தமிழ்ச் சமூகத்தை தன் சிந்தனைகளாலும், படைப்புகளாலும் செழுமைப் படுத்திய ஜெயகாந்தன் மறைந்து விட்டார். நாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம்.
கடந்த பல வருடங்களாக அவர் புதிதாக எதுவுமே எழுதவில்லையானாலும், இந்த மரணச் செய்தி அவரது எழுத்துக்களின் வீச்சுகளை நினைவின் அடியாழத்திலிருந்து தளும்ப வைத்தது.
குருபீடத்தின் மறைவுக்கு இதயபூர்வமான அஞ்சலி.
அவரது மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே.
நண்பர்கள் கேட்டபோது கட்டுரையாக எழுதிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்கான நேரமும் வாய்ப்பும் வாய்ப்பதாகத் தெரியவில்லை. எனவே, இந்த ஒலிப்பதிவு. இது மேடைப் பேச்சல்ல. இலக்கிய வாசகர்களின் சிறு குழுவில் சகஜமாக நிகழ்ந்த பேச்சு என்பதை மனதில் கொண்டு கேட்கவும் 🙂
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – ஜெயகாந்தன் குறித்த இந்த அற்புதமான ஆவணப் படத்தை அவரது மறைவின் பின்னணியில் (தான்) பார்க்க நேர்ந்தது (என்பது எனது துரதிர்ஷ்டம்).
ஒரு கலைஞனின் ஒட்டுமொத்த ஆளுமையை, வாழ்க்கையை, சிந்தனைகளை, குழப்படிகளை சின்னச் சின்ன கிறுக்குத் தனங்களை எல்லாவற்றையும் ஒன்றரை மணி நேரப் படத்தில் மிக அருமையாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் கவிஞர் ரவி சுப்ரமணியன்.
கடற்கரை சிறுவர்களுடன் சகஜமாக உரையாடிக் கொண்டு போகும்போது திடீரென்று “கிடக்கும் பெரிய கடல்” என்ற பாரதி வரியை ஜேகே கர்ஜிப்பது… தண்டபாணி தேசிகரு. அவரு நம்ம பிரிவு.. நாமக்கல் இராமலிங்கம், அட அவரும் ஒரு பிள்ளை’ என்று ஜேகே சகஜமாக சொல்லியதை எடிட் செய்யாமல் அப்படியே படத்தில் வைத்திருப்பது என பல இடங்கள் மிக நுட்பமான பார்வைக்கும், ரசனைக்கும் உரியவை. பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவும்.
ஆங்கில சப் டைட்டில்களும் சிறப்பாக, நேர்த்தியாக செய்யப் பட்டுள்ளன.
ஒரு தமிழ் எழுத்தாளரின் இறுதிச் சடங்கு – (ஜெயகாந்தன் அஞ்சலி)
சொல்வனம் இதழில் வந்துள்ள முக்கியமானதொரு பதிவு.
ஜெயகாந்தனுடன் ஒப்பிடுகையில் மட்டுக் குறைந்த இலக்கியவாதி யூ.ஆர்.அனந்தமூர்த்தி (எனது பார்வையில்). இருவரும் ஞானபீட விருது மூலம் கௌரவிக்கப் பட்டவர்கள்.
ஆனால் சென்ற வருடம் யூ.ஆர்.ஏ. மறைந்த போது, இறுதி சடங்கில் மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் பல அமைச்சர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜெயகாந்தன் மறைவுக்கு தமிழக அரசின் தரப்பிலிருந்து ஒரு மலர் வளையம் கூட வந்ததாகத் தெரியவில்லை. தகனத்தின் போது இருந்தவர்கள் மொத்தம் நூறு பேர் என்கிறது இந்தக் கட்டுரை.
இவ்வளவு பிரபலமான மகத்தான இலக்கிய ஆளுமைக்குக் கூட இந்த அளவு மரியாதைத் தான் தமிழ்ச் சமூகம் (அதில் நானும் அடக்கம்) கொடுத் திருக்கிறது என்பது வெட்கமளிக்கிறது.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பதிவுகளில் எழுதியவை)
//ஜெயகாந்தனுடன் ஒப்பிடுகையில் மட்டுக் குறைந்த இலக்கியவாதி யூ.ஆர்.அனந்தமூர்த்தி (எனது பார்வையில்). //
யூ.ஆர்.அனந்தமூர்த்தி — நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன்
ஜெயகாந்தன்
சிவாஜி , கண்ணதாசன் , ராமசாமி , அண்ணாதுரை போன்றவர்களை அவர்களின் முன்நால் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் தன் வாதத்தால்
மட்டுக் குறைந்த இலக்கியவாதி இல்லை மடத்தனமான இலக்கியவாதி
தமிழ்நாட்டில் தமிழனையும் உண்மையான இலகியவதிகளையும் மதிக்க மாட்டார்கள்
திரைபடத்தில் நடித்தால் மட்டும் மதிப்பார்கள்
மன்னிக்க வேண்டும்… ஆனந்த விகடன் 2015 ஏப்ரல் மாத இதழ் ஜே.கே சிறப்பிதழ் ஆக வந்திருந்தது… இதற்காகவே அதை வாங்கி படித்தேன்… அதன் பிறகு எனக்கு ஜெயகாந்தன் மீதிருந்த மரியாதை குறைந்து விட்டது… இதற்கு எனது அனுபவ முதிர்ச்சியின்மை காரணமாக இருக்கலாம்..
1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பொது நான் கே கே நகர் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சிப பள்ளியில் தேர்தல் பணியில் இருந்தேன் . மதியம் மூன்று மணி அளவில் வாக்களிப்பு சற்று மந்தமாய் இருந்தது. அப்போது திரு ஜெயகாந்தன் அவர்கள் தன் பெயர் எழுதிய பூத் ச்லிபைக் கொண்டு வந்து கொடுத்தார் நான் மிகவும் வியப்பில் ஆழ்ந்தேன். நான் வழக்கம் போல் பெயரை உரக்கப் படிக்க ஜெயகாந்தன் வாக்குக் சீட்டில் கையெழுத்திட்டு வாக்களிக்கசென்றார். நான் வாக்குச்சாவடி அதிகாரியிடம் அனுமதி பெற்று வெளியே வந்தேன். ஜெயகாந்தன் வெளியே வந்தார். வணக்கம் தெரிவித்து “இப்போதெல்லாம் எழுதுவதில்லையே என்றேன். ஆமாம் என்றவரிடம் சில நேரங்களில் சில மனிதர்கள் படித்தும் இருக்கிறேன் பார்த்தும் இருக்கிறேன் என்றேன். ஓஹோ என்றவர் அந்தப் படத்தில் நடித்த திரு ஸ்ரீகாந்த் நன்றாக நடித்திருந்தார் என்றவுடன் தமிழ் திரையுலகில் சரியாக உபயோகப்படுத்தப் படாத ஒருவர் என்று சொல்லி விடைப் பெற்றார். எனக்கு பெரிய சாதனை புரிந்தது போல் ஒரு மகிழ்ச்சி. நேர்மைத் திறம் உடைய ஒரு எழுத்தாளர் பல்லாயிரத்தில் ஒருவர்தான் இருப்பர்.