கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்

1944 ஆம் வருடம் காந்தி அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கிளையின் முதல் பொது செயலாளராக இருந்த பூரன்சந்த் ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் அவர்கள் முன்பு பேசியதை நினைவு கூர்ந்து ஜோஷியிடம் ஐந்து கேள்விகளை முன்வைக்கிறார்.  அதற்கு ஜோஷி அளித்த வழ வழா கொழ கொழா பதில்கள் கேலிக்கூத்தாக இருந்தாலும் காந்தி முன் வைக்கும் கேள்விகள் ரொம்ப முக்கியமானவை.

இரண்டாம் உலக யுத்தத்தை மக்கள் யுத்தம் என்று கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்து பிரிட்டிஷாருக்கு ஆதரவாக வேலை செய்தது. ஏனென்றால் நேச படைகளில் அவர்களின் முதலாளியான ஸ்டாலினும் ரஷியாவும் இருந்தது தான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிராகவும் அன்றைய வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் அமைப்பாகவும் அது இருந்தது. அதை காந்தியே நேரடி குற்றச்சாட்டாக சொல்கிறார். இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவும் இருந்த நேசநாட்டுப் படைகளை ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் அடையாளமான அமைப்பு என்றும், 1991 வரை தேர்தலே நடக்காத (சோவியத்) ரஷியா தான் சிறந்த ஜனநாயக நாடு என்றும் ஜோஷி காந்திக்கு பதில் அளித்தது தான் !

ஆரம்ப காலத்தில், தேச விடுதலை, அதற்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் என்றெல்லாம் பேசிய கம்யூனிஸ்டுகள் ஸ்டாலினின் பின்னால் நாய்குட்டியென வாலை ஆட்டிக்கொண்டு சென்ற கதையும் நடந்தது. இதை தவிர காங்கிரஸ் கட்சியை ஊடுருவிக் கெடுக்கும் செயலையும் கம்யூனிஸ்டுகள் செய்கின்றனர். மேலும் அவர்களின் நிதி ஆதார செயல்பாடுகள் மிகுந்த ஐயத்தை தருகின்றன என்கிற கேள்வியையும் பதிகிறார் காந்தி. அதோடு இந்தியாவிற்கு வெளியே உள்ள சிலரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் வழிநடத்தப்படுகிறதா இல்லையா என்ற நியாயமான கேள்வியையும் முன் வைக்கிறார்.

முக்கியமாக ஜோஷியின் பதில்களை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. காந்திக்கு அன்றே தெரியும் கம்யூனிஸ்டுகள் தேச விரோதமாக மாறுவார்கள் என்ற உண்மை. தொடர் நிகழ்வாக கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கட்சியில் ஊடுருவி அதன் ஆன்மாவை அழித்தார்கள் என்று நான் முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்தேன் . இதை காந்தி அன்றே கண்டித்திருக்கிறார். ஏனென்றால் அதற்கான ஆதாரங்கள் அவரிடம் தெளிவாக இருந்தன. பிற்பாடு நேரு சோசலிசம் பார்,  ரஷியாவை பார் என்றெல்லாம் பேசியது அதை உண்மை என்றாக்கியது.  காந்தியின் அகால மரணத்தையும் அது பெரும் கேள்விக்கு உள்ளாக்கியது.

*********

ய்யதேவரா காளீஸ்வர ராவ் சுதந்திர போராட்ட வீரர். பின்னாளில் ஆந்திர சட்டசபையின் முதல் சபாநாயகராகவும் ஆனார். அவர் காந்திக்கு விஜயவாடா பகுதியில் கம்யூனிஸ்டுகள் செய்யும் அட்டூழியங்களை பற்றி நேரில் வந்து ஒரு கடிதம் அளித்தார். அதற்கு முன் மனோரஞ்சன் சவுத்திரியும் ஒரு கடிதம் அளித்திருந்தார். காளீஸ்வர ராவின் கடிதத்தை தான் காந்தி பூரண் சந்த் ஜோஷியிடம் தன் பதிலோடு சேர்த்து அனுப்புகிறார். அதை தெளிவாக குறிப்பிட்டு இந்த கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள் என்று வேறு கேட்கிறார்.

காளீஸ்வர ராவின் கடிதத்தில் குற்றச்சாட்டுகளாகக் கூறப்படுபவை  இவை –

தினசரி வன்முறை நாடகங்களை மாணவர்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போடுகிறது. அதில் ரத்தம் தோய்ந்த கைகளை வைத்துக்கொண்டும் சுடுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். காந்தி இந்தியாவின் ரஸ்புடின் என்று உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். அஹிம்சைக்கு எதிராகவும் உண்மைக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் இவர்கள் செயல்படுகிறார்கள். பன்னெடுங்காலமாக சாத்வீக உணவை உண்டு வரும் பிராமண மற்றும் வைஸ்ய மாணவர்களை கட்டாயமாக மாமிச உணவு உண்ண வைக்கிறார்கள். அதன் மூலம் வன்முறையின் மேல் அவர்களுக்கு இருக்கும் வெறுப்பை போக்குவது தான் கம்யூனிஸ்டுகளின் குறிக்கோள். கட்டற்ற பாலுறவு என்பது தான் அவர்கள் கொள்கை. அதற்காக ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் இருக்கலாம், ஒரு பெண் எத்தனை ஆண்களுடன் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று போதிக்கிறார்கள். ஒரு தார மணம் பற்றி கடுமையாக தூற்றுகிறார்கள். இதை தவிர தடி கொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் அவர்களையும் விடுதலை வீரர்களையும் பிரிட்டிஷ் காவல்துறையிடம் போட்டு கொடுக்கிறார்கள்.

இந்த கடிதத்தை தான் பின் இணைப்பாக வைத்து அனுப்புகிறார் காந்தி. அவர் இதை முழுதும் நம்பியிருக்கிறார். ஏனென்றால் அவருக்கு கிடைக்கும் தகவல்கள் இதை மேலும் ஊர்ஜிதம் செய்கின்றன. இதற்கு ஜோஷி அளிக்கும் எந்த விளக்கத்தையும் ஏற்க அவர் தயாராக இல்லை.  ஜோஷி,  “நேருவிற்கு எங்களை பற்றி நன்றாக தெரியும். இப்போது நேரு வீட்டுச்சிறையில் இருக்கிறார். அவர் இருந்தால் எங்களை பற்றி சொல்வார். நேரு எங்களை நம்புகிறார்.  நீங்கள் சியாம பிரசாத் முகர்ஜியின் பேச்சைக் கேட்டு இப்படி நடக்கிறீர்கள். சியாமா பிரசாத் மதவாதத்தை தூண்டுகிறார்” என்று குற்றம் சாட்டுகிறார். காந்திக்கும் சியாம பிரசாத் முகர்ஜிக்கும் இருந்த தனிப்பட்ட நட்பும் பிரியமும் அனைவரும் அறிந்ததே.  அதை ஜோஷி மேலும் உறுதிப்படுத்துகிறார்.

”காங்கிரஸிலேயே ஒரு கூட்டத்தார், நீங்கள் தேவையில்லாமல் முஹம்மது அலி ஜின்னாவை நம்புகிறீர்கள்; அவர் உங்கள் கழுத்தை அறுத்து விடுவார் என்று எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். அந்த குற்றசாட்டை எப்படி எடுத்துக்கொள்வது? முஸ்லீம் லீகிலும் நல்லவர்கள் தேசபக்தர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?” என்று ஜோஷி காந்திக்கு கடிதம் எழுதுகிறார்.  அதாவது, உங்கள் மேலும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே என்ன செய்வது என்று கேட்கிறார். அப்போதே ஜின்னாவை பற்றி காந்திக்கு கூட இருந்தவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். காந்திதான் சிறிது அலட்சியமாக இருந்துவிட்டார்.

நேரு கம்யுனிஸ்டுகளால் கவரப்பட்ட விட்டில் பூச்சி போல் இருக்கிறார். ஆனால் காந்தி காங்கிரஸின் சோசியலிஸ்டுகளை விட ஹிந்துத்வர்களை வணிக பொருளாதாரத்தை முன் வைப்பவர்களை அதிகம் நம்புகிறார். காந்தியும் ஜோஷியும் எழுதிக்கொண்ட இந்த ஒரு 50 பக்க ஆவணத்தை படித்தாலே இவர்கள் இத்தனை நாள் கற்பித்து வந்த பித்தலாட்டம் கண் முன்னே பல் இளிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இது போல் இருக்கின்றன. அத்தனையும் வெளியில் எடுத்து எழுத ஆரம்பித்தால் என்ன ஆகும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *