வீடுபெற நில்!

ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள். crowd1

   “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே!

   “என்னத்தைங்க சொல்லறது?  பொழுதுபோய் போழுதுவந்தால் இங்கே வந்து நாம பேசறோம்.  அலுத்துக்கறோம்.  வேற என்னாங்க சொல்றது!” அலுத்துக்கொண்டார் ஸ்ரீநிவாஸ்.

   “அண்ணாச்சி, ஏன் அலுத்துக்கறீக?  இங்கே வந்து பேசுனாத்தானே வீட்ட ஒழுங்கா வச்சுக்கத் தாவலை!”  என்றார் அப்துல்லா.

   “நீங்க சொல்றது சரித்தான் பாய்!  ஆனா, வீட்டை ஒழுங்கா வச்சுகனுமின்னு புது வீட்டைக் கட்டாம இருக்காகளே!  அப்படி இருந்தா புள்ள குட்டிகளுக்குக் குடி இருக்க வீடு கிடைக்குமா?” என்று தன்பங்கு குறையைச் சொன்னார் தேவநாயகம்.

   “ஏங்க, வாடகை வீடு கிடைக்காதா?”  என்று அப்பாவித்தனமாக ஒலித்தது ஒரு இளம் குரல்.

அனைவரும் தலையைத் திருப்பிப் பார்த்தால், சுரேஷ் என்ற ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.  அவன் முகத்தைக்கண்ட அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

   “நீ எங்கே இங்கே வந்தே?”  ஒருமித்த குரல் எழுந்தது.boy

   “நானும் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரன்தானே!  கேள்வி கேட்கக்கூடாதா?” மழலை துள்ளி விளையாடியது.

   “ஆமாம், இவன் எங்கே இங்கே வந்தான்?”  ஒரு முணுமுணுப்பு எழுந்தது.

   “வரவேண்டிய வேளை வந்தால் வரவேண்டியதுதானே!  கேள்வி கேட்டால் நாமும் பதில் சொல்லவேண்டியதுதானே!” என்று ஸ்ரீநிவாஸ் சொல்லிவிட்டுத் திரும்பிப்பார்த்தால், சுரேஷ் மாயமாக மறைந்துவிட்டிருந்தான்.

    “எங்கே போயிட்டான் இந்தப் பிள்ளையாண்டான்?  கேள்வி கேக்கவேண்டியது, அப்பறம் பதில் சொல்லறதுக்குள்ள ஓடிப்போயிடவேண்டியது!”  அம்புஜம் மாமியின் குரலில் எரிச்சல் இருந்தது.

   “விட்டுத்தள்ளுவீகளா மாமி.  சின்னப்புள்ள, புதுவீடு, அதுதான் அடிக்கடி ஓடிப்போகுது.” என்றார் அப்துல்லா.

   “ஆமாம்.  விட்டுத் தள்ளுங்க!”  என்று அப்துல்லா சொல்வதை ஆமோதித்தார் தேவநாயகம்.

   “சொல்லுங்க, ஏன் வாடகை வீட்டுல இருக்கக் கூடாது?”

   மீண்டும் அதே குரல், சுரேஷ்தான்!

   “சுரேஷ் கண்ணா.  ரூல் அப்படித்தாண்டா!  எல்லோரும் சொந்த வீட்டில இருக்கணும்தானே சட்டம்!  அதை நாம எப்படி மாத்தமுடியும்?” புதுக் குரல் ஒலித்தது. சுரேஷின் அம்மா சரஸ்வதியுடையதுதான் அது.

   “சரிம்மா!”  பழயபடியும் மறைந்துவிட்டான் சுரேஷ்.

   தூரத்தில் கூக்குரல் ஒலித்தது.  அனைவரும் அப்பக்கம் திரும்பினார்கள்.  நூற்றுக்கணக்கான பேர்கள் – உருவம்கூடச் சரியாகத் தெரியாத தூரத்தில் நின்றுகொண்டு – கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தார்கள்.

    “யாருங்க அவங்க?  ஏன் இப்படிக் கத்தறாங்க?”  காமாட்சி கேட்டாள்.

   தொண்டையைச் செருமிக்கொண்டார், புதிதாக உள்ளே நுழைந்த வரதராஜுலு.

   “அவங்கல்லாம் வீடு இல்லாதவங்க!  புதுசா வீடு கிடைச்சாத்தானே குடிபோகமுடியும்?  அதுதான் இங்கே நிக்கறாங்க!”

   அவர்கள் பார்க்கப்பார்க்க, வீடில்லாதவர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போவதாக அவர்களுத் தோmamiன்றியது.

   “ஏன் அவா கும்பல் ஜாஸ்தியாப் போயிண்டே இருக்கு?” அம்புஜம் மாமி குரல் ஒலித்தது.

   “இப்பத்தான் புத்சா வூடு கட்றது கொறஞ்சு பூட்டுதே மாமி!  தெரியாத்த மாறி கேக்குறே!”  பின்னால் இருந்த முனியாண்டி உரக்கக் கத்தினான்.

   “எல்லாம் சோம்பேறித்தனம், சொயநலமுங்க!  தங்களோட வீட்டை நல்லாப் பாத்துக்கணும்னு புதுவீடு கட்டமாடேங்கராணுவ!  ஆனாப்பாருங்க, நான் நாலு வீடு கட்டினேனுங்க!”  என்றார் அப்துல்லா.

   “உங்கமாதிரி இருக்கறவங்க கொஞ்சப்பேருதானுங்க.”  இது ஸ்ரீநிவாஸ்.

  “எங்க தாத்தா பத்து வீடு கட்டினார்.  எங்க அப்பா அஞ்சு கட்டினார்.  நானும் எங்களவரும் ரெண்டுதான் கட்டினோம்.”  அன்புஜம் மாமி கணக்குச் சொன்னாள்.

   “எனக்கும் ரெண்டு வீடுதாங்க.”  தேவநாயகம் செய்ந்து கொண்டார்.

   “அந்தக்காலத்துல நிறைய வீடு கட்டணும்கற ஆசை இருந்துது.  கட்டினாங்க.  சரியாப் பராமரிக்க வசதி இல்லை.  அதுனால எல்லா வீடும் ஸ்ட்ராங்கா இல்லை.  ஒரு சிலதான் நிலைச்சு நின்னுது.  இப்ப அப்படியா? நம்ம வீட்டையும், நாம கட்டின வீட்டையும் நிறையநாள் இருக்கும்படி பாத்துக்கறோம்.  அதுனால ரெண்டு வீடுக்குமேல கட்ட வசதி இல்லாமபோறது.”  ஸ்ரீநிவாஸ் விளக்கம் கொடுக்க முனைந்தார்.

   “அதோட மட்டுமில்லீங்க.  கலியாணம் ஆனவங்கதான் வீடுகட்டலாம்னு வேற சொல்றாங்க. போறாததுக்கு, பொறக்கற ஒரொரு குழந்தைக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுக்கணும்னும் ரூல் போட்டாச்சு.” காமாட்சி தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.

   “இது பிற்போக்குத்தனம்.  திருமணம் செய்துகொண்டுதான் வீடுகட்டவேண்டுமா?  இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான, பகுத்தறிவுக்கு ஒப்பாத சட்டதிட்டங்களால்தான் நாடு முன்னேறாமல் நிற்கிறது.  மேலைநாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் இல்லை.  அதனால்தான் அங்கு வீட்டுப் பற்றாக்குறை இல்லை!”  என்று சிங்கமாக முழங்கினார் சிங்காரவேலர்.

   “அதுசரி, அங்கே ரெண்டுபேர் சேர்ந்து வீட்டைக்கட்ட ஆரம்பிக்கறாங்களாம்.  வேண்டாம்னா இடிச்சுப்போட்டுப் போயிடறாங்களாமே?”  என்று வினவினார் தேவநாயகம்.

   “இங்கிட்டு மட்டும் என்ன வாழுதாம்?  கண்ணாலம் கட்டாம வூட்டைக் கட்ட ஆரம்பிச்சுடறாங்க.  அப்பால, சட்டத்துக்குப் பயந்துகினு இடிச்சுத்தள்ளிடறாங்க.  இன்னும் சிலபேரு கட்டின வூட்டை வுட்டுட்டு ஓடியே போயிடறாங்க.”  முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினான்.

   “இடிக்கறதுக்கு அது பரவயில்லைக!  யாராவது வந்து குடி இருக்கலாமில்ல!”  இது அப்துல்லா.  அதை தேவநாயகமும், ஸ்ரீநிவாசும் ஆமோதித்தார்கள்.

    “அதனால்தான் இந்த மூடத்தனமான, குருட்டுத்தனமான சட்டதிட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும், உடைத்தெறியப்பட வேண்டும் என்கிறேன்.  விரைவிலேயே ஒரு போராட்டமும் நடத்தலாம் என்று இருக்கிறேன்.”  மேடைப்பேச்சுத் தொனியில் மீண்டும் முழங்கினார் சிங்காரவேலர்.

   “ஊரோட ஒத்து வாழவேணும், இல்லையா!  இப்படி எதுக்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்னா எப்படி?  சட்டம் போட்டவங்க இதெல்லாம் தெரியாமலா போட்டிருக்காங்க.  நினைச்சவங்க நினச்சபோதேல்லாம், கண்ட இடத்திலே, ஒரு விதிமுறை இல்லாம விடுகட்டினா அதுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாமா?”  என்று கனிந்த குரலில் கேட்டார் கல்யாணராமன்.

   “ரெண்டுபேர், ரெண்டுபேர்னா, என்னைமாதிரி ரெண்டுசின்னப்பசங்க வீடுகட்டலாமா?”  திடுமென்று அங்கேவந்து குதித்து, கேள்வியைக் கேட்ட சுரேஷ் ஓடியே போய்விட்டான்.

   “என்னது, இந்தக் குழந்தை திடும்திடும்னு வந்து நின்னு, கேள்வியைக் கேட்டுட்டு ஓடியே போயிடறது!” என்று முகத்தை தோளில் இடித்துக்கொண்டாள் அம்புஜம் மாமி.

   “சும்மா குழந்தையைத் திட்டதீங்க, மாமி.  அதுக்கென்ன தெரியும்?  குட்டியும், நாயும் குடிபோன இடத்தை விட்டு வருமா?”  என்று சமாதானம் சொன்னார் வரதராஜூலு.

   “ஆமாம்!  என்னைத் திட்டாதீங்க மாமி.  மாமா, நீங்களே சொல்லுங்க.  என்னைமாதிரிச் சின்னப்பசங்க ஏன் வீடு கட்டுக்கூடாது?”  கல்யாணராமனின் கையைபிடித்து உலுக்கினான் சுரேஷ்.

   “அதுக்கு வயசு வரணும்.  நீ சின்னப்பையன் இல்லையா.  உனக்கு வீடுகட்டத் தெரியாது.” என்று இருக்கும் இடத்திலிருந்தே சுருக்கமாகச் சொன்னார் ஸ்ரீநிவாஸ்.

   “சொல்லித்தந்தா கட்டிடப்போறேன்!”  என்று சிரித்த சுரேஷ், வழக்கப்படி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காணாமல்போய்விட்டான்.

mountaintopதூரத்தில் ஒரு பனிபடர்ந்த மலையின்மேலே கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் எதோ ஒன்று தெரிந்தது.  உருவம் புலப்படாத பலர் அந்த மலையின் மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள்.  சிலர் அங்கிருந்து உருண்டு விழுந்து, கூட்டமாக நின்று கத்திக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.  அவர்களில் பலர் எங்கோ போவதும், அதற்கும் அதிகமானவர் அங்கு வந்து சேர்ந்துகொள்வதுமாக இருந்தது.

   இதை வியப்புடன் பார்த்த சரஸ்வதி, “ஏன் அந்த மலையில் ஏறிப்போகிறார்கள்?  ஏன் உருண்டு விழுகிறார்கள்?” என்று கேட்டாள்.

   “அதுங்களா!  அந்த மலைமேலதாங்க ஒரு பெரிய நகரம் இருக்குது.  அங்கே ரொம்ப வசதியான வீடுக இருக்காப்பல.  தோட்டம், துரவு, மத்த வசதிக்கெல்லாம் கொறச்சலே இல்லீக.  அங்கிட்டு வீடு எத்தன காலமானாலும் அப்படியே புதிசா இருக்குமாங்க.”  என்று சொன்னார் அப்துல்லா.

  “நீங்க போய் பாத்திருக்கீங்களா?”

      இல்லை என்பதுபோல தலையைக் குறுக்கவாட்டில் ஆட்டினார்.

   “நாம் இங்கு வீட்டை எப்படி வைத்துக்கொள்கிறோம் என்று கணக்கு எடுக்கப்படுகிறது.  அதைப் பொறுத்து அங்கு வீடுகள் கொடுக்கப்படுகின்றன.  வீட்டை ஒழுங்காக வைத்துக்கொள்ளாமல் பாழடையவோ, சேதமாகவோவிட்டவர்கள் உருட்டித் தள்ளப்படுகிறார்கள்!”  என்று தனக்குத் தெரிந்ததைத் சொன்னார் தேவநாயகம்.

      “உங்களுக்கு எப்பாடித் தெரியும்?” இந்தமுறையும் கேள்வியை எழுப்பியவர் சிங்காரவேலர்தான்.

   “புஸ்தகத்திலே படிச்சிருக்கேன்.”

   “எந்தப் புத்தகம்?”

   “எங்கிட்ட இருக்கற புத்தகம்.”

   “உங்ககிட்டே இருக்கிறது என்பதால் அது உண்மையா?  அதில் எழுதி இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமா?”  சிங்காரவேலர் அதட்டும் குரலில் கேட்டார்.

   “மாமா, நீங்க எதையும் ஒப்புக்க மாட்டேங்கறீங்களே!  எதை ஒப்புக்குவீங்க?”  பின்னாலிருந்து சுரேஷ் கேட்டது சிங்காரவேலரைத் திடுக்கிடவைத்தது.

   “நான் என் அறிவையும், கண்ணால் காணுவதையும், காதால் கேட்பதையும், தகுந்த சான்றுகளுடன் சொல்வதையும்தான் ஒப்புக்கொள்வேன்.  அதுசரி, நீ என்ன பெரிய மனிதன்மாதிரி என்னைக் கேள்வி கேட்கிறாய்?  உனக்கு எல்லாம் தெரியுமா?”  அவர் குரல் உஷ்ணமாக இருந்தது.  ஒரு சிறுவன் தன்னை மடக்குவது மாதிரி கேள்வி கேட்பதா என்ற எரிச்சலலும், கோபமும் அவர் குரலில் கலந்திருந்தன.

   “தம்பி சரியாத்தானே கேக்குறான்.  நீ ஏன் சாரு சும்மா வெடய்க்கிறே!  யாரு எதைச் சொன்னாலும் நீதான் குறுக்கே வந்து அது சரியில்லே, இது சரியில்லேங்கறே.  நீதான் சொல்லேன், பாப்பம்.  அந்த மலைகப்பால என்னதான் கீது?”  முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினாலும் எல்லோரின் காதிலும் அது ஒலிக்கத்தான் செய்தது.

   “ஆமாம்.  சொல்லுங்க!”  பல குரல்கள் ஒலித்தன.

   “அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது.  நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை.  கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.”  சிங்காரவேலர் தான் சொல்வதுதான் சரி என்பதுபோன்ற திட்டவட்டமான் குரலில் அறிவித்தார்.

   “ஒரு விதத்திலே அப்துல்லா சொன்னதோ, தேவநாயகம் சொன்னதோ சரியாக இருக்கலாம்.  அதுனால, நாம அங்கே என்ன இருக்குன்னு மனசை ஒருநிலைப்படுத்தி யோசித்தால் எல்லாம் விளங்கும்.” என்றார் கல்யாணராமன்.

   ”நீங்க என்ன சொல்றேள்?” என்று கேட்டாள் அம்புஜம் மாமி.

   “நீங்க சொல்றது புதிர்போடறமாதிரி இருக்கு.”  இது சரஸ்வதி.

   “ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார்.  அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையரவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம்.  மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க.  அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம்.” என்று அனைவர் சொன்னதையும் சுருக்கிச் சொன்னார்  வரதராஜுலு.

   “நான் மேலே சொல்றேன்.”  என்று துவங்கினார் ஸ்ரீநிவாஸ்.  “மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது.  அந்தக் கூச்சம் தெரியாம இருக்க ஒரு நல்ல கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கிட்டா அங்கே என்ன இருக்கும்னு தெரியும் இல்லையா?”

   “அது மட்டும் போதுமா?  இங்கேந்து பார்த்தா தெரியற விஷயமா இது?”  சரஸ்வதியிடமிருந்து கேள்வி பிறந்தது.

   “ஒரு பைனாகுலர் இருந்தா…”

   “ஏன்?  நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”  முனியாண்டியின் குரல் காதில் விழுந்த அடுத்தகணமே சுரேஷின் குரல் பெரிதாகக் கேட்டது.

   “பை, பை, அம்மா, மாமா, மாமி, எல்லோருக்கும், பை,பை.  நான் வரேன்.  உங்க எல்லோரோட வீடுகளும் இடிஞ்சுபோயிடுத்து.  பை, பை!”  உற்சாகமாகக் கையை ஆட்டிவிட்டு ஒடி மறைந்தான் சுரேஷ்.

   முனியாண்டி மட்டும் மலையில் ஏறும் கும்பலில் இருந்தான்.  மற்றவர்கள் வீடில்லாமல் கூச்சலிடும் கும்பலில் தாங்கள் இருக்கக் கண்டார்கள்…

nurse…“டாக்டர்!  கார் ஆக்சிடென்ட்லேந்து கொண்டுவந்தவங்கள்ல இந்தப் பையன் சுரேஷ் மட்டும்தான் பிழைச்சுக்கிட்டான்.  அவனுக்கு வைட்டல் சைன்ஸ் போயிட்டுபோயிட்டு வந்துட்டே இருந்திச்சு. நினைவும் வந்துவந்து போயிட்டே இருந்துது.  கண்ணைத் திறந்துட்டான்.  இப்ப அவனது எல்லாம் ஸ்டெடியாக ஆயிடுச்சு.  இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் நார்மல். என்று நர்ஸ் டாக்டரிடம் தொலைபேசியில் சொன்னாள்.

   மத்தவங்க.?...

   ஆக்சிடென்ட் ஆன மினிபஸ்லேந்து கொண்டுவந்த அத்தனை பெரும்….  பேரைப் படிக்கறேன், டாக்டர் – ஸ்ரீநிவாஸ், காமாட்சி, அப்துல்லா, தேவநாயகம், அம்புஜம், முனியாண்டி, சரஸ்வதி, கல்யாணராமன், வரதராஜுலு, சிங்காரவேலர் – இவங்க யாரும் பிழைக்கலை.  ஒரு நிமிஷம் முன்னாலேதான் ஒருத்தருக்கு அப்பரம் ஒருத்தரா சில செகண்ட்ஸிலேயே போயிட்டாங்க…

 ***

 

One Reply to “வீடுபெற நில்!”

  1. வீடும் சரி, மனித உடலும் சரி சரியாக கட்டப்படவேண்டும், சரியாக பராமரிக்கப்படவேண்டும் ஏரி, குளம், ஆறு போன்ற ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்ட வீடுகளும், புகைபிடித்தல், மதுப்பழக்கம், தீய எண்ணங்கள், போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட,உடலும் இந்த உலகில் அதன் இயல்பான வாழ்நாளுக்கு, முன்பாகவே அழிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *