வரலாறு.காம் இணையதளம் தமிழில் வரலாற்றுச் செய்திகளை ஆய்வுநோக்கோடு அளிக்கும் ஒரு முக்கியமான தளம். வரலாற்றுச் செய்திகளுக்கு நம்பத் தகுந்த ஒரு தளமாக பலராலும் நம்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தளம் உண்மையிலேயே நம்புதலுக்கு உரியதா என்ற கேள்வி அன்மையில் அத்தளம் வெளியிட்டிருந்த தலையங்கத்தால் பலமாக எழுகிறது. வரலாறு.காம் இதழ்-85, ஜனவரி-ஃபிப்ரவரிக்கான இதழில் ‘ஐந்தாண்டுக்கொரு முறை மாற்றம் ஏன்?’ என்ற தலைப்பில் வெளியான அந்தத் தலையங்கம் ((https://varalaaru.com/Default.asp?articleid=1083 )) வாசகர்களுக்குப் பொங்கல் வாழ்த்துடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் சொல்லும்போது இதுநாள் வரை அத்தளத்தின் நேர்மையை நம்பியவர்களின் புருவங்கள் உயர்கின்றன. அந்தத் தலையங்கத்தை முழுதும் படித்தபின்னர் அத்தளத்தின் மீதான நம்பகத்தனமை முற்றிலும் நீங்கி ஒரு திராவிட முன்னேற்றக் கழக அதிகார பூர்வமான ஏட்டின் தலையங்கத்தைப் படித்த உணர்வு நம்மைச் சூழ்ந்து விடுகிறது.
வரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை. மேலும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த திமுக அரசைப் போற்றியும் அதிமுக அரசைப் பழித்தும் அத்தளம் வெளியிட்டிருக்கும் தலையங்கம் நேர்மைக் குறைவானது.. அறிவுக்கும் ஆய்வின் மான்புக்கும் களங்கமானது.
எடுத்த எடுப்பிலேயே தமிழர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று தை மாத புத்தாண்டைக் கூறும் வரலாறு தளம் தன்னெஞ்சு அறிந்து பொய்யுரைக்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கொடுக்கப்படாதது மட்டுமல்லாமல் பல அறிஞர்களால் ஆதாரங்களோடு மறுக்கப்பட்ட ஒன்றை நிரூபித்து விட்டதாகக் கூறுவது அறிவுலகத்துக்குச் செய்யும் பச்சைத் துரோகம். மானமும் அறிவும் நிரம்பிய யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆபாசக் குப்பையான 60 ஆண்டுகளின் பிறப்பு பற்றிய கதை என்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் பழித்துரைக்கும் அத்தளம் புராணக்கதைகளின் குறியீட்டுத் தன்மையை அறியாதவர்களால் நடத்தப்படுபவது அல்ல. பெரும்பாலான தமது வரலாற்று ஆரய்ச்சிகளை கோவில்களில் செய்து வரும் அத்தளத்திற்கு பொதுவான திராவிடக் கழக ஏரணங்கள் புராணங்களுக்கு பொருந்தா என்ற அறிதலும் புதிதல்ல.
இந்துமதம் சார்ந்த தொன்மங்கள் மட்டுமல்ல எந்த மதத்தைச் சார்ந்த தொன்மங்களும் நேரடி ஏரணங்களுக்குப் பொருந்தா என்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல. 1921 மற்றும் 1933ல் தமிழறிஞர்களால் முடிவு செய்யப்பட்டது என்று பலராலும் தைப் புத்தாண்டு கருத்தாக்கத்துக்கு ஆதாரமாக கூறப்படுவதையே எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டிய வரலாறு.காம் தளமும் ஆதாரமாகச் சொல்வது உள்ளபடியே மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது. இந்தத் தமிழ் அறிஞர்கள் என்னன்ன காரணிகளை முன்னிட்டு இந்த முடிவுகளைச் சொன்னார்கள் என்பதை யாராலும் இதுநாள் வரை சொல்லவே முடியவில்லை. வரலாறு தளம் இதை விளக்கினால் தமிழ்கூறும் நல்லுலகம் மொத்தமும் நன்றி உடையதாக இருக்கும். ஆனால் இதற்கு மாறாக சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பல கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்திலேயே அறிவியல், வரலாறு மற்றும் இலக்கிய ஆதாரங்களோடு வந்திருக்கின்றன. ((https://tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/comment-page-2/)) ((https://tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/)) ((https://tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/)) மேலும் சில கட்டுரைகள் ((‘Dravidian’ New Year Ordinance facing defeat and death : B R Haran)) ((Tamil New Year and the Tamil Nadu Government – I : B R Haran )) ((Tamil New Year and the Tamil Nadu Government – II : B R Haran )) குறிப்புகளில் உள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணி புரிந்தவரும் கல்வெட்டு அறிஞருமான எஸ். இராமச்சந்திரன் தினமணி நாளேட்டில் எழுதிய கட்டுரை ((சித்திரையில்தான் புத்தாண்டு – தினமணியில் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்)) அடுக்கடுக்கான ஆதாரங்களை உள்ளடிக்கிய ஒன்றாகும். குடந்தை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்கள் துக்ளக் இதழில் பல ஆதாரங்களோடு கட்டுரை எழுதியிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் எந்தவித மறுப்பும் எதிர் ஆதாரங்களும் இது வரை தை மாதப் புத்தாண்டு ஆர்வலர்களால் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் சிறந்த வரலாற்று அறிஞரான ஐயராவதம் மகாதேவன் ராமச்சந்திரன் அவர்களின் தினமணி கட்டுரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ((சித்திரையில் “தான்’ புத்தாண்டா? ))
“சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே” ஆனால் ஐராவதம் அவர்கள் இவ்வாறு சொன்னதை அடியோடு மறைத்துவிட்டு “பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே?” என்று சொன்னதை அந்த வரலாற்று அறிஞர் தைப்புத்தாண்டை ஆதரிப்பதாக திரித்துக் கூறுகின்றனர். ஐராவதம் அவர்களின் கூற்றுப்படி பஞ்சாங்கங்கள் மாற்றி அமைக்கப்படும் போது தை மாதமும் பின்னோக்கிச் சென்றுவிடும் என்ற அடிப்படை உண்மையைக் கூட கணக்கில் எடுக்காமல் தைப் புத்தான்டை விதந்தோதுகின்றனர். தை என்றாலும் சித்திரை என்றாலும் அவற்றை நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்தே அறிந்து கொள்ள முடியும் என்பது மற்றொரு அடிப்படை உண்மை.
தமிழ் இலக்கியத்திலிருந்து மேற்கோள்களும் ரசனை மிகுந்த பல கட்டுரைகளையும் அளித்துக் கொன்டிருக்கிற வரலாறு தளத்தினரால் தைப் புத்தாண்டுக்கு எத்தனை தமிழ் இலக்கிய ஆதாரம் அளிக்க முடியும்? எத்தனை இலக்கிய ஆதாரத்தால் சித்திரை புத்தாண்டு இல்லை என்று சொல்ல முடியும்? வரலாறு.காம் தளத்தினர் முடிந்த முடிவாகக் கூறுகின்ற தை மாதப் புத்தாண்டுக்கு அவர்கள் எத்தனை கல்வெட்டுகளை ஆதாரமாகக் கூறமுடியும்? பிரபவாதி ஆண்டுகள் குறித்த எண்ணற்றக் கல்வெட்டுகளை அவர்கள் படித்து ஆய்வுகள் மேற்கொன்டிருந்ததற்குப் புறம்பாக எப்படி அவர்களால் இப்படிச் செயல்பட முடிகிறது?
இனவாதம் என்பது அத்தனைக் கள்ளத்தனம் நிறைந்ததா? வரலாறு.காம் தளம் வரலாற்றுப் பிழைகளை செய்யாதிருக்க வேண்டும்.
ராசி வீடுகளில் முதன்மையானது சித்திரை பருவங்களில் முதற்பருவம் கோடை ஆகவே தை மாதம் முதல் நாள் வருடப்பிறப்பன்று. தமிழர்தம் புத்தாண்டு என்றும் தை முதல் நாள் கொண்டாடப்படவில்லை. பாரத நாட்டின் பல்வேறு மானிலங்களின் புத்த்தாண்டும் சித்திரையை முதற்கொண்ட தமிழ் புத்தாண்டை ஒட்டியே வருகிறது. எங்கும் மகரசங்கராந்தி வருடப்பிறப்பு அன்று.
பெரும்பாலான தமிழ் ஹிந்துக்கள் தை முதல் நாளை புத்தாண்டு பிறப்பாக ஏற்கவில்லை. கிறித்தவர்களோ இஸ்லாமியர்களோ தமிழ் பேசினாலும் என்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியதில்லை. வீட்டில் கன்னடம் தெலுகு பேசும் தமிழ் நாட்டு ஹிந்துக்களும் சித்திரை த்தமிழ் புத்தாண்டையே பெரும்பாலும் ஏற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள். ஆக இது கால்டுவெல்லின் அடிவருடிகள் ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி த்தமிழ் புத்தாண்டைக் கொண்டு செல்ல செய்யும் சதியன்றி வேறில்லை.
சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்கள் பதிவு செய்துள்ள கருத்துக்களை அப்படியே ஏற்போம். வரலாறு.காம் சொல்வதைக் கேட்டு இங்கு யாரும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. ஒரு வேளை சித்திரை தொடங்கி வரும் புத்தாண்டுகளுக்கு வழங்கப்படும் புராணக் கதைகள் அருவறுக்கத் தக்கதாகவே இருந்தாலும் அந்தக் கதைகளுக்காக யாரும் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அந்தக் கதைகளுக்கும் சரியான பொருள் விளக்கம் என்ன என்பதை இந்தத் தளம் ஏற்கனவே விளக்கியிருப்பதாக ஞாபகம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சித்திரை மாதத்தை ஒட்டியே ஆண்டுப் பிறப்பைக் கணக்கிடுகின்றன என்பது நடைமுறை உண்மை. தமிழர்களை இந்தியாவை விட்டுத் தனிமைப் படுத்துவதில் இத்தகைய ‘.காம்’கள் செய்யும் முயற்சி பயன் தராது.
இது குறித்து வரலாறு.கம ஆசிரியர் குழுவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆதாரங்களுடன் தை முதல் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பதை நிரூபிப்பதாக மறுமொழி கிடைத்தது. அதன் பின்னர் தகவல் இல்லை.