கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்  (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர்.  வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர். அவர் மலையாளத்தில் எழுதிய கிறிஸ்து மத சேதனம் என்ற நூலின் ஆங்கில-வழி தமிழ் மொழியாக்கம் இது.

முந்தைய பகுதி

தொடர்ச்சி..

பகுதி – 1

பதிஇயல்

இறைவன்

படைப்பின் நோக்கம்

ஓ கிறித்தவ போதகர்களே!

கர்த்தராகிய ஜெஹோவா[i] உயிர்களையும் உயிரற்ற ஜடப்பொருள்களையும் கொண்ட இந்த உலகைப்படைத்தார் என்று உங்கள் பைபிள்[ii] கூறுகிறது. தர்க்க[iii] நியாயத்தின்படிப் பார்த்தால் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். படைப்பு என்பது ஒரு காரியமாக, விளைவாக இருப்பதால் அதற்குக் காரணமாக ஒருநோக்கம் இருந்தாகவேண்டும். அடிமுட்டாள்கூட ஒருநோக்கமும் இன்றி எந்தக்காரியத்தையும் செய்யமாட்டான். எனவே  உங்கள் கடவுளாகிய ஜெஹோவா உலகைப் படைத்தது ஏன்? அவரது படைப்பின் நோக்கம் என்ன? அது சுயநலமானதா? சுயநலமற்றதா? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

உங்கள் புனித நூலாகிய பைபிள் சொல்கிறது

நான் அவனைப்படைத்தேன் எனது மகிமைக்காகவே (ஈசையா 43:7).

ஜெஹோவாகிய தேவன் உலகைப் படைப்பதற்குமுன்னர் ஆன்மாக்கள் ஏதும் இல்லை என்பது கிறிஸ்தவர்களாகிய உங்களது நம்பிக்கை. எனவே படைப்பானது உலகம், மனிதர் ஆகியோரின் தோற்றத்திற்குமுன்னே இருந்த ஜெஹோவாவிற்கு மட்டுமே அது பயன் தருவதாக இருக்கவேண்டும். ஜெஹோவாவின் நோக்கம் சுயநலமானது என்பது இதனால் வெள்ளிடைமலை.

உங்கள் தேவனாகிய ஜெஹோவா ஆதியில் ஆதாம் ஏவாள் என்ற அறிவற்ற இரு மூடமனிதர்களைப் படைத்தார் என்று உங்கள் புனிதநூலான பைபிள் சொல்கிறது. அவர்கள் வாழ்ந்த ஈடன் தோட்டத்தில்  பயனற்றதொரு மரத்தினைப் படைத்து அதன் கனிகளை உண்ணக்கூடாது என்று அவர்களுக்கு ஆணையிட்டார்.

தீய சக்தியாகிய சாத்தானை அழிக்காமல் உலகில் சுதந்திரமாக உலவ அவர் அனுமதித்தார். சாத்தான் அந்த அப்பாவி மனிதர்களைக் கெடுப்பதையும் தடுக்கவுமில்லை, உங்கள் ஜெஹோவா.

எனவே சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்டு, மதிமயங்கிய ஆதிமனிதர்கள், தமது இன்பத்திற்காக, தம்மைப் படைத்தவனின் ஆணையைமீறி, அந்த மரத்தின் கனிகளை உண்டார்கள். தமது படைத்தோனின்  ஆணையினை மீறிய அவர்கள் தம்மைப் படைத்தவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகிப் பாவிகளானார்கள்.

அதன்பிறகு, ஆன்மாக்களைப்[iv] படைக்காமல், ஜெஹோவா ஆதிமனிதரின் சந்ததிகளாக ஆன்மாக்களைப் பிறக்கவிட்டார். படைத்தவனின் ஆணைக்கு கீழ்படியாமல் பாவத்தினைச் செய்த ஆதிமனிதர்களின் வழிவழியாக வந்தவர்களும் பாவிகளாயினர்[v]. பாவச்சுழலில் சிக்கிக்கொண்ட அவர்களுக்கு தமது பாவத்திலிருந்து இரட்சிப்பு அவசியமாகிறது[vi].

ஜெஹோவாவின் முதற்படைப்பானது பாவிகள் உருவாக வழிவகுத்ததால் அது இரட்சிப்புக்கும் மறைமுகமான காரணமானதாகத் தெரிகிறது.

பாவிகளை சோதிப்பதே அவர்களது மீட்புக்கு வழியாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. மனித ஆன்மாக்கள் தூய்மையானவையா, கடவுளுக்குக் கீழ்ப்படிபவையா, அல்லது தூய்மையற்றவையா, ஜெஹோவாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவையா என்பதை அறிவதற்காக, தீர்மானிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக, அவைகள் படைக்கப்பட்டன.

அவரது கட்டளைகளுக்கு பணிந்து நடக்கும் மனித ஆன்மாக்களுக்கு சொர்க்கமும், கீழ்ப்படிந்து நடவாதவர்களுக்கு நரகமும் கிடைக்கும். தூய மனித ஆன்மாக்கள் எல்லாப் புலனின்பங்களையும் சொர்க்கத்தில் தடையின்றி அனுபவிப்பார்கள். தூய்மையற்ற மனித ஆன்மாக்கள் நரகத்தில் எல்லையில்லாத துன்பத்தில் எப்போதும் மூழ்கித் துன்பத்தைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

மீளமுடியாத நரகத்தின் அச்சத்தில் ஜெஹோவாவிற்கு அஞ்சி நடுநடுங்கி மனித ஆன்மாக்கள் அவரது மகிமையை போற்றிப்புகழ் பாடுவார்கள். அவரது மகிமை அந்தப்புகழ்ச்சியால் ஒளிரும். அப்படிப்பட்ட புகழ்ச்சிக்காகவே தனது மகிமையை விளங்கச்செய்யவே, அவர் படைப்பை மேற்கொண்டார். ஆகவே ஜெஹோவாவின் படைப்பின் நோக்கம் அவரது சுயநலத்திற்காக மட்டுமே இருக்கமுடியும்.

தனது மகிமையை மீயுயர்வை மனிதர்கள் தெரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் தன்னைப் போற்றிப் புகழ்ந்து தொழவேண்டும் என்பதற்காக ஜெஹோவா முதற்படைப்பைச் செய்தார்.  மனிதர்கள் தன்னை மகிமைப் படுத்துவதற்காக, கனம் பண்ணுவதற்காக, ஜெஹோவா படைப்பினை மேற்கொண்டதால் முதற்படைப்புக்கு முன்னர் அவருக்கு மகிமை ஏதும் இருக்கவில்லை என்று தெரிகிறது. இதனை தனது குறைபாடாக அவர் கருதியிருக்கவேண்டும். தனதுப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்வதற்காகவே தனது முதற்டைப்பை அவர் நிகழ்த்தியிருக்கலாம்.

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவாவின் மகிமைப் பூரணமானதா? முழுமையானதா?

அப்படி அது நிறைவாக படைப்புக்கு முன்னரே இருந்திருந்தால், அவர் அதனை அதிகரிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்காதே? அவரது மகிமை முழுமையாக இருந்திருந்தால் அவர் மனிதர்களைப் படைக்கவேண்டிய அவசியமே அவருக்கு இருந்திருக்காது அல்லவா?. எனவே ஜெஹோவா பூரணத்துவம் நிறைந்தவரும் அல்லர் சுயநலமற்றவரும் அல்லர்.

ஆன்மாக்களின் நலனுக்காக அவர் உலகைப் படைத்திருக்கவேண்டிய அவசியம் ஜெஹோவாவிற்கு இருந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. ஏனென்றால் முதற்படைப்பிற்கு முன்னர், உயிர்களோ ஆன்மாக்களோ இல்லை என்றல்லவா கிறிஸ்தவர்களாகிய நீங்கள்  நம்புகிறீர்கள். ஆகவே ஜெஹோவாவின் முதற்படைப்பின் நோக்கம் முற்றிலும் சுயநலமானதே.

மனித உயிர்களின் வாயிலாக தனது மகிமையைப் பிரகாசிக்கச் செய்வதற்காவே ஜெஹோவா முதற்படைப்பைச் செய்தார் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் காரணமாகிய மகிமையின் பிரகாசமும் விளைவாகிய முதற்படைப்பும் ஒன்றையொன்று சார்ந்ததாகிவிடும். காரணத்தினைத்தான் விளைவு சார்ந்திருக்கவேண்டும். காரியத்தினை (விளைவு) காரணம் சார்ந்திருக்கக்கூடாது.  விளைவும் காரணமும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், அன்யோன்யாஸ்ரயம் என்ற தர்க்கக் குற்றமாகும். ஆகவே அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதற்படைப்புக்கு முன்னரே தன்னுடைய மகிமையை உணர்வதற்கு அவர் மட்டுமே இருந்தார். அப்போதும் அவரது மகிமை முழுமையாகவே இருந்தது பிரகாசித்தது. ஆனால் அதை அறிவதற்குப் பாராட்டுவதற்கு கனம் பண்ணுவதற்கு யாரும் இல்லை. அதற்காகவே மனித உயிர்கள் படைக்கப்பட்டன என்று நீங்கள் வாதம் செய்யலாம். அப்படியாயினும் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா தனது பற்றாக்குறையையை உணர்ந்ததாலே தமது மகிமையைப் பிரகாசிக்கச் செய்யவே படைப்பினைச் செய்தார் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

தனது போதாமையை உணர்ந்ததாலும், அதனைப் போக்குவதற்கு முதற்படைப்பினை செய்ததாலும், அவர் எப்போதும் ஆனந்தமயமானவராகவோ அல்லது பரிபூரணராகவோ முழுமையானவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லையே!

தனது மகிழ்ச்சிக்காகமட்டுமே படைப்பைச் செய்த உங்கள் தேவனாகிய ஜெஹோவாவிற்கு விருப்பமும் வெறுப்பும் இருப்பதாகத்தான் தெரிகிறது. அவர் தனக்கு மகிழ்ச்சியளிப்பதை விரும்புவதும் அவ்வாறில்லாமல் இருப்பதை வெறுப்பதும் பற்றுதானே! விருப்பும் வெறுப்பும் மாயையின் தன்மைகளாகும். ஆகவே அவர் மாயையின் பிடியிலே சிக்குண்டவர் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

ஆதியில் ஜெஹோவாவிற்கு தனது பற்றாக்குறையைப் போக்குவதற்கு வழிதெரியவில்லை. எனவே அவருக்கு ஆதியந்தமில்லாத எல்லையற்ற ஞானமும் இல்லை என்பதும் கண்கூடு.

உங்கள் தேவனாகிய ஜெஹோவா ஆரம்பத்திலே மனித உயிர்களைப் படைக்காததால், அவருக்குப் படைப்பாற்றலும் எப்போதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. படைக்கும் சக்தியையும் பின்னாளில்தான் வேறொருவரிடமிருந்தே பெற்றிருக்கவேண்டும். ஆகவே ஜெஹோவாவிற்கு இறைத்தன்மை இல்லை. மற்றவரிடம் படைக்கும் சக்தியைப்பெற்ற இவர் எப்படி மேலான தெய்வமாக இருக்கமுடியும்?

படைப்பாற்றலை மற்றவரிடமிருந்து கடன்பெற்ற ஜெஹோவா என்றும் மாற்றமில்லாதவரோ, முழுமையானவரோ, நிறைவானவரோ அல்லர்.  அவர் ஆதியந்தமில்லாதவரும் அல்லர். தனது மகிமையைப் பிரகாசிக்கச் செய்யவே படைப்பை மேற்கொண்ட அவர் எங்கும் நிறைந்தவரும் அல்லர். தனது மகிமையை விளங்கச் செய்ய மனித உயிர்களைப் படைத்து அவர்களைப் பாவமும் செய்யவைத்து, எப்போதும் மீள இயலாத துன்பம் நிறைந்த நரகத்தில் அவர்களைத் தள்ளும் அவர் நீதியற்றவர், கருணையற்றவர். அவர் எப்படி நல்லவராக இருக்கமுடியும்?

உங்கள் தேவனாகிய ஜெஹோவா எல்லாம் அறிந்தவர் (சர்வக்ஞர்) அல்லர். எந்த உயிர்கள் நல்லன, தூயவை, எவை தூய்மையற்றவை, தீயன என்பதைக் கட்டளைகளைக் கொடுத்து பரிசோதித்தே அவர் அறியவேண்டிய அவசியம் இருப்பதால், அவருக்கு எல்லாவற்றையும் அறியும் ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா எல்லாம் வல்லவரும் (சர்வபௌமர்) அல்லர். தானே ஆனந்தமயமானவரும் அல்லர். மனித உயிர்களைப் பாவிகளாக்காமல், துன்பமளிக்காமல் தன்னைப் போற்றச்செய்யும் ஆற்றல் அவருக்கு இல்லாததால் அவர் சர்வவல்லமை கொண்டவராக இருக்க வாய்ப்பே இல்லை.

பைபிளைப்படிக்கும்போது, ஜெஹோவாவை பற்றாக்குறை எண்ணம், துக்கம், பற்று, வெறுப்பு, குறுகிய அறிவு, வரம்புடைய ஆற்றல், அநீதி, கருணையின்மை ஆகிய குணங்களை உடையவராகவே நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இவையெல்லாம் உள்ள ஒருவர் இறைவனாக இருக்கமுடியாது. சைவசித்தாந்த சாத்திரங்கள் இந்த குணங்கள் எல்லாம் ஆணவம், கன்மம்(கர்மம்), மற்றும் மாயை என்னும் மும்மலங்களால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்களுக்கே உண்டு என்று சொல்கின்றன. அப்படிப்பார்க்கும் போது உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா மும்மலங்களில் இருந்து இயல்பாகவே சர்வசுதந்திரராக இருக்கும் இறைவன் அல்லர்.

எமது சைவசித்தாந்த நோக்கிலிருந்து மேற்கண்ட குணாதிசயங்களை ஆராயும்போது அவர் ஒரு பசு, ஜீவான்மா என்றே புலனாகிறது.  தனது முந்தைய பிறவிகளில் செய்த கர்மங்களின் விளைவாக உடலெடுத்துப் பிறந்தவர், அறிவு, ஆற்றல் ஆகியவற்றில் அளவும் வரம்பும் உடையவர், இன்பத்தையும் துன்பத்தினையும் அனுபவிப்பவர், வாழ்வு முடிந்ததும் மரணமடைகிற சாமானிய மானுடர் என்பதே விளங்குகிறது.

முதற்படைப்புக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே உங்கள் தேவனாகிய ஜெஹோவாவிற்குப் படைக்கவேண்டும் எண்ணம் இருந்ததாக சில கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எந்த நோக்கமுமின்றியும் எப்போது, எங்கே, எப்படி, தனது படைப்பை நிகழ்த்தவேண்டும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அந்த முடிவு அவருடையது மட்டுமே என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் இந்தவாதத்தினை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு எந்த ஆதாரத்தினையும் பைபிள் தரவில்லை. எனது மகிமையை வெளிப்படுத்துவதற்காகவே நான் மனிதனைப் படைத்தேன் என்ற பைபிளின் வசனத்திற்கு முற்றிலும் முரணாது, மாறானது இந்த வாதம்.

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா நெடுங்காலத்திற்கு முன்னரே எப்போது, எங்கே எப்படி உலகைப் படைக்கவேண்டும் என்பதனை முடிவு செய்திருந்தால், உலகில் நிகழும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கவேண்டுமே? அவர் தன்னிச்சைப்படியே மனிதர்களுக்கு பாவ புண்ணியத்தினைப் பாராமல் சொர்கத்தையோ நரகத்தையும் முடிவுசெய்பவராகவும் இருக்கவேண்டும் அல்லவா?

மனித உயிர்கள் மீட்புக்குத் தகுதியானவர்களா என்று பரிசோதிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லையே! அதனால் அவர்கள் சொர்க்கத்தினை அடைவதற்கு நம்பிக்கையோடு கடுமையாக உழைக்கச் சொல்லும் பைபிளும் வீணாய்ப்போகும். அதனை மனிதருக்கு வெளிப்படுத்திய ஜெஹோவாவின் விவேகத்திற்கும் அது இழுக்காகவும் ஆகிவிடுமே!

அற்பமானுடர்கள் எங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் படைப்பின் நோக்கத்தினைக் கேள்விக்கு உட்படுத்துதல் தகாது, அவரது செயல்கள் மனிதரின் தர்க்கநியாயத்திற்கும் அறிவிற்கும் அப்பாற்பட்டது என்று சில கிறிஸ்தவ அறிஞர்கள் வாதிடுகின்றார்கள்.

அநிஸ்ட்ப்பிரசங்கம் என்னும் தர்க்க நியாயப்பிழை குற்றம். இதனால் விளையும். தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று  நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே  நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?

உங்களுடைய விவிலியம் தெள்ளத்தெளிவாக ஜெஹோவா தனது மகிமையை விளங்கச்செய்யும் பொருட்டே உலகையும் மனிதரையும் படைத்தார் என்று சொல்கிறது. அப்படியிருக்க அவரது படைப்பின் நோக்கம் மனித அறிவுப் புலனுக்கு அப்பாற்பட்டது என்று எப்படி நீங்கள் சொல்லமுடியும்? எந்த மதத்தின் புனிதநூலும் மனிதரின் புரிதலுக்கு அப்பாற்பட்ட விடயங்களை கூறுவதில்லை என்று உறுதியாக அறுதியிட்டுக் கூறமுடியும்.

ஜெஹோவா தனது மகிமையை விளங்கச்செய்யவே மனிதரைப்படைத்தார் என்று பைபிள் சொல்வதால் அவரது படைப்பின் நோக்கத்தை சிற்றறிவுடைய மானுடர்களால் புரிந்துகொள்ள இயலாது என்று நீங்கள் சொல்வதைக்கேட்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. தன்னைப் பெற்ற தாயையே மலடி என்ற மகனின் மடமைதான் எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.

கிறித்தவப் புனிதநூலான பைபிளில் கூறப்பட்ட ஜெஹோவாவின் முதற்படைப்பைப்பற்றிய ஆராய்ச்சியிலிருந்து அவரது படைப்பின் நோக்கம் மானுட சிற்றறிவுக்குப் புலனாகாது என்பது தவறு என்று தெளிவாகிறது. அவருடை படைப்பின் காரணம் தனது மகிமையை விளங்கச்செய்யும் அவரது சுயநல எண்ணமே என்பதும், படைப்புக்கு முன்னே இருக்காத ஆன்மாக்களின் நன்மைக்காக அவர் படைப்பினை மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது.

அவருக்கு இறைவனுக்குறிய குணங்கள் ஏதும் இல்லை, அவர் சர்வபௌமரோ, சர்வக்ஞரோ, கருணாநிதியோ, நீதிமானோ அல்லர் — மாறாக அவர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் பந்திக்கப்பட்டு, சம்சாரசாகரமாகியப் பிறவிப் பெருங்கடலுள் அல்லலுரும் ஒரு ஆன்மாவாகியப் பசுவே என்பதும் தெரிகிறது.

(தொடரும்)

குறிப்புகள்:

[i] பைபிள் மொழிபெயர்ப்புகளில் அவர்களின் (யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய அபிராஹாமியர்களுக்கு பொதுவான) படைத்தவனாகிய ஜெஹோவா தேவன், கர்த்தர், சர்வேஸ்வரன், என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார். ஆனால் தேவன், கர்த்தர், இறைவன், ஈஸ்வரன், ஆகிய சமஸ்கிருதம் தமிழ் உள்ளிட்ட பாரதிய மொழிகளில் இறைவனுக்கு கடவுளுக்கு வழங்கும் பெயர்களெல்லாம் ஜெஹோவாவிற்குப்பொருந்தாது.

[ii]  கிறிஸ்தவர்களுடைய புனித நூலாகிய பைபிள் விவிலியம் என்றும் பரிசுத்த வேதாகமம் என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்குகிறது.

[iii]  பாரதிய தத்துவ ஞான தரிசனங்கள், நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை,, வேதாந்தம் என ஆறாகும். இவை வேதத்தினைப் பிரமாணமாகக்கொள்வதால் வைதீக தரிசனங்கள் என்றும் ஆஸ்திக தரிசனங்கள் எனப்படுகின்றன.  இவற்றில் முதலிரண்டான வைசேஷிகம் மற்றும் நியாயம் ஆகியன தர்க்கம் என்று அழைக்கப்படுகின்றன. இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்கவல்லவை. தமிழில் தர்க்கம் அளவை என்றும் அழைக்கப்படுகிறது. பொருள்களின் தன்மைகளை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் தர்க்கசாஸ்திர மேதைமை மிக அவசியமாகும். தர்க்கத்தினை பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு உபாயமாகக் கருதாத வேதாந்திகளும் சித்தாந்திகளும் வாதவிவாதங்களுக்கு அதனைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நம்முடைய தர்க்கசாஸ்திரத்தின் சிறப்பினை மேன்மையினை ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் இந்த நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. வேதாந்த சித்தாந்த நூல்களை வாசிக்கும்போதும் நம்முடைய முன்னோர்கள் தர்க்கசாஸ்திரத்தில் எவ்வளவு வன்மை படைத்திருந்தார்கள் என்று அறியலாம்.

[iv] கிறிஸ்தவர்கள் ஆன்மாக்கள் என்று சொல்வது மனிதர்களைத்தான். உயிர்கள் ஆத்மா/ஆன்மா  என்று பாரதிய சமயங்களும் தரிசனங்கள் உயிர் வாழ்கிற எல்லா தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதகளின் சக்தியை அழைப்பதுண்டு. ஆனால் கிறிஸ்தவர்களின் கருத்துப்படி மனிதருக்கு மட்டுமே ஆன்மாக்கள் உண்டு. மற்றவைகளுக்கு ஆன்மா இல்லை.

[v] இது முதல்பாவம் என்று கிறித்தவர்களால் அழைக்கப்படுகிறது.

[vi] ஆதிமனிதர்கள் தம்மைப் படைத்தவனுக்கு கீழ்ப்படியாமை பெரும் குற்றமாகவும். ஜெஹோவாவின் சாபத்திற்குக் காரணமாகவும் கருதும் கிறித்தவர்கள், அந்தப்பாவம் அவர்களின் சந்ததிகளையும் தொடர்வதாக நம்புகிறார்கள். அந்த சாபம் பாவம் ஆகியவற்றினால் கீழே வீழ்ந்துகிடக்கும் மனிதர்களை மீட்பதற்காகவே ஜெஹோவாவின் ஒரே குமாரனான ஜீஸஸ் கிரைஸ்ட் வந்தார். அவரே மீட்பர் அல்லது இரட்சகர். அவர் தாம் செய்யாத தவறுக்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப்பிறகு உயிர்த்தெழுதார் என்பது அவர்களது நம்பிக்கை. அவரை விசுவாசிக்கிறவர்கள், நம்புகிறவர்கள் அவரது திருப்பலியால், ரத்தத்தால் கழுவப்பட்டு தூய்மையடைவார்கள். பாவம் கழுவப்படும், சொர்கத்தில் நியாயத்தீர்ப்பு நாளில் இடம்பெறுவார்கள். மற்றவர்கள் யாராயினும் மீண்டுவரவே இயலாத துன்பம் நிறைந்த நரகில் உழல்வர் என்பது அவர்களின் கருத்து.  ஜீசஸ் வந்தார், வாழ்ந்தார், மாண்டார், எழுந்தார் அதை நம்பினால் சொர்க்கம் என்பதே நற்செய்தி என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைச்சொல்லி உலகம் முழுவதையும் கிறிஸ்தவத்தினைப் பரப்ப முனைகிறார்கள்.

***

12 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3”

  1. படைப்பு மற்றும் க்றைஸ்தவத்தின் முதற்பாவக்கொள்கை இந்த பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான முறையில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்.

    க்றைஸ்தவ கோட்பாடாகிய **முதல்பாவம்** ஸ்ரீ கோபால் அவர்களால் ஒரு வ்யாசத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. https://tamilhindu.com/2010/09/original-sin-cant-live-with-it-cant-live-without-it-2/

    அன்பர்கள் சில்சாம் மற்றும் ஜான்சன் (Bishop Datuk Dr. S.Batumalai Ph.D) ………(https://www.bibatee.blogspot.in/ )………..என்ற இரு க்றைஸ்தவ அன்பர்கள் நமது தளத்தின் மூத்த வாசகர்களாகிய ஸ்ரீ கந்தர்வன் மற்றும் ஸ்ரீ சாரங்க் அவர்களுடன் நிகழ்த்திய வாதங்களை ஒரு முறை மீள்வாசிப்பு கொடுத்தேன். இதை வாசிக்கும் வாசகர்கள் அங்கு விசாரிக்கப்பட்ட விஷயங்களையும் வாசித்து …….. முதற்பாவக்கொள்கையின் அபத்தத்தை அறியலாம்.

  2. ஆதாம் ஏவாள் இருவர் மட்டுமே படைக்கப்பட்டனர், அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன, சரி… அதற்கடுத்த தலைமுறை எப்படி உருவானது? ஆதாம் ஏவாளின் குழந்தைகள் அவர்களுக்குள் என்ன செய்து அடுத்த தலைமுறையை உருவாக்கினர்? அப்படியானால் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட உறவில் உருவானதுதான் மனித குலமே என்றால், இவர்களை என்ன சொல்வது? இங்கிருக்கும் பகுத்தறிவாளர்கள் இதையெல்லாம் ஏன் பகுத்து அறிவதில்லை?

  3. இக் கட்டுரையால் நீங்கள் பெறும் லாபம் என்ன? உங்கள் மத போதனைகளில், நம்பிக்கைகளில் நீங்கள் உறுதியாக இருங்கள். உள்ளொளி பெற்ற ஒருவன் இக்கட்டுரையை எழுத மாட்டான் என்பது எனது பணிவான கருத்து. மமதை கொண்டோர் இறைவழியில் தானும் நடவார்; மற்றவர்களையும் வழி நடத்தார்.சிறந்த ஆக்கங்களை தாங்கி வரும் இவ்விதழ் இதுபோன்ற கட்டுரைகளை தவிர்க்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

  4. அன்பிற்குறிய மனுவேல் ஜேசுதாஸன் அவர்களுக்கு வணக்கம்.
    மனுவேல் ஜேசுதாஸன்
    “இக் கட்டுரையால் நீங்கள் பெறும் லாபம் என்ன?”
    இந்தக்கட்டுரைத்தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப்படித்தீர்கள் என்றால் ஏன் இந்த கிறிஸ்துமதச்சேதனம் என்னும் நூல் பூஜனீய சட்டம்பி சுவாமிகள் என்னும் மலை நாட்டு மகாத்மாவால் எழுதப்பட்டது என்பது தெளிவாகும். இதனால் அடியேன் பெறும் லாபம் என்ன என்பதையும் முதல் பகுதியிலே சொல்லியிருக்கிறேன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் இங்கே வாழ்வாங்கு வாழ இடம் உண்டு வளம் உண்டு பிறவிப்பெருங்கடலை நீந்த வழியுண்டு. இந்த உலகம் இறைவனின் குடும்பம். வசுதைவக்குடும்பகம். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே. ஸர்வே சுகினோ பவந்து என்று சொல்லும் பாரத நாடும் அதன் பண்பாடும் தர்மமும் இந்த உலகம் உள்ளவரை வாழவேண்டும். அதற்கு மற்றைய சமயங்களை உள்ளபடி ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதுவே அடியேனின் மொழிபெயர்ப்பின் நோக்கம்.

  5. மனுவேல் ஜேசுதாசன்
    “உங்கள் மத போதனைகளில், நம்பிக்கைகளில் நீங்கள் உறுதியாக இருங்கள். உள்ளொளி பெற்ற ஒருவன் இக்கட்டுரையை எழுத மாட்டான் என்பது எனது பணிவான கருத்து. மமதை கொண்டோர் இறைவழியில் தானும் நடவார்; மற்றவர்களையும் வழி நடத்தார்”. தங்கள் அறிவுரைக்கு நன்றி. இந்தக்கட்டுரையாசிரியர் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் பெரிய வேதாந்த ஞானி. சைவசித்தாந்தத்திலும் ஆழ்ந்தப்புலமை உடையவர். சமூகசீர்த்தம் செய்தவர் வேதம் வேதாந்தம் அனைவருக்கும் உரியது என்று ஒரு நுலை மலையாளத்தில் எழுதி சமூக சமத்துவத்திற்காக ஒற்றுமைக்காகப்பாடுபட்டவர். அடியேன் சாமானியன். வெறும் மொழிபெயர்ப்பாளன். இந்த அரிய நூல் மமதையின் பொருட்டு எழுதப்பட்டது அன்று. மாறாக கிறிஸ்தவத்தின் கடவுள் கோட்பாடு என்ன? ஆன்மாவைப்பற்றி அது சொல்லுவது என்ன? பிறவிக்கடலை க்கடக்க அதுகாட்டும் வழி என்ன என்பதை ஹிந்துக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை அடிகள் எழுதினார்? ஹிந்துக்களைப்பாவிகள் என்று சொல்லும் கிறிஸ்தவர்களோடு விவாதிக்கவே அவர் இதை அருளினார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள் பைபிள் வசனங்கள் எல்லாமே 100 க்கு 100 சரியாகவே உள்ளன. அதை சரிபார்த்தே எழுதுகிறேன். வாதங்களோ தகவல்களோ சரியாக இல்லாத பட்சத்தில் உள்ளொளி பெற்ற தாங்கள் அதை சுட்டிக்காட்டலாம். சத்தியத்தினை விடப்பெரிதொன்றும் இல்லை.

  6. இலாபத்தை எதிர் நோக்கி மதப் பிரச்சாரம் எனும் வணிகத்தைச் செய்வது கிறித்துவ மதமே. அண்டை வீட்டுக்காரர் என்று ஒருகிறித்துவரிடம் பேசினால், உடனே அவர் நமக்காக ஏசுவிடம் மன்றாடத் தொடங்கி விடுவார். கிறித்துவன் இந்துவிடம்பேசும் பேச்சில்தான் இலாபமெனும் வணிக நோக்கு இருக்கும். இந்தநூல் இந்துக்கள் தம்மை யாரென அறிந்து கொள்ளவும் நம்முடைய எளிவந்த தன்மையை கிறித்துவமெப்படி ஏமாற்றுகின்றதுஎன போதிக்கவுமே எழுதப்பட்டது.

  7. அன்பர் மானுவெல் ஜேசுதாசன்

    ஸ்தோத்திரம்.

    தெருத்தெருவாக முச்சந்திகளில் நின்று கொண்டு பாவிகளே என்று கூவிக் கூவிக் கூச்சலிடும் க்றைஸ்தவ பாதிரிமார்கள் உங்களது கருத்தாக்கத்தின் படி உள்ளொளி பெறாதவர்கள். அடுத்த மதத்து அப்பாவி மக்களை கூசாது பாவிகளே என்று தெருத்தெருவாக வசைபாடும் இந்த சமூஹ விரோதிகளிடம் தங்களது உயர்வான கருத்தாக்கத்தை ப்ரசாரம் செய்தீர்களானால் மெய்யாலுமே சமூஹ நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

    க்றைஸ்தவர் அவர்கள் வழியில் இறைவழிபாடு நடத்துதலும் ஹிந்துக்கள் அவர்கள் வழியில் இறைவழிபாடு நடத்துதலும் மேன்மையானது.

    ஆனால் க்றைஸ்தவர்கள் ஹிந்துக்களது வழிபாடுகளை பொய்யுரைகளால் இழித்துப் பழித்தால் அவர்களது கருத்தாக்கங்கள் ஏன் பொய்யுரைகள் என்று தர்க்கபூர்வமாக மறுதலிக்கப்படுவது மிகவும் அவச்யம். ஹிந்து மத நூற்களையும் க்றைஸ்தவ மத நூற்களையும் முறையாகக் கற்றறிந்த ஒரு சான்றோர் இப்படிப்பட்ட ஒரு முயற்சி செய்யத்தகுந்தவர். பூஜ்ய ஸ்ரீ சட்டாம்பி ஸ்வாமிகள் அத்தகையவர்.

    அவர் மலையாளத்தில் எழுதிய நூல் ஆங்க்லப்படுத்தப்பட்டு …….. அதை மெனக்கெட்டு தமிழ்ப்படுத்த விழைந்த ஸ்ரீ சிவஸ்ரீவிபூதிபூஷண மஹாசயர் அவர்களது செயற்பாடு போற்றத்தகுந்தது. இந்த வ்யாசத் தொடர்களில் சொல்லப்படும் எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஒப்பானதில்லை ஏன் ஒப்பானதில்லை என்று குறிப்பாகச் சுட்டி அதை விவாதித்தீர்களானால் மாற்று மதக்கருத்துக்களை உள்ளபடி அவதானிக்க விழையும் தமிழ் ஹிந்து வாசகர்களும் பயன் பெறுவோம்.

  8. அன்புக்குறிய ஸ்ரீ ரிஷி அவர்களுக்கு,
    கிறிஸ்துமதச்சேதனம் என்னும் மலையாள நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பை இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். இந்த நூல் விற்பனைக்கு எங்கும் கிடைப்பதாகத் தகவல் இல்லை. ஆகவே இரு நூறு ரூபாய் செலவு செய்தால் நீங்களே அச்சிட்டுப்படிக்கலாம். கணிணியின் மூலம் வாசிக்கலாம்.
    அருமையான நூல். இந்த நூலை எழுதியவருக்கு குறைந்தது ஒரு மூன்று பிஹெச் டி கொடுக்கலாம்(அப்போது அடிகள் இளைஞர்). பைபிள் முழுவதும் ஆழ்ந்து படித்து ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார் ஸ்ரீ லஸ்ரீ சுவாமிகள். கிறிஸ்தவம் பரவிய வரலாற்றைப்பற்றியும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூஜனீய சுவாமிகளுக்கு ஓர் ஆழ்ந்தப்புரிதல் இருந்திருக்கிறது என்பதை அவரது நூலைப்படிப்பவர்கள் உணரமுடியும். நூலைபதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைப்பயன் படுத்தவும்.
    https://archive.org/details/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation

  9. Many thanks Mr Shivshree Vibhuthi Bhushan for the hyperlink.
    I want to read the book in English.
    You have helped me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *