தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ இப்போதைய தமிழ்நாட்டு அரசியலோ என்று தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம். இது டெல்லி முகலாய சாம்ராஜ்யத்தில் புகழ்பெற்ற ஷாஜகானும் அவருடைய மகன் ஒளரங்கசீப் பற்றிய வரலாற்றுச்செய்திகள். ஆனாலும் இதுபோன்ற வரலாறுகள் எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்புடையதாக இருப்பதால் இதைத் திரும்பத் திரும்பப் படித்துத் தெரிந்து கொள்வதும் சரியாகத்தான் இருக்குமென்ற உணர்வில் படிக்கத்தொடங்குங்கள். வரலாற்றுப் பாடம்தானே, அது “போரடிக்கும்” என்று இருந்துவிடாதீர்கள்.

இந்திய வரலாற்றில் முகலாயர்களுடைய ஆட்சிக் காலம் மிகவும் முக்கியமானதொன்று. வட இந்தியாவில் இன்று எங்கு திரும்பினாலும், தலைநகர் டெல்லி, ஆக்ரா உள்பட எல்லாவிடங்களிலும் முகலாயர்களின் ஆட்சிக்கால வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கமுடிகிறது.

வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் “முகலாய சாம்ராஜ்ய” வரலாறு ஒரு முக்கியமான பகுதி. பாபர்தொடங்கி, ஒளரங்கசீப் வரையிலான அவர்களது தொடர்சங்கிலிபோன்ற வரலாறு, அவர்கள்காலத்தில் பாரததேசத்தில் பரவிய அவர்களது பாரசீகக் கலாச்சாரம், கதக் நடனம் உள்பட இசைபோன்றவை இந்தியக் கலாச்சாரத்தை மேலும் வளப்படுத்தின.

முகலாயர் வரலாறு பலசம்பவங்கள் நிறைந்த நெடிய வரலாறு. அதில் நாம் இங்கு பார்க்கப்போவது ஷாஜகான் சக்கரவர்த்திபற்றியும், அவரது செல்வக்குமாரன் ஒளரங்கசீப்பற்றியும்தான். நாடகபாணியிலான பல சம்பவங்கள் இவர்கள்காலத்தில் நடைபெற்றன என்பதை வரலாற்றுப் பாடங்கள் எடுத்துச்சொல்கின்றன. நமது சரித்திர ஆசிரியர்களும் இவர்கள் வரலாற்றை ஒரு சுவையான நெடுங்கதைபோல விவரித்துச் சென்றிருக்கிறார்கள்.

நூருதீன் முகம்மது ஜஹாங்கீர் பாதுஷா காஜி எனும் பட்டப்பெயருடன் அரியணையேறிய சலீம், அக்பரின் குமாரன். ஜஹாங்கீர் 1605 நவம்பர் மாதம் 3ஆம் நாள் தன் தந்தையின் மரணத்தையடுத்து சக்கரவர்த்தியானார்.

ஷாஜகான் முகலாய பேரரசர்கள் வரிசையில் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன். மாமன்னன் ஜஹாங்கீரின் மனைவியரில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஜோதாபாய் என்பரின் மகனாக இவர் 1592இல் லாகூரில் பிறந்தார். இந்த ஜோதாபாய், மார்வார் மன்னர் ராஜா உதய் சிங் என்பவரின் மகள்.

இவருடைய பாட்டனார் பேரரசர் அக்பர் தன் பேரனுடைய கல்வியை கவனமாகப் பார்த்து இவருக்கு அரியகல்வி கிடைத்திட வழிசெய்தார். ஷாஜஹானுக்கு இளமையில் இட்ட பெயர் குர்ரம். இவர் பாரசீக மொழியில் நன்கு தேர்ச்சிபெற்றிருந்தார்.

குர்ரமுக்கு 14 வயது ஆகும்போது சக்கரவர்த்தி ஜஹாங்கீர் போருக்காக வெளியூர் சென்றபோது, ஆட்சிப்பொறுப்பை மேற்கொண்டு சிறப்பாக்க் கவனித்திருக்கிறார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1607லேயே பல்லாயிரம் படைவீரர்களைக்கொண்ட பிரிவுகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1610ஆம் வருஷம் இவருக்கு 18 வயது ஆனபோது, மிர்சா முசாபர் ஹுசேன் என்பவருடைய மகளைத் திருமணம்செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளிலேயே, அதாவது 1612லேயே ஆசப்கான் என்பவருடைய மகள் அர்ஜுமந்த் பானுவையும் திருமணம்செய்துகொண்டார். மூன்றாவதாக, 1617இல் ஷாநவாஸ்கான் என்பவருடைய மகளையும் மணம்செய்துகொண்டார், ஆகமொத்தம் இவருக்கு மூன்று மனைவியர்.

தந்தை ஜஹாங்கீர் ஆட்சிபுரிந்த நேரத்திலேயே குர்ரம் பல போர்க்களங்களைக் கண்டு வெற்றிவீரராகத் திகழ்ந்திருக்கிறார். 1614இல் மேவார் ராணாவை வெற்றிகொண்டார். 1617இல் அகமதுநகரைப் போரிட்டுக் கைப்பற்றினார். இப்படி வெற்றிமேல் வெற்றியாகக் குவித்துவந்த இவருக்கு “ஷா ஜெஹான்” எனும் விருதினை வழங்கி, இவரை ஐம்பதினாயிரம் வீரர்கள்கொண்ட படைக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

ஜஹாங்கீரின் மனைவியரில் இளமையும் அழகும்கொண்டவர் நூர்ஜெஹான். இவர் குர்ரமின் சித்தியாவார். தொடக்கத்தில் நூர்ஜெஹானுக்கும் சக்களத்தி மகனான குர்ரமுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகத்தான் இருந்தார்கள். ஆனால் 1622–23 காலகட்டத்தில் இவ்விருவருக்குள் ஒற்றுமை இல்லாமல்போகவே, குர்ரம் சித்திக்கு எதிராக எழுந்தார். ஜஹாங்கீரின் வாரிசாக அவருடைய மகன் குர்ரம் வருவதற்கு எதிர்ப்புதெரிவித்துவந்த நூர்ஜெஹான், தன் மருமகனை வாரிசாக வரிக்கவேண்டுமென்று பிரச்சனை எழுப்பத்தொடங்கினாள். இப்படி அரண்மனைக்குள் இவ்விருவருக்குள் இழுபறி நீடித்துக்கொண்டுதான் இருந்தது.

இந்த நிலைமையில் 1627 அக்டோபர் மாதத்தில் ஜஹாங்கீர் மரணம் அடைந்தார். உடனே வாரிசுரிமைப் போர்தொடங்கிவிட்டது.

காலம்சென்ற மன்னன் ஜஹாங்கீரின் இளையமனைவி நூர்ஜெஹான் லாகூரில் தன் மருமகனை இவன்தான் மன்னன் என்று பிரகடனம்செய்தார்.

ஷாஜஹானுக்கு ஆதரவாக ஆசப்கான் என்பார் எழுந்தார். இவ்விரு கோஷ்டிக்கு இடையில் போர்நடந்தது.

போரின் இறுதியில் நூர்ஜெஹானின் மாப்பிள்ளை தோற்றதோடு அவனது கண்களும் குருடாக்கப்பட்டன. இது 1628 பிப்ரவரி 6ல் நடந்தது. இதையடுத்து ஷாஜஹான் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். இவர் பதவிக்குவந்ததை மிக கோலாகலமாகக்கொண்டாடினர். ஷாஜஹான் பெயரில் புதிய நாணயங்கள் அச்சிடப்பட்டன. அரசவையில் பலருக்கும் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஷாஜஹான் பதவி ஏற்றதும் நாட்டில் அமைதி நிலவவில்லை. நாட்டில் ஆங்காங்கே கலகங்கள்தொடங்கின. ஷாஜஹான் பெரும்படையை அனுப்பி அந்தக் கலகங்களை அடக்கினார். தெற்கே நெடுநாள்களாக சக்கரவர்த்திக்கு அடங்கிநடந்த சிற்றரசர்கள் கலகம் விளைவிக்கத்தொடங்கினர். உடனே ஷாஜஹான் தன்மகன் அவுரங்கசீப் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பி கலகத்தை அடக்கினார்.

அத்துணை பெரிய முகலாயப் பேரரசில் திரும்பிய பக்கமெல்லாம் தொடர்ந்து கலகம் எழத்தொடங்கியது. சக்கரவர்த்தி இந்த கலகங்களை அடக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இவை போதாதென்று 1630தொடங்கி நாட்டில் பெரும் பஞ்சமும், வறட்சியும் வந்து மக்கள் மடியத்தொடங்கினர். இந்தப் பஞ்சத்தால் மடிந்தவர்கள் ஏராளம்.

பஞ்சம் போதாதென்று எங்கு பார்த்தாலும் தொற்றுநோய் பரவத்தொடங்கியது. ஏராளமான மக்கள் பலியாகினர். எங்கு திரும்பினாலும் பிணக்குவியலாக நாடு காணப்பட்டது. மக்கள்செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தனர்.  இப்படி பல திசைகளிலும் பிரச்சனைகளால் சக்கரவர்த்தி திணறிக்கொண்டிருந்தார்.

இதற்கு முன்பு சக்கரவர்த்தியாக இருந்த அக்பர், ஜஹாங்கீர் ஆகியோர்களின் தயவைநாடிக் கையேந்திக்கொண்டிருந்த போர்த்துகீசியர்கள் தொல்லைகொடுக்கத்தொடங்கியதால், ஷாஜஹான் அவர்கள்மீது போர்தொடுத்தார். போர்த்துகீசியர்கள் ஹூக்ளி நதியின் கரையோர கிராமங்களை பிடித்துக்கொண்டு அங்கிருந்த ஏழைஎளிய மக்களைத் துன்புறுத்திவந்தனர்.

அவர்கள்செய்துவரவேண்டிய வர்த்தகத்திலும் பல தில்லுமுல்லுகளைச்செய்தும் சக்கரவர்த்திக்குக் கொடுக்கவேண்டிய வரிகளைக் கொடுக்காமலும் ஏமாற்றத்தொடங்கியிருந்தனர். அனைத்துக்கும்மேலாக அவர்கள் ஆக்கிரமித்திருந்த பகுதி மக்களை கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கி, அவர்களை கிறிஸ்தவர்களாக ஆக்கத்தொடங்கினர். அரண்மனை பணிப்பெண்கள் சிலரை கட்டாயப்படுத்திகொண்டு சென்றுவிட்டனர்.

இவைகளைக் கண்ட சக்கரவர்த்தி ஷாஜஹான், காசிம்கான் என்பவர் தலைமையில் படையொன்றை அனுப்பி போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடப் பணித்தார். முகலாயப்படைகள் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளை முற்றுகை இட்டன. கோட்டைக்குள் புகுந்துகொண்டு அந்த ஐரோப்பிய இனத்தாரும் இவர்கள் படையெடுப்பைச் சமாளித்துவந்தனர். இப்படி ஒரு மூன்றரை மாத காலம் முற்றுகை நீடித்தது. இறுதியாக போர்த்துகீசியர்களின் கோட்டை பீரங்கியால் தாக்கப்பட்டு தரைமட்டமாக ஆனது. சுமார் பத்தாயிரம் போர்த்துகீசியர்கள் போரில் மாண்டு போனார்கள், நான்காயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டனர். முகலாய படையில் சுமார் ஆயிரம் பேர் இறந்தனர். போர்த்துகீசியர்கள் சிறைபிடித்துவைத்திருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுதலையாகிச் சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட போர்த்துகீசியர்களை ஆக்ராவுக்குக்கொண்டுவ்ரச்செய்து, “நீங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற வேண்டும், அல்லது வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டும்,” என்று மன்னர் உத்தரவிட்டார். சிலர் மதம் மாறினார்கள், சிலர் சிறை சென்றார்கள், வேறு சிலர் சித்திரவதைக்கு ஆட்பட்டு இறந்துபோனார்கள்.

முகலாய சாம்ராஜ்யம் சிறப்பாக ஆட்சிசெய்யப்பட்டுவந்த காலம். பலபோர்முனைகளில் வெற்றிகளைக் குவித்து நாலாதிசைகளிலும் தங்கள் பலத்தை நிரூபித்துவந்த காலம். அக்பர்தொடங்கி, ஜஹாங்கீர், ஷாஜகான் உட்பட அனைவருமே மிக சிறந்த மன்னர்களாகக் கருதப்பட்டனர்.

சக்கரவர்த்தி ஷாஜகானுக்கு. தாரா சிக்கோ, ஷுஜா, ஒளரங்கசீப், முராத் என்று நான்கு பிள்ளைகள். மூத்தமகன் தாராவுக்கு பரந்தநோக்கம் உண்டு. அவன் இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் வேறுபடுத்திப் பார்க்காமல் சமநிலையில்வைத்து மதித்தார். இவருடைய இந்தப் பரந்த, விசாலமான மதக்கொள்கையை சுன்னி முஸ்லீம்கள் வெறுத்தனர்.

மன்னர் ஷாஜகானுக்கு மூத்தமகன் தாராமீது அலாதி அன்பு. ஆனால் தாராவுக்கு போர்புரிவதில் ஆர்வம் கிடையாது, அவர் ஓர் அமைதிவிரும்பி.

இவருக்கு மாறானவர் இரண்டாவது மகன் ஷூஜா. போர்முனையில் மகாசூரன் மகா கெட்டிக்காரன்; ஆனால் அவனுக்கு மதுவு,ம் மாதும் இருந்தால் போதும். இஸ்லாத்தின் ஷியா பிரிவை இவர் தீவிரமாக ஆதரித்துவந்ததால் சுன்னி பிரிவினரின் விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டார் ஷுஜா.

மூன்றாவது மகனான ஒளரங்கசீப் நல்ல திறமைசாலி, பராக்கிரமசாலி, போரில் மற்ற சகோதரர்களைக் காட்டிலும் மகாவீரன். இளம்வயதிலேயே தந்தைசார்பில் முகலாயப்படைகளுக்குத் தலைமைதாங்கி சிலபோர்களில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் சுன்னி பிரிவின் தீவிர அபிமானி, ஆகையால் இந்தப் பிரிவினர் இவருக்கு அபாரமான ஆதரவை நல்கினர்.

கடைக்குட்டியான முராத் நல்ல வீரன்தான் ஆனால் சமயோஜித புத்தியோ, சாமர்த்தியமோ இல்லாததால் அவன் வீரம் எடுபடாமல்போயிற்று.

தனக்கு வாய்த்த பிள்ளைகள் நால்வருமே தனக்கு வாரிசாக வருவதற்கு தகுதியுள்ளவர்களாக இருந்த காரணத்தால் சக்கரவர்த்தி ஷாஜகான் தன் ராஜ்யத்தைப் பிரித்து ஒவ்வொரு மகனுக்கு என்று பகுதிகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். பஞ்சாபுக்கும் வடமேற்கு மாகாணங்களுக்கும் மூத்தமகன் தாராவைக் கவர்னராக நியமித்தார். வங்காளமும், ஒரிசாவும் இரண்டாம் மகன் ஷுஜாவின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. ஒளரங்கசீப் தட்சிணப் பிரதேசங்களுக்கும், முராத் குஜராத் பகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆக, ஒவ்வொரு இளவரசனும் தத்தமக்கு என்று தனிப்படைகள், வசதிகள், ஆளுமை என்று எல்லா வசதிகளோடும் இருந்ததால், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளவும் வாய்ப்புகள் இருந்தன.

1657ஆம் வருஷ இறுதிக் கட்டத்தில் ஷாஜகானுக்கு உடல்நிலை கெட்டுப்போனது. படுக்கையில்விழுந்த மன்னன் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். தனக்கு இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த சக்கரவர்த்தி ஷாஜகான், தன் அமைச்சர்கள், பிரதானிகளையெல்லாம் அழைத்து, தனக்குப் பிறகு முகலாய சக்கரவர்த்தியாக மூத்தமகன் தாராவை அரசுக்கட்டிலில் உட்காரவைக்க ஆலோசனைசெய்தார். இப்படி அரசபதவிக்குத் தன்னைத்தான் தந்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட தாரா, உற்சாகத்தில் சில காரியங்களை அவசரப்பட்டுச் செய்யத்தொடங்கினார். தன்னை அடுத்த சக்கரவர்த்தியாக ஆக்க தந்தை முடிவுசெய்துவிட்ட சமாச்சாரம், மற்ற பிள்ளைகளுக்குத் தெரியாமல் இருக்கவேண்டுமென்பதற்காக, வங்காளம், ஒரிசா, தட்சிணப் பிரதேசம், பஞ்சாப், வடமேற்கு மாகாணங்கள், குஜராத் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளை மூடி, போக்குவரத்தை நிறுத்தி, தன்னைச் சக்கரவர்த்தியாக ஆக்கப்போகும் விஷயம் மற்ற சகோதரர்களுக்கு எட்டாதபடி நடவடிக்கைகளை எடுத்தார்.

இப்படித் தலைநகரில் வெளியுலக தொடர்பைத் துண்டித்துவிட்ட சூழ்நிலைகளை உணர்ந்த ஷாஜகானின் மற்ற மூன்று புதல்வர்களும், தங்களுக்கு எதிராக ஏதோவொரு சதி தலைநகரில் நடந்துகொண்டிருக்கிறது என்கிற எண்ணத்தில் போருக்கான ஏற்பாடுகளையும் அவசரகதியில் செய்யத்தொடங்கிவிட்டனர்.

முகலாயர்களுடைய வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்கெல்லாம் புலப்படும். அதாவது ராஜகுடும்பத்தில் அரசபதவி என்றால் உறவுகள் மறக்கப்படும் என்பதுதான் அந்த உண்மை. முந்தைய முகலாயமன்னர்களாலும் சொந்தங்களுடன் போராடித்தான் அரச சிம்மாசனத்தைப் பிடிக்கமுடிந்திருக்கிறது. அங்கு அண்ணன்-தம்பி பாசமோ, அப்பன்-பிள்ளை என்கிற உறவோ குறுக்கே நிற்கமுடியாது.

அதுமாதிரியே, ஷாஜகானுக்குப்பிறகு யாருக்கு பதவி என்பதில், தாராவைத் தவிர மற்ற மூவரும் ஒருவருடன் ஒருவர் போரிட்டுத் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டனர்.

அதேநேரத்தில் இன்னொரு யதார்த்த உண்மையையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். அதாவது தம்மில் யார் அரசபதவியைப் போரிட்டுப் பிடித்தாலும், மற்ற சகோதரர்களைப் போரில் கொன்றுவிட்டுத்தான் சிம்மாசனத்தைப் பிடிக்க முடியும் என்பதுதான் அது.

அப்போது சகோதரர்களின் மனதில் இருந்தது இரண்டே எண்னங்கள்தான்!

அரச சிம்மாசனம் அல்லது மரணம் — இவைகளில் ஒன்று நிச்சயம். இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தில் தந்தைக்குப் பிறகு யாருக்குப் பதவி என்பதில் மூத்தவன், இளையவன் என்பதெல்லாம் கிடையாது, வல்லவன் எவனோ அவனே மன்னனாவான். கத்திபிடித்து வென்ற்வன் பாக்கியசாலி.

தாராவை மன்னன் வாரிசாகத் தேர்ந்தெடுத்துவிட்டான் எனும் செய்தி மற்ற சகோதரர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தவுடனே, ஷுஜாவும் முராதும் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சக்கரவர்த்தி என்று தங்களைப் பிரகடனப் படுத்திக்கொண்டனர். அவர்கள் ராஜ்யத்துக்கென்று நாணயங்கள் அச்சிடப்பட்டன.

இப்படி சகோதர யுத்தம் உருவாகிக்கொண்டிருந்த நேரத்தில் சூதும், சூழ்ச்சியும் நிரம்பிய ஒளரங்கசீப் ஒரு தந்திரம்செய்தார்.

தனது தம்பியும் குஜராத் பகுதிகளுக்கு உரிமையுள்ள முராத்தைக் கையில் போட்டுக்கொண்டு அவனுக்கு உதவிசெய்வதுபோல நடித்தார். இவ்விருவரும் கலந்துபேசி ஒரு முடிவுக்குவந்தனர். இருவரும் படைகளோடு போய் தாராவோடு சண்டையிட்டு அவனைக் கொன்று, ராஜ்யத்தைப் பிடித்துக் கொள்வது என்பதுதான் அந்த திட்டம். இதில் வெற்றி பெற்றதும் முராதுக்கு பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்து ஆகிய பகுதிகளையும், போரில் கொள்ளையடித்த செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் கொடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. ஒளரங்கசீபுக்கு இதரபகுதிகளும், கொள்ளைச் சொத்தில் மூன்றில் இரண்டு பகுதிகளும் சேர்வது — இதுதான் இவ்விருவரின் திட்டம்.

dara's fightஇதற்கிடையே இன்னொரு சகோதரன் ஷுஜா என்னசெய்தான், தெரியுமா? தனக்கு உரிமையான வங்காளம், ஒரிசா பிரதேசங்களிலிருந்து பெரியபடையைத் திரட்டிக்கொண்டு ஆக்ராநோக்கிப் புறப்பட்டான். ஆக்ராவில் சக்ரவர்த்தியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தாரா, தன் தம்பி தனக்கெதிராகப் படையெடுத்து வருகிறான் என்பதை அறிந்து, ஒரு பெரும்படையை சுலைமான் ஷிக்கோ, ராஜா ஜெய்சிங் ஆகியோர் தலைமையில் அவனை எதிர்கொள்ள அனுப்பிவைத்தான். இவ்விருவரின் படைகளும் 1658 பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பகதூர்பூர் எனுமிடத்தில் மோதிக்கொண்டன. இந்த பகதூர்பூர் எனும் இடம் வாரணாசி எனும் காசி நகரத்திலிருந்து வடகிழக்கில் ஐந்து காத தூரத்தில் இருக்கிறது. கடுமையான யுத்தம் நடந்தது, இறுதியில் ஷூஜாவை தாராவின் படைகள் தோற்கடித்து விரட்டியடித்துவிட்டன.

இது ஒருபுறமிருக்க, ஒளரங்கசீப் முராத் கூட்டுப்படை ஆக்ராவைநோக்கிப் புறப்பட்டு, வழியில் உஜ்ஜயினிக்கு அருகில் ஓரிடத்தில் முகாமிட்டன. ஆக்ராவிலிருந்து தாரா ஒரு பெரும் படையை ராஜா ஜஸ்வந்த் சிங், காசிம்கான் ஆகியோர் தலைமையில் இவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பிவைத்தார். இவ்விரு படைகளும் 1658 ஏப்ரல் 25ம் தேதி மோதிக்கொண்டன. போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த சமயம், ஆக்ரா படையில் இருந்த ராஜபுத்திரவீரர்களுக்கும், இஸ்லாமியவீரர்களுக்கும் இடையில் லடாய் ஏற்பட்டு ஒத்துழைப்பு இல்லாமல் ஜஸ்வந்த் சிங்கால் வெற்றிபெற முடியவில்லை. ஆக்ரா படையில் இருந்த இஸ்லாமியவீரர்கள் தங்களது படையிலிருந்து ஓடிப்போய் எதிரிகளின் படையில் சேர்ந்துகொண்டனர். இந்த யுத்தத்தில் அரசாங்கப் படைக்குத் தோல்வியும், ஒளரங்கசீப், முராத் படைகளுக்கு அபாரமான வெற்றியும் கிடைத்தது.

போரில் தோற்றுப்போய் கடுமையாகக் காயமடைந்த ராஜா ஜஸ்வந்த் சிங், உயிர்பிழைக்கவேண்டி, யுத்தகளத்தைவிட்டு ஓடிப்போய் மார்வாரிலிருக்கும் தனது சொந்தக் கோட்டையை அடைந்தார். அங்கு அவருக்குக் கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. அவருடைய ராஜபுத்திர மனைவியே கோட்டைக் கதவுகளை மூடிவிட்டார். காரணம், போரில் ஒரு ராஜபுத்திரன் போரிட்டு வீரமரணம் அடைந்திருக்கவேண்டும், அல்லது எதிரிகளைக் கொன்று வெற்றிபெற்றிருக்கவேண்டும். ஆனால் இவரோ காயமடைந்து உயிர்தப்பிப் பிழைத்து, ஒரு கோழைபோல ஓடிவந்தது ராணிக்குப் பிடிக்கவில்லை. தன் கணவனையே கோட்டைக்கு வெளியே நிறுத்திவிட்டார். என்னே ராஜபுத்திர வம்சத்து வீர மங்கையரின் பெருமை, தன்மான உணர்வு! போற்றுதலுக்கு உரியவர்கள் அவர்கள்!

இந்த யுத்தத்தில் அடைந்த வெற்றியின் காரணமாக, ஒளரங்கசீப் புகழும், மாபெரும் செல்வத்துக்கு அதிபதியாகவும் ஆனார். பணமும், யுத்த தளவாடங்களும் ஒளரங்கசீபுக்கு அளவின்றி கிடைத்தன.

போரில்பெற்ற வெற்றிச் செறுக்கோடு, ஒளரங்கசீப்பின் படைகள் ஆக்ரோநோக்கிப் புறப்பட்டன. தலைநகர் ஆக்ராவிலிருந்து எட்டுகாத தூரத்தில் படைகள் முகாமிட்டன.

முந்தைய போரில் ஜச்வந்த் சிங் தலைமையில் சென்ற தனது படைகள் அடைந்த தோல்வி குறித்து தாரா மிகவருத்தமடைந்திருந்தார்.

எனவே, அடுத்து தானே படைகளுக்குத் தலைமை தாங்கி ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போரிடத் தயாரானார். ஐம்பதினாயிரம் படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு போருக்குக் கிளம்பினார்.

கலிமுல்லாகான், சிபிர் ஷிக்கோ ஆகிய இரு பெரும்வீரர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். பட்டத்து யானையின் மீதமர்ந்து தாரா போர்க்களம் புகுந்தார். 1658 மே 29ஆம் தேதி இருதரப்புப் படைகளும் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன. தாராவுக்கு வாழ்வா சாவா என்ற போராட்டம். ஒளரங்கசீபுக்கும், தம்பி முராதுக்கும் எப்படியும் ஆக்ராவைத் தங்களதாக்கிக்கொள்ள்வேண்டும் என்கிற வெறி.

மன்னன் தாராவின் படைகள் அத்தனை சீக்கிரம் வெல்லக்கூடிய நிலையில் இல்லை. இத்தனைக்கும் அவர் படைகளில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் இருந்தும், எதிரிகளோடு போர் எனும்போது ஒற்றுமையாகத்தான் போரிட்டார்கள்.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. தாரா தன் யானையின் மீதிருந்து கீழே இறங்கி ஒரு குதிரையின் மீதேறிக்கொண்டார். யானையின் அம்பாரி காலியாக இருப்பதைக் கண்ட ஆக்ரா வீரர்கள் மத்தியில் ஒரே குழப்பம். அம்பாரிமீது இருந்த ராஜா தாரா என்னவானார்? ஒருக்கால் எதிரிகளால் கொல்லப்பட்டிருப்பாரோ எனும் ஐயம் தோன்றியதோ இல்லையோ — அவ்வளவுதான் அடுத்தகணம் தாராவின் படைவீரர்கள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

அரசருடைய படைகள் திடீரென்று ஓடத் துவங்கியதும் ஒளரங்கசீபுக்கு என்ன ஆயிற்று, ஏன் இப்படி எதிரிகள் ஓடுகிறார்கள் என்று கவனித்தார். விஷயம்புரிந்ததும் தனக்கு வெற்றிக் கனியை இப்படிக்கொண்டு வந்து கையில் கொடுத்துவிட்டு இந்தப் பைத்தியக்காரர்கள் ஓடுவதைக் கண்டு சிரித்தான் வெற்றிக்களிப்பில். போர் முடிந்தது. அரசன் தாராவின் படைவீரர்கள் பத்தாயிரம்பேருக்குமேல் இறந்துபோனார்கள். தனது அந்தரங்க ஆசை நிறைவேறும் காலம் பிரகாசமாக ஆகிப் போனதை இந்த வெற்றியின் காரணமாகப் ஒளரங்கசீப் உணர்ந்தார்.

போர் தனக்குச் சாதகமாக முடிந்துவிட்டதை உணர்ந்த ஒளரங்கசீப், உடனே ஆக்ரா கோட்டையைத் தம் வசமாக்கிக்கொள்ளும்படி தன் மகன் முகமதுவுக்கு ஆணையிட்டார்.

ஆக்ரா சிறையில் ஷாஜஹான்

1658 ஜூன் முதல் தேதி ஆக்ரா கோட்டை ஒளரங்கசீப்பின் வசமானது.  தன் தந்தை ஷாஜகானாகட்டும், மூத்த அண்ணன் தாராவாகட்டும், கோட்டையில் உள்ள வீரர்களில் பலரும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார் ஒளரங்கசீப். தன்னை வலுப்படுத்திக்கொள்ள் வேண்டுமென்கிற தற்காப்பு முயற்சியில் தன் தந்தை ஷாஜகானை உடனே அரண்மனையில் சிறையில் அடைத்தார்.

தன் சொந்த மகனாலேயே சிறையிடப்பட்ட ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்தபடியே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தே 1666 ஜனவரி 22ல் உயிரிழந்தார்.

இந்த இடைப்பட்ட எட்டு ஆண்டுகள் சிறைவாசத்தின்போது மாமன்னராக விளங்கிய ஷாஜகான் தன் சொந்த மகன் ஒளரங்கசீப்பினால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு மனவருத்தத்திலேயே மாண்டு போனார் என்கிறது வரலாறு.

சூதும், வஞ்சகமும் மனதில்கொண்ட ஒளரங்கசீப் வஞ்சனையால் அரசுக்கட்டிலில் உட்கார்ந்த பிறகும், தனக்கு உடனிருந்து எல்லா உதவிகளையும்செய்த தன் சொந்தத் தம்பி முராத்மீதே திரும்பினார்.

யுத்தத்தில் கிடைத்த வெற்றிகளைக்கொண்டாடும் விதமாகத் முராதை மதுராவில் ஒரு பெரிய விருந்துக்கு அழைத்தார். தளபதிகளும், மாவீரர்களும் பெருமளவில் கூடியிருந்து பங்குபெற்ற விருந்தில் மது தாராளமாக வழங்கப்பட்டது. மிகவும் அதிக போதை தரக்கூடிய மதுவைத் தம்பி முராதுக்கு வழங்கச்செய்தார் மன்னர் ஒளரங்கசீப். அண்ணனுடைய பாசத்தில் கட்டுண்ட முராதும் கண்மண் தெரியாமல் அந்த மதுவைக் குடித்துத் தடுமாறினான். மதுவின் போதையில் வானில் மிதந்தான், மேகத்தில் தவழ்ந்தான், இன்பத்தின் ஊற்றில் திளைத்தான், தன்னை மறந்தான் இன்ப போதையில் கண்களை மூடினான்.

கண்களைத் திறந்து பார்த்த முராத் தான் விருந்தில் இல்லை; சிறையில் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை உணர வெகுநேரம் ஆனது. ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்ட முராத், பின்னர் அங்கிருந்து குவாலியர் சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டு, அங்கு 1661 டிசம்பர் 4ல் தூக்கிலிடப் பட்டான். துரோக சரித்திரத்தில் ஒரு பகுதி தூக்கில் தொங்கியது.

இதற்கிடையே போரில் தோற்றுப்போன மன்னன் தாரா உயிருக்குப் பயந்து ஊர்ஊராய் ஓடத்தொடங்கினார். முல்டான், சிந்து, கத்தியவார், குஜராத் ஆகிய பகுதிகளுக்கெல்லாம் சென்று பதுங்கிப்பார்த்தார். எங்கும் அவருக்குப் பாதுகாப்பு இல்லை என்று தெரிந்து தாதர் நோக்கித் தன் மனைவியுடன் சென்றார். வழியில் அவர் மனைவி நாதிரா பேகமும் பரிதாபமாக உயிர்துறந்தார். விரக்தி துரத்திட, எப்படி வாழ்வது என்று தாரா சிந்தனைசெய்தார்.

ஒரு உருது மொழிக் கவிஞர் சொன்னார்: “மலை மலையாய்த் துன்பங்கள் துரத்தின; அவர் இதயத்தை அழுத்தின; துன்பங்கள் அலை அலையாய் வந்து மோதின; வருத்தங்கள்மேல் வருத்தங்களாய் அவர் மனதைப் பேயாய் பிடித்து ஆட்டின; மனவுறுதிகெட்டார், மனங்கலங்கினார்; மனம் பேதலித்தார்; பித்தானார்”.

செய்வதறியாராய், திசை தெரியாமல் தவித்த தாராவை அடைக்கலம் என்று ஏற்றுக்கொண்டார் பலுசிஸ்தான் தளபதி ஒருவர்.

நம்பி அவரிடம் அடைக்கலம் புகுந்த தாராவை அந்த தளபதி ஒளரங்கசீபின் தளபதியிடம் காட்டிக் கொடுத்துவிட்டார். பிடிபட்ட தாராவை அவன் தங்கள் மன்னன் ஒளரங்கசீபிடம்கொண்டு போய் சேர்த்தான். மாட்டிக்கொண்டாயா என்ற வஞ்சத்துடன் பிடிபட்டு பரிதாபமான நிலையில் சோர்ந்துபோய் நின்ற அண்ணன் தாராவை ஒளரங்கசீப் நடத்தியவிதம், மனதால் நினைத்துப் பார்க்கவும் நடுங்கும். ஆம், தாராவை ஒரு கிழ யானையின் மீதேற்றி கிழிந்த அழுக்கு உடைகளுடன் டெல்லி நகரத்தின் தெருக்களிலும், கடைவீதிகளிலும் ஊர்வலம்விட்டான். இறுதியில் தேசத்துரோகி என்று கூறி தாராவையும், அவர் இளைய மகன் சிபிர் ஷிக்கோவையும் கொன்றுவிட்டான் ஒளரங்கசீப்.

தாராவின் மூத்தமகன் சுலைமான் ஷிக்கோ எங்கே?

தேடச் சொன்னார் ஒளரங்கசீப்.

அவர் வங்காளத்தில் ஷுஜாவோடு போரிடப் போயிருப்பதை அறிந்து அங்குசென்று அவரையும் கைதுசெய்து குவாலியர் சிறையில் அடைத்து அங்கே அவரையும் கொன்றார் ஒளரங்கசீப்.

தன் சகோதரர்களில் மூத்தவன் தாராவைக் கொன்றாகிவிட்டது. முராத்தை போதையேற்றி, சிறையில் அடைத்து கொன்றாகிவிட்டது. சகோதரர்களின் பிள்ளைகளையும் கொன்றாகிவிட்டது. மிச்சம் இருப்பது ஒரேயொரு சகோதரன் ஷுஜா, அவனைப் பிடித்துவர ஒரு படையை அனுப்பினார் ஒளரங்கசீப்.

பழைய வசனம் ஒன்று உண்டு. “யானையைக் குழி வெட்டிப் பிடிக்கவேண்டும்; பாம்பை மகுடி ஊதி பிடிக்கவேண்டும்; பறவைகளை வலைவிரித்துப் பிடிக்கவேண்டும்; மனிதனை முகஸ்துதிசெய்து பிடிக்கவேண்டும்” என்று.

சுதந்திரமாகத் திரியும் ஷுஜாவை அழைத்தால் வரமாட்டான், மற்றவர்களுக்கு ஆன கதிதான் தனக்கும் என்று உஷாராகிவிடுவான் என்றெண்ணி, அவனுக்கு ஒரு ஆசைகாட்டி அழைத்தார். அதாவது அவனை பிகாருக்கு கவர்னராக்குவதாகச் சொல்லி அழைத்தார்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.

ஒளரங்கசீபின் தந்திரத்தை உணராதவரா ஷூஜா? ஓடினார், உயிர் பிழைக்க ஓடினார், அரக்கான் பகுதிக்கு ஓடினார். பசி, பட்டினி, தாகம் உயிருக்குப் பயந்து ஓடிய அவருடைய உயிர் அங்கேயே பிரிந்தது.

இப்படியொரு சோக, துரோக வரலாற்றின் அடிச்சுவட்டில் அரசகட்டில் ஏறிய ஒளரங்கசீப்தான் முகலாய மன்னர்களின் கடைசிமாமன்னராக இருந்தார் என்கிறது வரலாறு. துரோகம் எப்போதும் நிலைத்திராது. அதற்குரிய விலையை துரோகிகள் கொடுத்தாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி.

***   ***   ***

6 Replies to “தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!”

  1. சரி,சரி,இது தற்போதைய தமிழ் நாட்டு அரசியல் இல்லை என்று ந‌ம்புகிறோம்!!!

  2. இளைய மகன் பதவிக்கு வரக்கூடாது கூடாது ( சோதிடன் கூறியபடி ) என்று இளங்கோவடிகள் துறவறம் பூண்டது இந்த பாரத நாட்டு உயர்ந்த கலாசாரத்தையும் , ஷாஜகனின் கதை, மட்டமான முகலாயரின் கலாசாரத்தையும் காட்டுகிறது.

  3. மிக நீண்டதொரு வ்யாசம். ஆனால் ஆரம்பம் முதல் கடைசி வரை எளிமையான விவரணங்களால் சரித்ரத்தை கிட்டத்தட்ட கதை போலப் பேசிச் செல்லும் முறைமையில் வழங்கப்பட்டிருக்கிறது. அருமை.

    கௌரவ பாண்டவர்களிடையேயான யுத்தம், ராவண விபீஷணர்களிடையே அபிப்ராய பேதம், வாலி சுக்ரீவர்களிடையே பேதம் இவையும் கூட அண்ணன் தம்பி சண்டைகள். இது ஒற்றுமை. இன்னமும் கூட ஒற்றுமைகள் இருக்கலாம். ஆனால் இந்த அபிப்ராய பேதங்களில் யுத்தம் நிகழ்ந்தது அறத்தின் பாற்பட்டு. அதிகாரத்தை கைப்பற்றுவதை ……………….. ம்……… அதிகாரத்தைக் கைப்பற்றுவதை ****மட்டிலும்**** அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தவை அல்ல இந்த யுத்தங்கள்.

    மிகக் கொடூரமாக மாற்று மதத்தவர்களை இஸ்லாமியர்கள் ஒடுக்கிய அந்த கால கட்டத்திலும்……….அவர்கள் மத்தியிலிருந்த பல சிந்தனையாளர்களே……… ஹிந்துஸ்தானத்து கலை, இலக்கியம் மற்றும் இசை இவற்றுக்கு பங்களித்து அதைச் செழுமைப் படுத்திய மாண்பினையும் மறைக்கவும் மறுக்கவும் இயலாது. வ்யாசத்தின் ஆரம்பத்தில் இந்தக் கருத்தும் பகிரப்பட்டுள்ளது. காய்த்தல் உவத்தல் இல்லாமல் இந்த வ்யாசம் பகிரப்பட்டுளமைக்கு இதுவும் ஒரு சான்று.

    இன்றைய தமிழக அரசியல் வரை அண்ணன் தம்பி சண்டைகள் தொடர்வது பெரிதல்ல. நாளைய அரசியலிலும் ……….. தமிழகமல்லாமல் மற்றைய ஹிந்துஸ்தானத்து மாகாணங்களிலும் இது போன்ற சண்டைகள் எழ்லாம். ஹிந்துஸ்தானத்துக்கு வெளியேயும் கூட மற்ற தேசங்களிலும் கூட இவை தலையெடுக்கலாம். மண்ணும் பொன்னும் பெண்ணும்…………. அதன் மீதான ஆசைகளும்……….. அதையொட்டி நிகழும் யுத்தங்களும் ரணகளரிகளும்……….ஒட்டு மொத்த மனித குலத்துக்கே பொதுவானது. ஒரு தனிப்பட்ட சமூஹத்திற்கு மட்டுமானதன்று என்பது நிதர்சனம்.

  4. இலங்கை சிவிலியன் தமிழர்கள் தலையில் கொத்து எறிகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான அப்பாவி தமிழரை கொன்ற சிங்கள படைக்கு பலவிதங்களிலும் உதவிகள் செய்த சோனியா மற்றும் சோனியாவின் கூட்டணி கண்ட பொருந்தாக் கூட்டணி தலைவருக்கும் தமிழக வாக்காள ப் பெருமக்கள் எக்காரணம் கொண்டும் ஆதரவு தரமாட்டார்கள்.

  5. தந்தையின் தவறுகளுக்கு மகனோ அல்லது, மகன் மூலமாகவோ, அல்லது மகன்
    செயல் மூலமோ தண்டனை அனுபவிப்பது என்பது அரசியல் வாழ்வில் மட்டுமல்ல
    தனிப்பட்ட வாழ்விலும் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் தண்டனை சுழற்சிமுறை. தந்தை சமூகத்திற்கு செய்யும் கேடுகளையும்,குடும்பத்திற்கு செய்யும்.கேடுகளையும் வாழ்க்கையில் தினமும் கண்காணிக்கும் மகன் தனது முறை வரும்பொழுது அவன் அதையே செய்கிறான் அது தந்தைக்கு கேடாக முடிகிறது.விதைத்ததை விருட்சமாக்குவது என்பதே விதி.

  6. தந்தையின் தவறுகளுக்கு மகனோ அல்லது, மகன் மூலமாகவோ, அல்லது மகன்
    செயல் மூலமோ தண்டனை அனுபவிப்பது என்பது அரசியல் வாழ்வில் மட்டுமல்ல
    தனிப்பட்ட வாழ்விலும் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் தண்டனை சுழற்சிமுறை. தந்தை சமூகத்திற்கு செய்யும் கேடுகளையும்,குடும்பத்திற்கு செய்யும்.கேடுகளையும் வாழ்க்கையில் தினமும் கண்காணிக்கும் மகன் தனது முறை வரும்பொழுது அவன் அதையே செய்கிறான் அது தந்தைக்கு கேடாக முடிகிறது.
    விதைத்ததை விருட்சமாக்குவது என்பதே விதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *