளவு தான் என்ன நடந்தது?

இருந்தங்கு இதம் பேசி ஈர் உரீஇப்பேன் பார்த்து
விருந்து வந்ததென்று விளம்ப திருந்தடியாள்
பாடினாள் பேய்ப்பாட்டை பாரச் சுளகெடுத்துச்
சாடினாள் ஓடோடத் தான்.

அந்த வீட்டில் ஔவை உணவு உண்டிருப்பாரா?

இன்னொரு பெண்ணைப் பற்றி ஒரு பாடல் இப்படிச் சொல்கிறது

ஐயருக்கு அமுது படையென்று வந்தாய் நீயும்
ஆண்பிள்ளை என்றெண்ணியோ?
அரிசி எங்கே? பானை எங்கே? என்பாள்
அவள் சொன்ன வகைகளெல்லாம்
பையவே கொண்டு வந்தாலும் சமைக்கப்
படாது தலை நோகுதென்று
பாயிற் கிடப்பாள், சினமாய் ஒன்றுபேசினால்
பார் உனக்கேற்ற புத்தி செய்ய
வல்லேன் என்பாள் சற்று அடித்தால்
நஞ்சு தின்கிறேன்! கூ! கூ! எனத்
தெரு வீடு தோறும் முறையிடு பெண்டிர்
உண்டெனில் தீய நமன் வேறுமுண்டோ?

இப்படி ஒரு மனைவி வாய்த்து விட்டால்? கூறாமல் சன்யாசம் கொள் என்று ஔவையே சொல்லியிருக்கிறாள்.

அதனால் தான் திருவள்ளுவரும்

“முகம் திரிந்து நோக்க்க் குழையும் விருந்து’

என்கிறார்.

”அதிதி தேவோ பவ” என்பது நம் கலாசாரம். வசதியாக உள்ளவர்கள் தான் அதிதி களை ஆதரித்தார்கள் என்பதில்லை. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து, வந்தவர்களை உபசரித்திருக்கிறார்கள்.

இளையான்குடி செல்வோம். மாறனார் என்ற சிவபக்தர் தன் மனைவியோடு,‘இல்லற மல்லது நல்லறமன்று’ என்ற முது மொழிக்கேற்ப வாழ்ந்து வருகிறர். தன்னைத் தேடி வரும் சிவனடியார் யாராக இருந்தாலும் அவர்களை பக்தியோடும் அன்போ டும் எதிர் சென்று கைகுவித்து வணங்கி அழைத்து வந்து பாதங்களை அலம்பி ஆசனம் கொடுத்து, அர்ச் சனை செய்து நாலுவிதமான உணவையும், அறுசுவை யோடு சமைத்து அவர்களை உபசரிப்பார். இப்படியே பலகாலம் அடியவர்களைத் தம்பதிகள் இருவரும் சேர்ந்து உபசரித்து வந்தனர்.

இவர்களைச் சோதிக்கவும் இவர்களுடைய மேன்மையை உலகுக்கு அறிவிக்கவும் எண்ணம் கொண்டார் தில்லையெம்பெருமான். குன்று போலிருந்த செல்வம் குன்றிமணியானது. ஆனால் என்ன?

இன்னவாறு வளம் சுருங்கவும்
எம்பிரான் இளையான்குடி
மன்னன் மனம் சுருங்குதலின்றி
உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக உள்ள
கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணிகள்
முதிர்ந்த கொள்கையர் ஆயினர்.

ilayankudi_mara_nayanarபணம் போனால் என்ன? மனம் போகவில்லையே! தனம் சுருங்கியது. மனம் சுருங்கவில்லை. எந்தெந்தப் பொருட்களை விற்க முடி யுமோ அதை விற்கிறார்கள். அடகு வைக்க முடிந்ததை அடகு வைக்கிறார்கள் தன்னையே அடகு வைக்கவும் தயங்கவில்லை. இவ்வளவு வறுமையிலும் மாறனார் மனைவி கை கொடுக்கிறாள்.

இவர்களை மேலும் சோதிக்க எண்ணுகிறார் ஈசன். மாலும் அயனும் காண முடியாத பெருமான் நற்றவர் வேடம் பூண்டு கொண்டு நடு இரவில் வருகிறார். நல்ல மழையில் இரவு நேரத்தில் இளையான்குடி மாறனின் கதவைத் தட்டுகிறார். கத வைத் திறக்கிறார் மாறனார். சிவனடியார் ஒருவர் நிற்பதைப் பார்க்கிறார். உடனே வந்த விருந்தினரை ஈரம் போகத் துடைத்து விட்டு மாற்றுடை கொடுத்து, மனைவியிடம், ”இந்தத் தவசியர் அரும்பசியைத் தீர்க்க என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

வீட்டிலே உணவில்லை என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் மனைவி யிடம் யோசனை கேட்கிறார். அவளும் யோசனை செய் கிறாள். நேரமோ இருட்டி விட்டது. மழையும் பெய் கிறது. வீட்டிலும் ஒன்றுமில்லை. அண்டை வீட்டுக் காரகளிடம் இனியும் கடன் கேட்க முடியாது. ஏற் கெனவே நிறையக் கடன் வாங்கியாகி விட்டது என்ன செய்யலாம்? சட்டென்று ஒரு வழி கண்டு பிடித்து விடுகிறாள். இந்தச் சிக்கல் தீர வேண்டுமானால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. “இன்று காலை விதைத்த நெல் இந்நேரம் மழையில் மிதந்து கொண்டிருக்கும் நீங்கள் சென்று அதை அரித்து வாரிக் கொண்டு வந்தால் அதை என்னால் முடிந்த அளவு பக்குவப் படுத்தி சமைத்துத் தருகிறேன். இதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை’ என்கிறாள். என்ன சமயோசிதம்!

’செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொடு வந்தால்
வல்லவாறு அமுதாக்கலும் ஆகும் மற்(று)
அல்லது ஒன்றறியேன்.”

என்கிறாள். இதைக் கேட்ட மாறனார், மனைவியின் நல்ல யோசனையை ஏற்றுக் கொண்டு வயலுக்குச் செல்லப் புறப்படுகிறார். மழை வேறு. இருள் வேறு, பேயும் உறங்கும் நேரம்! மாறனார் ஒரு கூடையைத் தன் தலையில் கவிழ்த்துக் கொண்டு செல்கிறார். மெது வாகக் காலால் தடவித் தடவிச் சென்று கைகளால் அந்த விதைகளை அரித்து எடுத்துக் கூடையில் போட்டுச் சுமந்து கொண்டு விரைந்து வருகிறார்.

வந்தவரை வாயிலில் எதிர் கொண்ட அவர் மனைவி அவ்விதைகளை வாங்கி அதிலிருந்த சேறு சகதிகளை யெல்லாம் போகும்படி நன்கு கழுவி எடுக்கிறாள் நெல் வந்து விட்டது. அதைச் சமைக்க விறகு வேண்டுமே! தயங்கிய படியே மாறனா ரிடம் சொல்கிறாள்.

மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்

வந்த விருந்தினர் வழி நடந்த களைப்பால் மிகவும் களைத்திருப்பார். அவருக்கு வெறும் சோறு மட்டும் கொடுத்தால் போதாது. அந்தத் தாயுள்ளம் என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறது.

’குழி நிரம்பாத புன்செய்க் குறும் பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து
அவை கறிக்கு நல்கினார்

அதை வாங்கிக் கொண்ட மாறனார் மனைவி அக்கீரையை நன்கு அலம்பி (சமையல் போட்டிகளில் விதவித மாகச் சமைத்துக் காட்டுவது போல்) வித விதமாகச் சமைக்கிறாள். பின் மாறனாரிடம் சென்று, ‘நம் இல்லத்திற்கு எழுந்தருளி யிருக்கும் ஈடு இணையற்ற சிவனடியாரை அழைத்து வாருங்கள் அவருக்கு விருந்து படைப்போம்” என்கிறாள். நடந்து வந்த களைப்பினால் உறங்கிக் கொண்டிருந்த அடியவரிடம் சென்று, ”அடியனேன் உய்ய என்பால் எழுந்தருளிய பெரியோய்! அமுது செய்யுங்கள்” என்று அழைக்கிறார். அடியவர் மறைந்து விடுகிறார். சோதி தோன்றுகிறது.மாறனாரும் அவர் மனைவியும் திகைத்து நிற்கிறார்கள்.

Ilayankudi mara nayanar 2

மாலும் அயனும் தேடியும் காண முடியாத இறைவன் சோதி வடிமாய்க் காட்சி தர மயங் கிய மாறனாருக்கும் அவர் மனைவிக்கும் சிவகாம வல்லியோடு ரிஷப வாகனத்தில் காட்சி தந்து இளை யான்குடி மாற நாயனாரை நோக்கி

”அன்பனே! அன்பர் பூஜை
அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி
இருநிதிக் கிழவன் தானே
முன் பெரும் நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந்திருக்க”

என்று வரமளிக்கிறார். சிவலோகத்தை யடைந்து சங்க நிதி, பதுமநிதிக்குத் தலைவனான குபேரனே ஏவல் செய்யும்படியான பெருமையை இறைவன் வழங்க என்ன காரணம்? இளையான்குடி மாறநாயனாரும் அவர் மனைவியும் செய்த உபசாரம்தான்.

தாங்கள் வறுமையுற்றிருந்த போதும் வீட்டில் அரிசியும், காய்கறிகளும் இல்லாமல் இருந்த நிலையிலும் மழையையும் இருளையும் பொருட்படுத்தாமல் அன்று விதைத்த நெல்லையும் குழி நிரம்பாத புன்செய்க்குறும் பயிர்களையும் கொண்டுவந்து அடுப்பெரிக்க விறகுக்காக வீட்டுக் கூரையையே வெட்டி அடுப்பெரித்த அந்த அன்பும் தான் சிவனடியாரைக் கவர்ந்தது.

இத்தனைக்கும் இளையான் குடி மாறனாரின் மனைவியும் உற்ற துணையாக இருந் ததால் தான் இது சாத்தியமானது. அவள் மட்டு சற்றேறு மாறாக இருந்திருந்தால் இது சாத்தியமாகுமா? ஈர நெல்லைக் கழுவி பொறுமையோடு வறுத்து உணவு தயாரித்து வீட்டில் இருப்பதைக் கொண்டு அந்த நடு இர வில் கொட்டும் மழையில் உணவு தயாரித்துக் காய் களைக் கழுவி அந்த மழையிலும் விதவிதமாகச் சமைத்த செயல் மிகவும் போற்றுதற்குரியது!

இளையான்குடி மாற நாயனாரின் துணவியார், அவர் செய்த சிவனடியார்களின் பசி போக்கும் தொண்டில், செல்வம் இருந்த நிலையில் உற்ற துணையாக இருந்த்து பெரிய விஷயமில்லை. ஆனால் வறுமையிலும் அவள் இன்முகம் காட்டி அடிய வரை உபசரித்து, மழையிலும் ,இருட்டிலும் அடிய வருக்கு அமுது தயார் செய்தது மிகவும் பராட்டப்பட வேண்டியது. ஆனால் அவர் பெயர் கூட இன்னதென்று பெரியபுராணத்தில் குறிப்பிடவில்லை!

63 நாயன்மார்களில் இளையான் குடி மாற நாயனார் பெயரும் புகழும் பெற்று விளங்கு கிறார். ஆனால் வறுமையிலும் இக்கட்டான சூழ்நிலை யிலும் கை கொடுத்த காரிகையாக அவர் மனைவி விளங்குகிறார்.

அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில்:

தலம்: இந்திரஅவதாரநல்லூர், இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: ஞானாம்பிகை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: தெய்வபுஷ்கரணி

ilayankudi_temple

தண்டுக்கீரை நைவேத்யம்: இக்கோயிலில் மாறநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. அன்னதானம் செய்து சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு, “பசிப்பிணி மருத்துவர்’ என்ற சிறப்புப்பெயர் உண்டு. குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்.

maranayanar_with_wife
இளையாங்குடி மாற நாயனார், மனைவி புனிதவதியாருடன்

இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்’ (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். நாயனார் அன்னதானம் செய்து, சிவனருளால் முக்தி பெற்ற தலமென்பதால் இங்கு பக்தர்கள் அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட, இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழக்கம் உள்ளது.

நன்றி: தினமலர் கோயில்கள்

2 Replies to “கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி”

  1. //மாறனார், மனைவியின் நல்ல யோசனையை ஏற்றுக் கொண்டு வயலுக்குச் செல்லப் புறப்படுகிறார். மழை வேறு. இருள் வேறு, பேயும் உறங்கும் நேரம்! மாறனார் ஒரு கூடையைத் தன் தலையில் கவிழ்த்துக் கொண்டு செல்கிறார். மெது வாகக் காலால் தடவித் தடவிச் சென்று கைகளால் அந்த விதைகளை அரித்து எடுத்துக் கூடையில் போட்டுச் சுமந்து கொண்டு விரைந்து வருகிறார்

    வந்தவரை வாயிலில் எதிர் கொண்ட அவர் மனைவி அவ்விதைகளை வாங்கி அதிலிருந்த சேறு சகதிகளை யெல்லாம் போகும்படி நன்கு கழுவி எடுக்கிறாள் நெல் வந்து விட்டது//

    எவ்வளவு பெரிய காரியம் அதுவும் விதைத்தவனே அதை எடுத்து கொண்டு வருவதானால் அது எத்தகைய கனிந்த மனதை காட்டுகிறது. எவ்வளவு விசாலமாய் ஒரு தம்பதியர் இருந்திருக்கின்றனர்.

    பெண்கள் எப்போதும் நம் கலாச்சாரத்தில் ஆணுக்கு சமமாக தோளோடு நின்றுதான் செயல்கள் சிறப்புற உதவினர் என்பதை விளக்கும் சிறப்பான கட்டுரை.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *