ரிஷிமூலம் [சிறுகதை]

mahabharata_dicegame“சகதேவன் பணயம்!”

வழக்கம் போலவே சகுனி திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். அதே கனவுதான் என்றுதான் உணர வழக்கம் போலவே ஒரு நிமிஷம் ஆனது. அவரது இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பதின்மூன்று வருஷமாக ஒரே கனவைக் கண்டு விழித்துக் கொண்டாலும் அந்தக் கனவு தன் இதயத்தை இன்னும் கிழிப்பதை உணர்ந்ததும் அவரது இதழ்களில் வெறுப்பும் விரக்தியும் கலந்த ஒரு புன்னகை எழுந்தது. பக்கத்திலிருந்த விளக்கைத் தூண்டிவிட்டார். அருகிலிருந்த குடுவையிலிருந்து சிறிது நீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எத்தனை முயன்றாலும் இனி மேல் தூங்க முடியாது என்பது அவருக்குத் தெரிந்த விஷயம்தான். அருகிலிருந்த மணல் கடிகையை நோக்கினார். இன்று இரண்டாம் ஜாமம் கூட முடிந்திருக்கவில்லை. இன்னொரு குடுவையிலிருந்து ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் காந்தாரத்தின் கசப்பு நிறைந்த மதுவை சரித்துக் கொண்டார். அவரது கைகள் அனிச்சையாக அவரது கச்சையில் கட்டி இருந்த பகடைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. மதுவைப் பருகிக் கொண்டே தன் அறையை விட்டு வெளியே நடந்தார்.

அவரது கால்கள் தானாக உலூகனின் மகனும் தன் பன்னிரண்டு வயது பேரனும் ஆன துர்வசுவின் அறைக்குள் நுழைந்தன. உறங்கிக் கொண்டிருந்த துர்வசுவையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனது படுக்கையில் உட்கார்ந்தால் அவனது தூக்கம் கெட்டுவிடலாம் என்ற ஜாக்கிரதை உணர்ச்சியால் நின்று கொண்டே இருந்தார். எத்தனைதான் ஓசை எழுப்பாமல் இருக்க முயற்சி செய்தாலும் அவர் அசையும்போதெல்லாம் பகடைகள் ஒன்றோடொன்று இடித்துக் கொள்ளும் ஒலி அந்த நிசப்தமான இரவில் கேட்கத்தான் செய்தது. துர்வசு முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தான். பகடைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

முன்கட்டில் இருந்த தன் அலுவல் அறைக்குள் நுழைந்தார். அவரது அந்தரங்க சேவகனான விப்ரசேனன் அங்கே உட்கார்ந்து கொண்டே உறங்கிக் கொண்டிருந்தான். கீழ் ஸ்தாயியில் சகுனி உறுமியதும் அவன் விழித்துக் கொண்டான். வேகமாகச் சென்று சில கோதுமை அப்பங்களையும் கொஞ்சம் பழச்சாறையும் கொண்டுவந்தான். அதற்குள் சகுனி ஒரு மஞ்சத்தில் அமர்ந்து ஓலைகளைப் புரட்டத் தொடங்கி இருந்தார். அவரது மனம் கண்ணன், கண்ணனின் தூது, கௌரவ பாண்டவர்கள் சார்பில் எந்தெந்த அரசர்கள்  போராடுவார்கள், படை பலம், முக்கிய வீரர்கள், கர்ணனிடம் இருக்கும் சக்தி ஆயுதம் என்று பல நாட்களாகப் போட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளை மீண்டும் போடத் தொடங்கியது. பாஞ்சாலமும் யாதவர்களும் விராடனும் சல்யனும் தங்கள் முழு படை பலத்தையும் பாண்டவர்கள் சார்பில் இறக்குவார்கள் என்ற புள்ளியையே அவர் மனம் மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது.

படைபலக் கணக்குகளில் நாழிகைகள் கழிவது தெரியாமல் மூழ்கிக் கிடந்தபோது கதவு மெலிதாகத் தட்டப்பட்டது. அதற்குள் சூர்யோதயமா என்று வியந்து கொண்டே சகுனி நிமிர்ந்தார். அருகே வந்த விப்ரசேனன் “தங்களைப் பார்க்க யாதவத் தலைவரும் பாண்டவத் தூதரும் ஆன…” என்று ஆரம்பித்தான். சகுனி “என்ன! என்ன! என்னை சந்திக்க கண்ணன் வந்திருக்கிறானா?” என்று பெரும் வியப்படைந்தார். “நேரம் என்ன?” என்று கேட்டார். “பிரம்ம முகூர்த்தத்தில் சில நிமிஷங்கள் கழிந்திருக்கின்றன” என்றான் விப்ரசேனன். “இத்தனை காலையில் எழுந்து கண்ணன் என்னைப் பார்க்க ஏன் வர வேண்டும்?” என்று கேட்டார் சகுனி. விப்ரசேனனிடம் அவர் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அறிந்திருந்ததால் அவன் மௌனமாகவே இருந்தான்.

குறிப்பறிந்து விப்ரசேனன் கொண்டு வந்திருந்த உத்தரீயத்தை அணிந்து கொண்ட சகுனி மேலே அவருக்குப் பிடித்த பழுப்பு நிற சால்வையையும் போர்த்திக் கொண்டார். வாசலை நோக்கி விரையும்போது அவரது கைகள் தன்னிச்சையாக அவரது கச்சையில் இருந்த பகடைகளைத் தொட்டுக் கொண்டன. அவரைக் கண்ட கண்ணன் எழுந்தான். அந்த அதிகாலையிலும் மாலை, மயிற்பீலி, வாசனை திரவியம் என்று கண்ணன் முழு அலங்காரத்தில் இருந்ததை சகுனியின் மனதில் ஒரு பகுதி குறித்துக் கொண்டது. கண்ணன் தன் எதிரி என்ற நினைவு அவர் மனதில் பூரணமாக இருந்தாலும் அவர் முகம் தானாக மலர்ந்தது. எதிரிகளையே இப்படி மனம் மலரச் செய்யும் கண்ணன் தன் நண்பர்களான பாண்டவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவான், அந்த மகிழ்ச்சி தனக்கும் கௌரவர்களுக்கும் கர்ணனுக்கும் இல்லாமல் போய்விட்டதே என்று சகுனி ஒரு நொடி மனதோடு நொந்து கொண்டார். மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் சகுனி கண்ணனை நோக்கி விரைவது நிற்கவே இல்லை. கண்ணனின் அருகே சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். “வர வேண்டும், வர வேண்டும்! கண்ணா, நீ இங்கே எதற்காக வந்திருந்தாலும் உன்னைப் பார்த்ததில் உண்மையாகவே பெருமகிழ்ச்சி!” என்றார்.

“எனக்கும், காந்தார மன்னரே!” என்று கண்ணன் புன்முறுவல் செய்தான்.

சகுனியின் முகத்திலும் ஒரு புன்முறுவல் எழுந்தது. “நான் காந்தார மன்னன் மட்டுமல்லவே கண்ணா! உன் மகன் சாம்பனின் மாமனாரின் மாமன், உனக்கும் மாமன் முறை அல்லவா!”

“திருத்திக் கொண்டேன், மாமா!”

“வா, உள்ளே சென்று பேசுவோம்!” என்று சகுனி கண்ணனை தன் அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார். மஞ்சத்தின் மீது சிதறிக் கிடந்த ஓலை நறுக்குகளை ஒரு பக்கம் தள்ளினார். கண்ணன் “ஜாக்கிரதை, மாமா! உங்கள் ரகசியங்கள் ஏதாவது உங்கள் எதிரிக்கு தெரிந்துவிடப் போகிறது!” என்று சிரித்தான். தன் கையாலேயே விப்ரசேனன் புதிதாகக் கொண்டு வந்திருந்த அப்பங்களை பரிமாறியபடி “உனக்குத் தெரியாத ரகசியம், நீ யூகிக்க முடியாத ரகசியம் ஏதும் உண்டா கண்ணா? என் மனம் எப்படி எல்லாம் சிந்திக்கும் என்று என்னை விட உனக்கு அதிகம் தெரியும் என்றுதான் எனக்கு சில சமயம் தோன்றுகிறது” என்று சகுனியும் நகைத்தார்.

draupadi“இல்லை மாமா, அப்படித் தெரிந்திருந்தால் திரௌபதியை மானபங்கம் அடைய விட்டிருப்பேனா என்ன?” என்று கண்ணன் பெருமூச்செறிந்தான்.

“கண்ணா, உன்னிடம் மனம் திறந்து உண்மையைச் சொல்கிறேன். பாண்டவர்களின் நாட்டைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை துவாரகைக்கோ பாஞ்சாலத்துக்கோ துரத்திவிடுவது மட்டும்தான் என் திட்டம். தம்பிகளையும் மனைவியையும் தன்னையுமே அந்த மூடன் பணயம் வைப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு புறம் மூடன், மறுபுறம் மூர்க்கன். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.  என்னை யாரும் நம்பப் போவதில்லை, நீ ஒருவனாவது…”. சகுனியின் குரல் அடைத்தது. அவர் மௌனமாக ஜன்னலை நோக்கினார்.

“நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கக் கூடும்தான் மாமா. எனக்கு விஷயம் தெரிந்தபோது பிதாமகரும் ஆசார்யரும் திருதராஷ்டிரரும் இருந்துமா இந்த அநியாயம் நடந்தது என்ற ஆதங்கத்தை விட கூர்மதியாளர் சகுனி கூடவா இதை தடுக்கவில்லையா, இனி போரை அவரால் கூடத் தவிர்க்க முடியாதே என்ற வியப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், என்னால் உங்கள் வார்த்தைகளை முழுவதுமாக நம்ப முடியவில்லை”  என்று கண்ணன் கையை விரித்தான்.

இருவரும் எங்கோ வெறித்தனர். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் சகுனி இன்னும் இரண்டு அப்பங்களை எடுத்து கண்ணனின் தட்டில் வைத்தார்.

“பாண்டவர்களோடு போரை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஐந்து கிராமங்களையாவது…” என்று கண்ணன் ஆரம்பித்தான். சகுனி அவன இடைமறித்தார். “தான் விரும்பாத அறிவுரைகளை துரியன் காது கொடுத்துக் கேட்பதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் சில காலமாகவே அவன் என்னிடம் துரியனாக அல்ல, ஹஸ்தினபுரி இளவரசனாகத்தான் நடந்து கொள்கிறான். பாண்டவர்களோடு போரிட வேண்டுமென்றால் பதிமூன்று வருஷங்களுக்கு முன்பே போரிட்டிருக்கலாமே கண்ணா! போரில் நாங்கள் வெல்வோம் என்பது நிச்சயமில்லை என்பது கூடவா எனக்குப் புரியாது? துரியனின் அகங்காரம், கர்ணன் மீது அவனுக்கு இருக்கும் முரட்டு நம்பிக்கை, அவன் கண்களை மறைக்கிறது. ஆனால் நான் என்ன கணக்கு போடுவேன் என்று நீ கூடவா யூகிக்கவில்லை?”

கண்ணனின் உதட்டில் புன்முறுவல் அரும்பியது. “நாமிருவரும் எப்போதும் மற்றவர் போடும் கணக்கு என்ன என்று சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம் இல்லையா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ருக்மணியை விட உங்களைப் பற்றி நினைக்கும் நேரம்தான் அதிகம்” என்று கண்ணன் மெதுவாக நகைத்தான்.

சகுனியின் உடலில் இருந்த இறுக்கம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. அவரும் புன்முறுவல் புரிந்தார். “ஆம் கண்ணா! நான் அனிச்சையாக செய்யும் செயல்கள் இரண்டுதான் – ஒன்று பகடைகளை உருட்டுவது, இன்னொன்று கண்ணன், கண்ணன் என்று உன் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருப்பது! உண்மையைச் சொல்லப் போனால் நான்தான் உன் முதன்மை பக்தன்!” என்று சகுனியும் சிரித்தார்.

கண்ணன் ஒரு மஞ்சத்தில் அப்பத் தட்டை எடுத்துக் கொண்டு ஒரு மஞ்சத்தில் உட்கார்ந்தான். அப்பத்தை உடைத்தான். ஆனால் அப்பத்தை ஒரு விள்ளலுக்கு மேல் கண்ணன் உண்ணவில்லை. “இத்தனை காலையில் அப்பங்களை சாப்பிட முடிவதில்லை மாமா, வயதாகிறதே” என்று சொல்லிக் கொண்டே தட்டை ஒரு புறம் தள்ளினான். சகுனி “இந்தப் பழச்சாறையாவது கொஞ்சம் அருந்து கண்ணா” என்று ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் கொஞ்சம் பழச்சாறை ஊற்றினார். கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு கண்ணன் சகுனியை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். “பாண்டவர்கள் ஐவரும் முற்றிலும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்களா, மாமா?” என்று நேரடியாகக் கேட்டான்.

சகுனி கண்ணனின் கண்களைத் தவிர்த்தார். நிலத்தை நோக்கினார். “அர்ஜுனன், அர்ஜுனன் ஒரு வருஷ அஞ்ஞாதவாசம் முடிவதற்குள்ளேயே வெளிப்பட்டுவிட்டான், அவர்கள் மீண்டும் காட்டுக்குப் போவதுதான் நியாயம்” என்று மெதுவான குரலில் சொன்னார்.

கண்ணன் கடகடவென்று பெரிதாக நகைத்தான். “நியாயம்! நியாயம்! அரக்கு மாளிகை நியாயம்!” பின்னர் கொஞ்சம் இருமினான். பழச்சாறை மீண்டும் கொஞ்சம் பருகிக் கொண்டான். மீண்டும் சகுனியை புன்முறுவலோடு நோக்கினான். “இங்கே நாமிருவர் மட்டுமே இருக்கிறோம், வெளிப்படையாகவே பேசுவோமே!” என்றான்.

ஒரு நிமிஷம் இருவரும் மௌனமாக இருந்தனர். பிறகு கண்ணன் லேசாக செருமிக் கொண்டான். “இரவு அமைதியாகத் தூங்குகிறீர்களா? இன்னும் எத்தனை காலம் இப்படி அமைதி இழந்து மகிழ்ச்சி இழந்து இரவுகளைக் கழிக்கப் போகிறீர்கள்?” என்றான்.

arjuna_krishna_warriors“மாமா, இந்தப் போர் தவிர்க்க முடியாதது. பதின்மூன்று வருஷங்களுக்கு முன் சகதேவன் பணயமாக வைக்கப்பட்டபோதே போர் தொடங்கிவிட்டது. இப்போது பீஷ்ம துரோண பீமார்ஜுனர்கள் தங்கள் அம்புகள் மூலம் போராடப் போகிறார்கள், அவ்வளவுதான். ஆனால் போர் உங்கள் அறிவுக்கும் என் அறிவுக்கும் மத்தியில்தான். என்னால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும், ஆனால் அர்ஜுனனின் அழிவை எப்படித் தவிர்ப்பது என்று எனக்கே தெரியவில்லை.”

அரக்கு மாளிகை என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு கண்ணன் சொன்ன வேறு எதுவுமே சகுனியின் காதில் ஏறவில்லை. சாளரத்தின் வெளியே இன்னும் இருளாக இருந்த ராஜவீதியை பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணன் எதிரில் இருப்பதையே மறந்துவிட்டது போல இருந்தது. கண்ணனும் எதுவும் பேசாமல் அவர் நிகழ்காலத்துக்கு வருவது வரை காத்திருந்தான். அதற்கு சில நிமிஷங்கள் ஆயிற்று. கம்மிய குரலில் சகுனி சொன்னார் – “கண்ணா, ஒரு காலத்தில் சகதேவனும் உலூகனும் நெருங்கிய தோழர்கள், சகதேவன் இந்த மாளிகையில்தான் பாதி நேரத்தைக் கழிப்பான். ஏன் அவனுக்கு நிமித்தக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தந்தவனே நான்தான். இன்று அவன் என்னைத் தாண்டி வெகு தூரம் போய்விட்டான்” என்று பெருமூச்செறிந்தார்.

சகுனி தொடர்ந்தார் – “என் வாழ்வில் நான் செய்த தவறு என்பது அரக்கு மாளிகை விவகாரம்தான். பாண்டவர்கள் எரிந்து போனார்கள் என்று நம்பிய நாட்களில் இந்த மூர்க்கன் அரசனான பிறகு தற்கொலை செய்து கொள்வதாகவே முடிவெடுத்திருந்தேன். என் அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ பாண்டவர்கள் இறக்கவில்லை. நீ மஹா அறிவாளிதான், ஆனால் உனக்கும் தெரியாத ரகசியங்கள் உண்டு.”

கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான்.

சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான். சகுனி தன்னை மெதுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

கண்ணன் சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். ஆனால் கண்ணன் எதிர்பார்த்தற்கு மாறாக சகுனி அவன் கண்களை நேராகப் பார்த்தார்.

“வாரணாவதம் முடிந்து போன கதை மாமா. இப்போது அர்ஜுனனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டும். உங்களால்தான் இதை செய்ய முடியும்.”

சகுனியின் உடலில் சிறு நடுக்கம் இன்னும் இருந்தாலும் அவர் குரல் உறுதியாக இருந்தது. “பாண்டவர்களின் முதல் எதிரி துரியோதனன் அல்ல, நான்தான் என்பது நீ அறியாததா? உன் கணக்கு எனக்கே புரியவில்லையே!”

“உங்களுக்குத் தெரியாததை நான் சொல்லிவிடப் போவதில்லை. பாண்டவர்களில் ஒருவர் இறந்தாலும் அவர்கள் எல்லாரும் இறந்த மாதிரிதான். அதை உங்கள் ஆழ்மனதில் நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.” என்று கண்ணன் மெதுவான குரலில் முணுமுணுத்தான்.

சகுனியின் குரல் தழுதழுத்து மீண்டும் உறுதி கொண்டது. “துரியனின் மேலாண்மைக்காகத்தான், அவன் உண்மையிலேயே பாரதத்தின் சக்ரவர்த்தி ஆகும் நாளைப் பார்க்கத்தான், நான் உயிர் தரித்திருக்கிறேன். என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இந்த அரசியல் மற்றும் போரில் இடமில்லை கிருஷ்ணா!” என்றார்.

“எல்லா விதத்திலும் துரியோதனனுக்காக ஆடுங்கள். ஆனால் நான் அஞ்சும் அர்ஜுனன் அழிவை மட்டும் பத்து நாட்கள் தள்ளிப் போடுங்கள். மற்றவற்றை நான் சமாளித்துக் கொள்கிறேன்.”

சகுனி இப்போது விட்டத்தை வெறித்தார். “கண்ணா, என்னால் பாண்டவர்களின் வீரத்த்துக்கு அணை போட முடியும். ஆனால் பாண்டவர்களோடு உன்னையும் சேர்த்து எதிர்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அர்ஜுனன் அழிந்தாலும் சுதர்சன சக்ரமும் சார்ங்க வில்லும் கௌரவர்களை அழித்துவிடும் என்றுதான் பயப்படுகிறேன் கிருஷ்ணா!”

“உங்கள் ஆட்டத்தை என்னிடமே ஆரம்பித்துவிட்டீர்களா? நான் பாண்டவர்கள் பக்கம்தான். ஆனால் கௌரவர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான் மாமா! பிதாமகருக்கும் ஆசார்யருக்கும் ஏன் துரியோதனனுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்க எனக்கு விருப்பமில்லைதான். ஆனால் நான் எப்படி போராடாமல் இருக்க முடியும், என்ன காரணம் சொல்ல முடியும்?”

சகுனி புன்முறுவலித்தார். கண்ணன் கொஞ்சம் திகைத்து அவரை மீண்டும் உற்று நோக்கினான். சில நொடிகளில் அவன் திகைப்பு அகன்றது. “வருகிறேன் மாமா! அடுத்த சந்திப்பு போர்க்களத்தில்தான். எனக்கு ஆசி அளியுங்கள்” என்றபடி சகுனியின் தாள் பணிந்தான். சகுனி அவனைத் தடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் வாய்க்குள்ளாகவே “அர்ஜுனன் மட்டுமல்ல, பாண்டவர்கள் ஐவருக்கும் கவசமாக இரு” என்று முணுமுணுத்தார். “இன்னும் கொஞ்ச நாளாவது நிம்மதியாக உறங்குங்கள் மாமா!” என்றபடியே கண்ணன் விடை பெற்றான். கண்ணனை வாசல் வரை வந்து வழியனுப்பிய சகுனி கடைசியாகச் சொன்னார் – “ஐந்து நாட்கள்!”

கண்ணனை சந்தித்த பின்னர் சகுனி ஒரு புது மனிதராக மாறினார். உற்சாகம் அவரது ஒவ்வொரு செயலிலும் ததும்பியது. படை திரட்டும்போது துரியோதனனை துவாரகை சென்று கண்ணனிடம் உதவி கேட்குமாறு வற்புறுத்தியது அவர்தான். கர்ணன் நேரடியாகவே “மாமா, உங்களுக்கு மூளை கெட்டுவிட்டதா? தூது வந்த கிருஷ்ணனை நாம் கொல்லப் பார்த்தோம், அர்ஜுனனின் மைத்துனன் நமக்கெப்படி உதவுவான்?” என்று கேட்டான். சகுனி கண்ணன் மறுத்தால் நமக்கென்ன நஷ்டம் என்று திருப்பிக் கேட்டார். போர் என்று வந்தாகிவிட்டது, எந்த சிறு வாய்ப்பையும் நாம் விட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். அவரது வற்புறுத்தலால்தான் துரியோதனன் துவாரகை சென்று கண்ணனின் உதவியைக் கேட்டதும், யாதவ சேனையைப் பெற்றதும். அதே போல சல்லியனுக்கு விருந்தோம்பி அவனையும் கௌரவர்கள் பக்கம் திருப்பும் யோசனையும் அவர் மூளையில் உதித்ததுதான். இரு புறமும் ஒன்பது அக்ரோணி சேனை இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கௌரவர்கள், இப்போது யாதவ சேனையும், சல்லியனின் சேனையும் தங்கள் பக்கம் சேர்ந்ததால் பதினோரு அக்ரோணி சேனையைக் கொண்டு ஏழு அக்ரோணி சேனையோடு போரிடும் மகிழ்ச்சியான நிலைக்குக் காரணம் சகுனிதான் என்பதை உணர்ந்திருந்தார்கள். கண்ணன் வெறும் தேரோட்டியாகத்தான் இருப்பான், போரிடமாட்டான் என்பதும் அவர்கள் மகிழ்ச்சியை அதிகரித்தது. சகுனியே தங்கள் பிரதம ஆலோசகர் என்று துரியோதனன் வெளிப்படையாக அறிவித்திருந்தான்.

தங்கள் சேனைக்கு கர்ணனை தலைவனாக நியமிக்க வேண்டும் என்று துரியோதனன் சொன்னபோது அவனை மறுத்துப் பேசியது சகுனி மட்டுமே. கர்ணனின் தலைமையில் பீஷ்மரும் துரோணரும் முழு மனதோடு போரிடமாட்டார்கள் என்று அவர் சொன்னதை ஏற்றுத்தான் பீஷ்மர் தலைமை சேனாபதியாக நியமிக்கப்பட்டார். பீஷ்மரை முழு மனதோடுதான் தலைமை சேனாபதியாக நியமித்திருக்கிறோம் என்று அவரும் நினைக்க வேண்டும், அதற்காக மன்னர்களையும் பெருவீரர்களையும் அவர் தலைமையில் அணிவகுத்து நிற்கச் செய்வோம், ஒவ்வொருவரையும் மரியாதை நிமித்தம் உனக்கு அறிமுகம் செய்யச் சொல்வோம் என்று அறிவுரை சொன்னதும் அவர்தான். ஆனால் அது ஒன்றுதான் தப்புக் கணக்காக முடிந்தது, கர்ணன் பீஷ்மரின் தலைமையில் போரிட மறுத்து வெளியேறினான்.

பீஷ்மருக்குப் பிறகு கர்ணனை தலைமை சேனாபதியாக ஆக்க வேண்டும் என்று சொன்னபோது துரோணரின் பேரை முன் வைத்ததும் சகுனிதான். துரோணரை யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்துத் தருவேன் என்று வாக்குத் தர வைத்ததும் அவர் சூழ்ச்சிதான். பதினோராம் நாள் போரில் கர்ணன் அர்ஜுனனை எதிர்ப்பேன் என்று சொன்னபோது சகுனி அதை மறுத்துப் பேசினார். அர்ஜுனனை கர்ணன் தன் சக்தி ஆயுதத்தால் கொன்றுவிட்டால் யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்தாலும் போர் நிற்காது என்று அவர் சுட்டிக் காட்டினார். யுதிஷ்டிரனைப் பிடிக்க முடியவில்லை என்றால்தான் கர்ணன் அர்ஜுனனை எதிர்க்க வேண்டும் என்று சொன்னபோது அவரது புத்தி கூர்மையை துரியோதனன் மிகவும் சிலாகித்தான். அதே காரணத்தால்தான் அர்ஜுனனுக்கு எதிராக சம்சப்தகனாக – அர்ஜுனனோ தானோ ஒருவர் இறக்கும் வரை போரிட – கர்ணன் போகவில்லை. பதினான்காம் நாள் போரிலோ பீமன் கர்ணனோடு போர் நீண்ட நேரம் நடந்ததால் கர்ணனுக்கு அர்ஜுனனோடு போரிடும் வாய்ப்பே இல்லாமல் போனது. அன்று இரவில் கர்ணனின் வெல்ல முடியாத சக்தி ஆயுதத்தால் கடோத்கஜன் வீழ்ந்தான். சகுனி பல வருஷங்களுக்குப் பிறகு அன்றுதான் நிம்மதியாக உறங்கினார்.

karna_ghatotkacha_fight

சகுனியின் மைந்தன் உலூகனும் சகதேவனும் சிறு வயதில் விளையாட்டுத் தோழர்கள். அதனால் பதினேழு நாட்களும் அவனைத் தவிர்த்தே வந்த சகதேவன் பதினெட்டாம் நாள் போரில் உலூகனோடு முதல் முறையாகப் போரிட்டான். சகதேவனுக்கு உலூகன் எந்த விதத்திலும் சமமான வீரனல்லன் என்று உணர்ந்திருந்த சகுனி இதைக் கேள்விப்பட்டு அங்கே விரைந்தார். அதற்குள் உலூகன் இறந்திருந்தான். ஆத்திரம் தலைக்கேறிய சகுனி “உன் தோழனடா!” என்று உறுமியபடியே தன் வில்லை எடுத்தார். ஆனால் ஓரிரு நிமிஷங்களில் அவரது வேகம் குறைந்தது. அவர் இறக்கும்போதும் அவர் முகம் மலர்ந்தே இருந்தது. சகதேவனே “சகுனி என்னுடன் போரிடவே இல்லை, என் கை மூலம் இறக்கவே விரும்பியது போல இருந்தது” என்று கண்ணனிடம் வியந்தான். கண்ணனின் புன்னகை வழக்கம் போலவே ஒரு விடுகதையாகவே இருந்தது.

போர் முடிந்தபின் கர்ணனுக்கு நீத்தார் கடன் செலுத்துமாறு யுதிஷ்டிரனை குந்தி கேட்டது பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஹஸ்தினபுரத்துக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அண்ணனைக் கொன்றவன் அரியணை ஏறுவதா என்று ஹஸ்தினபுரத்தின் பல குலக்குழுத் தலைவர்கள் முணுமுணுத்தனர். அதனால்தானோ என்னவோ குந்தி நகுல சகதேவனிடம் சகுனிக்கு ரகசியமாகவே நீத்தார் கடன் செலுத்துமாறு ஆணை இட்டாள்.

************

பின்குறிப்புகள்:

விளக்கம் #1: ஒரு அக்ரோணி சேனை என்பது 21,870 ரதப்படை, 21,870 யானைப்படை, 65,610 குதிரைப்படை,  மற்றும்  109,350 காலாட்படை கொண்டது.

விளக்கம் #2: சம்சப்தகர்கள் எதிரிப் படையின் வீரன் ஒருவனுக்கு இறக்கும் வரை போரிட சவால் விடுபவர்கள். அர்ஜுனனோடு போரிடும் சம்சப்தக வீரர்கள் ஏறக்குறைய தற்கொலைப் படைதான். அர்ஜுன்னை போர்க்களத்திலிருந்து வெகு தூரம் பிரிக்க துரோணர் செய்த தந்திரம் இது.

விளக்கம் #3: கர்ணனின் முதல் எதிரி அர்ஜுனன்தான் என்றாலும் கர்ணன் அர்ஜுனனோடு நேருக்கு நேராக நின்று போரிடுவது பதினாறாம் நாளில்தான். அதிலும் 12, 13 நாட்கள் போரில் அர்ஜுனனால் தவிர்க்க முடியாத சவாலை விடுத்து அவனோடு நேருக்கு நேர் நின்று போரிட துரோணரும் கௌரவப் படையும் சம்சப்தக வீரர்களைத் தேடும்போது கூட கர்ணன் முன்வருவதில்லை. பதினான்காம் நாள் போரில் அபிமன்யுவுக்காக பழி வாங்க அர்ஜுனன் கௌரவர்களின் வியூகத்திற்குள் ஊடுருவிச் சென்று ஜயத்ரதனைத் தேடும்போது கூட கர்ணன் முன்னின்று அர்ஜுனனினடம் போரிடவில்லை. அப்போது துரியோதனன் கூட அர்ஜுனனை தேடிச் சென்று போரிடுகிறான், ஆனால் கர்ணன் அர்ஜுனனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இத்தனைக்கும் கர்ணனிடம் யாரையும் கொல்லக் கூடிய சக்தி ஆயுதம் இருக்கிறது, அர்ஜுனன் இறந்தால் பாண்டவர்கள் தோற்பது உறுதி. கடோத்கஜன் கௌரவ சேனையை அழிக்கும்போது சக்தி ஆயுதத்தை பிரயோகிக்கும்படி சொல்லும் துரோணரும் துரியோதனனும் அதற்கு முன் அவனிடம் அப்படி வலியுறுத்துவதில்லை. ஏன்?

கிருஷ்ணன் தன் மாயையால் கர்ணன் அர்ஜுனனோடு போரிடுவதைத் தவிர்த்தான், கடோத்கஜன் சக்தி ஆயுதத்தால் இறந்தபோது கடோத்கஜனை தியாகம் செய்து அர்ஜுனனைக் காப்பாற்றிவிட்டோம் என்று மகிழ்ந்தான் என்று சொல்வதுண்டு. இது என்னுடைய கற்பனைத் தீர்வு.

12 Replies to “ரிஷிமூலம் [சிறுகதை]”

  1. உண்மையும் புனைவும் கலந்த அற்புதமான எழுத்து. பாண்டவ துரியோதனாதிகளின் மன உளைச்சல்களை அழகுறப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இந்த அருமையான கதைக்காக எழுத்தாளருக்கு மிக்க நன்றி.

  2. வியாசர் அருளிய மகா பாரதத்தில் கிளைக்கதைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு.

    ஆர்.வி. யின் இந்த ரிஷிமூலமும் அப்படிப்பட்ட அற்புதமான ஸ்ருஷ்டி.

    கதை அருமை.

    தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி!.

    வாழ்த்துக்களுடன்,
    அ போ இருங்கோவேள்

  3. முற்றிலும் புதிய கோணத்தில் சகுனியைப் பார்க்க முடிந்தது. இதுவரை அறியாத கோணம். ரகசியம் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 🙂

  4. மீனாக்‌ஷி, இருங்கோவேள், கீதா, ஸ்ரீதர்,
    உங்களுக்கு கதை பிடித்திருந்தது சந்தோஷம். மறுமொழிகளுக்கு நன்றி.

    ஜடாயு, கதையைப் பதித்தற்கு நன்றி!

  5. வெகு அருமையான கற்பனைக் கதை. கற்பனை ஆனாலும் கண்ணன் சகுனியின் பதம் பணிவதான கற்பனையைத் தவிர்த்திருக்க வேண்டும். அதை ஏற்க முடியவில்லை. இது போன்ற கற்பனைகளை இன்னாளில் நமது மதத்துக்கு எதிரான பலரும் தத்தம் சுயலாபங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை.

    ஆர்.வியின் எழுத்து எப்போதுமே சுவையானது, மாற்றுக் கருத்தைத் தேடி அதில் இருக்கும் நியாயத்தை நோக்கிய பயணம் அவருடையது. தர்ம, நியாயத் தேடலில் இது போன்ற வாய்ப்புக்கள் இருப்பது தோன்றினாலும் கூட, ஆழ்ந்து ஆலோசித்து, தொலை நோக்கோடு பதிதல் மட்டுமே நலம் பயக்கும், ஏனெனில் அவர் போன்ற சிந்தனைப் பக்குவம் எல்லாரிடமும் இல்லை.

  6. முதல் பாதியில் எட்டி பார்க்காத ஆசிரியர் இரண்டாம் பாதியில் அருகில் அமர்ந்து கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். 🙂

  7. அடியவன், கதையைப் படித்து மறுமொழி எழுதியதற்கு நன்றி!

    ரெங்கசுப்ரமணி, எப்பவுமே இதுதான் பிரச்சினை. கால ஓட்டத்தை கதையில் எப்படிக் கொண்டு வருவது என்று இன்னும் தெரியவில்லை…

  8. சக்தி ஆயுதத்தை அர்ஜுனனுக்காகவே வைத்திருந்த கர்ண மகராஜன், அதை அவன் மீது 11ம் நாள் போரிலேயே பிரயோகிக்காமல் இருந்ததன் காரணம் என்ன தெரியுமா? அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை முக்கண்ணனிடம் இருந்து வரமாகப் பெற்றிருந்தான். கர்ணனுக்கு சதா சர்வ காலமும் அர்ஜுனனை வேல்வதையும், கொள்வதையும் பற்றிய நினைவே ஆகும். பற்று. அதுவே அவனை தோற்கச் செய்தது. செய்யும் காரியத்தின் பலனில் அடங்கிய பற்றானது காரியத்தின் மீதான சிந்தனையை விடுத்து, பலனைப் பற்றிய சிந்தனையையே மிகுதியாகி விட்டது. ஆதலால் அவனின் காரியம் தடைப்பட்டது.

    இருவேறு சிந்தனைகளும், சஞ்சலங்களும், அடிக்கடி அமையப் பெற்று, நன்மையில் நாட்டமும், தீமையில் செயலை செலவிட்டும் வாழ்ந்த ஒருவன். தன் மறம், கொடை மற்றும் புகழின் மீது மிகுந்த தன் மதிப்பை வஎஇத்திரிந்த அவன், அது புண்பட்ட பொது, அவனை விட சிறந்தவனாக இருந்த அர்ஜுனன் மேல் கொண்ட பொறாமை இயல்பானது.

    மறுபுறம் பாண்டவர்களின் உயிருக்காக குந்திதேவி கர்ணனிடம் சென்று ஒரு தாயாக வரம் கேட்டாளே ஒழிய, அவர்களின் வீரத்தின் மீதான ஐயத்தினால் அல்ல. கர்ணன் என்னதான் துரியோதனனின் அன்பையும் நட்பையும் மதிப்பையும் பெற்றிருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் ஒரு போரில் கூட அர்ஜுனனை நேரடிப் போரில் வென்றது இல்லை. அதுவே அவனை வாட்டி எடுத்தது. மாறாக, அஞ்ஞாத வாசம் முடியும் போது பிருஹுன்னளையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அர்ஜுனன், ஒற்றை ஆளாக பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியன், துச்சாதனன், அஸ்வத்தாமன் ஆகியோரை வென்று மூர்ச்சை அடையச் செய்து அவர்களின் ஆடைகளைப் பற்றி வந்தான். கந்தர்வர்களால் துரியன் முதலானோர் பிடிக்கப் பட்ட போது கூட அர்ஜுனனே துரியன் விடுவிக்கப்படுவதற்க்குக் காரணமாக இருந்தான். கர்ணன் அல்ல. கர்ணனுக்கு அர்ஜுனன் அளவுக்கு திறமை இருந்திருக்கலாம். ஆனால் அளவற்ற தன்னினைப்பினாலும், சுயகௌரவத்தினாலும், அகங்காரத்தினாலும், அர்ஜுனன் செய்த அளவிற்கு முக்கண்ணனை மகிழ்வித்தது போன்ற அரும் பெரும் செயல்களைச் செய்ய முடியாது போனது என்று நான் கருதுகிறேன்.

    திரௌபதியைக் கூட அவன் பதிலுக்கு மதியாமல் ஒரு பொருட்டெனக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால் அந்தத் தன் மதிப்பின் மீதான எண்ணம், அகங்காரமாக உருப்பெற்ற போது அவன் அவளை வேசி என்றழைத்து ஆடையை உறிய காரணமாகி விட்டான். அபிமன்யுவை அறுவரில் ஒருவனாக இருந்து கொடிய கொலையை செய்தான். இதையெல்லாம் பார்க்கும் போது கிருஷ்ணன், அர்ஜுனன் உயிருக்காக சகுனியிடம் சென்று பேசியிருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

  9. பிரசன்னசுந்தர்,

    மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு புனைவை ஏறக்குறைய வரலாறாகவே நினைத்து பதில் அளித்திருக்கும் உங்கள் மகாபாரதப் பற்று வியக்க வைக்கிறது.

    ஜோதிராஜ், பாராட்டுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *