உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18

“வரிசையில் வாருங்கள். அனைவருக்கும் உணவு இருக்கிறது”என்று சுதமதி கூவிக்கொண்டிருந்தாள். பார்வையற்றவர்கள், கால் இழந்தவர்கள், கையிழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள், பேச இயலாதவர்கள், வயதுமுதிர்ந்தோர் என்று ஒரு கூட்டமே அறவி வாசலில் திரண்டிருந்தது.

 உலக அறவி என்பது ஊர்ப் பொதுமன்றமாகும். பெரிய வாயில்களும், கூடங்களும், அமர்வதற்கும் உண்பதற்குமான நீண்ட பகுதிகளும் உள்ள இடம். மணிமேகலை பசிப்பிணியால் வாடும் வறியவர்களுக்கு அங்கு அன்னதானம் வழங்கப்போகிறாள் என்ற செய்தி காட்டுத்தீபோல நகரெங்கும் பரவிற்று.

 அறவண அடிகள் ஏழெட்டு புத்தபிக்குகளையும் தேவையான கலன்களையும் தமது புத்தமடத்திலிருந்து அனுப்பியிருந்தார்.

 ஆதிரை இட்ட உணவு வற்றாமல் சுரப்பதை மணிமேகலை ஏற்கனவே பரிசோதித்துப் பார்த்துவிட்டாள். எல்லா உணவுப்பதார்த்தங்களும் அப்போது சமைத்து இறக்கியது போன்ற சுவையும், மணமும் மாறாமல் இருந்தன.

 “மணிமேகலா! வாசலில் நெறியும் கூட்டத்தைப் பார்த்தாய் அல்லவா? அவர்களுக்கு உணவு அளிக்க ஏன் இத்தனை தாமதம்?”என்று உள்ளே நுழைந்த மாதவி கேட்டாள்.

 “கொஞ்ச நேரம் பொறு, அம்மா,”என்ற மணிமேகலை, சாளரத்திலிருந்து வாயிலையும் தாண்டிப் பார்வையை ஓடவிட்டாள்.

 “இன்னும் வருவதற்கு யாரம்மா இருக்கிறார்கள்?”என்று கேட்ட மாதவியின் கேள்வியில் பொறுமை அதன் முதல் பிரியை இழந்திருந்தது.

 “முதல் தானத்தைப் பத்தினிப்பெண்ணான ஆதிரை இட்டதைப்போல முதல் கொடையைப் பெற்றுக் கொள்ள யாராவது பெருந்தீனிக்காரியை எதிர்பார்க்கிறாயா மேகலா?”என்று சுதமதி வினவினாள். அவள் கேள்வியில் ஆர்வத்தை விடக் கிண்டலே அதிகம் தெரிந்தது.

 “சரியாகச் சொன்னாய்”என்றாள் மணிமேகலை.

 “உன் சங்கதிகள் எல்லாமே புதிராக இருக்கிறது”என்றாள் மாதவி.

 “பெண் என்றாலே புதிர்தான்”என்றாள் சுதமதி.

 “போதும். முதல் பிச்சையைப் பெறப்போவது யார்?”என்றாள் மாதவி

 “காயசண்டிகை!”

 “யார் அவள்?” என்றாள் மாதவி

 “சொல்கிறேன் அது ஒரு கதை” என்றாள் மகள்.

 “உன்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கிறதா மணிமேகலா?” என்றாள் சுதமதி.

 “போதும் விளையாட்டு. யார் அந்தக் காயசண்டிகை? ”மாதவி அதட்டவே, மணிமேகலை காயசண்டிகையைப்பற்றிச் சொல்லத்துவங்கினாள்.

 “வித்யாதர உலகம் என்ற ஒளி வீசும் வடதிசைப் பகுதியில் தன் கணவன் விஞ்சையனுடன் காஞ்சனபுரம் என்ற நகரில் வசித்து வந்தவள் காயசண்டிகை. காஞ்சனபுரத்தைச் சேர்ந்தவன் என்பதால் இவள் கணவன் காஞ்சனன் என்றும் அழைக்கப்படுபவன். இருவரும் வான்வழி செல்லும் திறன்பெற்றவர்கள். காயசண்டிகை தன் கணவனுடன் வான் வெளியே கிளம்பித் தென்திசை நோக்கிப் பயணித்தாள். பொதிகை மலையைக் காண வேண்டும் என்பது அவர்களுடைய நெடுநாள் கனவு. ஒரு காட்டாற்றின் கரையில் அவளும் அவள் கணவனும் தங்கியிருந்தனர்

“அப்போது விருச்சிகன் என்ற பெயருடைய முனிவர் ஒருவர் அங்கே வந்தார். முப்புரி.நூலை அணிந்த அவர், மரவுரி தரித்துக் கழுத்துவரை புரளும் சடைமுடிக் கற்றைகள் அசைய வந்தார். அவர் கையில் ஒரு சிறிய தேக்குமர இலை; அதில் ஒரு நாவல்கனி. அந்த நாவல்கனி மற்ற நாவல் பழங்களைப்போல் இல்லாமல் ஒளிமிகுந்ததாக கனிந்து விளங்கிய அதைப் பார்த்ததும் உண்ண வேண்டும் என்ற ஆவல் மிகும் வண்ணம் இருந்தது. முனிவர் அந்தக் கனியைக் கவனமாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு மணம் வீசும் பூக்கள் நிறைந்த பொய்கையில் இறங்கி நீராடச் சென்றார்.

“காயசண்டிகையின் பொல்லாத நேரம், அக்கனியை உண்ணவேண்டும் என்ற ஆவலைவிட அதன்மேல் ஒருவித அசூயையே அதிகமானது. பிறருடைய பொருள்மீது ஆசைகொள்ளக்கூடாது என்ற எண்ணம் அழிந்தது. திமிராக நடந்து சென்று அந்தக் கனியைத் தன் கால்களால் மிதித்தாள்.

“நீராடி முடித்துவிட்டு கனியை உண்ணலாம் என்ற நினைப்புடன் வந்த விருச்சிகன் காயசண்டிகையால் சிதைக்கப்பட்ட கனியைக் கண்டார்.

‘அடி பாவி! எத்தகைய தன்மையுடைய நாவல் பழத்தை இப்படிச் சிதைத்துவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? சாதாரணப் பழமில்லை இது. தெய்வத்தன்மை வாய்ந்தது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கனியும் இந்த அரிய கனியை உண்பவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பசி ஏற்படாது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கனியை உண்டு மற்ற நேரங்களில் தவம்புரிபவன். அப்படிப்பட்ட கனியை நாசம்செய்து என் தவத்தை நாசம் செய்துவிட்டாயே, பாவி!’ என்று சீறினார்.

“அதோடுவிட்டாரா? சாபமும் கொடுத்தார்.

‘வானில் பறந்து செல்லும் உன்னுடைய ஆற்றல் செயலற்றுப் போகட்டும். யானைத்தீ என்று அழைக்கப்படும் கடும்பசி நோயால் நீ பனிரெண்டு ஆண்டுகள் அவதிப்படு. மீண்டும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நான் இதே போன்ற நாவல் கனியை உண்ணும்போது உன் பசிப்பிணி இளம்பெண் ஒருத்தியால் தீரட்டும்’ என்று சாபமிட்டார்.

“வாடும் பசியுடன் முனிவர் அங்கிருந்து அகன்றார். அவர் போனபின்பு காயசண்டிகையின் கணவன் வந்து நடந்த அனைத்தயும் அவள் வாயிலாகக் கேட்டான். செய்யக்கூடாத செயல்புரிந்து சாபம் வாங்கிக்கொண்ட அவளுக்காக வருந்தினான். இனி அந்தப் பொதிகைச் சாரலில் இருப்பதால் பயன் ஏதுமில்லை என்று அவளை வான்வழியே செல்வதற்கு அழைத்தான்.

“காயசண்டிகை மனதை ஒருமுகப்படுத்தி வானில் செல்வதற்கு உச்சரிக்கும் மந்திரத்தைக் கூறினாள்.  அவளால் அந்த மந்திரத்தை ஒழுங்காக உச்சரிக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்தும், அவள் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. விஞ்சையன் அவளுக்காக மனம் வருந்தி அவள் பசியைத் தீர்ப்பதற்குக் கனி, கிழங்கு என்று பலவற்றைக்கொண்டு வந்து கொடுத்தான். காயசண்டிகையின் பசி அடங்கியபாடில்லை. யானைப்பசியல்லவா அது! அவனுக்கும் என்னசெய்வது என்று தெரியவில்லை. பறக்கும் திறனை இழந்து பசியுடன் வாடும் அவளைத் தனியேவிட்டுச் செல்லவும் மனமில்லாமல், கூட்டிச் செல்லவும் வகைதெரியாமல் தடுமாறி நின்றான்.

‘நாவல் மரங்கள் நிறைந்த இந்த ஜம்புத்தீவினில் தமிழகம் எனப்படும் பகுதியில் கிழக்குக் கடற்கரையோரம் காவிரிப்பூம்பட்டிணம் என்ற நகர் உண்டு. நீ நிலத்தின் வழியாக மெல்லமெல்ல நடந்து சென்று அந்த நகரத்தை எப்படியாவது அடைந்துவிடு. பசிப்பிணியுடன் வரும் வறியவர்களுக்கு அன்னம் வழங்கும் பல செல்வந்தர்களின் மாளிகைகள் அங்கே உள்ளன. அங்கு சென்று உன் பசிப்பிணியைப் போக்கிக் கொள்!’ என்று கூறிவிட்டு அவள் கணவனும் சென்றுவிட்டான்.

“தனது விதியை நொந்தபடி காயசண்டிகை நடந்து நடந்து பொதிகைமலைச் சாரலிலிருந்து புகார் நகரம் வந்தாள்.  அங்கு பனிரெண்டு ஆண்டுகள் கடும்பசியுடன் உயிர் வாழ்ந்திருந்தாள்.

“அவள் கணவன் விஞ்சையன் ஒவ்வொரு ஆண்டும் காவிரிப் பூம்பட்டிணத்தில் இந்திரவிழாக் காலங்களில் அங்கு வருவான். காயசண்டிகையைப் பார்ப்பான். அவளுடைய பசிப்பிணி தீராததைக் கண்டு மீண்டும் காஞ்சனபுரம் செல்வான். இப்படியே ஒவ்வொரு ஆண்டும் கழிந்தது.

“இந்த சமயத்தில்தான் நான் அமுதசுரபியைக்கொண்டு வந்திருக்கிறேன் என்பதை அறிந்தாள் காயசண்டிகை.  சக்கரவாளக் கோட்டதிற்குள் உலக அறவி என்ற  புகலிடம் வறியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், உடல் குறை உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் அடைக்கலமாக உள்ளது என்பதை அறிந்து அந்த இடத்தை அடைந்தாள்.

“அவளைச் சந்தித்தும் நான் முதன்முதலாக இடப்போகும் அன்னதானத்திற்குக் அவளைத் தேர்வு செய்திருப்பதாக்க கூறவே, காயசண்டிகையும் அந்த நல்ல நேரத்திற்குக் காத்திருந்தாள்.

“அதோ! காயசண்டிகை வருகிறாள்.” என்றாள் மணிமேகலை.

உடல் நலிவுற்றுத் தன்னைத் தினமும் தின்றுகொண்டிருக்கும் யானைத்தீ என்ற பெரும் பிணிக்குத் உடலை பலி கொடுத்து எழிலும், இளமையும் சிதைவுற்று ஒரு நடைபிணமாகக் காயசண்டிகை வந்துகொண்டிருந்தாள்.

மாதவி அவளை அழைத்துக் கூடத்தில் ஓர் இருக்கையில் அமரச் செய்தாள். சுதமதி அவள் கைகளில் பெரிய வட்டில் ஒன்றைக் கொடுத்தாள்.

மணிமேகலை அவள் அருகில் வந்து மனதில் புத்ததேவனை வணங்கி, காயசண்டிகையின் பசி அமுதசுரபியிலிருந்து இடடப்படும் அன்னத்தை உண்பதனால் தீரட்டும் என்று தியானித்தபடி அவளுக்கு அமுது படைத்தாள்.

1-kayasandigaiஇதுகாறும் தான் உண்டிராத வகையில் சுவையும் மணமும் உடைய உணவைக் காயசண்டிகை அள்ளியள்ளி உண்டாள். அவளது வயிறு நிரம்பியது. இதுகாறும் அவளை உழற்றிய பசிப்பிணி அவளைவிட்டு அறவே நீங்கியது.

காயசண்டிகையின் கண்களில் நீர் சேர்ந்தது. மணிமேகலையை இருகரம் கூப்பித் தொழுதாள்.

“அம்மா மணிமேகலா என் உறுபசியைப் போக்கிவிட்டாய். இழந்த எழிலை மீண்டும் பெற்றுக் கணவனுடன் என் இடத்திற்குச் செல்வேன். என் கணவனுக்காகக் காத்திருக்கிறேன். இங்கேதான் சக்கரவாளக் கோட்டத்தில் வசிக்கிறேன். உனக்கு என்னிடமிருந்து உதவி தேவைப்பட்டால் மறக்காமல் என்னை வந்து பார்” என்று கூறிவிட்டு அகன்றாள்.

அதன்பிறகு அங்கு பசியால் வாடியிருந்த ஏழை எளியவர்க்கு இல்லை என்னாது உணவை வாரி வழங்கிவிட்டு, உலக அறவி மாளிகையை மும்முறை வலம்வந்தாள்.  சக்கரவாகக் கோட்டத்தின் தனிப்பெரும் பெண்தெய்வமாக விளங்கிய சம்பாதிதெய்வத்தின் முன்பு விழுந்து வணங்கினாள். கம்பத்தில் இருந்த காவல் தெய்வத்தையும் தொழுதாள்.

”பசியோடு இருக்கும் வறியோர்களே! வாருங்கள். உங்களுக்கான உணவைப் பெற்றுச் செல்லுங்கள்!” என்று அவள் கூவிய கூவல் அன்றிலிருந்து அந்தச் சக்கரவாளக் கோட்டத்தில் ஒலித்த வண்ணம் இருந்தது.

பின்குறிப்பு: இராமாயணம் குறித்து ஒரு பதிவு இந்தக் காதையில் கூறப்பட்டுள்ளது.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல்அரு முந்நீர் அடைந்த ஞான்று

குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்

அணங்குஉடை அளக்கர் புக்கு அங்கு

என்கிறார் சீத்தலை சாத்தனார். அதாவது இராமர் சேதுபந்தனம் எழுப்பியபோது குரங்குகள் போட்ட பாறைகள் கடலில் அமிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். விருச்சிகன் என்ற முனிவரைப் பற்றிய குறிப்பு கூறப்பட்டுள்ளது. இந்த முனிவர் குறித்த தகவல் மணிமேகலையில் மட்டும் இடம் பெறுவதால் இது வழிவழியாக வந்த கதையா அல்லது மணிமேகலைக்காகப் புனையபட்டதா என்பது தெரியவில்லை. குறிஞ்சிமலர்போலப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கனியும் நாவற்கனிபற்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளது. அதேபோல வடக்கிலிருந்து தெற்குநோக்கிப் பயணிக்கும்போது விந்தியமலையில் காவல் இருந்த பெண்தெய்வம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

[தொடரும்]

One Reply to “உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *