புருஷ லட்சணம் [சிறுகதை]

ம்புப் படுக்கையிலிருந்து பீஷ்மர் சற்றே தலையை உயர்த்திப் பார்த்தார். கௌரவர் கூடாரங்களில் துரியோதனனின் அரவக் கொடியும் துரோணரின் வில்-கமண்டலக் கொடியும் மட்டும் இன்னும் பறந்து கொண்டிருந்தன, மற்ற எல்லாக் கொடிகளும் இறக்கப்பட்டிருந்தன. கர்ணன் கௌரவப் படைகளுக்கு தலைமை வகிக்கப் போவதில்லையா என்று பீஷ்மர் வியப்புற்றார். பிறகு துரோணரை நினைத்து அவர் மனதில் கொஞ்சம் பரிதாபம் எழுந்தது.

நள்ளிரவு கடந்திருந்தது. பீஷ்மரின் அருகில் நட்டு வைக்கப்பட்டிருந்த தீப்பந்தம் இறந்து கொண்டிருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. பீஷ்மர் தனது வலது கையை உயர்த்தி, தன் ஆள்காட்டி விரலால் யாரையோ முன்னால் வரும்படி அழைத்தார். ஈ எறும்பு கூட நகரவில்லை. மீண்டும் தன் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி அழைத்தார். சலனமே இல்லை. ‘அருகே வா, சிகண்டி!’ என்று மிருதுவான குரலில் சொன்னார்.

சத்தமே இல்லாமல் சிகண்டி அவரது முன்னால் வந்து நின்றான். அன்றைய போர் முடிந்து பல நாழிகைகள் கடந்திருந்தாலும் அவன் வில்லும் வாளும் கவசமும் அம்புறாத்தூணியும் அணிந்து முழு போருடையிலேயே இருந்தான். அவன் கன்னங்களில் கண்ணீரின் கறை இருந்தது. சினமும் ஆங்காரமும் அவன் முகத்திலே கொதித்தன. கோபத்தினால் எழும் அழுகையை அவன் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்வது நன்றாகவே தெரிந்தது.

பீஷ்மரின் முகமோ முழுதாக மலர்ந்திருந்தது. பீஷ்ம விரதத்தின் சுமை, சேனாதிபதி என்ற பொறுப்பின் வலி, போரின் தினசரி கவலைகள் எல்லாவற்றையும் துறந்த முகம். சிகண்டி அத்தனை மலர்ந்த முகத்தை கிருஷ்ணன் ஒருவனிடம்தான் இது வரை கண்டிருக்கிறான். பீஷ்மர் புன்னகைத்து சிகண்டி இது வரை பார்த்ததே இல்லை, அவன் பார்த்ததெல்லாம் தீர்க்கமான பார்வையுடன் போரிடும், ஆணையிடும் பீஷ்மரைத்தான். இன்றோ பார்ப்பவரின் மனதையும் மலரச் செய்யும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் அவன் கண்டான். அவனையும் மீறி அவன் ஆங்காரம் குறைய ஆரம்பித்தது.

பீஷ்மர் சிகண்டியை உற்றுப் பார்த்தார். அவன் கண்களைப் பார்க்கப் பார்க்க அவரது முகம் மேலும் மேலும் மலர்ந்தது. பிறகு அவரது பார்வை சிகண்டியின் முகம், கைகள், இடுப்பு என்று தாண்டித் தாண்டி கடைசியாக கவசத்தையும் மீறி விம்மித் தெரிந்த அவனது முலைகளில் நிலைத்தது.

சிகண்டிக்கு ஆவேசம் பிறந்தது. ‘ஆம் பீஷ்மரே, நான் ஆணல்ல, பெண்தான்!’ என்று இரைந்தபடியே தன் கவசத்தையும் மேலாடையையும் கழற்றி வீசினான். தன் கச்சைக் கிழித்தான். ‘நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் பீஷ்மரே, எனக்கு முலைகள் இருக்கின்றன, நான் பெண்ணேதான், நீங்கள் என்னுடன் போரிட மறுத்தது நியாயம்தான்!’ என்று கத்தியபடியே அவர் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்றான். பீஷ்மரின் முகத்தின் மலர்ச்சி எல்லாம் ஒரே நொடியில் மறைந்து வலி தெரிந்தது. அவர் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். சிகண்டி அந்தப் பக்கமும் விரைந்து வந்து அதே மாதிரி நின்றான்.

‘போதும் சிகண்டி, வயது வந்த மகளை அரை நிர்வாணமாகப் பார்க்கும் துர்பாக்கியத்துக்கு என்னை ஆளாக்காதே’ என்று பீஷ்மர் முனகினார். மீண்டும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

சிகண்டி விரக்தி ததும்பும் குரலில் ‘மகள்!’ என்றபடியே தன் கவசத்தையே மேலாடையாக அணிந்து கொண்டான். ‘எத்தனை பயிற்சி பெற்றாலும், பரசுராம சிஷ்யர் பீஷ்மரையே எதிர்த்து நின்றாலும், ஒரு அக்ரோணி சேனைக்குத் தலைவனாக இருந்தாலும், பாண்டவர்களின் பிரதம சேனாதிபதியாக என்னை நியமிக்க வேண்டும் என்று பீமனே சொன்னாலும் என் அடையாளம் பெண் என்பது மட்டும்தான் இல்லையா பீஷ்மரே? நான் உங்களைப் போல மாவீரனாக இல்லாமல் இருக்கலாம், மஹாரதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னை, என் வீரத்தை, என் தைரியத்தை, என் போர்த்திறமையை அங்கீகரிக்கவே மாட்டீர்களா!” என்றபடி அவரை நோக்கினான். அவனது குரல் ஏறக்குறைய கெஞ்சுவதாகவே ஒலித்தது. அப்படி கெஞ்சும்போது அவன் குரல் அச்சு அசல் பெண் குரலாகவே இருந்தது.

Courtesy: AMBA Amar Chitra Katha Comics Cover Art

பீஷ்மர் நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவரால் இப்போது சிகண்டியை நேராகப் பார்க்க முடிந்தது. புன்னகைத்தார்.

சிகண்டி தன் பார்வையை அவரது முகத்திலிருந்து திருப்பி தொலைவில் எங்கோ நோக்கினான். “என் தாயை சிறுமைப்படுத்தினீர்கள். அவள் பிச்சியாகவே அலைந்தாள். இந்தப் போரில் என்னை சிறுமைப்படுத்துகிறீர்கள். நான் உங்களை வெல்வேன், கொல்வேன் என்று நினைத்து இந்தப் போரில் ஈடுபடவில்லை. உங்கள் கையால் இறப்பேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னைப் பெண் என்றும் கோழை என்றும் வீரமற்றவன் என்றும் நபும்சகன் என்றும் இழிவாக எண்ணி என்னை எதிர்த்து வில்லை உயர்த்தவே மறுத்தீர்கள். இன்று என்னால்தான் நீங்கள் விழுந்திருக்கிறீர்கள், ஆனால் என்னுடைய ஒரு அம்பு கூட உங்கள் மீது படவில்லை. ஒரு வீரனுக்கு இதை விட கேவலம் என்ன வேண்டும்? இந்தப் போரில் நான் உயிர் பிழைத்தாலும் நானும் பித்தனாகத்தான் அலையப் போகிறேன். அம்பையின் ரத்தம் நான், எங்கள் காயங்கள் ஆறுவதே இல்லை. நாங்கள் பெற்ற சாபம் அது. நீங்கள் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருக்கலாம்”. அவனது குரல் மெலிந்திருந்தது.

பீஷ்மர் ‘மகளே!’ என்று கனிவோடு சிகண்டியை அழைத்தார். அடிபட்ட முகத்தோடு சிகண்டி அவரை நோக்கினான். ‘இல்லை இல்லை வாய் தவறி வந்துவிட்டது. மகனே!’ என்று அவசர அவசரமாக திருத்திக் கொண்டார்.

‘மனதில் இருப்பதுதான் வார்த்தைகளில் வரும் பீஷ்மரே!’

‘இல்லை மகனே! அம்பைக்கு மகள் பிறந்திருக்கிறான் என்று அறிந்த நாளிலிருந்து உன்னை ஒரு பெண்ணாக நினைத்து வந்திருக்கிறேன். அது என்னையும் மீறி வார்த்தையாக வந்துவிட்டது. ஆனால் நீ ஆணோ பெண்ணோ அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நீ கோழை என்று யார் சொன்னது? உன் வீரத்தை அங்கீகரிக்க யார் மறுத்தது?”

சிகண்டி மொத்தமாகக் குழம்பிப் போய் பீஷ்மரைப் பார்த்தான்.

‘வீரமும் போர்த்திறமையும் தைரியமும் பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை சிகண்டி! இது ஸ்மிருதிகளுக்கும் முந்தைய சுருதிச் சொல்! கர்ணனை சூதன் என்றும் கண்ணனை யாதவன் என்றும் ஒரு கூட்டம் சொல்லத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் தன்னை க்ஷத்ரியர்களாக உணர்கிறார்கள், அதனால் அவர்கள் க்ஷத்ரியர்கள்! நீ பெண்ணாகப் பிறந்திருக்கலாம். ஆனால் ஆணாக உன்னை உணர்ந்தால் நீ ஆண்!”

சிகண்டியின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. பீஷ்மர் தொடர்ந்தார்.

‘இந்தக் காலகட்டத்தின் முதன்மையான போராளி நான். எனக்கு இணையான சில போராளிகள் இருக்கலாம், ஆனால் என்னை வெல்லக் கூடியவன், கொல்லக் கூடியவன் எவனுமில்லை. நான் அஞ்சக் கூடிய போராளி எவனுமில்லை என்னும்போது நான் கோழையா, வீரனா என்ற ஆராய்ச்சி அர்த்தமற்றது. என்னைப் போய் வீரன், தைரியசாலி என்று சொல்வது உபசாரப் பேச்சு மட்டுமே. ஆனால் தன்னை விடத் திறமை வாய்ந்தவன் என்று தெரிந்தும், நான் வில்லை எடுத்தால் உன் இறப்பு நிச்சயம் என்று அறிந்திருந்தும், அஞ்ச வேண்டிய நீ, என்னைத் தவிர்க்க வேண்டிய நீ, பத்து நாட்களும் என்னைத் தேடித் தேடி வந்து என்னுடன் போரிட முயன்ற நீ, நீயல்லவோ வீரன்? உன் தைரியம் அல்லவோ மெச்சப்பட வேண்டியது? ஸ்மிருதிகளின்படி பார்த்தாலும், தைரியமே புருஷ லட்சணம் என்று எல்லா ஸ்மிருதிகளும் சொல்கின்றனவே, அப்படிப் பார்த்தால் நீயே ஆண் மகன்!’

சிகண்டியின் கண்களில் ஈரம் தெரிந்தது.  ஏதோ சொல்ல வந்தவனை பீஷ்மர் கைகாட்டித் தடுத்தார்.

“ஸ்மிருதிகளின்படியே பார்த்தால் நானே நபும்சகன்! என்றைக்கு என் ஆன்மாவின் குரலைக் கொன்று உன் அன்னையை மறுத்தேனோ அன்றே என் ஆண்மை போயிற்று. சபையில் பெண்ணின் ஆடை களையப்படும்போது கையாலாகாமல் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவனும் நபும்சகனே! நீ நபும்சகன் என்று நான் உன்னுடன் போரிட மறுப்பதா? மகனே, நான் நபும்சகன் என்று நீ என்னுடன் போரிட மறுத்திருந்தால் அது நியாயம்!’

சிகண்டி பேச முயன்றான், ஆனால் குரல் எழும்பவில்லை. மிகவும் சிரமப்பட்டு கீச்சுக் குரலில் “ஆனால்… ஆனால்… ஆனால்… என்னுடன் போரிட…” என்று ஆரம்பித்தவனை பீஷ்மர் இடைமறித்தார்.

‘உனக்கு எதிராக என் வில்லா? உன்னுடன் முதல் முறையாக பேசும் வாய்ப்பு கிடைத்தவுடன் மூச்சுக்கு முன்னூறு முறை மகனே, மகளே என்று அழைக்கிறேனே, இன்னுமா புரியவில்லை? அம்பையின் குருதி நீ! என் மானசீக புத்திரன் நீயே!’ என்றார். ஆரம்பத்தில் ஓங்கி ஒலித்த அவரது குரலில் சத்தம் மெதுமெதுவாகக் குறைந்து தழுதழுத்தது.

“அப்படி என்றால் நீங்கள் பாண்டவர்கள் பக்கம் போரிட்டிருக்கலாமே!”

“அம்பையின் ரத்தத்தில் ஏற்படும் காயங்கள் ஆறுவதே இல்லை என்று நீ சொன்னாய். உண்மை, அம்பையோடு ரத்த உறவு உள்ள துரியோதனன் இன்னும் கூட திரௌபதியை மன்னிக்கவில்லை. அதே போலத்தான் சந்தனுவின் ரத்தம் வறட்டு கௌரவத்துக்காக, கொடுத்த வாக்குக்காக தன் ஆன்மாவைக் கொல்லத் தயங்குவதே இல்லை மகனே! என் தந்தை என் ஏழு சகோதரர்கள் கொல்லப்படும்போது பார்த்துக் கொண்டேதானே இருந்தார்! அவர் மகன் நான், கொடுத்த வாக்கை மீறுவதை விட காலமெல்லாம் சித்திரவதைப்படுவதைத்தானே எப்போதுமே தேர்ந்தெடுத்திருக்கிறேன்? மேலும் நான் பாண்டவர் பக்கம் வந்துவிட்டால் உன் வஞ்சினம் எப்படி நிறைவேறும்? அது மட்டுமல்ல, கௌரவர்களை – உன் அன்னையோடு ரத்த உறவு உள்ள கௌரவர்களை – எதிர்த்து வில்லெடுக்க விரும்பவில்லை சிகண்டி!”

சிகண்டியின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனாலும் பீஷ்மர் சொல்வதை அவன் முழுமையாக நம்பவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

பீஷ்மர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மிருதுவான குரலில் சொன்னார் – ‘உன் அன்னையை சந்திக்கும் வரை நான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை. மனதில் தோன்றும் எண்ணங்களை அப்போதெல்லாம் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். பீஷ்மப் பிரதிக்ஞை மற்றவர்களை பொறுத்துக் கொள்ள வைத்தது. உன் அன்னையை சந்தித்த பிறகோ என் உணர்வுகளை எப்போதுமே மறைத்துத்தான் வந்திருக்கிறேன். இன்றுதான் மீண்டும் என் உள்ளத்தைத் திறந்திருக்கிறேன். ஆனாலும் நீ என்னை நம்பவில்லை என்று தெரிகிறது”.

சிகண்டி மௌனமாகவே இருந்தான். பீஷ்மர் வானத்தை வெறித்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு சிகண்டி கேட்டான் – ‘அப்படி என்னை நீங்கள் உங்கள் மகன் என்றும் வீரன் என்றும் மதித்திருந்தால் இந்த அம்புகள் அர்ஜுனனுடையவை, சிகண்டியின் அம்புகள் அல்ல என்று சொல்லி மகிழ்ந்தது எப்படி பீஷ்மரே!’

பீஷ்மர் கடகடவென்று சிரித்தார். ‘பாணர்கள் இப்படித்தான் பாடுகிறார்களா?’ என்று கேட்டார்.

‘நானே என் காதால் கேட்டேன்’ என்று சிகண்டி முணுமுணுத்தான்.

‘ஆம் மகனே, அவை நான் சொன்ன வார்த்தைகள்தான். நீ என் மகனாக இல்லாவிட்டாலும் உன் போன்ற வீரனின் அம்புகளால் காயம்படுவது என் பாக்கியம்! நீயோ என் மகன்! உன் அம்புகள் என்னைத் துளைத்திருந்தால் அவை என் மகனின் திறமையை காட்டியிருக்குமே! உன் தாய் அம்பை எய்த அம்பு நீ, நீ எய்த அம்பு ஒன்று கூட என் உடலில் படவில்லையே என்று வருத்தப்பட்டேன். நம் பாணர்கள் திறமைசாலிகள்!’ என்று அவர் மீண்டும் சிரித்தார்.

சிகண்டியின் உடலிலும் முகத்திலும் எப்போதும் இருக்கும் இறுக்கம் குறைந்தது. அவன் அழகு இன்னும் மிளிர்ந்தது. ஆனால் வார்த்தை வராமல் பீஷ்மரையே பார்த்துக் கொண்டிருந்தான். பீஷ்மரும் அவன் முகத்தையே பருகிக் கொண்டிருந்தார்.

சிற்து நேரம் கழித்து ‘அது சரி சிகண்டி, வில்லைக் கீழே போட்டு நான் உன்னெதிரே நிற்கிறேன், என் மார்பைத் துளைக்க நீ மஹாரதியாக இருக்க வேண்டியதில்லை, அது எப்படி உன் எல்லா அம்புகளும் தவறின?’ என்று பீஷ்மர் கேட்டார்.

சிகண்டியின் முகம் விகசித்தது. அவன் தலையை குனிந்துகொண்டான். ஆனால் அவன் கன்னம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. அவன் தோள்கள் லேசாக குலுங்கின. பீஷ்மர் அவனையே நோக்கினார். பிறகு அவரும் சிரிக்க ஆரம்பித்தார். சிகண்டி வாயைப் பொத்திக் கொண்டு மேலும் சிரித்தான்.

சிகண்டி பீஷ்மரின் அருகில் சென்று அவரது வலது கையை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான். பீஷ்மர் அவன் கையை இழுத்தார். இன்னும் நெருங்கி வந்தவனின் கன்னத்தைத் தடவினார். தன் இரு கைகளாலும் அவன் முகத்தைப் பிடித்து அவன் கன்னத்திலும் நெற்றியிலும் மீண்டும் மீண்டும் முத்தினார்.

‘அம்பையை அப்படியே உரித்து வைத்திருக்கிறாய். நெற்றியில் சுட்டியும் கண்ணில் அஞ்சனமும் இருந்தால் அவளேதான்! இந்த ஜன்மத்தில் தவறினால் என்ன, இன்னும் பல ஆயிரம் ஜன்மம் எடுப்போம். புல்லாக, பூண்டாக, புழுவாக, மீனாக, அரவாக, சிட்டாக, யவனராக, சூதராக, அரசனாக, ஆண்டியாக பல கோடி ஜன்மம் எடுத்து நானும் அவளும் கூடியும் ஊடியும் உன்னை மகவாகப் பெற்று மகிழ்வோம்!’ என்று பீஷ்மர் தழுதழுத்தார்.

‘மகனா, மகளா, தெளிவாகச் சொல்லிவிடுங்கள்’ என்று சிகண்டி நகைத்தான்.

‘அம்பையின் குறும்பும் அப்படியே வந்திருக்கிறது!’ என்று பீஷ்மரும் நகைத்தார். ‘அம்பைக்கு ஒரு குழந்தைதான், ஆனால் எனக்கு மகனும் கிடைத்துவிட்டான், மகளும் கிடைத்துவிட்டாள்’ என்று மகிழ்ந்துகொண்டார்.

கிழக்கு வெளுக்க ஆரம்பிப்பதற்கு சில நிமிஷங்களுக்கு முன்தான் சிகண்டி விடை பெற்றுக் கொண்டான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் திடீரென்று ‘சிகண்டி!’ என்று அவனை இரைந்து அழைத்தார்.

சிகண்டி திரும்பினான். அவரை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்த பிறகுதான் பீஷ்மர் தன் தலையை தன் அம்புத் தலையணையிலிருந்து தூக்கி வைத்திருப்பதை கவனித்தான். அதைக் கண்டதும் அவனது மார்புக் கூடி விம்மி விரிந்தது. ஓடி வந்தவன் அர்ஜுனன் அவர் தலைப்புறம் வைத்த அம்புகளை பிடுங்கி எறிந்தான். தன் அம்புறாத்தூணியிலிருந்து மூன்று அம்புகளை எடுத்து பீஷ்மரின் தலைக்கு முட்டுக் கொடுத்தான். பீஷ்மர் மனநிறைவோடு மீண்டும் தன் தலையை சாய்த்துக் கொண்டார்.

**********

(எனக்கு மஹாபாரதத்தைப் பற்றி பல குருட்டு யோசனைகள் உண்டு. சிகண்டி வீரன் – பாண்டவர் பக்கம் ஒரு அக்ரோணி சேனைக்குத் தலைவன். பாண்டவர்களின் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று பீமனால் அடையாளம் காட்டப்பட்டவன். ஆனால் எதிரில் நிற்கும் பீஷ்மரின் உடலில் அவனுடைய ஒரு அம்பு கூட தைக்கவில்லை என்று பீஷ்மர் சந்தோஷப்படுகிறார். அது எப்படி அத்தனை குறி தவறும்? அந்த குருட்டு யோசனைதான் இந்தக் கதைக்கு கரு).

2 Replies to “புருஷ லட்சணம் [சிறுகதை]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *