மகாமகம்: ஓர் அனுபவம்

திங்கட்கிழமை காலை (பிப்-15) கும்பகோணத்தில் குடும்ப சகிதம் மகாமக புண்ய ஸ்நானம், மிகவும் மனநிறைவும் புத்துணர்வும் அளித்தது. மகாமகக் குளத்திலும், பொற்றாமரைக் குளத்திலும் தீர்த்தமாடியபின் புண்ய கந்தமும் கூடவே குளோரின் வாசமும் ஏறிக் கொள்ளும் என்ற 21-ம் நூற்றாண்டுக் கலிகால மகாத்மியத்தை நன்கறிந்து தான் கடைசியாக பகவத் படித்துறையில் சலசலத்து ஓடும் காவேரியில் முழுகினால் தான் முழுமையான ஸ்நான பலன் என்று முன்னோர்கள் முறை ஏற்படுத்தியுள்ளார்கள் போலும். அவர்களை மனதார வாழ்த்தி நீராடலை இனிதே முடித்தோம்.

mahamaham-tank-2016

தண்ணீரை இறைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பலைகள், மஞ்சள் கரைந்து விழும் மங்கலப் பெண் முகங்கள், இணைந்து தீர்த்தமாடும் தம்பதிகளின் இல்லற நேசம், முதியவர்களை கவனத்துடன் அழைத்து வரும் இளையவர்களின் சிரத்தை, இறைநாமங்களைக்கூறிக் கொண்டு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர்மொண்டு ஊற்றுக் கொள்ளும் பக்தி என எல்லாம் கலந்து அந்த ஆறு ஏக்கர் மகாமகக் குளம் ஒரு தெய்வீகக் களியாட்டக் களம் (carnival ground) போலத் தோற்றமளித்தது. குளத்தின் சுற்றுப் புறமெங்கும் தொடர்ந்து வேத கோஷமும், சுலோகங்களும் திருமுறை இசையும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்தச் சூழல் முழுவதும் தெய்வீகத்தை நிரப்பிற்று – நல்ல ஏற்பாடு. அதிகம் பக்தர்கள் வரும் காசி விஸ்வநாதர், கும்பேஸ்வரர் உட்பட எல்லா கோயில்களுக்குள்ளும் காவலர்களுக்கு சிரமம் தராமல் மக்கள் தாங்களாகவே வரிசை முறையை சீராகக் கடைப்பிடிப்பதைக் காண முடிந்தது.

முந்தைய நாள் மாலை குடந்தை வந்து விட்டோம். இரவில் வீதிகளில் சுவாமி புறப்பாடுகளை தரிசித்தோம். நாகேஸ்வரர் கோயிலில் சந்திர,சூரிய பிரபை வாகனத்தில் கொம்புகளும், சங்குகளும், தாளங்களும் கலந்த சிவ வாத்தியங்கள் துடிப்பாக முழங்கிச் செல்ல சுவாமி அம்பாள் பவனி. சாரங்கபாணி கோயில் வாசலில், பட்டாபிஷேக கோலத்தில் சீதாசமேத ஸ்ரீராமஸ்வாமி ரதத்திலும், சாட்டையைக் கையிலேந்தி ஸ்ரீராஜகோபாலன் சப்பரத்திலும் திவ்ய தரிசனம். நாதஸ்வரக் காரர் ஹிந்தோளத்தைப்பொழிந்து கொண்டிருந்தார். சோமேஸ்வரர் கோயில் திருவீதி உலாவையும் கண்ணாரக் கண்டோம். முன்பெல்லாம் மகாமகத்தின் போது எல்லாக் கோயில் வீதிகளிலும் பன்னிரண்டு மணி வரை நாதஸ்வரம் பொழிந்து கொண்டிருக்கும் என்று படித்தும் கேட்டுமிருக்கிறேன். அன்று பத்து மணிக்கே இசையொலிகள் சிறிது சிறிதாக மெலிந்து ஊரடங்கி விட்டது.

நகரிலும் குளத்தின் சுற்றுப் புறங்களிலும் ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்தன. 1980கள் வரையிலும் கூட, கும்பகோணம் ஊர்மக்களே இணைந்து வந்தவர்களுக்கெல்லாம் அன்னமும் உறைவிடமும் அளித்து நடத்தி வந்த பெருமிதமிக்க திருவிழா இது. சமீப காலமாக கூட்ட அதிகரிப்பு, பாதுகாப்பு முதலிய பல காரணங்களால் அரசுத்துறைகள் நேரடியாக பெரிய அளவில் களமிறங்குகின்றன. ஒருவகையில் இது அவர்களின் கடமையும் கூடத் தான். ஆனால், மகாமகக் குளம் என்று அம்புக் குறி போட்டு அங்கங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை கூட விடாமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வைத்திருப்பது, மிகவும் அருவருப்பையும் கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. நம் நாடு முழுவதும் பல இடங்களில் கும்பமேளா உட்படஇத்தகைய புனித நீராட்டுத் திருவிழாக்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட ஆந்திராவில் கோதாவரி மகாபுஷ்கரம் நடந்தது. எங்கும் அந்த மாநில முதல்வர் அல்லது அரசியல் தலைவர்களின் படங்கள் பூதாகாரமாக வியாபித்திருந்ததாக செய்தி இல்லை. தமிழகத்தின் சாபக்கேடு இந்தக் கீழ்த்தரமான அரசியல் நாயகி(க) வழிபாடு.

mahamaham-2016-logoஒவ்வொரு மகாமகத்தின் போதும் அன்னதானம், கூட்ட ஒழுங்கு, ஆன்மீகக் கண்காட்சி, கழிப்பறைகள் அமைப்பு உள்ளிட்ட பல சேவைகளைத் தாமாக முன்வந்து செய்து வரும் பல சேவை அமைப்புகளும் தன்னார்வலர் குழுக்களும் இங்குள்ளன. இந்த முறை அரசு நிர்வாகத்திலிருந்து ஒத்துழைப்பு மிகவும் மோசமாக இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் என்று தெரிய வந்தது. அன்னதானத்திற்குக் கூட அரசு அனுமதி பெறவேண்டும் என்று கெடுபிடுகள் விதிக்கப் படுவதாக சொல்கிறார்கள். கல்யாண மண்டபங்கள், விடுதிகள், பள்ளிகள் என எல்லா இடங்களையும் அரசு அதிகாரிகள், காவலர்கள் தங்குவதற்கு எடுத்துக் கொண்டு விட்டதால், இந்த இடங்களை அத்தகைய சேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த அமைப்புகளுக்கு இது சங்கடத்தையும் சிக்கலையும் உண்டாக்கியுள்ளது. அரசின் தலையீடு, மக்களின் இயல்பான சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயன்றி முட்டுக் கட்டை போடுவதாக இருக்கக் கூடாது.

1992ல் நான் கல்லூரி மாணவன். 2004ல் பெங்களூரில் வீடு கட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அந்த இரண்டு மகாமகங்களின் போதும் அது பற்றிய கவனம் இருக்கவில்லை. கும்பகோணம் சில முறைகள் சென்று நல்ல பழக்கமான ஊர்தான் என்றாலும் இதுதான் நான் பங்கு கொள்ளும் முதல் மகாமகம். என் மனைவிக்கும் அப்படியே. என் தி(இ)ருமகள்களும் மிகவும் ஆர்வத்துடன், அசௌகரியங்களைப் பற்றி சிடுசிடுக்காமல், பார்க்கும் நல்ல விஷயங்களிலும் அப்பா சொல்லும் கதைகளிலும் கவனமும் ஈடுபாடும் கொண்டு ரொம்ப சமர்த்தாக வந்தார்கள். அவ்வப்போது செய்யும் கோயில் பயணங்களும் நதிக் குளியல்களும் ஏற்கனவே அவர்கள் மனதில் ஒரு தயாரிப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தன. முன்பே நண்பர் மூலம் விசாரித்து பதிவு செய்திருந்ததால் வெங்கட்ரமணா விடுதி ஒன்றில் சௌகரியமான தங்குமிடம் கிடைத்தது.

உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் (என்னைப் போல), குளத்தில் குளித்தால் பாவம் போகுதாமா என்று தோன்றினாலும் (பகுத்தறிவுக் கொழுந்துகளைப் போல), இந்த மகத்தான கோயில் நகரமும், புனித சங்கமும், மக்கள் திரளும் அளிக்கும் ஒரு அலாதியான ஆன்மீகமான அனுபவத்தைக் கருதி, வாய்ப்புக் கிடைக்கும் நண்பர்கள் தவறாமல் குடும்பத்துடன் மகாமகத்திலும் அது போன்ற மற்ற புனித நீராடல்களிலும் கலந்து கொள்ளுங்கள். அந்தக் குறிப்பிட்ட நாளில் தான் போகவேண்டுமென்பதில்லை, மகாமக பருவம் முழுவதும், மாசி மாதம் முழுவதும் கூட இந்த யாத்திரையை செய்யலாம்.

கங்கையும் காவிரியும் இந்த மண்ணில் மட்டுல்ல, நம் உதிரத்திலும் உணர்விலும் கலந்தவை என்பதன் பிரத்யட்ச தரிசனம் மகாமகம்.

(ஜடாயு ஃபேஸ்புக்கில் எழுதியது)

3 Replies to “மகாமகம்: ஓர் அனுபவம்”

 1. திரு ஜடாயு அவர்களின் மகாமக தீர்த்த அனுபவத்தை படிக்கும்பொழுது எனக்கு,
  1980-ம் வருடம் எனது அம்மாச்சி,என் அம்மா, மற்றும் நான் மற்றும் தெருவில் உள்ள மற்றவர்களுடன் சென்று கூட்டத்தில் எனது அம்மாவிடம் கோபித்துக்கொண்டு அம்மாவின் கையை உதறி காணாமல் போனது பின் என் அம்மாவிடம் அடிவாங்கியது எனக்கு நினைவுக்கு வருகிறது.மகாமக தீர்தமாடினால் மனது முழுவதும் நிறைவாக இருக்கும்.

 2. நமது ஸப்ரதாயங்கள் தொடர்கின்றன என்ற அளவில் இது திருப்திகரமானது. ஆனால் இவை மேற்போக்காகத்தான் நடக்கின்றன என்பது கவலை தரும் விஷயம். இரண்டு அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்
  1. நமது புனித நதிகள் தூய்மை இழந்து விட்டன. கோவில் குளங்களில் இயற்கையான புனித நீர் இல்லாமல். வெளியிலிருந்து நீர் கொண்டுவந்து நிரப்பப்படுகிறது.இத்தகைய நிலைகளில் தீர்த்தமாடுவது புனிதத்தன்மையை கலப்படம் செய்வதுபோல் இருக்கிறது. இதற்கு பதிலாக, இயற்கையான புனித குளத்து நீரை புரோக்ஷிக்கலாம்! தற்கால கூட்டத்தைச் சமாளிக்க இதுதான் வழி. ப்ரான்சு நாட்டில் அவர்கள் புனிதமாகக் கருதும் லூர்டஸ் என்ற இடத்தில் இத்தகைய ஏற்பாடுதான் செய்யப்படிருக்கிறது.
  2. மத விஷயங்களில் மதச்சார்பற்றதெனக் கூறிக்கொள்ளும் அரசினர் நேரடியாகத் தலையிடுவது அபத்தம். அதுவும் ஹிந்துக்களின் விஷயத்தில் மட்டுமே தலையிடுவது அயோக்யத்தனமும் ஆகும். இன்றைய நிலையில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் இருப்பது உண்மையே ஆனால் அரசினர் அவற்றைத்தான் கவனிக்கவேண்டுமே தவிர, ஹிந்துக்களின் சம்பிரதாய நிகழ்ச்சிகளில் நேரடியாகத் தலையிடுவது பொருத்தமல்ல. ஆனால் நமது கோவில்களையே சர்க்காருக்கு ஒப்படைத்துவிட்ட ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்?
  சென்ற ஜூன் மாதம் ஹரே க்ருஷ்ணா இயக்கத்தினர் லண்டனின் மையப்பகுதியில் வீதிகளில் தேர்த் திருவிழா நடத்தினர். போலீஸ் பந்தோபஸ்து, ஆரவாரம் எதுவும் இல்லை! போலீசாருக்கு அவசியமே இருக்கவில்லை! நம் ஊரிலும் இந்த நிலை வருமா என்று இருக்கிறது. 1921 மாமாங்கத்தில் முஸ்லிம் இளைஞர் சங்கத்தினர் 200 பேர் சேவை செய்து, காஞ்சி ஆசார்யாரால் கவுரவிக்கப்பட்டனர்! மக்கள் ஒன்று சேர்ந்தாலும், அரசியல்வாதிகள் அனுமதிக்க வேண்டுமே!

  இதையெல்லாம் மீறி ஒளிரும், நமது மக்களின் ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கை மனதிற்கு இதமளிக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் மூர்க்கத்தனமான நாத்திக வாதம் எடுபடவில்லை என்பது தெளிவு. அதே சமயம் புனிதமிழந்துவரும் கோயில் குளங்களின் நிலை வருத்தமளிக்கிறது.

  மாமாங்கத்திற்கு நேரடியாகப் போக இயலாதவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே அந்தப் புனித நாட்களில் இறை நினைவுடன் நீராடலாம்! “ஶுப த்யானமு ஸுரமைன கங்கா ஸ்நானமுரா ரகுநாதா”, “த்யானமே வரமைன கங்கா ஸ்நானமே” என்கிறார் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *