அன்னை காளி – கவிதை

மூலம்: சுவாமி விவேகானந்தர் Kali, The Mother
மொழியாக்கம்: ஜடாயு

Kali

விண்மீன்கள் தெறித்து விழும்
மேகங்களை மேகங்கள் மூடும்
சூறைக்காற்று சுழன்றடித்து உறுமும்
வீரியம் ததும்பி வழியும் காரிருள்

சில நொடி முன் சிறை தகர்த்து
பித்துப் பிடித்தலையும் லட்சலட்சம் ஆன்மாக்கள்
பெருமரங்களை வேரோடு பிடுங்கி எறியும்
வழியில் தெரிபவை எல்லாம் வாரித்துடைத்தெறியும்

மலை மலையாய் அலையெறிந்து
ஆர்ப்பரிக்கும் வானம் தொடத் துடிக்கும்
ஆழ்கடலும் இந்த ஆட்டத்தில்.
திசையெங்கும் செந்தீ உமிழும் மின்னல்கள்.
சந்தோஷக் கூத்தாடும் சாவின் ஆயிரம் ஆயிரம் கருநிழல்கள்
நோய்களையும் துயரங்களையும் இறைத்து விளையாடும்

வருக தாயே வருக
பயங்கரி உன் பெயர்
உன் மூச்சுக்காற்றில் மரணத்தின் சுவாசம்
அண்டங்கள் நொறுங்கும் உன் ஒவ்வொரு அசைவிலும்
காண்பவை அத்தனையும் கபளீகரம் செய்யும் காலம் உன் காலடி
வருக தாயே வருக

நண்பா
துக்கத்தையும் துணிந்து காதலி
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்.

7 Replies to “அன்னை காளி – கவிதை”

 1. கை கொடுங்கள்… விவேகம் இருந்தால் இயற்கை அன்னையின் சீற்றத்திலும் அமைதியையும் ஆனந்தத்தையும் காணமுடியும் என்பதற்கு விவேகானந்தரின் வாழ்க்கையே சான்று…

  இதோ உங்கள் கவிதைக் கரங்களை வருட இரு சிறு குறள் வெண்பாக்கள்:

  விடாமல் அடிக்கட்டும் பாட்டும் புயலும்
  ஜடாயு (வி)வேகத் திலே.

  தாய்மொழிப் பாட்டில் விவேகா நந்தரை
  தாய்வழி தந்தீர் அருமை.

 2. Fantastic poem, I am unable to write in Tamil
  Best wishes, more power to you, we need millions of people like you to drive out the evil Dk/DMK , we need to claim back HInduisim from these mob and get back to our glorious past!
  God bless you/ Om Nava Shivaya
  Rama

 3. ஸ்வாமிஜியின் வரிகளுக்கு நிகராக எவராலும் எழுத இயலாது. ஏனெனில் அவை அநுபவத்தில் உதித்தவை. அவற்றை மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்தள்ளார் ஜடாயு. அடியேனுடைய புதிய ஆக்கமான “காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” என்ற காஞ்சி காமாட்சியம்பாள் பேரில் பாடப்பபெற்ற பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியத்தை இத்தொடுப்பில் பார்க்கலாம்.
  https://www.neervely.com/2009/index.php?subaction=showfull&id=1280534019&archive=&start_from=&ucat=1&mode=Home&viewdate=2010-07-30-18:48
  இப்படி ஒரு பிரபந்தம் பாட வேண்டும் என்ற எண்ணப்பாங்கிற்கு மேலுள்ள கவிதைகள் பொன்ற அம்பாள் பற்றிய இலக்கியங்களே தூண்டலாயிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 4. சங்காரம் என்பதும் ஈசுவரனின் கருணைத் திருவருளே. அது புறத்தே இரெளத்திரமாகத் தோன்றிடினும் அகத்தே அமைதியை அளிக்கும் சாத்துவிகமே ஆகும். ஆகவே “நண்பா
  துக்கத்தையும் துணிந்து காதலி
  பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
  அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
  தாய் உன்னிடம் வருவாள்.” என்பன பொருள் பொதிந்த வரிகள். நல்ல கவிதை

  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *