இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது

மூலம்: துஃபாயில் அகமது ஸ்வராஜ்யா தளத்தில் எழுதிய கட்டுரை
தமிழில்: ஜடாயு

“செய்தி ஊடக நிறுவனங்களின் அறைகளிலிருந்து பாசிசம் பீறிட்டுக் கொண்டிருப்பதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. தான் வெற்றியடைவதற்காக நம்மைப் பிளவுபடுத்துகின்ற, சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த கருத்துக்களின் பரவல் தான் இது (a movement of totalitarian ideas)” என்று ‘தைனிக் ஜாகரண்’ ஹிந்தி நாளிதழில் சமீபத்தில் தான் (அக்டோபர்-15) இந்தக் கட்டுரையாசிரியன் எழுதினான்.

“எல்லா மக்களும் அறிவுஜீவிகள் தான். ஆனால் அறிவுஜீவிகளுக்கான பணிகளை…. எல்லா மக்களும் செய்வதில்லை” என்கிறார் இத்தாலிய மார்க்சியர் அன்டோனியா கிராம்ஷி. பத்திரிகையாளர்கள், செயல்வீரர்கள், ட்விட்டரில் எழுதுபவர்கள் எல்லாருமே கிராம்ஷிய வரையறைப் படி அறிவுஜீவிகள் தான். ‘பாசிசம்’ என்ற கொள்கை இத்தாலிக்கே உரித்தான ஒன்று, ஆனால் சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த கருத்துக்களின் பரவல் என்ற வகையில் தற்போதைய இந்திய நிலைமையை விளக்குவதற்கும் அது பொருத்தமானதாக இருக்கிறது.

1. எந்த சமுதாயத்திலும் பாசிசம் கல்வி கற்ற வர்க்கத்தினரிடமிருந்தே வெளிப்படுகிறது, பொதுஜனங்களிடமிருந்து ஒருபோதும் அது வெளிப்படுவதில்லை. பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கத்தை எதிர்த்துக் கூக்குரல் இடுபவர்கள் அனைவரும் நல்ல உயர்கல்வி கற்றவர்கள்.

கல்வி கற்ற வர்க்கத்தினரின் இந்த பாசிசம் புதிய கருத்தாக்கங்களை அஞ்சுகிறது. The Road to Serfdom நூலின் ஆசிரியர் ஃப்ரீட்ரிஹ் ஹாயெக் (F. A. Hayek) எழுதுகிறார் – “அறிவுஜீவுகளை மிகத் தெளிவாக அடையாளப் படுத்தக்கூடிய தன்மை என்னவென்றால், புதிய கருத்தாக்கங்களை அவற்றின் தரத்தையும் தகுதியையும் வைத்து அல்ல, மாறாக தங்களது பொதுவான கோட்பாடுகளில் அவை எந்த அளவுக்குப் பொருந்தும் என்பதை வைத்தே அவர்கள் மதிப்பிடுவார்கள்”.

மோதி புதிய கருத்தாக்கங்களை முன்னெடுக்கிறார். எனவே இயல்பாகவே பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் அச்சுறுத்தப் பட்டதாக உணர்கிறார்கள்.

2. பாசிச வெளிப்பாட்டாளர்கள் ஊடகங்களின் செயல்பாடுகளைக் குறித்து மிகவும் கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் இருப்பார்கள் (ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ நூல் மையமாக இதைத் தான் பேசுகிறது). தன்மீது கருப்பு மைவீச வந்தவரிடமிருந்து விலகித் தப்ப முயன்றதை யோக குரு பாபா ராம்தேவ் சாதாரணமாக சொல்வார். ஆனால், சுதீந்திர குல்கர்ணி என்ன செய்வார்? அவரது முகத்தை சிவசேனாக் காரர்கள் முழுக்க மை பூசுவதற்காகக் காண்பிப்பார். எவ்வளவு கருப்பாகிறதோ அவ்வளவு நல்லது. எல்லா டிவி சேனல்காரர்களும் வருவதற்காகக் காத்திருப்பார். பிறகு சம்பிரமமாக அதே கோலத்துடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கஸுரியை வரவேற்கச் செல்வார், கஸுரியின் புத்தகத்தை மும்பையில் வெளியிடுவார். ஆனால் இதே ஆசாமி, நோபல் பரிசுபெற்ற மாணவி மலாலா யூசுஃப்சாயின் புத்தகத்தை அவளது பிறந்தகத்தில் (ஆப்கானிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு) வெளியிட மாட்டார். புத்தக வெளியீடுகளை எங்கு நடத்த வேண்டும், நடத்தக் கூடாது என்பதைப் பற்றிய “தெளிவு” அவருக்கு நிறையவே உண்டு.

Modi with Officials3. தேசத்தின் பிரபல வாரிசு அரசியல் குடும்பம் மற்றும் பெருவணிக நிறுவனங்களின் முழு ஆதரவுடன் தான் இந்தியாவின் செய்தி ஊடக அறைகளிலிருந்து பீறிடும் இந்த பாசிசம் இயங்குகிறது. இந்தியாவின் ஊடக நிறுவனங்கள் ஏற்கனவே புரோகிராம் செய்யப் பட்டவை. கூலி வாங்கிக் கொண்டு செயல்படும் இந்த மையநீரோட்ட ஊடகங்கள் (mainstream media) எந்த ஊதியமும் கட்டுப்பாடுகளும் இன்றி (இணையத்தில்) இயங்கும் சமூக ஊடகங்கள் மீது ஆக்ரோஷத்துடன் பாய்வது பாசிசம் அல்லாமல் வேறென்ன? உறுதியான தகவல்களையும் வாதங்களையும் வைத்து டிவிட்டர் முதலான சமூக ஊடகங்களில் தங்களை மடக்குபவர்களை எல்லாம் “ஆர் எஸ் எஸ் வெறியர்கள்” என்று சகட்டுமேனிக்கு அழைக்கிறார்கள் இந்தியப் பத்திரிகையாளர்கள். மேற்கில், உண்மை உரைத்து வாதிடும் தரப்புகளை யூத வெறியர்கள் என்று ஒரு சாரார் வழக்கமாக வசைபாடுவது போல.

4. ஜனநாயகத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாசிசத்திற்கு பெனிட்டோ முசோலினி போன்ற தலைவர்களின் தேவையிருந்தது. அவர்கள் தங்கள் ராணுவத்தை அணிவகுத்து தங்கள் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. ஆனால், ஜனநாயக நாடுகளில், ராணுவம் ஒரு மக்கள் சேவை அமைப்பாகவும், வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையிலும் உள்ளது. எனவே, பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இப்போதும் கூட, தாத்ரி படுகொலையிலிருந்து உத்திரப் பிரதேசத்தின் சோஷலிஸ்ட் தலைவர்களுக்கும், இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் குரூர படுகொலையிலிருந்து கேரளாவின் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் அது பாதுகாப்புக் கவசம் அளிக்கிறது. இந்த விஷயங்களில் அதன் ஒட்டுமொத்த கள்ள மௌனம் என்பதே படுகொலை செய்ததற்கு நிகரானது தான்.

4. பாசிசம், எப்போதுமே ஜனநாயக விரோதமானது. பொதுமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த தலைவர்கள் தங்களது கூட்டாளிகளாக இல்லாத பட்சத்தில் அவர்களை அது மூர்க்கமாக எதிர்க்கிறது. இந்திய சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர்களில் உயர்கல்வி கற்றவர்களாக அறிவுஜீவிகளாக இல்லாதவர்களைத் திட்டமிட்டு குறிவைப்பதன் மூலம் பத்திரிகையாளர்கள் இந்திய சமூகத்தில் பாசிசத்தின் மேலதிக பரவலுக்கு உதவி புரிகிறார்கள். நிருபமா சுப்ரமணியன் என்ற பத்திரிகையாளர், ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் என்ற பட்டிக் காட்டுக் காரரிடம் தான் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து கருத்து கேட்பார். ஒருபோதும் கவனத்துடனும் தளுக்காகவும் பேசும் அருண் ஜெட்லியைக் கேட்க மாட்டார். அதைவிட மோசமாக, கிராமத்து முச்சந்தியில் போய் நின்று, வெள்ளந்தியான அந்த மக்கள் கூட்டத்திடம் மாட்டிறைச்சி பற்றி கருத்து கேட்டு அதை ஊடகம் முழுவதும் பரப்புவார். அப்பொழுது தானே ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை வலிமையிழக்கச் செய்ய வேண்டும் என்ற பாசிசத்தின் நோக்கத்திற்கு அது உதவும் !

6. மக்களின் நலன்களுக்காகவே செயல்படுவதாக எப்போதும் தன்னை பாசிசம் முன்னிறுத்திக் கொள்ளும். வடகொரியாவில் ‘ஜனநாயகக் குடியரசு’ என்றும், சீனாவில், “மக்கள் குடியரசு” என்றும், கியூபாவில் தன்னையே இலட்சியக் குடியரசுக்கான இலக்கணமாகவும் அழைத்துக் கொள்ளும். ஆனால், இவை அனைத்தும் அடிப்படையில் கொடுமையான சர்வாதிகார ஆட்சிமுறைகளே. உண்மையில், பாசிசம் ஒருபோதும் மக்களின் நலன்களுக்காக செயல்படுவதில்லை. பத்திரிகையாளர்களின் உதவியுடன் பொதுத்தளங்களில் ஆவேசங்களையும் சீற்றங்களையும் அது கொழுந்து விட்டெரியச் செய்கிறது. பொது மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக மோதிக் கொண்டிருப்பது தான் அதனால் ஏற்படும் விளைவு. இப்போது என்ன நடக்கிறது? இந்தியாவின் அதிகாரவாத, வாரிசு அரசியல்வாத காங்கிரஸ் கட்சி பரிந்து பாதுகாக்கப் படுகிறது. அதைச் செய்பவர்கள் அக்கட்சியின் தலைவர்கள் அல்ல, பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும்! எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்து வென்று விடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.

7. முகமது அக்லக் கொலை, பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம்.கல்பர்கி கொலை ஆகிய விவகாரங்களில் அரசுக்கு நெறிமுறைகளை போதனை செய்யும் நீதிமான்கள் போல பத்திரிகையாளர்கள் பாவனை செய்கிறார்கள். இதை உண்மையான சமூக அக்கறை என்று கூறலாம் தான். ஆனால், இதே நீதிமான்கள் ஹைதராபாத்தில் தஸ்லீமா நஸ்-ரீன் தாக்கப்படும் போதோ, பேராசிரியர் டி.ஜே.ஜோசஃபின் கைகள் வெட்டப் படும் பொழுதோ, சீர்திருத்தவாதியான இஸ்லாமிய அறிஞர் சேகண்ணூர் மௌல்வி (Chekannur P. K. Mohammed Abdul Hassan Maulavi) கேரளத்தின் இஸ்லாமிஸ்டுகளால் கொல்லப் படும்போதோ கனத்த மௌனம் காத்தவர்கள். ஜனநாயக நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்வதும், கேஜ்ரிவால் போன்ற கலகவாதிகளை (anarchist) ஆதரிப்பதும் இந்த பாசிசவாதிகளின் பாணி.

8. தனது கருத்தியலுக்கு ஒவ்வாத தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும்போது, இந்த பாசிசம் பெரிய அளவிலான சகிப்பின்மையாக வடிவெடுக்கிறது. தொலைக்காட்சி ஸ்டுடியோக்களிலிருந்து பெருகி வழிகிறது. வாக்களிப்பை எப்போதும் அது அஞ்சுகிறது. தேர்தல்களுக்கு முன்பு, தனது நோக்கங்களுக்கு உதவக் கூடிய புதிய பிரசினைகள் ஏதேனும் கிடைக்குமா என்று அது தேடுகிறது. நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலம் தான் வென்றுவிடலாம் என்று அது நினைக்கிறது. பாதிக்கப் பட்டவர் முஸ்லிம் என்னும்போது மட்டுமே சட்டமீறலாக வீதி வன்முறை செய்யும் அராஜக கும்பல்கள் பிரசினைக்குரியவையாகின்றன, மற்ற நேரங்களில் அல்ல. ஃபரிதாபாதில் தீ விபத்தில் கருகி இரண்டு குழந்தைகள் மாண்டது, ‘தலித்கள் மீதான தாக்குதல்’ என்று திட்டமிட்டு பத்திரிகையாளர்களால் செய்தியாக பரப்பப் படுகிறது. சோட்டா ராஜனை ‘ஹிந்து ரவுடி’ என்று ஏ.பி.பி. செய்திக் குழுமம் குறிப்பிடுகிறது, ஆனால் நக்சலைட் கைது செய்யப் படும்போது, இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் “குருட்டுத் தனமானவை” (draconian) என பத்திரிகையாளர்களால் வர்ணிக்கப் படுகிறது.

fascism9. சோவியத் ரஷ்யாவின் அழிவுக்குப் பிறகு, பாசிசம் கொடூர சக்திகளுடன் வெளிப்படையாக கைகோர்க்கிறது. உலகளவில், இடதுசாரி லிபரல் பத்திரிகையாளர்கள், ஜிகாதிகளுடன் பாசப்பிணைப்பில் இருக்கிறார்கள். இந்தியப் பத்திரிகையாளர்கள் பொதுவாழ்வில் பர்தாவின் தீவிர பரவல் குறித்தோ, பெண்களுக்கு எதிரான ஷாபானு சட்டம் குறித்தோ மௌனம் சாதிக்கிறார்கள். ஏனென்றால், இதெல்லாம் அவர்களது கட்சியின் நிலைப்பாடுகள் என்பதால். ஒரு பத்திரிகை, ராணுவம் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்வதாக திடீரென்று செய்தி வெளியிடுகிறது (பத்திரிகை ஆசிரியரின் ஆசை அதுதான் போலும்). 1975 நெருக்கடி நிலையின் போது பெரும்பாலான பத்திரிகையாளர்கள், அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே இருந்தார்கள். (நெருக்கடி நிலையை ஆதரித்த) குஷ்வந்த் சிங் வானளாவப் புகழப் பட்டார். தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கு ஆதரவாகவே சல்மான் ரஷ்டியும் பேசுகிறார் என்பதற்கு கருத்தியல் சார்பு என்பதைத் தாண்டி, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

10. பாசிசத்திற்கு தேச எதிரிகளுடன் கூட்டணியை நாடுவதில் தயக்கமே இருப்பதில்லை. மலாலா யூசுஃப்சாய் என்ற புகழ்பெற்ற கல்விச் சாதனையாளரை அது மும்பைக்கு ஒருபொழுதும் வரவேற்காது, பாகிஸ்தானில் உள்ள அதன் கூட்டாளிகள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால். பாகிஸ்தானிய அரசுப் பிரதிநிதிகள், மௌலானா தஹிருல் காதிரி போன்றவர்கள், நிழலுலக கடத்தல்காரர்கள் அல்லது கடும் எதிரியான பர்வேஸ் முஷரஃப் – இப்படிப் பட்டவர்களுடன் தான் அது சகஜமாக உணரும். இந்திய முஸ்லிம்களின் நலனை அது ஆதரிக்காது. கறுப்பு பர்தா, மூன்று தலாக் விவாகரத்து, இஸ்லாமியத் தொப்பி போன்ற அடிப்படைவாத சமாசாரங்களைத் தான் ஆதரிக்கும். குறிப்பாக, முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை கோரும் எல்லா இஸ்லாமிய சிந்தனையாளர்களையும் அது வெறுத்து ஒதுக்கும். கடும்போக்கு கொண்ட மௌல்விகள் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களுக்குப் பிடித்தமானவர்கள் என்பது தற்செயல் அல்ல.

11. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள், அப்படிப் பட்டவர்கள் வாங்கிய விருதுகள் திருப்பியளிக்கப் படுகின்றன. “ஒரு மனிதன் வரலாற்றை உருவாக்குவது என்பது சில குறிப்பிட்ட சூழல்கள் நேரும்போது சாத்தியமாகிறது” என்றார் கார்ல் மார்க்ஸ். தேசத்தின் நலனையோ அல்லது நடுச்சாலையில் அரைநிர்வாணத்துடன் சில காசுகளுக்காக கையேந்தி நிற்கும் தேசத்தின் ஏழை மகளின் நலனையோ அல்ல, தங்கள் சுயலாப நலன்களை மட்டுமே இந்த பாசிச வர்க்கத்தின் பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதை இந்திய வாக்காளர்கள் கவனித்தார்கள். அதனால் தான், (இவர்களது எல்லா பிரசாரங்களையும் மீறி) மோதி வெற்றி பெற்றார்.

12. “அறிவுஜீவிகள் என்பவர்கள் கருத்துக்களை இரண்டாந்தரமாக கடன்வாங்கி புழங்குபவர்கள்” என்று ஹயேக் வாதிடுகிறார். மோதி, அசலான கருத்தாக்கங்களை, முதல்தரமாக புழங்குபவராக இருக்கிறார். பொருளாதார சுதந்திரமே மற்ற எல்லா சுதந்திரங்களுக்கும் அடிப்படையானது என்ற ஹாயெக்கின் கொள்கையை அவர் சரியாக உள்வாங்கியிருக்கிறார். ஆனால், இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய வாக்காளர்களின் தீர்ப்பை சகிப்புத்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார்கள். பத்திரிகையாளர்களின் துணையுடன், டிவி ஸ்டுடியோக்களிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். ஜனநாயகம் உண்மையிலேயே முதிர்ச்சியடையும் போது இந்த வகையான அறிவுஜீவிகள் அழிவார்கள். தங்களுக்கான புதிய தார்மீக வெளியைத் தேடிக் கண்டடைவதே தரையில் விழுந்து விட்ட இந்த மீன்களுக்கு இனி ஒரே வழி.

(கட்டுரையாசிரியர் துஃபாயில் அகமது (Tufail Ahmed) பீகாரில் பிறந்து வளர்ந்து, பிரிட்டனில் பத்திரிகையாளப் பணியாற்றியவர். தற்போது அமெரிக்காவிலிருந்து இயங்கும் MEMRI (Middle East Media Research Institute) என்ற ஆய்வு மையத்தில் தெற்காசியா குறித்த ஆய்வுகளின் இயக்குனராக இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்தியக் கிழக்கு நாடுகள் ஆகியவற்றின் அரசியல், சமூக நிலவரங்கள் குறித்து தொடர்ந்து ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதி வருகிறார். ஜிகாதி தீவிரவாதத்தின் பரவல் குறித்து விரிவான ஆய்வுகளையும் செய்திருக்கிறார்).

துஃபாயில் அகமது எழுதிய கீழ்க்கண்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு திண்ணை இதழில் வெளியாகியுள்ளது. முழுக்கட்டுரை இங்கே.

இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

“இடதுசாரிச் செயல்வீரர்களில் பெரும்பாலானோர் நகர அபார்ட்மெண்ட்களில் உட்கார்ந்துகொண்டு தங்கள் பேனா முனைகளிலிருந்து ரத்தம் பொங்குவதை பார்க்க சந்தோஷப்படுபவர்கள். சிலர் மாறி பேராசிரியர்களாக ஆவார்கள், அல்லது வெள்ளைக்கார பேராசிரியரை திருமணம் செய்து வெளிநாட்டுக்கு இடம் பெயர்வார்கள்….

அவர்களது மதச் சார்பற்ற கட்சி ஆட்சியில் இருந்த வரைக்கும், மேத்தா, அமார்த்யா சென் போன்ற அறிவுஜீவிகள் தேசத்தின் பிரச்னையாக வறுமையை முன்னுக்கு வைத்ததில்லை. இப்போது முதன்முறையாக ஒரு தேனீர் விற்பவர் உயர்ந்த பதவிக்கு சென்றிருக்கிறார். ஆனால், மோடியின் முதன்மை முக்கியமாக கழிப்பிடங்களை கட்டுவதையும், நமது சாலைகளை சுத்தம் செய்வதையும், திறன் மேம்பாட்டையும் வைக்கும்போது, அதாவது நீண்டகால நல்ல விளைவை உருவாக்கக்கூடிய அடிப்படையான சீர்திருத்தங்களை முன்வைக்கும்போது, மேத்தாவின் கும்பல் நமது ஊடகங்களில் சங்கடப்படுகிறது….

இந்த வரலாற்று திருப்புமுனையில், ஜனநாயகம் காங்கிரஸின் வம்சாவளி அரசியலை அழித்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பிஜேபியை ஒரு அனைவரையும் உள்ளடக்கிய கட்சியாக ஆக்க மோடி கடுமையாக உழைக்கிறார் என்பது மிக மிகத் தெளிவானது….”

9 Replies to “இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது”

 1. ……..AND One More….
  ‘மூடிஸ் அறிக்கை பித்தலாட்டம்’: மத்திய அரசு

  பிரதமர் மோடி குறித்து, அண்மையில், ‘மூடிஸ் அனலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் வெளியான அறிக்கை, ஒரு சாதாரண ஊழியரின் கைவரிசை என்ற, ‘பகீர்’ தகவல் வெளியாகியுள்ளது.

  பா.ஜ.,வினரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை, பிரதமர் மோடி கட்டுப்படுத்த தவறினால், அவர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நம்பகத் தன்மையை இழப்பார் என, மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

  இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை இணை பொருளாதார ஆய்வாளராக, பராஸ் சையத் என்பவர் உள்ளார். இவர், மோடி குறித்த தன் கருத்தை, மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் பெயரில் வெளியிட்டுள்ளார். அதை இந்திய ஊடகங்களும், ஆராயாமல் வெளியிட்டுள்ளன. மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனம், வெறும் தகவல் தொகுப்பு சேவையை செய்கிறது. மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனம் தான், தர நிர்ணய பணியை மேற்கொள்கிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வாசகர்களுக்கு தெரிவிக்காமல், பன்னாட்டு தர நிர்ணய நிறுவனம் கூறியதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 2. திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல், சமீபத்தில் நடைபெற்றது. அதன் ஓட்டு எண்ணிக்கை இன்று (07ம் தேதி) நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் பகுதியில் உள்ள 30 வார்டுகளில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. கேரள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ. இந்தமுறை தான் அதிக இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 3. கேரளா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல்களில் முக்கிய விஷயம் என்ன என்பதை மூடி மறைக்கின்றது இந்திய சிக்குலர் வியாதி மீடியா. பாரதீய ஜனதா ஏறக்குறைய 15 சதவீத வாக்குக்களை வாங்கி , காங்கிரசின் வாக்கு வங்கியிலும் , கம்யூனிஸ்டுகளின் வாக்குவங்கியிலும் ஓட்டை போட்டுவிட்டது. அதன் விளைவாக தான் ,
  திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. மேலும் சென்ற 2010- உள்ளாட்சி தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்ற பல தொகுதிகளில் பாஜக ஓட்டை பிரித்ததால், குறைவான ஓட்டை பெற்றும் கூட கம்யூனிஸ்ட்கள் காங்கிரசின் இடங்களை கைப்பற்றிவிட்டனர். இதுதான் உண்மை. கேரளாவில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை தெரிவிக்கும் விஷயம் இதுதான்- கம்யூனிஸ்டும், காங்கிரசும் தங்களது வாக்குகளை இழந்துள்ளன. முதல் முறையாக பாஜக கேரளாவில் ஒரு நகராட்சியில் ஆட்சியை பிடித்துள்ளது.. அது பாலக்காடு நகராட்சி.

  மேலும் கேரளத்தலை நகரான திருவனந்த புறத்தில் பாஜக 34 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

  இனியும் வரும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரசின் வாக்கும் , கம்யூனிஸ்டுகளின் வாக்கும் குறைந்து அடுத்த 2016- சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அதிக எம் எல் ஏக்கள் கிடைக்க விருக்கிறார்கள். இதுவரை சட்டசபையில் உறுப்பினரே இல்லாத பாஜகவுக்கு ஒரு 25 எம் எல் ஏ கிடைத்தாலும் அது பெரிய வெற்றிதான். கேரளத்தில் பாஜக காலூன்றிவிட்டது. தொடர்ந்து மேலும் பல வெற்றிகளை வருங்காலத்தில் குவிக்கும்.

 4. BJP இன் வெற்றி எப்படி இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் AIADMK , தி மு க ஒன்று சேர்ந்து 180 இடங்களில் வெற்றி பெற்று (அதுவும் தி மு க 100, AIADMK 90) AIADMK ஆட்சி அமைக்கட்டும் என்று சொல்லி அதை “சகிப்புதன்மை” உள்ள டிவி பேச்சு பெருமக்கள் கூவு கூவு என்று கூவவேண்டும் . நடக்குமா ?

 5. நான் type பண்ணும் இந்த நேரம் வரை complete ரிசல்ட் வரவில்லை (லீடிங் tag இன்னும் மறையவில்லை) அனால் விகடனின் இந்த கட்டுரை வியப்பில் ஆழ்த்துகின்றது .
  https://www.vikatan.com/news/article.php?aid=54842

  பீகார் மக்களை விட விகடன் நிருபர்கள் படு புத்திசாலிகள் .

 6. இனி ஒரு ஒரு மாநில வெற்றியிலும் , எங்கோ ஒரு NON BJP மாநிலத்தில் ஒரு இளவு விழும் அதில் விசாரணை எல்லாம் TV, சகிப்புதன்மை பெருமக்கள் நடத்துவார்கள் , உண்மை மறைக்கப்படும் . FORD foundation மாமனிதர்கள் , டாக்ஸ் சீட்டிங் மேதைகள் எல்லாம் உதர்மர்களாக வலம்வந்து , மெகா கூட்டணி என்று ஒரு கலவை போட்டு வெற்றி பெறுவார்கள் . இதுதான் இனி அடுத்த 50 வருட இந்தியாவின் தலை எழுத்தாக இருக்கபோகின்றது .

 7. என்ன சொன்னாலும் பீஹாரில் லல்லு, நிதீஷ் கூட்டணியின் முன்னால் மோடி மந்திரம் பலிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

  2010-ல் 91 இடங்கள் வென்றவர்களால் இப்போது 53 இடங்கள்தானே வெல்ல முடிந்திருக்கிறது ?

  என்னதான் இதனால் மோடிக்கோ மோடி அரசுக்கோ எந்த பாதகமும் இப்போதைக்கு இல்லை என்றாலும், மாட்டிறைச்சி விஷயத்தில் எல்லை மீறி சட்டவிரோதமாக உளறிய (பலாத்காரம் செய்வோம், தலையை வெட்டுவோம் …) உள்ளிருந்தே கொல்லும் நச்சுக்களை களையெடுக்கவில்லையென்றால், அடுத்த தேர்தலில் மோடியை மண்கவ்வ வைக்க காங்கிரஸோ லாலுவோ, நித்தீஷோ எதுவும் செய்ய வேண்டியதில்லை, அதை செவ்வனே இவர்களே நிறைவேற்றிக்காட்டுவார்கள்.

 8. //2010-ல் 91 இடங்கள் வென்றவர்களால் இப்போது 53 இடங்கள்தானே வெல்ல முடிந்திருக்கிறது ?///
  இது நிதிஷ் க்கும் பொருந்தும்தான . அவர் என்ன ஆகா ஓகோ என்றா என்று விட்டார் ஆனாலும் மீடியா பாருங்கள் என்ன ஒரு பில்ட் up . லல்லு என்றா பாம்புக்கு பால் வார்த்து இர்ருகினார்கள் , பொருத்து இருந்து பாருங்கள் .

 9. லா லு ஒரே நாளில் கிங் மேக்கர் ஆகிவிட்டார். தீவன ஊழல் புகழ் ரட்சகர் ஆகிவிட்டார்.
  நிடிஷ் குமார் மனித புனிதர் லாலுவின் சொற்படி ஆட வேண்டும் என்பது விதி. லாலுவின் குடும்ப ஆட்சி நிதிஷ்குமாரின் பெயரில் நடைபெறும். நமது மதக் சார்பற்ற ஊடகங்கள் என்ன செய்யபோகின்றன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *