மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

பிரதமரின் கார்களின் அணிவகுப்பு சான் ஓசே ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பியவுடன் நாங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு செல்ல நடக்க ஆரம்பித்தோம். அது வரையிலும் உறைக்காத 93 டிகிரி வெயில் அப்பொழுது உறைக்க ஆரம்பித்தது. பாதி தூரத்தில் நின்ற ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டு கார் இருக்கும் இடத்திற்கு சென்றோம். டாக்ஸியில் சிறிய விநாயகர் சிலையையும் சிவன் படமும் வைத்திருந்தார்.  மோடியை சந்திக்க வந்தீர்களா நேரில் அருகே சந்தித்தீர்களா என்றார். ஆம் நீங்கள் இந்தியரா என்றேன். இல்லை நான் ஃபிஜித் தீவு இந்து. என் முன்னோர்கள் பல வருடங்கள் முன்னால் அங்கு குடியேறியவர்கள். இப்பகுதியில் 34 டாக்ஸிகள் உள்ள நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன் என்றார். முதலாளியாகிய நீங்களும் டாக்ஸீ ஓட்டுவீர்களா என்றேன். எப்பொழுதாவது ஓட்டுவது உண்டு. இன்று மோடி இங்கு வரப் போவதாக தகவல் வந்தது. அதனால்தான் தூரத்தில் இருந்து அவரை பார்க்க முடியுமா என்று இங்கு வந்தேன் என்றார். ஒரு ஃபிஜி தீவுக்காரரான உங்களுக்கு மோடி மீது ஏன் இவ்வளவு ஆர்வம் என்றேன். இந்தியர்களுக்குத்தான் அவரது அருமை பெருமைகள் தெரிவதில்லை. உலக இந்துக்களின் தலைவராக நாங்கள் மோடியைக் காண்கிறோம். ஃபிஜித் தீவு இந்திய வம்சாவழியினர் மோடி மீது பெரும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அவர் ஒரு கர்ம யோகி. அவரது அருமை உங்களுக்குத் தெரிவதில்லை என்றார். இத்தனை நாட்களாக இப்படி ஒரு அரிய தலைவனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இவரை பிரதமராக்காமல் என்ன செய்தார்கள் இந்தியர்கள் என்றார். மோடி பிரதமரானதும் ஃபிஜி தீவு வந்தது குறித்து மிகவும் பெருமிதத்துடனும் நன்றியுடனும் நினைவு கூர்ந்தார். இந்தியா இப்பொழுதுதான் அதன் பெருமையை மாண்பை மீட்டுள்ளது நான் இப்பொழுது இந்தியாவுக்கு வர விரும்புகிறேன். என் முன்னோர்களின் பூமியில் வாழ விரும்புகிறேன் என்றார். தாராளமாக வந்து தங்குங்கள் நல்வரவாகுக என்றேன்.

காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டு மீண்டும் அதே 880 ஹை வேயில் சாண்ட்டாக்ரூஸ் நோக்கி நான் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்புறத்தில் போலீஸ் பைலட் மோட்டார் சைக்கிள்கள் முன்னே வர பின்னால் வண்ண விளக்குகள் ஒளிர போலீஸ்கார்கள் வந்து கொண்டிருந்தன அதைத் தொடர்ந்து மோடியின் 15 வாகனங்களும் தொடர்ந்து ஃப்ரீமாண்ட்டில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் எக்ஸிட்டில் நுழைந்தன. அவரது கார் நோக்கி கைகளை ஆட்டி விட்டு நான் எதிர்புறம் விரைந்தேன். 1.30 மணிக்குத்தான் ஏர்ப்போர்ட்டில் இருந்து ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு கூடியிருந்த இந்தியர்களிடம் எல்லாம் கை குலுக்கி விட்டு சாப்பிட்டு விட்டு 3 மணிக்கு டெஸ்லா மோட்டார்ஸில் இருந்தார். ஒரு மணி நேரத்திற்குள் ஒரு ஐந்து நிமிட ஓய்வு கூட எடுக்காமல் தனது நிகழ்ச்சி நிரலை அவ்வளவு நெருக்கமாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். உடை மாற்றி முகம் கழுவி சிறிது சாப்பிடும் நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். நியூயார்க்கில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு அந்த கடும் வெயில் நாளில் சில நிமிடங்கள் கூட ஓய்வு எடுக்காமல் தன் பணியில் தனது நோக்கத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாகச் செயல் பட்ட அந்த மாமனிதனைக் கண்ட பொழுது கடந்த 15 வருடங்களாக நான் மிகச் சரியான ஒரு தலைவனையே ஆதரித்து வந்துள்ளேன் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்

டெஸ்லாவிலும் பணிபுரியும் அனைத்து இந்தியர்களுடனும் உரையாடி அவர்களுடன் புகைப் எடுத்துக் கொண்டதையும் டெஸ்லாவின் தலைவர் மஸ்க்குடன் உரையாடியதையும் நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா விளக்கினார்.

modi_tesla_elonmusk_featடெஸ்லா நிறுவனம் உலகத்தின் எரிசக்தி தலையெழுத்தையே மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். அதன் தலைவர் எலான் மஸ்க் ஒரு அதி மானுடர் விதி சமைப்பவர். இந்த உலகும் இயங்கும் விதங்களை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பவர். சாதனை மனிதர். அரசியலில் மோடி போன்று அறிவியல் தொழில் நுட்பத்தின் மோடி அவர். அவ்ர் நிறுவனம் தயாரிக்கும் மாடல் எஸ் பேட்டரி கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 மைல்கள் ஓடக் கூடியவை. பெட்ரோல் தேவையில்லை. காரை சார்ஜ் செய்யத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் சோலார் பேனல்களை தயாரிக்கும் சிட்டி என்னும் சோலார் நிறுவனத்தையும் அவர் நடத்துகிறார். அந்த நிறுவனம் கலிஃபோர்னியா வீட்டுக் கூரைகளையெல்லாம் சோலார் கூரைகளாக மாற்றி வருகின்றது. சோலார் பேனல்கள் உருவாக்கும் மின்சாரத்தை சேமிக்கும் நவீன சிறிய சுவற்றில் மாட்டும் கலன்களையும் டெஸ்லா நிறுவனம் தயாரிக்கின்றது. இவை தவிர இவரது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம்  சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவுகின்றது. அவரது நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் இந்தியாவின் எரிசக்தி தேவையை பெரும் அளவில் குறைக்கக் கூடியவை. அவரது கார்களும் சோலார் பேனல்களும் பாட்டரிகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யவும் டெஸ்லாவின் ஓப்பன் சோர்ஸ் டெக்னாலஜிகளை இந்தியாவில் பெரும் அளவு பயன் படுத்தவும் மோடி முயற்சி செய்கிறார். அதன் விளைவு இந்தியாவின் எதிர்காலத்தை வெகுவாக மாற்றி அமைக்கக் கூடியது. இந்த கலிஃபோர்னியா விஜயத்தின் பொழுது டிஜிடல் இண்டியாவுக்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைப் போலவே முக்கியத்துவம் உள்ளது மோடியின் டெஸ்லா விஜயமும் மஸ்க்குடனான அவரது சந்திப்பும். சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙக்ள் வெகுவாக பேட்டரி வாகனங்களாக மாறும். பெரும் அளவில் மாசு கேடுகள் குறையும். இந்தியாவின் அந்நிய செலவாணி சேமிப்பு அதிகரிக்கும். ஸ்பேஸ் எக்ஸுடனான ஒப்பந்தங்களும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளுக்கு பரஸ்பரம் உதவிகரமாக இருக்கும்.

****

இதையெல்லாம் விட முக்கியமானவை. இது வரை எந்த இந்திய அரசாங்கமும் இதை செய்ததில்லை. பிரதமர் வேண்டாம், ஒரு மத்திய மந்திரி கூட வந்து கூகிள் -இல் வந்து இந்தியாவின் ரயில் நிலையங்களில் இன்டர்நெட் வசதி செய்து தரும்வாறு கோரியதில்லை. டெஸ்லா  நிறுவனத்திலோ, வேறு நிறுவனங்களிலோ வந்து எங்கள் ஊரில் மாசு கட்டுப்பாடு குறைந்து விட்டது, பாட்டரி -யில் இயங்கும் தொழில்நுட்பம் தாருங்கள் என்று கோரியதில்லை. ஆப்பிள் நிறுவனத்தில் வந்து எங்கள் நாட்டில் iphone  தயாரியுங்கள் என்று கூறியதாக செய்தி வந்து பார்த்ததில்லை. இது வரை எந்தவொரு பாரத் தலைவர்களும் வெளிநாட்டில் வாழும் வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலவாணி ஈட்டித் தரும் இந்தியர்களை ஒரு பொருட்டாக மதித்து நேரில் வந்து சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து உரையாடியதில்லை. மோடி ஒவ்வொரு நாட்டிலும் சென்று அங்கு வாழும் இந்தியர்களுடன் உரையாடி வருகிறார். அவர்களை இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார். இந்தியா இது வரை கண்டிராத ஒரு உறுதியான தொலை நோக்குள்ள ஒரு தலைவர் மோடி என்பது அவரது இந்த பயணத்தின் மூலம் மேலும் உறுதிப் பட்டது.

இதெல்லாம் செய்தியில் வந்தவை மட்டுமே. இன்னமும் என்ன என்ன லாபம் இந்தியாவிற்கு  இதன் மூலம் வர உள்ளது என்பது போக போக தான் தெரியும்.

சாப்ட்வேர் தொழில் மூலம் கோடிக்கணக்கான வேலைகள் இந்தியாவில் உருவானாலும், இங்கு வந்து எந்த IT கம்பெனி நிறுவனத்திற்கு சென்று அவர்களின் குறைகளை அறிந்து, நிவர்த்தி செய்ய உறுதியளித்து இந்தியாவிற்கு வரும் வாறு அழைப்பு விடுத்த தில்லை.

அநேகமாக இங்கு வந்தால் தங்களின் சொந்த  முதலீடுகளை பார்த்து விட்டு, விட்டால் சில பொழுதுபோக்குகளிலும்  சிற்றின்பங்களிலும்  செலவழித்து விட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட தலைவர்களை தான் இந்தியா  இது வரை கண்டிருக்கிறது.

தன்னலம் பாராமல் நாட்டுக்காக தன்னையே அர்பணித்து கொண்டிருக்கிறார். எந்நேரமும் உழைக்கிறார், அல்லது இந்தியர்களை சந்திக்கிறார். 18000 பேர் மத்தியில் பேசும் போது , சில நேரங்களில் என்ன நடக்கும் நாளை என்று கூற முடியாவிட்டாலும், நான் என் உழைப்பில் ஒரு குறையும் விட மாட்டேன் என்று உறுதியளித்து சென்றார். நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால் இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும், ஆகவே சிலவற்றை மற்றும் கூறி விட்டு செல்கிறேன் என்றார்.

டெஸ்லா மோட்டார்ஸ் வருவதற்கு முன்பாக மோடி இப்பகுதி வாழ் குஜராத்திகள் மற்றும் பல இந்தியர்களிடம்  பேசி விட்டு வந்திருந்தார். இரு நாட்களிலும் தொடர்ந்து பல்வேறு தரப்பிலான இப்பகுதி வாழ் இந்தியர்களை சந்தித்துக் கொண்டேயிருந்தார். சி இ ஓக்களின் சந்திப்புகள் தவிர பிற அமெரிக்க இந்தியர்களும் அவரை தொடர்ந்து சந்தித்தும் பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பிப்பதுமாக இருந்தனர். அமெரிக்கா வாழ் குஜராத்தி பட்டேல்கள், ஆந்திர மாநில பிரதிநிதிகள், பஞ்சாப் சீக்கியர்கள் என்று ஏராளமான பல்வேறு இந்திய மாநில மக்களும் அவரை சந்தித்து அவர்களின் கோரிக்களை அவரிடம் சமர்பித்தனர். ஆக இது வெறும் முதலீடுகளுக்கான பயணம் மட்டும் அல்லாது அமெரிக்க இந்தியர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க்கும் அவர்களை மதித்து சந்திக்கும் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் பயணமாகவும் இது அமைந்திருந்தது.

வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் மந்திரிகளும் அதிகாரிகளும் பொது மக்களை நேரடியாக சந்திக்க மாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் இப்பகுதிக்கு வரும் பொழுது ஆடையில்லாமல் ஆடும் நைட் கிளப்புகளுக்குச் செல்வதிலும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதிலும் பல்வேறு வகை உணவகங்களுக்குச் செல்வதிலும் சுற்றுலா இடங்களைப் பார்ப்பதிலும் கவனமாக இருப்பார்கள். சென்ற ஆட்சியின் ஒரு தமிழ் நாட்டு மத்திய மந்திரி ஜூரிச் சென்றிருந்த பொழுது பிரியாணி சாப்பிடுவதற்காக ஆலாய் பறந்திருக்கிறார். சாப்பாட்டு கடை வருவதற்கு முன்னால் எங்கே எப்பொழுது போவோம் என்று ஆலாய் பறந்திருக்கிறார். ரெஸ்ட்டாரண்ட்டில் நுழையும் முன்னால் எதிரில் வந்த ஆளிடம் எங்கே பிரியாணி என்று கேட்க்க அவர் நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்னிடம் போய் எங்கே பிரியாணி என்று கேட்க்கிறாயே முட்டாளே உள்ளே போய் திண்ணு என்று திட்டியிருக்கிறார். இன்னொரு மத்திய மந்திரி இங்கு வந்து இறங்கியவுடனேயே ஆடையின்றி உடலைத் தழுவி ஆடும் கிளப்புகளுக்கு எப்பொழுது போகப் போகிறோம் என்று நச்சரிக்க ஆரம்பித்துள்ளார் அவருக்கு நினைவு எல்லாமே ஸ்டிரிப் கிளப்புகளில் மட்டுமே இருந்திருக்கிறது வேறு எதிலுமே அவர் கவனம் செலுத்தவில்லை. பல அதிகாரிகள் இங்கிருந்து எவ்வளவு எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு செல்ல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்வார்கள். ஸ்டிரிப் கிளப் செல்லாத இந்திய அதிகாரிகள் மந்திரிகளைக் காண்பது அபூர்வம். ஒரு சில மந்திரிகள் பாதி நேரம் அலுப்பிலும் களைப்பிலும் ஜெட் லாகிலும் தூங்கிக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் மோடி இவர்கள் அனைவருக்கும் எதிராக வந்து இறங்கிய நொடியில் இருந்து அளவற்ற சக்தியுடனும் எல்லையில்லா ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் செயல் பட்டு வந்ததை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது. அவரது 36 மணி நேர விஜயத்தில் அவர் ஒரு 3,4 மணி நேரங்கள் மட்டுமே தூங்கியிருந்திருப்பார். ஒரு நொடி கூட வீணாக்காமல் நிறுவனங்களுக்குச் செல்வதிலும் கம்பெனி தலைவர்களை சந்திப்பதிலும் நிறுவனங்களுக்குச் சென்று பார்ப்பதிலும் அரசாங்க தலைவர்கள், பொது மக்கள் என்று சகல தரப்பினரையும் காண்பதிலும் நிதி முதலீடு கோருவதிலும் தன் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பாரதத்தின் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ஒரு நொடி கூட வீணாக்காமல் செயல் பட்டார். இதைப் போன்ற அளவற்ற சக்தியுடன் செயல் பட்ட ஒரு தலைவரை உலகின் எந்த நாட்டிலும் காண முடியாது. அந்த வகையில் ஒப்பற்ற தனித்துவம் மிக்கதொரு தலைவராக விளங்கினார் மோடி. இதை நேரடியாகக் கண்டு உணர்ந்து இதைச் சொல்கிறேன்.

டெஸ்லா மோட்டார்ஸ் விஜயத்தைத் தொடர்ந்து தனது டிஜிட்டல் இண்டியா திட்டத்தினை நிறைவேற்ற அமெரிக்காவின் முக்கியமான நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சத்தியா நாடெல்லா, க்வால்காம் நிறுவனத்தின் பால், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க், அடோபி நிறுவனத்தின் தலைவர் என்று இந்தியாவின் டிஜிட்டல் இண்டியா திட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றத் தேவையான அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு மோடியுன் திட்டங்களைக் கேட்டு அறிந்து அதற்காக தாங்கள் எந்தந்த வகைகளில் உதவ முடியும் என்பதைத் தெரிவித்தன.

மோடி முன் வைக்கும் டிஜிட்டல் இண்டியா திட்டம் என்றால் என்னவென்று சற்று புரிந்து கொள்ள வேண்டும். அது வெறுமே இந்தியா முழுக்க பரவலாக அகலப் பாட்டை இணைய இணைப்பு கொடுப்பதோடு முடிவதில்லை.

டிஜிட்டல் இண்டியா திட்டம் என்பது அரசாங்கத்தின் மென்பொருள், இணைய மற்றும் அனைத்து சேவைகளையும் இந்தியா முழுவதற்கும் இணைப்பதற்குத் தேவையான அனைத்து விதமான ஆன்லைன் இணைப்பு கட்டுமானங்களையும் உருவாக்குவது. க்ளவுட் டேட்டா செண்ட்டர்கள் அமைத்தல், கடைசி இணைப்பு வரையிலும் தேவையான ரவுட்டர்கள், சர்வர்களை கட்டமைத்தல், அகலப் பட்டை அலைவரிசைகளை அதிகரித்த்ல், பயன்பாட்டுகளுக்குட் தேவையான மென்பொருள்களை உருவாக்குதல், மொபைல் இணைப்புகளும் சேவைகளுக்குமான கட்டுமானங்களை உருவாகுதல், இந்தக் கட்டுமானங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான செக்யூரிட்டி கட்டுமானங்களை உருவாக்குதல் அரசங்கத்தின் அனைத்து சேவைகளையும் பொது மக்களுக்கும் பிற பயனர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வழங்குதல் எந்த சேவைக்காகவும் எந்தவொரு பொது மக்களையும் அரசு அலுவலங்களுக்கு வராமல் காத்திருக்க வைக்காமல் காசு கொடுக்கத் தேவையில்லாமல் நேரடியாக எவர் தலையீடும் சிபாரிசும் இல்லாமல் வழங்குதல் போன்ற எண்ணற்ற நோக்கங்களை உள்ளடக்கியதே டிஜிட்டல் இண்டியா திட்டமாகும். அதை நிறைவேற்ற்ய்வதற்கு ஏராளாமான நிதி முதலீடுகளும் தொழில் நுட்பங்களும் தேவை.

அவற்றை இந்தியாவில் உருவாக்குவதற்காகவே அவற்றை உருவாக்கும் நிறுவனங்களிடம் வேண்டுவதற்காகவும் அவர்களை நேரில் சந்தித்து இந்தியாவின் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்களை உதவ வேண்டியுமே மோடி இப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அவர் இங்கு இந்தியர்களை சந்திப்பதும் அவர்களிடம் பேசுவதும் அவரது முக்கியமான நோக்கம் அல்ல. பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களின் உதவிகளைக் கோருவதே அவரது முக்கியமான நோக்கம். நேரில் வந்து அவர்கள் நிறுவனத்திற்கே சென்று உதவி கோருவது அந்த நிறுவனங்களிடம் பெரும் நன் நம்பிக்கையையும் நட்புணர்வையும் உருவாக்கும். மகாபாரதத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணனின் கால்மாட்டில் அமர்ந்திருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் கண்விழித்தவுடன் முதலில் பேசியதைப் போன்ற முக்கியத்துவம் உடையது இந்த நேரடி விஜயம். நமக்குத் தேவையென்றால் நாம் தான் மலையை நோக்கிச் செல்ல வேண்டும் மலை நம்மை நோக்கி தானாக வராது என்பதை உணர்ந்தவர் மோடி. மோடியின் பயணங்களை கிண்டல் செய்யும் அற்பர்களும் மூளையற்ற மூடர்களும் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

ஆக டிஜிடல் இண்டியாவின் மூன்று முக்கிய நோக்கங்களானவை டிஜிட்டல் கட்டுமானங்களை உருவாக்குதல்,   அரசாங்கத்தின் சேவைகளை நேரடியாக டிஜிட்டல் தொழில்நுட்ப இணைய வசதிகளின் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்லுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்தான விழிப்புணர்வையும் பரவலான பயன் பாட்டையும் மக்களிடம் உருவாக்குதல் ஆகியவையே. அவற்றை நிறைவேற்றவே இதனை உருவாக்கும் நிறுவனங்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களை இந்தியாவில் முதலீடு செய்யவும் கட்டுமானங்களை உருவாக்குவதில் உதவி செய்யவும் வேண்டவே மோடி இப்பகுதிக்கு விஜயம் செய்திருக்கிறார். அவரது பயணத்தின் நோக்கம் பெரும்பாலும் வெற்றியை அடைந்திருக்கிறது என்பதை அவர் சந்தித்துள்ள நிறுவனங்களின் தலைவர்கள் அளித்துள்ள உறுதி மொழிகளைக் காணும் பொழுது உறுதிப் படுகிறது.

*****

அமெரிக்க டெக்னாலஜி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து உரையாடிய பின்னர் மோடி பல்வேறு இந்திய அமைப்பினர்களையும் விருந்தினர்களையும் சந்தித்து அவர்களின் குறைகள், ஆலோசனைகளைக் கேட்டறிந்தார். தான் உரையாடிய இந்திய பிரமுகர்களிடம் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் தன் ஆட்சி குறித்தான எதிர்பார்ப்புகள் குறித்தும் தொடர்ந்து அக்கறையுடன் விசாரித்துக் கொண்டேயிருந்தார்.

அவர் சிலிக்கான் வேலியில் வந்து இறங்கிய மதியம் 12.20 முதல் நள்ளிரவு தாண்டியும் ஆயிரக்கணக்கான பிரமுகர்களைத் தொடர்ந்து சந்தித்து உரையாடிக் கொண்டும் அவரது வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த அளவில் எவரும் உதவ முடியும் என்பது குறித்தும் ஆலோசனைகள் செய்தும் கொண்டிருந்தார். இடையில் ஓய்வென்பதே இல்லாமல் தொடர்ந்து அவரது நிகழ்ச்சி நிரல்கள் அமைந்திருந்தன.

modi-mark-zukerberg-facebook

ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்திய பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு அவர்களது ஊழியர்களையும் பொது மக்களையும் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரு டவுண்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியிலும் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளாமன இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் கரகோஷங்களுடனும் மோடியை வரவேற்றனர். அவருடைய புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கும் அவரது நிகழ்ச்சியைக் கேட்ப்பதற்கும் பெரும் ஆர்வம் அங்கு கரைபுரண்டோடியது.

அங்கு மோடியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். மோடியின் தாய் குறித்து மார்க் கேட்ட பொழுது மார்க்கின் பெற்றோர்களை முதலில் பாராட்டிய மோடி பின்னர் தனது தாய் தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு எவ்வாறு வீட்டு வேலைகள் செய்து கஷ்டப் பட்டு தங்களை வளர்த்தார் என்று சொல்லும் பொழுது அவரது குரல் தழுதழுத்து உடைந்து போனார். பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டு தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் சொல்லலானார். 40000த்துக்கும் மேலான கேள்விகள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 250000 பஞ்சாயத்துகள் இருப்பதாகவும் அடுத்த 5 வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் மூலமாக இணைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்

அவர் சோஷியல் மீடியாக்களில் ஒரு ஆர்வத்தின் காரணமாகவே இணைந்ததாகவும் ஆனால் அது அவரது அரசியல் பொது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினைக் கொணர்ந்ததாகவும் கூறினார். ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தொடர்பு சாதனங்களை தான் மக்களிடமும் பிற அரசுகளிடமும் உலகம் முழுவதும் தொடர்பு கொள்வதற்கும் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகவும் பயன் படுத்துவதாகவும்  குறிப்பிட்டார்.

modi_digital_india

ஆன்லைன் சோஷியல் மீடியாக்கள் மூலமாக உலகத் தலைவர்களுடன் எளிதான தொடர்பில் இருக்கவும் வெளிநாட்டுத் தொடர்புகளை உடனுக்குடன் பின்பற்றவும் உதவுவதாகவும்  உலகின் அரசாங்கங்களின் தவறுகளை கண்காணிக்கும் மிகப் பெரும் அமைப்புகளாக விளங்குவதாகவும் அரசாங்கங்களைக் கவனமாக செயல் படுத்த வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேல் பிரதமரை ஹூப்ருவில் அவர்களது திருவிழாவுக்கு வாழ்த்த அவர் பதிலுக்கு இந்தியில் தனக்கு நன்றி சொல்ல முடிந்ததைக் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல்கள் நடக்கின்றன ஆனால் சோஷியல் மீடியாக்களில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலும் தனது அரசு எடை போடப் படுவதாகக் குறிப்பிட்டார்.

இன்னொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் இந்தியாவில் பெண்களின் பங்கினை அதிகரிப்பதற்கும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் தன் அரசு பெரிதும் பாடுபடுவதாகக் கூறினார்

ஃபேஸ்புக்கின் டவுண் ஹால் நிகழ்ச்சியில் மார்க் நடத்திய கேள்விகளுக்கு பதில் சொன்ன பிரதமர் பின்னர் தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் விஜயம் செய்து அங்கும் உள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களையும் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் திட்டங்களையும் பார்வையிட்டார்.

கூகுள் நிறுவனத்திலும் ஃபேஸ்புக் போலவே ஆரவாரமான வரவேற்பு மோடிக்கு வழங்கப் பட்டது. மவுண்ட்டய்ன் வ்யூ நகரில் உள்ள கூகுள் வளாகத்தில் அவர்களது நான்கு முக்கியமான டெக்னாலஜி திட்டங்கள் குறித்து மோடிக்கு விளக்கப் பட்டன. கூகுளில் ஸ்ட்ரீட் வ்யூ, கூகுள் எர்த் குறித்தும் அவருக்கு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப் பட்டன. ஆர்ய பட்டா வானவியல் ஆராய்ச்சி நடத்திய காகுள் என்ற இடத்தின் ஸ்டீட் வியூவைக் காண்பிக்கும் மாறு மோடி கோரிய பொழுது அது அவருக்கு காண்பிக்கப் பட்டது. கூகுள் எர்த் மூலமாக வாரணாசியின் கங்கைக் கரை காண்பிக்கப் பட்டது. மேலும் கூகுளில் சுகாதார திட்டமான ப்ராஜக்ட் ஐரிஸ் அவருக்கு விளக்கப் பட்டது.

கூகுளின் மூலமாக மோடியின் டிஜிட்டல் இண்டியா திட்டத்திற்காக நடத்தப் பட்ட 15 மணி நேர தொடர் ப்ரோகிராமிங் போட்டியான ஹாக்கத்தானையும் கூகுளில் இருந்தவாரே மோடி பார்வையிட்டார். அது இந்தியாவின் நாஸ்காம் மற்றும் இந்திய நிறுவனங்களின் உதவியுடன் நோய்டாவில் உள்ள டெக் மஹிந்திராவில் நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஒவ்வொரு தலைவர்களிடமும் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தொடர்ந்து இந்தியாவில் தொழில் தொடங்குவதில் இருக்கும் தேவையற்ற அனைத்து சிவப்பு நாடா கட்டுப்பாடுகளும் நீக்கப் படும் என்றும் நாடு முழுவதும் தொலைத் தொடர்பு கட்டுமானங்கள் அசுர வேகத்தில் ஏற்படுத்தப் படும் என்றும் உறுதியளித்தார். அனைவரையும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் இண்டியா திட்டதிற்கும் அனைத்து விதமான ஆதரவுகளையும் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தான் இந்தியாவின் சாலைகள், துறைமுகங்கள், சுகாதார, கல்வி, போக்குவரத்துக் கட்டுமானங்களை அதிகரிக்கும் அதே ஆர்வத்துடனும் வேகத்துடனும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டுமானங்களையும் அதிகரித்து வருவதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் மாலையில் அவருக்கு கலிஃபோர்னியா வாழ் இந்தியர்களினால் அளிக்கப் பட்ட மாபெரும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

(தொடரும்)

6 Replies to “மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2”

  1. மணியன் மற்றும் பரணீதரன் பயணக் கட்டுரைகளை விட அதிக வேகமாகவும் விறு விறுப்புடனும் உள்ளது. தொடருங்கள். நன்றி

  2. உண்மையிலேயே தமிழ் ஹிந்து கட்டுரைகளை படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அறிவுபுகட்டும் உண்மை செய்திகள் எல்லா இந்திய மக்களுக்கும் ஏன், உலக மக்களுக்கும் சென்றடையவேண்டும். வழி செய்யுங்கள். – ஞானம்

  3. திருமலை அவர்களின் இந்தக்கட்டுரைத்தொடர் மிக அருமை. இரண்டு பகுதிகளையும் நிதானமாக வாசித்தேன். ஸ்ரீ நமோஜியின் முன்னேற்ற முயற்சிகள். அவரால் அயல் நாடுகளில் வாழும் நம்மவர்கள் பெற்றுள்ள உத்வேகம் நம் கண் முன்னே நிற்கிறது. மனம் நெகிழ்கிறது. திருமலை அவர்களுக்குப் பாராட்டுக்கள். அடுத்தப்பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  4. பாரதத்தின் எழுச்சி கண்முண்ணே நடக்கிறது. இன்னும் தூங்குவது போல நடிப்பவர்களை ஒழித்துவிட்டுத் தான் முன்னேற வேண்டும்.
    வாழ்க ஹிந்துஸ்தானம் .

  5. very excellent.. i would like to send this article to my friends circle who cannot read tamil. Please send the translation of this 4 articles in English if possible..

  6. ///கடந்த 15 வருடங்களாக நான் மிகச் சரியான ஒரு தலைவனையே ஆதரித்து வந்துள்ளேன் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்./// ஏனோ கண்களை கண்ணீர் மறைக்கிறது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *