வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

Tamil Nadu The Land of Vedas“தர்மம் மிகுந்த கலாச்சாரத்தை உலகுக்குக் கொடுக்கக்கூடிய ஒரே தேசம் இந்தியா தான். உலகுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் கொடுப்பவர்களிடம் தர்மம் இருக்க வேண்டும். ஆகவே நாம் தர்மத்தின் வழி நடந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அதை வளர்க்கவும் வேண்டும். நமது தர்மத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். முக்காலத்தையும் யோசித்துச் செயல்பட்ட தேசம் இந்தியா. முக்காலமும் உணர்ந்து உலகுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுக்கக் கூடியது நமது தேசம். நமது நாகரீகத்துக்கு வேதப் பண்பாடே அடிப்படை. ஆகவே நமது வேதப் பண்பாட்டை கீழிருந்து வளர்க்க வேண்டும். ஆரம்ப ஞானம் சொல்லிக்கொடுத்து, கல்வி மூலம் புரிய வைத்து, கலைகள் மூலம் வளர்த்து, ஆராய்ச்சிகள் மூலம் நிலை நிறுத்த வேண்டும். வேதம் நிறைந்த நம் தேசத்தில், பேதமும் வேஷமும் அதிகமாகி வருகின்றன. பேதம் அழித்து வேஷம் ஒழித்து வேதம் வளர்க்க வேண்டும். நம் தேசத்தின் பொதுவான பாஷை சம்ஸ்க்ருதம். அம்மொழியின் சாயலும் தொடர்பும் இல்லாத மொழியே நம் தேசத்தில் கிடையாது. ஆகவே சம்ஸ்க்ருதத்தைக் கொண்டு, பன்முகங்களைக் கொண்ட இந்த தேசத்தை ஒருங்கிணைக்க வேண்டும். தேசத்தில் ஒருங்கிணைப்பு வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார் காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

தொல்லியல் துறையில் பல வருடங்களாகச் சிறந்த சேவை செய்து வரும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஆர்.நாகஸ்வாமி அவர்கள் எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தியாகராய நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடந்தது. அப்போது ஆசியுரை வழங்கிய பூஜ்ய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேற்கண்டவாறு பேசினார்.

அவர் தன்னுடைய ஆசியுரையில், டாக்டர் நாகஸ்வாமி அவர்களின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அவற்றில் சொல்லப்பட்டுள்ள நமது கலாச்சாரப் பெருமைகளைப் பற்றியும் பேசினார். மேற்கிலிருந்து கிழக்கு வரைப் பரந்து விரிந்து இருந்த நமது பாரத தேசம் தற்போது குறுகிவிட்டாலும், இப்போது அங்கேயுள்ள நாடுகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மூலம் நமது வேதப் பண்பாடு எப்படி உலகெங்கும் பரவியிருந்தது என்பது நிரூபணம் ஆகிறது என்றார். டாக்டர் நாகஸ்வாமியின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள காம்போஜம் (கம்போடியா) நாட்டு கல்வெட்டு ஒன்றில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் பலவற்றை விளக்கிச் சொன்னார் ஸ்வாமிகள். “இந்த ஸ்லோகங்களில் மூன்று வேதங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன; மும்மூர்த்திகளைப் பற்றிப் பேசுகின்றன; அனைத்து மக்களுக்கும் அவரவருக்கு உரிய விதத்தில் வாழ்க்கை வசதி செய்துதரப்பட்டிருந்ததையும், அதிதிகள் எப்படி கௌரவத்துடன் விருந்தோம்பப்பட்டனர் என்பதையும், தர்மத்தைப் பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களிடையேயும் மக்களிடையேயும் எப்படி இருந்தது என்பதைப் பற்றியும், தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் உண்டு என்பதையும், அனைத்து சமுதாயத்தினரின் நன்மைக்காகவும் அரசாட்சி நடத்தப்பட்டதையும், கோவில்கள் எவ்வளவு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன என்பதையும், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எவ்வாறு மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டன என்பதையும், காஞ்சி முதல் சீனா வரையிலான பல தேசங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இந்த ஸ்லோகங்கள் விளக்கிச் சொல்கின்றன” என்று கூறினார் ஸ்வாமிகள்.

Tamil Nadu - The Land of Vedas-1

“தர்மம் தழைத்தோங்கிய தேசம் பாரத தேசம். 5000 வருட கலாச்சாரம் நம்முடையது. அதற்கு மேலும் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் பேச்சு வழியில் வாய்மொழி மூலமாக பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்துள்ளது நமது வரலாறு. எழுத்து என்பது ஆரம்பிக்கப்பட்ட பிறகு 5000 வருட பண்பாடு ஓரளவுக்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சரியான வரலாறு கொண்டுவரப்பட வேண்டும். சரியான வரலாறு மக்களிடையே சொல்லப்பட வேண்டும். தமிழகத்தின் உண்மையான வரலாறு மக்களுக்குத் தெரியவேண்டும். தமிழகத்தில் வேதங்களும், வேத நாகரீகமும், வேதப் பண்பாடும் எவ்வாறு தழைத்தோங்கியிருந்தன என்பதை இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. தமிழகம் வேதம் தழைத்தோங்கிய தேசம் என்பதை நிறுவுகிறது இந்நூல். இந்நூலை எழுதியுள்ள நாகஸ்வாமி பெரியவாளின் அனுக்ரஹத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர். அவர் இத்துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்; மேலும் பல நூல்களைக் கொண்டு வரவேண்டும்” என்று ஆசியுரை வழங்கினார் ஸ்வாமிகள்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன்னுடைய நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார் டாக்டர் நாகஸ்வாமி. அவர் தன்னுடைய அறிமுக உரையில், “புத்தூர் என்று ஒரு கிராமம் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் தாயாரின் பெயரில் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்கிற பெயரளித்து வேதங்களை வளர்த்தான். 1080 வேத பண்டிதர்களை வசிக்கச் செய்தான். அங்கே வேதக் கல்லூரி நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான வைதீக மாணவர்கள் எப்போதும் கல்வி கற்று வந்தார்கள். அவ்வூரில் ஒரு தாமரைக்குளம் இருந்தது. அக்குளத்தில் வளரும் தாமரைகள் பெரிதாக மலர்ந்திருக்கும். அதக் குளம் இன்றும் இருக்கிறது. அந்தக் குளத்துத் தாமரைகளை இங்கே மேடையில் இருக்கும் அறிஞர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கத் தருவித்திருக்கிறேன். அந்தக் குளமும் தாமரை மலர்களும் இன்றும் இருந்தாலும், அந்தக் கிராமத்தில் தற்போது ஒரு வைதீகப் பிராம்மணர் கூட இல்லை. நான்கு வேதங்களும் தழைத்தோங்கிய, 1080 வேத பண்டிதர்களும், நூற்றுக்கணக்கான வைதீக மாணவர்களும் கல்வி கற்ற அந்த சதுர்வேத மங்கலத்தில் இன்று ஒரு வைதீக பிராம்மணர் கூட இல்லை” என்று தற்போதைய நிலையை எடுத்துக்கூறினார்.

“வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்ற பாரதியாரின் கூற்றுப்படி தமிழகத்தில் வேதம் தழைத்தோங்கித்தான் இருந்தது. தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் வேத நாகரீகத்தையும் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி.

Tamil Nadu - The Land of Vedas-2

அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் அரசாட்சி எப்படி நடந்தது; நீதி பரிபாலனம் எவ்வாறு நடத்தப்பட்டது; நீதிமன்றங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன; தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன; வேட்பாளருக்கு வேண்டிய தகுதிகள் என்ன; அவர்கள் எவ்வாறு, எதற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்; தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளரின் ஏழு தலைமுறைகள் தேர்தலில் பங்கேற்கத் தடை; ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒரு முறை தேர்தலில் வேட்பாளராகப் பங்கேற்றால் அவருடைய மூன்று தலைமுறையினர் அடுத்து வரும் தேர்தல்களில் பங்கேற்கத் தடை; வரிகள் எப்படி விதிக்கப்பட்டன; வருவாய் எப்படி இருந்தது; ஆட்சியில் வேளாண்மையின் பங்கு; அரசாட்சியில் கிட்டத்தட்ட 80 சதவிகித உயர்நிலைப் பதவிகள் வேளாளர்களிடம் இருந்தது; அவர்கள் மூவேந்தர் வேளாளர்கள் என்று அழைக்கப்படது; போன்ற ஏராளமான பல தகவல்கள் நமக்குக் கல்வெட்டுகள் மூலமும் செப்புப்பட்டயங்கள் மூலமும் கிடைக்கின்றன” என்றார்.

“மக்களை தர்மத்தின் வழி நடத்திச்செல்ல அனைத்து வேத சூத்திரங்களும், தர்ம சாஸ்திரங்களும் பயன்பட்டன. ஆபஸ்தம்ப, ஆஸ்வலாயன, போதாயன சூத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு, அதிதியை விருந்தோம்புவதில் கூட சூத்திரங்களில் சொல்லப்பட்ட விதிகளைப் பின்பற்றியுள்ளார்கள். ஜாதி வேற்றுமைகள் பாராட்டாமல் இருந்துள்ளார்கள். எப்படி மோக்ஷம் அடைவது; எப்படி தோஷங்களைத் தவிர்ப்பது போன்றவற்றிற்கெல்லாம் “அத்யாத்ம வித்யா” என்கிற பாடத்திற்கு ஆதி சங்கரர் அருளிய உரையைப் பின்பற்றியிருக்கிறார்கள். கிராமங்கள் அளவில் பிரச்சனைகளுக்கும் வழக்குகளுக்கும், தீர்வு அளிக்கும் பொறுப்பு வைதீக பிராம்மணர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. கீழ்நிலை மக்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்பட்டிருந்தன; அவர்களுக்கு வரிவிதிப்பு இல்லை. அனைத்து மக்களுக்கும் வேறுபாடின்றி “சம தர்சனம்” என்கிற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. மேற்கிலிருந்து கிழக்கு வரையிருந்த அனைத்து தேசங்களிலும் நிலவியிருந்த வேத நாகரீகத்தை நிறுவும் விதமாக சம்ஸ்க்ருத ஆவணங்கள் கிடைத்துள்ளன. உதாரணத்திற்கு, காம்போஜ (Cambodiya) தேச அரசர்கள் தினமும் தேவ-ரிஷி-பித்ரு தர்ப்பணங்கள் செய்து வந்துள்ளனர். இலக்கிய, கல்வெட்டு சான்றுகளையும் ஆதாரங்களையும் கொண்டு தமிழகம் வேதங்கள் தழைத்தோங்கிய பூமி என்று நிறுவியிருக்கிறேன்” என்று கூறி தன்னுடைய நூலுக்கு அறிமுகம் தந்தார் டாக்டர் நாகஸ்வாமி.

அவருக்கு அடுத்தபடியாக உரையாற்றிய பஞ்சாப்/ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் ஜார்கண்ட்/பிகார் மாநிலத்தின் முன்னாள் ஆளுனருமான திரு.ராம ஜாய்ஸ் அவர்கள் தர்மம் பற்றியும், பாரதத்தில் எப்படி தர்மம் தழைத்தோங்கியது என்றும், பெருமையுடன் பேசி, பின்னர் இன்றைய சூழ்நிலையில் தர்மம் எப்படிக் குறைந்து வருகிறது என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “மகாபாரதத்தில் கர்ண பர்வம் தர்மத்தைப் பற்றிப் பேசுகிறது. பாரத தேசத்து மக்கள் தர்மத்தின் வழி நடந்தார்கள். தர்மத்திற்கு எதிரான ஆசையையும், செல்வத்தையும் நிராகரித்தார்கள். ஆகவே தேசத்தில் தர்மம் தழைத்தோங்கியது. ஆனால் தற்போது, ஆசைகள் வசப்படுதலும் செல்வங்களைத் தேடுதலும் அதிகமாகி வருகின்றது. எனவே தர்மம் க்ஷீணித்து வருகின்றது. இருப்பினும் தர்மம் என்பது நமது தேசத்தில் மட்டும்தான் ஓரளவுக்கு நிலைத்துள்ளது. அதற்கு வேதங்களே அடிப்படைக்காரணம். “சர்வ தர்ம சமபாவனை” என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான். அது நம்முடைய சனாதன தர்மம் தான். மற்றவற்றைத் தர்மம் என்று கூறுவதே பிழை” என்றார்.

Tamil Nadu - The Land of Vedas-3

அவர் மேலும் பேசுகையில், “நமது அரசியல் சாஸனத்தின் 14 வது க்ஷரத்து (Article 14) சமத்துவம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அந்தச் சமத்துவம் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்திலேயே பேசப்பட்டுவிட்டது. உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை; அனைவரும் சமமே என்று ரிக் வேதம் சொல்கிறது. நமது உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தில் “யதோ தர்ம: ததோ ஜய:” என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது “எங்கெல்லாம் தர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஜெயம் (வெற்றி) இருக்கும்” என்று அர்த்தம். உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தில் இப்படி குறிக்கப்பட்டுள்ளது பல நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்குமே கூட தெரியாது. தமிழகம் பெற்றெடுத்த நிறந்த கவிஞரான சுப்பிரமணிய பாரதியார் “முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புறவொன்றுடையாள்; இவள் செப்புமொழி பதினெட்டுடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்று அற்புதமாகப் பாடியுள்ளார். அவரின் இந்தப் பாட்டை மேற்கோளாகக்கொண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்தேன். என்னுடைய தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்தது. சட்டம் என்பது நோயைத் தீர்க்கும்; தர்மம் நோய் வராமல் தடுக்கும் (Law is Curative; Dharma is Preventive). ஆகவே, இன்றைய சூழ்நிலையில் நமது தேசத்துக்கான ஒரே தீர்வு தர்மத்தை மீண்டும் எழுப்புவதேயாகும்” என்றார்.

ராம ஜாய்ஸ் இறுதியாக, “டாக்டர் நாகஸ்வாமியின் இந்நூல் சமூக, அரசியல், பொருளாதார, சமய என்று அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. இந்நூல் வேத நாகரீகத்திற்கும் வேதப் பண்பாட்டிற்கும் தமிழகத்தின் பங்களிப்பைப் பற்றிய ஒரு பல்பொருள் விளக்கமாகவும் கலைக்களஞ்சியமாகவும் விளங்குகிறது. இதை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்” என்று கூறி முடித்தார்.

Tamil Nadu - The Land of Vedas-4

அவர் உரையாற்றிய பிறகு, பூஜ்ய ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகளின் ஆசியுடன் நூல் வெளியிடப்பட்டது. மேடையில் வீற்றிருந்த அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. நூலின் முதல் பிரதியை கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ வானவராயர் அளிக்க, தமிழகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் டாக்டர் C.K.கரியாலி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய வானவராயர், எளிமையான மொழியில் நகைச்சுவை ததும்பப் பேசினார். அவர் பேசுகையில், “உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றியபோதும் சரி, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதும் சரி, பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரித்து வரவேற்பு அளித்தது நமது கலாச்சாரத்துக்குத்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும். ஒவ்வொரு மொழியும் பாரத கலாச்சாரத்துக்குப் பங்களித்துள்ளன. சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் தேவையில்லை. எங்கிருந்து வந்தாலும், உயர்வான சிந்தனைகளைப் பாரதம் ஏற்றுக்கொள்ளும். நமது கலாச்சாரத்தின் பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அவற்றை நிரந்தரமாக நிலை நிறுத்த வேண்டும். அதற்கு, வளரும் தலைமுறையினரிடம் அவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்குண்டான செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். கல்விப்பாடங்களை அதற்குத் தகுந்தாற் போல மாற்றியமைக்க வேண்டும்” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “நம்முடைய 5000 வருட கலாச்சாரத்தைப் பற்றி நாம் ஒன்றும் அறியாமல் இருக்கிறோம். ஆனால் மேல்நாட்டு அறிஞர்கள் நமது கலாச்சாரத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நம்முடைய கலாச்சரத்தை நாமே மறந்துவிட்டால் அப்புறம் இளைய தலைமுறை முகவரியின்றிப் போய்விடும். இந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகையில், டாக்டர் நாகஸ்வாமியின் நூல் பெரும் நம்பிக்கை அளிக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக அயராது உழைத்து வருகிறார். இந்த நூலிற்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஆனால் இவ்வளவு ஆண்டுகாலம் உழைத்துக்கொண்டிருந்தும், அவருக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கப்படாமல் இருக்கிறது. நாகஸ்வாமி போன்றவர்கள் எதையும் எதிர்பார்த்து உழைப்பதில்லை. தேசபக்தியுடன் ஒரு கடமையாக நினைத்தே தங்களின் பணியைச் செய்கின்றனர். அவர்களை அங்கீகரிப்பது நமது ஆட்சியாளர்களின் கடமை; நமது கடமை. இந்த நூலை நமது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பட்ட மேற்படிப்புக்கான பாடங்களில் ஆதார நூலாக, மேற்கோள் புத்தமாக சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.

Tamil Nadu - The Land of Vedas-5

அடுத்ததாக தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர் ஸ்ரீ வேதாந்தம்ஜி, டாக்டர் நாகஸ்வாமிக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பின்னர் பேசிய வேதாந்தம்ஜி, “இந்தோனேஷியாவின் முன்னாள் ஜனாதிபதி சுகர்னோ வாழ்வில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். நமது தலைநகர் தில்லியில் ரகுவீரா என்கிற இந்தியவியல் ஆய்வாளர் இருந்தார். அவர் இந்தோனேஷியா சென்ற சமயத்தில், சுகர்னோவின் தந்தையாருக்கு மகனாக சுகர்னோ பிறந்திருந்தார். சுகர்னோவின் தந்தையார் ரகுவீராவை வரவேற்று, மரியாதை செய்து, பின்னர் புதிதாகப் பிறந்துள்ள தன் குழந்தைக்கு நல்ல பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது மஹாபாரதத்தில் தர்மவானாக விளங்கிய கர்ணனின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார் ரகுவீரா. “கர்ணன் தர்மவானாக இருந்தாலும் அதர்மவாதிகளான கௌரவர்கள் பக்கம் நின்றவன் ஆதாலால் கர்ணன் என்பதற்குப் பதிலாக சுகர்ணன் என்று பெயர் வைக்கிறேன்” என்று சொல்லி, தன் மகனுக்கு “சுகர்னோ” என்று பெயர் சூட்டினார் அவர் தந்தை. இஸ்லாமியர்களாக இருந்தாலும் நமது கலாச்சாரத்தைப் போற்றியவர்கள் அவர்கள்” என்றார்.

வேதாந்தம்ஜி மேலும் பேசுகையில், “வந்தாரை வாழவைத்த தேசம் நமது பாரத தேசம். பாரத தேசம் உலகம் முழுவதும் பரவி இருந்தது. ஆனால் தற்போது மிகவும் குறுகிவிட்டது. பாரத வர்ஷம், பரத கண்டம் எல்லாம் இன்று எங்கே? ஏன் இப்படி ஆயிற்று? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு தொன்று தொட்டு வேத நாகரீகத்தைக் கடைப்பிடித்து வந்த நாடாகும். புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் வேதப் பண்பாட்டைப் பற்றிப் பேசுகின்றன. தமிழகமெங்கும் நான்கு வேதங்களையும் வளர்த்த “சதுர்வேதி மங்கலங்கள்” இருந்தன. “வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்கிற பாரதியாரின் கூற்றுப்படி தமிழகமெங்கும் வேதங்கள் நிறைந்திருந்தன. தமிழ் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்திருந்தன. அந்தப் பெருமை வாய்ந்த நிலைக்கு மீண்டும் தமிழகத்தைக் கொண்டுவர நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

இறுதியாக, “ஆங்கிலேயர் ஆட்சியின் போது, பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய கல்வித்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான மசோதாவைத் தாக்கல் செய்த மெக்காலே என்பவர், இந்தியாவில் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வித்திட்டம் நிலவுகிறது. அது இருக்கும் வரை நாம் அந்தக் கலாச்சாரத்தை அழித்து மக்களை அடிமைப்படுத்த முடியாது. நமது ஆங்கிலக் கல்வித்திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் அப்போதுதான் அந்நாட்டை நாம் முழுமையாக அடிமைப்படுத்தி ஆள முடியும், என்று கூறி மசோதாவைத் தாக்கல் செய்து, அம்மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்றுவரை ஆங்கிலேயக் கல்வித்திட்டத்தைத்தான் நாம் பின்பற்றி வருகிறோம். ஆங்கிலேயரை முன்மாதிரியாகக் கொண்ட இன்றைய அரசியல்வாதிகள், குறிப்பாக திராவிடக் கட்சியினர், மோடி அரசு வேதப் பண்பாட்டை மீண்டும் கல்வித்திட்டத்தில் சேர்க்க முயலும்போதும், சம்ஸ்க்ருத மொழியைப் பாடத்திட்டத்தில் சேர்க்க முயலும்போதும், காவி மயமாக்கல் என்று சொல்லி எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்புகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மாதிரியான சூழ்நிலையில், டாக்டர் நாகஸ்வாமியின் புத்தகம் நமக்கு பெரும் நம்பிக்கையளிக்கிறது. இந்தப் புத்தகத்தை நாம் மாணவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். தொல்லியியல் துறையிலும், அறிவுத்தளத்திலும் நாகாஸ்வாமி அவர்களின் சேவை அளவிடற்கரியது. இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது அளித்து கௌரவிக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

Tamil Nadu - The Land of Vedas-6

அதனைத் தொடர்ந்து, வேதாந்தம்ஜி 10 புத்தகங்கள் விலைக்கு வாங்கிக்கொண்டதாக, டாக்டர் நாகஸ்வாமி நன்றியுடன் அறிவித்தார்.

இறுதியாகப் பேசிய கலாக்ஷேத்ரா நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ப்ரியதர்ஷ்னி கோவிந்த் அவர்கள், “இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களுள் ஒன்றின் பிரதிநிதியாக நான் இங்கே வந்துள்ளேன். தேவதாசி கலாச்சாரம் மறைந்துவிட்டாலும், நாட்டிய சாஸ்திரமும், நடனக் கலையும் தொடர்வது போல, அக்ரஹாரங்களும் வேத பண்டிதர்களும் மறைந்து வந்தாலும் நமது ஆயிரமாயிரம் ஆண்டுகால வேதப் பண்பாடு ஓரளவிற்குத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நல்ல அமைப்புகளும், ஆச்சாரியர்களின் மடங்களும், நல்ல நிறுவனங்களும் அவற்றை அழியாமல் பாதுகாத்து வருகின்றன. சேர மன்னன் மஹாபாரத்தில் பங்கு கொண்டவன் என்பது சற்றே மிகைப்படுத்துதலாக இருந்தாலும், அந்தக் கதையானது பண்டைய தமிழகத்தின் கலாச்சாரத்தில் மஹாபாரதமும் பங்குகொண்டிருந்தது என்பதற்குச் சான்று பகர்கின்றது என்று இந்நூலில் டாக்டர் நாகஸ்வாமி கூறுகிறார். அவர் கூறியுள்ளது போல, புறநானுறு போன்ற சங்க இலக்கியங்கள் வேதப் பண்பாட்டைப் பேசுகின்றன. மணிமேகலை பௌத்த காவியமாக இருந்தாலும் வேத சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணம் வேதமுறைப்படி நடந்ததைச் சொல்கிறது” என்றார்.

அவர் மேலும், “தமிழகத்து மன்னர்கள் ராஜசூய யாகங்கள் நடத்தியவர்கள். “பல்யாகசாலைப் பெருவழுதி” என்று பாண்டிய மன்னர்கள் போற்றப்பட்டனர். சேரன் செங்குட்டுவன் ராஜசூய யாகம் நடத்தியுள்ளான். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காலத்திலெல்லாம் தமிழகம் முழுவதும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. நாயன்மார்களின் பாரம்பரியத்திலும் ஆழ்வார்களின் பாரம்பரியத்திலும் அனைத்து சமூகத்தவர்களும் இருந்தனர். தேவாரத் திருமுறைகளிலும், திவ்யப் பிரபந்தங்களிலும் அனைவரும் வேதங்களின் பெருமையைக் கூறியுள்ளனர். பண்டைய கல்வெட்டுக் குறிப்புகளில் “பிரம்மதேயம்” பற்றிச் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தமிழகத்தில் நிலவிய வேதப் பண்பாட்டைப் அறிந்துகொள்ள முடிகின்றது. கோவில்கள் உடைய வேத கிராமங்கள் இருந்தன என்பதை அறிந்துகொள்கிறோம். இம்மாதிரியான பல முக்கிய்மான விஷயங்களை உள்ளடக்கி, தமிழகம் வேதநாகரீகத்தின் அடையாளமாக, வேதப் பண்பாட்டைப் போற்றி வளர்த்த தேசமாக இருந்தது என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி இந்நூலில் நிறுவியுள்ளார் டாக்டர் நாகஸ்வாமி, இந்த நூலை எங்கள் கலாக்ஷேத்ராவின் மாணவர்களுக்கு ஆதார நூலாகப் பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று உறுதி கூறி முடித்தார்.

பிரபல பரதநாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம், முன்னாள் தேர்தல் ஆணையர் திரு.கோபால்ஸ்வாமி, மற்றும் பல அறிஞர்களும் வேத பண்டிதர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மஹாராஷ்டிராவிலிருந்து வந்த வேத பண்டிதர்களின் வேத கோஷத்துடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவடைந்தது.

புத்தகம் கிடைக்கும் இடம்:
TAMIL ARTS ACADEMY
No.11, 22nd Cross Street,
Besant Nagar, Chennai – 600090.
Phone: 044-24916005
புத்தகத்தின் விலை ரூ.900/

4 Replies to “வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு”

  1. மிகவும் பயனுள்ள ஒரு செய்தி தொகுப்பு. மிக்க நன்றி.
    இம்மாதிரி செய்திகளுடன் புத்தகம் கிடைக்குமிடம், ஈ-புத்தகமாக கிடைக்குமா, என்ற செய்திகளையும் குறிப்பிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    சூர்ய நாராயணன்

  2. மன்னிக்கவும். மறந்துவிட்டேன். புத்தகம் கிடைக்கும் இடம்

    TAMIL ARTS ACADEMY
    No.11, 22nd Cross Street,
    Besant Nagar, Chennai – 600090.
    Phone: 044-24916005

  3. Why Vijayendarar is seen sitting when everyone is seen standing while issuing/releasing the book?

    The mention of equal society in ancient time and importance of establishing equal society now by a few in this article seems paradoxical when someone is seen sitting, which shows what you guys want to establish in the society.

    All the people who vouch for Vedic/Hinduism live inside differently. Inside them lives core principle of Varnas. You guys celebrate and cherish it to the core.

    If someone digs-deep seeking more about the history of Hindu (the name itself cannot justify its presence or being to the religion – which is called Hindu religion, he/she happens to face/meet more paradoxes and truth.

    The survival of the so called Hindu religion – I would rather say that the texts of the religion has got nothing to do with assimilation of other orthodox or heterodox religions – lies with those Hindu institutions (மடங்கள்) and the authoritative religious figures of institutions.

    You guys keep talking about equality and bring equality to the society. However, none has brought/done monumental difference to our unequal society; rather you make sure the inequality is maintained clandestinely.

    If a few or someone from those institution had done it before, you do not need to talk about it now in meetings. Seriously speaking, religious institutions all the world have more power than the political parties or the constitutions. Cause, they have easy access to all the institutions (political parties, governments, et cetera) of a country.

    If the predecessors or the successors of those religious institutions had come truthfully out to the street to eradicate the inequalities based on Varna system, then there was not a need for thinkers/activities such as Periyar, Ambedkar, Jothiba Pule, et cetera., to come out to the streets to bring social changes.

    What are going to achieve by establishing the connection between Vedic and Tamil Culture or the benefit Tamil Culture or the society had acquired from Vedic. Why can’t you be concurrent?

    I would say if this nation would have reached a greater heights if there is no caste system at all. How many human resources are rejected education and prospects due to them being lower caste.

    We are not ready to learn from other nation. We still keep on boasting of our lineage, whereas nations in Europe have developed exponentially. If you look at the history those nation, they did not have much to boast of their predecessors. Even those nations too were fundamental once upon a time or over a period of time, however they came out of it and lead liberal society. They thrive exponentially technologically.

    We will never reach to the heights we want to unless we eradicate caste and come out of religion – which can be set aside as a faith to the corner of our home. We gotta move forward technologically. That will happen only when the state of mind of people inclusively changes.

    If we need to progress, we gotta shun religion and caste altogether. In order to become a liberal society, we should be open minded to think continuously, question the religion and its texts, shun the necessary things that are not contemporary. Otherwise, growth will be dragging like snail.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *