சுப்ரமண்ய பாரதியை தம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் கொண்டிருப்பதாக எண்ணற்ற படைப்பாளிகள் சொன்னாலும் பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். அவருடைய கதைக்கரு, பாணி ,சொல் வீர்யம், அணுகுமுறை என்று எல்லாமும் பாரதியின் தாக்கம் பெற்று இருக்கின்றன.
படைப்பவனின் தர்ம்ம்தான் அவனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கு தர்மம் தருவதாகிறது. மக்களிடம் வீரம், ரௌத்திரம் காம்பீர்யம் முதலிய உணர்வுகள் இல்லை. காதலும் சோகமும் தான் இருக்கின்றன என்று ஒர் இசைக் கலைஞர் பாரதியிடம் சொன்ன போது “தற்கால மனிதர்களின் தன்மை அவ்வாறுதான் உள்ளது. ராமனும், கிருஷ்ணனும் இன்னும் பல மகா புருஷர்களும் மனிதர்களாக இந்த மண்ணில் பிறந்தவர்கள் தாம். அவர்களை எண்ணி நீங்கள் வீரத்தையும், காம்பீர்யத்தையும் பாடினால், அந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது காலப் போக்கில் மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும் “ என்று பாரதி பதில் தந்ததை அடியொற்றியே தன் எழுத்து அமைந்ததாக ஜெயகாந்தன் குறிப்பிட்டு உள்ளார் .தனது பாத்திரங்கள் ’ பொய் ’ போல நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாதவை போலத் தெரிந்தாலும் அவை உண்மையாவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைக்கிறார். ’சில நேரங்களில் சில மனிதர்களி”ன் நாயகியான கங்கா, தவறுகளுக்காக கழுவாய் தேடும் வெங்கு மாமா, ’மந்திரத்தை அறியாமல் வாழ்க்கை நடத்தின உறுத்தலில் வாழ்க்கையை விட்டு விலகிய கணபதி சாஸ்திரி போன்ற பாத்திரங்கள் அவை எழுந்த காலத்தில் முரணானவையாகத் தெரிந்தாலும் காலப் போக்கில் மனவளர்ச்சிப் பின்னணியில் பக்குவச் சிந்தனையில் நடைமுறைப் படிவங்களாக உள்ளது சாத்தியமாகி இருக்கிறது. இது குறைந்த சதவிதம் தானென்றாலும் பாரதியின் ’மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும்’ நம்பிக்கையை உறுதியாக்கி இருக்கிறது.
ரஷ்யா என்ற சாதாரணப் பெயரை மந்திரம் போல மாற்றிக் காட்டியது பாரதியின் ’புதிய ருஷியா கவிதை ருஷியா பற்றியோ ,அரசியல் பற்றியோ அறியாத எந்த இந்தியனும் அந்தக் கவிதையை அனுபவிக்க முடியும். ஜார் மன்னனைப் பற்றிய கவிதைதான் தன்னை ஒரு பொது உடைமையாளனாக [ சோஷலிசவாதியாக ] இனம் காட்டிக் கொள்ளத் துணை செய்தது என்று ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதை வரிகள் தன் வாழ்வை ஒவ்வொரு முறையும் பக்குவப் படுத்துகிற நிலைகளையும் காட்டுகிறார் .ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்புகளுக்காக பெருமிதம் கொள்வதோடு நின்று விடாமல் எவ்வித உறுத்தலும் இன்றி அதற்கான மூலத்தை , காரணத்தை முறையாக வெளிக்காட்டும் போதுதான் முழுமை அடைகிறான்.இது எழுத்தாளனின் அகங்காரம் என்ற கோணமாக இல்லாமல் சமூகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலான சித்தாந்தமாகிறது. இந்திய வரலாற்றில் தமிழ் மொழிக்கும் ,கலாச்சாரத்துக்கும் தனிச் சிறப்புகள் உண்டு. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது தமிழரின் தனிச் சிறப்பு. அதனால் ’எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்க்க வேண்டும் “என்பதும் “,திறமையான புலமையெனில் அதை மேனாட்டார் வணக்கம் செய்ய வேண்டும் என்பதும் தான் பாரதி ஓர் இலக்கி யத்தின் உயர் நிலைக்கு காட்டிய அடையாளமாகிறது.:அதுவே அவன் வேண்டுகோளாகவும் நிற்கிறது. தன் மொழி அந்த நிலையை அடைய வேண்டும் என்பது அவன் விருப்பம் அதை நடைமுறைப் படுத்தி கவிஞ னின் வேண்டுகோளை மெய்யாக்கியவர் ஜெயகாந்தன் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை.ஜெயகாந்தன் சோவியத் ரஶ்யாவிற்குச் சென்ற போது அவரது கதைகள் குறித்த ஆராய்ச்சியை அங்குள்ள நண்பர்கள் காட்டிய போதும், அது குறித்து விவாதங்கள் நடந்த போதும் ஜெயகாந்தனுக்கு நினை வில் நின்றது பாரதியின் கவிதை வரிகள் தான். ’திறமையான புலமையெனில் போற்றும் விதம் ’என்பது அங்கு நடந்த கதை விமரிசனங்கள் பாரதியின் கனவுப் பார்வை சோவியத்தில் காட்சிப் படுத்தப் படுகிறது. அது போலவே மிகச் சிறந்த ரஷ்யச் சிறுகதைகளை ஜெயகாந்தன் தமிழுக்குத் தந்திருப்பதும் இந்தக் கவிதை வரிகளை உறுதியாக்கும் நிலைதான்.
கம்யூனிச சித்தாந்தத்தின் பின்னணியில் வாழ்கிற ஜெய காந்தன் லெனினை விஞ்ஞானி ,தளபதி, யுக புருஷன் என்றெல்லாம் புதிய வடிவங்களில் கண்டு புதிய கடவுளாகப் போற்றுகிறார். இந்த அணுகுமுறை “ வேதம் புதுமை செய் ” என்ற பாரதியின் கவிதைப் பின்னணியை மூலமாகக் கொண்டதுதான். வேதம்,ஆகமம், சாத்திரம், வடமொழி ஆகியவை குறிப்பிடத் தக்கவருக்கு மட்டும் தான் என்று சொல்லப் பட்டு வந்த நிலையை மாற் றுவது நவீன படைப்பாளிகளின் விருப்பமாகும். இது நிறைவேறும் வகையில் இந்துவாக இருக்கும் எவரும் கோவில்களில் அர்ச்சகர்களாக செயல்பட முடிகிற இன்றைய நிலையை ஜெயகாந்தன் சுட்டிக் காட்டுவது வேதத்தைப் புதுமை செய்வதாகத் தான் தோன்றுகிறது.
பிற மொழி அறிவு, கலப்பு ஆகியவற்றால் நவீன தமிழ் மொழி இலக்கிய வளமும் ,உயர்வும் பெற்றிருக்கிறது. மொழிகள் பழையவை ஆவதோ, சாவதோ எக்காலத்திலும் இல்லை .காலத்தின் தேவைக்கும் ,வளர்ச்சிக்கும் ஏற்றபடி தனக்குள் புதுமைகளை ஏற்படுத்திக் கொள்வது மட்டும் தான் எந்த மொழிக்கும் சாத்தியமாக முடிகிற ஓர் உன்னத நிலை. .வேத சாத்திரங்கள் மத சம்பந்தப் பட்டவையாக மட்டுமின்றி மொழி, ,வர லாறு, கலாச்சாரம், விஞ்ஞானம் என்று பல துறை தொடர்பு உடைய வையாக இருக்கின்றன எனவே சமய முரண்பாடுகளுக்கு அங்கு வழியே யில்லை என்ற கருத்தில் ஜெயகாந்தனுக்கு முழு உடன்பாடு உண்டு..அதனால் தான் “ வஸூதைவ குடும்பகம் ” என்பதோடு கம்யூனிசத்தை அவரால் தொடர்பு படுத்த முடிகிறது. மனிதர்களை ஒரு குடும்பமாக வாழச் சொல்லும் தத்துவமாக இந்த அமைப்பை அவர் பார்க்கிறார். ஒரு குடும்பமான வாழ்க்கை நெறியில் வன்முறைக்கு ,ஏற்றதாழ்விற்கு இடம் இருக்கக் கூடாது என்பது பாரதியின் கொள்கை. இந்த நோக்கத்தின் அடிப்படையில் பாரதியால் ஒரு பொதுமைச் சமுதாயத்தைப் காண முடிகிறது. அதனால் தான் .”எல்லோரும் அமர நிலை எய்தும் நன்மார்க்கத்தை இந்தியா உலகிற்கு அளிக்கும் .ஆம் உலகிற்கு அளிக்கும்“ என்று வலியுறுத்துகிறார். பாரதி உறுதிப் படுத்தும் இந்த நன்மார்க்கம் கம்யூனிசம்தான் என்பது ஜெயகாந்தனின் வாதமாகிறது.
பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது. பிறவியில் அரிசனான ஆதியை சர்மாவின் மூலம் பிராமணன் ஆக்கி தனது மகனை வேத மார்க்கத்துக்கு சமர்ப்ப்பிக்கின்ற நிலை’ என்பது போன்ற ஜெயகாந்தனின் அழுத்தமான கதைப் பின்னணி பாரதியின் உண்மை வாழ்வை மூலமாகக் கொண்டதுதான். அதீத தீட்சண்யம் கொண்ட கவிதைகளே தன் கருத்துக்களுக்குக் தூண்டுகோலானவை என்பதை அவர் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் வெளிப் படுத்துகிறார். பாரதி குறிப்பிடுகிற ’ கிருத யுகம்’ என்பது நம் கைகளால் ஆகிற ,உருவாக்கப் படுகிற புதிய யுகம்” என்று தம் சோவியத் நண்பரின் கருத்தைச் சொல்லி நடைமுறை உலகின் சிந்தனை வளர்வுத் தேவையை முன் வைக்கிறார். ஒரு கவிதைக்குப் பொருள் கொள்வதும் கூட ஒருவனின் எண்ண வளர்ச்சியில் தான் இருக்கிறது .இது நடைமுறை உலகுக்குப் பொருத்தமான அணுகுமுறை என்பதில் இருவருமே ஒன்று படுகின்றனர்.
பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு.மொழி ,இன வேறுபாடுகள் எல்லா மண்ணிலும் உண்டு. ஆனால் உயர்ந்தவர்களை உலகத்துக்கு அறி முகம் செய்து புகழ் சேர்க்கத் தயக்கம் காட்டுவது மிகப் பெரிய தவறாகி விடும். சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. பாரதிக்கும், புஷ்கினுக்கும் அதிக ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பொதுமைவாதிகள்தான் ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற நிலைதான் பொருத்தமானதாக இல்லை. உயர்ந்த சித்தாந்தமும், உன்னத கவிதைப் பின்புலமும் கொண்ட நம் கவிஞனுக்கு ஏற்ற அடையாளம் தரப் படவில்லை. ஒரு படைப்பையோ படைப்பாளனையோ சரியாக அங்கீகரிப்பது அந்த நாட்டின் ,மண்ணின் கடமையாகும். இனியாவது பாரதியை இந்தியா விஸ்வரூப தரிசனத்தில் கண்டு விட்டு அவரை உலகிற்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்பது ஜெயகாந்தனின் விருப்பம்.
வாழ்க்கையை நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியோடு நேசிக்கும் போதுதான் தனி மனித உணர்வுகள் பொதுப் பார்வை உடையதாக அமைய முடியும். பாரதியின் கவிதை வரிகள் அனைத்தும் மகிழ்ச்சியின் ஊற்றுதான் அது .சகவுணர்வு உடையவர்களையும் இணைப்பதாகிறது. சம தர்ம ஞானமும் ,சர்வதேச ஞானமும் ஒருங்கிணைந்த தீர்க்க தரிசனப் பார்வை பாரதியினுடையது.ஒரு படைப்பாளியாக மனநிறைவோடு ஜெயகாந்தன் தன் பாத்திரங்களைப் படைத்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
“அறிவே தெய்வம் “ என்ற பாரதியின் சிந்தனை தனக்குப் புரியாத நிலையாக இருந்த போது இரவி ,மதி ,விண்மீன் ,பார்க்கிற பொருள் ,எழுதுகோல் என எல்லாமும் தெய்வம் எனக் காட்டி அறிவின் திறனை வெளிக் கொண்டு வந்து புரிய வைத்தது கவிதைகள் தான் என்று சொல்கிறார். அதோடு நின்று விடாமல தனக்கு தன்னம்பிக்கை தந்தது பாரதிதான் என்கிறார். அதனால் பாரதியின் மீது வழிபாட்டு உணர்ச்சி அவருக்கு ஏற்படுவது இயல்பாகிறது.
தனக்குப் பிடித்த பாரதியின் கவிதை வரிகளை பல இடங் களில் ஜெயகாந்தன் கட்டுரைத் தலைப்புகளாக்கி இருக்கிறார். ஆனால் அது சொல்லப் பட்டுள்ள பின்புலம் சிறிது வித்தியாசமானது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. ஏழை மக்களுக்காக உதவ வேண்டும் என்று மகாத்மா காந்தி மகளிரிடம் நகைகளைக் கேட்ட போது யோசனை எதுவுமின்றி உடனடியாகக் கொடுத்த பெண்களின் உயர்வைச் சொல்லி , வரலாற்றில் பதிந்த நிகழ்வுகளை நம் கால நிகழ்வுகளோடு இணைத்துப் பார்த்து இன்றைய நிலைக்காய் வருந்துவதைத் தான் ’ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை’ கட்டுரையில் காட்டுகிறார். நகைகளை விரும்பி ஏற்கும் தற்போதைய மடமையை இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது.” சிங்களத் தீவி னுக்கோர் பாலம் “ என்னும் கவிதை வரித் தலைப்பில் தேசங்களிடையே ஏற்படும் ஒற்றுமையைத் தான் வலியுறுத்த வேண்டும்..நாடுகளுக்கு இடை யேயான உண்மை உறவு என்பது இலக்கியம் ,கலைகள் ,அதைச் சார்ந்த ஒன்றுபட்ட மக்களின் வாழ்க்கை ஆகியவற்றால் தான் உருவாகும்” என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.அந்த அடிப்படையில் தனது படைப்புகள் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப் படும் போதுதான் தன்னால் தமிழனாகப் பெருமை பெற முடியும் என்று சொல்லும் அவர் பார்வை மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகிறது. வாழ்க்கையின் மீதும், தன் மீதும்,மனிதர்கள் மீதும், எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக ஜெயகாந்தனின் படைப்புகள் உள்ளன. எல்லாக் காலத்திலும் எழுத்தின் பொதுத் தன்மை என்பது நம்பிக்கை தான் .தன் கவிதைகளால் சமுதாயப் புரட்சியை ,விடுதலை உணர்வை கட்டாயமாக ஏற்படுத்தித் தர முடியும் என்று பாரதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போலவே பாரதியின் வழியில் ஜெயகாந்தனிடமும் அந்நம்பிக்கை தலை தூக்கி நிற்கிறது.
“தமிழனாகப் பிறக்காமல் இருந்து தமிழை அறிய நேர்ந்தி ருந்தால் மொழியின் பெருமையை நன்றாக உணர முடியும் உலகம் ஒரு நாள் அப்படி உணரத்தான் போகிறது. இந்த நம்பிக்கையின் தீர்க்க தரிசனம் தான் பாரதி “என்ற ஜீவாவின் கருத்தை தனது ’சிந்தைகள் ஆயிரம் “கட்டுரைத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிட்டு இருப்பது அவர் பாரதிக்குச் செய்யும் உயர்ந்த மரியாதையின் அடையாளம் என்றே தோன்றுகிறது.
மிக்க அழகான பொருள் செறிந்த ஆய்வு நோக்கு . பாரதியையும் ஜெயகாந்தனையும் புதிய கோணத்தில் காட்டுகின்றது . மீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பாரதியை முழுமையாக அறிந்தவர ப ஜீவானந்தம் அவர் வழியில் ஜெயகாந்தன் ஆனால் கவியின் ஆன்மிக சிந்தனை பற்றி அதிக அளவில் இவர்கள் சிந்திதிருந்தால் பாரதியை முழுமையாக அறிந்ததாக கூறமுடியும்
சிறப்பன கட்டுரை.
“தமிழனாகப் பிறக்காமல் இருந்து தமிழை அறிய நேர்ந்தால் மொழியின் பெருமையை நன்றாக உணரமுடியும்”என்ற ஜீவாவின் தீர்க்கதரிசனத்துக்கு இன்றைய எடுத்துக்காட்டு பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு.தருன் விஜய்.
பாரதியின் கவிதை வரிகளை சிறுகதைகளாக்கிய ஜயகாந்தனின் புகழ் வாழ்க.