சங்க இலக்கியமும்  சைவர்களும் – 1

ண்மையில்  எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘தி இந்து’ தமிழ் இதழில் சென்ற 2013 ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய ‘பாலும் அழுக்கும்’ என்னும் கட்டுரை படிக்க நேர்ந்தது. சங்க இலக்கியத்தைப் பேசவந்தவர் சைவத்தையும் சாடியுள்ளார். அதே கருத்தினை ஒருகலைக்கல்லூரியில் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இச்செய்தி தினமணி நாளிதழிலும் வெளியாகியது. இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த எண்ணம் உண்டாவதற்குக் காரணம்?

பேராசிரியரின் இந்தக் கூற்றுக்குக் காரணம் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து சீலத்திரு சுவாமிநாத தேசிகர் தாம் அருளிச் செய்த இலக்கணக் கொத்து எனும் நூலுரையில் தெரிவித்துள்ளதோர் கருத்தாகலாம்.  அப்பகுதியாவது:

palm-leaf-manuscript“மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம்; அன்றியும், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற் கலந்திருந்து அருமைத் திருக்கையா லெழுதினார். அப்பெருமையை நோக்காது, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோ டொன்றாக்குவர்…  அவர் அதுமட்டோ இறையனாரகப்பொருள் முதலான இலக்கணங்களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், பட்டனத்துப் பிள்ளையார் பாடல்கள் முதலிய இலக்கியங்களையும் ஓர்பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் , பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, இராமன்கதை, நளன் கதை, அரிச்சந்திரன்கதை முதலிய இலக்கியங்களையும் ஓர்பொருளாகவெண்ணி, வாணாள் வீணாள் கழிப்பர். அவர்களிவைகளிருக்கவே அவைகளை விரும்புதலென்னெனின் பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழுமீன்கள் அப்பாலை விரும்பாது வேறுபலவற்றை விரும்புதல் போல அவரதியற்கை யென்க.”

இப்பகுதியை நடுநிலையில் நின்று நோக்குவாருக்கு இரண்டு உண்மைகள் தெளிவாகும்.

1.நன்னூல் முதலிய இலக்கண நூற்களின் பயிற்சியும், சங்கநூற்கள் முதலிய இலக்கியப்பயிற்சியும் சைவர்களுக்கு ஆகா எனக் கடியப் படவில்லை. இலக்கியப்பயிற்சி அத்துடன் நின்றுவிடுவதாற் பயனில்லை. அவை கருவிநூல்களே. அப்பயிற்சியின் பயன் அறிவன் நூல்களைப் பயில்வதே. இது தமிழ் கற்கும் சைவர்களை நெறிப்படுத்துவதற்கேயாம். தொல்காப்பியர் “காமஞ் சான்ற கடைக்கோட் காலை —– — சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்று விதித்ததன் கருத்தைச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும். சிறந்தது,சிறப்பு-வீடுபேறு.(திருக்குறள் 31,331)

2.சிவத்தின் திருவருள் நிறைந்து இருக்கும் இவ்வுலகில், அதனை அறிந்து துய்ப்பதற்கு வழிகாட்டும் அறிவன் நூல்களாகிய திருவாசகம் முதலிய நூல்களை அறியாது உலகியல் வழக்கே பேசும் நூல்களைப் பயில்வதோடு நின்றுவிடுகின்றனர் , மக்களுட் சிலர்.அதற்குக் காரணம் உலகியற் சுவையே அறியும் அவர்களது இயற்கையே என்க.

சைவர்களின் பொது நோக்கு:

சிவநெறியினர் இலக்கியத்துறையிலும் தத்துவத்துறையிலும் பொது நோக்குடையவரே.

நன்னூல் எனும் இலக்கண நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் சமணத்துறவி என அனைவரும் அறிவர்.  தொல்காப்பியம் ஒழிய முந்திய இலக்கண நூல்களைக் காட்டிலும் தமிழுலகம் நன்னூலைக் கொண்டாடுவதற்குக் காரணம் அதற்குச் சைவர்களாகிய சங்கரநமசிவாயரும் சிவஞான முனிவரும், பின்னாளில் ஆறுமுகநாவலரும் செய்த உரைகளேயாம். மாதவச் சிவஞானயோகிகள் நன்னூல் தெரிநிலைவினைப்பகுதி சூத்திர உரையில் பவணந்தி முனிவரின் நுண்மாண் நுழைபுலனைப் பாராட்டியதைப் போன்று வேறெவரும் செய்திலர். ‘பல்கலைக்குரிசில் பவணந்தி முனிவர்” என சிவஞானமுனிவர் பாராட்ட,  “முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார்தமக் கெந்நூ லாரு மிணையோ வென்னுந் துணிவே மன்னுக” என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் சீலத்திரு சுவாமிநாத தேசிகர் நன்னூலுக்குப் புகழ்மாலை சூட்டினார். பேராசிரியர், நச்சினார்கினியர், சிவஞானமுனிவர் திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் முதலியோர் தம் உரைநூல்களில் நாலடியார், நன்னூல் முதலிய நூல்களில் மட்டுமன்றி, காமநூல் என விலக்கப்பட்ட சீவகசிந்தாமணியினின்றும் மேற்கோள் காட்டல் எச்சமயநூலாயிருப்பினும் புலமையுடைத்தெனின் போற்றும் பண்பினைக் காட்டும். உ.வே.சாமிநாதையரின் சங்க இலக்கியப் பதிப்புகளுக்கு திருவாவடுதுறையாதீனத் திருமடத்தின் உதவி அவர் எழுதிய முன்னுரைகளில் விளங்கும். சி.வை. தாமோதரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, பாகனேரி காசிவிசுவநாதன் செட்டியார், மகாவித்துவான் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை துரைசாமிப்பிள்ளை, மறைமலையடிகள், பெருமழைப் புலவர் சோமசுந்தரனார், கழகப் புலவர் இராமநாதபிள்ளை. இளவழகனார் முதலாய சங்க இலக்கியங்களின் பதிப்பாசிரியர்கள் உரையாசிரியர்கள் அனைவரும் சைவர்களே.

சங்க இலக்கியமும் சைவமும்

முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், சீறருமுன்பினோன், செல்விடைப்பாகன், புதுத்திங்கட் கண்ணியான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், மணிமிடற்றெண்கையான், மழுவாள் நெடியோன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்.

இச்சிறப்புப் பெயர்களால் சிவத்தைப் போற்றிப் புகழ்ந்த புலவர்களை `பொய்யடிமையில்லாத புலவர்கள்` எனப் போற்றி வணங்கியது சைவ உலகம். திருத்தொண்டத்தொகையில் நம்பியாரூரர் கூறிய பொய்யடிமையில்லாத புலவர் யாரென்பதை நம்பியாண்டார் நம்பிகள் வழிநூலாகிய திருத்தொண்டத் திருவந்தாதியில்,

“தரணியிற் பொய்ம்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர்

பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்

அருள்நமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே

பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவோர்களே”

என்று கூறியருளினார். ஏனைத் தனியடியார்களைப் போலச் சங்கப்புலவர்களும் சிவநேயராயாகிய நாயன்மாரெனப் போற்றப்பட்டமை நம்பிகள் வாக்கில் தெளிவாகின்றது.

சிவமணம் கமழும் சங்கப்பாடல்கள்:

எட்டுத்தொகை நூல்களின்  கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அனைத்தும் சிவபரத்துவத்தை விளக்குவனவே. அதனை விளக்கத்தொடங்கினால் அதுவே ஒரு தனிக்கட்டுரையாகும்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடல், சங்காரகாரணனாகிய சிவபெருமானே மீண்டும் புனருற்பவம் செய்யும் முழுமுதற்கடவுள் என்ற உண்மையைச் சாற்றுகின்றது. தர்க்கத்தின் அடிப்படையில் சங்கார காரணனே முதல் என்ற உண்மையை முதன் முதலில் நிலைநாட்டியவர் சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டார் ஆவர். ஆனால் இவருடைய திருவவதாரத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே ஐங்குறுநூறு,

“நீல மேனி வாலிழைபாகத்

தொருவ னிருதா ணிழற்கீழ்

மூவகை யுலகு முகிழ்த்தன முறையே”

என்று எடுத்தியம்பிற்று. இவ்வாறு பாரதம் பாடிய பெருந்தேவனார் கொள்கையை மேற்கொண்டதாலல்லவோ, மெய்கண்டதேவர், சிவஞானபோதம் முதற் சூத்திரத்தில்,

“அவனவ ளதுவெனு மவைமூ வினைமையின்

தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா

மந்த மாதி யென்மனார் புலவர்.”   என்றருளிச் செய்தார்.

lord-shiva-in-chariot-with-brahma-as-driverகலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல், சிவபராக்கிரமத்தைக் கூறும் பழமரபுக் கதைகள் பலவற்றை எடுத்து இயம்புகின்றது. இப்பாடல் கூறும் ‘ஆறறி அந்தணருக்கு அருமறைபல பகர்ந்தது, தேறுநீர் சடைக் கரந்தது, திரிபுரம் தீ மடுத்தது, மணிமிடற் றந்தணனானது, மதுகையால் நீறணிந்தது, கொலையுழுவைத் தோல் அசைத்தது, பிரமன் தலையை அங்கையிற் கொண்டது’ போன்ற சிவபரத்துவத்தை விளக்கும் பழமரபுக்கதைகளை திருமுறையாசிரியர்கள் தம் திருப்பதிகங்களில் எடுத்தாண்டனர். அவற்றைப் பிற்காலத்தில் சைவ இலக்கியங்கள் காப்பியச் சுவையுடன் விரித்துக் கூறின.

புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப்பாடல், ஏனைத்தேவரை விலக்கி சிவன் ஒருவனே வழிபடத்தக்கவன் என்று உணர்த்துகின்றது. அத்தகைய உறுதியுடையோர் சங்ககாலத்தில் இருந்தமையால் அல்லவா, காரிகிழார் என்னும் புலவர் பெருமான், ‘பணியிய ரத்தைநின் குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலம் வரற்கே” (புறம்6:17-18) எனத் தெருட்டினார்.

அகநானூறின் கடவுள் வாழ்த்துப் பாடல், சிவபரம்பொருளின் தடத்த வடிவத்தை எடுத்துக் காட்டியதுடன், ‘யாழ்கெழு மணிமிடற் றந்தணன், தாவில் தாணிழல் தவிர்ந்தன்றா லுலகே” என்றும் உணர்த்திற்று. உலகு என்றது ஆன்மாக்களுக்காக இறைவன் படைத்த எல்லா உலகங்களையுமாகும். இதனால் சங்காரகாரணனான முதல்வனே படைப்புத் தொழிலுக்கும் முதல்வன் என்பதனோடு, அவனே , `தாள்நிழல்` தரும் காத்தல் தொழிலுக்கும்  முதல்வன் என்பதை இப்பாடல் உணர்த்தியது. ‘கார்விரி கொன்றை”எனத் தொடங்கும் இந்த அகநானூறு கடவுள் வாழ்த்துப் பாடலை மேற்கோள்காட்டி உரைவரைந்த இளம்பூரணர்,”– — மணிமிடற்று அந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று” எனப் பொருள் உரைத்தார்.(தொல் பொருளியல் 1.) சிவானுபூதி எனும் இளம்பூரணரது சொல்லாட்சியே பின்னர், “தற்போதம் முனையாதவாறு சிவஞானத்துள் அடங்கிச் சிவானுபவம் சுவானுபூதியாம்படி ஞானநிலையில் உறைத்து நிற்றல்” எனச் சிவஞானமுனிவரின் உரையிலும் இடம்பெற்றது.

பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலெனக் கருதத்தக்க ஒருபாடலை நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் –பொருளதிகாரம், புறத்திணை 26 உரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். “சூலம் பிடித்த சுடர்ப்படைக் , காலக் கடவுட் குயர்கமா வலனே”, எனக் கூறி வழுத்துகின்றது. இப்பாடலில் சிவபரம்பொருளின் குணங்குறி கடந்த, காலாதீத, விசுவாதீத நிலை உணர்த்தப்படுகின்றது.

குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல், குமார பரமேசுவரனின் கோலத்தைக் கூறி அச் ”சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைக லெய்தின்றா லுலகே” எனத் துதிக்கின்றது.

இவ்வாறே பரிபாடலிலும் சிவபரத்துவம் பேசப்படுகின்றது என அறிக.

சங்கநூல்களின் பாடுபொருள் அகப்பொருளும் புறப்பொருளுமாகும். உலகியல் வழக்கும் நாடகவழக்கும் கூட்டிப் புலவர்களால் நாட்டிக் கொள்ளப்பட்ட புலனெறி வழக்கைப் பாடும்போதும் போதும் சங்கபுலவர் “அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவிபாடினர்” என்பதற்குத் தக்க சான்றாக அமைந்தது, நெய்தற்கலியில், “அயந்திகழ் நறுங்கொன்றை யலங்கலந் தெரியலான்” எனத்தொடங்கும் 33ஆவது பாடல்.

அந்தப் பாடலில் பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியை ஆற்றுவித்த தோழி, சிவபரத்துவத்தின் குறியீடுகளான கொன்றை, ‘பிறங்குநீர்க் கரந்தசடை, எலும்பணி, புதுத்திங்கட் கண்ணி, பொற்பூணாம் பாம்பணி, விடையூர்தி,(மார்கழித்) திருவாதிரை, அம்மாதத்திற் பூக்கும் சிவனுக்குகந்த செண்பகமலர் என்பனவற்றைக் கையாண்டுள்ள சொற்றிறத்தில் கமழும் சிவமணத்தைச் சிவநெறியாளர் நுகரா தொழிவாரோ?

சங்க இலக்கியமும் பத்தி உணர்வும்:

சங்க இலக்கியங்களின் பாடுபொருளாகப் புலவர்களால் அமைத்துக் கொண்ட புலனெறிவழக்காக அமைந்தன அகப்பொருளும் புறப்பொருளும். பத்தியுணர்வு புறப்பொருளில் அடக்கப்பட்டது.

பத்தியாவது யாது? அஃதொரு மனநிலை. அன்பின் முதிர்ந்த நிலை. “அன்பு, பத்தி, காதல் என்றாற் போல்வன இச்சை மீதூர்தற் பொருளன”(சிவஞானமுனிவர்). அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் அன்புணர்ச்சியே பத்தியுணர்வாகத் திருமுறை இலக்கியங்களில் உயர்நிலை எய்தியுள்ளது;. அல்லது வளர்ந்தது எனலாம். தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் இலக்கணத்தை அறிந்தாலன்றித் திருமுறைகளில் உள்ள அகப்பொருட் பாடல்களின் பொருளை முழுமையாக அனுபவிக்க இயலாது. பாவை பாடிய வாயால் மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரைச் சங்க அகப்பொருட்பாடல்களின் வழி நின்றே சுவைத்தல் இயலும்.

“தொல்காப்பியத்திலும் சங்கச் செய்யுட்களிலும் தனித்தனித்துறைகளாகக் குறிக்கப்பட்டுள்ள அகத்துணைத் துறைகளையெல்லாம் தெய்வம் கூட்ட ஒருவரையொருவர் கண்ட காட்சி முதலாக இருவரும் ஒருவரையொருவர் இன்றியமையாக் கேண்மையராய் உலகத்தார் அறிய மணஞ் செய்து கொண்டு அன்பினால் ஊடியும் கூடியும் மகிழ்தல் ஈறாக ஒரு கோவைப்படத் தொகுத்துக், கட்டளைக்கலித்துறை யாப்பினால், கூற்றும் மாற்றமும் அமைய நாடகக் காப்பியம் போன்று பொருட்டொடர் நிலைச் செய்யுள் அகத்திணைக் கோவையாகச் செய்யப்பட்டது திருக்கோவையார் எனும் இப்பிரபந்தமாகும்.” என மூதறிஞர் க.வெள்ளைவாரணனார் கூற்று சங்கநூற் பயிற்சி , திருக்கோவையாரைப் பயிலுவதற்கு எத்துணை உதவும் என்பதைக் காட்டும்.

`கல்லாடம்’ கற்றவனோடு சொல்லாடாதே என்று போற்றப்படும் கல்லாடம்  என்னும் சைவ இலக்கியமும்  அகப்பொருள் மரபினையொட்டிச் சங்க அகப்பொருட்பாடல்களைப்போல அகவற்பா யாப்பினில் அமைந்திருத்தலைத் தமிழ் நாவலர் அறிவர்.

nalvar2சங்கப்பாடல்களின் மீது சிவநெறியினருக்கு உள்ள ஈடுபாட்டைக் காட்டத் திருக்கோவையாரில் “பாங்கன் வினாதல்” எனும் துறையில் உள்ள ஒருபாட்டே அமையும்.

காதல் வயப்பட்ட தலைமகன் உடல் இளைத்துருகி யிருப்பதைக் கண்ட பாங்கன் அவனை நோக்கி.” சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என வினவுகின்றான். இந்த வினாவில் இறைவனால் ஆயத்தக்க கருத்தாழமும் பொருட்பரப்பும் உடையது சங்க இலக்கியம் என்ற கருத்தினை உடையவர் மணிவாசகர் என்ற சைவர் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ? இத்தகைய சங்க இலக்கியத்தைச் சைவர் புறக்கணித்தனர் என்பது பொருளற்ற வெறுங் கூற்றே.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன.

ஆளுடையபிள்ளையார் தமிழ்ச்சங்கத்தை, “அங்கழகச் சுதைமாடக் கூடலாலவாய்”(1-7-2), என்றும் “அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்”(திருப்பாசுரம்) (தொகை- சங்கம்) என்றும் அப்பரடிகள், “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண்” என்றும்  குறிப்பிடுதல் அறியத்தக்கது. கழகம், மதுரைத்தொகை என்பனசங்கத்தைக் குறிக்கும் சொற்களாம்.

சங்க இலக்கியத் தொடர்களையும் கருத்துக்களையும் திருமுறையாசிரியர்கள் அப்படியே எடுத்தாளுவது அறியத்தக்கது.

பெரும்பாணாற்றுப்படை, மறையோதும் அந்தணர் வாழும் ஊரில், அவர்கள் ஓதும் மறையைக் கேட்டுப் பழகிய வளைந்த வாயையுடைய கிளிகள், அவ்வேதங்களை ஓசைகெடாது மிழற்றுகின்றன என்று கூறும்.

“வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

மறைகாப்பாளர் உறைபதி” (300-1)

எனும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்,

“பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்

பயின்றோதும் ஓசை கேட்டு

வேரி மலிபொழிற் கிள்ளை வேதங்கள்

பொருட் சொல்லும் மிழலையாமே” (1-132-1)

எனப் பிள்ளையாரின் வாக்கில் இடம்பெறுதல் காண்க.

சிவபெருமானே உலகங்களைப் படைத்த முதற்கடவுள் என்றும் அம்முதல்வனே எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவன் என மதுரைக் காஞ்சி பாடுகின்றது.

“நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்பொடு ஐந்துடன் இயற்றிய

மழுவாள் நெடியோன் தலைவனாக” (மதுரைக் காஞ்சி453-455). இக்கருத்துத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.

முழுமுதற்கடவுள் ஒருவரே, அவர் ஒருவரே பல்வேறு உருவில் வணங்கப் பெறுகின்றார் என்றகருத்தில்,

“வேறு பல்லுருவில் கடவுட் பேணி” என்றது குறிஞ்சிப் பாட்டு.

இதனையே, திருவாதவூரடிகள்,

“வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்

நூறுநூ றாயிரம் இயல்பின தாகி,

ஏறுடை யீச னிப்புவனியை உய்யக்

கூறுடை மங்கையும் தானும்வந் தருளி” (கீர்த்தித் திருவகவல்-24-26) என்றும்,

காழிப்பிள்ளையார்

“நானாவித உருவாய்நமை யாள்வான்”(1-9-5) என்றும் ஓதினர்.

“வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி” என்னும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் வாக்கை, ஆளுடையபிள்ளையார்,

விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலந்தானும்

கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யவர் வாழ்கழுமலமே”(1-129-3)

என விரித்தோதினார்.

சங்க இலக்கியங்களில், இரவில் வந்த விருந்தினை “எல்லி வந்த நல்லிசை விருந்து”(நற்றிணை 42), தவிர்த்தலாகாதென்று கூறப்படுகின்றது. இரவில் வந்த விருந்தினைத் தலைமகள் உபசரிக்கும் திறனை  அவள் வாழும் ஊருக்கேற்றி, நற்றிணை 142ஆம்பாடல்,

“அல்லி லாயினும் விருந்து வரினுவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல்லியற் குறுமகள் உறைவினூரே”

எனப்பாடுகின்றது.

இக்கருத்தினை ஏற்று வழிமொழிந்து காழிப்பிள்ளையாரும்,

“மஞ்சாரு மாட மனைதோறு மைய முளதென்று வைகி வரினும்

செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே”

 எனப் பாடினார். இதனையே தெய்வச் சேக்கிழார், “மாரிக் காலத் திரவில் வைகி” என இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் விரித்துப் பாடினார்.

பதினொன்றாம் திருமுறையில் அகத்துறைப் பாடல்கள் மல்கி உள்ளன. அவற்றின் சிறப்பைச் சங்கப்பாடல்களுடன் ஒப்பு நோக்கினாலன்றி முழுதும் சுவைத்தலரிது.

தலைவன் பரத்தையரில்லில் இருக்கின்றான். தலைவிக்கு அவன் “ஏதிலாளன்” என்று உற்றார் அலர் பேசுகின்றனர். `அவன் பரத்தையரில்லில் இருப்பினும் அவன் என்கணவனே என்பது இவ்வூர் அறியும். அதை யொன்றும் மாற்றிவிட முடியாது. அதுபோதும் எனக்கு` எனத் தலைவி பேசுகின்றாள். தலைவியின் இம் மன நிலையைக் கூறும் அப்பாடல்,

“ஏதிலாளனும் என்ப—-  —-

—-  —-   — தெண்கடல்

கண்டல் வேலிய வூர் `அவன்

பெண்டு`என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே” (நற்றிணை 74)

சேரமான் பெருமாள் தலைவியின் இம்மனநிலையை முழுதும் வாங்கித் தாமரைக் குளத்தின் மேல் வைத்துப் பாடுகின்றார். அல்லி குவளை ஆம்பல் எனப் பல பூக்கள் குளத்தில் மலர்ந்திருப்பினும், ஒரேயொரு தாமரை மலர்ந்திருக்கும் சிறப்பான காரணத்தால் அக்குளம் தாமரைக்குளமென்றே அழைக்கப்படும்.   அதுபோல தலைவனுக்கு எத்துணைப் பெண்களுடன் உறவிருப்பினும் என்னுடைய கணவன் என்றே அவனை உலகம் கூறும் எனத் தலைவி கூறுகிறாள். 11ஆம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக் கோவையில் அமைந்துள்ள அப்பாடல்,

“திறமலிச் செந்துவர் வாயின ரெங்கையர்க்கே

மறமலி வேலோ னருளுக வார்சடையான் கடவூர்த்

துறைமலி யாம்பல் பல்லாயிரத்துத் தமியே யெழினும்

நறைமலி தாமரை தன்னதென் றேசொலும் நற்கயமே” (24)  

கைக்கிளை பெருந்திணை சைவ இலக்கியங்களில் மதிப்புப் பெறல்:

சங்க இலக்கியங்கள் குறிஞ்சி முதலாகிய அகனைந்திணையே தலைமக்களுக்குரியன என்றும் ஏனைக் கைக்கிளை பெருந்திணை இழிந்தகாமமும் பொருந்தாக்காமமு மாதலின் பிறர்க்குக் குற்றேவல் செய்வார், மற்றும், பிறர் ஏவிய தொழிலைச் செய்வார் ஆகிய கீழோருக்கே உரியவென்று பேசும். அகனைந்திணையொழுக்கத்தில் தலைவனொடு தலைவிக்குப் பேச்சு நிகழ்வதேயில்லை. தலைவனே தன் காதலைத் தலைவியிடம் கூறுகிறான். தலைவி தன் அன்பினைக் கூற்றால் வெளிப்படுத்தினால் அது அகனைந்திணைக் காதலாகாது. தோழியுங்கூடத் தலைவியின் காதலை நாணநாட்டம் நடுங்க நாட்டம் முதலிய குறிப்புக்களினால்தான் அறிந்து கொள்ளுகின்றாள். தலைவி தன் காதலைப் பிறர் அறியுமாறு கூற்றாலோ குறிப்பாலோ வெளிப்படுத்தினால், சங்க இலக்கிய மரபின்படி அது புறத்திணையாய்ப் பாடாண்கைக்கிளையாகிவிடும். சங்க இலக்கியங்களில் அகனைந்திணையாக இத்தகைய பாடல்களைக் காண்டலரிது.

shiva-parvatiஆனால் பத்தி இலக்கியங்கள், குறிப்பாகத் திருமுறைகள் உயர்மக்களுக்கு ஆகா என விலக்கப்பட்ட கைக்கிளை பெருந்திணைகளை பத்தியுணர்வின் பெருக்கினைப் புலப்படுத்தும் உத்திகளாக மாற்றிக் கொண்டன. உயர்குடி மக்களுக்கு ஆகா எனத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஒதுக்கிய இத்திணைகளுக்குத் திருமுறைகள் உயர்நிலை யளித்துத் தழுவிக்கொண்டன. இந்த வேறுபாட்டை நன்குணர்ந்தாலன்றித் திருமுறைகளில் பாடாண்கைக்கிளையாக அமைந்த துறைப் பாடல்களை முழுமையாகச் சுவைக்க வியலாது.

திருமுறைகளில் தலைவி கூற்றாக அமைந்த திருப்பதிகங்களும் திருப்பாடல்களும் பல உள்ளன. அவை தலைவனாகிய இறைவனை முன்னிலைப்படுத்தியோ அன்றி தோழியை முன்னிலைப்படுத்தியோ கூறப்பட்டன. பிச்சைத்தேவர் கோலத்தில் வந்த இறைவனிடத்தில் தலைவியின் உரையாடல்களாக அமைந்த பாடல்களெல்லாம் அகனைந்திணை விதிக்குப் புறம்பானவையே. எடுத்துக் காட்டாகச் சிலவற்றைக் காண்போம்.

“நென்னலை ஓரோடேந்திப் பிச்சைக் கென்று

வந்தார்க்கு `வந்தேன்` என்றில்லே புக்கேன்

அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்

அருகே வருவார்போல் நோக்குகின்றார்”

(ஐயம்- பிச்சை)

“நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்

நெருநலைநற் பகலிங்கோர் அடிகள்வந்து

கலைப்பாடும் கண்மலரும் கலங்க நோக்கிக்

கலந்து பலியிடுவான் எங்கும் காணேன்

சலப்பாடே யினியொருநாள் காண்பேனாகில்

தன்னாகத்து என்னாகம் ஒடுங்கும் வண்ணம்

உலைப்பாடே படத்தழுவிப் போகவொட்டேன்

ஒற்றியூர் உறைந்திங்கே வருவானையே”

 

“கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்

— — இசைபாடிப் பலியுங் கொள்ளீர்

கோளரவும் குளிர்மதியுங் கொடியுங் காட்டி

உள்ளத்தை நீர்கொண்டீர்”

 

குரவம் நாறிய குழலி னார்வலை

கொள்வ தேதொழில் ஆகிநீர்

இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே

நடந்து போகவும்வல்லிரே

பரவி நாடொறும் பாடு வார்வினை

பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்

அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

தலைவி தலைவனிடம் உரையாடுவதாக அமைந்த இத்தகைய திருமுறைப்பாடல்களே பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் பிட்சாடன நவமணிமாலை, இராமலிங்க சுவாமிகளின் இங்கிதமாலை போன்ற நூல்களுக்கு  மூலமாகும்.

manikkavachakarஇப்பாடல்களெல்லாம் நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்டன அல்ல. நாயகநாயகி பாவம் சிவநெறியில் இல்லை. விளக்கம்பெற அருணைவடிவேல் முதலியார் எழுதிய திருவெம்பாவை உரையின் முன்னுரை காண்க. திருமுறைகளில் மானிடப்பெண்ணொருத்தியின் கூற்றாக வரும் பாடல்கள் “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப்படும். இம்மரபையுணராதார் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவையைப் போல நாயகநாயகி பாவனையில் பாடப்பட்டதெனப் பிழைபடக் கூறுவர்..

தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலுக்கு உரைவரைந்த பேராசிரியர் கையறவுரைத்தலுக்குப் பின் களவொழுக்கத்துக்கு மெய்ப்பாடு கூறப்படாதென்றார். என்னை காரணமெனின், ‘கையறவுரைத்தல்’ தோன்றியதற்குப் பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக்காகா என்பது கருத்து.

கையறவுரைத்தல் என்பது சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்குதலை எல்லையாகவுடையது.

கையறவுரைத்தலினும் இறப்பத் தோன்றுவன மன்றத்திருந்த சான்றவரறியத் தன் தலைவன் பெயரும் பெற்றியும் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியும் நிகழும் மெய்ப்பாடாகலான் , அவை நடுவணைந்திணை யெனப்பட்ட நற்காமத்துக்குப் பொருந்தா எனப்பட்டது. பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகள் மனத்தவேயன்றி மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்பட்டுத் தலைவிக்கு நாணழிவு செய்தலின் பெருந்திணைக் குரியவாயின.

நற்காமத்துக்காகா என விலக்கப்பட்ட இம்மெய்ப்பாடுகள் பத்திஅனுபவத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் நல்லுத்தியாகப் பத்தி இலக்கியங்களில் பயன்பட்டன. ஆன்மா சீவபோதம் முற்றும் நீங்கித் திருவருளால் சிவபோதமுற்றுச் சிவானந்தத்தில் திளைக்கும் நிலையை இம்மெய்ப்பாடுகள் உணர்த்தின. சிவானுபவநிலையில் மெய்ப்பாடு எப்படியிருக்குமென மணிவாசகப் பெருமான் ஒருபெண்ணின் மீது வைத்துச் செந்தமிழ்ச் சொற்களாகிய தூரிகை கொண்டு ஓருயிரோவியமாகத் தீட்டியருளினார்.

“ஓரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தாள்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்

ஆரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்”

(திருவெம்பாவை 15)

அகப்பொருள் இலக்கணப்படி, காதல் வயப்பட்ட தலைவி தலைவன் இருப்பிடம் நோக்கிச் செல்வோமே என நெஞ்சோடு உசாவுவது அகனைந்திணையாகும்; தலைவனைத் தேடி இல்லிகந்து செல்வதும் அவன் காதலுறாதவழித் தன் காதலைத் தானே கூறுதலும் நாணழிவாதலின் பெருந்திணையாய்ப் புறப்படலிற் சேர்க்கப்பட்டுவிடும்.

போரவைக்கோப் பெருநற்கிள்ளி என்பான்மேற் காதல் கொண்ட பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடிய பாடல்கள் மூன்று புறநானூறில் உள்ளன. (83,84, 85). “ அடியின்கட் புனைந்த செறிந்த வீரக்கழலினையும் மைபோன்ற தாடியினையும் உடைய இலையோன் பொருட்டு எனது வளையல் என்னைக் கைவிடுதலான், யான் யாயை அஞ்சுவேன்; அவன் பகையைக் கொல்லுந் தோளைத் தழுவுதற்கு அவையின்கண் உள்ளாரை நாணுவேன். என்னைப்போல மிக்க நடுக்கமுறுவதாகுக இம்மையலூரே என்று நக்கணையார் கூறினார்.

யாயில்லையாயின் வளை கழலுவதற்கு அஞ்சவேண்டுவதில்லை;அவையில்லையாயின், முயங்குதற்கு அஞ்ச வேண்டுவதில்லை. என்று தன் ஒருதலைக் காமத்தை வெளிப்படுத்தற்கு அஞ்சிக் கூறிய இக்காதற்பாடலைப் புறத்திணையில் சேர்த்தமைக்குக் காரணம், “ பெருங்கோழிநாய்கன் மகளொருத்தி, ஒத்த அன்பினாற் காமமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது இதனின் (சுட்டியொருவர்ப் பெயர்கொள்ளாத பாடாண்பாட்டுக் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை ) அடக்குக என நச்சினார்க்கினியர் கூறினார்.(தொல்.புறத்.28,29)

பத்தி இலக்கியங்களில், குறிப்பாகத் திருமுறைகளில் இந்தச் சிக்கலுக்கு இடமே இல்லை. தலைவி நிலையில் நின்று திருமுறையாசிரியர் தாம் அனுபவிக்கும், அனுபவிக்க விழையும் சிவானுபவத்தைப் பெண்பாற்கைக்கிளையாகப் பாடுகின்றனர்.

திருவாசகம், திருவம்மானையில்,

“சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்றிரடோள்

கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்

றூடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி

ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்” (17)

இத்திருப்பாடலில் தலைவி ‘உள்ளுருகித் தேடுவேன்’ என்று கூறினாளே யொழிய இல்லிகந்து தலைவனைத் தேடி அலையவில்லை. ஆதலின் அகனைந்திணையாம். இத்திருப்பாடலில், `சூடுவேன் பூங்கொன்றை` என்றது பிரிவாகிய பாலை,`சூடிச் சிவன்றிரடோள்கூடுவேன்` என்றது, புணர்ச்சியாகிய குறிஞ்சி, `கூடி முயங்கி மயங்கிநின் றூடுவேன்’ என்றது ஊடலாகிய மருதம், `செவ்வாய்க் குருகுவேன்` என்றது பிரிவுக்கு இரங்குதலாகிய நெய்தல், `தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்` என்றது ஆற்றி இருத்தலாகிய முல்லை என அகனைந்திணை ஐந்தும் இத்திருப்பாடலில் இருத்தல் அறிந்தின்புறலாம்.

தலைவன் இருப்பிடம் நோக்கித் தலைவி இல்லிகந்து செல்வது நாணழிவாதலின் பெருந்திணையாய்விடும். அப்பரடிகள் இப்பெருந்திணை மெய்ப்பாட்டினை ஏற்றிப் பல திருப்பாடல்களை அருளியுள்ளார். அவற்றுள் ஒன்று பலரும் அறிந்தபாடல்.

“முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே”

திருவாரூர்ப் பெருமானுடைய திருப்பெயரைக் கேட்டவுடனேயே தன்வசமழிந்து தலைவனைச் சென்று அடைந்த தலையன்புடைய தலைவியின் நிலைமையினைத் தோழி கூறுவதாக அமைந்தது இப்பாடல். எத்துணை அன்பினளாயினும் தானே தன் இல்லத்தினைக் கடந்து செல்லாமை பெண்ணுக்குரிய ஆசாரம் அல்லது ஒழுக்கம் என்பது சங்ககால நியதி.. திருவாரூரன் பெயரினைக் கேட்ட தலைவி தன்னில்லிறந்து சென்று திருவாருரையடைந்த செயல், ‘அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை’ எனப்பட்டது. நிறை என்பது பெண்மைக்குணம். அது, பெண் தன் மனத்திலிருப்பதைப் பிறர் அறியாது ஒழுகும் ஒழுக்கம். ‘நிறை யெனப்படுவது மறை பிறர் அறியாமை.’ . தன் நாமம் என்றது, நிறை அழியாமல் இருப்பவள் என்னும் பொருளுடையதாகிய கன்னி என்னும் பெயர். `தன் நாமம் கெட்டாள்` என்றது கன்னி என்ற பெயரழிதல்; அதாவது நிறையழிதல். நிறையழிதல் பெருந்திணை. சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை இத்துறைப்பாடல் விளக்கியருளியது.

(தொடரும்)

14 Replies to “சங்க இலக்கியமும்  சைவர்களும் – 1”

 1. மிகப் பெரிய கட்டுரை. இன்னொரு முறை நிதானமாகப் படிக்க வேண்டும். இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாமோ! 🙂

 2. பக்தி இலக்கியங்களைச் சாடினால் தான் “அறிவு ஜீவி” என்னும் தலையாய பட்டம் கிடைக்கும். 🙂 பக்தி இலக்கியங்களை இலக்கிய வரிசையில் சேர்ப்பதே இல்லை! 🙁

 3. //பக்தி இலக்கியங்களைச் சாடினால் தான் “அறிவு ஜீவி” என்னும் தலையாய பட்டம் கிடைக்கும். 🙂 பக்தி இலக்கியங்களை இலக்கிய வரிசையில் சேர்ப்பதே இல்லை! :(//

  உண்மை, உண்மை! இந்து சமயத்தைச் சாடினால்தான் “பச்சைத் தமிழன்” என்று பொருள். இந்து சமயத்தைஇகழ்ந்து, மற்றெல்லாச் சமயங்களையும் ஏற்றிப் போற்றினால்தான் “பச்சைத் தமிழன்” ஆவான்!

  இந்து சமயத்தைத் தாழ்த்தும், எதிர்க்கும் அனைத்துக்குப்பைகளுமே, “பச்சைத் தமிழனை”ப் பொறுத்தவரை இலக்கியம்தான்!

 4. தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் வைத்த கருத்தை மறுத்து இன்னொரு தமிழ் பேராசிரியரே எழுத முடியும். முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஏன் போன‌வாண்டு தமிழ் இந்து நாளிதழில் வந்த கட்டுரைக்கு உடனே மறு கட்டுரையாக இதை அங்கு அனுப்பியிருக்கக்கூடாது? அவர்கள் எதிர்கட்டுரைகள் பலவற்றை உடனேயே போடுகிறார்கள். அப்படி அனுப்பி அவர்கள் போடவில்லையென்றால், இங்கு அவர்கள் அப்படிச் செய்துவிட்டார்கள் எனலாம். பின்னர் இங்கு போடலாம்.

  தமிழ்ஹிந்துவுக்கு மட்டுமே தெரிந்த முனைவராக இருப்பது குடத்திலிட்ட விளக்காக.

  பெருமாள் முருகன் கட்டுரையை அங்கு படித்தவர் ஏராளம். அவர்களுள் சிலரே இங்கும் படிக்கலாம். மற்றவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்?

  முனைவர் பலவிடங்களிலும் தன் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். தினமணியில் ஒரு பேராசிரியர் கருத்து வந்ததென்றால், தினமணிக்கும் இக்கட்டுரையை அனுப்பி அப்பேராசிரியர் பேசியவது தவறு என்று வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கலாமே?

  இங்கு படித்து பின்னூட்டமிடுவர்கள் சிலரே. பின்னூட்டமிடுவோர் வெகு சாதாரணமானவர்கள். அவர்களின் தமிழறிவு பள்ளிப்படிப்பு வரைக்குமே. கருத்துச்செரிவுள்ள கட்டுரைகளாகயிருப்பினும், படிப்பவர் இல்லையென்றால் என் பயன்?

 5. //பக்தி இலக்கியங்களைச் சாடினால் தான் “அறிவு ஜீவி” என்னும் தலையாய பட்டம் கிடைக்கும். 🙂 பக்தி இலக்கியங்களை இலக்கிய வரிசையில் சேர்ப்பதே இல்லை! 🙁
  //

  பக்தி இலக்கியங்கள் இலக்கிய வரிசையில் சேரா என்று இக்காலத்தில் எவர் சொல்லியும் யான் கேட்டதில்லை. புதுக்கதையாக இருக்கிறதே!

  ஆனால் அக்காலத்தில் சொன்னார்கள் என்று நம்ப ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது.

  கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்
  எண்ணும் திருநாமம் திண்ணம் ;நாரணமே

  என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இலக்கியமாகாது என்று மதுரகவியாழ்வாரிடன் மதுரைத்தமிழ்ச்சங்கப் புலவர்கள் சொல்லி நிராகரித்தபின் மதுரகவி என் தலைவன் பாட்டு இலக்கியமாகாதா ? அப்படியென்றால், சங்கப்பலகையிலேற்றிக் காட்டுங்கள் என, அப்படியே சங்கப்பலகையில் பொற்றாமரைக்குளத்தில் மிதக்க விட, அப்பாடல் மிதக்க, அவர்கள் இலக்கியம் என்று ஏற்றுக்கொண்டதாக அவ்வரலாறு வருகிறது.

 6. //பக்தி இலக்கியங்கள் இலக்கிய வரிசையில் சேரா என்று இக்காலத்தில் எவர் சொல்லியும் யான் கேட்டதில்லை. புதுக்கதையாக இருக்கிறதே!//

  புதுக்கதையெல்லாம் இல்லை! கோவையில் நடந்த செம்மொழி மகாநாட்டில் பக்தி இலக்கியங்களைச் சேர்க்காததற்குச் சொல்லப்பட்ட காரணமே இங்கு நான் சுட்டியது! ஆண்டுகள் நான்கிற்கும் மேல் ஆனதால் பலருக்கும் மறந்திருக்கலாம். 🙂 ஆண்டாளின் திருப்பாவை பல முறை பலரால் இகழப்பட்டிருக்கிறது என்பதையும் மறந்தீர்களோ? 🙂

 7. துவங்கி சைவ பக்தி இலக்கியங்கள் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக நீட்சியாக வளர்ச்சியாக விளங்குவததை ஐயா முத்துக்குமாரசுவாமி மிகச்சிறப்பாக வரைந்துள்ளார். சங்க இலக்கியம் மக்களை அடையாமல் போனது சைவர்களால் என்ற பெருமாள் முருகனின் வாதத்தினை மிகச்சிறப்பாக நிராகரித்திருக்கிறார் ஐயா. தொடர்ந்து ஐயா எழுத வேண்டுகிறேன்.

 8. அருமையானக்கட்டுரை. முனைவர் ஐயாவுக்கு நன்றி. சங்க காலம் தொட்டு ஓங்கி இருந்த சிவ வழிபாட்டின் தொன்மை, சிவபெருமானுக்கு சங்கத்தமிழ் புலவர் வழங்கியப்பெயர்கள், சிவப்பரத்துவத்தினை சாற்றிய சங்கப்புலவர்கள் என்று துவங்கி சைவ பக்தி இலக்கியங்கள் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக நீட்சியாக வளர்ச்சியாக விளங்குவததை ஐயா முத்துக்குமாரசுவாமி மிகச்சிறப்பாக வரைந்துள்ளார். சங்க இலக்கியம் மக்களை அடையாமல் போனது சைவர்களால் என்ற பெருமாள் முருகனின் வாதத்தினை மிகச்சிறப்பாக நிராகரித்திருக்கிறார் ஐயா. தொடர்ந்து ஐயா எழுத வேண்டுகிறேன்.

 9. முனைவர் ஐயா
  “இப்பாடல்களெல்லாம் நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்டன அல்ல. நாயகநாயகி பாவம் சிவநெறியில் இல்லை”.
  ஐயா
  நாயக நாயகி பாவம் சைவத்தில் இல்லை என்பது விளங்கவில்லை. வீரசைவமே நாயக நாயகி பாவந்தான். இரைவனைத்தலைவனாக பக்தரை தலைவியாகக்கருதும் தேவாரபாடல்களும் திருக்கோவையாரும் அந்த பாவத்தில் அமைந்தவையே என்பது வீரசைவர் எண்ணம். இறைவனோடு பக்தன் கொள்ளும் உணர்வின் உச்சம் சதி பதி பாவனை என்று வீரசைவம் போற்றுவது இந்த பாவனையே. மற்ற பாவனைகளில் இருவருக்கும் இடைவெளி உள்ளது. ஆனால் நாயகி நாயக பாவத்தில் அது இல்லை.தன்னை மறத்தல் இழத்தல் நாயக நாயகி பாவம் இல்லை என்பது அடியேனுக்கு மழுப்பலாகத்தோன்றுகிறது.

 10. It is news to me.
  First time coming to know that devotional literature was not found favor with some 🙂

  What were the reasons they gave for their decision in the Conference? Any link?

 11. சிவஸ்ரீ விபூதி பூஷண்:
  தங்கள் என் கட்டுரைகளை வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. சித்தாந்த சைவத்தில், குறிப்பாகத் திருமுறைகளில் நாயக நாயகி பாவம் பற்றிய சிறு விளக்கம் தர விரும்புகின்றேன்.
  சிவத்துடன் அணைவதுதான் முத்தி என்பது சித்தாந்தம். சிவம் என்பது ஆணுமன்று; பெண்ணுமன்று. (“ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள்” (திருவாசகம்,திருப்பொன்னூசல் 5) “பெணொ டானென்று பேசற் கரியவன்” 5- ;”பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை” திருமுறை 6-45-9) யாதொரு உருவமோ வடிவமோ அற்ற சிவ வியாபகத்தில் ஆன்மா வியாப்பியமாகக் கலத்தல் பரமுத்தியாகச் சைவம் கருதுகின்றது. இந்த முத்தியினை, உண்மை விளக்கம் எனும் சாத்திரம்,
  “ஆதவன்றன் சந்நிதியில் அம்புலியின் ஆர்சோதி
  பேதமற நிற்கின்ற பெற்ரிபோல் – நாதாந்தத்
  தண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்தின்பக்
  கண்ணில் அழுந்தியிடுங் காண்”(47) எனக் கூறுகின்றது.
  சந்திரனொளி சூரியனொளியிற் கலந்துநிற்றல் உவமை; ஆன்மசித்து சிவசித்தில் வேறறக் கலந்து நிற்றல் உவமேயம்.
  ஆண் பெண் என்பன மாயாகாரியமான உடலுடன் சம்பந்தப்பட்டது. உயிரில் இந்த வேறுபாடு இல்லை. முத்தியடைவது ஆன்மாவே யன்றி உடலன்று. திருவெம்பாவை மகளிர், “உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம், உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பங்காவோம், அன்னவரே எம் கணவராவார்” என வேணுகின்றனரே யன்றி சிவனே கணவனாக வர வேண்டும் என இரப்பதில்லை. ‘எங்கொங்கை நின்னன்ப ரல்லார் தோள் சேரற்க” என்றனரே யன்றி, ஆண்டாளம்மையாரைப் போல மானுடர்க்கென வாழ்க்கை படகிலேன் என்று கூறவில்லை.
  வைணவர்கள் திருமால் ஒருவனே புருடோத்தமன்; உயிர்கள் அனைத்தும் மகளிர். நாயக நாயகி பாவனையால் இவ்வுலக வாழ்விலேயே திருமாலை அனுபவிக்கலாம் எனும் கொள்கையினர். ஆழ்வார்களையும் பராங்குச நாயகி, திருமங்கை நாயகி எனப் பெண்பாலாக் குறிப்பிடுவர். ஸ்ரீசைதன்யர் சம்பிரதாயத்தில் ஆடல் பாடல்களாகவும் இவ்வுணர்வினை வெளிப்படுத்துவர். இந்த உடலை நீத்த பின்பு பக்குவ ஆன்மாக்கள் வைகுண்டம் செல்லும் வழியில் விரஜா நதியில் மூழ்கி ஒளியுடம்பு பெற்ருத் திருமால் முன்னமர்ந்து அவன் திருமேனியைப் பார்த்துக் கொண்டே யிருக்கும் இன்பம்தான் முத்தி எனக் கூறுவர் என்பர். சைவர்கள் இதனைப் பத முத்தியே; பர முத்தி அன்று என்பர். முத்தியிலும் உடல் உண்டு என வைணவர்கள் கொள்வதால், அங்கு நாயக நாயகி பாவம் அமையலாம்.
  வீர சைவத்தில், அக்கமதேவியாரின் மன நிலையை வைத்து நாயக நாயகி பாவம் உண்டு எனக் கருதினாலும், இட்டலிங்க ஐக்கியத்தில் அது இன்மை தெளிவு. எந்த சரணரும் தம்மைப் பேண்ணாகக் குறிக் கொண்டதில்லை என்பது என் கருத்து. ஸ்ரீ விபூதி பூஷண் இக்கதுத்தை மேலும் விளக்கினால் நலம் பயக்கும்.

 12. பேராசிரியர் ஐயா இறையும் சரி உயிர்களும் சரி ஆண் பெண் அலி என்ற பால்கடந்தவை என்பது எல்லா சைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. கன்னட வசன ஆசிரியர்களுள் பசவர்காலத்துக்கு முட்பட்ட ஜேடர தாசிமைய்யா அழகாக சொல்வார் மீசைவந்தால் ஆண் முலைவந்தால் பெண் ஆன்மாவில் அந்த பேதமில்லை என்று. வைணவர்கள் சொல்லும் கருத்துக்களான இறைவன் ஒருவனே ஆண் மற்று எல்லா உயிர்களும் பெண்கள் என்பதோ அல்லது இறையோடு கலவாமல் தனித்திருப்பதோ வீரசைவத்தில் இல்லை. ஆனால் அக்க மஹாதேவியின் வாழ்வுத்தெளிவாக நாயக நாயகி பாவத்திற்கு வீரசைவத்தில் இடம் உண்டு என்றேக்காட்டுகிறது. இன்னமும் ஒன்று தமிழ் வீரசைவ இலக்கியங்கள் தமது சைவத்தினை கற்புடை சைவம் என்றே சொல்கின்றன. துறைமங்கலம் சிவப்பிரகாசர் தம்முடைய பிரபு லிங்க லீலையில் நிறைவாக வாழ்த்துகிறார். புண்ணியர் உலகில் வாழ்க புலஞ்செறு நோன்பு வாழ்க
  பெண்ணொரு பாகன் பூசை பேணிவாழ அடியர் வாழ்க
  கண்ணுதல் ஒருவன் சார்ந்த கற்புடைச் சைவம் வாழ்க
  அண்ணலல் லமன்சீர் கேட்கும் ஆதர வாளர் வாழ்க.
  அவருக்கு முன்னவரான ஆதிசிவப்பிரகாசர் அருளிய அத்துவித வெண்பாவில் ஒரு கேள்வி சிவவடிவான விபூதி ருத்ராக்ஷம் அணிந்தால் போதாதா? சிவலிங்கம் ஏன் அணியவேண்டும்? என்பது. அடிகள் சொல்வார் கற்புடையப்பெண்டிர் பொன்னகை அணிதல் போல் விபூதி ருத்ராக்ஷம் அணிதல் லிங்கதாரணம் அவரணியும் தாலி போன்றது. கற்புடை சைவம் எனப்படுதால் வீரசைவத்தில் முதன்மாயகத்தெரிவது நிச்சயம் நாயக நாயகி பாவந்தான் என்பது அடியேனின் எண்ணம்.
  கற்புடை சைவம் வாழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *