பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

அறவண அடிகளின்  எதிரில்  வைக்கபட்டிருந்த பெரிய குத்துவிளக்கின் திரியைத்  தூண்டிய மாதவி, அருகில் வைக்கபட்டிருந்த எண்ணெய்ப் பாத்திரத்திலிருந்து எண்ணெயை விளக்கில் ஊற்றிவிட்டு அவர்முன் அமர்ந்துகொண்டாள். அவள் முகத்தைப் பரிவுடன் நோக்கிய அடிகள் ஆபுத்திரன் கதையைத் தொடர்ந்தார்.

“மணிமேகலை! ஒருநாள் இருள்மிகுந்த இரவில் வானில் கருமேகங்கள் கவிந்து ஒன்றிரண்டு மழைத்துளிகள்வேறு விழத்தொடங்கின.  பசியுடன் வருந்தும் சிலர் ஆபுத்திரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் சிந்தாதேவி ஆலயத்திற்குள் நுழைந்தனர். அவன் அங்கு நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனைத் தட்டி எழுப்பினார்கள்.

“ ‘ஐயா கடும்பசி எங்களை வாட்டுகிறது. உணவு இருந்தால் கொடுத்து உதவுங்கள்.’ என்று வேண்டினர்.

“விழித்தெழுந்த ஆபுத்திரன் எதிரில் இருப்பவர்களைப் பார்த்தான். குறைந்தது ஏழு எட்டு பேர் தேறுவார்கள். பிக்ஷைக்குச் சென்று செல்வந்தர்களிடம் வாங்கிக்கொண்டு வந்த உணவைச் சுற்றியிருக்கும்  வறியவர்களுக்குக் கொடுத்து, எஞ்சிய உணவை தானும் உண்டு பாத்திரத்தைக் கழுவிப் போட்டபிறகு இவர்கள் வந்து நிற்கிறார்களே என்று வருந்தினான். அத்தனை பேர்  முகமும் வாடியிருந்ததைக் காண சகியாதவன் அவன், ‘சற்றுப் பொறுங்கள், ஐயன்மீர். இதோ  வருகிறேன், என்றுகூறி அவர்களை மண்டபத்தில் அமர்த்திவிட்டு கோவிலின் உள்ளே நுழைந்தான்.

“கருவறையில் சரஸ்வதிதேவி கைகளில் வீணையும், ஜபமாலையும் அணிந்து இதழ்களில் மந்தகாசப் புன்னைகையைத் தவழவிட்டு அமர்ந்திருந்தாள்.

“தெய்வமே, இது என்ன சோதனை? பசியுடன் வந்திருக்கும் அந்த வறியவர்களைக் காணச் சகியேன். அவர்களுடைய பசியை நான் எப்படிப் போக்குவேன்? நீதான் எனக்குப் பதில் கூறவேண்டும் என்று தியானத்தில் ஆழ்ந்தான்.

“சகல கலைகளுக்கும் தனிப்பெரும் தலைவியாக விளங்கும் அந்தக் கலைமகள் ஆபுத்திரன் முன்பு பிரத்தியட்சமானாள். பலகோடி சூரியனின் பிரகாசம் பூமியில் வந்து கவிந்ததுபோல இருக்கும் அப்பேரொளியைக் காணும் ஞானக்கண்களை ஆபுத்திரனுக்கு வழங்கினாள். ஆபுத்திரன் தேவியின் முன்பு நெடுஞ்சாண்கிடையாகவிழுந்து வணங்கினான். பலவாறு தேவியின் துதிபாடினான்.

“ஆபுத்திரா! எழுந்து வா. என் கையில் இருக்கும் திருவோட்டினைப் பெற்றுக் கொள். இது அமுதசுரபி என்று அழைக்கப்படும் அட்சயபாத்திரமாகும். நாடு வறுமையில் வாடித் துன்புற்றாலும் இந்தப் பாத்திரத்திற்கு வறுமை என்பது கிடையாது. வற்றாமல் வேண்டுமென்ற உணவைச் சுரந்தவண்ணம் இருக்கும். பெற்றுக்கொள்பவர்கள் போதும்போதும் என்று அலறினால் மட்டுமே இது கொடுப்பதை நிறுத்தும். என்னிடம் இருந்த பாத்திரம் இனி வறியவர்களின் பசிப்பிணிபோக்க உன் கைவசம் இருக்கட்டும். இந்தா, பெற்றுக் கொள் என்று அமுதசுரபியை அவனிடம் நீட்டினாள் சரஸ்வதிதேவி.

“அம்மா, தாயே, சரஸ்வதி. உன் கருணையை என்னவென்று சொல்வேன்? இந்த அழகிய கோவிலில் ஒளியை வழங்கி என்றும் இருளை அகற்றும் நந்தா விளக்காகத் திகழ்பவளே! புலவர்களின் நாவை இருப்பிடமாகக் கொண்டவளே! வானிலுள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குபவளே!  மண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கு முதல்வியாக விளங்குபவளே! வறியவர்களின் பசிப்பிணித் துயர் துடைப்பவளே! நீ வாழி, வாழி என்று சிந்தாதேவியைப் போற்றி வணங்கினான்.

“தேவியின் தோற்றம் மறைந்ததும், அமுதசுரபியை எடுத்துக்கொண்டு வெளிமண்டபத்திற்கு வந்தான். அங்குள்ளவர்களின் பசியை ஆற்றும் அளவிற்கு உணவை அளிக்குமாறு தியானித்து நின்றான். என்ன ஓர் ஆச்சரிய!ம்! அந்த அமுதசுரபியில் பக்குவபட்ட சுவைமிகுந்த உணவு பலவடிவங்களில் தோன்றத்தொடங்கியது. அனைவருக்கும் உணவளித்தான். அவர்கள் உண்டு பசிதீர்ந்து அவனை வாயார வாழ்த்திவிட்டுச் சென்றனர்.Image result for ஆபுத்திரனும், இந்திரனும்

“ஆபுத்திரனிடம் ஓர் அமுதசுரபி உள்ளது, அது வேண்டிய நேரத்தில் நிறுத்தாமல் உணவை அள்ளி வழங்குகிறது என்ற தகவல் காட்டுத்தீபோல மதுரை நகரமெங்கும் பரவியது. அன்றிலிருந்து பசியுடன் வாடும் வறியவர்கள், உண்ண உணவின்றித் தவிக்கும் விலங்கினங்கள், உணவைத் தேடி மாடங்கள் தோறும் அலையும் பறவையினங்கள் அனைத்தும் அவனைப் பெருங்கூட்டமாகச் சூழ்ந்துகொண்டன. ஆபுத்திரனும் முகம் சலிக்காமல், மேனி வருத்தம் கொள்ளாமல் வந்தவர்களுக்கு இல்லையென்று கூறாமல் தனது அமுதசுரபியில் சுரக்கும் உணவினை அள்ளி வழங்கினான். தா, தா என்று கூவியழைக்கும் உயிரினங்களின் குரலோசை ஓயாமல் முழங்கும் கடலொலியைப்போலக் கேட்டது.

“ஆபுத்திரனின் அறச்செயல் தேவர் தலைவனான இந்திரனின் வெண்ணிற அரியணையை ஆட்டம்காணச் செய்தது. தனது பதவி பறிபோவதற்கு இந்திரன் ஒருநாளும் சம்மதிக்கமாட்டான்.  எனவே, ஒரு திட்டம்தீட்டி மதுரைமாநகருக்குப் புறப்பட்டான்.

“வழக்கப்படி, ஆபுத்திரன் தனது பாத்திரத்தைக் கழுவி ஒரு மூலையில் கவிழ்த்து வைத்தான். பசித்துவருவோருக்கு இல்லையெனாது வழங்கும் அமுதசுரபியை அளித்த தெய்வத்தைப் போற்றியவண்ணம் இருந்தபோது தொலைவில் ஓர் மறையோதும் அந்தணர் வருவதைக் கண்டான். தளர்ந்த நடை; கம்பூன்றும் முதுமை; வளைந்த முதுகுடன் கூடிய மேனி.

“வாருங்கள் பெரியவரே என்று அவரை அன்புடன் வரவேற்றான் ஆபுத்திரன். அவருக்கு ஆசனம் கொடுத்து அமரச் செய்தான்.

“நீதான் ஆபுத்திரனா என்று கேட்டார் முதியவர்.

“ஆமென்று ஆபுத்திரன் தலையாட்டினான்.

“அதாவது இந்தப் பெரிய நிலத்தில் வாழும் பல உயிர் இனங்களின் பசியைப் போக்கி தனிப்பெரும் முதல்வன் என்று அழைக்கப்படும் ஆபுத்திரன் என்று அவர் நீட்டிமுழக்கிச் சொன்னதிலிருந்து பெரியவர் சும்மா வரவில்லை என்பது ஆபுத்திரனுக்கு விளங்கியது. எனவே பதில் கூறாமல் நின்றான்.

“உனக்கு ஏனப்பா பல்லுயிர் பசி நீக்கும் பெரிய பொறுப்பு, அதற்குதான் நான்  ஒருவன் இருக்கிறேனே என்ற அவர் பூடகமாகச் சிரித்தார்.

“ஆபுத்திரன் அவர்சொன்னதின்  பொருள்தெரியாமல் விழித்தான்.

“உடனே ஒரு மாபெரும் ஒளி அந்த இடத்தைப் பிரகாசமுறச் செய்தது. தன் எதிரில் சர்வ அலங்காரங்களுடன் கையில் வச்சிராயுதம் ஏந்தியவண்ணம் இந்திரன் நிற்பதை ஆபுத்திரன் கண்டான்.

“நான் இந்திரன். தேவர்களின் தலைவன். இந்த மன்னுயிர்களின் காவலன். உன் கருத்து என்ன என்று செருக்குடன் இந்திரன் வினவினான்.

“இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது? தேவர் தலைவனை வணங்குகிறேன் என்று இந்திரனைப் பணிந்தான் ஆபுத்திரன்.

“உன்னுடைய இந்த அறச்செயலுக்கு ஈடாக என்ன வேண்டுமோ அதனைக் கேள் என்றான் இந்திரன்.

“ஆபுத்திரனுக்கு இந்திரனின் நோக்கம் புரிந்தது. தான் செய்யும் அறவேள்வியைத் தடுப்பது ஒன்றுதான் அவனது நோக்கம். பாவம், தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வந்திருக்கிறான். இதனை அறிந்ததும், கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம்கொண்டவன் வாய்விட்டு சிரிப்பதைப்போல விலா எலும்புகள் உடைந்துவிடுமளவிற்குச் சிரிக்கத் தொடங்கினான்.

“ஏன் சிரிக்கிறாய் என்று இந்திரன் அவனை அதட்டிக் கேட்டான்.

“ ‘தேவர்களின் தலைவன் நீ, இந்திரனே! இந்திர லோகத்தில் இருக்கும் உனது தேவர்கள் யார்? இந்தப் பிறவியில் செய்யும் நற்கருமங்களின் பயனான சொர்க்கவாழ்வை அனுபவிப்பர்கள்தானே அவர்கள்? உன் இந்திரலோகத்தில் தர்மம்செய்யும் மக்கள் கிடையாது; அங்கு தர்மம்செய்பவர்களுக்குக் காவலாக இருப்போர் கிடையாது; நற்றவம்செய்யும் முனிவர்கள் கிடையாது; பற்றறுத்துக்கொண்டு வாழும் துறவிகள் கிடையாது. அப்படி ஒரு உலகம், அப்படி ஒரு தேவர்கூட்டம். நீ அவற்றிற்குத் தலைவன். சிரிப்புதான் வருகிறது. இந்தத் தெய்வப்பாத்திரம் பசியென்று வருந்திவந்தவர்களுக்கு இல்லையென்று கூறாது உணவளித்து அவர்கள் பசியைப் போக்கும் உயர்தன்மையது. உனக்கு இந்தப் பாத்திரம் வேண்டும்! அதற்குப் பேரம்பேசுகின்றாய். இதற்கு ஈடாக என்ன கொடுக்கப்போகிறாய்? தேவர்கள் உண்ணும் அமுதமா? வண்ணவண்ண ஆடைகளா? அரம்பை, திலோத்தமைபோன்ற தேவப்பெண்களா? அல்லது அந்தத் தேவர்களைக் காக்கும் கணங்களையா, யாரை அளிக்கப்போகிறாய்?’ என்று கோபத்துடன் கேட்டான்.

“தன்னை மதியாமல் ஏளனமாகப் பேசிய ஆபுத்திரனை நோக்கிய இந்திரன், ‘ஆபுத்திரா! இதற்கு நீ பின்னல் மிகவும் வருத்தப்படுவாய். நான் யார், என்னுடைய திறன் என்ன என்பது தெரியாமல் என்னை எடுத்தெறிந்து பேசுகிறாய். அனுபவிப்பாய்,’ என்று கோபமாகக் கூறிவிட்டு மறைந்தான்.

“இந்திரபதவி என்பது  பெரிய பதவி அல்லவா! பலமுறை அப்பதவியை இழக்க நேர்ந்த சமயங்களில் போராடி மீண்டும்பெற்ற இந்திரனுக்கா அதனைக் காத்துக்கொள்ளத் தெரியாது? தனது தேவப்பதவியைப் பறிப்பதற்கு ஆபுத்திரன் தற்சமயம் செய்துவரும் அன்னதானம் என்ற தர்மம் ஒரு காரணியாக அமைந்துவிடக் கூடாது, பசிப்பிணியைப் போக்கும்வரை ஆபுத்திரனின் கணக்கில் புண்ணியப் பலன்கள் கூடிக்கொண்டே வரும். அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால் போதும் என்று இந்திரன் எண்ணினான்.

“பன்னிரெண்டு ஆண்டுகள் பாண்டிய மண்ணில் பருவம் தவறாமல் உரிய மழை பொழியுமாறு பார்த்துக்கொண்டான். மழைக் கடவுள் அல்லவா அவன்! பருவம் தவறாமல் மழை பொழிந்து நாட்டில் வளம் பெருகியது. பயிர்கள் செழித்து அபரிமிதமான விளைச்சலைக் கொடுத்தன. எனவே பஞ்சம் என்பது மறைந்து அனைவரும் வளமுடன்வாழும் நிலையை எய்தினார்கள். வறியோர் இல்லாத  நிலை உருவாகி. ஆபுத்திரனிடம் யாசகம்பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. பகடைகளை உருட்டி வெட்டியாகப் பொழுதுபோக்குவோரின் கூட்டமும், வீண் அரட்டை அடித்துப் பொழுதைக் கழிப்போர் எண்ணிக்கையும் மண்டபங்களில் அதிகரிக்கத் தொடங்கியது.

“ஆபுத்திரன் பாண்டியநாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று, ‘பசிப்பிணி உடையவர்களுக்கு உணவளிக்க வந்துள்ளேன். வறியவர்கள் என்னை அணுகலாம்.’ என்று கூவிச் சென்றான்.

“ ‘பாரப்பா! வறுமையால் வாடுபவர்களாம். அப்படி என்றால் என்னவாம்?” என்றான் ஊர் மக்களில் ஒருவன் எகத்தாளமாக.

“ ‘நீ யாரு தம்பி எங்கள் பசியைப் போக்க?’ என்றான் வேறொருவன்.

“‘மதுரையம்பதியில் எவனோ ஒருவன் ஆபுத்திரன் என்ற பெயருடன் வறியவர்களுக்கு உணவளித்து வந்தானாம். ஒருவேளை அந்த ஆபுத்திரன் நீதானா?’ என்றான் மூன்றாமவன்.

“ ‘வறுமையும் பசிப்பிணியும் அகன்ற இந்த மாநிலத்தில் இன்னும் ஆபுத்திரன் உயிருடன் இருக்கிறானா என்ன?’ என்றான் முதலில் பேசியவன்.

“இந்திரனின் நோக்கம் நிறைவேறியது என்பதை ஆபுத்திரன் உணர்ந்தான். ஈட்டிய பெருஞ்செல்வத்தைக்  கடலில் இழந்து தப்பிப் பிழைத்து செல்வம் எதுவுமின்றித் தான் ஒருவன் மட்டும் தனியாகத் திரும்பிவந்த வணிகன் ஒருவனின் நிலைபோல இருந்தது ஆபுத்திரனின் நிலைமை.

“மனம் வெதும்பி நின்ற ஆபுத்திரன் கொற்கைக் கடற்கரையில் அலைந்துகொண்டிருந்தான். பெரிய கப்பல் ஒன்று கிளம்பத்தயாராகத் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் ஆபுத்திரனை அடையாளம் கண்டுகொண்டு, ‘நீங்கள் ஆபுத்திரன்தானே?’ என்று விசாரித்தான்..

“ஆபுத்திரன் திரும்பிப் பார்த்து, ‘ஆம் ஐயா நான்தான் அந்தத் தீ ஊழ்கொண்ட ஆபுத்திரன்.’ என்றான்.

“‘உங்களைத்தான் ஐயா தேடிக்கொண்டிருந்தோம்.’

“ ‘என்னையா? எதற்கு?’ என்று புரியாமல் வினவினான் ஆபுத்திரன்.

“ ‘ஐயா, நாங்கள் நெடுந்தொலைவிலிருக்கும் சாவகத் தீவிலிருந்து வரும் கடல் வணிகர்கள். இந்த நாட்டில் ஆபுத்திரன் என்னும் பஞ்சம் பசிப்பிணி போக்கும் நல்லவன் ஒருவன் கைகளில் அமுதசுரபி என்னும் ஓட்டுடன் அலைவதாகச் சொன்னார்கள். அங்கு மழைவளம் குன்றியதால் வறுமை தாண்டவமாடுகிறது. எங்களுடன் உங்களை அழைத்துச் செல்கிறோம். அங்கே வந்து எங்கள் மக்களின் பசிப்பிணியைப் போக்குங்கள்’ என்று மன்றாடினர். ஆபுத்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களுடன் பயணமானான்.

“மணிபல்லவத் தீவினை அடையும் நேரம் காற்று பலமாக வீசத்தொடங்கியது. பாய்மரம் இறக்கப்பட்டது.

“கப்பல் அன்றிரவு முழுவதும் அத்தீவில் ஒதுங்கியிருக்கும் என்றும், அடுத்தநாள் காலையில் காற்று அடங்கியபின்பு மீண்டும் பயணம் தொடரும் என்றும், தீவைச் சுற்றிப்பார்க்க நினைப்பவர்கள் சென்று வரலாம் என்றும், ஆயினும், மறுநாள் காலைப் பொழுதிற்குள் கப்பலை அடைந்துவிடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.  மற்ற பயணிகளுடன் சேர்ந்துகொண்டு தீவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ஆபுத்திரன் கால் போன போக்கில் சென்று ஆளரவமற்ற தீவு என்பதால் பாதையைத் தவறவிட்டான்.

“அதை அறியாமல், ஆபுத்திரன் ஏறியதைத் தான் பார்த்தேன் என்று ஒரு பயணி அளித்த தவறான தகவலை உண்மை என்று ஏற்றுக்கொண்டு அந்தக் கப்பல் ஆபுத்திரனைத் தனியாக மணிபல்லவத் தீவில்விட்டுவிட்டுக் கிளம்பியது.

“கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான்.  மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்.

“ ‘இதோ இந்தப் பொய்கையில் இந்த அமுதசுரபியை இடுகிறேன். இதனுள் மூழ்கிவிடும் இப்பாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒருநாள் வெளியில் வரட்டும். தர்மசிந்தனை உடையவர்கள் வந்தால் அவர்கள் கைகளில் சேரட்டும்!’ என்று கூறிவிட்டு அமுதசுரபியை அந்தப் பொய்கையில் இட்டான். அது நீரில் மூழ்கியது.  ஆபுத்திரன் அங்கிருந்து அகன்று, ஓர் இடத்தைத் தேர்வு செய்து. உண்ணா நோன்பு இருந்து தனது உயிரைத் துறந்தான்…”

முழுக் கதையையும் கூறிவிட்டு அறவண அடிகள் தமக்கு எதிரில் அமர்ந்திருந்த மூவர் முகத்தையும் பார்த்தார். சுதமதியின் முகத்தில் பொழுதைப் போக்கக் கதைகேட்ட நிம்மதி நிலவியது. மாதவியின் முகம் ஒருவித அர்ப்பணிப்பில்  மின்னியது. மணிமேகலையின் முகத்தில் சின்னதாக ஒரு சந்தேகத்தின்  சாயல் படர்ந்திருந்தது.

“என்ன யோசனை, மணிமேகலை?” என்று வினவினார் அறவண அடிகள்.

“ஆபுத்திரன் மறுபிறவி எடுத்தானா, அடிகளே?”

அறவண அடிகள் நகைத்தார்.

“அவன் உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் நாளன்று நான் மணிபல்லவம் சென்றிருந்தேன். என்னப்பா நடந்தது என்று கேட்டதற்கு அவன் தான் பட்ட துயரங்களைப் பட்டியலிட்டான். அவனது ஆன்மா வேதனையில் வாடிக்கொண்டிருந்தது. நான் சமாதானம்செய்தேன்.  கிழக்கில் தோன்றும் கதிரவன் வானில் பயணித்து மீண்டும் மேற்திசைக்குச் செல்வதைப்போல, மணிபல்லவத்தீவில் தன்னுடைய முந்தைய உடலை விடுத்து, சிறந்த மன்னன் ஒருவனின் ஆட்சியில் இருந்த சாவக நாட்டில் ஒரு பசுவின் வயிற்றில் கன்றாகிப் பிறந்தான்.” என்றார்.

குறிப்பு: இந்திரன் என்ற படிமம் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. உருவகங்கள் மூலமும், படிமங்கள் மூலமும் இந்திரன் உருவாக்கபட்டிருக்கக்கூடும். ஐம்பெரும் பூதங்களான ஆகாயம், நெருப்பு, வாயு, நீர், மண் இவற்றை மனித உடலுடன் தொடர்பு படுத்தி அதற்கெனச் சில மார்க்கங்களைவிட்டுச் சென்ற நமது மூதாதையர் அந்தப் பஞ்சபூதங்களின்/அவற்றைச் சார்ந்த பஞ்சேந்திரியங்களின் தலைவனாக இந்திரனை உருவகப்படுத்தியிருக்கலாம். பஞ்சேந்திரியங்களின் தலைவன் என்றாகும்போது அவனை அறிவுசார்ந்தவனாகக் கொள்ளலாம். அறிவினால் ஏற்படும் கர்வமும் பதவி வெறியும் அவனுடைய குணங்களாகலாம். இந்தப் பதவிவெறி தலைவர்களிடம் காணப்படும் தன்மை. இதனையே சாத்தனார் இந்தக் கதை மூலம் அல்லது இந்திரனின் படிமம் மூலம் இதனை விளக்கியிருக்கக்கூடும்.

[தொடரும்]

2 Replies to “பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *