அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி

வேதாந்த உட்பொருளை
தீர முடிவுசெய்தோர்
துறவெனும் யோகத்தால்
உள்ளம் தூய்மையுற்றோர்
மேலான அமுதநிலை அடைவர்.
ஈற்றிறுதிக் காலத்தே
முற்றிலும் விடுபட்டு
இறைநிலை அடைவர்.

– முண்டக உபநிஷதம், 3.2.6

நமது காலகட்டத்தின் மகத்தான வேதாந்த ஆசாரியராகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த இந்துத் துறவி  சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், நேற்றிரவு (செப்டம்பர் 23) ரிஷிகேசத்தில் மகாசமாதி அடைந்தார்கள்.  இத்தருணத்தில் அவரது புனித  நினைவைப் போற்றி  நமது சிரத்தாஞ்சலிகளைத் தெரிவித்துக் கொtள்கின்றோம்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

swami_dayananda_saraswatiசுவாமிகள் 1930ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மஞ்சக்குடி என்ற சிற்றூரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் – கோபால ஐயர், வாலாம்பாள்.  அவரது பூர்வாசிரமப் பெயர் நடராஜன். சிறுவயது முதலே ஆன்மீகத் தேடலிலும், சாஸ்திரங்களைக் கற்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த  நடராஜன், 1950களில் சுவாமி சின்மயானந்தரின் உரைகளால் வசீகரிக்கப் பட்டு, அப்போது தான் தனது பணியை ஆரம்பித்திருந்த சின்மயா மிஷன் அமைப்பில் இணைந்தார். 1955ம் ஆண்டு மதுரையில் சின்மயா மிஷன் கிளையைத் தொடங்கினார்.  சின்மயா மிஷனின் பத்திரிகைகளுக்கும்,  கீதை உரை உள்ளிட்ட புத்தகங்களுக்கும் பங்களித்தார்.  சுவாமி சின்மயானந்தருடன் இணைந்து  இமயச் சாரலுலிலும் பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்தார்.  1961ல் சுவாமி சின்மயானந்தரிடம் தயானந்த சரஸ்வதி என்ற துறவுப் பெயருடன் சன்னியாச தீட்சை பெற்றார்.

பின்னர் தனது குருநாதரின் ஆசியுடனும் அனுமதியுடனும்  தனது சுயமான தீவிர சாஸ்திரக் கல்வியிலும், ஆன்ம சாதனைகளிலும்  ஈடுபட்டார். விஜயவாடாவில் வாழ்ந்த  சுவாமி ப்ரணவானந்தா, ஹரித்வாரத்தின் சுவாமி தாரானந்தா ஆகியோரிடம்  வேதாந்தத்தின் மூல நூல்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தார்.

1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும்  பாடத்திட்டத்தை உருவாக்கி,  நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார்.   இந்த மூன்று வருட குருகுலக் கல்வி போதனையில் சம்ஸ்கிருத மொழிப் புலமை,  உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, சங்கரரின் நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூற்கல்வி, யோகப் பயிற்சிகள், தியான முறைகள் எனப் பல அம்சங்களும் அமைந்திருந்தன.   முதலில் சின்மயா இயக்கத்தின்  சாந்தீபினி குருகுலத்தில் இந்தக் கல்வி போதனைகளை வழங்கிய சுவாமிஜி,  பிறகு  இதனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல,  “ஆர்ஷ வித்யா குருகுலம்” என்ற அமைப்பை உருவாக்கினார் (“ஆர்ஷ” என்ற சொல்லுக்கு ரிஷிகளின் வழிவந்த என்பது பொருள்).  தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி,  இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார்.   இதன் மூலம்  இனிவரும் தலைமுறைகளுக்கு  வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்.  அத்துடன்  வேதாந்தம் தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும்  எழுதியிருக்கிறார்.  ரிஷிகேஷ், ஆனைகட்டி (கோவை), நாக்புர்,  ஸாலிஸ்பர்க் (அமெரிக்கா) ஆகிய இடங்களில் எழுந்துள்ள அற்புதமான குருகுலங்கள்,  அவர் ஏற்றிவைத்த ஞானதீபம் என்றும் சுடர்விட்டு எரியுமாறு பணிபுரிகின்றன.

2000ம் வருடம் AIM For Seva  என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார்.  இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.  தனது வேர்களை மறக்காத சுவாமிஜி,  தனிப்பட்ட கவனத்துடன் தனது சொந்த ஊரான மஞ்சக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும்  உயர்தரக் கல்வியும் மருத்துவ சேவைகளும் இந்த அமைப்பின் மூலம் கிடைக்குமாறு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

பழமையான திருக்கோயில்கள், கிராமக் கோயில்கள், பண்டிகைகள், வேத பாராயணம், ஆகம வழிபாடு,  திருமுறைகள் பாராயணம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன்  பல சமய, கலாசார அமைப்புகளை சுவாமிஜி உருவாக்கியுள்ளார். அவை தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.

உலக அரங்கில் இந்து தர்மத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி பெருமிதத்துடன் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் அமைதி மாநாடு,  உலக அமைதிக்கான சமயத் தலைவர்களின் கூட்டமைப்பு,  இந்து தர்ம ஆசாரிய சபை எனப் பல சிறப்பான முன்னெடுப்பகள் அவரது சீரிய சிந்தனையில் உதித்தவை.  மற்ற பல இந்து ஆன்மீகத் தலைவர்களுடன்,  பௌத்த, ஜைன, சீக்கிய ஆசான்களுடன் இணைந்து  சமய மறுமலர்ச்சியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க அவர் பாடுபட்டிருக்கிறார்.  கடந்த 7-8 வருடங்களாக சென்னையில்  வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும்  ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி  அவரது எண்ணத்தில் உதித்த ஒன்றேயாகும்.

இவ்வாறு,  தனது வாழ்நாள் முழுவதும்  ஞான யோகியாகவும்,  ஆன்மநேயராகவும் தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர் பூஜ்ய சுவாமிஜி.   அவரது பணிகளை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்குச் செலுத்தும்  உண்மையான அஞ்சலியும், வழிபாடும் ஆகும்.

சுவாமிஜி குறித்த ஆவணப் படம்

5 Replies to “அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி”

 1. சுவாமிஜியின் நினைவை போற்றுவோம்.

 2. பூஜ்ய சுவாமிஜி அவர்கள் இறைவனடி கலந்து மகாசமாதி அடைந்தது பற்றிய செய்தி மிக்க வருத்தமளிக்கிறது. அன்னாரை அவர் சன்யாசம் அடைவதற்கு முன்னரே 1954 ஆண்டுமுதல் அறிய வாய்ப்புபெற்றேன். இயற்கையாகவே அவர் மிகவும் பொறுமையனவர். வேதாந்த விசாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வேதாந்த விசாரத்தில் அவர் அளித்துவந்த சொற்பொழிவுகள் பலநாட்டவரையும் ஈடுபடவத்தன. பூஜ்ய சுவாமிஜி அவைகள் கோவை அருகே ஆனைகட்டி என்னும் இடத்தில் அர்ஷ வித்யா குருகுலம் என்று ஓர் ஆஸ்ரமம் அமைத்துள்ளார். ரிஷிகேசத்தில் கங்கை கரையில் அமைந்திருக்கும் அவரது ஆஸ்ரமம் அர்ஷ வித்யா பீடம் தியானத்திற்கு மிக அற்புதமான ஓர் இடம். பூஜ்ய சுவாமிஜி ஆன்மிகத்தை தேடி வருவோருக்கு இலவச உணவுடன் ஆஸ்ரமத்தில் தங்க ஏற்பாடுகள் செய்தருளியுள்ளார். மேலும் அவர் பல இடங்களில் வேதா மற்றும் ஆகம பாடசாலைகலை அமைத்துள்ளார்.
  அவரது மறைவு ஆன்மீகத்தில் ஈடுபடுவோருக்கு மாபெரும் இழப்பாகும்

 3. பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களது வாழ்க்கைப்பணிகளின் தொகுப்பு அவரது நினைவுகளில் மனதை ஆழ்த்துகிறது. அன்னாரது சமயப்பணிகள் வருங்காலத்து தலைமுறைகளுக்கு வழிகாட்டும்.

  தமிழகத்தில் வெகுஜனங்களுக்கு வைதிகச் சடங்குகள் மற்றும் ஆன்மீக சாதனைகள் இவற்றை பெருமளவில் பரிச்சயம் செய்துவித்த பெருமை ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தினரைச் சாரும். அதிலும் குறிப்பாக இது சம்பந்தமாக பற்பல நூற்களை இயற்றிய *அண்ணா* என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சுப்ரமண்யம் அவர்களைச் சாரும்.

  காலக்ரமத்தில் அதையடுத்து இந்தப்பணியை பெருமளவில் விஸ்தரித்தது ராமக்ருஷ்ண தபோவனத்தைச் சார்ந்த பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீ சித்பவானந்தர் அவர்கள்.

  இந்த வஸோர்த்தாரையின் அடுத்த துளி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் ஸ்தாபகரான பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்றால் மிகையாகாது.

  தமிழகத்தில் வைதிகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக சாதனையாளர்களுக்கு இந்த ஸ்தாபன த்ரயத்தின் பங்களிப்பு என்றென்றும் வழிகாட்டும் என்பதில் சம்சயமில்லை.

 4. பூஜ்யஸ்ரீ சுவாமிஜி பரமகுருவின் சமாதியால் கலக்கமடைந்தேன்.சுவாமிஜியின் அருள் நமக்கு பூரணமாக கிடைக்க தெய்வம் அருள் புரியட்டும். ஓம் நமசிவய

 5. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முதன் முதலில் அங்கீகரித்து பேசிய சுவாமிதயானந்த சரஸ்வதி ஜீவசமாதி அடைந்தார்

  தர்மரக்ஷ்ண சமதி என்ற ஸ்தாபனத்தை உருவாக்கி அதன் மூலம் நாடு முழுவதும் ஆன்மீக தொண்டர்களை உருவாக்கி கிராமங்களில் தொண்டு செய்தவர் .
  உடல் நலக் குறைவால் ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்த சுவாமிஜி 23-09-15 , இரவு 10.30 மணிக்கு ஜீவசமாதி அடைந்தார் . இந்த சமூகத்தை முதன்முதலில் அங்கீகரித்து பேசிய பூஜ்ய சுவாமிஜியை என்றும் நினைவில் கொள்வோம்.

  கோவை அனைத்து சமூக மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை முதன்முதலில் அங்கீகாரம் அளித்து உரையாற்றிய ஆன்மீகத்தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவிற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பில் இதய அஞ்சலி செலுத்துகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *