‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்

கர்நாடக இசையில் தாச இலக்கியத்தின் பங்கு மிக அதிகமானது.   கடவுளை அடைய இசை ஓர் எளியவழி என்ற எண்ணம்கொண்டு,  சாதாரண மனிதனும் விரும்பி ஏற்கும் வகையில் பண்பாடு மற்றும் சமய  மேன்மை சார்ந்த கருத்துக்களை கீர்த்தனைகளாக்கி,  தாசர்கள் தங்கள் பக்தியை வளப்படுத்தினர்.  ’நாதோபாசனா’ என்ற பெயரில் அமையும் இது இசை, பக்தி, இலக்கியம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்றாலும் தனித்தனியாக இனம் கண்டறியமுடியாத அளவுக்குத் தமக்குள் இணைந்துள்ளது.

ஹரிதாசர்களின் இலக்கியத்தைப் பொதுப்பாடல்கள்,  கவித்துவப்பாடல்கள்,  தத்துவப்பாடல்கள் என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம்.  ஹரிதாசர்களின் படைப்பில் மிகமுக்கியமானது கீர்த்தனைகளே. இது தேவர்நாமா என்றும் அழைக்கப்படும். .

வேதம், உபநிடதம்,  புராணம் குறிப்பாக தசாவதாரம் ஆகியவற்றின் கருத்துக்களை எளிமையாகச் சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் வெளிப்படுத்தியவர்கள் ஹரிதாசர்கள். கருத்துக்களைக் கொள்கைபோல அல்லாமல் இயல்பான கதைப்பாங்கில், பேச்சுப்பாங்கில், கீர்த்தனைகள் வடிவத்தில் அமைத்ததால் மனிதர்கள் மனதில் அவை எளிதாகப் பதிந்தன. எல்லாப் பாடல்களும், கீர்த்தனைகளும்  மறுக்கப்படாத சமயநிலைகளை  வெளிப்படுத்தின. கடினமாக உணராமல், வாழ்க்கையை அதன் போக்கை மனிதனுக்குப் பிடித்த வகையில் தெரிந்து கொள்ள அவை உதவின.  தசாவதாரம் கதைகளின் பின்னணியில் இறைவனின் தன்மையை வெளிப்படுத்தியதால் மத்ய, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்களின் கதைகளைக் படிப்பதும், குறிப்பாகக் கீர்த்தனைகளின் மூலம் அதை அறிந்து கொள்வதும் அன்று அவர்களுக்கு விருப்பமாக இருந்தது. வேதம், புராணம் ஆகியவைகள் சொன்ன கருத்துக்களை தாசர்கீர்த்தனைகள் மக்களுக்குக் காட்டின.  ஹரிதாசர்கள் ஒன்றையும் விடாமல் எல்லா முக்கிய அம்சத்தையும். கீர்த்தனைகளில் வெளிக்கொண்டு வந்தனர்.

வாழ்க்கையின் நடப்புகளை, அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.  ஒவ்வொரு தனிமனிதனும் புரிந்துகொள்ளும் வகையில் அவை எளிமையாக, தெளிவாக இருந்தன.

 சொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு வகையில்   விஷேசமானவை;  அர்த்தம் நிறைந்தவை.  மனிதன்  தானாகப் புரிந்துகொண்டிருக்க முடியாதவை. இதனால் தனிமனிதன் அறிவு பெற்றதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கைச்  செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவனாகவும் வாழ முடிந்தது குறிப்பிடத்தக்கது.  குறிப்பிட்ட காலச் சூழ்நிலையில் வாழ்க்கையின் திக்குத் தெரியாமல் இருந்த சாதாரண மனிதர்களுக்கு உண்மைகளின் அறிக்கைகளாக இருந்த கடினமான இலக்கியவகைகள் புரியவில்லை அந்நேரத்தில்   ஹரிதாசர்களின் கீர்த்தனைகள்,  ஊக்கத்தின் அழைப்பாக,  வழிநடத்திச் செல்லும் விளக்காக இருந்தன.

கற்றறிந்தவர்களான தாசர்கள் மத்துவரின் செய்திகளை மிக எளிமையாகவும்,  விசாலமான நோக்குடனும் வெளிப்படுத்தியுள்ளனர்.  விறுவிறுப்பான நிலையில் சொற்றொடர்களை எளிமையான கன்னட மொழியில் வெளிப்படுத்தினர். அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும்  பழமொழிகள்போலக்    கீர்த்தனைகளை அமைத்தனர்.

எளிமை அவர்களின் அழகாகும்.  அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவையோ, துறையையோபற்றிப் பேசவில்லை. பொதுவான பார்வையைக் கையாண்டதால்  எல்லோரையும் ஈர்க்கின்ற தன்மை அந்த இலக்கியத்திற்கு      இருந்தது.

அகந்தை,  அகங்காரம்,  தந்திரம்,  ஆகியவைகளை ஒழித்த நிலையில்தான் அவர்கள் பாடல்களிருந்தன. சம்ஸ்கிருதத்தில் பொதிந்திருந்த தத்துவத்தைச் சாதாரண மனிதனும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையான விளக்கத்தில் பாடல்களாக, கீர்த்தனைகளாகக் கொண்டுவந்த பெருமை இவர்களுக்குண்டு.

மனித இனத்தைக் காப்பாற்றுவது பக்திதான் என்ற அடிப்படைத் தத்துவத்தை ஆழமாக வலியுறுத்தியவர்கள்.  சாதாரண மனிதர்களோடு இவர்களுக்கிருந்த நெருங்கிய தொடர்பு வாழ்க்கையை அவர்கள் பார்வையில் தாசர்களைப் பார்க்கவைத்தது. அதனால் அவர்கள் பாடல்கள் இயற்கையாகவும்,  இயல்பாகவும் அமைந்து உள்ளத்தைக் கவர்ந்தன.

புரந்தரதாசர்

மனிதவாழ்க்கையின் குறுகிய ஆயுளைக் காட்டிப், பொய்யான உலகத்தை வெளிப்படுத்தி இறைவனின் அருள் பெறும் போதனை நிலையில் அவர்கள் பாடல்கள் அமைந்தன.  ஒவ்வொரு    ஹரிதாசனுக்கும் தனியான நடையிருந்தது.

புரந்தரதாசர் தெளிவான எளிமையான கன்னட மொழியின் சொற்றொடர்களையும், உவமைகளையும் பயன்படுத்தினார். கனகதாசர்   வலிமையான   உறுதியான நடையில்   நேரடியாக வெளிப்படுத்தினார்.  அவர்களின் பாடல்கள் எளிமையாக இருந்தபோதும் ஆழமான உள்ளடக்கத்தோடும், உத்வேகத்தைத் தூண்டுவதாகவும், வசியப்படுத்துவதாகவும்,  நீதிபோதனையைச் சொல்வதாகவுமிருந்தன. பல தத்துவக் கொள்கைகளும்கூட எல்லோருக்கும்  புரியும்படி எளிதில் சொல்லப்பட்டுள்ளன.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரஹரி தீர்த்தன், தாச இலக்கியத்தின் முதல்வன் என்று சொல்லப்பட்டாலும் தாசகூடம் என்ற அமைப்பு ஸ்ரீபாதராயனால் உருவாக்கப்பட்டது.   அவனைத் தொடர்ந்து வியாசராயன்,  புரந்தரதாசன், கனகதாசன்      ஆகியோர்     முக்கியமானவர்களாகின்றனர். சிவசாரணர்களின் வசன இலக்கியம்போல விஷ்ணுபக்தர்களின் இலக்கியமான இது மனிதநோக்கு,  சமூக விமரிசனம், மானிட இயல்பின் முழுமை ஆகியவற்றை விளக்குகிறது.

துவைத தத்துவத்தை அடிப்படையாக்க் கொண்டமைந்த பாடல்களுக்கு கீர்த்தனை,  சுலாடி,  விருத்தநாமம், தாண்டகம் என வகைகள்தந்து அறிமுகப்படுத்திய பெருமை  ஸ்ரீபாதராயனைச் சேரும். மத்துவாச்சார்யரின் தத்துவத்தைக் கன்னடமொழியில் பரப்பவேண்டிய ஒரு சூழல் வந்தபோது சிறிதும் தயக்கமின்றி கடவுள் வழிபாட்டின்போது கோயில்களில் கன்னடப் பாடல்களைப் பாடச்செய்யும் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் ஸ்ரீபாதராயனுக்குண்டு.

இவர் அறிவுக்கும், சாதுர்யமான பதிலுக்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. பாதராயன் தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்வர்ணவர்னா தீர்த்தா என்ற பெயருடைய குரு ஒருவர் வருகிறார். சிறுவர்களிடம் ’அப்பூரூ’ எங்கேயிருக்கிறதென்று கேட்கிறார். அப்போது பாதராயன் “சூரியன் அஸ்தமனமாகப் போகிறான்.  நாங்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அப்பூரூ எவ்வளவு தூரமென்று யூகியுங்கள்“ என்று பதில் தருகிறான். அந்த பதில் குருவை அசரவைக்கிறது.

சூரியன் அஸ்தமனமாகப் போகும் நேரத்திலும் விளையாடிக் கொண்டிருக்கிறோம், இருட்டு வருவதற்கு முன்னாலே வீடு போய்விடுவோம். ஆகையால், அருகாமையில்தான் ஊர் என்ற உட்பொருளை அந்தப் பதில் தருகிறது. சிறுவனை ஸ்வர்ணதீர்த்தா தன் சீடனாக்கிக் கொள்கிறார்.

ஸ்ரீபாதராயர்

ஸ்ரீமத் பாகவத்தை முதன்மையாகக் கொண்டமைந்த பாதராயனுடைய பாடல்கள் ’ரங்க விட்டல’ என்ற முத்திரையைக் கொண்டவை.  வேணுகீதம்,  கோபிகீதம்,  பிரம்மகீதம் ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க பாடல் வகைகளாகும். வேணுகீதம், கோபிகீதம் ஆகியவை புல்லாங்குழலூதும் இறைவனின் பெருமைகளையும், பிரம்மகீதம் பாகவதபுராணக் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.

”நீ இப்படி இருப்பதன் காரணமென்ன ஹரியே? [நீ ஈத்தங்க இருப்பதேனோ ஹரியே], ’கண்களிருப்பது காவேரிரங்கனைப் பார்க்கத்தான்’ [கண்களிருவது காவேரிரங்கன நோடத] ஆகிய இவருடைய பாடல்கள் எல்லோரும் அறிந்தவையாகும்.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில்தான்  அன்னமாச்சார்யரின் தெலுங்கு கீர்த்தனைகள் அறிமுகமாயின என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்ரீபாதராயனைத் தொடர்ந்து அவர் சீடரான வியாசராயன் தாசஇலக்கியத்தை வளர்த்தார்.  கன்னடமொழியில் கீர்த்தனைகளை இயற்றி, அவற்றைக் கடவுளின் சந்நிதானத்தில் பாடும் வழக்கம் இந்தக் காலகட்டத்தில்தான் உருவானது. ஹரியின் பக்தர்கள் கூடுமிடம் ’தாசகூடம்’ ஆனது.

அன்றைய சூழ்நிலையில் அந்தணர் சமூகத்தில் இது புரட்சியான செயலாகக் கருதப்பட்டது.  ’ஸ்ரீ கிருஷ்ண’ என்ற முத்திரையோடு அமைந்த இவரது கீர்த்தனைகள் மனிதநேயத்தை முதன்மைப்படுத்தின. ’கிருஷ்ணா நீ வேகமாக வரவேண்டும்’ [கிருஷ்ணா நீ பேகனே பாரோ”], தாசரென்றால் அது புரந்தரதாசர்தான் [’தாசரந்தரே புரந்தரதாசரய்யா] ஆகிய சில பிரபல பாடல்கள் இவருடையவையாகும்.

தாசர்களின் தலைவனாகப் போற்றப்படும் புரந்தரதாசன் செல்வப் பரம்பரையில் வந்தவர்.  ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி விஷ்ணுபக்தனானார்.

உலகவாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பல்வேறு சூழ்நிலைகளில் பழகியதால் அவர் கீர்த்தனைகளின் அணுகுமுறை நகைச்சுவை, கண்டனம், சமூகவிமர்சனம்,  அறிவுரை என எல்லாவற்றின் கலவையாகவும் அமைந்தன. நாமமகிமை, துதி, நிவேதனம், கிருஷ்ணலீலை, சமூக விமர்சனம், அறிவுரை என்ற பிரிவுகளில் அவர் கீர்த்தனைகள் அடங்குகின்றன. ’வயிற்று வைராக்கியம்’ ”என்ற கீர்த்தனை சமூக வாழ்க்கையின் குறைபாடுகளை பிரதிபலிக்கும் கீர்த்தனையாகும்.

”வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம், மாச்சர்யம், கோபம் ஆகியவைகளோடு வாழ்தல், நாவில் மந்திரம் சொல்லிக்கொண்டு மனதை அலையவிட்டு வெளியில் பரமநல்லவனாகக் காட்டிக்கொள்ளுதல் என்பது மேடை வேடம்போட்டு வாழும் சோற்றுஞானம் என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார்.

மடிமடி என்று [மடிமடியென்து] என்ற பாடலில் ஈரஆடைகளை அணிந்து உலகத்தவருக்குத் தன்னைக் காட்டிக்கொள்வது மடியாகாது — மனதிலிருக்கும் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவைகளை ஒழிப்பதுதான் உண்மையான மடி என்கிறார்.

அநீதியையும், ஆடம்பரத்தையும் பழிப்பதான பார்வையிலும் சில கீர்த்தனைகள் உண்டு. ”சிரிப்புத்தான் வருகிறது [நகுவே பர்த்திதே நநகே], உடல் தண்ணீருக்குள் இருந்து பயன் என்ன, வேம்பினை வெல்லத்தில் இணைப்பதால் என்ன பயன், புலையன் நம்மிடையிலன்றி வெளியிலா இருக்கிறான், உடல் அழுக்கைக் கழுவமுடியும்போது மனஅழுக்கைக் கழுவமுடியாதா என்னும் கருத்துகள்  குறிப்பிடத்தக்கவை.

சமூகபோதனைக்குச் சான்றாக “தருமமே ஜயம்”[தர்மவே ஜயா] என்ற கீர்த்தனை அமைகிறது. ”நஞ்சு கொடுத்தவனுக்கு நல்ல உணவு தரவேண்டும், பழித்தவனைப் பாராட்டவேண்டும்” என்ற கருத்து இன்னா செய்தவனுக்கும் நன்னயம் செய்யத்தூண்டும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகிறது.

இது பாக்கியம்[இது பாக்யா] என்ற கீர்த்தனையில் கல்லாயிருக்க வேண்டும் கடின சம்சாரத்தில், வில்லாக வளைய வேண்டும் பெரியோரிடம்” என்ற வரி, இன்றும் எல்லோராலும் பழமொழியாகப் பயன்படுத்தப்படும் எளிய தொடராகிறது.

எதையும் எதிர்த்துநிற்கும் ஆன்மபலம் மனிதனுக்கு வேண்டும் என்ற வற்புறுத்தல் அவர் பாடல்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது.

பக்தி என்பது பல கோயில்களுக்குச் செல்வதல்ல, சரியான வாழ்க்கைமுறைதான் என்கிறார். மண், பொன், பெண் இவற்றின்மீது இருக்கும் ஆசை நீக்கப்படவேண்டும் என்ற செய்தி சொல்லப்படும்விதம் புதுமையானதாக உள்ளது. ”

ஆசைகளை நீக்கும்படி நேரில் உபதேசம் செய்வது இயல்பு.  ஆனால் திருமால் தன்  கையால் கடிதமெழுதி இவைகளை நீக்கும்படி வேண்டுகிறான்” என்ற தொனியிலான கீர்த்தனை புதுமையாக மட்டுமின்றி வியப்பையும், கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

மனிதனின்    உயர்வு, அவனுடைய  குணம், செயல்பாடுகள்,  நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர சாதியால் தீர்மானிக்கப் படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைப் பல பாடல்கள் காட்டுகின்றன.

ராகி தந்தீரோ பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரோ

அன்னதான மாடுவராகி அன்னசத்ராவணிதவாராகி

குருகள் சேவைய மாடுவராகி

புரந்தரவிட்டலன சேவிப்பவராகி

போக்யராகி யோக்யராகி பாக்யவந்தராகி

ராகி தந்தீரா பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரா

ஏழைகளின் உணவான ராகியைப் பாடலாக்கி ராகி என்ற சொல் பல்வேறு பாவனைகளில் வெளிப்படுத்தியிருக்கும் தன்மை அற்புதமானது.

ஒரு வயதான மூதாட்டியிடம் தனக்கு உணவு தரும்படி விட்டல வேண்டுகிறான். தன்னிடம் ஒரு ராகிரொட்டி மட்டுமே இருப்பதாக அவள் சொல்கிறாள். அது தனது  தேவைக்கு மேலானது     என்கிறான்.

அதுமுதல் தினமும் பிச்சைக்கு வந்து ராகியையே வேண்டுகிறான். இந்தப் பாடலின் மிகச் சிறந்த அம்சம் ’ராகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்தான்.  ”யோக்யராகி”, ”போக்யராகி”, ”பாக்யவந்தராகி” என்று எல்லாம் இரட்டைப் பொருளில் அமைகிறது. சான்றாக “யோக்ய + ராகி = சாப்பிடுவதற்கு ஏற்ற ராகி, ”யோகயர்+ஆகி = கொடை கொடுப்பதற்கு தகுதியானவர்,  போக்யர் + ஆகி கொடுப்பதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். இது அவருடைய மிகச் சிறந்த பாடலெனவும் கூறப்ப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நல்லநாளே. திதி, வாரம், நட்சத்திரம், யோகம் ஆகியவை பற்றியெல்லாம் மனிதர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கடவுளை வழிபட்டால் எல்லா நாளும் நல்லநாளாகும் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையானமுறையில் இந்த தினம் சுபதினம்[ஈ தின சுபதின] இந்த நட்சத்திரம் சுபநட்சத்திரம் என்ற பாடல் காட்டுகிறது.

மனிதர்களுக்கு  வாழ்க்கை    என்பது வானவில்லைப்போல   பல்நிறம் கொண்டதாக,                           கவர்ச்சியானதாகத் தெரிகிறது.  ஆனால் அவையெல்லாம் மாயையே என்பதை அவர்களுக்கு  நினைவு படுத்தும் வகையில், ”யாருக்குக் கவலை” என்ற பாடலில் [’யாரிகே யாரெந்து’] — எந்த நேரமும் உடையும் நீர்க்குமிழியைப்போல உள்ள வாழ்க்கையில் யாரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்?  யானைகள், குதிரைகள்,  கஜானா,  நாடு, கௌரவம்,  புனிதமான உறவுகள், நட்பு எல்லாம் மாயையும், குறைவான ஆயுளும் உடையவை. நிரந்தமற்ற தன்மையை உணரவைப்பது அவர் கருத்தாகிறது. .

என்ன சாதியாக, கௌரவமாக இருந்தாலும் [”யாவகுலவந்தரேனு] மனிதநேயத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன பயன் — ஒருவனுடைய பிறப்பு மட்டும் அவன் உயர்வுக்கோ, தாழ்வுக்கோ காரணமாக முடியாது. வெவ்வேறு நிறமுடைய பசுக்கள் தரும் பாலும் வெவ்வேறு வடிவம்கொண்ட கரும்புகள் தரும் சுவையும்  வித்தியாசப்படமுடியுமா? தோற்றத்தில் இருக்கும் வேறுபாடு யாருடைய இயல்புத் தன்மையையும், பக்குவத்தையும் மாற்ற முடியாது என்பது அவர் கொள்கை

தீண்டாமை அவரால் பொறுக்க முடியாததாகிறது. பிறந்த சாதியை வைத்து மனிதன் தீண்டத்தகாதவன் என்று முத்திரைகுத்துவது சரியல்ல — அவன் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்கவேண்டும். தீண்டாமை என்பது தொடுவுணர்ச்சியை முன்வைத்து அமையும் பொருளல்ல என்றொரு பாடல் சொல்கிறது.  [ஹொலையா ஹொரகிதனே} சுயஒழுக்கமில்லாதிருப்பது, செல்வனாக இருந்துகொண்டு பொருள்தர மறுப்பது, மென்மையான பேச்சை பயன்படுத்தத் தெரியாமலிருப்பது இறுதியில் புரந்தரவிட்டலனை வணங்காமலிருப்பது ஆகியவைகள்தான் அவர் பார்வையில்  தீண்டாமையாகும்.

புரந்தரதாசனின் கருத்து நம் சமூகத்தின் தீண்டாமைக்குத் தரும் அடியாகும்.

புரந்தர விட்டல என்று அவர் குறிப்பது எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தப்படும்  பெயராகும் என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.  பல கடவுளரின் பெயர்களை அவர் பயன்படுத்தியிருப்பது இதற்குச் சான்றாகும்.

புரந்தரதாசர் சிறந்த கணக்குப்பிள்ளையும்கூட. நல்ல செயல்களைச் செய்யும்போதும், கெட்ட செயல்களைச் செய்யும்போதும் ஒருவன் தன் மனதையே தணிக்கை செய்துகொள்ளவேண்டும்; மனம்தான் தணிக்கைக்கருவி என்கிறார். ”மனதைச் சோதித்துக்கொள்” [”மனவ சோதிசபேக்கு”]என்ற பாடல் இதைக் காட்டுகிறது.

பாடல் இப்படித்  தொடங்குகிறது:

எல்லா ஹரிதாசர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை அழைப்பு.  நேரம் குறைந்துவிட்டது.  நூறுஆண்டுகள் ஆயுளாக இருந்தால் ஐம்பதாண்டுகள் தூக்கத்தில் போய்விடுகிறது. மீதமுள்ள ஐம்பதாண்டுகளில் முதல்  பதினைந்து ஆண்டுகள் அறிவுக் குறைவான இளமையிலும், கடைசி இருபத்தைந்தாண்டுகள் முதுமையிலும் கழிகின்றன. இடையிலுள்ள இளமையான நிலையிலுள்ள இருபதாண்டுகள் இளரத்தம் என்பதால் மனம் அரேபியக் குதிரைபோல உலகத்து ஆசைகளைநோக்கி ஓடுகிறது. இப்படி இருந்தால் எந்த நேரத்தில் கடவுளை நினைத்து வாழமுடியும்?

சில கருத்துக்கள் பழமொழிபோல சமுதாயநலம் சார்ந்து அமைகின்றன. ”வயது முதிர்ந்தவனோடு திருமண உறவுக்கு எதிர்ப்பு,  இரு மனைவியர் வாழ்க்கைக்கு எதிர்ப்பு,  கீழ்ச்சாதி வந்தான் என்ற பேச்சுக்கு எதிர்ப்பு ” எனச் சமூக அவலங்களை அகற்ற முயல்கிறார்.

’லம்போதர லகுமிரா’,  ’கஜவதனா பேடுவே’, ’பாக்யதலட்சுமி பாரம்மா ”, என்று எல்லோரும் அறிந்த சில பாடல்கள் அவருடைய எளிமை நடைக்கும்,  எவரும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் சான்றுகளாகும்.

புரந்தரதாசருக்குப்பின் வந்தவர் அவர் மரபையே பின்பற்றினர். இன்றும் அது தொடரப்படுகிறது. தியாகராஜரும் ராகம், பாவம், தாளம். என்று புரந்தரதாசர் வழியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’தாசர் என்றால் புரந்தரதாசர்தான்!’ ”என்ற அடைமொழியோடு கன்னடமண்ணில் இன்றும் போற்றப்படுபவராக உள்ள அவரையும், கனகதாசரையும் இணைத்து ’கனக புரந்தரா’ என்ற செய்திப்படம் ஒன்று கிரீஷ் கர்னாடால் இயக்கப்பட்டுள்ளது

கனகதாசர்

கனகதாசரின் இயற்பெயர் திம்மப்பா. தந்தையைப்போல அவரும் படைத்தளபதி.  ஒருசமயம் போரில் படுகாயமடைந்து மயங்கிக் கிடந்தார். அந்நேரத்தில் கிடைத்த வெங்கடேசப்பெருமானின் அருளால் போர்வாழ்க்கையை ஒதுக்கி, பக்திமார்க்கத்தை தனக்குரிய பாதையாக்கிக் கொண்டார். திம்மப்பா கனகப்பாவாக மாறியது அந்தச் சூழலில்தான் தாசகூடத்தில் வியாசராயனின் சீடனாக கனகப்பா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 தாசகூடஅமைப்பு அவரைக் கனகதாசராக்கியது. தனது மாணவர்களில் மிகச்சிறந்தவர் கனகதாசரே என வியாசராயனே குறிப்பிட்டு உள்ளார். ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும்  அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது கனகதாசரின் கொள்கையாகும். இதை அடிப்படையாக்க் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன. மோகனதரங்கிணி, நளசரித்ரே, ராமதான்ய சரித்ரே ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

மோகனதரங்கினி பாணாசுரனின் மகள் உஷா,  பிரத்யும்னாவின் மகன் இருவருக்கும் இடையேயுள்ள காதலை வெளிப்படுத்தும் நூலாகும். கேசவனின் பக்தனான பாணாசுரனிடம் சிவபக்தனான பிரத்யுமனா இளம்காதலர்களை ஒன்று சேர்த்துவைக்க உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதாக ஒரு காட்சி  இடம்பெறுகிறது. இங்கு சைவத்தை வைணவத்துடன் இணைக்கவிரும்பும் கனகதாசரின் பரந்த    பார்வையைக்  காணமுடிகிறது. மோகனதரங்கிணி பலராலும் போற்றப்படுவதற்கு இது ஒரு காரணமாகும்.

ராமதான்ய சரித்ரே நாட்டுப்புறக்கதை அமைப்பாலானது. ஏறத்தாழ ஐம்பத்தெட்டு பாடல்களைக் கொண்டது.

ராமன் நீதிபதியாக அரசவையில் இருக்கும்போது அரிசிக்கும், கேழ்வரகுக்கும் இடையே யார் உயர்வானவர்கள் என்பது குறித்துச் சண்டை ஏற்படுகிறது. வழக்கை நடத்தும் ராமன் இரு தானியங்களையும் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவரை அடைத்து வைக்கச் சொல்கிறான். கெடு முடிந்ததும் அவை எடுத்துவரப்படுகின்றன. பல நாட்களுக்குப் பிறகும் ராகி தன் சக்தியை இழக்காமலிருக்க அரிசி தன்சக்தி முழுவதையும் இழந்திருந்தது. ராமன் கேழ்வரகின் அருமையை உலகிற்குப் புரியவைத்ததாக ஒரு நிகழ்வு அமைகிறது.

கேழ்வரகை ஏழைகளின் வடிவாகவும்,  அரிசியைப் பணக்காரர்களின் வடிவாகவும் உள்ளுறையாகப் பாடல் வெளிப்படுத்துகிறது.  மனிதனின்      உயர்வு, அவனுடைய  குணம், செயல்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, சாதியால் தீர்மானிக்கப்படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகிறது.

நளசரித்ர ”நளனின் வரலாற்றை விரிவாகக் கூறுவதாகும்.

கனகதாசரின் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பலவாக உள்ளன.  நமக்குள்ளே இருக்கிற செருக்கு,  பொறாமை, கோபம் ஆகியவற்றை அடக்கத்  தெரியாவிட்டால் புண்ணிய ஸ்தலங்களில் நீராடுவது பலன் தராது.  அறியாமை நிறைந்தவனோடு சண்டை போடுவதைவிட புத்திசாலியோடு போராடுவது உயர்வானது.

அவர் பார்வையில் தீண்டாமை என்பது, நல்லொழுக்கத்தை போதித்துவிட்டுத் தான் கடைப்பிடிக்காமல் இருப்பது; அரசனுக்குப் பணிவிடை செய்துகொண்டே   அவனைப்     பழிப்பது; பரத்தையின்மீது காமம்      கொள்வது; நோயாளிக்கு விஷத்தை மருந்தோடு தருவது.

எது உண்மையாக விலக்கப்பட வேண்டியதோ அதுதான் தீண்டாமையாகிறது

அநியாயம், தீயநடத்தை, வெறுப்பு, பொறாமை, ஆகியவை நிறைந்த சமூகத்தைக் கடிகிறார். மனிதனாகப் பிறந்துவிட்டு அவனுக்குரிய பண்புகளைத் தொலைப்பது விவேகமாகாது என்கிறார். தன் பேச்சு போதிப்பதோடு நின்றுவிடக்கூடாது என்ற நிலையில் தோற்றம் தொடங்கி வாழ்க்கைமுறைவரை எல்லாவற்றிலும் எளிமையை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையை இறைவனின   மீதான முழுநம்பிக்கையோடு   வாழச்சொல்கிறார்.

“வருவதெல்லாம் வரட்டும் கோவிந்தன் தயை இருக்கட்டும்” [பந்ததெல்லா பரலி] என்பது பாடல். மாயையான மகிழ்ச்சியைப் பின்தொடர்வது கூடாதென்கிறார்.

பெண்ணைப் பற்றிய உயர்வான சிந்தனையும் அவர் பாடலில் வெளிப்படுகிறது. ”பெற்ற தாயைக் காட்டிலும் உயர்வானவருண்டோ” [ஹெத்த தாயிந்தா..] சடங்குகள்,  குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்க்கிறார்.

”குலம் குலம் குலமென்று அலைவதில் பயனில்லை. எது நன்மை தருமோ, எது மனிதகுலத்துக்கு உயர்வோ அதைச் செய்வதுதான் உயர்வென்கிறார்[குல குலவெந்து].

கிருஷ்ணன் மீது கனகதாசர் கொண்ட பக்தியைக் காட்டும்வகையில் ஒரு சுவையான கதையும் சொல்லப்படுகிறது.

ஒருநாள் கனகதாசரின் குரு தன் மாணவர்களை அழைத்து அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வாழைப்பழம் தருகிறார். யாரும் பார்க்காதபடி பழத்தைச் சாப்பிடச் சொல்கிறார்.  சில மாணவர்கள் மரத்தின் பின்னால் நின்றுகொண்டும், சிலர் கட்டிலினடியில் மறைந்து உட்கார்ந்தும், கதவுகளை மூடிவைத்தும் பழத்தைத் தின்றுவிடுகின்றனர். குரு கேட்கும்போது அனைவரும் தாம் புத்திசாலித்தமாகச்  செய்ததை மகிழ்ச்சியோடு சொல்கின்றனர். குரு கனகனிடம் கேட்கிறார். கனகன் வாழைப்பழத்தை வருத்தமாகத் திருப்பித் தருகிறார். யாரும் பார்க்கமுடியாத இடத்தைத் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார். எல்லோரும் சிரிக்கின்றனர். குரு மேலும் விவரம் கேட்கும்போது கிருஷ்ணன் இல்லாத இடமேயில்லை  என்றும் அதனால் தன்னால் பழத்தைத் தின்னமுடியவில்லை என்றும் விவரிக்கிறார்

கனகதாசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு அவருடைய வேதாந்தப் பண்பிற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது. யாருக்கு ’மோட்சம்’  கிடைக்கும் என்பது பற்றி அறிஞர்கள் கூடியிருக்கும் இடத்தில் விவாதம்நடக்கிறது. அங்கிருக்கும் கனகதாசர் தனக்குத்தான் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார்.  நான் போனால், போவேன் [நானு ஹோதரே ஹோதேனு] என்று அவருடைய விளக்கம் அமைகிறது. கூடியிருந்த  பண்டிதர்கள் அதிர்ந்து போகின்றனர்.

அதற்கான விளக்கம் கேட்டபோது, யார் ’நான்’ என்பதை விட்டொழிக்கிறார்களோ அவர்கள்தான் மோட்சம் பெறமுடியும் என்று வேதாந்த பாணியில் பதிலளிக்கிறார்.

நீ மாயைக்குள்ளா என்ற கனகதாசரின் கீழ்வரும் பாடல் எல்லாவுணர்வுகளும் கொண்டதாக  உள்ளது

நீ மாயையின் படைப்பா, அல்லது மாயை உன் படைப்பா?

நீ உடலின் ஓர் அங்கமா, அல்லது உடல் உனது அங்கமா?

இடமென்பது வீட்டிற்குள்ளா, வீட்டுக்குள் இடமா, அல்லது வீடு இடத்திற்குள்ளா?

அல்லது இடமும் வீடும்  பார்ப்பவரின் கண்களுக்குள்ளா?

கண் மனதுக்குள்ளானதா, அல்லது மனம் கண்ணிற்குள் அடக்கமா?

அல்லது கண்ணும் மனமும் உனக்குள்ளானதா?

இனிப்பு சர்க்கரைக்குள் இருக்கிறதா, அல்லது சர்க்கரை இனிப்பிற்குள்ளா?

அல்லது இனிப்பும் சர்க்கரையும் நாவில்லுள்ளதா?

நாவு மனதிற்குள்ளா, மனது நாவிற்குள்ளா?

மணம் பூவிலா, அல்லது பூவில் மணமா?

அல்லது பூவும் மணமும் மூக்கிலா?

என்னால் சொல்லமுடியாது காகினலே ஆதிகேசவா!

ஓ. . . ஒப்பற்ற எல்லாம் உனக்குள் மட்டுமா?”

என்ற  பாடல்  இன்றும் அவர்  கவித்துவத்திற்கு அடையாளமாகச்                             சொல்லப்படுகிறது.

’யாக்கே தயே மாடல்லா’,” ’பாரோ கிருஷ்ணையா,’ ’தாசனாக பேக்கோ’, ’சதாசிவனாக பேக்கோ,’ ’நம்மம்மா  சாரதே உமா மகேஸ்வரி”’, ’தாசர தாசர மனேய’, ”ஆகியவை பலரும் அறிந்த பாடல்களில் சிலவாகும்.   கனகதாசரை ’விஷ்வபந்த’” என்று கன்னட உலகம் போற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

***   ***   ***

3 Replies to “‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்”

 1. மிகஅருமையான பகிர்வு. நல்ல ஆழ்ந்த விளக்கங்கள். மிக்க நன்றி மீனா அவர்களே! தங்கள் இலக்கியப்பணி சிறந்து வளரட்டும்.

 2. தாசர் சாஹித்யங்களில் காணப்படும் விஷயங்கள் யாவை என்று வெகு விரிவாக விளக்கியுள்ளது உங்களது வ்யாசம். வாழ்த்துக்கள்.

  தீண்டாமை என்ற இழிசெயலைக் கண்டித்தல், ஆத்ம குணங்களை விதந்தோதுதல், பாஷண்டித் தனத்தினை சாடுதல், வைராக்யத்தின் பெருமை, வேத உபநிஷத புராணத்தத்துவங்களை அழகுற எளிமையாக விளக்குதல்………………………..

  \\ வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம், மாச்சர்யம், கோபம் ஆகியவைகளோடு வாழ்தல், நாவில் மந்திரம் சொல்லிக்கொண்டு மனதை அலையவிட்டு வெளியில் பரமநல்லவனாகக் காட்டிக்கொள்ளுதல் என்பது மேடை வேடம்போட்டு வாழும் சோற்றுஞானம் என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார். \\\

  அருமை. ஸ்வர்ணாக்ஷரங்களால் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள். காமக்ரோதலோப மோஹ மதமாத்சர்யங்களை அஹங்கார மற்றும் மமகாரப் போர்வையால் போர்த்திக்கொண்டு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மக்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் வேண்டுமானால் ஏமாற்றி மகிழலாம். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனை யாரும் ஏமாற்றி விடமுடியுமோ?

  \\ தாசரந்தரே புரந்தரதாசரய்யா \\

  வெகுவாக பரிச்சயமானவர்கள் புரந்தர தாசரும் கனகதாசரும்……. ஆனால் அருளாளர்களே புரந்தர தாசரின் பெருமையை தாசரென்றாலே அது புரந்தரதாசர் தான் என்னுகையில் அவர் பெருமை விளங்குகிறது.

  \\ மோகனதரங்கினி பாணாசுரனின் மகள் உஷா, பிரத்யும்னாவின் மகன் இருவருக்கும் இடையேயுள்ள காதலை வெளிப்படுத்தும் நூலாகும். \\

  உஷா அனிருத்தனிடையேயான காதலும் அதற்கடுத்து அவர்களது விவாஹமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது. பின்னர் பல மொழிகளிலும் பல கவிகளும் இதை அழகுற காவியங்களாகப் பாடியிருக்கிறார்கள்.

  தாசர நாமா கர்நாடக சங்கீதத்தில் மட்டுமின்றி ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்திலும் பாடப்படுகிறது. காலம்சென்ற ஸ்ரீ பீம் சேன் ஜோஷி அவர்கள் நிறைய தாசர் பதங்களை ஹிந்துஸ்தானி பத்ததியில் பாடியிருக்கிறார்.

  குறிப்பாக இவர் ஹிந்துஸ்தானி பத்ததியில் பாடியிருக்கும் பாக்யதாலக்ஷ்மி பாரம்மா பாடல் ரொம்ப பாபுலர். ஸ்ரீமதி நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் கூட வழக்கமாக கர்நாடக சங்கீதத்தில் மத்யமாவதி ராகத்தில் பாடுவதைப் போலன்றி ஹிந்துஸ்தானி ராகத்தில் இந்தப்பாடலைப் பாடியிருக்கிறார். யூ ட்யூபில் நித்யஸ்ரீ பாடியுள்ள ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாக்யதாலக்ஷ்மி பாரம்மா பாடலின் விழியம் கிட்டுகிறது.

  இதைத் தவிர கர்நாடகத்தைச் சார்ந்த ஸ்ரீ ஃபயாஸ் கான் சாஹேப் அவர்கள் தற்போது பல இடங்களில் ஹிந்துஸ்தானி பத்ததியில் தாசரநாமா பாடி வருகிறார். அதுவும் ரொம்ப பாபுலர்

 3. மிகச்சிறந்த கட்டுரை ஆனால் வியாசராயன், ஸ்ரிபாதாராயன் என்பதற்கு பதில் வியசாராயர், ஸ்ரிபாதாராயர் என்று இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அவர்களெல்லாம் போற்றுதுற்குரிய மகான்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *