நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

அடுத்ததாக, பூர்வ பௌத்தன் பற்றிய கட்டுரை.

பார்ப்பனர்கள் செய்யும் மோசடிகளையெல்லாம் கண்டிக்கக்கூடிய நிறுவனமாக பௌத்தம் விளங்கியது. இதனால், பௌத்தம் மீதும் பௌத்தர்கள் மீதும் பார்ப்பனர்கள் தீராக் கோபம் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களின் மோசடிகளையோ, பௌத்தம் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளையோ அறிந்திராத கல்வியற்ற குடிகள் இந்நாட்டில் ஏராளம் இருந்தன. இத்தகைய கல்லாக் குடிகளை மந்திர தந்திரங்கள் சொல்லி பார்ப்பனர்கள் மயக்கி வந்தனர். நாளடைவில் பார்ப்பனர்களின் சொற்களே வேதங்கள் என்றாகி, பௌத்தமும் பௌத்தர்களும் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர். பௌத்தம் தனது நிறுவன பலம் குலைந்து, பிற ஆசிய நாடுகளுக்குள் வேர்விடத் தொடங்கியது. பௌத்தர்களோ – பௌத்த உண்மைகளில் வேரூன்றி நின்ற பௌத்தர்களோ – சமூகத்தால் புறக்கணிக்கப்-பட்டார்கள். சமூகக் கட்டமைப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டார்கள்; அவர்களது குடியிருப்புகள் ஊர்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன; அவர்களால், எல்லோருக்கும் பொதுவான நிலத்தையோ, நீரையோ பயன்படுத்த முடியாமல் போயிற்று; அவர்களுக்கு துணி வெளுக்க அனுமதி இல்லை என்றார்கள்; முடிதிருத்த உரிமை இல்லை என்றார்கள்; பொதுக் கருவூலங்களாக விளங்கும் கோவில்களில் நுழைய முடியாது என்றார்கள்; இறுதியாக, இவர்களெல்லாம் தீண்டத்தகாதவர்கள் என்று காரணம் சொன்னார்கள். கொண்ட கொள்கையில் காட்டிய பிடிப்பிற்காக பிறப்பைக் காரணம் காட்டி தண்டனை தரப்பட்டது. இப்படியாகத்தான், பௌத்தம் நொறுக்கப்-பட்டபொழுது, பௌத்தர்களும் நொறுக்கப்பட்டனர்.

இந்தக் கோட்பாடு அடிப்படையில் இரண்டு பெரிய தவறுகளைக் கொண்டது.

நூலாசிரியர் டி.தருமராஜ்
நூலாசிரியர் டி.தருமராஜ்

முதலாவதாக, புத்தர் பிறந்ததற்குப் பிறகுதான் பௌத்தம் தோன்றியிருக்கும். பரவியிருக்கும். அப்படியானால் அதற்கு முன்னாலிருந்தே இருந்து வந்திருக்கும் ஆதி தமிழர்களின் மதம் என்ன..? சிந்து சமவெளியில் கிடைத்த சான்றுகள் ஆதி சைவமே இந்த தேசத்தின் பூர்வ மதமாக இருந்திருக்க முடியும் என்றுதான் சுட்டிக்காட்டுகின்றன. பவுத்தத்துக்கு பழங்குடி வேர்களே கிடையாது. பழங்குடிகால சாதிகளுக்கு அப்படியானால் வேறு மதம் இருந்திருக்கும் என்றுதானே அர்த்தம். அது இயற்கை வழிபாடாக, முன்னோர் வழிபாடாக, ஆதி சைவக் கூறுகளைக் கொண்டதாகவே இருந்திருக்கும். அந்த வகையில் பிராமணியத்தை எதிர்த்தது என்ற கற்பிதத்தின் அடிப்படையில் தலித்களை பூர்வ பவுத்தர்கள் என்று சொல்வது அவர்களுடைய அதற்கு முந்தைய செழுமையான ஆன்மிக மரபை முற்றாகப் புறக்கணிக்கும் செயல்தான்.

அப்பறம் பவுத்தம் பிராமணியத்தை எதிர்த்தது என்பது மிகுந்த கேள்விக்குரிய விஷயமே. யாகங்களை எதிர்த்தது, பிற சடங்காசாரங்களை எதிர்த்தது என்பதையெல்லாம் சீர்திருத்த நோக்கிலான விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். புத்தர் தனது கோட்பாடுகளில் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்து சொற்பமாகவே பேசியிருப்பதைப் பார்த்தால் அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை என்ற முடிவுக்கே ஒருவர் வரவேண்டியிருக்கும். உண்மையில் அவர் தன்னை ஆரியராகவே முன்வைத்தார். அவர் முன்வைத்த லட்சிய மனிதர் என்பவர் அதி பிராமணரே. வேறு வார்த்தையில் சொல்வதென்றால் வேத கால மதமே புத்தர் முன்வைத்தது. அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்களே. அடுத்த புத்தர் பிராமண குலத்தில் தோன்றுவார் என்பதுதான் புத்தரின் பிரபல அறிவிப்பு. பெரும்பாலான பவுத்த நூல்கள் சம்ஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. புத்தர் உண்மையில் இந்து மதத்தின் ஞான மார்க்கத்துக்கு இணையான ஒன்றை முன்னெடுத்தவரே. கர்ம வினைக்கோட்பாட்டை அவர் ஏற்கவே செய்கிறார். அவருடைய கொள்கைகளில் பிரதானமான புலால் மறுப்பும் மது ஒறுப்பும் துறவு வாழ்க்கையும் தலித்களின் ஆன்மிகத்துக்கு முற்றிலும் எதிரானது. பவுத்தம் அரசர்களின் மற்றும் அறிவுஜீவி மேட்டுக்குடிகளின் மதமாகவே இருந்தது. இஸ்லாமிய வருகையையொட்டி பவுத்தத்துக்கு அரச ஆதரவு வற்றிவிடவே பவுத்தம் இந்தியாவில் இயல்பான மரணத்தைத் தழுவியது. அப்படியான நிலையில் தலித்களை பூர்வ பவுத்தர்களாகச் சொல்வது முற்றிலும் பிழையான பார்வையே. தலித் என்ற செயற்கையான பெருந்திரளை உருவாக்கும் அரசியல் தேவை இருப்பதாகக் கருதுபவர்கள் அதை தலித்களின் நாட்டார் மரபில் இருந்து வளர்த்தெடுத்தால்தான் அந்த மக்களுடைய ஆதரவைப் பெற முடியும். பசவண்ணா, நாராயண குரு போன்ற ஆன்மிகத்தலைவர்களின் வழியே அதற்கு உகந்தது.

சங்கர நயினார் நோன்பு பற்றி அவர் விரிவான தரவுகளைச் சேகரித்திருக்கிறார். அந்த நயினார் நோன்பு நடக்கும் இடம் எது தெரியுமா… பிள்ளையார் கோவில்! அந்தப் பிள்ளையாரைத்தான் பார்ப்பனிய மேலாதிக்கச் சின்னமாகச் சொல்லி போட்டுடைத்தார்கள் திராவிட நாத்திகக் கண்மணிகள்.

நாட்டார் மரபுகளுக்கு கிறிஸ்தவமும் இஸ்லாமும் மட்டுமல்ல பவுத்தமுமே முற்றிலும் விரோதமானதுதான். பக்கத்தில் இருக்கும் நாட்டார் தெய்வத்துக்கு அசைவப் படையல் தரும்போது என் சன்னதியில் துணி போட்டு மூடிக்கொண்டால் போதும் என்று சொல்ல இந்து பிள்ளையாரால்தான் முடியும். அவர்தான் நாட்டார் மரபைச் சேர்ந்த முருகனை தன் சகோதரனாக ஏற்றுக்கொள்வார். மற்ற மதத்தினர் முற்றாக விரட்டி அடித்துவிடுவார்கள். இந்து ஆதிக்க சக்திகளின் வன்முறைச் செயல்பாடுகளை எதிர்க்கும் நோக்கில் எளிய இந்துக்களின் இந்து நம்பிக்கைகளைப் பழித்தல் என்பது இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு பெரும் பின்னடைவையே தரும். தர்மராஜ் திராவிட அசட்டு அறிவுஜீவிகள் போல் நாட்டார் அம்சங்களை நிராகரிப்பவர் அல்லதான். ஆனாலும் அவர் அதற்கு அயோத்திதாசரின் வழியில் பவுத்தத்தைத் துணைக்கழைப்பது என்பது வேறு வகையான பின்னடைவுகளையே தரும். பவுத்தத்தை நிராகரிக்கும் எம்.எஸ்.எஸ். பாண்டியனை தர்மராஜ் நிராகரிக்கிறார். பாண்டியன் இறுதியில் பிராமணத் துதிபாடியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவராகவும் மாறிப்போனதாகவும் குற்றம் சாட்டுகிறார். தமிழக தலித் சமூகத்தில் இருந்து தோன்றும் நேர்மையான அடுத்த தலைமுறை அறிவிஜீவியோ இந்து வேர்களைப் புறக்கணிக்கும் தர்மராஜை மேற்கத்திய அடியாளாகச் செயல்படுவதாகச் சொல்லி நிராகரிப்பார். முந்தைய கூற்றைவிடப் பிந்தையதில் உண்மை கூடுதலாக இருக்கும்.

******

பறையர் சாதியின் சாதகமான அம்சங்கள் பற்றிப் பேசும்போது பல விஷயங்களை நூலாசிரியர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். பழங்காலத் தமிழர்களுக்கு பூசாரிகளாக இருந்ததில் ஆரம்பித்து அந்த சாதியினர் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்களாக இருந்தது, சோழர்கள், இஸ்லாமியர், பிரிட்டிஷார் என அனைத்து ஆதிக்க சக்திகளுடனும் நட்புறவில் இருந்தது, மதராஸ் போன்ற நவீன பெரு நகரத்துக்கு அருகில் இருந்தது என பறையர்களுக்கு இருந்த சாதகமான அம்சங்கள் அவர்களை பள்ளர் மற்றும் அருந்ததியினரைவிட அதிக வெற்றிகளை ஈட்ட முடிந்தவர்களாக ஆக்கியிருக்கிறது என்ற தர்மராஜின் கூற்று புதிய விவாதங்களுக்கு வழி காட்டக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் இந்திய சாதி அமைப்பு குறித்த புதிய சித்திரத்தை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதையே அது மவுனமாகச் சுட்டிக்காட்டுகிறது.

இந்திய சாதி அமைப்பானது பொதுவாகச் சொல்லப்படுவதுபோல் நான்கு வர்ண சாதி இந்துக்கள், அ-வர்ணர்களான பஞ்சமர்கள் (தலித்கள்/அரிஜனங்கள்/தீண்டப்படாதவர்கள்) என்ற ஐந்து பிரிவுகளாக இருக்கவில்லை. பஞ்சமர் என்று சொல்லப்படும் அந்தப் பிரிவில் மூன்று அடுக்குகள் இருக்கின்றன. முதலாவது பறையர், பள்ளர் போன்ற விவசாயத்தோடும் ஆதிக்க சக்திகளோடும் நெருங்கிய தொடர்பு கொண்ட சாதிகள் இருக்கின்றன. அடுத்ததாக நாவிதர், சக்கிலியர், தோட்டிகள், வண்ணார், வெட்டியார் போன்ற சேவைப் பிரிவினர் வருகிறார்கள். அதற்கு அடுத்ததாக மலைவாழ் மக்கள், காடுகளில் வாழ்பவர்கள், நரிக்குறவர் போன்ற நாடோடிகள் என்ற பிரிவினர் வருகிறார்கள்.

castes_colonial_pictureஇதில் பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். கடைசியில் இருக்கும் மலைஜாதியினர், நாடோடிகள் போன்றோரும் நிலவுடமை அமைப்பில் இருந்து முற்றிலும் வெளியே இருப்பதால் தங்கள் இடங்களில் தனிக்காட்டு ராஜாக்களாக வாழ்ந்து வந்தவர்களே (சிற்சில ஆக்கிரமிப்புகள் நீங்கலாக). ஆனால், நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ப்ரோக்கன் – தலித் என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக/இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும். ஆனால், இந்த மூன்று பிரிவினரையும் தலித் (அட்டவணை சாதி, அட்டவணை பழங்குடி) என்ற செயற்கையான அடையாளத்துக்குள் திணித்ததால் மிகப் பெரிய அநீதியே இழைக்கப்பட்டிருக்கிறது. உண்மையான தலித்களான சேவைப் பிரிவு மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள், உரிமைகள் எல்லாம் அவர்களைவிட எண்ணிக்கையிலும் அதிகாரத்திலும் பொருளாதார நிலையிலும் மேம்பட்ட பறையர் பள்ளர்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அந்தப் பறையரும் பள்ளரும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டவர்கள் என்ற வகையில் அவர்களும் தலித்களே என்ற கூற்றில் உண்மை கிடையாது. ஏனென்றால், தீண்டாமை என்பது இந்து சமூகத்தின் அனைவரையும் பாதித்த ஒரு விஷயம். ஐயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஐயங்காரைத் தொடுவது கிடையாது, சமபந்தி கிடையாது, திருமண உறவு கிடையாது, வசிப்பிடமும் தனித்தனியானது; வழிபடும் தெய்வங்களும் தனித்தனியானவர்கள். இன்னும் சொல்லப்போனால், இன்றும் ஒரு ஐயங்கார் வேறு ஜாதியில் திருமணம் செய்வதைக்கூடப் பொறுத்துக்கொள்வார்… ஐயரைத் திருமணம் செய்து கொள்வதை ஏற்கமாட்டார். அந்த அளவுக்கு அவர்களுக்கு இடையிலும் தீண்டாமை உண்டு. அதோடு பறையர் பள்ளர்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அல்ல; அவர்களே அவர்களுக்குக் கீழான சாதியாக அவர்கள் நினைத்தவர்கள் மீது அதே தீண்டாமைக் கொடுமையை அமல்படுத்தியும் வந்திருக்கிறார்கள். எனவே, பறையர்களும் பள்ளர்களும் ‘அடிவாங்கினது நாங்கதான்… எனவே கப் எங்களுக்குத்தான்’ என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. அவர்கள் உண்மையில் சூத்திர ஜாதிக்குள் அடையாளப்படுத்தப்படவேண்டியவர்களே.

தலித் தேரை பறையர்களே ஓட்டிவந்திருக்கிறார்கள் என்று சொல்லும் தர்மராஜ் இந்த உண்மைக்கு சற்று நெருக்கமாக வருகிறார். இன்றைய அளவில் இதுவே மிகப் பெரிய துணிச்சலான பார்வை. கூரான கத்தி. பறையர் மேலாண்மையை கவனமாக விமர்சன தொனியில் சொல்லாமல் வரலாற்று உண்மைகளைச் சொல்லும் தொனியில் சொல்கிறார் என்றாலும் அதில் இருந்து வேறு பல கேள்விகளை நாம் எளிதில் எழுப்பிக்கொள்ள முடியும்.

பறையர் மேலாண்மை என்பது மேல் சாதி இந்துக்களின் குறிப்பாக பறையர்களுக்கு சற்று மேலான நிலையில் இருக்கும் வன்னிய, படையாச்சி, கவுண்டர் போன்ற சாதிகளின் பிரதான எதிரியாக அவர்களை ஆக்கியிருக்கிறது. கூடவே பள்ளர்களுக்கும் அருந்ததியினருக்கும் இன்னபிற தலித் சாதியினருக்கும் எதிர்நிலையிலும் நிறுத்தியிருக்கிறது. இரண்டுமே எதிர்பாராத, துரதிஷ்டவசமான விளைவுகள். முதலாவதை மேல் சாதி இந்துவின் குணமே அத்தகையதுதான் என்று அவசர அவசரமாக தீர்மானித்துவிடவேண்டாம். ஏனென்றால், அவர்களும் சாதி அமைப்பினால் ஒடுக்கப்பட்டிருந்தவர்களே. இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது.

இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது.

முதலில் யார் தலித் யார் சூத்திரர் என்பதைச் சரியாக வரையறுக்கவில்லை. சூத்திரர் என்று வகைப்படுத்தப்பட்டடிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சத்ரியர் என்ற பிரிவில் வரவேண்டியவர்களே. மராட்டிய சிவாஜியில் ஆரம்பித்து தமிழக சோழர், பாண்டியர் வரை அனைவருமே சூத்திரர் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் சத்ரியர்களே. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது இங்கு ஆட்சியில் இருந்த மன்னர்களில் 72% பேர் சூத்திரர்கள் என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த சத்ரியர்களைத்தான் நாம் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தி பி.ஸி. மற்றும் எம். பி.ஸியாக ஆக்கி சலுகைகளைத் தந்துவந்திருக்கிறோம். ஒவ்வொரு சாதியும் தம்மை மன்னர் குலமாகச் சொல்லிக் கொள்வதில் உண்மை இல்லாமல் இல்லை. அதுபோல பறையர் பள்ளர் போன்ற விவசாயத்தில் ஈடுபட்ட பிரிவினரை தலித் என்று சொல்லி சலுகைகள் தந்திருக்கிறோம். உண்மையில் நேற்றைய சத்ரியர்களுக்கு இன்றைய சூத்திர சலுகைகளைத் தராமல் இருந்திருக்கவேண்டும்; பறையர் பள்ளர்களை சூத்திரர் என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கவேண்டும். உண்மையான சேவைப் பிரிவினருக்கு தலித் என்ற அடையாளம் தந்து சலுகைகள் தந்திருக்கவேண்டும். நாம் இதைச் செய்யவில்லை. இது முதலாவது தவறு.

இரண்டாவதாக, அனைவருக்கும் கல்வி, எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்ய முடியவேண்டும் என்பதுபோன்று நாம் முன்னெடுத்த நல்ல விஷயங்கள் எல்லாமே  நமக்குத் தீங்கையே விளைவித்திருக்கின்றன. அதாவது இடை மற்றும் கடைநிலை சாதியினரை எதிரிகளாக ஆக்கிவிட்டிருக்கின்றன. உண்மையில் அந்த மதிப்பீடுகள் எல்லாமே மேற்கத்திய இறக்குமதிகள். அதாவது ஒற்றை மதத்துக்குள் இருப்பவர்களுக்கு நன்மை தரும் வழிமுறைகள் அவை. ஒவ்வொரு சாதியாக (நடைமுறையில் ஒவ்வொரு மதமாக) இருந்த இந்திய சமூகக் கட்டமைப்புக்கு அந்த சீர்திருத்தம் நன்மை செய்திருக்கவில்லை; அல்லது அதிக இழப்பு குறைந்த நன்மை என்ற வகையில் இருந்திருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் பாடமாக இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் எந்த வேலையை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று சொன்னதற்குப் பதிலாக ஒவ்வொரு ஜாதியின் தொழிலையும் நவீனப்படுத்தி அதில் இருக்கும் கடினத்தன்மை மற்றும் இழிவை அகற்றி ஒவ்வொரு தொழிலையும் லாபகரமான தொழிலாகவும் கலை அழகு கூடிய வேலையாகவும் மாற்றியிருந்தால் அனைத்து ஜாதியுமே இப்போது இருப்பதைவிட மேலான நிலைக்கு உயர்ந்திருக்கும். ஒரு சாதியின் முன்னகர்வை இன்னொரு சாதி தனக்கான போட்டியாகவோ பொறாமையாகவோ பார்த்திருக்காது. அதனால், அருகருகில் இருந்த இடை கடை நிலை சாதியினருக்கு இடையே இப்படியான பகை உருவாகியிருக்காது. நான் இதை என் தனிப்பட்ட விருப்பமாகச் சொல்லவில்லை. அனைவருக்கும் கல்வி, எல்லா வேலையையும் எல்லாரும் செய்யலாம் என்று சொன்னது ஏற்படுத்தியிருக்கும் போட்டி பொறாமைகளையும் வன்முறைகளையும் பார்த்த வேதனையில் சொல்கிறேன். எனவே, செருப்பு தைக்கறவன் செருப்புக் கடைதான் போடணும் என்று சொல்வதாக இதை மலினப்படுத்திவிடவேண்டாம். செருப்பு தைப்பவர் பாட்டா ஷோரூம் தலைவராகவோ தங்கமும் வைரமும் பதித்த அற்புதமான கலை வேலைப்பாடுகள் மிகுந்த காலணிகளைச் செய்பவராகவோ உயர்ந்திருக்கவேண்டும். எந்த வேலையும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை. இந்த இடத்தில் மார்டின் லூதர் கிங் சொன்ன மேற்கோள் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்:

““If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, ‘Here lived a great street sweeper who did his job well.”

மூன்றாவதாக இந்திய சாதி அமைப்பில் நாம் சீர்திருத்தத்தை முன்னெடுத்தபோது ஐரோப்பா போல் உலக வளத்தைச் சுரண்டும் ஆதிக்க சக்தியாக நாம் இருந்திருக்கவில்லை. ஓர் இங்கிலந்து கடைநிலை கிறிஸ்தவருக்கு இங்கிலாந்து மேட்டுக்குடியின் நிலத்தையோ பதவியையோ செல்வத்தையோ பங்குபோடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. அந்த இங்கிலாந்து கடைநிலை மக்களுக்கு உலகின் காலனி நாடுகளுக்குச் சென்று அங்கிருந்த செல்வத்தைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஐரோப்பியாவில் கடைநிலை மனிதருக்கும் மேட்டுக்குடிக்கும் இடையில் எந்த மோதலும் வந்திருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் அப்படி நடக்கவில்லை. இந்திய வளங்களை மட்டுமே மேல் சாதியினரும் கீழ்சாதியினரும் பங்குபோடவேண்டி வந்தது. அதோடு, அப்போது இந்தியா முழுவதும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டிஷார் வரி வசூல் மூலமும் பிற வழிகளிலும் கொள்ளையடித்துச் சென்றதுபோக எஞ்சியவை மட்டுமே இந்து சாதிகளுக்குப் பங்கிட்டுக் கொள்ளக் கிடைத்தது. கஷ்டப்பட்டுச் சேகரித்த தேனையெல்லாம் எஜமானுக்குக் கொடுத்துவிட்டு புறங்கையை ருசிக்கும் பாக்கியம் மட்டுமே இந்தியர்களுக்குக் கிடைத்தது. எனவே, அது இந்திய சாதிகளிடையே பெரும் மோதலையே ஏற்படுத்தியிருக்கிறது. ஒற்றை அரசு உருவக்கமும் அதனால் சாத்தியமான அபரிமிதமான வரி சேகரிப்பும் இந்தியர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தால் இந்திய நலன் சார்ந்து எத்தனையோ விஷயங்களைச் செய்துகொண்டிருக்கமுடியும். மேற்குலகைப் போலவே இந்திய மேல், கீழ் சாதிகளின் பொருளாதார இடைவெளிகள் குறைந்து சமுதாய நல்லிணக்கம் அதிகரித்திருக்கும்.

ஆக, இந்த மூன்று பெரிய தவறுகள் நடந்ததால்தான் இந்திய சாதி அமைப்பு இன்று இந்த அளவுக்கு பொருளாதார சமத்துவமில்லாமலும் அது தொடர்பான சிக்கல்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதாகவும் இருக்கிறது. இதற்கு பழைய சாதியக் கட்டமைப்பின் மீது பழிபோடுவது வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாததாகவே ஆகும்.

பூமணியின் அஞ்ஞாடி, பெருமாள் முருகனின் மாதொரு பாகன் பற்றிய விமர்சனக்கட்டுரை மிகவும் விரிவான, நிதானமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அஞ்ஞாடிபற்றிய விமர்சனத்தைப் படித்தபோது பூமணி போன்ற ஓர் இலக்கியவாதியிடமிருந்து தன் அரசியலை தலித் போராளிகள் உருவாக்கிக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கமே பிறந்தது. வேறென்ன… பூமணி தலித் மக்களிடமிருந்து அல்லவா தன் இலக்கியத்தை உருவாக்கியிருக்கிறார்.

போலச் செய்தல் திரும்பச் செய்தல் என்ற கட்டுரை இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கட்டுரையாக  உருவாகியிருக்கிறது. சாதியை தாழ்த்தப்பட்ட சமூகங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பது தொடர்பான மேலை நாட்டு ஆய்வாளர்களின் கட்டுரையில் தொடங்கி சாதி- அகமண முறைபற்றிய அம்பேத்கரின் விளக்கத்தினூடாக பயணிக்கிறது. இவற்றில் சாதி சார்ந்த விதிகளை மேல் சாதிகளைப் பார்த்து அதுபோலச் செய்யும் பண்பைத் தெளிவாக விளக்குகிறார். ஆனால், கடைசியில் இமானுவேல் சேகரருடைய குருபூஜை என்பது வெறுமனே போலச் செய்தல் அல்ல; அது ஒருவகை கலகம் என்று சொல்லி முடித்திருக்கிறார்.

caste-untouchability-demands-dalits-to-be-barefooted-and-to-desist-from-biking-viloor-thirumangalam-maduraiதலித்கள் சாதியை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற கட்டுரையில் மேற்கத்திய ஆய்வாளர்களுடைய ஆய்வு முறையை நூலாசிரியர் விமர்சிக்கிறார். மேல் சாதிகளில் எப்படி சாதி சார்ந்த விலக்கங்களும் ஒடுக்குமுறைகளும் இருக்கின்றனவோ அதுபோலவேதான் கீழ் சாதிகளுக்கும் இருக்கின்றன. அந்த வகையில் மேல் சாதியினரைப் பார்த்து போலச் செய்தல் என்ற வழியையே கீழ் சாதியினர் பின்பற்றியிருக்கிறார்கள் என்ற முடிவை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் புரத வண்ணார்கள் போன்ற சில தலித் சாதியினரை பறையர்கள் தமது தெருவுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பது போல் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இந்த அசவுகரியமான உண்மையை மறுதலிப்பது சாத்தியமல்ல என்பதால் வேறொரு விமர்சனத்தை தர்மராஜ் முன்வைக்கிறார். அதாவது, அந்த மேலை நாட்டினர் தலித் குடியிருப்புகளில் தமது ஆய்வை மேற்கொண்டபோது ஒரு மேல்சாதி ரெட்டியாரையே தம்முடன் அழைத்துச் சென்றார்கள். எனவே ஆண்டைக்கு முன்னால் எந்த கீழ் சாதி நபர் உண்மையைப் பேசியிருக்கமுடியும். எனவே இது தாழ்த்தப்பட்டவர்களின் கூற்றுகளைச் சேகரித்த ஆய்வுதான் என்றாலும் மேல் சாதிக்கு சாதகமான வார்த்தைகளைச் சொல்லும்படி நிர்பந்திக்கப்பட்ட கூற்றுகளே அவை என்று நிராகரிக்கிறார். ஆனால், விஷயம் என்னவென்றால், மேற்கத்திய ஆய்வாளர்களுடன் துணைக்கு ஒரு ஆதிக்க சாதிப் பிரமுகர் உடன் வந்தார் என்பது இங்கு பொருட்படுத்தப்படவேண்டிய விஷயமே அல்ல. ஏனென்றால் இங்கு ஆய்வென்பது மேல் சாதியினர் கொடுமை செய்தார்களா இல்லையா என்பது பற்றியது அல்ல; தாழ்த்தப்பட்டவர்களிடம் சாதி உணர்வுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது பற்றியதே. மேலும் தலித்கள் சொன்னது எல்லாம் மேல் சாதியினரைத் திருப்திப்படுத்தச் சொன்னவை அல்ல; உண்மைகளே என்பது நம் எல்லாருக்கும் தெரியும். பறையர்கள் புரத வண்ணாரில் ஆரம்பித்துப் பிற கீழ் சாதிகள் அனைவரையும் தமதுதெருக்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதானே. ரெட்டியார் உடன் வந்ததால் இட்டுக்கட்டிச் சொன்ன விஷயமா இது? எனவே, அந்த ஆய்வை மறுத்து தர்மராஜ் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது.

சாதி உருவானதற்குக் காரணமாக அகமண முறை பற்றிய அம்பேத்கரின் கருத்துகள் தொடர்பாகச் சில கேள்விகள் எழுகின்றன. பூசகர் சாதி தன்னை பிற சமூகங்களிடமிருந்து பிரித்து தனித்து வைத்துக்கொண்டது. அதற்கு அக மண முறையைப் பின்பற்றியது. அது உடன் கட்டை, விதவை நடமாட்ட முடக்கம், உபரி ஆண்களுக்கு துறவு ஆகியவற்றைப் பரிந்துரைத்ததன் மூலம் உபரி ஆண்கள், உபரி பெண்களால் வரும் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டது என்கிறார்.

முதலாவதாக, அகமண முறை என்பது பழங்குடிப் பழக்கம். உலகில் பல இடங்களிலும் இந்த அகமண முறை இருக்கத்தான் செய்கிறது. எனவே, அது பிராமண கண்டுபிடிப்பல்ல. இதை அம்பேத்கரும் ஒப்புக்கொள்கிறார். மேலும் கிறிஸ்தவர்களுக்கிடையேயும் இஸ்லாமியருக்கு இடையேயும் (மதம் மாற்றிக் கொள்வதன் மூலம்) அக மண உறவே இருக்கிறது. ஆனால், பிராமணர்களிடையே இருந்த உடன்கட்டை ஏறுதல், விதவை முடக்கம், துறவறம் ஆகியவற்றை அகமண முறையைத் தக்கவைக்க பின்பற்றிய நடவடிக்கைகளாகச் சொல்கிறார். உண்மையில் இது தவறான பார்வை. போர்த் தொழில் காரணமான உயிரிழப்பு, வியாபாரம் காரணமான இடப்பெயர்ச்சி போன்றவை இல்லாத காரணத்தால் இயல்பாகவே பிராமண சாதியில் ஆண் பெண் விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். இயற்கை மரணம், விபத்து போன்றவற்றினால் உருவாகும் விதவைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. மேலும் அகமண முறையை நிலை நிறுத்த துறவறத்தை மேற்கொண்டார்கள் என்பது துறவறத்தை மிகவும் இழிவாகப் பார்க்கும் மனத்தால் மட்டுமே முடியும். அதில் துளியும் உண்மை இல்லை.

இது ஒரு பக்கமென்றால் அந்த அகமண முறையை பிராமணர்களைப் பார்த்து போலச் செய்த சமூகங்களும் தமது ஆண் பெண் விகிதாசாரத்தை சம நிலையில் வைக்க அதே உடன்கட்டை ஏறுதல், விதவை முடக்கம் போன்றவற்றை முன்னெடுத்தார்களா… இல்லையே? அதிலும் சத்ரிய, வைசிய சாதிகளில் போர் தொடர்பான மரணம், வியாபாரம் சார்ந்த இடப்பெயர்ச்சிகள் வெகுவாக நடந்த நிலையில் அவர்கள் தமது சம நிலையை எப்படித் தக்கவைத்துக்கொண்டார்கள்? அவர்களும் அக மண முறையைத்தானே கறாராகப் பின்பற்றியிருக்கிறார்கள். சூத்திர, தலித் சாதிகள் தமது அகமண முறையை எப்படி நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். உடன்கட்டை ஏறுதலோ துறவறமோ பெரிதாக இல்லையே. அங்கே மறுமணம் இருந்தது என்றால் அதுவும் சமநிலையைக் குலைக்கத்தானே செய்திருக்கும்? ஒரு தலித் ஆண் இறந்ததும் விதவையாகும் பெண்ணுக்கு இன்னொரு தலித் ஆண் வாழ்க்கை கொடுத்தால் அவனை மணக்கவிருந்த தலித் பெண் தனித்துவிடப்படுவாள்தானே? எனவே, விதவை முறைக்கும் அகமண முறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒவ்வொரு பழங்குடியினமும் தனது பெண்களைத் தனது பெருமைக்குரிய விஷயமாகவும் பெண்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய நபராகவும் பார்த்ததன் விளைவே அகமண முறை என்றே தோன்றுகிறது.

உடன் கட்டை ஏறுதல் என்பது எதிரி மன்னரிடம் சிக்கினால் பாலிய துன்புறுத்தலுக்கு ஆளாக்குவார்கள் என்று பயந்து ஒட்டுமொத்த அரண்மனை மகளிரும் தீக்குளித்ததாகச் சொல்லப்படுவதில் இருந்து, எஜமனர் மீதான பாசத்தால், விசுவாசத்தால் பணியாள் முதற்கொண்டு உடன் கட்டை ஏறியதாகவெல்லாம் ஏராளமான காரணங்கள், நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவையே கூடுதல் நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன. எனவே, அகமண முறைக்கும் உடன்கட்டை ஏறலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது என்பதே உண்மை.

அகமண முறை என்பது முற்றிலும் இயல்பான நிகழ்வு. பிராமணர்கள் இல்லாத நாடுகளிலும் அகமண முறை இருப்பதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், அகமண முறை பிராமணர்களால் ஆரம்பிக்கப்பட்டு பிற சாதியினரால் பின்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் வாதம் வலுவிழந்துபோகும். எனவே, பிராமணர்கள்தான் சாதித் தூய்மையைத் தக்கவைக்க அகமண முறையைக் கண்டுபிடித்தார்கள் என்றும் அதையே மற்ற சாதியினர் போலச் செய்தனர் என்றும் சொல்வதும் முற்றிலும் தவறான பார்வையே.

அகமணமுறைக்கும் சாதியமைப்புக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்றால், உலகின் வேறு பல பகுதிகளில் காணப்படும் அகமணக் குழுக்களிடமும் இந்த சாதியமைப்பு உருவாகியிருக்க வேண்டுமே! அப்படி ஒன்று நடக்கவில்லையே! அது ஏன்?

இந்தக் கேள்விக்கு அம்பேத்கர் தரும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்றால் இந்தியாவில் ஆரியர், திராவிடர், மங்கோலியர்கள், சிந்திக்கள் என பலர் வந்து சேர்ந்தபோது புற மண முறையே இருந்தது. பூசக பிராமணர்கள் அதன் பிறகு அகமண முறைக்கு மாறினார்கள். இந்தியாவின் பிற சமூகங்களும் அப்படியே மாறின என்கிறார்.

varnasrama_dalit_casteசாதிக்காக அகமண முறை பிராமணர்களால் புகுத்தப்பட்டதென்றால் அகமண முறை என்பது சாதியையே தோற்றுவிக்கும் என்றாகிறது. பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது. உண்மையில் இந்து மதத்தின் லட்சிய சமூகக்  கோட்பாடு என்பது வர்ணாஸ்ரம தர்மக் கோட்பாடுதான். அதில் சாதிக்கு இடம் கிடையாது. பிறப்பின் அடிப்படையில் தொழில்கள் அதில் தீர்மானிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் கல்வி தரப்படும். ஒவ்வொருவரும் தத்தமது திறமை ஆர்வத்துக்கு ஏற்ப கல்வி பெற்று தொழில் செய்துகொள்லலாம். வர்ணாஸ்ரமம் முன்வைத்த அதே லட்சியத்தைத்தான் இன்றைய நவீன சமூகமும் முன்வைக்கிறது. பிராமணர்கள் அந்த வர்ணாஸ்ரம தர்மத்தைத்தான் உயர்வாக மதிக்கிறார்கள். எனவே, மேலிருந்து கீழாக சமூக அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் சாதிப் பிரிவினையற்ற வர்ணாஸ்ரம அமைப்பே உருவாகியிருக்கும். ஆனால், பழங்குடிகளிலும் கூட சாதி/குலப் பிரிவினை காணப்படுகிறது. பிராமணர்கள் இல்லாத நாடுகளிலும் து காணப்படுகிறது. எனவே, அது கீழிருந்து உருவாகி மேலே சென்றதாகவே இருக்கும். பிராமண ஆதிக்க சக்திகள் வர்ணாஸ்ரம அமைப்பை முன்வைக்க முயன்றபோதிலும் பெருந்திரள் மக்கள் சாதி உணர்வுடன் இருந்ததால் அவர்களுடன் சமரசம் செய்துகொண்டு சாதியை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கும். ஜாதிக் கட்டமைப்பை இந்து சமயம் மட்டுமல்ல அதை எதிர்த்துக் கிளம்பிய திராவிட நாத்திக இயக்கமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதுவும் இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தலித்களின் வேதனையை ஓரங்கட்டியே வந்திருக்கிறது. கிறிஸ்தவமும் இடைநிலை சாதிகளின் சாதி உணர்வை தட்டிக் கேட்பதே கிடையாது. இளவரசன் படுகொலைக்கு பாதிரியார்கள் கூட்டமாகத் திரண்டுசென்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள் என்றால் வன்னியர் மத்தியில் மத மாற்ற அறுவடை செய்ய முடியாமல் போய்விடும் என்று சமரசம் செய்துகொண்டுதான் இருக்கிறது. இஸ்லாத்திலும் சாதி உணர்வு மிகுந்தே காணப்படுகிறது. சாதி உணர்வு இல்லாத ஷியா ஷன்னி சண்டை என்பது சாதிச் சண்டையைவிட படு கொடூரமாகவே இருக்கிறது. எனவே, சாதி என்பது இந்து மேல் ஜாதியின் கண்டுபிடிப்பு அல்ல… இந்து கீழ் சாதிகளின் உருவாக்கமே. அதனால்தான் அதை யாராலும் அகற்ற முடியவில்லை.

போலச் செய்தல் திரும்பச் செய்தல் என்ற கட்டுரையில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி படிப்படியாக தேவர் ஜாதி (இடை நிலைச் சாதி) அரசியலை குரு பூஜை மூலமாக முன்னெடுத்தது என்பதை ஆதாரபூர்வமாக விளக்குகிறார். சசிகலா-அதிமுக அப்படியானது என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், பெரியாரிய திமுகவும் அப்படியாகத்தான் செயல்பட்டிருக்கிறது என்பது ஆதாரபூர்வமாக இக்கட்டுரையில் நிறுவப்படுகிறது. 2007-ல் இமானுவேல் சேகரருக்கு நடத்தப்பட்ட குரு பூஜை எதிரியின் ஆயுதத்தையே எதிரியின் மீது பிரயோகித்ததுபோல் கலகமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். இங்கும் குரு பூஜை என்ற சடங்கு போலச் செய்யப்படுகிறது. ஆனால், அது ஆதிக்க சக்திக்குப் பெரும் நெருக்கடியைத் தரும்வகையில் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் காலகாலமாக போலச் செய்து வந்த மரபில் ஒரு புதிய மாற்றமாக திரும்பச் செய்தல் ஒரு புரட்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி அந்தக் கட்டுரையை முடிக்கிறார். ஆனால், இந்தப் பிரச்னைக்கு இதுதான் எதிர்வினையாக இருக்கமுடியுமா..? பள்ளரும் தேவரும் தமிழர் என்ற அடையாளத்திலோ (இந்திய தேசியத்தை வெறுக்காத) இந்து என்ற அடையாளத்திலோ (சிறுபான்மையினரை வெறுக்காத) இந்தியர் என்ற அடையாளத்திலோ ஒன்று சேர வாய்ப்பே கிடையாதா? அப்படிச் செய்வதானால் பள்ளர் செய்ய வேண்டியது என்னவாக இருக்கும்? தேவருடைய குருபூஜைக்கு முளைப்பாரி எடுப்பதாக இருக்குமா..? இப்போதும் பல பள்ளர்கள் அப்படிச் செய்யத்தான் செய்கிறார்கள். அதற்கு அடுத்த வருடம் இமானுவேல் சேகருடைய குருபூஜைக்கு தேவர்கள் முளைப்பாரி எடுத்து வருவார்களா? பிராமணர்கள் ஏன் இரு குரு பூஜையையும் இணைக்கும் பாலமாக முன் வரக்கூடாது? இந்திய கிறிஸ்தவமும் இந்திய இஸ்லாமும் இன்னமும் தங்களுடைய எஜமானர்களின் சாவிக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளாகவேதான் இருக்கவேண்டுமா? அவை உண்மையான சகோதரத்துவத்துடன் இரு ஜாதி சமூகத்தையும் ஒன்றிணைக்க முன்வரக்கூடாதா? என்ன இருந்தாலும் நேற்றுவரை இதே தேவர் ஜாதியிலும் பள்ளர் ஜாதியிலும் இருதவர்கள்தானே அவர்கள். இவை வெறும் லட்சியவாதக் கற்பனையாகவே இருந்துவிடவேண்டுமா? அறிவுஜீவி வர்க்கம் உயரிய அடையாளங்களை நோக்கி மக்கள் திரளை வழிநடத்தாமல் அவர்களைக் குறுங்குழுக்களாக ஆக்கிவருகின்றனவா? அப்படிச் செய்யும் ஆதிக்க அரசியல் சக்திகளுக்கு அவர்கள் வழி அமைத்துக் கொடுக்கிறார்களா?

புத்தகம் முடிந்துவிட்டது… கேள்விகள் தொடர்கின்றன.

நான் ஏன் தலித்தும் அல்ல? (கட்டுரைகள்)
ஆசிரியர்: டி.தருமராஜ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை: ரூ. 275.
இணையத்தில் இங்கே வாங்கலாம்.

 (முற்றும்)

One Reply to “நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)”

  1. ஆழமான சிந்தனை தேவை இதைப் படிகக. அாிய தகவல்களை கொண்டுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தது. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    உலகில் உள்ள அனைத்து மக்களின் ஆதிவழிபாடு சிவலிங்கம் என்று சொல்லத்தக்க வகையில் தொல் பொருள் ஆய்வில் உலகெங்கும் சிவலிங்கம் கிடைத்துள்ளது.
    இந்தியாவில் சமூக கலாச்சார சமய பாிணாமம் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது.அதை பலா் புத்தா் உட்பட பலா் முன் நடைத்தி சென்றாா்கள்.

    பவுத்தம் இந்தியாவில் அழிந்து போகவில்லை. இந்து சமூகத்தோடு இரண்டறகலந்து விட்டது.அதன் அன்பு கோட்பாடுகள் இந்துக்ளின் இரத்தத்தில் ஊறிவிட்டது.
    இந்தியாவில் எற்பட்டு வரும் சமூக கலாச்சார ஆன்மீக பாிணாமத்தை தலீத் என்றோ பவுத்தம் என்றோ விளக்க முடியாது. ”இந்து” என்ற அடிப்படையில் விளக்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *