ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

<< முந்தைய பகுதி

நிமிர்ந்து பார்த்தால் சட்டென்று  கண்ணெதிரே  நெடிதோங்கி நின்றிருந்தன பாதாமியின் மலைப் பாறைகள். காலை பத்தரை மணி வெயிலில் அந்த செந்நிறப் பாறை முகடுகள் தகதகவென மின்னின. வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து  நேரடியாக அப்படியே படிகள் ஏறிச் சென்று குகைக் கோயில்களுக்குள்  நுழைந்து விட முடியும் என்று  எதிர்பார்த்திருக்கவில்லை தான்.  மேலிருந்து பார்த்தால் பக்கத்தில் பாதாமி ஊர் முழுதும் தெரிந்தது.

ஹம்பியிலிருந்து வரும் வழி முழுவதும் கிராமப் புறங்கள்.  வட கர்நாடகத்தின் வறண்ட, பிற்பட்ட பகுதிகளாக அறியப் படுபவை. பருத்தியும் சோளமும் கேழ்வரகும் தான் அதிகம் கண்ணில் பட்டன.  தலைப்பாகையும்  முக்காடும் அணிந்த வெள்ளந்தியான கிராமத்து ஆண் பெண் முகங்கள். அறுவடைக் காலமாதலால், சாலையில் பல இடங்களில்  போரடித்துக் கொண்டிருந்தார்கள்..  சோளத் தட்டைகள், பதர்கள் குவிந்து கிடக்க கரிச்சான்களும்  குருவிகளும்  அவற்றைக் கொத்தி விளையாடிக் கொண்டு, அமர்ந்து எழுந்து பறந்து கொண்டிருந்தன. அனேகமாக எல்லா ஊர்களிலும் ஐயப்பன் மார்கள் தென்பட்டனர். சபரிமலைக்கு ஆயிரம் கிலோமீட்டர்கள் அப்பாலும் அதிகாலையில் ஐயப்ப பக்தர்ளைப் பார்த்தது உற்சாகமாக இருந்தது.

Badami_cave_temples_front_view

புராணங்களில் கொடுங்கானகமாக அறியப் பட்ட பூமி இந்த இடம். அகஸ்திய முனிவர் விந்திய மலையைத் தாண்டி தென்திசை நோக்கி வருகிறார். அது காறும் முனிவர்களை ஏமாற்றி அவர்களைக் கொன்று தின்று வந்த  வாதாபி, இல்வலன் என்ற இரண்டு கொடிய ராட்சசர்களை முதலில் அவர் எதிர்கொள்ள நேர்கிறது. மாயங்கள் அறிந்த வாதாபியை இறைச்சியாக இல்வலன் சமைத்து முனிவர்களுக்குப் பரிமாறுவான். அவர்கள் திருப்தியாக உண்டதும்  வாதாபி வெளியே வா என்று இல்வலன் அழைக்க, மீண்டும் உயிர்பெற்ற வாதாபி, அவர்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவருவான். பிறகு இருவரும் சேர்ந்து இறந்த முனிவர்களைப் புசிப்பார்கள். ஆனால் அகஸ்தியரிடத்தில் இந்த மாயம் பலிக்கவில்லை, வாதாபியை ஒரேயடியாக ஜீரணித்து விட்டார். இல்வலனை பஸ்மமாக்கி விட்டார். அரக்கரின் தொல்லை ஒழிந்தது. ஆனால், ஊருக்கு வாதாபியின் பெயர் நிலைத்து விட்டது. பின்னாட்களில் அது திரிந்து பாதாமி என்று ஆகியது.

பொ.பி 6 முதல் 8ம் நூற்றாண்டு வரையிலான சாளுக்கியர்களின் ஆட்சிக் காலத்தில் ராஜ்யத்தின் மையமாகவும் தலைநகராகவும் பாதாமி விளங்கியது. இக்ஷ்வாகு வமிசத் தோன்றல்கள், பிரம்மாவின் உள்ளங்கையிலிருந்து (சலுகம்) பிறந்தவர்கள் என்று வம்சகதைப் பாடல்களில் சாளுக்கியர்கள் குலப்பெருமை பேசப்படுகிறது. வரலாற்று ரீதியாக, கதம்ப மன்னர்களின் சேனைத் தலைவர்களாக இருந்து பின்னர் சுதந்திரமாக அரசாட்சி செய்யத் தொடங்கியவர்கள் அவர்கள். ஜெயசிம்ம சாளுக்கியர் இந்த ராஜவம்சத்தை நிறுவியவராக அறியப் படுகிறார். பின்னர் முதலாம் புலிகேசி, கீர்த்திவர்மன், மங்கலேசன், இரண்டாம் புலிகேசி, விக்கிரமாதித்தன், வினயாதித்தன், விஜயாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் என்று புகழ்மிக்க மன்னர்கள் சாளுக்கிய அரசை ஆண்டனர். இன்றைய மகாராஷ்டிர, கர்நாடக, ஆந்திர மாநிலங்களின் பெரும்பகுதியை உள்ளடக்கி வடக்கே நர்மதை முதல் தெற்கே காஞ்சி வரை விஸ்தரித்தனர். சத்யாஸ்ரய, ஸ்ரீ ப்ருத்வி வல்லப, பரமேஸ்வர போன்ற பட்டங்களை சாளுக்கிய மன்னர்கள் சூடிக் கொண்டனர்.

IMG_4994அந்தக் காலகட்டத்தில் கங்கர்கள், காலச்சூரிகள், பல்லவர்கள், சாளுக்கியர்கள் என்று தென்னிந்தியாவின் மத்தியப் பகுதியில்  எழுந்த அனைத்து அரசுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்த போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.  அரசுக்குள்ளேயே அதிகாரப் போட்டிகளும், சகோதரச் சண்டைகளும் இருந்தன. இவற்றுக்கு நடுவிலும் இந்த எல்லா அரச குலங்களும் பண்பாட்டையும், கலைகளையும், சமயங்களையும் போற்றி வளர்த்தனர். கோயில்களையும், கோட்டைகளையும், நீராதாரங்களையும் நிர்வாக அமைப்புகளையும் திறம்பட உருவாக்கினர். சாளுக்கியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாதாமியின் மலைப் பாறைகளின் மீதேறி குகைக் கோயில்களுக்குள் செல்கிறோம். மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன. ஆனால் கருவறைகளில் மூர்த்திகள் இல்லை. எனவே வழிபாடும் இல்லை.

முதல் குகைக் கோயில் சிவாலயம். இதன் முகப்பிலேயே உள்ள நடராஜர் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். வேறு வேறு முத்திரைகளைக் காட்டும் எட்டு கரங்கள் இருபுறமும் திகழ, பதினெட்டு கரங்களுடன் மிளிர்கிறார் ஆடலரசர். இதில் எந்த இரு கரங்களின் சேர்க்கையும் பரத நாட்டியத்தின் ஒரு கரணத்தை வெளிப்படுத்தும். ஆக, இந்தப் பதினெட்டு கரங்களும் சேர்ந்து நாட்டிய சாஸ்திரத்தின் 84 கரணங்களை வெளிப்படுத்துகின்றன. கோஷ்டத்தின் உள்ளிருக்கும் மகிஷாசுர மர்தினி, கணபதி, கார்த்திகேயர் சிற்பங்கள் அழகானவை. உள்ளே, ஒரு புறம் சிவ-சக்தி இணைந்த அர்த்த நாரீசுவரர்.  மறுபுறம் சிவன் விஷ்ணு இணைந்த ஹரிஹரர். இரண்டுமே 12 அடி உயரமுள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள்.

IMG_5057இரண்டாவது குகைக் கோயில் விஷ்ணு ஆலயம். முகப்பில் ஜய, விஜய துவாரபாலகர்கள் மிடுக்காக நிற்கின்றனர். உட்சுவரில் ஒருபுறம் திரிவிக்ரம அவதாரம். மறுபுறம் வராக அவதாரம். திரிவிக்ரமர் சிற்பத்தில் உலகளந்த பெருமாளுக்குக் கீழே மகாபலி தானம் அளிக்கும் காட்சி  உள்ளது. அதிலுள்ள வாமனக் குழந்தை கொள்ளை அழகு. நெடிதுயர்ந்த வராக மூர்த்தி, பூமி தேவியை கரங்களில் தாங்கி நிற்கும் கோலம் எழிலார்ந்தது.

மூன்றாவது குகைக் கோயில் தான் இங்கு உள்ளவற்றிலேயே மற்ற அனைத்தையும் விட சிறப்பானது. இதுவும் விஷ்ணு ஆலயமே. முகப்பில் எட்டுக் கரங்களுடன் அஷ்டபுஜ மகாவிஷ்ணு நிற்கிறார்.  உட்புறம் அற்புதமான இரண்டாள் உயர சிற்ப ரூபங்கள்.  ஆதிசேஷனின் நாக இருக்கை மீது கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் விஷ்ணு; கீழே கைகளைக் கட்டியபடி ஓய்வாக அமர்ந்திருக்கும் கருடன். சாந்தமான கோலத்தில், மகுடமின்றி இயல்பான சிகையழகு துலங்க நிற்கும் விஜய நரசிம்மர்.  ஹரிஹரர். திரிவிக்ரமர்.  தூண்களில் காதல் ரசம் சொட்டும் அழகிய தம்பதியர் சிற்பங்களும் செதுக்கப் பட்டுள்ளன.

நான்காவது ஜைன குகைக் கோயில். பாகுபலி, பார்ஸ்வ நாதர், வர்த்தமான மகாவீரர் ஆகிய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் இங்குள்ளன.  இயற்கையாக அமைந்துள்ள மற்றொரு குகை புத்த பிட்சுக்களின் தியானத்திற்கான இடமாக இருந்துள்ளது. அங்கு போதிசத்வ பத்மபாணியின் சிற்பம் உள்ளது.

குகைக்கோயில்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து பார்த்தால், கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம்.  குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன.  குகைகளுக்கு நேர் எதிரே உள்ள மலைக் குன்றின் உச்சியிலும் நடுவிலும் கீழுமாக மொத்தம் நான்கு சிவாலயங்கள் உள்ளன. அனைத்தும் 7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  வலப்புறம் குளக்கரையில் பூதநாத சிவாலயம் உள்ளது.  பாதாமியில் இரண்டு நாட்கள் தங்கினால், மலைகளில் ஏறி இறங்கி, குளத்தை முழுதுமாகச் சுற்றி வந்து எல்லாக் கோயில்களையும் பார்க்கலாம். இக்கோயில்கள் எதிலும் வழிபாடுகள் இல்லை.

IMG_5067

குளத்தின் ஒரு கரையில் பாதாமி அருங்காட்சியகம் உள்ளது. மிக நேர்த்தியாகப் பராமரிக்கப் படும் இந்த அருங்காட்சியகத்தில் இப்பகுதியில் கிடைத்துள்ள பல சிற்பங்களும் சாசனங்களும் பாதுகாக்கப் படுகின்றன. கன்னட லிபியில் சம்ஸ்கிருதத்தில் எழுதப் பட்ட புலிகேசி மன்னரின் 6ம் நூற்றாண்டுக் கல்வெட்டும்,  நரசிம்ம வர்மன் வாதாபியை போரில் வென்று வாதாபி கொண்டான் என்று பெயர் பொறித்த பல்லவர் கல்வெட்டும் இங்குள்ளன.  சாளுக்கியர் காலத்திலேயே பாதாமியில் கோட்டை கட்டப் பட்டது. பின்னர் பாமினி சுல்தான்களும்,  17ம் நூற்றாண்டில் திப்புவும் தங்கள் பாதுகாப்புக்காக இந்தக் கோட்டை அரண்களை விரிவு படுத்தியுள்ளனர். குகைக்கோயில்கள் உள்ள மலைப்பாறைகளுக்கு மேலாக, திப்புவின் படை வீரர்கள் நிறுவிய பீரங்கிகள் உள்ளன.  திப்பு காலத்திய மசூதியும் ஊருக்குள் உள்ளது. முழுவதும் அழிக்கப் படாமல் சிறு சிறு சேதங்களுடன் பாதாமியின் கலைச் செல்வங்கள் தப்பிப் பிழைத்தது நம் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும்.

பாதாமியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம் பட்டதக் கல். சாளுக்கியர்களின் பழைய தலைநகரான அய்ஹோளே கிராமத்திற்கும் பாதாமிக்கும் இடையில் மலப்பிரபா நதிக் கரையில் இந்த ஊர் உள்ளது.   சாளுக்கிய மன்னர்கள் பரம்பரையாக பட்டம் சூட்டிக் கொள்ளும் இடம் என்பதால் இந்தப் பெயர்.  இங்குள்ள 6 – 9ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த கோயில் தொகுதிகள் 1984 வரை கூட கவனிப்பாரற்றுக் கிடந்து சீரழிந்துள்ளன. உள்ளூர் மக்கள் அந்த அற்புதமான  கற்கோயில்களை வசிப்பிடங்களாக பயன்படுத்தி அங்கு உண்டு உறங்கி வாழ்ந்து, சிதைத்து வந்திருக்கிறார்கள். பிறகு இவை தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டுக்குள் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப் பட்டுள்ளன. இப்போது கோயில் தொகுதிகள் இருக்கும் வளாகத்தில் அழகான பசும்புல் வெளியும், வளாகத்தைச் சுற்றி சிறப்பான பாதுகாப்புச் சுவரும் அமைக்கப் பட்டுள்ளன. யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்களில் பட்டியலில் பட்டதக்கல் உள்ளது.

அருகருகே ஏழு சிவாலயங்கள் – காடசித்தேஸ்வரர், ஜம்புலிங்கர், காளகநாதர், சங்கமேஸ்வரர், விரூபாட்சர், மல்லிகார்ஜுனர், காசி விஸ்வேஸ்வரர். எட்டாவதான பாபநாதர் ஆலயம் இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ளது.  எல்லாவற்றிலும் உள்ளே லிங்கத் திருமேனிகள் உள்ளன. மூன்று கோயில்கள் வட இந்திய ஆலயங்கள் போன்று  நாகர பாணி விமானம் கொண்டவை. இந்த மூன்று விமானங்களிலும் சில தனித் தன்மைகளும் உண்டு.

IMG_5145

இத்தொகுதியில் பெரியதும், மிகச் சிறப்பானதும் திராவிட பாணி விமானம் கொண்ட விரூபாட்சர் ஆலயம் தான். அழகிய நந்தி மண்டபமும், முக மண்படமும் தூண் சிற்பங்களும் கொண்ட இந்த ஆலயத்தில் வழிபாடும் நடக்கிறது. சிவ பார்வதி நடனம், கயிலை மலைக் காட்சிகள், கங்கை பூமிக்கு வரும் புராணம், மார்க்கண்டேயன், ராமாயண, மகாபாரத காட்சிகள் என்று பல்வேறு சித்தரிப்புக்கள் தூண் சிற்பங்களில் உள்ளன. இவற்றில் உருவங்கள் சிறிய அளவிலும், ஆபரணங்கள் அணிகள் மிகக் குறைவாக இயல்பான நிலையிலும் படைக்கப் பட்டுள்ளனர். எனவே எல்லா காட்சிகளும் ஒரு நவீன மினியேச்சர் சித்திரத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. கற்பனை வளமும் சிறப்பாக உள்ளது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கிடக்கும் காட்சியை நான் எந்தக் கோயில் சிற்பங்களிலும் பார்த்த நினைவில்லை. இங்கு அக்காட்சியை சிற்பி மிக நேர்த்தியாக வடித்திருக்கிறார்.  இந்தக் கோயிலின் திருச் சுற்றிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. ராவணன் கைலாச மலையைப் பெயர்த்தல், பிட்சாடனர், சிவ நடனக் காட்சிகள் ஆகியவற்றில் தனித்துவமான சிற்ப முத்திரை தெரிகிறது.

இதற்கு அடுத்து சிறப்பானது மல்லிகார்ஜுனர் ஆலயம். அந்தியின் ஒளியில் இக்கோயிலின் அழகிய திராவிட பாணி விமானம் தங்க விமானம் போல சுடர் விட்டுக் கொண்டிருந்தது. காஞ்சி கைலாசநாதர் கோயிலின் பாணியில் இக்கோயிலைக் கட்ட முயற்சித்திருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது. இங்குள்ள தூண் சிற்பங்களில் புராணக் கதைகளுடன் சேர்த்து, முதலையும் குரங்கும் போன்ற சில பஞ்சதந்திரக் கதைகளும் சித்தரிக்கப் பட்டுள்ளன. தம்பதியர் சிற்பங்களில் பெண்களின் தலைகள் மட்டும் ஏதோ வக்கிர மனம் கொண்ட சில காட்டுமிராண்டிகளால் கொய்யப் பட்டுள்ளன.

பட்டதக்கல்லைப் பார்த்து முடிக்கும் போதே மாலை ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டதால் அய்ஹோளே செல்ல முடியவில்லை. சாளுக்கிய சிற்பக் கலை செழித்து வளர்வதற்கான ஆரம்பப் பள்ளியாக இருந்தது அய்ஹோளே என்று படித்திருக்கிறேன். மீண்டும் இந்தப் பக்கம் வந்தால் அதைப் போய்ப் பார்க்க வேண்டும்.

இந்த சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. குடைவரைக் கோயில்கள், சிவ மூர்த்தங்கள், வராகர், திரிவிக்ரமர் சிற்பங்கள் இவை இரண்டு இடங்களுக்கும் பொதுவானவை. பாதாமியின் குகைச் சிற்பங்கள் மகாபலிபுரத்தை விட இன்னும் ஒரு படி நுட்பமாகவும் அழகாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

மனம் முழுவதும் கலையழகின் வசீகரம் ததும்பி வழிய, இருண்ட நெடுஞ்சாலைகள், சிறு நகரங்கள் வழியே ஹுப்ளி வந்தடைந்தோம்.

பாதாமி புகைப்படங்கள்:

https://picasaweb.google.com/100629301604501469762/BadamiPattadakkalDec2013Trip

( தொடரும்)   

அடுத்த பகுதி >> 

10 Replies to “ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)”

 1. மிக்க நன்றி ஜடாயுஜி.

  அற்புதமான வரலாற்றுத் தகவல்கள். பிரமிக்க வைக்கும் கலையழகுள்ள சிலைகள்! நடராஜரையும், மகிஷாசுரமர்த்தினியையும் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிலைகளில் காணப்படும் நுட்பங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நான் பார்த்தவரை கர்நாடக கோவில் சிற்பங்களை விட தமிழ்நாட்டுக் கோவில் சிற்பங்கள் சிறிது மாற்றுக் குறைந்தவைதான். நம்மைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு ஒப்பீட்டளவில் நமக்கு அந்த நுட்பம் கைகூடவில்லை என்றே நினைக்கிறேன்.

  கர்நாடகாவில் பொதுவக நான் கண்ட கோவில் பராமரிப்பு, அதில் அவர்கள் காட்டும் சிரத்தை, அசுத்தமற்ற சூழ்நிலையை எந்தவொரு தமிழ்நாட்டுக் கோவிலிலும் கண்டதில்லை. நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.

  மீண்டும் எனது நன்றிகள்.

 2. சிற்பங்கள் அற்புதம்! குறிப்பாக உலகளக்கும் திரிவிக்ரமன், 18 கை நடராஜர், ஒரு அற்புதமான பாம்பு சிற்பம்…

 3. Dear sir,

  In this connection, you can also touch historical facts regarding how vijayanagara samrajya was formed and how and by whom it was brought down. This is very much important and there are lot of slokas containing how cruel the muslim rulers then, and how even Hindus helped Muslim kings loot the vijayanagara empire by trecherous means. Probably a book written by a queen and daughter in law Bhukka Maharaja would be worth reading. I hope the travellogue would proceed further.

 4. ம்………மிக நேர்த்தியான புகைப்படங்கள். அப்படியே கண்முன்னால் காட்டுவது போல் இருக்கிறது.

  ஜின தீர்த்தங்கரர்களை புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. பத்மபாணியெனும் ஆர்ய அவலோகிதேஸ்வரரைக் காண முடியவில்லையே. படத்தில் இல்லையா. அல்லது என்னால் அடையாளம் காண முடியவில்லையா?

  \\ கர்நாடகாவில் பொதுவக நான் கண்ட கோவில் பராமரிப்பு, அதில் அவர்கள் காட்டும் சிரத்தை, அசுத்தமற்ற சூழ்நிலையை எந்தவொரு தமிழ்நாட்டுக் கோவிலிலும் கண்டதில்லை. \\

  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, பெரும்பாலும் உண்மை. முற்றிலும் என்று சொல்ல மாட்டேன்.

  கேரளத்தை ஒட்டியுள்ள நாஞ்சில் நாட்டுப் பகுதி கோவில்களான சுசீந்த்ரம் முதலிய கோவில்களில் கேரளத்தைப் போன்ற தூய்மை காணக்கிட்டுகிறது.

  \\ நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். \\

  விரக்தி வேண்டாம். முயற்சியுடையார். இகழ்ச்சியடையார்.

  ஆழ்வார்களும் நாயன்மார்களும் — எத்தனையெத்தனை கோவில்களில் — தொண்டு செய்வதை — தங்கள் வாழ்நாளில் கடைபிடித்துள்ளார்கள்.

  மானனீய ஸ்ரீ ஷண்முகநாதன் ஜீ அவர்கள், சிதம்பரம் ஆடல்வல்லான் ஆலய சுத்திகரிப்பு பணிகளில் எவ்வளவு ஆர்வமுடன் செயல்பட்டார். அந்த செயல்பாடுகள் கோவில் கோவிலாக க்ராமம் க்ராமமாக நகரம் நகரமாக விஸ்தரிக்கப்படலாமே.

  கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் சொன்னது நினைவுக்கு வருகிறது.

  சுபஸ்ய சீக்ரம் என்று பெரியோர் சொல்வர்.

  இந்த மார்கழியில் — இப்போதே — உடனேயே — நம் அருகாமையில் உள்ள கோவில்களை துப்புறவாக வைத்திருக்க– நாம் பங்களிப்பு செய்வதன் மூலமும் — கூட்டு செயல்பாடுகள் மூலமும் — இதை முன்னெடுத்து செல்லலாமே.

 5. க்ஷமிக்க வேண்டும். ஸ்ரீ ரூபன் அவர்களை தக்ஷிணாமூர்த்தி என்று சொல்லி விட்டேன்.

 6. arumai
  அருமை ஜடௌஇஜி வரலாறு குறிப்பு நன்று

 7. திரு ராகவன் அவர்கள் கூறுவதை நானும் வழி மொழிகிறேன். அவர் கூறியுள்ள புத்தகம் கிடைக்குமிடம் தெரிவித்தால் நன்றி. பயணக் கட்டுரை மிக நன்றாக உள்ளது.

 8. கிருஷ்ணகுமார் ஐயா, புத்த குகையில் நான் படம் எடுக்கவில்லை.. அது முடிக்கப் படவில்லை. பத்மபாணியின் உருவத்தை செதுக்க ஆரம்பித்து பிறகு நிறுத்தி விட்டிருக்கிறார்கள்.. இந்தப் படம் & இதற்கு அடுத்தடுத்த படங்களில் அந்த குகை செதுக்கல்கள் உள்ளன..

  https://www.facebook.com/photo.php?fbid=10201296629193923&set=a.10201296374747562.1073741858.1118324851&type=3&theater

 9. // Probably a book written by a queen and daughter in law Bhukka Maharaja would be worth reading. //

  குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற சம்ஸ்கிருத காவியத்தை குறிப்பிடுகிறீர்கள். அதை மையமாக வைத்து ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய மதுரா விஜயம் (திருவரங்கன் உலா) என்ற பிரபல நாவலும் உண்டு.. மதுரா விஜயத்தின் நேரடி மொழிபெயர்ப்பு தமிழில் இல்லை என்றூ நினைக்கிறேன், ஆங்கிலத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *